மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

சினிமா விமர்சனம் : ஹிருதயம் (மலையாளம் - 2022)

திவுக்குள் செல்லும் முன்...

தென்னரசு சிறுகதைப் போட்டியில் எனது கதையும் இருக்கு. கதை அவ்வளவு நல்லாவெல்லாம் இருக்காது... சாதாரணக் கதைதான், அதனால் படிச்சாலும் படிக்காட்டியும், பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கீழிருக்கும் லிங்கைத் தட்டி, நாளைக்குள் ஒரு லைக்கையும் தட்டி விடுங்க... நன்றி.

எங்கே அவள்..? 

******

ஹிருதயம் ...

கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் ஒருவன் குடும்பம் குழந்தை என்றாகும் வரையான காலத்தை - கிட்டத்தட்ட 10 வருடங்கள் - ரெண்டு மணி நேரம் நாற்பத்தாறு நிமிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் பார்த்த படங்கள் எல்லாமே இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு மேல்தான்... ஏன் இத்தனை நீளமான படங்களாய் வருகின்றன என்பது தெரியவில்லை என்றாலும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தைத் தின்று விடாமல் நம்மையும் கல்லூரி, அதற்குப் பின்னான வாழ்க்கை, திருமணம் என மனதிற்குள் அசைபோட்டபடி பார்க்க வைத்ததில் ஜெயித்திருக்கிறது ஹிருதயம்.
எப்பவும் எழும் வியப்புத்தான் இப்போதும்... இந்த மலையாளிகளுக்கு மட்டும் எப்படி இப்படியான கதைகள் கிடைக்கின்றன. சின்ன ஒரு கதையை இவ்வளவு விரிவாக எடுக்கும் போது ஜெயிக்க முடியுமா என்ற சிந்தனையை விட்டுவிட்டு ஜெயிப்போம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கி ஜெயித்திருக்கிறார் வினீத் ஸ்ரீனிவாசன். கதைக்கான நடிகர்கள் தேர்வும் சிறப்பு.
சென்னையில் இருக்கும் கே.சி.டெக் கல்லூரியில் இஞ்சினியரிங் படிக்க வருகிறார் அருண் நீலகண்டன் -பிரணவ் மோகன்லால் - அவருடன் அதே இரயிலில் வந்து, மிகவும் நெருக்கமான நண்பனாக இறுதிவரை இருக்கிறார் அந்தோணி தாடிக்காரன் - அஷ்வத் லால், இவர்தான் காதல் முறிவுக்கும், தடம் மாறிய அருண் திருந்தி, ஜெயிப்பதற்கும் காரணமாக இருக்கிறார்.
கல்லூரி வாழ்க்கை எப்படியிருக்கும்..?
ஆரம்பத்தில் ராக்கிங், அப்புறம் காதல், பின்னே அடிதடி, அப்படியே காதல் முறிவு, அதனால் குடி, அரியர் இல்லாத மனுசன் அரை மனுசன் என்ற கோட்பாட்டின் படி அரியர் இப்படியாகத்தானே நகரும். அப்படித்தான் அருணுக்கும் நடக்கிறது. அதிலிருந்து மீண்டு வந்து படிப்பை முடித்து வெளி உலகத்துக்குள் பயணிக்கிறார். அங்கு எப்படி ஜெயிக்கிறார் என்பதையும் காட்டி, அவரின் திருமணம், குழந்தை வரை பயணிக்கும் படம் அதே கல்லூரிக்குள் வந்து முடிகிறது.
கல்லூரியில் இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர்களைப் பார்த்து அடிக்கச் சொல்லும் சல்யூட், நாங்கள் கல்லூரிக்குப் போனபோது யுனிவர்சிட்டி சல்யூட் என்று ஒன்றை அடிக்க வைத்ததை நினைவில் கொண்டு வந்து சிறு புன்னகை அரும்ப வைத்தது.
