மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 8 ஆகஸ்ட், 2013எம்.ஜி.ஆருடன் உலகம் சுற்றினேன்! - லதா

 ஏராளமான பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டமான தயாரிப்பில் அறிமுகமாகும் வாய்ப்பு மிகச் சிலருக்குத்தான் அமையும். அதுவும் முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர். ஜோடியாக நடித்த அதிர்ஷ்டசாலி நடிகை லதா.


 என் தந்தை சண்முக சேதுபதி ராமநாதபுர சமஸ்தானத்தின் ராஜா. தாயார் பெயர் லீலா ராணி. என் அம்மாவின் அக்கா கமலா கோட்னீஸ் தேவ் ஆனந்த் அறிமுகமான இந்திப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். ஏராளமான இந்தி, தெலுங்குப் படங்களில் இவர் நடித்திருக்கிறார். என் பெரியம்மா சினிமாவில் நடித்ததெல்லாம் நான் பிறப்பதற்கு முன்பே நடந்த விஷயங்கள்.

 என் தாயார் சிறு வயதாக இருக்கும்போதே சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டோம். எனவே நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில்தான் படித்தேன். சிறு வயதிலேயே எனக்கு நடனத்தில் ஈடுபாடு இருந்ததால் வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் பரதமும், கிருஷ்ண குமாரிடம் கதக் நடனமும் பயின்றேன்.

 பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் எல்லாம் தவறாமல் பங்கு கொள்வேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது தியாகராய நகர் ராமாராவ் கல்யாண மண்டபத்தில் நடந்த பள்ளி விழா ஒன்றில் வழக்கம்போல் கலந்து கொண்டேன். இந்த விழாவை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர்தான் நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் நாடகங்களுக்கும் புகைப்படங்கள் எடுப்பவர். நாடகத்தில் எடுத்த புகைப்படங்களை ஆர்.எஸ்.மனோகரிடம் கொடுப்பதற்கு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றபோது அந்தப் படங்களுடன் எனது படமும் இருந்திருக்கிறது.

 அப்போது ஆர்.எஸ்.மனோகருடன் இருந்த எம்.ஜி.ஆர் யதேச்சையாக எனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, "என்னுடன் நடிப்பதற்கு ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பார்களா?' என்று கேட்டிருக்கிறார். இந்த விஷயத்தை அந்தப் புகைப்படக்காரர் என் அம்மாவிடம் சொல்ல, "படித்துக் கொண்டிருக்கும் என் மகளை சினிமாவில் நடிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை' என்று சொல்லி மறுத்து விட்டார் அம்மா.

 பிறகு ஆர்.எஸ்.மனோகரே வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பேசிப்பார்த்தும் அம்மா சம்மதிக்கவில்லை. சரி நீங்களே வந்து எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டு வந்து விடுங்கள்' என்று வற்புறுத்தினார். சினிமாவில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இருந்தது என்றாலும் அம்மாவுக்கு அதில் விருப்பமில்லை என்றபோது நான் என்ன செய்ய முடியும்? ஆனால் என் பெரியம்மா நான் சினிமாவில் நடிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார்.

 ஆர்.எஸ்.மனோகரே மாம்பலத்தில் உள்ள எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு ஒரு மதிய நேரத்தில் எங்களை அழைத்துச் சென்றார். இயக்குநர் ப.நீலகண்டன் மற்றும் சிலருடன் எம்.ஜி.ஆர். சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எங்ளையும் சாப்பிடச் சொல்ல, நாங்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டோம் என்று சொன்னதால், வற்புறுத்தி பாயாசம் மட்டும் குடிக்க வைத்தார். முதலில் என்னிடம் "சினிமாவில் நடிக்க விருப்பமா?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது "எனக்கு ஆசைதான். ஆனால் அம்மாவுக்கு விருப்பமில்லையே?' என்று சொன்னேன். அதை தான் பார்த்துக் கொள்வதாகச் சொன்ன எம்.ஜி.ஆர். அம்மாவிடம் ஒரு மணி நேரம் தனியாகப் பேசினார்.

