மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 10 பிப்ரவரி, 2022

சினிமா விமர்சனம் : நரை எழுதும் சுயசரிதம்

ரை எழுதும் சுயசரிதம்...

ஒரு மனிதனின் சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது, அதுவும் வீட்டிலும் ஆபீசிலும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையோடு வாழும் மனிதனுக்கு இப்படியானால் அவன் போய்ச் சேருமிடம் டாஸ்மார்க் என்பதைத்தானே நாம் ஆண்டாண்டு காலமாய் சினிமாவில் பார்த்து வருகிறோம். இதிலும் வீட்டிலும் அலுவலகத்திலும் தனக்கு ஏற்படும் அவமானங்களால் வெறுத்துப் போய் குடித்துவிட்டு வண்டி ஓட்டிக் கொண்டு வரும் பணிக்காலம் ஒரு வருடம் இருக்கும் போதே கணிப்பொறியின் வருகையால் வேலை இழந்த வைத்தியநாதன் (டெல்லிகணேஷ்), வேலை கிடைக்காமல் வறுமையால் மற்றவர்களால் கேவலமாகப் பார்க்கப்படும் இளைஞன் மணிகண்டன் மீது மோத, அதன் பிறகான நாட்கள் இருக்கும் இடையில் ஒரு நெருக்கமான நட்பை ஏற்படுத்துகிறது. இந்த நட்பின் முடிவு என்னாவாக இருக்கும் என்பதைச் சொல்லும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, ஒன்னறை மணி நேரமே ஓடக்கூடிய இப்படம்.


டெல்லி கணேஷ்க்கு இரண்டு மகன்கள் வேலைக்குப் போகும் பெரியவனுக்கு வீட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, அதற்காக அப்பாவிடம் வங்கிக் கடன் குறித்து ஆரம்பக் காட்சியில் பேசுகிறான். சின்னவனோ படித்துக் கொண்டிருக்கிறான், எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை, அதேபோல் இங்கே வைக்காதே என்றால் அங்கே  வைக்கும் குணாதிசயம் கொண்டவன். அப்பாவுக்குப் பிடிக்காத மகன். இவனுக்கு கத்திக் கொண்டிருப்பதே அவரின் வேலையாகவும் இருக்கிறது.

மருமகளைப் பொறுத்தவரை அந்த வீட்டில் ஒரு மனுசி, அவ்வளவுதான் என்றாலும் பள்ளிக்கு அனுப்ப மகளைக் கிளப்பும் போது கடுகடுவெனத் திட்டுவது, மாமனாரை வேலை வாங்குவது என அவர் பங்குக்கு சிலதைச் செய்கிறார்.

மனைவிக்கு எப்போதும் கணவன் மீது அக்கறை என்றாலும் மகன்களின் முன்னே அடக்கித்தான் வாசிக்கிறார். கணவனால் திட்டப்படும் போதும் கணவனைக் குறித்து மகன்கள் சொல்லும் போதும் அழுவதை நன்றாகச் செய்திருக்கிறார்.

ஆரம்பத்தில் ஐயாவின் கத்தல்களால் அவரைப் பிடிக்காமல் இருக்கும் பேத்திக்கு, பணி ஓய்வுக்குப் பின் ஐயாவின் செயல்களால் அவர் மீது ஒட்டுதல் ஏற்பட, ஐயாவுடன் மிகவும் நெருக்கமாகி விடுகிறாள். பேத்தியாக நடித்த சிறுமியின் சின்னச் சின்ன சேட்டைகள் கூட ரசிக்க வைத்தன. எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் அந்தக் குழந்தை உட்கார்ந்து செய்யும் சேட்டைகளையே நான் ரசித்தேன். அழகு.

