மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 27 செப்டம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 1)

னசு வலைப்பூவில் நான் எழுதிய முதல் தொடர்கதையான 'கலையாத கனவுகள்' அதிகம் பேரால் வாசிக்கப்படாவிட்டாலும் வாசித்தவர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல தொடர்கதை என்ற பெயரைப் பெற்றது என்பதில் சந்தோஷமே. இது எனது இரண்டாவது தொடர்கதை. பெரும்பாலும் வலையுலகில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை வாசிப்பதில் காட்டும் ஆர்வத்தை தொடர்களில் காட்டுவதில்லை என்பதில் நான் கூட விதிவிலக்கல்ல. சில தொடர்கள் தவிர மற்றவற்றை மாடு நுனிப்புல் மேய்வதுபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாசித்திருக்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருகிறேன். இந்தக் கதையை முதல் தொடர் போல் நீண்ட தொடராக கொண்டு செல்ல மாட்டேன் என்று நினைக்கிறேன். அது காதல்... தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தது... இது வாழ்க்கை... நீண்டு கொண்டே சென்றால் சப்பென்று ஆகிவிடும். கதையின் கருவைச் சொல்லி நண்பன் தமிழ்க்காதலனுடன் ஆலோசித்ததில் நான் சொன்ன தலைப்பைவிட அவன் சொன்ன தலைப்பே சிறப்பானதாகத் தெரிந்தது. இந்தத் தலைப்பு எனது கதையின் கருவுக்கு ஏற்ப நண்பன் சொன்ன தலைப்பு. நட்புக்குள் நன்றி எல்லாம் தேவையில்லை என்பதால் நண்பா... நல்ல தலைப்புடா என்று சொல்லி தொடரை ஆரம்பிக்கிறேன்... காலமும் நேரமும் ஒத்துழைத்தால் சனிக்கிழமைகளில் பகிரலாம் என்று நினைத்திருக்கிறேன். 

சரி வாருங்கள் வேரை நம்பி விழுதுகளா? விழுதுகளை நம்பி வேரா? என்பதை தொடரும் கதையோட்டத்தில் பார்ப்போம்.

வேரும் விழுதுகளும் - பகுதி -1 

ரண்டு நாட்களாகப் விடாது பெய்த பேய் மழை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னமும் கருமேகம் கூடுவதும் லேசாகத் தூறுவதுமாகத்தான் இருந்தது. வாயில் நிஜாம் லேடி புகையிலையை அதக்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்த கந்தசாமி, புகையிலை எச்சில் ஒழுகாதவாறு முகத்தை சற்றே தூக்கி வாயை அஷ்ட கோணலாக்கி "மழ கொஞ்ச விட்டாப்ல இருக்குல்ல' என்றார்.

"அந்த போயிலய துப்பிப்பிட்டு வந்து பேசுறது. வாயில இருந்து மேலுல வடியணுமாக்கும்... எப்பப்பாரு அந்தக் கருமத்தை வாயில ஒதக்கிக்கிட்டு... ஆமா அதுல அப்புடி என்னதா இருக்கோ... தெரியல.. ஒண்ணு துப்பிப்பிட்டு பேசுங்க... இல்ல பேசாம அந்தக் கருமத்த மொண்ணு குடிச்சிட்டு மோட்டு வலயப் பாத்துக்கிட்டு வூட்டுக்குள்ளய கெடங்க..." கத்தினாள் காளியம்மாள்.

"ஒனக்கு என்னய திட்டுறதே பொழப்பாப் போச்சு... இந்த மழயில என்னய என்ன பண்ணச் சொல்லுறே..?" வாசலில் எச்சிலை புளிச்சென்று துப்பிவிட்டு பொண்டாட்டியைப் பார்த்துக் கேட்டார்.

"மழ விட்டு வெட்டரிச்சாப்புல இருக்கு... எல்லாரும் வயலு பக்கம் போயி தண்ணிய வெட்டி விட்டுக்கிட்டு திரியிறாய்ங்க... இவரு மோட்டு வலய எண்ணிக்கிட்டு கெடக்காரு... பொதி கட்டுன கருதுக்கு தண்ணி ரொம்ப நிக்காம கொஞ்ச வெட்டி விடாலுமுல்ல... வெடலப்பயலுக எல்லாம் மம்பட்டிய தூக்கிட்டு போயிட்டாய்ங்க... சொன்னா ரோசந்தான் வருது... எல்லாத்துக்கும் பொம்பள நானே பொயி நிக்கிறேன்... நீங்க இப்பத்தான் சமஞ்சிரிக்கீக... வூட்டுக்குள்ள இருங்க..."

