மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தந்தையின் வலியை கேலிப் பொருளாக்குவதா?

காதலில் விழுந்த மகளை நினைத்துக் கண்ணீர் வடிக்கும் ஒரு தகப்பன் சினிமாக்காரனாக இருப்பதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறார். முகநூலில் கருத்துப் போர் நடத்த வாரத்துக்கு ஒரு நிகழ்வு கிடைத்துவிடுகிறது. இளவரசன் திவ்யா காதல் கதைக்கு பெரும்பாலும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். அந்தப் பெண் அவன் சாவதற்க்கு முன்னர் எனக்குப் போன் செய்தான் என்று சொல்லியிருக்கிறது. எதற்காக அப்படிச் சொன்னது... இதை சொல்வதால் அதற்கு என்ன லாபம் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். சரி முடிந்த கதைக்குள் செல்வதில் பயன் என்ன இருக்கிறது. இன்றைய பரபரப்புச் செய்திக்குள் போகலாம்.

இயக்குநர் சேரனின் மகள் தாமினி சந்துரு என்பவரைக் காதலிக்கிறார் அது அவரது விருப்பம்தான். பெற்றவர்களைக் கேட்டு காதலிக்க வேண்டும் என்றால் காதல் எதற்கு என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். காதலுக்காக நீதிமன்றம் ஏறுவது என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.


நான் காதலித்துத் திருமணம் செய்தவன்தான், காதலுக்கு எதிரியில்லை படிப்பு முடியட்டும் நானே திருமணம் செய்து வைக்கிறேன் என்று  சொன்னதாகவும் பின்னர் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்பதால் அவன் வேண்டாம் என மகளிடம் சொன்னதாகவும் சேரன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

எப்பவுமே பெண் குழந்தைகள் அப்பா செல்லமாகவே வளர்கிறார்கள். எதுவாக இருந்தாலும் அப்பாதான் வாங்கித்தர வேண்டாம். எதாக இருந்தாலும் அப்பாவிடம்தான் சொல்லவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அப்படிப்பட்ட பெண்ணையும் அப்பாவை எதிரியாகப் பார்க்க வைக்கும் ஒன்று உண்டு என்றால் அது காதல் மட்டுமே...

எல்லாமே பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுக்கும் அப்பாவால் மகளுக்கு நல்ல குணமுள்ள மாப்பிள்ளை பார்க்கத் தெரியாதா என்ன... இதில் மட்டும் ஏன் இத்தனை அவசரம்? சந்துரு என்றில்லை எவனைக் காதலித்தாலும் அவன் நல்லவனா, கடைசி வரைக்கும் வைத்துக் காப்பாற்றுவானா என்று ஏன் சிந்திப்பதில்லை. பிரபலத்தின் மகள் என்றில்லை ஏழை விவசாயியின் மகள்களும் இப்படித்தான் ஏமாறுகிறார்கள்.

எனது அத்தை பெண் திடீரென்று ஒரு நாள் காணாமல் போனாள். அவள் ஊரைவிட்டு வெளியேற ஊரில் அவளுடன் சுற்றிய பெண்ணே உதவியிருக்கிறாள். அது பின்னால் தெரிய வர பேச்சு வார்த்தைகள் அற்றுப் போய்விட்டன. அவள் காணாமல் போன அன்று எங்கள் குடும்பமே அவமானத்தாலும் அவள் கொடுத்த துக்கத்தாலும் துடித்தது. எங்கெங்கோ தேடினோம்... குறி... ஜாதகம் என எங்கெல்லாமோ அலைந்தோம். அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சில வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவளது தம்பி போய் பார்த்து வந்தான். குடிகாரனுக்கு வாக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு கஷ்ட ஜீவனமாய் வாழ்க்கையை ஓட்டுவதாக பக்கத்து வீட்டுப்பெண் சொல்ல, அவளது சான்றிதழ்களை கொண்டு போய் இதையாவது வைத்துப் பிழைத்துக் கொள் என்று கொடுத்துவிட்டு வந்துவிட்டான்.. அதன் பிறகு தொடர்பில் இல்லை. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அவள் ஓடியது ஒருபுறம் இருக்கட்டும்... அவளது அப்பா, அம்மாபட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது.