வேலை இல்லாதவனை டீக்கடைக்காரன் கூட கேவலமாத்தான் பார்ப்பான் என்பதையும், வேலை இல்லாதவனின் நிலமை இப்படியானதுதான் என்பதையும் மணிகண்டன் சிறப்பாகவே செய்திருக்கிறார். அதுவும் முடிவெட்டி, தாடியை எடுத்துவிட்டு வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்லுமிடத்தில் கலக்கலாய் நடித்திருப்பார். படம் முழுவதும் அவர் வரும் காட்சிகளில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் டெல்லிகணேஷ்... மனுசனுக்கு நடிக்கவா சொல்லித் தரணும்... தாத்தா உனக்குப் பைத்தியமாமே..? எனப் பேத்தி கேட்கும் இடத்தில் முகம் கழுவியபடி அவர் பார்க்கும் அந்தப் பார்வை, இல்லை நீ போ எனச் சொல்லும் போது முகத்தில் காட்டும் பாவனை என மனுசன் அடித்து ஆடிவிட்டார்.

அதேபோல் குடிகாரனாய் அவர் பல சினிமாக்களில் செய்த சேட்டைகளை நாம் பார்த்திருக்கும் என்பதால் அவர் அசல் குடிகாரனாகவே நடிப்பார் என்பது நமக்குத் தெரியும். இதிலும் குடித்துவிட்டு ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வருவதும், மணிகண்டன் மீது மோதியபின் அவர் நடந்து கொள்ளும் விதமும் சிறப்பு.

தன்னை யாரும் மதிக்கலை என்ற நிலையில் எல்லாம் வெறுத்துப் போன ஒரு பெரியவருக்கு வாழ்வின் எதார்த்தத்தை ஒரு இளைஞன் புரிய வைக்கும் போது அந்தப் பெரிய மனுசனும் மனதளவில் இளைஞன் ஆகிறான் என்பதையும் அவன் மனசுக்குள் மகிழ்ச்சி பூ எல்லா வேலையிலும் பூக்க ஆரம்பிக்கும் என்பதையும் சொல்லும் படம்தான் இது.

பிள்ளைகள் தன்னைப் பைத்தியம் என முத்திரை குத்தியபின் டெல்லிகணேஷ் என்ன மாதிரியான முடிவை எடுக்கிறார் என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி, மன நிறைவான காட்சியாய் அமைந்திருப்பது மகிழ்ச்சி.

'ஓட ஓட ஓடத் தூரம் குறையல' பாடலைக் கேட்கும் மகனைத் திட்டும் டெல்லிகணேஷ், அதே பாடலைச் சத்தமாய் வைத்துக் கேட்பதும், பாடலைப் பாடிக் கொண்டே நடனமாடியபடி நடப்பதும், சண்டையால் பேசாத மனைவியிடம் பேசுவதற்காகவே இந்தப் புடவை எப்ப எடுத்தே எனக் கேட்டு அவளின் பதிலுக்குச் சிரிப்பதும் எனக் கலக்கி எடுத்திருக்கிறார்.

கட்டாய ஓய்வெனக் கவலையில் வருபவரிடம் ஆஹா நாளைக்கு ஓய்வுக்கு விழா எடுப்பாங்களே, எந்தப் புடவை கட்டுவது என மனைவியும்... இனி வங்கிக் கடனுக்கு அலைய வேண்டாம் அதான் இவருக்குப் பணம் வருமே அதிலிருந்து கட்டிக்கலாம் என மூத்தவனும், அலுவலகத்தில் எல்லாமே டேட்டாதான் எனப் புதிதாக வந்தவனும் பேசுவதெல்லாம் ஒரு ஓய்வு பெற்றவனை எப்படித் தாக்கும் என்பதை தன் முகத்தில் காட்டியிருக்கிறார் டெல்லிகணேஷ்.

இதே ஓட ஓட பாடலை தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு மணிகண்டன் சொல்வதும், டீக்கடையில் ஓசி / கடன் டீ எனும்போது டீக்கிளாஸை வைப்பதையும் காசு கொடுத்து வாங்கும்போது டீக்கிளாஸை வைப்பதையும் ஒப்பிட்டு மணிகண்டன் பேசும் வசனம் நச்.

