மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 31 அக்டோபர், 2010கவிஞர் வரிசை: மக்கள் கவிஞர்"சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"

என்று சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்பிய மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் வாழ்ந்தது சில காலமே ஆனாலும் இப்புவியில் விட்டுச் சென்ற படைப்புக்கள் ஏராளம்.

கவிஞர் கல்யாண சுந்தரத்தின் சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிறிய கிராமமாகும். இவர் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி சாதரண விவசாய குடும்பத் தம்பதியரான அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோருக்கு முன்றாவது குழந்தையாக பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்ற அண்ணனும் வேதாம்பாள் என்ற அக்காளும் உண்டு.

குடும்பச் சூழல் காரணமாக பள்ளிப் படிப்போடு அவரது படிப்பு முடிந்தது. பின்னர் திராவிட இயக்கத்திலும் கம்யூனிச கொள்கையிலும் ஈடுபாடு கொண்டார். அவரது தந்தை கவி இயற்றுவதில் வல்லராக இருந்ததாலோ என்னவோ 19வது வயதில் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இவரது கவிதைகள் பெரும்பாலும் கிராமியப் படைப்பாகவே இருந்தன. கவிஞர் இயற்றிய பெரும்பாலான கவிதைகள் உணர்ச்சிப் பெருக்குடன் அமைந்தது சிறப்பாகும்.

தனது கவிதைகளை பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதாமல் நாட்டில் இருக்கும் குறைகளையும் வளர்ச்சிக்கான நிறைகளையும் சுட்டிக்காட்ட ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தியவர் கவிஞர். விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டார். தஞ்சாவூர் கண்டெடுத்த வீரத்தியாகிகள் சிவராமன் மற்றும் இரணியன் ஆகியோருடன் சேர்த்து விவசாய இயக்கத்தை மாபெரும் இயக்கமாக வளர்க்க அரும்பாடுபட்டார்.

1955ஆம் ஆண்டு 'படித்த பெண்' என்ற திரைப்படத்தில் கவிஞரின் முதல் பாடல் அரங்கேறியது. அதன்பின் ஏராளமான திரைப்பாடல்களை எழுதி திரைப்படத்துறையில் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். கவிஞர் எழுதிய திரையிசைப் பாடல்களில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பதிவு செய்தார். இவரது பல பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

29வருட காலமே இப்புவியில் வாழ்ந்த மக்கள் கவி, அந்த சிறிய வயதில் 17 தொழில்களை செய்திருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?. ஆம்... அவரது அவதாரங்கள்

1. விவசாயி.
2. மாடு மேய்க்கும் தொழிலாளி.
3. மாட்டு வியாபாரி.
4. மாம்பழ வியாபாரி.
5. இட்லி வியாபாரி.
6. முறுக்கு வியாபாரி.
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று (கிடுகு) வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத் தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12. தண்ணீர் வண்டிக்காரர்
13. அரசியல்வாதி
14. மேடைப் பாடகர்
15. நாடக நடிகர்
16. நடனக்காரர்
17. திரைப்பட பாடலாசிரியர் (கவிஞர்).

பன்முகங்களை காட்டி கடைசியில்தான் அவர் கவிஞராக உருவெடுத்துள்ளார். இவரது மனைவி பெயர் கௌரவாம்பாள். இவர்களுக்கு 1959 ஆம் ஆண்டு குமாரவேல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கவிஞருக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால அந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. அதே வருடம் அக்டோபர் 08 ஆம் தேதி கவிஞர் அகால மரணமடைந்தார்.

கவிஞர் வாழ்வில் நிகழ்ந்த சில சுவையான சம்பவங்கள்:

ஆடை கட்டி வந்த நிலவோ:

தங்களது கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஆத்திக்கோட்டை என்ற கிராமத்திற்கு அண்ணனும் தம்பியும் பெண் பார்க்க சென்றிருக்கிறார்கள். பெண் பார்த்துவிட்டு திரும்பி வரும்போது 'தம்பி பெண் எப்படியிருக்கிறாள்...? நல்லாயிருக்காளா...?' என்று அண்ணன் வினவ, அண்ணனுக்குத்தான் பார்த்து வருகிறோம் என்ற எண்ணத்தில் அழகான பெண்ணண்ணே என்று சொல்லியிருக்கிறார் கவிஞர். 'தம்பி பெண் எனக்கல்ல உனக்குத்தான்' என்று அண்ணன் சொன்னதும் தனது ஏட்டில் 'ஆடை கட்டி வந்த நிலவோ...' என்று சில வரிகளை எழுதிவைத்திருக்கிறார் கவிஞர். அவர் திரைப்பட பாடலாசிரியரான பின்னர் அமுதவல்லி என்ற படத்திற்காக அந்த வரிகளையே பாடலாக்கி கொடுத்திருக்கிறார். அந்த வரிகள்...