"க்க்கும்... வால்வால்ன்னு கத்துறதை எப்பத்தேன் நிறுத்தப் போறியோ... அந்த வரப்புகளுல எளந்தாரிப் பயலுக நடந்து போயிருவானுங்க... என்ன மாதிரி கெழடுக வழுக்கி விழுந்துக்கிட்டு கெடக்கத்தான் வேணும்... இப்ப வரப்பா கட்டி வைக்கிறானுங்க..."

"வெவசாயம் பண்ணுறதுக்கு முன்னாடி ஊருக்கூட்டத்தைக் கூட்டி ஊடு வரப்பு எப்புடியோ போகட்டும்... நடபாத வரப்புகள நல்லாக் கட்டுங்கப்பான்னு எல்லாருமா ஒக்காந்து பேசணும்... அப்ப எல்லாரும் குண்டி வேட்டிய தட்டிக்கிட்டு பேசாம எந்திருச்சு வந்துருவீக... இப்ப நடக்க முடியல... குதிக்க முடியலன்னு சொல்லக்கிட்டு படுத்துக்கிடந்தா வந்திருமா..."

"இந்த வியாக்கியானத்துக்கு குறைச்சல் இல்ல... ஆமா நாந்தேங் கேக்குறேன்... இப்ப ஊருக்கூட்டமாவா நடக்குது... இளந்தாரிப்பயலுக ஆட்டமாவுல்ல போச்சு... இப்ப எதுக்கு ஊருக்கதை... இப்ப என்ன... தண்ணிய வெட்டி விட்டுட்டு வரணும்... அம்புட்டுத்தானே... இந்தாப் போறேன்.. சும்மா கத்தாதே..."

"ஆமா... நாங்கத்தித்தான் இவரு எல்லாஞ் செய்யிறாரு... பொயிட்டு வந்தா மாடுகள அவுத்து கொள்ளக்காட்டுப் பக்கமா கொண்டு பொயிட்டு வந்தா கொஞ்சங் காலாத்திட்டு வருங்க... அதுகளும் ரெண்டு நாளாக் கட்டிக் கெடக்குக... சதசதன்னு படுக்கக் கூட முடியாம நிக்கிதுக... ரெண்டு நாளா ஒழுத கசாலக்குள்ள மூத்தரமும் சாணியுமா மாடுகள பாக்கச் சகிக்கலை... தொறுத்தொறுன்னு தண்ணிக்குள்ள நின்னா காலுல புண்ணு கிண்ணு வந்து தொலைக்கப் போகுது... வெட்டரிச்சா கம்மாத் தண்ணிக்குள்ள விட்டு கழுவிக் கொண்டாரலாம்... எங்க வெட்டரிக்கப் போவுது... மறுபடிக்கும் இருட்டிக்கிட்டு வருது... இந்தாங்க... இத தலையில போட்டுக்கிட்டு போங்க... அப்புறம் எதுவும் எடுக்காம பொயிட்டு மழயில நனச்சிட்டு வந்து தும்மிக்கிட்டுக் கெடக்காம... அப்பவும் ஏ உயிருதா போகும்..." என சாக்கைக் கொடுத்தாள்.

சாக்கை கொங்காணி போலச் செய்து தலையில் போட்டுக் கொண்டார். தண்ணீர் எடுத்து புகையிலையைத் துப்பி வாயைக் கொப்பளித்தார். 'ம்ம்க்கும்' என ஒரு செருமல் விட்டபடி துண்டால் முகத்தைத் துடைத்டுவிட்டு ஏரவாரத்தில் தொங்கிய மண்வெட்டிய எடுத்து தோளில் போட்டுக் கொண்டு வயலுக்குக் கிளம்பினார்.

அதுவரை மௌனம் காத்த வானம் மீண்டும் லேசாக தூற ஆரம்பித்தது. 'இதுல போயி தண்ணி வெட்டி விடலயின்னா பயிரு முழுகிப் போயிடுமோ? கெழவி நயிநயின்னு நமுத்து எடுத்துருவா... லேசா மழ பேஞ்சா கொழுஞ்சி புடுங்கு... முள்ளு வெட்டுன்னு கொல்லுவா... நாத்துப் பாவிட்டா அப்புறம் அறுத்து வூடு வாரவரைக்கும் உண்டு இல்லன்னு பண்ணிருவா...' சத்தமாக முணங்கியபடி வரப்பில் மெதுவாக நடந்தார். 

