மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 14 பிப்ரவரி, 2015அனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)

(காதலர் தின வாழ்த்துக்கள்)


வள்... அனுராகா. நான்... ராகவன்

எங்கள் காதல் பிறந்தது ஒரு காதலர் தினத்தில்தான் என்றால் நம்புவீர்களா... ஆம் இருபது வருடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 14 அன்றுதான் எங்கள் காதல் பிறந்தது. ஆனால் இப்போதுபோல் அப்போது காதலர் தினக் கொண்டாட்டங்களும் இல்லை... போராட்டங்களும் இல்லை. இன்று காதலர் தினம் என்று கடந்து செல்லும் சாதாரண நாளாகத்தான் இருந்தது.

நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு. நண்பர்கள் மத்தியில் அவள் அனுவாகிப் போனாள், நானோ ராகவ் ஆனேன். எங்களுக்கும் காதல் மலர்ந்ததும் அனு எனக்கு அம்முவானாள்... நான் அவளுக்கு ராக் ஆனேன். இருபது வருடங்களுக்கு முன் காதலில் விழுந்த அனுராக்கின் வாழ்க்கை இப்போ எப்படி இருக்குன்னுதானே கேக்குறீங்க... இருங்க அதை அப்புறம் சொல்றேன். இப்ப எங்க காதல் கதைக்குள்ள போயிட்டு வருவோம்.

அனு... பேரழகியும் இல்லை பேருக்கு அழகியும் இல்லை ஆனால் அழகி. கல்லூரி மாணவர்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து கனவில் காதலித்த அழகி. கருப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் புது நிறம்ன்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு நிறம்... நீளமான கூந்தல்... அவள் தாவணியில் வரும்போது சொக்கிப் போகும் அழகு. ம்... அது ஒரு கனாக்காலம் அல்லவா... தேர்ப்பாக்க வரும் எல்லாரும் தேவதைகளாகத்தானே தெரிவார்கள் என்றாலும் அவள் தேவதைகளின் தேவதை. தோழியருடன் பவனி வரும் போது அவள் உற்சவமூர்த்தி. அவளிடம் பேச எல்லோரும் அலைந்த பருவம் அது.

எனக்கு அவளுடன் அதிகம் பேசப்பிடிப்பதில்லை... என்னடா அழகி, பேரழகி, தேவதை, உற்சவமூர்த்தியின்னு வர்ணிச்சிட்டு பேசப்பிடிக்காதுன்னு கதை விடுறானேன்னுதானே பாக்குறீங்க... உண்மை... நம்புங்க... அவளோட அழகை ரசிச்சிருக்கேன்... ஆனா அவகிட்ட பேசணுமின்னு நினைச்சதில்லை. ஏதாவது கேட்டா பதில்... அவ்வளவுதான்... அடிக்கடி அவளுடன் பேச வேண்டும் என்று ஏதாவது காரணங்களை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு காத்திருக்க நினைப்பதுமில்லை... பிடிப்பதும் இல்லை... அதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது... அது ஹேமா.

என்னடா அனுன்னு ஆரம்பிச்சி ஹேமாவுக்குப் பொயிட்டானே இந்த ராகவன்... என்று நினைத்து என்னைத் திட்டினாலும் பரவாயில்லை... நான் மற்ற பெண்களுடன் அதிகம் பேசாததற்கு காரணம் ஹேமாதான்... அவளும் அதே கல்லூரியில்தான் படிச்சா. என்னோட அத்தை பொண்ணு... என்னை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்... அவளை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். வீட்டிலும் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என எப்போதோ பேசி வைத்திருக்கிறார்கள். சரி வாங்க அனு, ஹேமா, ராகவனோட கல்லூரி வாழ்க்கைக்குள்ள பொயிட்டு வருவோம்.

"ஏய் ராகவ்... என்ன என்னையப் பாத்துட்டு பாக்காமப் போறே...?" பின்னாலிருந்து கூப்பிட்டாள் ஹேமா.

