மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 21 பிப்ரவரி, 2022

சினிமா விமர்சனம் : கடைசி விவசாயி ( தமிழ் - 2022)

டைசி விவசாயி...

கிராமங்களில் சில நடக்கக் கூடாத விஷயங்கள் நடக்கும் போது கிராமத்துத் தெய்வங்களைக் கும்பிடாமல் போட்டு வைத்திருப்பதாலேயே இதெல்லாம் நடக்கிறது. முதலில் சாமியைக் கும்பிடணுமப்பா என்று சொல்வார்கள். அப்படித்தான் இதிலும் ஊருக்குள் இருக்கும் பெரிய மரம் பட்டுப் போனதன் பின்பு ஊருக்கு ஏதோ கெட்டது நடக்கப்போகிறது எனபதாய் கிராமத்துக் குலதெய்வத்தைக் கும்பிடணும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இந்தக் குலதெய்வக் கோவில் திருவிழா என்னும் போது நாலு ஊர், நாலு சாதி என்பது கட்டாயமாய் இருக்கும். அப்படியாக அந்தச் சாதிக்காரனைச் சேர்க்காதே, இந்தச் சாதிக்காரனைச் சேர்க்காதே என்பதெல்லாம் கூட்டங்களில் பேசுபொருளாகும். இங்கும் ஒரு ஊர்தான் திருவிழாவை முடிவு செய்கிறது. அப்போது சிலர் மற்ற சாதிக்காரர்களைச் சேர்க்க வேண்டாமெனச் சொல்லும் போது பெருசுகள் அதை அடக்கி, எல்லாரும்தான் கும்பிட வேண்டும் என்று சொல்லத் திருவிழா ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அது சில மாதங்களை எடுத்துக் கொள்ளும் வேலை என்பதையும் காட்டி விடுகிறார்கள்.
திருவிழாவில் குலதெய்வத்துக்குப் படைக்க நெல் பயிரிட்டுக் கொடுப்பவர், நிலத்தை விற்று யானை வாங்கி, அதை வைத்துச் சம்பாதிப்பதால் அந்த வேலை தனித்த மனிதனாய் மாடுகளை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தும் மாயாண்டியிடம் -நல்லாண்டி - விடப்படுகிறது. அதற்கான விவசாயத்தில் ஈடுபடும் அவருக்கு வேலை ஆட்கள் கிடைக்காமல் போக, தானே கிடந்து கஷ்டப்பட்டு உழைக்கிறார். அந்த விவசாயம் கரை சேர்ந்ததா என்பதுதான் கதை.

எங்கள் பகுதிகளில் எல்லாம் விவசாயம் நீர்த்துப் போய் பல வருடங்களாகிவிட்டது. வானம் பார்த்த பூமிதான் எங்கள் ஊர்... நல்ல மழை பெய்து கண்மாய் நிறைந்தால்தான் விளையும் என்பது தெரிந்திருந்தும் மழை பெய்து ஓரளவு கண்மாய் நிறையவும் மழை பெய்யும் விளையும் என்ற நம்பிக்கையுடன் வயலில் இறங்கி விடுவார்கள். சில சமயங்களில் வானம் பொய்த்துவிட, சாவியாகிப் போன நாற்றுக்களை மாடுகளை விட்டு அழித்துவிட்டு ரேசன் அரிசியில் புழுவைப் பொறுக்கி விட்டு சாப்பிட்டு நாட்களை நகர்த்துவார்கள். விவசாயம் செய்தவன் அதை விடுவது என்பது அவனது சாவுக்குச் சமம் என்பார்கள். இன்று பல ஊரிகளில் வயல்கள் எல்லாம் பயிர்களைப் பார்ப்பதை மறந்து தங்கள் எல்லைகளைக் கூட இழந்து விட்டன என்பதே உண்மை... அந்த மனிதர்கள் எல்லாம் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பதும் வேதனை.