இதே காதலுக்காக நாங்களும் இஞ்சினியரிங் படித்த ஒருவனை இழந்து இன்னும் அவன் நினைவால் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவனது இழப்பில் இருந்து மீளமுடியாத தந்தை ஹோட்டல் தொழில் செய்தாலும் நடைபிணமாகவே வாழ்ந்து வருகிறார். 

சரி விசயத்துக்கு வருவோம், சேரன் திரைப்படங்களில் இளவயது காதல்களை சொன்னதன் வலியை இப்போது அனுபவிப்பதாக பெண்ணைப் பெற்ற தந்தையர்களும், பெண்ணைப் பெறப் போகும் தந்தையரும், மகள்களை வைத்திருக்கும் அம்மாக்களும், மகள்களுக்கு அம்மாவாகப் போகிறவர்களும் அளாளுக்கு அள்ளி விளாசுகிறார்கள். அன்று சேரன் காட்டிய சினிமாவை எல்லாரும் பார்த்து பிரமித்துத்தான் போனோம்... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதேன்னு ஆளாளுக்கு புலம்பித் தள்ளினோம். அன்று யாருமே சேரன் அவர்களே இதுபோல படமெடுத்தால் நாளை நீங்கள் அனுபவிப்பீர்கள் எனச் சொல்லவில்லை.

எனக்குத் தெரிந்து சேரனின் திரைப்படங்கள் வாழ்க்கையைப் பிரதிபலித்தனவே தவிர காதலை அதிகம் சொல்லவில்லை... அதன்பின்னான பிரச்சினைகளையே அதிகம் பேசியது... அப்படியே காதலைச் சொல்லியிருந்தாலும் யாராலும் விமர்சிக்கப்படவில்லை என்பதே உண்மை. பொற்காலமும் தவமாய் தவமிருந்தும் சொல்லிச் சென்றது எதை... இளவயது காதலையா... அல்லது காதல் தவறில்லை என்பதையா... சேரனை விமர்சிப்பவர்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.


இது சேரனுக்கு ஆதரவான பகிர்வு அல்ல... எத்தனையோ சேரன்கள் தங்கள் வாரிசுகளின் காதலால் கதறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது தொடரும் நிகழ்வுதான். காதலன்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காதல் கசந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு பெற்றோரிடம் வந்து நிற்பதும் வாடிக்கைதான். ஆனால் ஒரு தகப்பனின் கண்ணீரை நாம் கேலிக்கைப் பொருளாக்கிப் பார்ப்பது என்பது இப்போதுதான் அதிகம் நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம் வலையுலகம்தான்.

சினிமாக்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே எடுக்கப்படுகின்றன. அவற்றை நாம் யாரும் வாழ்வில் கடைபிடிப்பதும் இல்லை... கடைபிடிக்க வேண்டியதும் இல்லை... பார்த்தோமா ரசித்தோமா அத்துடன் அதைவிடுத்து நமது சராசரி வாழ்க்கைக்கு வந்துவிடுவோம். பதினாறு வயதுப் பெண்ணுடன் அறுபது வயதுக் கதாநாயகன் மரத்தைச் சுற்றி டூயட் பாடினால் நாமும் அதுமாதிரியா செய்கிறோம் இல்லை ஜேம்ஸ்பாண்ட் போல பறந்து பறந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமா... இல்லை அல்லவா... மேலும் நீ எடுத்த படத்தால் நாங்கள் கெட்டுவிட்டோம் என்று நம்மால் அறுதியிட்டுத்தான் சொல்ல முடியுமா... வேண்டுமானால கொலை கொள்ளைகள் நடக்கும் போது சினிமா கெடுத்துவிட்டது என்று கூறுவோம். அதற்காக படத்தில் காட்டினாய் அல்லவா அதனால் நீ அனுபவி என்று எப்படிச் சொல்லலாமா?.

ஒரு தகப்பனாய் தகப்பனின் வலி அறிந்தவராக நம்மில் யாருமே பேசவில்லை என்பதே வேதனைதான். என் மகளின் காதலுக்கு நான் எதிரியில்லை என்று சொன்ன தந்தையின் வலியை... அழுகையை கேலிப் பொருளாக ஆக்கி அதற்கான கருத்துக்களையும் பெற்று சந்தோஷப்படுகிறோம்... ஆண்டியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் மகளைப் பெற்ற தந்தையின் வலி என்பது எல்லாருக்கும் ஒன்றுதான்.

