மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 14 பிப்ரவரி, 2022

மனசு பேசுகிறது : மகிழ்வான சந்திப்பு

ன்னைப் பொறுத்தவரை பெரும்பாலான சந்திப்புக்கள் மனநிறைவையும் மகிழ்வையும் தரும், அப்படியானதொரு சந்திப்பு இன்றைய பொழுதைச் சிறப்பாக்கியது.


அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் கானல் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து புத்தகங்கள் குறித்த பதிவைப் பகிர்ந்து வரும் சகோதரர் முகம்மது பிர்தோஷ், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே தொடர்பு கொண்டு நாம் சந்திக்கலாம் என்றார். அருகில்தான் இருக்கிறார் என்றாலும் அலுவலக வேலை, விடுமுறை நாளில் ஏதாவதொரு வேலை எனத் தள்ளிக் கொண்டே போனது. இருவரும் போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம்.

அப்படித் தள்ளிப் போனதும் நல்லதுதான் என்பது போல, 'அண்ணே பிர்தோஷைப் பார்க்க நானும் வாறேன்' என்று சொன்ன ராஜாராம், முஸாபாவில் இருந்து பேருந்தில் - எங்களைத் தனது காரில் எல்லா இடங்களும் அழைத்துச் செல்லும் பால்கரசு விடுமுறையில் ஊருக்குப் போயிருக்கிறார் - வந்து சேர, காலை டிபனை முடித்துக் கொண்டு பிர்தோஷிடம் அவரின் அறை இருக்கும் இடம் கேட்டுப் போனோம். நாங்க வர்றோமுன்னு கட்டிடத்தின் கீழே காத்திருந்திருப்பார் போல, அருகில் போய் போன் பண்ணினதும் விரைந்து வந்து 'எங்க அறையில் யாருமில்லை வாங்க... அங்கே போய் உட்கார்ந்து பேசலாம்' என அழைத்துச் சென்றார். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான்... இன்று வெளியில் காலநிலை அவ்வளவு சிறப்பாக இல்லை... குளிர் அதிகமாக இருந்தது. அதுவும் சும்மாவே ஓமிக்கிரான் வந்துச்சா வரலையான்னு தெரியாமலே இருமல் ஒரு மாதமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கு. இதில் வெளியில் அமர்ந்திருந்தால் இன்று சாய்த்திருக்கும்.

நல்லதொரு அறை, அவரின் வாசிப்புக்கும் எழுத்துக்கும் எந்தவித தொந்தரவும் இல்லாத ஒரு அறை. எங்களை அமரச் சொல்லி எதிரே அமர்ந்தவர் பேச ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது அவரின் வாசிப்பின் வீரியம். மனுசன் சைவ, வைணவ விழாக்கள், அழகர்கோவிலில் இருக்கும் சிலைகள், மனதர்களின் மனநிலை, ஒவ்வொரு மனிதனின் மனசுக்குள்ளும் இருக்கும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, பிரபஞ்சனின் கதைகள், வேல ராமமூர்த்தி, அ.முத்துலிங்கம், டால்ஸ்டாய், ஜெயமோகன், கு.அழகிரிசாமி என அடித்து ஆடினார்.

இவ்வளவுக்கும் 'நான் நாவல்களை வாசிக்க ஆரம்பித்தது இப்போதுதான், கதையோட்டத்தோடு பயணிப்பது எனக்கு வராது... இப்போதுதான் அப்படிப் பயணிக்க ஆரம்பிக்கிறேன்' என்று சொன்னவர் பல சிறுகதைகள், நாவல்கள் குறித்து விரிவாகப் பேசியதுடன் மனதர்களைப் புரிந்து கொள்ளுதல் என்பதைப் பற்றி நிறையவே பேசினார். பல குழுக்களில் இணைந்து அவர்கள் சொல்லும் புத்தகங்களை கிண்டில் மூலம் வாசிக்கிறார். வாசிப்பு என்பதே அவரின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பது மகிழ்வான விஷயம்.

அவர் ஒரு பக்கம் வாசிப்பின் வீச்சை சிக்ஸராக அடித்துக் கொண்டிருக்க, ராஜாராம் தனது பங்கிற்கு புத்தகங்கள் குறித்தும் கதைகள் குறித்தும் பேசியதுடன் இளையராஜா, பாலாஜி அண்ணன் பற்றியெல்லாம் இடையிடையே பேசி, பிர்தோஷ் பாஷா மற்றும் கௌசர் இங்கு செய்யும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சமூக சேவைகள், அமீரக எழுத்தாளர் குழுமத்தின் செயல்பாடுகள் என மற்றொரு பக்கம் அடித்து ஆடிக் கொண்டிருந்தார்.