கதைக்கு வருவோம்... கார்ப்பரேட் கையில் சிக்கியிருக்கும் விவசாயத்தைக் கதை நாயகன் போராடித் திரும்பப் பெறுவதாய் பல படங்களைப் பார்த்திருக்கும் நமக்கு இந்தப்படம் சற்றே அல்ல... மொத்தமாய் வித்தியாசமான களம். எதார்த்தமான காட்சிகளுடன் இன்றைய கிராமங்களின் அவலத்தை அப்படியே காட்சிப்படுத்துகின்றன.
கதை நாயகனான மாயாண்டி எதார்த்த மனிதனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரிடம் காட்சிகளை விளக்கி, இப்படி நடியுங்கள்... அப்படி நடியுங்கள் என்றெல்லால் சொல்லாமல் அவர் போக்கில் பேச, நடிக்க விட்டு கேமராவுக்குள் கொண்டு வந்திருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது, அப்படி ஒரு எதார்த்தம். பேசுவது கூட அவர் போக்கில்தான்.
கிராமங்களில் இருக்கும் பணக்கார முதலைகள் இடங்களை எல்லாம் வாங்கி, ஏதோ ஒரு தொழிற்சாலைக்கோ, கல்வி நிலையங்களுக்கோ அல்லது தோட்டத்திற்கோ அடித்தளமிட ஆரம்பித்து வருடங்களாகிவிட்டது. பல விவசாய நிலங்கள் எல்லாம் இப்போது அப்படித்தான் ஆகிவிட்டன. பெரும்பாலும் பணம் கொழிக்கும் கல்வி நிலையங்கள்தான் எங்கள் பக்கமெல்லாம் விவசாய நிலங்களில் வளர்ந்து நிற்கின்றன. குறிப்பாக இஞ்சினியரிங் கல்லூரிகள். அப்படித்தான் இடங்களை ஆட்டையைப் போடும் உள்ளூரில் வட்டிக்குக் கொடுக்கும் ஆசாமிகளிடம் மாயாண்டி நிலம் கொடுக்க மறுக்க, அவரை ஒரு பிரச்சினையில் மாட்டி விடுகிறார்கள். அந்தப் பிரச்சினையே அவரின் விவசாயத்தையும் பாதிக்கிறது. இதுதானே காலங்காலமாக நடப்பது இல்லையா..?
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பதென்பது இன்று அரிதாகிவிட்டது. அப்படியே வேலைக்கு வந்தாலும் மொத்தமாய் மனச்சாட்சிப்படி நாலு மணி நேரம் கூட வேலை பார்ப்பதில்லை... எல்லாரையும் கூடிக் கதை பேசும் நூறுநாள் வேலைத்திட்டம் கெடுத்து வைத்து விட்டது என்பதுதான் உண்மை. அதையும் போகிற போக்கில் சாடியிருக்கிறார் இயக்குநர்.
பணமுள்ளவன் மனிதனை அடித்துப் புதைத்தாலும் அவன் மீது நம் சட்டம் பாய்வதில்லை... இல்லாதவன் மனிதாபிமானத்தோடு இறந்த விலங்குகளையும் பறவைகளையும் புதைத்தால் கூட இருக்க சட்டமெல்லாம் இறுக்கிப் பிடித்துக் கொள்ளும்... சில நேரங்களில் கொல்லும். அப்படியான மனிதாபிமானச் செயலே அவரை கோர்ட் வாசலில் நிறுத்துகிறது.