"ஹே... உண்மையிலேயே பாக்கலைடி... பாத்தா பேசாமப் போவேனா?"

"இப்பல்லாம் உண்மையிலேயே பாக்காமத்தானே போறே...?"

"அடி நீ வேற... பாத்தா உங்கிட்ட பேசாம எவகிட்ட பேசப்போறேன்..."

"அதான் உங்க கிளாஸ்ல ஒரு அலப்பி இருக்காளே... எல்லாரும் போட்டிபோட்டு பேசுறானுங்களாமே... ஓருவேளை நீயும்..."

"யாரு... அந்த அனுவைச் சொல்றியா?"

"அட அனுவாமே... செல்லமாக் கூப்பிடுறியோ?"

"லூசு... காலேசே அவளை அனுன்னுதானே சொல்லுது... தெரியாத மாதிரி நடிப்பு வேற... விட்டேன்னா" கையை ஓங்கினேன்.

"ஏய்... மேத்ஸ் புரபஸர் வர்றாரு.. இங்க பாருங்க சார்... இவன் அடிக்க வர்றான்னு சொன்னேனா... அப்புறம் நீ பிரின்சிபால் ரூம்ல..." மெதுவாகச் சொல்லிச் சிரித்தாள்.

"செஞ்சாலும் செய்வேடி.. நான் கிளம்புறேன்..."

"இரு எங்க ஓடுறே... நீ அனுவை லவ் பண்ணுறியா?" நிறுத்தி நிதானமாகக் கேட்டாள்.

"ஏய் கிறுக்கு... அதான் வீட்டுல உனக்கும் எனக்கும் மேரேஜ்ன்னு முடிவு பண்ணி வச்சிருக்கானுங்க... நீயே வந்து அவளை விரும்புறியா இவளை விரும்புறியான்னு கேட்டுக்கிட்டு... சும்மா போடி..."

"டேய் அவ காலேசு பிகருடா...உன்னோட கிளாஸ்மெட் வேற... படிப்புல உங்க ரெண்டு பேருக்குந்தான் போட்டியாமே... வாழ்க்கையில நாங்க ரெண்டு பேரும் போட்டி போடுற மாதிரி வச்சிடாதே..." சொல்லிச் சிரித்தாள்.

"எதுக்கோ என்னை ஏத்திவிடுறே..? ஆத்தா... தாயி ஆளைவிடு.... காதல், கத்திரிக்காயெல்லாம் நமக்கு வேணாம்..."

"அப்ப என்னைய காதலிக்கலையா?"

"அது..."

"அப்ப வீட்டுக்காகத்தான் என்னைய கட்டிக்கப்போறே.. அப்படித்தானே..."

"ஆத்தா உன்னைய ரொம்பக் காதலிக்கிறேன்... நீதான் எம்பொண்டாட்டி... போதுமா?"

"அப்ப அவ..?"

"அய்யோ இப்படிக் கொல்றாளே... இவளைக் கட்டிக்கிட்டு நான் என்ன பண்ணப் போறேனோ தெரியலையே..."

"அப்புறம் பேசிக் கொல்லமாட்டேன்... வேற மாதிரிக் கொல்லுவேன்...." என்று சிரித்தவள் "சும்மா வம்பு இழுத்துப் பார்த்தேன்... ஐ லவ் யூ டா ராகவா..." என்று ராகவாவை அழுத்திச் சொன்னவள் "வாறேன்டா என் வருங்காலப் புருஷா..." அப்படின்னு சொல்லிட்டு அங்கிருந்து அகல, 'லூசு..' என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே எனது வகுப்பறை நோக்கிச் சென்றேன்.