நாளை இதே வலி நமக்கு வரும்போது எத்தனை பேர் ஏற்றுக் கொள்வோம் சொல்லுங்கள் பார்க்கலாம். அன்று நாம் மனதார வாழ்த்தி அணைத்துக் கொள்வோமா இல்லை அப்போது மட்டும் இது எனது குடும்பம்... என் மகள்... என் மகன்... என்று தந்தையின் வலியைப் பிரதிபலிப்போமா?

மகளோ மகனோ தாங்கள் தேர்ந்தெடுக்கும் இணை எப்படிச் சூழலிலும் தன் மீது கொண்ட காதலில் இருந்து இம்மியளவும் குறையமாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்டு அதை தனது பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் அனுமதிபெற்று வாழ்க்கையை ஆரம்பித்தால் அந்த வாழ்க்கை இனிக்கும். இன்று காதலனுக்காக இத்தனை வருடம் கஷ்டப்பட்டு தங்களின் சுக துக்கங்களை நெஞ்சில் சுமந்து வாழ்ந்த பெற்றோரை ஒரு நொடியில் தூக்கி எறிந்து பேசும் வாரிசுகள் நாளை தங்களது வாரிசுகளை எப்படி நடத்துவார்கள்... எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்வார்களா... அப்போது மட்டும் என் குடும்பம் என் குழந்தைகள் என்று வாழ்க்கை வட்டத்துகுள் வந்துவிடுவார்கள் என்பதே உண்மை. அதற்கு சேரனும் விதிவிலக்கல்ல என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

பிரபலமாக இருப்பதால் பிரச்சினை சந்திக்கு வந்திருக்கிறது. எத்தனையோ ஏழை அப்பன்களின் வலிகளெல்லாம் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டு போய்விடுகின்றன. மீடியாக்களும் பேசுவதில்லை... வலையுலகமும் பேசுவதில்லை.

காதலனுடன்தான் செல்வேன் என நீதிமன்றத்தில் அடித்துச் சொல்லியிருக்கிறார் சேரனின் அன்பு மகள். அப்படியே செல்லட்டும்... சந்தோஷமாக வாழட்டும்... வாழ்க்கை சிறக்கட்டும்... கடைசி வரை அந்தப் பையனுடன் வாழ்ந்து நான் நல்லவனைத்தான் காதலித்திருக்கிறேன் என்று பெற்றவர்களுக்கு நிரூபிக்கட்டும்... நாமும் வாழ்த்துவோம்.


நான் நேற்று முகநூலில் பதிந்த கருத்தையே இங்கும் சொல்லி முடிக்கிறேன்.

சினிமாக்காரன் என்பதால் ஒரு தந்தையின் வலி இங்கே சந்தி சிரிக்கிறது.

இதற்கு எதிர்மறையான விமர்சனங்களும் வரலாம். ஒரு மகளைப் பெற்ற தந்தையாக என் மனதில் தோன்றியதைத்தான் பதிந்திருக்கிறேன். இதில் என்னுடன் எல்லாரும் ஒத்துப் போகவேண்டும் என்று சொல்லவரவில்லை. மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்....
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