பொண்ணுக்கு விருப்பமில்லையென்றால் விட்டு விடலாம். உங்கள் மகளே நடிக்க ஆசைப் படும்போது நீங்கள் ஏன் தடுக்கின்றீர்கள்? உங்கள் குடும்பம் எப்படிப்பட்ட பாரம்பரியமான குடும்பம் என்பது எனக்குத் தெரியும். உங்கள் கணவர் சேதுபதி ராஜாவிடம் நான் பழகியிருக்கிறேன். நான் குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது எனது பக்கத்து அறையில்தான் உங்கள் கணவர் உடல் நலம் சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார். என்னை நம்பி தைரியமாக நீங்கள் உங்கள் பொண்ணை நடிக்க அனுப்பலாம் என்றெல்லாம் பேசி என் அம்மாவின் சம்மதத்தை வாங்கி விட்டார் எம்.ஜி.ஆர்.

 எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கும் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்த கையோடு எனக்குப் பயிற்சிகளும் ஆரம்பமானது. பள்ளிக்குச் செல்வதுபோல் தினமும் காலை ஒன்பது மணிக்கு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலகம் சென்றுவிட வேண்டும். சோப்ரா மாஸ்டர், புலியூர் சரோஜா போன்ற நடன இயக்குநர்கள் வந்து நடனப் பயிற்சி அளிப்பார்கள். பி.டி.சம்பந்தம், நடிகை ஜி.சகுந்தலா ஆகியோர் வசனம் பேசுவது தொடர்பாக பயிற்சியளிப்பார்கள். தினமும் காலையில் தொடங்கி மாலைவரை இந்தப் பயிற்சிகள் நடக்கும். அவ்வப்போது மஞ்சுளாவும் பயிற்சிக்கு வந்து செல்வார்.

 எம்.ஜி.ஆர். சில சமயம் பயிற்சி நடக்கும் இடத்துக்கு வருவார். அவரைப் பார்த்ததுமே எனக்கு ஒரு வித பயம் ஏற்பட்டு தடுமாறுவேன்."உங்களைப் பார்த்தால்தான் இந்தத் தடுமாற்றம் வருகிறது என்று புலியூர் சரோஜா சொல்ல, அப்படியானால் ஹீரோவை மாற்றிவிடலாமா? என்று சிரித்துக் கொண்டே என்னிடம் கேட்டார் எம்.ஜி.ஆர். இதன் பிறகு எம்.ஜி.ஆர். கலகலப்பாக என்னிடம் பேசிப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக என் தயக்கத்தையும் பயத்தையும் போக்கினார். நளினி என்ற என் சொந்தப் பெயரையும் லதா என்றும் மாற்றினார்.

 நான் அறிமுகமான "உலகம் சுற்றும் வாலிபன்" சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, ஜப்பான் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் படமானது. சந்திரகலா, மஞ்சுளா மற்றும் படப்பிடிப்புக் குழுவினருடன் இந்த நாடுகளுக்குச் சென்று வந்தது எனக்கு நடிக்கும் உணர்வையே ஏற்படத்தவில்லை. பள்ளி சுற்றுலா சென்று வந்ததுபோல்தான் இருந்தது. "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போதே "நேற்று இன்று நாளை" "நினைத்ததை முடிப்பவன்" என்று மேலும் நான்கு படங்களில் எம்.ஜி.ஆர். ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானேன். தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் என்னால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது
.
 எம்.ஜி.ஆர். பிக்சர்சில் ஆரம்பத்திலேயே ஐந்து வருடங்களுக்கு என்னிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டதால், தொடர்ந்து எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்தேன். ஆயினும் ஐந்து ஆண்டுகள் முடிவதற்கு முன்பே அந்த ஒப்பந்தத்தைத் தளர்த்தி வேற்று மொழிப் படங்களில் நடிக்க நல்ல வாய்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லி அனுமதியளித்தனர். நாகேஸ்வரராவுக்கு ஜோடியாக "அந்தால ராமுடு"  என்ற தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதில் நடிக்கும்போதே கிருஷ்ணம் ராஜூவுக்கு ஜோடியாக "காந்தி புட்டின தேசம்" என்ற படத்திலும் நடிக்க ஆரம்பித்தேன். இந்தப் படத்தின் மூலம் சிறந்த புதுமுக நடிகைக்கான மாநில அரசின் விருதையும் பெற்றேன். தொடர்ந்து என்.டி.ராமராவ், சோபன் பாபு என்று அப்போது முன்னணியில் இருந்த அத்தனை தெலுங்கு நாயகர்களுக்கும் ஜோடியாக நடித்தேன்.


