மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..!

பிரதிலிபியின் 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது கதையும் இருக்கு. அதை நீங்களெல்லாம் கொண்டாடினால் பரிசை வெல்லும் படைப்புகளுடன் போட்டியாவது போட முடியும். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி பிரதிலிபியில் கதையை வாசித்து உங்கள் கருத்தையும் மறக்காமல் மதிப்பெண்ணையும் அளியுங்கள். கதை குறித்து உண்மையான கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.


படத்தைக் கிளிக்கியும் கருத்தைச் சொல்லலாம்


***
பிப்ரவரி - 16 அகல் மின்னிதழில் 'எங்கள் அமீரகம்' என்னும் தலைப்பின் கீழ் எனது கட்டுரையின் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது. அதன் இரண்டாம் பகுதி வரும் மார்ச் இதழில் வெளியாகும். அகலில் கட்டுரை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள். கட்டுரை குறித்து தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரையை பிரதிலிபியிலும் படிக்கலாம்.

அகலில் வாசிக்க :  எங்கள் அமீரகம் - 1

பிரதிலிபியில் வாசிக்க :  எங்கள் அமீரகம் - 1

அகல் நண்பர்கள் வட்டம் முகநூல் பக்கம் பார்க்க படத்தை கிளிக்குங்கள்


***
வேலைப்பளு கூடுதல் மற்றும் சில பல காரணங்களால் வலைப்பக்கம் அதிகமாக வருவதில்லை. நண்பர்களின் எழுத்துக்களை விடுமுறை தினங்களில் வாசித்து விடுவேன். கருத்து இடுவதில் சிக்கல் இருக்கிறது. சிலரின் பதிவுகளுக்கு பிரச்சினை இல்லை. பலரின் பதிவுகளில் 'நீ ரோபோ இல்லை'ன்னு சொல்லு என்று கேட்கிறது. சொன்னால் ரைட்டு என கருத்து இட அனுமதிக்கிறது. அதிலும் ஒரு சிக்கல் என்னன்னா நாலு பேருக்கு அந்த மாதிரி உள்ள போயி கருத்து இட்டால் ஐந்தாவது நண்பரின் தளத்தில் ரோபோ இல்லைன்னா... படங்களைக் கொடுத்து மரங்களை தேர்ந்தெடு, ஆற்றை தேர்ந்தெடு, புல்வெளியை தேர்ந்தெடு, தெருவைத் தேர்ந்தெடு, டாக்ஸியை தேர்ந்தெடுன்னு கொடுத்து சரியாச் சொன்னாத்தான் உள்ளே போகுது. இதில் கடுப்பாகி வாசிப்பதுடன் வெளியில் வந்துவிடுவதுண்டு. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டும்தானா இல்லை எல்லாருக்கும் இருக்கான்னு தெரியலை. தனபாலன் அண்ணா வேற ரொம்ப பிஸி போல, அவர் இப்போ அதிகம் வருவதில்லை இல்லேன்னா அவர்கிட்ட கேட்டுக்கலாம். தெரிந்த நண்பர்கள் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்லுங்கள்.


***
பாக்யாவில் மக்கள் மனசு மற்றும் வாசகர் வாய்ஸ்-ல் தொடர்ந்து எனது கருத்துகளையும் தேர்ந்தெடுத்து வெளியிடும் பாக்யா ஆசிரியர் குழுவுக்கு நன்றி. மக்கள் மனசில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து ஒரு வருடமாக தொடர்ந்து எழுதியிருக்கிறேன் அதுவும் பிரசுரமாகியிருக்கிறது என்பதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.


*** 
ம்மாவின் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மிக தீவிரம் அடைந்து நாட்டுக்காக உயிரிழந்து, தேசியக்கொடியைப் போர்த்தி மரியாதை செய்யப்பட்ட ராணுவவீரனின் மீது ஸ்டிக்கரை வைத்த ஸ்டிக்கர் பாய்ஸின் செயல் வேதனைக்குரியது... கேவலமானது. நேற்று ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது... அதில் மரணமடைந்தவரின் வீட்டில் அழுது கொண்டு நிற்கும்பெண்ணிடம் அம்மாவின் அல்லக்கைகள் காவிரித்தாயின் போட்டோவைக் காட்டி... சை... இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது... இப்படிப்பட்ட கேவலமான செயலை இறந்தவர்களின் வீட்டிலும் செய்ய இவர்களால் எப்படி முடிகிறது. இந்த மானங்கெட்ட பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம் அல்லக்கைஸ்... ஆணவம் பிடித்த தங்கத்தாரகை இதையெல்லாம் ரொம்ப விரும்பும் போல... புகழ் விரும்பி... மமதை பிடித்த மக்கள் தலைவி... யோசித்து வாக்களித்து வெளியில் தூக்கி வீசணும் தமிழக ஸ்டிக்கர் முதலமைச்சரை.... இல்லையேல் எல்லாருடைய வீட்டிலும்.... எல்லாப் பொருளிலும்... இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்... அதற்கான கடன் அடுத்த ஐந்தாண்டில் மில்லியன்களின் கூட இருக்கலாம். தமிழனை கேவலப்படுத்தவே  இந்த ஈனப்பிறவிகள் பதவியில் இருக்கிறார்கள் போல.

***
பாப்பா மதிய சாப்பாட்டை சில தினங்களாக சாப்பிடுவதே இல்லை... டிபன் பாக்ஸ் அப்படியே வருது... தினமும் கஷ்டப்பட்டு விதவிதமாச் செஞ்சு கொடுத்துவிட்டா... சாயந்தரம் கோழிக்குத்தான் கொட்ட வேண்டியிருக்குன்னு மனைவி சொல்ல, நான் பாப்பாவிடம் என்ன..? ஏன்..? என்று கேட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது விஷால், 'இவுகளுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டா பாவம் கோழிங்க பசியா இருக்கும்ன்னு அப்படியே கொண்டாந்துடுறாங்க... இனிமே இதுக்கு கொடுத்து விடுறதுக்குப் பதிலா காலையிலயே கோழிக்கு போட்டிடலாம்... சூடாவாச்சும் சாப்பிடுங்க' என்று சிரிக்காமல் சொல்லிவிட்டு படுத்துக் கொண்டான். இப்படி அப்பப்ப நிறைய டைமிங்கா பேசிக்கிட்டே இருப்பான்... எல்லாத்தையும் பதிஞ்சு வைக்கணும்.


***
நாம் மனசுக்குள் யோசித்து வைத்து... அதை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி ஒரு பதிவாக்கினால் காப்பி செய்யும் நபர்கள் ஏதோ தாங்கள் எழுதியது போல் பல தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். 'தேவதா தமிழ்' கீதா அக்கா, 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா என நிறையப் பேர் தங்கள் பதிவுகள் பல தளங்களில் வேறு பெயரில் பதிவாகியிருக்கு என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் படைப்பு மட்டுமில்லை... பலரின் படைப்புக்கள் அப்படித்தான் வலம் வருது. ஒரு முறை 'RSS Feed' என்னும் தளத்தில் எனது பதிவுகள் இன்னும் நம் நட்பின் பதிவுகள் எல்லாம் அனுமதியில்லாமல் மொத்தமாக பதியப்பட்டிருந்தன. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி எனது பதிவுகளை நீக்கினேன். நாம் பெற்ற பிள்ளைக்கு வேறொருவன் உரிமை கொண்டாடுவது எப்படி நியாயம்..? எனவே இனிமேல் மனசு தளத்தில் கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள் எல்லாம் நிறுத்திவிட்டு  மனசில் பட்டது, மனசு பேசுகிறேன், மனசின் பக்கம், சினிமா என எழுதலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்குங்க கஷ்டப்பட்டு சிறுகதை எழுதி நாளைக்கு எவனாச்சும் அதை புத்தகமாப் போடுவான்... என்னைக்காச்சும் வாசிக்க நேர்ந்தால் என்ன இது எல்லாமே நம்மளோட கதை மாதிரி இருக்குன்னு புலம்பினாலும் அவனை ஒண்ணும் செய்ய முடியாதுதானே... எனவே இப்போ நான் தீவிர யோசனையில்... இல்லேன்னா பேசாம மனசு வலைப்பதிவுக்கு மூடுவிழா நடத்திடலாமான்னு கூட யோசிக்கிறேன். என்ன சொல்றீங்க..?