“ஆடை கட்டி வந்த நிலலோ கண்ணில்
மேடை கட்டி ஆடும் எழிலோ குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில்
கூடு கட்டி வாழும் குயிலோ!...”

கவிஞரின் திருமணத்திற்குப் பிறகே அவரது அண்ணனுக்கு திருமணம் ஆனது. இந்தத் தகவலை திரு.சி.பி.ஏ. ஞானப்பிரகாசம் சுவைபடத் தெரிவித்துள்ளார்.

பாட்டுக்களை எடைக்குப் போட்ட தேவர்:

திரைப்படத்திற்கு பாட்டெழுதும் ஆவலில் சென்னை வந்த பட்டுக்கோட்டையார் எட்டு ரூபாய் வாடகையில் ராயப்பேட்டையில் ஓ.ஏ.கே. தேவருடன் ஒரு அறையில் தங்கியிருந்தார். அந்த கால கட்டத்தில் தேவருக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வரவில்லை. அதேபோல் பட்டுக்கோட்டையாரும் வாய்ப்பைத்தேடிக் கொண்டிருந்தார்.

சும்மாயிருக்கும் பெரும்பாலான சமயங்களில் கையில் கிடைக்கும் பேப்பர்களில் எல்லாம் பாடல்களை எழுதி ஏராளமான பேப்பர்களை அறையில் குவித்து வைத்திருந்தார் பட்டுக்கோட்டையார். ஒருநாள் டீக்கடைக்கு பட்டுக்கோட்டையார் சென்றிருந்த நேரம் தெருவில் சென்ற பழைய பேப்பர்க்காரனைக் கூப்பிட்டு அறையில் குவிந்து கிடந்த பத்திரிக்கைகள், புத்தகங்கள், பழைய பேப்பர்கள் என எல்லாத்தையும் அள்ளி எடைக்குப் போட்டுவிட்டார் தேவர்.

திரும்பி வந்த பட்டுக்கோட்டையாருக்கு சுத்தமாக இருந்த அறையைப் பார்ததும் சந்தோஷம். பரவாயில்லை தேவர் நல்ல வேலை செய்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டார். ஆமா இங்க இருந்த பேப்பரெல்லாம் எங்கே? என்று அவர் கேட்க நினைதத்போது, 'ஒரே குப்பையா இருந்துச்சு... அதான் எல்லாத்தையும் அள்ளி பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிட்டேன்' என்று தேவர் சொன்னதும் கவிஞருக்கு தூக்கிவாரிப் போட்டது. தான் எழுதிவைத்த பாட்டுகள் இருக்கின்றனவா என்று அங்கும் இங்கும் தேடினார். எதுவும் அவர் கண்ணுக்கு சிக்கவில்லை. 'பாட்டு நோட்டுக்களை எடுத்து வைத்தீர்களா?' என்று தேவரிடம் கேட்ட போது, அவர் சிரித்துக் கொண்டே... 'அடப் போங்க... நீங்களும் உங்க நோட்டும்... எந்தப் பட முதலாளியும் எடுக்காத உங்கள் பாட்டை பேப்பர்க்காரனாவது மூன்று ரூபாய்க்கு எடுத்துக் கொண்டனே' என்றார் தேவர்.

கவிஞருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'நல்ல நல்ல பாட்டுக்களையெல்லாம் எழுதி வைத்திருந்தேனே...' என்றார் வருத்தமாக. அவரது வருத்தத்தைப் பார்த்த தேவர், "அட... அது போனால என்ன... அதைவிட நல்ல பாடல்களை உங்களால் எழுதமுடியாதா என்ன..? எழுதுங்கள்..." என்று ஆறுதல் சொன்னார் தேவர். அதன் பிறகு கவிஞர் எழுதிய பாடல்கள் திரையிசையில் பெரும் இடத்தைப் பிடித்தன. தேவர் குறிப்பிட்டதுபோல் ஒன்றை ஒன்று விஞ்சும்படியாக அத்தனை நல்ல பாடல்கள்.

இந்தத் தகவலை 'எத்தனை மனிதர்கள்' என்ற புத்தகத்தில் திரு.சின்னக் குத்தூசி தெரிவித்துள்ளார்.

இதுதான் வாழ்க்கை:

பட்டுக்கோட்டையார் திரைத்துறையில் புகழ் பெற்றிருந்த போது அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத அனுமதிகோரி ஒரு பத்திரிக்கை நிருபர் வந்திருக்கிறார்.

