மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 ஜனவரி, 2023

மனசு பேசுகிறது : அபுதாபி பொங்கல் விழா

புதாபி கலீஃபா பூங்காவில் நேற்றுக் காலையில் இருந்து களைகட்டிய பொங்கல் விழாவுக்கு நாங்கள் - நான், பால்கரசு, ராஜாராம் - போன போது மதியம் மூன்று மணிக்கு மேலிருக்கும்.

அந்த நேரத்தில் மேடையில் குடும்பம் குடும்பமாக ஏறி ஆடிக் கொண்டிருந்தார்கள். 'சந்தைக்கு வந்த கிளி' பாட்டுக்கு ஒரு அம்மா கணவனையும் பிள்ளைகளையும் படுத்தி எடுத்தார். சரியாக ஆடவில்லை என்றால் மேடையிலேயே சண்டைக்கு வந்த கிளியாக மாறிடுவாரோன்னு அந்த ஆளும் இங்கிட்டும் அங்கிட்டுமா இடுப்பை ஆட்டினார்... கெரகத்தே.

அப்புறமும் ஆடல் பாடல் நீண்ட நேரம் நடந்தது, அதன் தொடர்ச்சியாய் குழந்தைகள், பெண்களின் நடனமும் அரங்கேறியது. நாங்கள் விழா நிகழ்விடத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மாட்டுக் கசாலையைப் பார்வை இட்டபடி செட்டிநாடு உணவக ஸ்டாலில் சாம்பார் சாதம் - நல்ல ருசி - வாங்கிச் சாப்பிட்டோம், நாங்கள் போனதும் சாப்பிட்டீங்களா... முதல்லயே வந்திருக்கலாமே என வருந்திய பிர்தோஷ் பாஷா சாம்பார் சாதத்துக்குப் பணம் வாங்காதீர்கள் எனச் சொன்னதால் அங்கிருந்த பெண்மணி பணம் வாங்கவில்லை.

ஐந்து பேருக்கு பிக் டிக்கெட் இலவசம் என்று சொன்னதும் அங்கும் போய் நம்ம ராசி தெரிந்தாலும் எழுதிக் கொடுத்துட்டு வந்தோம். அப்புறம் இன்னொரு குலுக்கலில் எல்லா விபரங்களும் எழுதி வாங்கினாலும் அதிலும் எழுதிக் கொடுத்து அவர்கள் இலவசமாகக் கொடுத்த காபி கோப்பையையும் பெற்றுக. கொண்டோம்.

விழாவுக்கு வந்திருந்த நட்புக்கள் ஜெஸிலா மேடம் குடும்பம், சிவசங்கரி வசந்த் குடும்பம், சாந்தி, முகம்மது பிர்தோஸ், சசி அண்ணன், அரவிந்த், தாமு, சுபான் அண்ணன் மற்றும் சிலரைச் சந்தித்து மகிழ்வாகப் பேசிச் சிரித்து எப்பவும் போல் வரலாறு முக்கியமெனப் போட்டோ எடுத்துக் கொண்ட தருணங்கள் சிறப்பு.

சசி அண்ணன் மற்றும் கணேஷ் ராமமூர்த்தி குழுவினரின் பொன் மாலைப் பொழுது நிகழ்வைப் பார்க்கும் எண்ணத்தில் காத்திருக்க, ஆரம்பிக்கும் நேரம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்க, பொன் மாலையில் பனிப் பொழிவும் ஆரம்பிக்க, குடும்பங்கள் கூட்டை நோக்கி நகர ஆரம்பித்தன.

ஊர்ல கூத்து ஆரம்பிக்கும் போது இருக்கும் கூட்டம் நடுநிசியில் கால்வாசியாக குறையும், அப்படியான ஒரு நேரத்தில் விழா மேடை பொன் மாலைப் பொழுது குழுவின் வசமானது. சசி அண்ணன் தோரணையாகப் பேச ஆரம்பித்தார், குளிர் உடம்பை அசைக்க ஆரம்பித்தது.

முதலில் 'மனதில் உறுதி வேண்டும்' எனப் பாரதியை நம் முன்னே நிறுத்த, ஸ்பீக்கருக்கும் உதறல் எடுத்தது... ஆடியோ சிஸ்டமும் எங்களுக்கு உதவ வேண்டுமென்ற வரியையும் இணைத்துக் கொண்டார் திரு.கணேஷ். அடுத்ததாய் 'ஏதேதோ எண்ணம். வளர்த்தேன்' பாடல் வர, அதன் கூடவே சிறப்பு விருந்தினர்களும் வந்தார்கள்.