***
ன்னைக்கு காலையில வேலைக்கு போகும் போது சிக்னலில் ரெண்டு மலையாளி பசங்க பேசிக்கிட்டு நின்னாங்க... ஒருத்தன் மற்றவனிடம் 'பெல்ட் போடாம இன் பண்ணக்கூடாதா என்ன?ட என்றான். 'ஏன்... பண்ணலாமே...? யார் பண்ணக்கூடாதுன்னு சொன்னா... போலீஸ்காரனா...?' மற்றவன் அப்பாவியாய்க் கேட்டான். 'அட நீ வேற... வர்றப்போ எதிரே போன பிலிப்பைனி பொண்ணுங்க ரெண்டு கெக்கே பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு போகுதுங்க...'என்றான். உடனே மற்றவன் அவனை ஏற இறங்கப் பார்த்துட்டு 'மூதேவி... முதல்ல சிப்பைப் போடு... இன் பண்ணின சட்டை அதுவழியா வெளியே வந்திருக்கு பாரு... அப்புறம் சிரிக்காம என்ன பண்ணுவாளுங்க' என்றதும் 'அய்யே...' என அவன் வேகமாக ஜிப்பை இழுக்க நான் சிரித்துக் கொண்டே கடந்தேன்.


***
ன்னைக் கவர்ந்த பாடலாக அனார்கலி படத்தில் இருந்து 'ஆ ஒருத்தி அவளோருத்தி...'  அருமையான பாடல்... இது கண்டிப்பாக உங்களையும் கவரும்... என்னது படம் குறித்தா..? அதை அடுத்த பதிவுல விரிவாச் சொல்றேன்... இப்ப பாட்டைக் கேளுங்க...


-'பரிவை' சே.குமார்.

சனி, 20 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-5)

முந்தைய பகுதிகளை வாசிக்க...

பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4

*********

வேலாயுதம் தன் கோபத்தை மாப்பிள்ளையிடம் காட்ட முடியாமல் சாப்பாட்டில் காட்டிவிட்டு எழுந்து சென்றதும், கணவன் ராமநாதனுக்கு கை துடைக்க துண்டு எடுத்துக் கொடுப்பது போல் அவனருகில் போய் ‘என்னங்க நீங்க அவருக்குத்தான் அவனைப் பற்றி பேசினால் கோபம் வரும்ன்னு தெரியும்ல… அப்புறம் எதுக்கு சொன்னீங்க… சாப்பிடாமப் பொயிட்டாரு பாருங்க…”

“சாதி வீம்பு தண்ணி ஊத்தாதுன்னு உங்கப்பாக்கிட்ட சொல்லு செல்வி…” சத்தமாகப் பேசினான்.

“எதுக்கு கத்துறீங்க..? மெதுவாப் பேசுங்க…”

“ஆமா… ஆ…ஊன்னா என்னைய அடக்கப்பாரு… இந்த வயசுல இந்தாளு சாதியைத் தூக்கி சுமந்துக்கிட்டு என்னத்தை அள்ளிக்கிட்டுப் போகப்போறாரு… ஆமா… அவனை மொத்தமாவே அறுத்துக் கழுவிறனுமின்னு நினைக்கிறாரா..? “

“அது எதுக்குங்க இப்ப… கொஞ்சம் சும்மா இருங்களேன்… இந்தாங்க வெத்தலை… வாய்க்குள்ள வச்சி அமுக்குங்க… அப்பத்தான் எதுவும் பேசமாட்டீங்க…” என வெத்தலையை நீட்ட, “ஆமாடி எதாச்சும் கொடுத்து என் வாயை அடைச்சிரு…” என்றபடி வாங்கிக் கொண்டு அங்கு கிடந்த கட்டிலில் அமர்ந்தான்.

‘கேட்டது மாப்பிள்ளையாப் போச்சு... இல்லேன்னா இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பேன்’ என்று மனசுக்குள் பொருமிக் கொண்டே கையில் எடுத்து வந்த வெற்றிலையை துண்டில் தேய்த்து... காம்பு கிள்ளி... நரம்பு எடுத்து... அதன் பின்புறத்தில் சுண்ணாம்பை நாலைந்து இடத்தில் தடவி... கொட்டப் பாக்கை வைத்து மெல்லச் சுருட்டி வாய்க்குள் அதக்கிக் கொண்ட வேலாயுதம்... அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்... நிலவைச் சுற்றி ஒரு வட்டம் தெரிந்தது... ‘கோட்டை கட்டியிருக்கு... இனி மழ பேஞ்சு என்னாகப் போகுது... கோடையா போடப் போறானுங்க....’ என்று நினைத்து சிரித்தபடி நட்சத்திரங்களை ரசிக்கலானார்.

மாடுகளிடம் கிடந்த வைக்கோலை ஓரிடத்தில் குவித்து... அவற்றை ‘இஞ்சே... ம்ம்ம்.. ‘ என்று வாலை முறுக்கி எழுப்பி விட, அவை முதுகை வளைத்து ஒரு நெளி நெளித்துவிட்டு ‘சர்...’ என மூத்தரத்தைப் பெய்ந்தன. ‘புது வக்க... உங்களுக்கு இறங்க மாட்டேங்குது...’ என்று திட்டிக் கொண்டே நகர்ந்த பஞ்சநாதன் வாசலில் தனியே அமர்ந்திருந்த வேலாயுதத்தைப் பார்த்ததும் அங்கு வந்தார்.

“என்ன வேலாயுதம்... பலமான யோசனையா இருக்கு?” என்று சிரித்தார்.

“ஆமா கோட்டை கட்டப் போறேன் பாரு... சாப்பிட்டு வெத்தல போட்டுக்கிட்டு இங்கிட்டு காத்தாட வந்து ஒக்காந்தேன்.... வானத்தைப் பாத்தேன்... கோட்டை கட்டியிருந்துச்சு... அப்படியே நச்சத்திரங்களை எண்ணிக்கிட்டு ஒக்காந்திருக்கேன்... ஒக்காரு... சாப்பிட்டியா...? கோழிக் கொழம்பு... கொஞ்சம் சாப்பிடு...”

“சாப்பிட்டேன்... படுக்கப் போனேன்... ஒண்ணுக்குப் பொயிட்டு படுக்கலாம்ன்னு வந்தேன்... மாடுக புது வக்கல்ல... அதான் திங்காம இழுத்துப் போட்டு படுத்திருந்துச்சுக... எழுப்பி விட்டு குமிச்சி வச்சிட்டு வாறேன்... ஆமா அறுப்பெல்லாம் முடிச்சிட்டே... இனி சின்னவன் வீட்டுக்கு அரிசி கொண்டுக்கிட்டு ஓடுவியே...?”

“ஆமா... செல்வி இருக்கும்போதே அவிச்சிரலாம்ன்னு பாத்தேன்... நாளக்கி காலயிலதான் அவிக்கணும்... சாதிச் சங்க போர்டு வேற வைக்க வர்றாக...”

“நானும் கேக்கணுமின்னு நினைச்சேன்... இந்தப் பயலுக வண்டியில் முன்னாடி பின்னாடியெல்லாம் சாதி பேரைப் போட்டு ஒரு மார்க்கமாத் திரியிறானுங்க... இதுல தலைவர் படம் வேற... அவரு சுதந்திரத்துக்கு போராடுன மனுசன்... அவரை சாதிக்குள்ள கொண்டு வர்றது நல்லாவா இருக்கு... இதுல சாதிப் போர்டு வேற... நல்லாயிருக்க ஊருக்குள்ள நாமளே எதுக்கு ஏழரையை இழுத்தாரணும்...”