இங்கே வேலை இல்லாதவனையும் ரவுடியையும் காதலிப்பது என்பது எப்பவும் நிகழ்வதுதான். இதிலும் மணிகண்டன் மீது ஒரு பெண்ணுக்கும் அவள் மீது இவருக்கும் சொல்லப்படாத காதல், நீ வேலை வாங்கினால் உன் காதல் சேரும் என டெல்லிகணேஷ் சொல்வதும், அதேபோல் வேலை கிடைத்ததும் அந்தப் பெண்ணைப் பேருந்தில் பார்ப்பதும் சினிமாத்தனம், இந்தக் கதைக்குத் தேவையில்லாததாய்த்தான் தெரிந்தது.

ரசித்துப் பார்க்க வைக்கும் காட்சியமைப்புகள், மணிகண்டன் மற்றும் டெல்லிகணேஷின் எதார்த்தமான நடிப்பு என படம் மிகவும் அருமையாக, எல்லாரும் பார்க்கும் படமாக வந்திருக்கிறது. ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் இழுவை என்பது பலரின் கருத்து அதுவும் உண்மையே என்றாலும் அதன்பின்னான படம் மிகவும் நேர்த்தியாகப் பயணிக்கிறது.

மணிகண்டன் சினிமாத்துறைக்கு வந்து சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 2012-2014 காலகட்டத்தில் மிகச் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டு பல சினிமா விழாக்களில் பரிசுகளைப் பெற்ற படம், இப்பொழுது சோனி லைப் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

ஆதவன், மிர்ச்சி விஜய், ஆர்.ஜே.சிவசங்கரி, பிரவீண் ராஜா, ராக்கெண்டு மொலி, ஷோபனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

ஜி அண்ட் கே நிறுவனத்துக்காக ஷஷாங்க் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார் மணிகண்டன். இவர் நடித்த சமீபத்திய படங்கள் வெற்றிப்படங்களாய் அமைந்ததுடன் தனிப்பட்ட முறையில் மணிகண்டனின் நடிப்பும் பேசப்பட்டது. இவருக்குள் இருக்கும் நடிகனை எழுத்தாளன் பின்தள்ளி, நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்தால் மிகச் சிறப்பான படங்களைத் தருவார் என்று நம்பலாம். இல்லை இயக்குநர்கள் நடிகரான பாதை என்றாலும் மணிகண்டன் நல்லதொரு நடிகராக மிளிர்வார் என்பதில் சந்தேகமில்லை.

நரை எழுதும் சுயசரிதம்... அழகியல், ஆத்மார்த்தமான அன்பு.

பாருங்கள்... உங்களுக்கும் பிடித்துப் போகும்.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசனையான விமர்சனம் அருமை... OTT-ல் வருகிறதா குமார்...?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம். யூ வில் இருந்தால் பார்க்கிறேன். நன்றி குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

விமர்சனம் படித்ததும் பார்க்கத் தோன்றினாலும் சோனி ஓடிடி என்னிடம் கிடையாது!  எங்காவது கிடைத்தால் பார்க்க வேண்டும்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அண்ணா.

தமிழ்யோகி, தமிழ்கண் போன்ற தளங்களில் இருக்கிறது.

யூடிப்பில் இருப்பது போல் தெரியவில்லை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படம் விமர்சனம் இப்போதுதான் பானுக்கா தளத்தில் வாசித்து வந்தேன் அங்கு ஸ்ரீராமும் வெங்கட்ஜியும் சொல்லிருந்தாங்க நீங்களும் விமர்சனம் போட்டிருக்கீங்கன்னு எப்படி மிஸ் பண்ணினேன் தெரியல

தலைப்பெ வித்தியாசம். ஈர்க்கிறது. வந்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டதா...விமர்சனம் நல்லாருக்கு. வாய்ப்பு கிடைத்தால்தான் பார்க்க முடியும்.

கீதா