சிறப்பு விருந்தினர் மேடையேற்றப்பட, அதுவரை தொகுத்து வழங்கிய டாக்டர்.ஸ்ரீரோகினி தன் வசமிருந்த மைக்கை ரோடியோ கில்லி ஆர்.ஜே. நிவேதாவிடம் கொடுத்தார். நகைச்சுவை என்ற பெயரில் ஏதோ அடிக்கடி சொன்னார், அதில் சுவை கொஞ்சமும் இல்லை. சிறப்பு விருந்தினரை வரவேற்றுப் பேசிய நண்பர் சதீஷின் பேச்சு சிறப்பாக இருந்தது. அரபிகள் சொன்ன வணக்கமும் , பொங்கலோ பொங்கலும் தித்திப்பு. விழா மேடையில் அனைவரும் கௌரவிக்கப்பட்டார்கள்.

அவர்கள் இறங்கிய பின் ஆர்.ஜே நிவேதா, அடுத்து பாட்டு வேணுமா... பரிசுக் குலுக்கல் வேணுமான்னு கேட்டார், பிரியாணி வேணுமா பிரிஞ்சால் சாதம் வேணுமான்னு கேட்டா பிரியாணின்னு சொல்ற மாதிரி பரிசுக்கு கூட்டம் பல மைல் கேக்கும் அளவுக்குக் கத்தியது. இரண்டு பாடல்கள் மட்டும் பாடிய நிலையில் மீண்டும் மேடை கிடைக்கும் எனக் காத்திருந்தவர்களின் மனநிலை அறியாத இக்கேள்வி சிறுபிள்ளைத்தனமானது. இதன் பின் பாடினால் விடிந்தும் வெட்டவெளியைப் பார்த்துக் கொண்டு மேயாத மானை விரட்டிக் கொண்டிருக்கும் முருகன் நிலைதான் ஏற்படும் என்பதால் இனி மீண்டும் மேடையேற விருப்பமில்லை என்பதைச் சொல்லி கிளம்பினார்கள். தனது அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து வந்தவர்கள் மனம் வருந்திச் செல்லக்கூடாதென பிர்தோஷ் அவர்களுடன் பேசி, அவர்களும் எந்த மனவருத்தமும் இல்லை என்பதாய் சிரித்து மகிழ்வாய் விடை பெற்ற போது நாங்களும் அங்கிருந்து கிளம்பினோம்.


விழாவில் என்னை மிகவும் கவர்ந்த மூன்று விஷங்கள்...

முதலாவது  'ஏதேதோ எண்ணம் வளர்த்து...' பாடல்தான்... என்ன அழகான குரல், குழந்தைகள் அவரைச் சுற்றி ஆடியதைப் பார்த்துச் சிரித்தபடி மிகவும் ரொம்ப அருமையாகப் பாடினார். வாழ்த்துகள். நமக்குத்தான் பொன் மாலைப் பொழுதைக் கேட்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போனது.

இரண்டாவது ரொம்பவே மொக்கை போட்ட ஆர்.ஜே நிவேதா, நாற்காலியில் ஏறி நின்று போட்டோ எடுக்க முயன்றவர் தவறி விழப்போக, 'பார்த்துங்க... விழுந்துடாதீங்க... நீங்க எடுத்த போட்டாவ நீங்க பார்க்க முடியாமப் போயிறாம...' எனச் சொன்னது. 'யோவ் போட்டோ எடுக்குறேன்னு போய்ச் சேர்ந்திடாதேய்யா...' என்பதன் மறுவடிவம்தான் அது என்றாலும் அந்த நேரத்தில் மிகச் சிறப்பான காமெடி.

மூன்றாவது எப்பவும் போல் சுபான் அண்ணனின் கதைகளும் பேச்சும்.

வாரம் முழுவதும் வேலை அழுத்தத்தில் இருப்போரை மகிழ்வாய் சங்கமிக்க வைத்த நல்லதொரு விழாவாய் அமைந்தது சிறப்பு. நிகழ்வுகளைச் சுருக்கியோ அல்லது இன்னும் சரியாகவோ செய்திருந்தால் பொன் மாலைப் பொழுது குழுவுக்கும் நேற்றைய நாள் மகிழ்வானதாய் இருந்திருக்கும், பிர்தோஷ் பாஷாவுக்கும் மனநிறைவாய் இருந்திருக்கும்.

படங்கள் : நண்பரின் முகநூல் பதிவிலிருந்து...
-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நிகழ்வு அருமை....