“என்ன எழரையை இழுக்கிறோம்.... மத்த சாதிக்காரனுக தலைவரா வச்சிருக்கிற எல்லாருமே நாட்டுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடுனவுகதானே... நம்ம பயக வச்சா தப்பா.... நம்ம சாதிக்குன்னு சங்கப் போர்டு வைக்கிறதுல என்ன தப்பு இருக்குன்னேன்... இப்பத்தான் ஒருத்தரு எனக்கு பாடம் சொன்னாரு... அடுத்து நீயா...?” வேலாயுதம் கோபமாக் கேட்டார்.

“யாரு செல்வி வூட்டுக்காரரா...? அவருக்கிட்டயும்  சாதிக்காக சண்டை போட்டியா... ஏம்ப்பா.... அந்தாளு இங்க வந்து மாங்கு மாங்குன்னு வேல பாக்கணுமின்னு என்ன இருக்கு... சின்னவனுக்குத்தானே அரிசியெல்லாம் போவும்... அவன் வந்தானா... தேவையில்லாம உனக்கு ஓடியாந்து பாக்குற மனுசனுக்கிட்ட எதுக்கு சத்தம் போடுறே...?”

“அட நீ வேற... இதே வேற யாராச்சும் எங்கிட்ட பேசியிருந்தா வேற மாதிரி நடந்திருக்கும்.... மாப்ள பேசினாரு... பேசாம வந்துட்டேன்... ஆனா எனக்கு சாதியும் கௌரவமுந்தான் முக்கியம்... உனக்கு சாதி தேவையில்லை... எனக்கு அது தேவை...”

“சரி விடு... படுக்கப் போகயில எதுக்கு உங்கிட்ட தர்க்கம் பண்ணிக்கிட்டு... ஆமா பெரியாண்ணன் பொண்டாட்டி செத்துப் போச்சாமேப்பா... “

“ஆமா... கேள்விப்பட்டேன்... நாளைக்கி பத்து மணிக்கு மேல போயிட்டு வருவோமா...?”

“சரி போவோம்... எனக்கு ஒறக்கம் வருது... “ என்றபடி பஞ்சநாதன் கிளம்ப, திண்ணையில் சாய்ந்து கைகளை தலைக்கு வைத்தபடி வானம் பார்த்தார்.  விண்மீன்கள் சில மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மேகத்தோடு நிலவு கண்டொழிந்து விளையாடியது. ஒரு ஏரோப்பிளேன் சிவப்பு விளக்கு மினுங்க போய்க் கொண்டிருந்தது.


ப்பத்தாவின் கத்தலை பொருட்படுத்தாமல் உள்ளே சென்ற அபி, ‘கண்ணண்ணா... ‘ என்று அவனருகில் அமர்ந்து மற்றவர்களை ‘வாங்கண்ணா’ என்றாள்.

“வந்ததும் உன்னைத்தான் கேட்டேன் தெரியுமா..? நீ டியூசன் பொயிட்டேன்னு அம்மா சொன்னாங்க...”

“நான் எங்கே போனேன்... அம்மாதான் விரட்டி அடிச்சாங்க... ஆமா எங்க பாட்டி எதாச்சும் சொல்லியிருக்குமே...?” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை... “ வேகமாகச் சொன்னான் அம்பேத்கார்.

“ஏய்... போய் காலம்பிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிண்டு வாடி...” அவளை விரட்டினான் சாரதி.

“எங்கடா... அம்மு பொயிட்டாளா?” என சாரதியிடம் கேட்டாள் அபி.

“அவதான் போறா... இங்க உக்காந்து கதை அடிச்சிண்டிருந்டா... சும்மா வம்பிழுத்தேன்... முஞ்சியை தூக்கி வச்சிண்டு உள்ளாற பொயிட்டா... அம்மாவும் பின்னாலயே போயாச்சு...”

“எப்பப் பார்த்தாலும் அவ கூட சண்டை போட்டிண்டே இரு...” என்றபடி உள்ளே போனாள்.

“அதென்னடா... அம்மு..?” மெல்லக் கேட்டான் ஜாகீர்.

“எங்க வீட்ல எல்லாருக்கும் செல்லப் பேர் இருக்கு... அவளை எல்லாரும் அம்முதான் கூப்பிடுவாங்க...”

“அம்மு... கும்முன்னுல்ல இருக்கா...?” வேகமாகச் சொன்னார் பிரவீன்.

கண்ணன் முறைக்க, “சும்மா ஜாலிக்காகச் சொன்னேன்டா... அவங்க இனி அண்ணி... கேலியெல்லாம் பண்ணமாட்டேன்... ஆமா சாரதி... உனக்கென்னடா செல்லப் பேர்..?”

“நான் சொல்ல மாட்டேன்... அப்புறம் காலேசுல அதைச் சொல்லி கூப்பிடுவீங்க...”

“இல்ல சுபஸ்ரீ பார்த்தசாரதியை விட.... அம்முவோட உன்னோட செல்லப்பேரைச் சேர்த்தா நல்லா வருதான்னு பார்க்கத்தான் கேட்டேன்...”

“எம் பேரு பார்த்தாடா...? போதுமா..?”

“இதுல என்ன செல்லம் இருக்கு...? எம்பேரு அம்பேத்கார்... எங்க வீட்ல அம்பேத்துன்னு சுருக்கி கூப்பிடுவாங்க... நீங்க அம்பேத்.. அம்பேத்துன்னு சொல்லுவீங்க... பார்த்தசாரதி... பார்த்தா.... செல்லப் பேராம்...” எனச் சிரித்த அம்பேத்கார்.... “அம்மு பார்த்தா... ஆத்தி... சொன்னா வேற மாதிரியில்ல அர்த்தம் வருது...” என்று சிரிக்க எல்லாரும் சிரித்தனர்.

“ஏய் அபி... அங்க என்னடி பண்றே...? கோவில் பக்கம் போறோம்... வாறியா... இல்லையா..? வர்றதா இருந்தா அவளையும்  கூட்டிண்டு வேகமா வாடி...” சாரதி கத்த, எல்லாரும் எழுந்து வீதிக்கு வந்தனர்.

கொஞ்ச நேரத்தில் அபி வெளியில் வந்தாள். “எங்கடி அவ...? வரலையாமா...?” வருத்தத்தோடு கேட்டான் சாரதி.

“வரலைன்னு சொல்லிட்டா... நீ அவளை ரொம்பத்தான் படுத்துறே... பார்த்தா அங்கயும் போயி என்னைக் கேலி பண்ணிண்டு இருப்பான்... நான் எங்க ஆத்துக்கு போறேன்னுட்டா....” வருத்தமாய்ச் சொன்னாள் அபி.

“டேய்... ரொம்ப ஜாலியாப் பேசினாங்கடா... எதுக்குடா தேவையில்லாம கேலி பண்ணி அவங்களை கோபப்பட வச்சே.... போ... போய் நீ கூப்பிட்டா அவங்க வருவாங்க... போடா...” என்றான் கண்ணன்.
“அடப்போடா... ரொம்ப சீன் காட்டுறா... வாங்க நாம போவோம்...” என்று சாரதி நடக்க, மற்றவர்கள் அவன் பின்னே நடக்க... அபியும் கண்ணனும் சிரித்தபடி பேசிக்கொண்டு நடக்க....

சுபஸ்ரீ வேகமாக ஓடிவந்து அபியின் தோள் பிடித்துச் சிரித்து கண்ணனைப் பார்த்தாள்.

நன்றி : படத்தை வரைந்த ஓவியருக்கு... இணையம் கொடுத்தது.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தேர்தல் வருது தெய்வானை..!


தேர்தல் வருது...
தேர்தல் வருது...
சேதி தெரியுமா..?
தெய்வானை சேதி தெரியுமா...?