நான் எப்பவும் போல் அவ்வப்போது பேசியதுடன் இருவரின் பேச்சையும் கேட்டுக் கொண்டிருந்தேன். நிறைய விஷயங்களைத் தெரிந்த ஒரு சகோதரருடன் நட்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. என்னைப் போலவே ராஜாராமுக்கும் நிறைவான சந்திப்பாக அமைந்ததுடன் நல்ல நட்புக் கிடைத்த சந்தோசம்.

எங்கள் அறையில் பிரியாணியை வாங்கி வைத்துக் கொண்டு காத்திருந்ததால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு மேல் போய்க்கொண்டிருந்த பேச்சை இடையில் நிறுத்தி, இன்னுமொரு நாள் தொடரலாம் என்று சொல்லித்தான் கிளம்பினோம். அவருக்கு எங்களை அனுப்ப மனசில்லை என்பது தெரிந்தது என்றாலும் ஒரே நாளில் பேசி தீர்த்துவிட முடியாது, பிர்தோஷை பேசவிட்டு இன்னும் நிறையக் கேட்க வேண்டும்.

அவர் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் பேசலாம்... நிறைய விஷயங்களை அவரிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

நான் மட்டும் போயிருந்தால் இவ்வளவு நேரம் பேசியிருப்போமா தெரியாது... ராஜாராம் வந்ததே சிறப்பு... என்னை என்னதான் எழுத்தாளன்னு அவங்க சொன்னாலும் - கவனிக்க நான் எங்கும் சொல்லிக் கொள்வதில்லை - இரண்டு வாசிப்புப் புலிகள் சந்தித்துக் கொண்டபோது அங்கே பல வரலாறு, ஆன்மீகம், சுயசரிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள் எனப் பல புத்தகங்கள் என்னைச் சுற்றி நகர்ந்து கொண்டிருக்க, நான் அவற்றை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன் ஒரு பார்வையாளனாக, அவர்களின் பேச்சின் ரசிகனாக என்பதே உண்மை.

பிர்தோஷைப் பொறுத்தவரை வேலை முடிந்து அறைக்குப் போனால் வாசிப்புத்தான் போல, எவ்வளவு வாசித்து வைத்திருக்கிறார். அதுவும் வருடங்களைக்கூட சரியாகச் சொல்லிப் பேசும் போது நாமெல்லாம் வாசிப்பு விசயத்தில் இன்னும் தள்ளித்தான் நிற்கிறோம் என்றே தோன்றியது. நாவல், சிறுகதைகள், கட்டுரை மட்டுமே வாசிப்பல்ல, அவரைப் போல் நிறையத் தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதற்கான நேரம் கிடைப்பதெல்லாம் கடினம் என்பதே என்னளவில் உண்மை. ஒரு கதைக்கான தேடலைக்கூட இன்னும் முடிக்காமல் அப்படியேதான் போட்டு வைத்திருக்கிறேன்.

இந்த எழுத்து எனக்கு நிறைய நட்புக்களைக் கொடுத்திருக்கிறது. பிர்தோஷை இதற்கு முன் பார்த்ததில்லை, நேரே வந்து 'வாங்கண்ணே' என அழைத்தபோது உண்மையிலேயே மகிழ்வாக இருந்தது. அதைவிட அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது நேரம் போனதே தெரியாத அளவுக்குப் பேசிக்கொண்டிருந்தது வியப்பளித்தது. அவரின் பக்கத்தில் அவர் சொல்லியிருப்பது போல் அவர்தான் அதிகம் பேசினார் என்றாலும் எல்லாமே தெரிந்து கொள்ளக் கூடியவை என்பதால் ஆசிரியர் முன் மாணவனாய் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம் தப்பில்லை. நாங்கள் அதையே செய்தோம்.