இதேபோல் கன்னடப்படவுலகின் டாப் ஹீரோக்களான ராஜ்குமார், ஸ்ரீநாத் ஆகியோர் உட்பட அனைத்து கன்னட நடிகர்களுடனும் பல படங்களில் நடித்திருக்கிறேன். மலையாளத்திலும் சுமார் பத்து படங்களில் நடித்திருக்கிறேன். எல்லா மொழிகளிலும் சேர்த்து நூற்று ஐம்பது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். சிவாஜி கணேசனுடன் "சிவகாமியின் செல்வன்' படத்தில் மட்டும் நடித்திருக்கிறேன். இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்து சாதனைகள் படைத்த "ஆராதனா" இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. இந்தியில் பரீதா ஜலால் நடித்த வேடத்தை தமிழில் நான் செய்திருந்தேன்.

 ஸ்ரீதர் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் உருவான "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படத்தில் கதாநாயகியாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். அப்போதெல்லாம் டப்பிங் இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தாத கால கட்டம் என்பதால் படப்பிடிப்பு சமயத்திலேயே பெரும்பாலும் வசனங்களும் பதிவு செய்யப்பட்டுவிடும். பக்கத்தில் யாராவது உதவி இயக்குநர்கள் "ப்ராம்ட்" பண்ண, நடிப்பவர்கள் வெறுமனே வாயசைக்கும் கதையெல்லாம் கிடையாது. "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" படத்தில் மூன்று மொழிகளிலும் கதாநாயகி நான்தான். ஆனால் நாயகர்கள் மட்டும் ஒவ்வொரு மொழிக்கும் மாறுவார்கள்.

 ஒரு பாறையில் நாயகனும் நாயகியும் பேசிக் கொண்டிருப்பதுபோல் காட்சி என்றால், நான் போய் பாறையில் உட்காருவேன். தமிழ் வாங்க என்பார் இயக்குநர். தமிழில் நடிப்பவர் வந்ததும் தமிழில் காதல் வசனங்களைப் பேச வேண்டும். அடுத்து தெலுங்கு நடிகர் வந்து அமர தெலுங்கு வசனங்களைப் பேச வேண்டும். பின்னர் இதுபோல் கன்னடம் பேசி நடிக்க வேண்டும். சமயத்தில் தெலுங்கு காட்சியை எடுக்க தாமதமானால் கன்னடம் எடுப்பார்கள். தெலுங்கு வசனங்களைப் படித்து ஒத்திகை பார்த்துவிட்டு அது தாமதமாகும் காரணத்தால் கன்னட வசனம் பேச வேண்டியிருக்கும்போது சிரமமாக இருக்கும். ஆனாலும் தடுமாறாமல் சரியாகப் பேசி இயக்குநரிடம் சபாஷ் வாங்கி விடுவேன்.

 எழுபதுகளில் நான் மிகவும் பிசியாக ஏராளமான தென்னிந்திய மொழிப்படங்ளில் நடித்துக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர். முதல்வர் பதவி ஏற்பதற்கு முன்பு நடித்த கடைசி படங்களான் "மீனவ நண்பன்" "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" வரை அவருடன் இணைந்து நடித்தேன். அடுத்த தலைமுறை நட்சத்திரங்களான ரஜினிகாந்த்துடன் "ஆயிரம் ஜென்மங்கள்", "சங்கர் சலீம் சைமன்" போன்ற படங்களிலும் கமலுடன் "நீயா" "வயநாடான் தம்பான்" போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன். இதேபோல் ஜெய் கணேஷ், விஜயகுமார், ஸ்ரீகாந்த் போன்ற கதாநாயகர்களுடனும் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நான் பிரதான வேடத்தில் நடித்த "வருவான் வடிவேலன்" வெள்ளிவிழாப் படமாக அமைந்ததால் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து பிசியாகி விட்டேன்.