தேடி வருவாங்க...
தெய்வானை ஓடி வருவாங்க...
கூடி வருவாங்க
தெய்வானை நாடி வருவாங்க...

அம்மா தாயின்னு
கால்ல விழுவாங்க...
நம்மகூட களையும்
எடுப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

குடிசைக்குள்ளாற
வந்து குந்தி
கஞ்சி குடிப்பாங்க...
நம்மகூட கல்லும்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பக்கத்துல உக்காந்து
பாசத்தோடு
பேசுவாங்க...
நம்மகூட பல்லாங்குழியும்
ஆடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

ரோடு... தண்ணி...
தேடிவரும்பாங்க...
உன்னை தெய்வம்ன்னு
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

இலவசம் தருவாங்க...
கைச் செலவுக்கு
காசும் கொடுப்பாங்க...
கௌரவம் பாக்காம
காலில் விழுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

எம்.எல்.ஏ.வும் எம்.பியும்
சேர்ந்து வருவாங்க...
நிறைய சேதி
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

கோரிக்கை எழுதி
கேட்பாங்க...
கொண்டு போய்
குப்பைத் தொட்டியில்
போடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பல்லை இளிப்பாங்க
பசங்க குண்டியும்
கழுவுவாங்க...
பாலுக்கு அழும்
குழந்தையை தோளில்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பணத்துக்கும்
இலவசத்துக்கும்
மயங்கிக் கிடந்தது
போதும்  தெய்வானை
நாம் மதி கெட்டதும்
போதும் தெய்வானை..!

அடிமையாய் கிடந்து
போதும் தெய்வானை...
அடங்கிக் கிடந்ததும்
போதும் தெய்வானை...

பொய்யர்களை விரட்ட
பொதுவாய் சிந்திப்போம்
வாடி தெய்வானை...
வேலு நாச்சியாராய்
வீறு கொண்டு
விரட்டியடிப்போம்
வாடி தெய்வானை....
'பரிவை' சே.குமார்

புதன், 17 பிப்ரவரி, 2016

மனசு பேசுகிறது : வந்தவன் தமிழன்னா...


ன்று குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மாலை அலுவலகத்தில் இருந்து வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னருகில் வந்து "ஒரு நிமிடம்... நீங்க மலையாளியா?" அப்படின்னு கேட்டார். "இல்ல தமிழ்..." என்றதும் "தமிழா... நானும் தமிழ்தான்..." என்றவர் "இங்க பாஸ்போர்ட் ரினிவல் பண்ணி வாங்குற இடம் எங்க இருக்கு" என்றார். "இங்கயா... பாஸ்போர்ட் ரினிவல் என்றால் போஸ்ட் ஆபீஸ்ல போயி வாங்கணும்... இல்லேன்னா உங்க ஆபீஸ்க்கு வரும்... அங்க போயில்ல வாங்கணும்... இந்த ஏரியாவுல போஸ்ட் ஆபீஸ் இல்லையே" என்றேன். "இல்ல எங்க இந்திக்கார டிரைவர் இங்க இறக்கி விட்டுட்டு அந்தப் பக்கம் இருக்கு போய் வாங்கிக்கன்னு சொல்லிட்டுப் போனான்" என்றார். "எங்க இருந்து வாறீங்க...?" என்றேன். "நான் இருக்கது பெத்தாசயீது... போட்ல போயி மீன் பிடிக்கிற வேலை... நாலைந்து பேர் சேர்ந்து கடலுக்குள்ள போவோம்... பத்து வருசம் முடிஞ்சிருச்சு... பாஸ்போர்ட் ரினிவலுக்கு கொடுத்தேன்" என்றார். "நல்லாக் கேட்டீங்களா? இங்கதானா...?" என்றதும் ஒரு நம்பருக்கு போன் செய்து 'இவரும் எங்க டிரைவர்தான்... மலையாளி... தமிழ் பேசுவார்... எனக்கு இங்க இடமெல்லாம் தெரியாது... கொஞ்சம் விசாரிங்க" என்றார். நானும் அந்த டிரைவருடன் பேச, "இப்ப எவட இருக்கு?" என்றான். "அல்மசூத் ஆட்டோ மொபைல்ஸ்கிட்ட சிக்னல் முன்னாடி நிக்கிறார்..." என்றதும் "அப்படியெ ஸ்ட்ரைட்டா வரச்சொல்லு... சிக்னல்தாண்டி இருக்கிற பஸ் ஸ்டாப்புக்கு வரச்சொல்லு நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" என்றான். "சரி வாங்க போகலாம்... நானும் அந்தப் பக்கம்தான் போறேன்..." என அவருடன் பேசியபடி வர, ஊர் இராமேஸ்வரம்... மீன் பிடிக்கிறதுதான் எங்க தொழில்... அதனால இங்கயும் அது பிரச்சினையில்லாம இருக்கு..." என்றார். "ம்... நான் தேவகோட்டை" என்றேன். "அப்படியா... எனக்கு இந்த ஏரியா தெரியாது... கொண்டாந்து இறக்கிவிட்டுட்டு வாங்கிக்கிட்டு வான்னு சொல்லிட்டுப் பொயிட்டான்... நீங்க வந்தஹ்டு நல்லதாப் போச்சு" என்றார். "உங்களுக்கு இங்க பக்கத்துல ஆபீஸ் இருக்கும் போல அங்கதான் வாங்க வேண்டி வரும்.." என்றேன். "தெரியலைங்க... மீன் பிடிக்கிறோம்... எங்களுக்கு எது ஆபீஸ்... அது எங்க இருக்குன்னு எல்லாம் தெரியாது..." என்றார். சிக்னல் கடந்து அவன் சொன்ன பஸ்ஸ்டாப் அருகில் வந்து "இங்கதாங்க வரச்சொன்னான்... இங்க நில்லுங்க வந்து பிக்கப் பண்ணிப்பான்" என்றபடி நகர்ந்தேன். "நான் அவனைக் கூப்பிட்டு எப்படிப் பேசி... நீங்களே மறுபடியும் அதே நம்பர்ல ஒரு வார்த்தை கேளுங்களேன்..." என்றார். மீண்டும் மலையாளிக்கு போன்... ரிங்க் போனது... "அண்ணா... எங்கேருக்கு...?" என்றான். "ஆளு இவட நீ சொன்ன பஸ் ஸ்டாண்டிலானு... நீ பிக்கப் செய்யுமோ... அவருக்கு ஏரியா அறிஞ்சிட்டில்லா..." என்றேன். "எவடன்னு ஸ்தல் பரை..." "ஏ... நீ பறைஞ்ச ஸ்தலமான்னு... நேஷனல் பெயிண்ட் ஷாப் இருக்குல்ல... அவடயானு..." என்றதும் "அண்ணா... இவட நோக்கு... யான் கை ஆட்டுது பாரு... கண்டுட்டுண்டா..." என்றான். நானும் அவனைப் பார்த்து கையை அசைத்து "ஆளு அவட வரும்... ஒகே" அப்படின்னு சொல்லி போனைக் கட் பண்ணினேன். "அந்தா நிக்கிறான் பாருங்க... அவந்தான் உங்க மலையாளி டிரைவர்... அவன் நிக்கிற கடைதான் உங்களுக்கு விசா போட்டிருக்கும் கடைபோல... அங்கதான் பாஸ்போர்ட் இருக்கும்... போய் வாங்கிக்கிட்டு பத்திரமாய் போய் சேருங்க..." என்று சொல்ல, "எனக்கு இவ்வளவு தூரம் உதவியதற்கு ரொம்ப நன்றிங்க..." என்றபடி ஓடினார். அந்த மலையாளி சொன்ன கடை சிக்னலுக்கு அருகில் இருந்தது. நானும் என் வழியில் நடந்தேன்... நானும் அவர் பெயரைக் கேட்கவில்லை... அவரும் என் பெயரைக் கேட்கவில்லை... தமிழன் என்ற உணர்வு மட்டுமே... # இதை முகநூலில் பகிரலாம் என அங்குதான் எழுதினேன்... ரொம்ப நீளமாப் போனதால் இங்கும் பதிவாக்கிட்டேன்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 15 பிப்ரவரி, 2016

மதிப்பெண்களை நோக்கி...