சாய்ரோஸ் சொன்னது…

மிக உண்மையான கருத்துக்கள்... இது பெண்குழுந்தையைப்பெற்று வளர்த்து ஆளாக்கி அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துதர எண்ணும் ஒரு தனிமனிதனின் மனவலிகள்... அதை ஏன் மீடியாக்கள் ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு பொறிந்து தள்ளுகிறார்கள் என்று தெரியவில்லை... நல்லதோ... கெட்டதோ... நாளை அதை அனுபவிக்கப்போவது சேரனின் மகளோ இல்லை சேரனோதான்... இதில் இடையில் நமக்கென்ன வந்தது?... ஒரு குப்பனோ... சுப்பனோ... இந்த நிலையை சந்தித்திருந்தால் இவ்வளவு பரப்பியிருப்போமா இந்தச்செய்தியை?... சேரன் எந்தக்காலத்திலும் யாருக்கும் உபதேசம் செய்யவில்லை... சிலபல நல்ல கருத்துக்களை அடிப்படையாக வைத்து படமெடுத்தார்... அதை அப்படியே ஃபாலோ பண்ணுங்கள் என்று யாரிடமும் சொன்னதாய் தெரியவில்லை... சேரன் தனது படங்களில் காதலை ஆதரிக்கிறார்... நிஜவாழ்க்கையில் தனது மகளின் காதலை எதிர்க்கிறார் என்று பரப்புவதெல்லாம் வீண் பரபரப்புக்காக எழுதுபவர்களின் தவறான கருத்துக்களே... ம்ம்ம்ம்... என்ன செய்ய?... நமது சமூகம் ஏதாவது பரபரப்பு செய்திகளை எதிர்பார்த்தே பழகியாகிவிட்டது...!!!!

தனிமரம் சொன்னது…

நமது சமூகம் ஏதாவது பரபரப்பு செய்திகளை எதிர்பார்த்தே பழகியாகிவிட்டது... அதை ஊடகம் ஊதிப்பெரிப்பிக்கின்றது விலைபோக !

ஜோதிஜி சொன்னது…

மகளின் பிடிவாதம் இன்று குடும்ப விசயம் பொது விசயமாக மாறிவிட்டது.

கோமதி அரசு சொன்னது…

கடைசி வரை அந்தப் பையனுடன் வாழ்ந்து நான் நல்லவனைத்தான் காதலித்திருக்கிறேன் என்று பெற்றவர்களுக்கு நிரூபிக்கட்டும்... நாமும் வாழ்த்துவோம்.//
நீங்கள் சொல்வது சரிதான்.
காதலிக்கும் போது நல்லவனா, கெட்டவனா தெரியாது, நல்லவனோ, கெட்டவனோ அவன் கூட போனபின் நன்றாக வாழ்ந்தால் பெற்றவர்கள் மகிழ்வார்கள், இல்லையென்றால் காலத்துக்கும் அவர்களுக்கு வேதனை தான்.
நாமும் வாழ்த்துவோம். இன்று திருமணம், நாளை பிரிவு என்று இல்லாமல் ஒற்றுமையாக , நலமாக, வளமாக வாழ வாழ்த்துவோம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//சினிமாக்காரன் என்பதால் ஒரு தந்தையின் வலி இங்கே சந்தி சிரிக்கிறது//

100% True.....

குலசேகரன் சொன்னது…

மூன்று நில்லிடங்கள் (பொசிசன்ஸ்) : ஓன்று பெற்றோர் நிலை; இரண்டு காதலிக்கும் மகனோ, மகளோ நிலை; மூன்று: பொதுவானவர்கள் நிலை அதாவது பார்க்கும் நிலை.

முதனிலை பெற்றோர் சார்பாகப் பேசிவிட்டீர்கள்; முழுக்க முழுக்க அவர்கள் சார்பாக. அதற்கு உறுதுணையாக, எனக்கும் ஒரு மகளுண்டு என்றோரு எமோசனல் சப்போர்ட்டைத் தேடுதல்.

இரண்டாவது நிலைக்கும் மூன்றாவது நிலைக்கும் சேர்த்து முதனிலையின் நின்ற நீங்கள் பேசவியாலாது. ஆனால் பேசுகிறீர்கள். அவர்களைத்தூற்றி மட்டும்.

என் பொது நிலைக்கருத்து இது:

பெண் பெற்றோரால் வளர்க்கப்பட்டிருக்கலாம் ரொமபச் செல்லமாக. அப்பெற்றோருக்கு ஆயிரம் எதிர்ப்பார்ப்புக்கள் இருக்கலாம். அது அவர்களைப் பொறுத்தவரை மட்டுமே சரி. பெண்ணப்பொறுத்த்வரை ஒரு காதலன், பின்னர் கணவன் என்பதும் சேர்த்துதான் அவள் வாழ்க்கை. அவள் பெற்றோருக்கு மகள் - எவ்வளவு காலம் எவவளவு தூரம் Mr Kumar ? அவள் கணவனுக்கு மனைவி - எவ்வளவு காலம் எவ்வளவு தூரம் என்றால் அவள் கடைசிக்காலம் வரைக்கும். Can you disagree?