'செத்துக்கெடந்தா ஊருல சொல்லியிருக்கலாமுல்ல... நீயா ஏன் புதைச்சே...' என்ற கேள்விக்கு, மரம் பட்டுப்போனதுக்கே ஊரு மக்க நிம்மதி இழந்து கெடக்காக, இதுல மயிலு செத்துக் கெடந்துச்சுன்னு சொன்னா... அதான் நானே பொதச்சிட்டேன்... மொத்தம் மூனு... ஒரு ஆணு, ரெண்டு பொண்ணு... ஆணை நடுவுலயும் ரெண்டு பக்கமும் பொண்ணையும் பொதச்சேன்...' என்று வெள்ளந்தியாய் சொல்லும் மனிதனை காவல்துறை தன் பசிக்காகத் தூக்கி உள்ளே வைப்பது சினிமாக் காட்சி என்று கடந்து போய்விட முடியாது. இது எங்கோ ஒரு இடத்தில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதேபோல் மயிலுக்காக இங்க வச்சிப் பேசுறவங்க செத்துக்கெடந்த நாயையும் பொதச்சிருக்கேன் அதுக்கும் ஒருதாப் பேசிருங்க என்பது எதார்த்தம்.
குற்றவாளியாய் நிற்கும் இடத்தில் கூட வயலுக்குத் தண்ணி பாய்ச்சணும்... இல்லேன்னா பயிரு காஞ்சி போயிரும்... விதையும் உயிர்தானே... தண்ணி பாய்ச்சலைன்னா ஆயிரம் நெல்லைக் கொன்னது மாதிரித்தானே என்று சொல்வதெல்லாம் விவசாயிக்கே உரிய குணம்... அது எதையும் எதிர்பார்க்காது... விதை நெல்லை தண்ணிக்குள் வைத்ததில் இருந்து புது நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதுவரை அவனது உலகம் வயலும் பயிரும்தான்... அதோடு பேசுவான்... கதை சொல்வான்... காதலிப்பான்... அதைக் கொஞ்சுவான்... இன்னும் இன்னுமாய் வயலோடும் மாடுகளோடும் உறவாடுவான். இன்று விவசாயம் செத்துப் போன நிலையில் அந்தத் தலைமுறையும் தடுமாறித்தான் கிடக்கிறது மாயாண்டியைப் போல.
படத்தில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் அந்த ஊர் மனிதர்கள்தான்... இதுவரை கேமராவைப் பார்க்காதவர்கள். அதனால் அவர்கள் நடிப்பில் அவ்வப்போது நாடகத் தன்மை தெரிந்தாலும் அவரவர் பங்கைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். அவர்களின் நக்கலான பேச்சுக்கள் படத்துக்கு உயிர் என்றாலும் அவர்கள் வசனம் பேசுவதை இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்... பல இடங்களில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியவில்லை.
நீதிபதியாக வரும் ரேச்சல் ரெபேக்கா அருமையாக நடித்துள்ளார். காவலர்களை விட்டு விளாசும் போது இப்படி ஒரு நீதிபதி இருந்தால் அப்பாவி விவசாயிகள் மீது போடப்பட்ட பல பொய் வழக்குகளில் நல்ல தீர்வு கிடைத்திருக்கும் என்றே தோன்றியது. சிறப்பான நடிப்பு.
விஜய் சேதுபதிக்கு தான் கட்டிக்க இருந்தவளின் இறப்புக்குப் பின் அவள் நினைவோடு பைத்தியக்காரனாய் வலம் வரும் கதாபாத்திரம், கதையில் பயணிக்கும் மயிலுக்கும் இவருக்கும் தொடர்ப்புபடுத்தி நகரும் கதை என்றாலும் மாயாண்டி என்னும் மனிதரின் பின்னே நகரும் நமக்கு வி.சேயின் கதை படத்தில் இல்லை என்றாலும் பெரிய மாற்றம் தெரியப் போவதில்லை... ஏனென்றால் அக்கதாபாத்திரம் கதையையோ அல்லது மாயாண்டியின் சிறை வாழ்க்கையையோ மாற்றம் செய்ய வரவில்லை. அரசியல் பேசுறேன் என்று தனது நடிப்பைக் காணாமல் அடித்து வி.சே. படமா..? என நம்மை ஓட வைத்தவர் இதில் வி.சேக்கிட்ட இன்னமும் உயிர்ப்புடன் கூடிய நடிப்பு இருக்குய்யா என்று சொல்லும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார்.