ட்சங்களில் செலவு பண்ணி படித்தால் நாமக்கல்லில்தான் படிக்கணும் என்று சொல்லும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். 'எங்க பள்ளியில் 400 மார்க்குக்கு மேல் இருந்தால்தான் 11வது வகுப்பில் சேர்த்துக் கொள்வோம்' என்று சொல்லும் தலைமை ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறோம். '480 வரும்ன்னு பார்த்தேன்... 465 மார்க்தான் வந்திருக்கு' என்று புலம்பும் மாணாக்கர்களையும் பார்த்திருக்கிறோம். இவர்கள் எல்லாமே மதிப்பெண்களை மட்டுமே குறியாகக் கொண்டு அதன் பின்னே ஓடும் கூட்டம்தான். இவர்களால் என்ன பயன்..? இவர்கள் இப்படி இருப்பது சரிதானா..? 

எங்க குட்டீஸ் நீண்ட தூரம் பயணித்து படித்து வந்தார்கள். பள்ளியில் சரியான ஆசிரியர்கள் இல்லாது பிள்ளைகளின் படிப்போ ஏனோ தானோ என போய்க் கொண்டிருக்க, சென்ற வருடம் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் சேர்ப்பதற்காக, தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தோம். அப்போது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து மாவட்டத்தில் முதலிடத்தை மற்றொரு பள்ளியுடன் பங்கு போட்டிருந்த நேரம் அது. அங்கு படித்த மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பில் சேர முன்னுரிமை கொடுக்கும் பள்ளிதான் அது என்றாலும், இப்பத்தான் 400களும் 450களும் ரொம்ப சுலபமான இலக்காகி விட்டதே... ஒரு மாணவன் தன் தாயுடன் வந்தான். அவன் எடுத்திருந்தது 350க்கு கீழ்தான்... அவர்கள் கேட்டது ஒரு பிரிவு... தலைமை ஆசிரியர் சொன்னதோ மற்றொரு பிரிவு. அவனின் அம்மா 'இவன் நல்லா படிப்பானுங்க... பரிட்சை அப்போ உடம்பு முடியலை... அதான் மார்க் குறைஞ்சிருச்சு...' என்று கெஞ்ச, 'முதல் மதிப்பெண் வாங்கியிருக்கிற பெண் இவன் கிளாஸ்தான்...  அவளும் உடல் நலமில்லாததோடுதான் எழுதினாள்... மார்க் வாங்கலை...' என்று சொல்லி இந்தப் பிரிவுன்னா சேருங்க... இல்லேன்னா டிசியை வாங்கிட்டுப் போங்க என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

மற்றொரு பள்ளி... இன்றைய நிலையில் மக்கள் அதிகம் விரும்பும் பள்ளி... நாமக்கல் பள்ளிகளுக்கு நிகரான பள்ளி... காரைக்குடியில் இருக்கிறது. இங்கு 10ம் வகுப்பு ரெண்டு வருசம்... 12ம் வகுப்பு ரெண்டு வருசம்தான். இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இப்படித்தான் நடக்கிறது. இது அரசுக்குத் தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. பத்தாம் வகுப்பில் 485 மதிப்பெண் பெற்ற எங்க சொந்தக்காரப் பெண்ணுக்கு கட்டணச் சலுகையுடன் அந்தப் பள்ளியில் 11ம் வகுப்பில் இடம் கிடைத்தது. முதல் வருடத்தின் முடிவில் மாணவர்களின் படிப்பை வைத்து தரம் பிரிக்கப்பட்டார்கள். 'ஏ' பிரிவில் 90%க்கு மேல் வாங்கும் மாணவர்கள்... 'பி' பிரிவு 80%... இப்படியாக 50% க்குள் வாங்கும் மாணவர்கள் கடைசிப் பிரிவில் வைக்கப்பட்டார்கள். இது வருடா வருடம் நிகழும் நிகழ்வுதானாம். முதல் இரண்டு பிரிவு மாணவர்களை உரு ஏற்றி மாவட்டத்தில் முதல் இடத்தை பிடிக்க வைத்து கடைசிப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் பாஸ் பண்ணினாலே போது 100% தேர்ச்சி பெற்ற பள்ளி வரிசையில் இடம் பிடித்துவிடலாம் என்ற எண்ணம்தான் அவர்களின் இந்தப் பிரிவினைக்கு காரணம். 

இதில் அந்தப் பெண் வருத்தத்தோடு சொன்ன விஷயம் என்னவென்றால் எல்லாரும் அன்பா பழகிட்டு இப்ப நான் ஏ கிளாஸ்லயும் என்னோட டியரஸ்ட் பிரண்ட் ஈ கிளாஸ்லயும் இருக்கோம். நாங்க அவங்க கூட பேசக்கூடாதாம். ரொம்பக் கொடுமையா இருக்கு... பார்த்துச் சிரிச்சாக்கூட 'உன்னோட வேலை படிக்கிறது... அவளுக்கு பாஸானாப் போதும் எதுக்கு அவகிட்ட பேசுறே...' என்று ஆசிரியர்கள் சத்தம் போடுகிறார்கள். ஏன்டா இந்தப் பள்ளியில் சேர்ந்தோம்ன்னு இருக்கு... அவங்களைப் பார்க்கும் போது பாவமாய் இருக்கு என்று சொன்னது. தாங்கள் சம்பாதிக்க கல்வி கூடத்துக்குள் ஏற்றத் தாழ்வுகளை பழகிக் கொடுக்கும் இந்தப் பாதகர்களால் கல்வி எப்படி சிறப்பானதாக அமையும். சொல்லுங்கள்.

தேவகோட்டைக்கு அருகில் ஆறாவயலில் இருக்கும் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி வருடா வருடம் 100% தேர்ச்சியுடன் மிகச் சிறந்த மாணவர்களை வெளியில் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த தனியார் பள்ளிகளுடன் இவர்கள் போட்டியிடுவதும் இல்லை... இவர்களைப் போல் இரண்டு வருட வகுப்புக்கள் நடத்துவதும் இல்லை... அரசுப் பள்ளிகளில் மிகச் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள்... நல்ல தேர்ச்சி விகிதத்தையும் கொடுக்கிறார்கள். நாம்தான் ஆங்கில மோகத்தில் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து தனியார் வசம் போகிறோம். நானும் அப்படித்தான்... என் பிள்ளைகளும் தனியார் பள்ளியில்தான் படிக்கிறார்கள். 

இப்போதெல்லாம் அரசுப் பள்ளியில் படிக்கட்டும் என்று நாம் நினைத்தாலும் குடும்பத்தில் யாரும் விரும்புவதில்லை. இதோ விஷாலைக் கூட ஊட்டியில் சேர்க்க வேண்டும் என்று மாமா சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார். நாந்தான் இங்கிருந்து அங்கா... அவன் வீட்டுக்குப் பக்கத்தில் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் இதே பள்ளியில் 12வது வரை படிக்கலாமே... பிறகெதற்கு ஊட்டி எல்லாம் என்று சொல்லி வருகிறேன். எனக்கு கிறிஸ்டியன் பள்ளிகளின் நடைமுறைகள் ரொம்பப் பிடிக்கும். நான் படித்த தே பிரித்தோவில் கூட நாங்கள் படிக்கும் போது மாணவர்களை குழுவாய் பிரித்து படிக்க வைப்பார்கள். மூன்று நல்லாப் படிக்கும் மாணவர்களுடன் மூன்று படிப்பு ஏறாத மாணவர்களை குழுவாக்கி படிக்க வைத்து வெற்றி பெற வைப்பார்கள். இப்போது எப்படி என்று தெரியவில்லை.