அன்று என்னவோ ஹேமா சொன்னதற்குப் பிறகு எனது கண் அடிக்கடி அனுவை நோட்டமிட்டது. 'டேய் என்னடா... அத்தமக இருக்கும் போது இங்கிட்டு பிராக்கெட் போடப்பாக்குறே... வேணாம் மாப்ள இவளுக்கு நிக்கிறா க்யூவுல எங்களுக்குப் பின்னால ஏறாத... விட்டுடு" என்றான் மணி. 'அடப்போடா' எனச்சொல்லிச் சிரித்தாலும் முதல்முறையாக அனு இம்சித்தாள்.

"ராகவ்.. ராகவ்... அலோ ராகவ்..." பின்னால் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கேட்டு திரும்பினேன்,

அங்கே.... சிவப்புத் தாவணியில் தேவதையாய் அனு, "என்னங்க.. சொல்லுங்க..." என்றேன்.

"எம்புட்டு நேரமாக் கூப்பிடுறேன்.. திரும்பாமப் போறீங்க... உங்களைக் கூப்பிட்டதைக் கேட்டு எல்லாரும் திரும்பிட்டாங்க..." இடுப்பில் கை வைத்தபடி சொல்லிச் சிரித்தாள்.

"சாரிங்க... ஏதோ ஞாபகம்..."

"ம்.... எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?"

"உங்களுக்கா... என்னன்னு சொல்லுங்க முடிஞ்சாச் செய்யிறேன்..."

"முடியும்... எங்க அக்கா பொண்ணு ஸ்கூல்ல ஒரு காம்படிசன்... அதுல அவ கலந்துக்கிறா... ஒரு கட்டுரை ஒண்ணு வேணும்.."

நான் சிரிக்கவும் 'என்ன சிரிப்பு' என்றாள்.

"இல்லை... படிப்பாளி நீங்க... நீங்களே எழுதலாமுல்ல..." என்றேன்.

"நான் படைப்பாளி இல்லையே... நீங்க படைப்பாளியில்ல... அதான் உங்ககிட்ட கேட்டேன்."

"சரி விடுங்க...தலைப்பைச் சொல்லுங்க.... எழுதித்தாறேன்..."

அதன் பிறகு நாங்க அடிக்கடி பேச ஆரம்பிச்சோம். என்னுடன் பேசுவதற்கான காரணத்தை அவள் தேடிப்பிடிப்பது போல் தெரிந்தாலும் எனக்கு அது பிடிக்க ஆரம்பித்தது என்பதே உண்மை. 

"இந்தாங்க சாக்லெட்..." என் முன்னே பைவ் ஸ்டார் சாக்லெட்டை நீட்டினாள் அனு.

"என்ன விஷேசம்?" வாங்கியபடி கேட்டேன்.

"அக்கா பொண்ணுக்கு முதல் பரிசு... தாங்கஸ்" என்றாள்.

"வாவ்... குட்டீசுக்கு வாழ்த்துச் சொல்லிருங்க..."

"அந்த அங்கிளுக்கு வாழ்த்தைச் சொல்லிரு சித்தின்னு அவங்க சொன்னாங்க... நீங்க அவங்களுக்கு வாழ்த்துச் சொல்லுறீங்க." என்று சிரித்து விட்டு நகர்ந்தாள்.. தேவதைகள் தேவை இல்லாமல் சிரிப்பதில்லை... தேவையாய் சிரிக்கும் போது தேவதைகள் இன்னும் அழகாகிறார்கள் என மனசுக்குள் எழுதி ரசித்தேன். 'மாப்ள வேண்டாம்... ரெட்டை மாட்டு வண்டி சரிவராது' என்றான் மணி. 'டேய் போடா..' என்றேன். ஏனோ இன்னும் ஏதாவது அவளைப் பற்றி பேசுடா' என்று நினைத்தது மனசு.

"என்ன அவகிட்ட ரொம்ப வழியிறியாமே?" கோபமாய் கேட்டாள் ஹேமா.

"ஏய் ஜஸ்ட் பிரண்ட்... அவ்வளவுதான்..."