அப்பெண் தன் காதலனே தனக்குக் கணவனாக வேண்டும் எப்படிப்பட்டானாக அவன் இருந்தாலும் என்று முடிவை அடித்துச்சொல்லிவிட்டதன் பொருள்? "என் பெற்றோர்களின் காலம் என்னைப்பொருத்தவரை காலவாதியாகிவிட்டது. இனி என் காலம் என் கணவ்னோடே மட்டுமே"

இதுவும் நம் கலாச்சாரம்தான். That is, a woman should totally integrate with her husband and his fate. புகுந்த வீடு நிரந்தரமாகிறது. வளர்ந்த வீடு மறந்து விட்டது. அஃது எவ்வளவு தூரம் மறக்கடிக்கப்படுகிறது அவவளவு தூரம் அவள் வாழ்க்கை சிறக்கும். கணவன் வீடு குடிசையாகி இருந்து தந்தையின் வீடு அரண்மனையாக இருந்தாலும் அதே (சீதை நினைவுக்கு வருவாள் இங்கே)

சேரனும் அவர் மனைவியும் போகாத ஊருக்கு வழிதேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Dear Kumar!

I welcome such controversies; more such controversies, the more self examination our culture will have. The fameles of Tamil society have been brought up enslaved to the males of the society. It will be questioned and if yaamini takes the first step courageously towards that, it is great. You and I, nor their parents, have no business to do there; and even if her marriage is on rocks, she will learn to accept that. That exactly is women emancipation. Tamil society should examine its values at least hereafter! For that, such public controversies should occur more and more - which will bring out how enslaved women are to men!

Let Cheran and his wife forget their daughter and go ahead with their own life.

சக்தி கல்வி மையம் சொன்னது…

பாவமாக இருக்கிறது சேரனின் நிலை.

வருண் சொன்னது…

இப்போ என்னங்க சந்தி சிரிச்சுடுச்சு? இவரோட பெண் காதலில் விழுந்து அவளுக்கு பிடித்தவனை மணப்பேன் என்கிறாள்.

பெற்றவர்களுக்கு அவன் தன் மகளை மணம் முடிக்க தகுதியில்லாதவன். பொண்ணு மேஜராயிட்டா. அப்பா அம்மா வை எதிர்க்கும் அளவுக்கு "காதல்"

இந்தக்காதல் இன்னும் 2 வருடத்தில் இருக்காதுதான். காதலன் கணவனாகி இவளைக் கைவிடலாம்தான். இல்லைனு சொல்லவில்லை!

சாதாரண அரேஞிட் மேரேஜ்லயும் இதுபோல் நடந்துகொண்டுதான் இருக்கு, சாதகம் பார்த்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கட்டி வைப்பவன் நாளைக்கு தெருப் பொறுக்கியாவது இல்லையா? குடிகாரனாவது இல்லையா?

அதேபோல் இவன் தரம் குறைந்தால், அப்பாவைத்தேடி மகள் வரப்போறாள். அப்போது அவளை அரவணைத்து, ஆதரவிளிப்பதே பெரிய மனுஷனுக்கு அழகு!

Nobody knows what will happen to this relationship after 2 years. It is true even in arranged marriage.

மேடை போட்டு ஒப்பாரி வைக்காமல், அவளை அவனுடன் அனுப்பி வைத்துவிட்டு, ஏதாவது தாங்க முடியாத பிரச்சினைனா அப்பா அம்மாவிடம் வா. என்ன இருந்ஹ்டாலும் நீ என் மகள், உன்னை மன்னித்து உனக்கு உதவுவோம்னு சொல்வதுதான் தந்தைக்கு அழகு.

இதுகூடத் தெரியாமல், ஆட்டோ க்ராஃப் அது இதுனு படம் எடுத்து என்னத்த தாலிய அறுத்தான் இந்த சேரன்??

He is showing premarital sex is unavoidable in thavamaay thavamirunthu. He is sleeping with his girl friend before marriage.

So, his daughter might have thought his dad is an open-minded person and fell in love some guy she likes.. There is nothing wrong with her.