என்னடா இவன் பள்ளிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறான் என்று யோசிக்கிறீர்கள்தானே... அது ஒண்ணுமில்லைங்க... நம்ம முத்து நிலவன் ஐயாவின் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!' என்ற புத்தகத்தை வாசித்தேன். அதன் தாக்கம்தான் இது... மார்க்கை நோக்கி ஏரில் பூட்டப்பட்ட மாணவர்களையும் நமது கல்வி முறையையும் குறித்த, பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் வலையில் வெளிவந்த 18 கட்டுரைகளின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம். மிக அருமையான கட்டுரைகள்... கல்வி நிலை குறித்து எவ்வளவு விளக்கங்கள்... எத்தனை அழகான கட்டுரைகள்... உண்மையிலேயே ஐயாவின் சிந்தனையில் பூத்திருக்கும் இத்தொகுப்பு மிகச் சிறப்பான தொகுப்புத்தான்... என்னமாய் எழுதியிருக்கிறார்... உண்மையில் அவரின் உழைப்பு என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல் படிப்பு மட்டுமே வாழ்க்கையாகாது... மனிதர்களைப் படித்தால்தான் உலகில் உன்னால் வாழ முடியும் என மகளுக்கு கடிதத்தில் சொல்லும் கட்டுரையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாக இருக்கிறது. மெக்காலே கல்வி திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து கல்வித் துறையில் இருப்பவர்கள் தவிர்த்து நாமெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை. அது குறித்து... அதன் விளைவுகள் குறித்து அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார். மேலும் சமச்சீர் கல்வி குறித்து... அதனாலான நன்மைகள் குறித்து...  தனியார் பள்ளி நிர்வாகிகள் அதை எதிர்க்க காரணம் என்ன என்பது குறித்து... பாடநூல் எழுதும் ஆசியர்களின் செயல் குறித்து... பேப்பர் திருத்தும் நிலை குறித்து... அதில் அரசின் செயல்பாடு குறித்து... இப்படி நிறைய... நிறைய... நிறைய விஷயங்களை நிறைவாய்ப் பேசியிருக்கிறது இந்தப் புத்தகம்.

ஒரு திருக்குறள் மனப்பாடம் பண்ண முடியாத மாணவனால் ஒரு சினிமாப் பாடலை முழுமையாக மனப்பாடம் பண்ணி பாட முடிகிறதே அது எப்படி.? மாணவர்கள் மத்தியில் எதையெல்லாம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்... எப்படி அவர்களை வளர்க்க வேண்டும்.., அவர்களின் வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கோடு பெற்றோரின் பங்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் கட்டுரைகளில் எழுதியிருக்கிறார் நம்ம முத்து நிலவன் ஐயா.


புத்தகத்தில் இருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு...

'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாரதி பாட்டை ஓப்பிக்காமல் - விளையாடப் போன குழந்தைக்குக் கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மன அழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப்படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியர்களால் அதிகமாகாதா என்ன?

இன்ஜினியரிங் படிப்பைவிட எல்.கே.ஜி.க்கு கூடுதல் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளின் கல்விச் சாதனையெல்லாம் சாதனை - மாணவர்களைக் காட்டி நடத்தும் விளம்பர வேலையின்றி வேறென்ன...?

ஆட்சி மாறினால், தலைவர் மாறுவது அரசியலுக்குப் பொருந்தலாம். பாடம் வைக்கப்படும், போது தலைமுறை கடந்த தலைவர்களையே பாடநூலில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனும் அக்கறை வேண்டாமா?

தமிழால் என்ன பயன்? என்று கேட்பதும், தாயால் என்ன பயன்? என்று கேட்பதும் ஒன்றே அல்லவா? இது நம் தமிழர்களுக்கு எப்போது புரியப் போகிறது? இந்த அலட்சியம் பள்ளி மாணவர்களிடம் வளர்வது எவ்வளவு ஆபத்து?

ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான்,  கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி  3 ஆம் வகுப்புத்தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துக்களை ஆய்வு செய்த படிப்பாளிகள் பல நூறு பேர் முனைவர் (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?

ஆங்கிலேயர் ஆட்சியில் கூட 13 வயதில்தான் ஆங்கிலம் அறிமுகமானது, தமிழர் ஆட்சியிலோ 3 வயதிலேயே அறிமுகப்படுத்துகிறோம்! அரசனை விஞ்சிய அரசு விசுவாசம்!

கிராமங்களில் அதிலும் குறிப்பாக ஏழை உழைப்பாளி மக்களிடம்தான் இன்னும் நம் பண்பாட்டு வேர்கள் அறுபடாமல் இருக்கின்றன என்பது, என் மாணவப் பிள்ளைகளால் நான் கற்றுணர்ந்த கல்வி!

இப்படி இன்னும் நிறைய அடுக்கலாம்... அரிச்சந்திரன் குறித்து... கண்ணகி குறித்து... இன்னும் புராணங்கள் எல்லாம் பற்றிப் பேசியிருக்கும் நிலவன் ஐயா, பாடங்களில் பெரியார் குறித்து... இலக்கணம் குறித்து எல்லாம் மிகச் சிறப்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மேலும் தனது மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று வந்ததையும் அவர்கள் நடந்து கொண்ட விதத்தையும் சுவராஸ்யமான கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்.  

தமிழ் குறித்து வாயார பேசும் நாம், அதன் துறைசார் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியதை விடுத்து 'செயல் மறந்து' வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்திய நாம் செயல் புரிந்து வாழ்த்தியிருக்கலாமே என்கிறார். ஆஹா... நம் தமிழ்த்தாய் வாழ்த்தின் செயல் மறந்த வரிகள் குறித்து ஐயாவின் சிந்தனையைப் பாருங்கள்.

சிலாகித்து எழுதினால் பதிவின் நீளம் பார்க்காது எழுதிக் கொண்டே போவேன்... இவனைக் கட்டுரை எழுதச் சொன்னா... தேர்தல் அறிக்கை மாதிரி நீ....ள...மா...க... எழுதுவானேன்னு நினைப்பீங்க. தேர்தல் அறிக்கை ஏமாற்று வேலை... இது என்னைக் கவர்ந்த எழுத்தின் வேலை... இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு. பொறுமையாகப் படித்த அனைவருக்கும் நன்றி.

அப்புறம் நண்பர்களே... யாருக்கேனும் புத்தகம் பரிசு கொடுப்பதென்றால் 'முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!' என்பது உங்களின் முதல் சாய்ஸ்சாக இருக்கட்டும்.

எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பண்முகப் படைப்பாளி ஐயாவின் கட்டுரைகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு நானெல்லாம் வளரவில்லை... அந்த எழுத்து என்னை ஈர்த்தது அதற்காக எழுதினேன்... அவ்வளவே.


முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! - ஆசிரியர். நா.முத்து நிலவன் - அகரம் வெளியீடு - விலை : 120.

முத்து நிலவன் ஐயா அவர்கள் வலைத்தளத்தில் மிகவும் பிரபலம்... அவரின் வலைத் தளத்தை வாசிக்க...


சொல்ல மறந்துட்டேனே... யான் பெற்ற இந்த இன்பம் குமாரும் பெறட்டும் என தான் படிக்கும் புத்தகங்களை எல்லாம் எனக்கு கொண்டு வந்து கொடுத்து வாசிக்கச் சொல்லும் அண்ணன் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உன் பேரைச் சொல்லும் போதே...


'மாப்ள அவ உன்னோட நெருங்கிப் பழகுறா... உங்கிட்ட ஒருநாள் கூட பேசாம இருந்ததில்லை... எனக்கென்னவோ அவ உன்னை விரும்புறான்னு நினைக்கிறேன்... பேசாம நாளைக்கு காதலர் தினத்துல புரப்போஸ் பண்ணிப் பாருடா' என்று நண்பன் ஜவகர் சொன்னதை மீண்டும் மீண்டும் நினைவில் ஓடவிட்டபடி 'உன் பேரைச் சொல்லும் போதே...' பாடலை ரசித்துக் கொண்டிருந்தான் சுபாஷ்.