 திருமணத்துக்குப் பிறகு சினிமாத் துறையிலிருந்து விலகி கணவரின் பிசினஸ் காரணமாக சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டேன். எண்பத்தாறாம் ஆண்டு என் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது பார்க்க வந்தேன். அப்போது என்னை சந்தித்த பாக்யராஜ் தனது "அவசரப் போலீஸ்" படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று அவரிடம் சொல்லிவிட்டேன். ஆயினும் விடாமல் வற்புறுத்திய பாக்யராஜ், நான் நடிக்க வருவதாக உறுதியளித்தால் காத்திருந்துகூட படப்பிடிப்பை நடத்தத் தயார் என்றுகூட சொல்லிப் பார்த்தார். ஆனாலும் அப்போது மீண்டும் நடிக்கும் எண்ணத்தில் நான் இல்லாததால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.

 சரியாக பத்து ஆண்டுகள் கழித்து ஒரு விழாவில் என்னைப் பார்த்த ராஜ்கிரண் தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்தார். நடிப்பதையே நான் மறந்து விட்டேன் என்று சொல்லி மறுத்து விட்டேன். ராஜ்கிரண் மீண்டும் மீண்டும் என்னை நடிக்க வற்புறுத்தியதுடன் எனக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லி என்னை நடிக்க அழைப்பு விடுத்தபடி இருந்தார். இது தொடர்பாகப் பேசிய மஞ்சுளாகூட, உன் பசங்கதான் பெரியவர்களாகிவிட்டார்களே? இப்போது படத்தில் நடிக்கலாமே? என்று கேட்க, நானும் ஒத்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்தேன்.


 மீண்டும் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு நான் நடிக்க ஒத்துக் கொண்ட அந்தப் படம்தான் "பொண்ணு விளையும் பூமி'. முதல் நாள் படப்பிடிப்பில், இடைவெளிக்குப் பிறகு நடிக்கறோமே நம்மால் நன்றாக நடிக்க முடியுமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் முதல் ஷாட் முதல் டேக்கே ஓ.கே. ஆனதும் மொத்த யூனிட்டுமே கை தட்டி என்னைப் பாராட்டியது. நடிப்பையே மறந்து விட்டேன் என்று சொன்னீர்களே? எப்படி உங்களால் நடிப்பை மறக்க முடியும்? என்று கேட்டு என்னைப் பாராட்டினார் ராஜ்கிரண். இப்படத்தில் குஷ்புவின் தாயாராக நல்லதொரு வேடத்தில் நடித்தேன். இதைத் தொடர்ந்து "ரெட்டை ஜடை வயசு", "பத்தினிப் பெண்" "புதுக்குடித்தனம்" என்று பல படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்
.
 தொலைக் காட்சிக்காக முதன் முதலாக கே.சங்கர் இயக்கிய "ராமாயணம்" தொடரில் மண்டோதரி வேடத்தில் நடித்தேன். தொடர்ந்து ராதிகாவின் "சித்தி", "செல்வி", "அரசி" என்று பல மெகா சீரியல்களிலும் நடித்தேன். பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிப்பில் நான் நடித்த "கஸ்தூரி" தொடர் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பானது.

 சினிமாவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., சிவாஜியில் ஆரம்பித்து இப்போதுள்ள அர்ஜூன் அஜித் வரை நடித்து விட்டேன்.

 எனக்கு இரண்டு மகன்கள். இருவருமே லண்டனில்தான் படித்தார்கள். மூத்த மகன் லண்டனிலேயே செட்டில் ஆகிவிட, அடுத்த மகன் மும்பையில் பணியாற்றுகிறார். கணவர் சிங்கப்பூரில் பிசினஸ் செய்வதால் நான் லண்டன் சிங்கப்பூர் சென்னை என்று மாறி மாறி எல்லா இடங்களுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறேன் என்கிறார் லதா.

 நன்றி : ஆர்.எஸ்.என் & தினமணி சினிமா எக்ஸ்பிரஸ்
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்:

கருத்துரையிடுக

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...