"சித்தப்போவ்... என்ன தண்ணி வெட்டி விடப்போறியளா...? மேட்டுச் செய்யில நானு வெட்டி விட்டுட்டேன்... அம்மஞ் செய்யிப்பக்கமாத்தான் போறேன்... அப்புடியே பாத்துட்டு வாறேன்... மழ பெருசா வரும் போல தெரியுது.... எதுக்கு இப்ப வரப்புல கஷ்டப்பட்டு போறியா... நா பாத்துட்டு வாறே... வீட்டுக்குப் போங்க..." கணக்கஞ் செய்யி வரப்பில் இருந்து அவரின் அண்ணன் மகன் கண்ணதாசன் கத்தினான்.

"நீ வந்தியா... பாக்கலை... நீ வந்தது தெரிஞ்சா வந்திருக்க மாட்டே... சரிப்பா... வந்தது வந்துட்டே... வேப்ப மரத்துச் செய்ய பாத்துட்டுப் போயிடுறே... இல்லாட்டி உங்க சின்னாத்தா கத்த ஆரம்பிச்சிருவா..." பதிலுக்கு இவரும் கத்தினார்.

"ஆமா எப்பவும் அதுக்கு பயந்தே சாகுங்க... எப்பத்தாஞ் சித்தப்பா சின்னத்தாக்கிட்ட எதுத்துப் பேசியிருக்கீக... போங்க... போங்க... மழ பெருசா வரும் போல இருக்கு... வெரசா பாத்துட்டு வாங்க..."

"சரிப்பா..." என்றவர் 'இந்தக் கெழவி பதிமூணு வயசுல பாவடையைப் போட்டுக்கிட்டு இங்க வந்தா... ஆச்சு ரெண்டு பேருக்கும் அறுவதுக்கு மேல... அன்னைக்கு பேந்தப் பேந்தன்னு நின்னா... அடுத்தாளுக்கிட்ட பேசப்பயப்படுவா... இன்னக்கி இவகிட்ட பேச எல்லாரும் பயப்படுறானுங்க... ம்... காலந்தான் ஆளுகள எப்படி மாத்திடுது.... என்ன இருந்தாலும் அவ ஒருத்தி இல்லைன்னாலும் நம்ம பொழப்பு நாறிப் போயிடும்... அதுக்காக அவளுக்கு முன்னாடி நா போயிச் சேந்துடக்கூடாது கருப்பா... நா இல்லைன்னா அவ வண்டி ஓடாது... ஒரு பய எட்டிப் பாக்கமாட்டான்... கெழவிய சீரழிச்சிப் புடுவானுங்க... எங்கண்ணு முன்னால அவ பொயிட்டா எப்படியோ நானும் போயி சேந்துருவேன்...' என மனசுக்குள் நினைத்தவரின் கண்கள் ஏனோ கலங்க, மழை சடச்சடவென சற்றே பெரியதாய் விழ ஆரம்பித்தது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

24 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…


வேரை நம்பி விழுதுகளா? விழுதுகளை நம்பி வேரா? என்பதை நாமும் தொடர்ந்து படித்தறிவோம்.
'கலையாத கனவுகள்' என்ற தொடர் வெற்றி பெற்றதாகவே நான் கருதுகிறேன்.
'வேரும் விழுதுகளும்' என்ற தொடரும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

தனிமரம் சொன்னது…

இயல்பான பேச்சுவழக்கின் மூலம் கதை பேசும் தொடருக்கு வாழ்த்துக்கள் .தொடர்கின்றேன்!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

புதிய தொடர் கதையின் ஆரம்பம் நன்று மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
த.ம 2வதுவாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மண் மனம் கமழும் புதிய தொடர்
படித்தேன் ரசித்தேன்
அருமை நண்பரே
தொடருங்கள் தொடர்கிறேன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 3

கோமதி அரசு சொன்னது…

மண்மணம் வீசும் கதை அருமை.
கணவன் மனைவியின் பாசம் எல்லாம் சேர்ந்து ஆரம்பமே நெகிழ வைத்து விட்டீர்கள்.
கணவன் மனைவி பாசம் வயதாக வயதாக அதிகமாகும், ஒருவர் துணை ஒருவருக்கு மிகவும் அவசிமான ஒன்று.
கதை தலைப்பை தேர்ந்து எடுத்து தந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.

UmayalGayathri சொன்னது…

கிராமிய மணத்துடன் தொடர் ஆரம்பம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
த.ம 4

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமை குமார். நெகிழ வைக்கிறது பெரியவரின் கடைசி வார்த்தைகள்

7 லட்சம் பார்வைகளாஆஆஆஆஆஆஅ ஹாஹா வாழ்த்துகள் தம்பு :)

துரை செல்வராஜூ சொன்னது…

மண் மணம் கமழ்கின்றது..
தொடருங்கள்..
வாழ்க நலம்..