சுபாஷூம் ஜவகரும் ஒரே வீதிதான்... இருவரின் வீட்டுக்கும் இடையில் மூன்று வீடுகள்தான்... முதல் வகுப்பில் இருந்து இருவரும் சேர்ந்தே படிக்கிறார்கள். எட்டாவது வரை அன்னாசி அரசு நடுநிலைப்பள்ளியில் படித்தவர்கள். பின்னர் ஒன்பதாம் வகுப்பில் அந்தோணி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்கள். இப்ப இருவரும் பனிரெண்டாம் வகுப்பு... இரண்டுமே இருபாலர் பள்ளிதான். ஜவகர் எப்போதும் இவர்கள் வீட்டில்தான் கிடப்பான். இன்று பள்ளியில் இருந்து வரும்போதுதான் இப்படி ஒரு சின்ன நெருப்பை பற்ற வைத்துவிட்டுச் சென்றான். அது சுபாஷூக்குள் பிடித்து எரிய, கணிப்பொறி திரையில் அஞ்சலி மீண்டும் மீண்டும் 'உன் பேரைச் சொல்லும் போதே'க்கு ஆடிக் கொண்டிருந்தாள்.

'இவன் சொல்றான்னு இறங்கலாமா..?' என்று யோசித்தான். அதற்கும் காரணம் இருக்கு... இவனுக எட்டாம் வகுப்பில் படிக்கும் போது கூடப் படித்த சுவாதி, அதுவும் இவனுக வீதியிலதான் இருந்தது. அதனால் இவனுககிட்ட நல்லாப் பேசும். 'டேய்... இன்னைக்கு எங்கப்பா கடலை மிட்டாய் வாங்கியாந்தாருடா... இந்தாங்கடா'ன்னு இவனுகளுக்கு கொடுக்கும். எதாயிருந்தாலும் இவனுககிட்ட சொல்லும். நாளைக்கு படத்துக்குப் போறோம்ன்னு இன்னைக்கே சொல்லிச் செல்லும். அது எந்தப் படத்துக்குப் போகுதுன்னு பார்த்து இவனுகளும் அங்க போயிருவானுங்க... அதுக்கும் சந்தோஷமா இருக்கும். இடைவேளையில தின்னுறதுக்கு வாங்கும் போது அம்மாக்கிட்ட சொல்லி இவனுகளுக்கும் பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கும். இதெல்லாம் இவனுக மண்டைக்குள்ள வேற மாதிரி சுத்த ஆரம்பிச்சிருச்சு... எல்லாம் சினிமாவும் டிவியும் கத்துக் கொடுக்கிறதுதானே... 

'டேய் அந்தப்புள்ள நம்மள விரும்புதுடா... அதுக்கு லவ் லெட்டர் எழுதுவோமுடா'ன்னு ஜவகர் ஏத்திவிட, இவனுகளும் காயே... கனியேன்னு எல்லாம் கிறுக்கி ரெண்டு பேரு பேரையும் எழுதி சுவாதிக்கிட்ட கொடுத்துட்டானுங்க... என்னடான்னு வாங்கிப் பார்த்த புள்ள... காய்.. கனியெல்லாம் படிச்சிட்டு எதுக்கு எழுதியிருக்கானுங்கன்னு யோசிக்க... 'அறியாத மனசு... புரியாத வயசு...' பாட்டு மனசுல வந்து சம்மட்டி அடிக்க 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிருச்சு. இவனுகளுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியலை. ஓடிடலாம்ன்னு பார்த்தா கரெக்டா எட்டாப்பு சார் ஏழுமலை அங்க வந்துட்டாரு... எதுக்கு அழுகிறேன்னு கேட்க, அது லெட்டரை அவருக்கிட்ட கொடுத்திருச்சு... வாங்கி வாசிச்சாரு... எழுத்துப் பிழையும் அடித்தலும் திருத்தலுமாய் ஒரு லவ் லெட்டர்... கீழ ரெண்டு பேரு பேரும் வேற.... சொல்லவா வேணும்..?

சுவாதியை நீ போன்னு சொல்லிட்டு ரெண்டு பேரு காதையும் பிடிச்சி கிள்ளியே பொத்தல் போட்டவரு... இந்த வயசுல காதல்... அதுவும் ஒரு புள்ளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து லெட்டர் எழுதுறீங்க... படிங்கடான்னு சொன்னா... இதுதான் பண்ணுறீங்களா... அப்படியே இன்னும் மூணு பேரைச் சேர்த்து அஞ்சு பேரா எழுதியிருந்தா நீங்க பாண்டவர்களாவும் அந்த புள்ள பாஞ்சாலியாவும் ஆக்கியிருக்கலாம்... மூதேவிகளான்னு சொல்லி, அவரோட பேவரேட்டே புளியங்குச்சிதான்... அதால விளாசு விளாசுன்னு விளாசி...அன்னைக்குப் பூராம் முட்டி போட வச்சிட்டாரு... அதுக்கப்புறம் சுவாதி இவனுகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை... அப்பா வாங்கியாந்த பலகாரம் எல்லாம் கொடுக்கலை, சினிமாவுக்கு போறதைச் சொல்லலை, பாப்கார்னும் கிடைக்கலை... பத்தாவது முடிச்சதும் அவங்க அப்பாவுக்கு வேலை மாறிடுச்சுன்னு மதுரைப் பக்கம் போயிருச்சு. அந்த அடியை நினைச்சாலே இன்னும் அவனுக்கு வலிக்கும்... அதுக்கப்புறம் சில அடி வாங்கியிருந்ததாலும் மறுபடியும் அடி வாங்க வச்சிட்டான்னா... அதனால ரொம்ப யோசிச்சான்... எந்த முடிவுக்கும் வர முடியாம திணறினான்.

கணிப்பொறி திரையில் அஞ்சலி மீண்டும் மீண்டும் ஆடினாள். "என்னடா லவ்வு கிவ்வு வந்திருச்சா... இந்தப்பாட்டே இருபது தடவைக்கும் மேல ஓடுது..." அவன் பின்னே வந்து மெல்லக் கேட்டாள் கல்லூரியில் படிக்கும் அக்கா புவனா.

"ஆமா அஞ்சலியைக் காதலிக்கிறேன்... நீ யாரை சூர்யாவையா..?" என்று கேட்டதும் "ஆளைப்பாரு... படிக்கிறது பிளஸ்டூ... அதுக்குள்ள லவ்வைப் பத்திப் பேசுது... இதெல்லாம் உருப்பட..." என திட்டியவள் தான் கேட்டதால்தானே அவன் பேசினான் என்பதை மறந்து "அம்மா... உம்மகன் அஞ்சலியை லவ் பண்றானாம்... அவ இப்ப ஆந்திராப் பக்கம் பொயிட்டா... நீ அங்க போயி பேசி முடிச்சிட்டு வா" என்று கத்தினாள்.

"ஆமாம்மா... அப்படியே சென்னையில இறங்கி சூர்யா வீட்டுக்குப் போயி ஜோதிகாவை டைவர்ஸ் பண்ணச் சொல்லு... நம்ம வீட்டு அனார்கலி சூர்யாவை லவ் பண்றாளாம்" இவனும் பதிலுக்கு கத்தினான்.

"மூதேவிகளா... படிக்கிறதை விட்டுட்டு லவ்வு கிவ்வுன்னு பேசிக்கிட்டா இருக்கீக... வந்தேன்னா வெளக்குமாத்துக் கட்டை பிஞ்சு போயிரும்..." என அம்மா அடுப்படியில் இருந்து கத்த, புவனா அவனுக்கு பழிப்புக்காட்டி விட்டு அங்கிருந்து அகன்றாள்.