Cheran is a hypocrite and that's all we learn. He preaches something in his movies but when it comes his life, he acts like a REAL MORON!

Unknown சொன்னது…

ஒரு தந்தையாக சேரன் செய்தது சரியே

சினிமாக்காரன் என்பதால் ஒரு தந்தையின் வலி இங்கே சந்தி சிரிக்கிறது////

ரொம்ப சரியாய் சொன்னிங்க தோழரே

பெயரில்லா சொன்னது…

@ வருண் : தனது மகள் காதலிப்பவன் கெட்டவன்னு தெரிஞ்சும் நீ அவனோட போயி வாழ், பின்னாடி அவன் உன்ன கஷ்டப்படுத்துனாலோ, எமாத்துனாலோ, பிடிக்கலேனாலோ திரும்ப வந்துடு. நீங்க சொல்லவரது இதைத்தானே. ஒரு அப்பாவால எப்புடி இப்படி சொல்லமுடியும்?

Yoga.S. சொன்னது…

இப்போதெல்லாம் பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டாலே,தீர்மானிக்கும் பொறுப்பை பெற்றோருக்குக் கொடுப்பதில்லை.நல்லது/கெட்டது எதுவென்றே புரிந்து கொள்ளாமல் .................கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று./////புறம் பேசுதலே கடமையாக முக நூலும் ஊடகங்களும் ஹூம்,என்னத்த சொல்ல?

குலசேகரன் சொன்னது…

ஒரு வகையில் சேரனின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு சரியாகத்தான் படும்.

திரைப்படங்கள் பொருந்தாக் காமத்தையும் காதலையும் காட்டினால், ஒரு பொறுக்கியைக் காதலித்தல், அதை மஹத்தான காத்லாகக் காட்டுதல் - போன்று, அதைப்பார்த்துவிட்டு, இது ரீல் ரியல் அன்று என்று இரசித்துவிட்டுப்போவதற்கு மனப்பக்குவம் வேண்டும். அது வளரும் விடலைபபசங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில், கிடையாது. நம கலாச்சாரம் சுயசிந்தனையை வளர்ப்பதில்லை. உதவியில்லாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமிலிருக்கக்கூடாதே எனபர். அது போல நம் கலாச்சாரம் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை; சுயசிந்தனை உள்ளவர்களையும் எதிர்கேள்வி கேட்பவர்களையும் அறிவு ஜீவிகள் என்றும் பெரிய் அறிவுக்கொழுந்து என்றும் சீண்டி நகைக்கும்.

இப்படிப்பட்ட கலாச்சார சூழ்நிலையில் சேரன் போன்றோரின் படங்களைப்பார்த்து வளரும் விடலைப்பையன்களும் பெண்களும் தாமினியைப்போல்தான் எவன் என்று பார்க்காமல் பின்னால் செல்வர். உண்மையா பொய்யா?

பெண் சுயசிந்தனையோடு நல்ல முடிவுகளை எடுக்கும் மனப்பக்குவத்தை ஒரு தந்தை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற பழமொழி தந்தைமார்களுக்கு ஒரு அறிவுறுத்தலே. அதாவது உன் சொல் மந்திரமாக ஏற்றுக்கொள்ளப்படும். உன் பொறுப்பைச் சரியாகப்பார் என்பதுதான்.

சேரன் செய்தாரா? இல்லை என்பதுதான் அவர் பெண்ணின் வாழ்க்கைக் காட்டுகிறது.

இன்னுமொரு எண்ணத்தையும் சொல்லியாக வேண்டும்.

Generally, girls who are deprived of care at home fall in love. The loss of trust in their parents, lack of adequate friendships - not only for entertainment level, but for intellectual exchanges, lack of standards and goals to move towards in life, Company of peer group with identical interests but not low interests as you see in Tamil guys brought up on the diiet of Tamil cinema - and many more. இவைகள் கிடைத்திருந்தால் உங்கள் குழந்தை ஒரு பொறுக்கியின் பின்னால் மோஹிக்காது. ஆணோ பெண்ணோ. Bring up your children with good family values - they will stand them in good stead or save them from many a tragedy or failures inj life later on, not only in calf love.

கும்மாச்சி சொன்னது…

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும் மகளின் காதலனின் உண்மை நிலை.