KILLERGEE Devakottai சொன்னது…


கிராமத்து வாசனையுடன் தொடங்கிய யதார்த்த வார்த்தைகள் அருமை நண்பரே,,, தொடர்கிறேன் ...

J.Jeyaseelan சொன்னது…

தினம் தினம் நான் கேட்ட சந்தித்த அத்துனை கிராமத்து வழக்குகளுடன் மிகவும் அருமையாகச் செலிகிறது சார்,கடந்த‌ தொடர்கதையை நான் படிக்கவில்லை, இதைக் கட்டாயம் படிப்பேன். கணக்கஞ்செய்,வேப்பஞ்செய் எல்லாம் திரும்பவும் கேட்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது...`

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கிராமத்துள் சென்றது போன்ற உணர்வு! அத்தனை மண்ணின் மணம் கமழ்கின்றது! நம்ம பாரதிராஜா படம் போல காட்சி மனதில் விரிந்தது வாசிக்கும் போது!!! மதுரைப் பக்க கிராமத்து வட்டாரச் சொல் வழக்குதானே சகோதரரே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க யாழ்பாவணன் சார்...
கலையாத நினைவுகள் தங்களுக்கு பிடித்திருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி...
தங்களையும் சமீபத்தில்தான் தொடர ஆரம்பித்தேன்... வாசித்து வருகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. நேசன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சகோ. ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜெயக்குமார் ஐயா...
தங்களின் தொடர் வருகையும் தவறாமல் தமிழ்மண வாக்கும் எங்களைப் போன்றோருக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது ஐயா...
தொடர்ந்து தங்களின் கருத்துக்களை எங்களுக்கு உரமிடுங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கோமதி அம்மா...
தங்கள் கருத்து உண்மையே.... இருவருக்குள்ளும் சண்டைகள் வலுத்தாளும் அந்தப் பாசத்துக்கு மட்டும் தடை இருக்காது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தேனக்கா...
ஹா... ஹா... உங்களை விடவா அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செல்வராஜ் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க கில்லர்ஜி...
நம்ம பக்கத்து வாசனைதான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சீலன்...
இங்கு பகிர்ந்திருக்கும் மனிதர்கள் கற்பனையே... கணக்கஞ் செய்யும் வேப்பஞ் செய்யும், மேட்டுச் செய்யும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன எங்கள் ஊரில். இடங்கள் எல்லாம் கல்லூரியில் படிக்கும் வரை விவசாயியாய் வாழ்ந்த இடங்கள்தான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசிதரன் சார்...
தங்களைக் கவர்ந்ததா என் எழுத்து... மிக்க சந்தோஷம்... உங்களைப் போன்றோரின் பின்னூட்டங்கள்தான் எழுதத் தூண்டும் உரம், இது எங்க சிவகங்கைச் சீமையின் வட்டார வழக்கு... அடியேன் தேவகோட்டைக்கு அருகில் உள்ள பரியன்வயல் என்ற சிறிய கிராமத்தில் பிறந்ததால் எங்கள் வழக்கும் எங்கள் வாழ்க்கையும் எனது கதையில் காட்சியாய்... கதை மாந்தர்கள் கற்பனை என்றாலும் இடங்கள் எல்லாம் பரிட்சையமானவைதான்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி. உமையாள் காயத்ரி
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஓ! தேவகோட்டை, சிவகங்கை சீமை! இன்றைய பதிவிலும் தெரிந்து கொண்டோம்!

துளசி தேனி அருகில் ராசிங்கபுரம் எனும் மிகச் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்து...தமிழ்நாட்டில்....இப்போது பாலக்காட்டில்...

அந்த ஊரின் சுற்றுவட்ட வட்டார வழக்குச் சொல் போன்று இருந்ததால் தான் மதுரையைச் சுற்றியோ என்றுதோன்றியது...

மிக்க நன்றி நண்பரே!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கிராமிய மணம் கமழும் கதை. மனதைத் தொட்ட ஆரம்பம்...

இத் தொடர்கதையை தொடர்ந்து படிக்க வேண்டும் - முதல் தொடர்கதையை படிக்கவில்லை. நடுவில் இருந்து ஆரம்பிக்க பிடிக்காததால்...

r.v.saravanan சொன்னது…

மண் மணத்தை வரிகளெங்கும் தெளித்து எழுதியிருக்கிறீர்கள் குமார் தொடர்ந்து வருகிறேன்