அதேபோல்தான் யோகிபாவும்... யானையைப் பாகன் நடாத்திச் செல்ல, இவரும் கூடவே நடந்து கொண்டு சில வசனங்களைப் பேசிக் கொண்டு திரிகிறார், அவ்வளவே. விவசாயத்துக்குச் செலவு செய்து கடைசியில் ஒண்ணுமில்லாமப் போறதவிட, அந்த நிலத்தை வித்துவிட்டு யானை வாங்கி நாலு ஊருக்குப் போய், அதை வைத்துச் சம்பாதித்து வயிற்றை நிரப்பலாம் என்று சொல்ல வருகிறார்கள். இது சினிமாவுக்குச் சரியாக இருக்கலாம். இருக்கும் வறுமையில் மாட்டைக் கட்டி வைத்தே பார்க்க முடியாதென நினைக்கும் மனிதர்கள் மத்தியில் கிராமத்தில் யானையைக் கட்டி வைத்துச் சோறு போடுவதெல்லாம் நடக்காத காரியம். இவரின் கதாபாத்திரமும் கதைக்குச் சம்பந்தமில்லாததுதான். வி.சே மற்றும் யோ.பா. சினிமாவை மக்களிடம் கொண்டு செல்வதற்கெனப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
இப்ப விதையில்லாப் பழங்களும் காய்களும் சந்தையில் விற்பனைக்கு வருவதையும் மாயாண்டி மூலமாகவே சாடியிருப்பது சிறப்பு. விதையில்லைன்னா அவனுக்கு மட்டும் விதை எப்படிக் கிடைத்திருக்கும் என்பதும் இதைக் கண்டுபிடிச்சவனுக்கு ஒரு பய பொறந்து அவனுக்கு கொட்டை இல்லாம இருந்தா அப்பத் தெரியும் என்பதும் சாட்டையடி வசனங்கள்.
படத்தில் சொட்டையில் முடி முளைக்க வைக்க நினைப்பவர், சீயான் சீயான் என மாயாண்டி பின்னால் திரியும் இளைஞன், அந்தக் குட்டைப் பெண், ஏட்டு என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் குறைகள் இல்லையா என்றால் இருக்கத்தான் செய்கிறது, மேலே சொன்னது போல் வசன உச்சரிப்பு, கேமராவைப் பார்த்தல் போன்றவற்றுடன் இன்னும் சிலவும் இருக்கின்றன. போலீஸ்காரரை மாயாண்டியின் விவசாய நிலத்தில் வேலை பார்க்கச் சொல்லிட்டாங்க ஜட்ஜம்மா என கிராமத்தில் பேசாமல் இருந்திருப்பார்களா என்ன... மாயாண்டி வயர்மேன் எனப் போலீசை சொன்னது கூட ஏற்க்கக் கூடியதுதான், ஆனால் மாட்டை விரட்டச் சொல்லும் பெண் ஆட்டோக்காரர் என்பதெல்லாம் வலிந்து திணித்ததுதான். அதேபோல் ஆரம்பத்தில் வி.சே. ஒருவனை அடிக்குமிடத்தில் போடப்படும் முருகன் பாட்டு கேசட்டில் ஒலிக்கும் போது 'கொடைக்கானலுக்குப் பில்கேட்ஸ் வந்திருக்கிறார்' என்ற செய்தி வருவது எப்படி..? மாயாண்டி ஆரம்பத்தில் பேசுமிடங்களில் காது கேக்கலை என்று சொல்வதில்லை... ஆனால் கோர்ட் காட்சிகளின் போது சத்தமாகப் பேசினாலும் அவருக்குக் கேட்பதில்லை என சில இருந்தாலும் மணிகண்டன் நிறைவான படத்தைக் கொடுத்திருக்கிறார். அதுவும் சாதியை வைத்துக் கல்லாக்கட்டும் இளம் இயக்குநர்கள் மத்தியில் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அடிப்படையாய் வைத்துப் படமெடுப்பது சிறப்பு... மணிகண்டன் இன்னும் உயரத்துக்குப் போவார்.