அவரது ஆசையை கேட்ட கவிஞர் சரி என்றோ... வேண்டாம் என்றோ... சொல்லாமல் அவரை தன்னுடைய அறையில் இருந்து அழைத்துக் கொண்டு சாதாரணமாக பேசியபடி தெருவில் நடக்கலானார்.

சிறிது தூரம் சென்றதும் ரிக் ஷாவில் ஏறி மவுண்ட் ரோட்டில் வந்து இறங்கியிருக்கிறார்கள். அதுவரை நிருபரின் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. பின்னர் அங்கிருந்து நகரப் பேருந்தில் ஏறி கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் வந்து இறங்கியிருக்கிறார்கள். இப்போதும் நிருபருக்கு ஒன்றும் புரியவில்லை. வாழ்க்கை வரலாறு எழுத வேண்டும் என்று கேட்டால் இப்படி எங்கோ அழைத்துச் செல்கிறாரே என்று மனதுக்குள் நினைத்திருக்கிறார்.

அங்கிருந்து டாக்ஸி பிடித்து பாடல் பதிவுக்காக வடபழனியில் இருக்கும் ஸ்டுடியோவில் வந்து இறங்கியிருக்கிறார். அப்போதும் எதுவும் சொல்லவில்லை. பொறுமையிழந்த நிருபர், 'அண்ணே... வாழ்க்கை வரலாறு..." என்று ஆரம்பித்திருக்கிறார்.

இப்ப நீ பார்த்தியே இதுதான் என் வாழ்க்கை வரலாறு. முதலில் நடையாய் நடந்தேன். அதன் பிறகு பஸ்ஸில் போனேன். அப்புறம் ரிக் ஷா... இப்போ டாக்ஸி.... அவ்வளவுதான் என்றாராம்.

மேலே சொன்ன வாழ்க்கை வரலாறு கவிஞர் குறித்த ஓரு தளத்தில் படித்தது. எத்தனையோ சிந்தனையை தூண்டிய பாடல்களை கொடுத்த பட்டுக்கோட்டை இன்னும் சில காலம் இருந்திருந்தால் படிக்காதமேதையான அவர் நிறைய படைத்திருப்பார். இருபத்தொன்பதே ஆண்டுகள் வாழ்ந்தாலும் உலகம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் கவிஞராக.

-'பரிவை' சே.குமார்.

22 கருத்துகள்:

 1. வாசித்து விட்டு முழுமையாக யோசித்துக் கொண்டு நிற்கின்றேன். பாரதிக்குப் பிறகு அதிகம் பாதித்த கவிஞர். இவர் பாடல்கள் அடங்கிய தள இணைப்பை சேர்த்து இருக்கலாமே?

  பதிலளிநீக்கு
 2. பகிர்வுக்கு நன்றி. அருமையான பணி .. தொடருங்கள்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நன்றி சகோதரா பல அறியாத தகவல்கள் தந்தள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 4. http://gunathamizh.blogspot.com/2009/03/blog-post_25.html

  கவிஞர் பற்றிய இந்தப் பதிவைப் பாருங்கள் நண்பா.

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு குமார்.

  பதிலளிநீக்கு
 6. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  பதிலளிநீக்கு
 8. இருபத்தொன்பதே ஆண்டுகள் வாழ்ந்தாலும் உலகம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் கவிஞராக.


  ....உண்மை. அவரை பற்றி, நிறைய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 9. பட்டுக்கோட்டையாரை நான் பாடல்கள் மூலம் தான் தெரிந்து வைத்திருந்தேன். இன்று உங்கள் அறிய முயற்சியால் அவரது வாழ்க்கை "வரலாறு" ஆனதைத் தெரிந்துக் கொண்டேன். நல்ல பகிர்வுக்கு நன்றி தோழா. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஜோதிஜி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  கவிஞர் குறித்து இன்னும் ஒரு நல்ல பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்... அப்பொழுது கண்டிப்பாக இணைப்புத் தருகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. வாங்க சரவணன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  கண்டிப்பா இன்னும் சில கவிஞர்கள் குறித்து எழுதும் எண்ணம் உள்ளது. பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 12. வாங்க ம.தி.சுதா....
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க முனைவரே...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  கண்டிப்பாக வருகிறேன்... படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. வாங்க சுசிக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க வானம்பாடிகள் ஐயா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க asiya அக்கா ...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ers...
  கண்டிப்பாக இணைக்கிறேன்.
  உங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க Riyas...
  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க moonramkonam...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க சித்ராக்கா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தமிழ்க்காதலன்...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...