மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 12 ஆகஸ்ட், 2013பிரிவு தொலைத்த பாசம்...அம்மா பங்கு வைத்து
உனக்குக் கொடுத்த
பலகாரத்தில் பாதியை
எனக்குக் கொடுத்தாய்...
சகோதரனாய் அன்று...

சொத்துப் பிரிக்கும்போது
அவனுக்கு மட்டும்
எப்படி அந்த இடத்தைக்
கொடுக்கலாம்
சரி பாதி வேண்டும்
என சண்டையிடுகிறாய்
பங்காளியாய் இன்று...

சொத்துக்காக உறவைப்
பகைக்கிறாய் நீ...
உறவுக்காக சொத்தை
இழக்கிறேன் நான்...

உடைந்த சட்டி
ஒட்டாது என்கிறாய்...
சட்டி உடையவே
இல்லையே என்கிறேன்...

வந்த சொந்தங்கள்
வகைக்கு ஒருவராய்
பிரித்து விட்டன...
வாய் வார்த்தைகள்
தடித்து வருகின்றன...

எல்லாம் பிரித்ததும்
சந்தோஷம் என்கிறாய்...
நமக்குள் பிரிவு
இயற்கையின் நியதி...
வாழ்க்கை முரண்...
ஏற்றுக் கொள்கிறேன்...

பெற்றவர்களையும்
பிரிக்கச் சொல்கிறாயே...
எப்படி மாறினாய்
பால் கொடுத்த மாரிலும்
பாதம் பதிந்த நெஞ்சிலும்
ஈட்டியைப் பாய்ச்ச...

மகனாய்...
அண்ணனாய்...
நண்பனாய்...
இருந்த நீ
மனிதனாய் இருக்க
மறந்தது ஏன்....
சகோதரனே....
இல்லையில்லை
பங்காளியே...
இப்போதெல்லாம்
அப்படித்தானே
சொல்கிறாய்...

பாசத்திலும் வரப்பு
வைக்க நினைக்காதே...
வாழ்க்கை முரண்
வசந்தத்தை அழித்து
வாழ்வையும்
தொலைத்துவிடும்...
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

 1. பாசத்திலும் வரப்பு
  வைக்க நினைக்காதே...
  வாழ்க்கை முரண்
  வசந்தத்தை அழித்து
  வாழ்வையும்
  தொலைத்துவிடும்...//

  அருமையான கவிதை.
  பிரிவு மிகவும் கொடுமையானது.

  உறவுக்காக சொத்தை
  இழக்கிறேன் நான்.//

  பாசம் நம்மை சில நேரங்களீல்(வழுக்கி) தடுக்கி விழ செய்கிறது.
  சொத்தை இழந்தாலும் பாசம், அன்பு நீடித்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை......

  பல வீடுகளில் இதே நிலை! :(

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...