கிராமங்களில் கூட்டம் என்றால், குறிப்பாகத் தென் தமிழகத்தில் ஆண்கள் மட்டும்தான் கலந்து கொள்வார்கள்... ஆண்களில்லாத வீட்டுப் பெண்கள் வந்து அமர்ந்திருக்கலாம். பசங்க வரவே கூடாது என்பத்தான் உண்மை. படத்தில் பெண்கள் மட்டுமின்றி சிறுவர்களும் வந்திருப்பதுடன் சரிக்குச் சமமாகப் பேசுகிறார்கள். ஒருவேளை மணிகண்டன் பார்த்த கிராமத்தில் இப்படியும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நேற்று நண்பர்கள் இருவர் இந்தப்படத்தைப் பற்றி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விவாதித்தார்கள். இருவரும் இருவிதமான கருத்துக்களைத்தான் பேசினார்கள் என்றாலும் வாழை விற்பனை, ஒரே மாதிரியான பயிர் என அவர்கள் பேசியதெல்லாம் உண்மையே. தனது மகிழ்ச்சிக்காக, பொழுது போக்குக்காக விவசாயம் செய்பவனுக்கும்... தன் ஆத்மார்த்தமான உழைப்பைக் கொடுத்து அது மட்டுமே தனக்கான வாழ்க்கை என்று வாழ்பவனுக்கும் செய்யும் விவசாயத்தில் நிறைய வித்தியாசமிருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கே மாயாண்டி விவசாயத்தை ஆத்மார்த்தமாய் செய்யும் மனிதராய்...
விவசாயம் செத்துத்தான் போய்க் கொண்டிருக்கிறது... அதை இல்லை என்று சொல்ல முடியாது... கார்ப்பரேட் கையிலோ அல்லது உள்ளூர் களவாணிகளின் கைகளிலோ மாட்டி விளைநிலங்கள் எல்லாம் சிமெண்ட் காடுகளாகின்றன. சமீபத்தில் பலர் மொத்தமாய் இடம் வாங்கி தோட்டமாக்குவது சற்றே மகிழ்வான விஷயம்.
நல்லாண்டி அவர்கள் வாழ்ந்து விட்டு படம் வெளிவரும் போது இவ்வுலகைவிட்டுப் போய்விட்டார் என்றாலும் மாயாண்டி என்னும் விவசாயியை எல்லார் மனதிலும் நிறுத்திவிட்டுப் போயிருக்கிறார்.
கடைசி விவசாயியை எல்லாரும் கட்டாயம் பார்க்க வேண்டும். அகண்டா போன்ற படங்களை ஆந்திராவில் கிராமங்களில் திரையிட்டதைப் போல இந்தப் படத்தையும் கிராம மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும். ஒற்றை வயல் பச்சையுடன் சுற்றிலும் காய்ந்து போயிருக்கும் வயல்கள் எல்லாம் பயிர்களால் நிரம்பும் காலம் மீண்டு(ம்) வர வேண்டும்.
படத்தை இயக்கியதுடன் தயாரிப்பும், ஒளிப்பதிவும் எம்.மணிகண்டன், கிராமத்து மனிதர்களையும் உடைந்த வீடுகளையும் அப்படியே உள்வாங்கியிருப்பது சிறப்பு. மணிகண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் நம்மையும் ஈர்த்துக் கொள்கின்றன. தோட்டாத் தரணியின் கலை இயக்கம் அழகு... அஜித்குமாரின் எடிட்டிங்கும் சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வியின் இசையும் படத்துக்குப் பலம்.
கடைசி விவசாயியைப் பார்க்கத் தவறாதீர்கள்... இந்தப் படத்தை கொடுத்த மணிகண்டனை வாழ்த்துங்கள்.
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவசியம் பார்ப்போம்... ஆழ்ந்த விமர்சனம்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான விமர்சனம். பாராட்டுகள் குமார்.