படிக்கும் காலத்தில் இருந்தே நட்புக்கள் எனக்கு அதிகம்தான்... அம்மாவுக்கு சைக்கிள் டிரைவராய் ஊரில் இருந்து தேவகோட்டைக்கு அதிகம் அழைத்துச் சென்றவன் நான்தான் என்பதால், அப்படி அழைத்துச் செல்லும் போது எதிரே வரும் நட்புக்கள் - பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் - கை தூக்கி வணக்கம் சொல்ல, நானும் எதிர் வணக்கம் சொல்லியபடி சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்துக் கொண்டே வரும் அம்மா, என்ன இருக்கோ இல்லையோ தம்பிக்கு ஊருக்கு பழக்கம் மட்டும் நிறைய இருக்கு, சைக்கிள்ல போனா எதுக்க வர்றவனெல்லாம் கையைத் தூக்கிட்டுத்தான் போறான் என்று சொல்வதுண்டு... அது போல்தான் இங்கும் எனக்கு என் எழுத்து பரந்த நட்பைக் கொடுத்திருக்கிறது. அப்படி ஒரு அன்பான நட்பை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி, அதுவும் ராஜாராமுடன் சென்று சந்தித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பாலாஜி அண்ணனும் பிர்தோஷிடம் பேசினார். பிர்தோஷைப் பொறுத்தவரை தன்னை எந்த ஒரு வட்டத்துக்குள் நிறுத்திக் கொள்ளாமல் இருக்கிறார், வாசிப்பின் எல்லையை விரித்துக் கொண்டே போகிறார். எழுதுவதாய் சொன்னார், அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்.

ரொம்ப நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததால் நானெல்லாம் அங்கிட்டு இங்கிட்டு அசைஞ்சிக்கிட்டு காலை மடக்கி ஷோபாவில் வைத்தெல்லாம் உட்கார்ந்து கொண்டேன். எங்களுக்கு எதிரே ஒரு சிறிய நாற்காலியில் அமர்ந்த மனுசனுக்கு உடம்பு வலி வராதா என்ன, காலைத் தூக்கி இன்னொரு கால் மீது வைத்துக் கொண்டவர், உங்க முன்னாடி கால் மேல் கால் போடலாமா...? என்று கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது... அடப்பாவி அம்புட்டு டெரராவாக உக்காந்திருக்கிறோம்... ஷோபாவுல சமூக இடைவெளி விட்டு ரெண்டு பேரும் ஆளுக்கொரு மூலையில சாஞ்சி கெடக்கோம் எங்களப் பார்த்து இந்தக் கேள்வியான்னு சிரிக்கவும் அவர் கால்மேல் கால் போட்டுக் கொண்டு தனது உரையைத் தொடர்ந்தார்.

பேசும்போது ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார்... யாரிடம் புத்தகம் வாங்கினாலும் திருப்பிக் கொடுக்க மாட்டேன். வேணுமின்னா பண்டமாற்று முறையில் வேறு புத்தகம் கொடுப்பேன் என்றார். நான் கூட என்னோட புத்தகங்களை வாசிக்கக் கொடுப்போமுன்னு நெனச்சேன்... நமக்கிட்ட இருக்கதே ஒண்ணு... வேணான்டா கைப்புள்ளன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். பிடிஎப் வேணுமின்னா கொடுக்கலாம் என்று முடிவை அவர் வீட்டிலேயே எடுத்துவிட்டேன். :)

நல்லதொரு சந்திப்பு... தொடரட்டும்... இன்னும் பேசுவோம்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான சந்திப்பு தொடரட்டும்....

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு சந்திப்பு.  //யாரிடமும் புத்தகம் வாங்கினால் திருப்பிக்கொடுக்கமாட்டேன்... // 

ஹா..  ஹா..  ஹா...   நல்ல கொள்கை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மகிழ்வான சந்திப்பு குமார்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் நல்ல சந்திப்பு அதுவும் பரந்து விரிந்த நட்பு என்பது மிக நல்ல விஷயம். அம்மாவுக்கு உங்களைப் பற்றித் தெரிந்து என்ன ஒரு சந்தோஷம் அடைஞ்சிருக்காங்க இல்லையா!!

ஆஅ என்னது யாரிடமும் புத்தகம் வாங்கினால் திருப்பிக் கொடுக்க மாட்டேன்!!// ஹாஹாஹாஹா

அப்ப நீங்க பிடிஎஃப் அனுப்பறதுதான் நல்லது!!!!!! ஹாஹாஹா

ஆனால் நல்ல நண்பர்!! உங்களுக்கு ஏற்ப!

கீதா