'ஜவகர் சொன்னது மாதிரி அவ என்னைத்தான் விரும்புறாளா..? சொன்னா ஏத்துப்பாளா...? இல்ல ஊரைக் கூட்டி பிரச்சினை ஆக்கிடுவாளா...?' என்று யோசித்துக் கொண்டிருந்தான். 'புரப்போஸ் பண்ணலாம்... ஒகேன்னா ஓகே... இல்லேன்னா பிரண்டா இருந்துப்போம்...' என்று நினைத்தான். இப்படித்தான் ஒன்பதாவதில் உமாக்கிட்ட காதலிக்கிறேன்னு சொல்லி, அவ போடான்னு மறுக்க ஓகே நாம பிரண்ட்ஸ் அப்படின்னு சொன்னான். பத்தாவதில் பானுக்கிட்ட சொல்லி அவ கொடுத்த அறைக்கு அப்புறமும் அவளோட பிரண்டா இருக்கிறான். பதினோராவதுல ஜெனிபர்கிட்ட சொல்ல, அவ அண்ணன் வந்து உதைச்சிட்டுப் போனான். இவன் மட்டும்தான் உதை வாங்குவான்னு இல்லை... எல்லா உதையிலயும் ஜவகருக்கும் பங்கு இருக்கும். அதனால கூட அவன் இவனை மாட்டிவிடப் பார்க்கலாமேன்னும் யோசிச்சான். 'சேச்சே... அவன் என்னோட நண்பேன்டா...' அப்படின்னு மனசைத் தேத்திக்கிட்டு பேப்பரை எடுத்தான். கணிப்பொறி திரையில் அஞ்சலி ஆடிக் கொண்டிருந்தாள். இவன் 'அன்பே அஞ்சலி' அப்படின்னு ஆரம்பித்தான்.

றுநாள் காலை...

"ஹாய்... நான் உன்னைப் பார்க்கணுமே..?" என அஞ்சலிக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினான். 'இன்னைக்கா?' என உடனடியாக பதில் செய்தி வந்தது. அப்போது அவனின் அப்பா பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியில் 'இன்று காதலர்கள் கோவிலுக்கு வந்தால் பிடித்து தாலி கட்டி வைப்போம்' என ஒரு அமைப்பு சொன்னதாகச் சொல்லவும் 'இவனுகளுக்கு வேற வேலை இல்லை' என்றார் அப்பா.

'ஆமா... எவனோட பிள்ளைகளுக்கோ இவனுக கல்யாணம் பண்ணி வைப்பானுங்களாம்... இதே இவனுக பிள்ளைகளா இருந்து மாட்டினா... வீட்டுக்கு இழுத்துக்கிட்டு பொயிட்டு அது கூட வந்ததை அடிச்சித் தூக்கி தண்டவாளத்துல போட்டுருவானுங்க... ஏன் அதுகளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதானே...' என்று முணங்கியபடி "ஆமா... முக்கியமாப் பேசணும்..." என அஞ்சலிக்கு செய்தி அனுப்பினான்.

"என்ன அப்படி முக்கியம்..? சும்மா சொல்லேன்..." இது அஞ்சலி.

"நேர்ல பேசணும்..." 

"அப்படியா... ஈவ்னிங் பார்க்கலாமா..? இன்னைக்கு லவ்வர்ஸ் டே..." அங்கிட்டு இருந்து பதில் வர, 'அதுக்குத்தானேடி பேசணுங்கிறேன்'னு முணங்கியபடி "அதுதான் நான் இன்னைக்கு பேசணுங்கிறேன்..." என டைப்பினான்.

"நாங்கூட இன்னைக்குத்தான் எனக்குப் பிடித்தவர்கிட்ட புரபோஸ் பண்ணப் போறேன்... காலையில அவரை பூங்காவுல பாக்குறதா ராத்திரி அவருக்கு செய்தி அனுப்பினேன்... ஓகேன்னு சொல்லியிருக்கார்... சக்சஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன்... நீயும் என்னோட பிரண்ட்தானே... என்னோட காதல் சக்ஸஸாகனும்ன்னு வேண்டிக்கடா... ப்ளீஸ்... ஆள் யார்ங்கிறது இப்போதைக்கு சஸ்பென்ஸ்... ஒகே ஆனதும் உங்கிட்டதான் முதல்ல சொல்லுவேன்..."

அந்தச் செய்தி பார்த்ததும் அவனுக்கு இடி விழுந்தது போல் ஆனது... 'எவன்டா அவன்... நம்ம லைன்ல கிராஸ் ஆனது... நானும் ஜவகரும்தான் இவகிட்ட பிரியாப் பேசுவோம். மாப்ளயா இருந்தா இந்நேரம் போன் பண்ணியிருப்பானே... நாங்க இல்லாம இடையில வந்த அவன் யாரா இருப்பான்... ம்.... எப்படியோ நமக்கு அஞ்சாவதும் போச்சு... இனி காதலும் வேண்டாம்... கத்திரிக்காயும் வேண்டாம்...' என முடிவெடுத்தபடி "ஓகே" என அனுப்பிவிட்டு மொபைலை சுவிட்ஸ் ஆப் பண்ணி வைத்துவிட்டு குளிக்கப் போனான்.

"அம்மா... நான் ஜவகர் வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்..." என்றான்.

"என்னடா எழுதுன லெட்டரை கிழிச்சிட்டே... புட்டுக்கிச்சா" என்று சிரித்த அக்கா, வேகமாக ஸ்கூட்டியை எடுத்தாள். 'போ உனக்கெல்லாம் எவனோ ஒருத்தன் மாட்டியிருக்கான்... நீங்கள்லாம் இன்னைக்கு லவ்வர்ஸ்டே கொண்டாடுறீங்க... வெட்டிங்க்டே இவன் கூட கொண்டாடுவீங்களான்னு பாப்போம்... அப்ப எந்த இளிச்சவாயன் வந்து மாட்டுறானோ...' என்று மனசுக்குள் திட்டியபடி ஜவகர் வீட்டை அடைந்தான்.

"யாரோ முக்கியமான பிரண்டைப் பார்க்கப் போறேன்னு ஜவா டிப்டாப்பா கிளம்பிப் போயிருக்கான்... உனக்குத் தெரியாதா..? உங்கிட்ட சொல்லாமயா போனான்... உன்னை விட்டுட்டு அவனுக்கு மட்டும் யாரு பிரண்ட்... சரி...உள்ள வா சுபாஷ்" என்றாள் ஜவகரின் தங்கை காவ்யா.

எதுவும் பேசாமல் உள்ளே போய் சோபாவில் அமர்ந்தான். அஞ்சலி சொன்னதும் ஜவகர் போனதும் ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் ஆக, 'அடப்பாவி எங்கிட்ட சொல்லாம மறைச்சிட்டியேடா...' என மனசுக்குள்ளேயே நண்பனைத் திட்டினான். 

"இந்தா காபி... நானே போட்டது... அம்மா, அப்பா அத்தை வீட்டுக்குப் போயிருக்காங்க... இப்ப வந்துருவாங்க... நானே உன்னைப் பாக்க வரணும்ன்னு நினைச்சேன் தெரியுமா..?" என்றபடி "இந்த ஒத்தை ரோஜா எனக்கு நல்லாயிருக்கா?" எனக் கேட்டு வெட்கமாய்ச் சிரித்தவள் ஆரஞ்சுக் கலர் சுடியில் இருந்தாள். தொலைக்காட்சியில் 'உன் பேரைச் சொல்லும் போதே...' பாடல் ஓட, காவ்யா டிவியின் சப்தத்தை அதிகமாக்கினாள். அவனுக்குப் புரிய அவள் கொடுத்த காபி சுவைத்தது.

******
சென்ற ஆண்டு எழுதிய காதலர் தின சிறுகதை அனுராக் வாசிக்க...

-'பரிவை' சே.குமார்.