"சாக்லெட் கொடுக்குறாளாம்... எங்க வீட்ல செஞ்ச சுவீட்டுன்னு கொண்டாந்து கொடுக்குறாளாம்... அப்படி என்ன உனக்கு மட்டும் ஸ்பெஷல்..."

வயித்தெரிச்சக்காரனுக வாந்தி எடுத்துட்டானுங்களா, அப்பா போட்டுக் கொடுத்து வாழ்றதுல கிடைக்கிற சந்தோஷம் இவனுகளுக்கு வேற எதுலயும் கிடைக்காது போல. "ம்... ஏய்... எல்லாருக்குந்தான் கொடுத்தா.. இப்ப உன்னோட கிளாஸ் பசங்க கொடுத்தா சாப்பிடமாட்டியா... நான் என்ன அவன் அது கொடுத்தானாமே... இவன் இது கொடுத்தானாமேன்னா கேட்டுக்கிட்டு இருக்கேன். நீதான் என்னோட அம்மு போதுமா.... லவ் யூ டி ஏமா..." என்றேன் அன்பாக. 'ஏமா' என்று சொன்னால் எல்லாக் கோபத்தையும் விட்டுச் சிரிப்பாள் என்ற சூட்சமம் அறிந்தவன் என்பதால் 'ஏமா'வை இறக்கி அழுத்தினேன்.

"ஏமா.. ஏமான்னு ஏமாத்திட்டுப் போனே மவனே... கொன்னேபுடுவேன்..." சொல்லிச் சிரித்தவள், "டேய் நாளைக்கி எங்கயாச்சும் போலாமா?" என்றாள்.

"ம்... போலாம்... எங்கயின்னு டிசைட் பண்ணிட்டு காலையில கூப்பிடு... வாறேன்... ஓகேயா...?"

"ராகவ்... நாளைக்கு எங்கூட ஒரு இடத்துக்கு வரமுடியுமா?" கேட்டது அனு.

(கதையின் நீளம் கருதி மீதிக்கதை இன்று மாலை பகிரப்படும்)

(நன்றி : படம் - இணையத்திலிருந்து)
-'பரிவை' சே.குமார்.

17 கருத்துகள்:

 1. சரி சாயங்காலம் வரை இப்படியே உட்கார்ந்திருக்கேன்..
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   ஹா... ஹா... அப்படியே உக்காந்திருக்கீங்களா?

   கதை எப்படின்னு சொல்லலையே?

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
  2. கதையின் வசனங்கள் குறைவாயினும் தொடக்கத்தின் முன்னுரை நடை கலக்கலான காமெடி நடை அருமை.

   நீக்கு
  3. வாங்க அண்ணா...
   தங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. கதை நன்றாக போய்கிட்டு இருக்கு....சடனா...ஸ்டாப்...ஆகிவிட்டதே.....ஹஹஹா....சாயங்கலாம் மீதியா...? ஒகே சகோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   காத்திருங்கள்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. //பேரழகியும் இல்லை, பேருக்கு அழகியும் இல்லை//

  ரசித்தேன்.

  .தொடருமா.... சரிதான்! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா
   ரசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. அதெல்லாம் சரிதான்..
  காதலர் தினத்துக்கு வாழ்த்து வேற சொல்லணுமா!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   மனைவியைக் காதலித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதால் இந்த வாழ்த்து.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா...

   நீக்கு
 5. வணக்கம்
  இரசனை மிக்க கதை காலம் உணர்ந்து கதை எழுதியமைக்கு வாழ்த்துக்கள்
  இனிய காதலர் தின வாழ்த்துக்கள் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. இதோ ஆவலுடன் அடுத்த பகுதிக்கு செல்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 7. ஆஹா முடிவு தெரிஞ்சுக்கலாம்னு பார்த்தா தொடரும்! .... தோ வந்துட்டே இருக்கேன் - அடுத்த பதிவுக்கு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. ம்ம்ம்ம் சரியான இடத்துல தொடரும்.....அங்க போறோம்....

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...