கல்லூரியில் தர்ஷனாவை - தர்ஷனா ராஜேந்திரன் - காதலிக்கும் அருண், அதற்காக இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் அடி, உதையெல்லாம் வாங்குகிறார். அந்த அடி உதையே காதலை இறுக்கமாக்குகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் விழும் சின்னக்கீறல் காதலை முறித்துப் போடுகிறது. அதன்பின் நட்பாய் தொடரும் பயணத்தில் அருணின் திருமணத்துக்கு முந்தைய இரவிலும், தர்ஷனாவின் திருமணத்துக்கு முந்தைய இரவிலும் எங்கே தர்ஷனாவை வில்லி ஆக்கிவிடுவாரோ ஸ்ரீனிவாசன் என்ற பயமே எனக்குள் இருந்தது - ஏன்னா தர்ஷனாவின் சின்னச் சின்ன வெளிப்பாடுகள், அதாங்க எக்ஸ்பிரசன்ஸ் அவ்வளவு அழகாக இருக்கும். எனக்கு இவரை ரொம்பவே பிடிக்கும் - என்றாலும் அப்படியெல்லாம் சிந்திக்கவில்லை என்பதே ஆறுதலான விஷயம்.
கல்லூரி முடிந்தபின் வேலை என அங்கும் இங்கும் சுற்றிவிட்டு மனநிறைவில்லாத வேலையை விட்டுவிட்டு, திருமணப் புகைப்படக் கலைஞரான ஜிம்மியுடன் - அஜூ வர்கீஸ் - இணைந்து திருமணப் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து, அதன்பின் கொஞ்சப் பேர் மட்டும் கலந்து கொள்ளும் திருமணங்களில் மட்டும் புகைப்படம் எடுத்தால் வெற்றி பெறலாம் என வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து, அப்படியே ஆரம்பித்து பெரிய அளவில் வளர்ச்சி அடைகிறான் அருண். அது போன்றதொரு திருமண நிகழ்வில் சந்திக்கும் நித்யா பாலகோபாலை - கல்யாணி பிரியதர்ஷன் - தோழியாக்கிப் பின் மனைவியாக்கிக் கொள்கிறான்.
காதல் முறிவுக்குப் பின்னும் தர்ஷனாவுடன் தொடரும் நட்பு, கணவனின் கல்லூரிக் காதல் தெரிந்த பின் அதை கல்யாணி எதிர்கொள்ளும் விதம் என கதை எந்த இடத்திலும் சறுக்கி விடாமல் மிக அழகாக நகர்கிறது. தர்ஷனா தன் காதல் வலிகளை கண்களால் கவிதை ஆக்கி நம்மைக் கொல்கிறார் என்றால் கணவன் மீதான தன் காதலை அழகிய சிறுகதை போல் நம் முன்னே படைக்கிறார் கல்யாணி.
தடம் மாறிப் போன அருண், வீட்டுக்குப் போன போது அவன் சரியில்லை என அம்மா சொன்னதும் அப்பா, மகனுடன் தனியே போய் பேசுவதும் அப்போது நீ தண்ணி அடிக்கிறியா என்று கேட்பதும், அதன்பின் 'உன்னை ஒரு முறை கட்டித் தழுவிக் கொள்ளவா' எனக் கேட்பதும் அப்பாவுக்கு மகன் மீதான நேசத்தை போகிற போக்கில் எடுத்துச் சொல்லிவிடுகிறது. அதன் பின்தான் தன் தவறை உணர்ந்து எல்லாம் துறந்து மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறான். அதற்காக தன் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்குபவனும் தனது நண்பனுமான செல்வா வீட்டிற்குச் செல்கிறான். அந்த இடம் எப்படியானது என்பதை படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு தர்ஷனாவும் வர, முறிந்த காதல் நட்பாகத் துளிர்க்க ஆரம்பிக்கிறது.
தமிழனான செல்வாவின் கதாபாத்திரம் மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது... அவனின் முடிவும் அதன் பின்னான வலிகளும் வாழ்க்கையும் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது.
தர்ஷனாவை வெறுப்பேற்றுகிறேன் என மாயாவை - அன்னு அந்தோணி - விரும்புவது போல் நடிக்கிறான், அவள் துயரத்தில் இருக்கும் போது உதவுகிறான். அவள் மீது அவனுக்கு காதல் இல்லை என்றாலும் அவளைப் பொறுத்தவரை காதலில் விழுந்து, அதுவும் ஒரு மழை இரவில் மரித்துப் போக, வேறொருவனைத் திருமணம் செய்து கொண்டு போய்விடுகிறாள்.
தர்ஷனா காதலை மறக்க முடியாமல் தன் வருத்தத்தை, வலியை இறக்கி வைக்கும் இடத்தில் நம் மனம் கனக்கச் செய்து விடுகிறார். அருணுக்குப் பெண்கள் தலைமுடியைப் பின்னாமல் விட்டிருப்பது பிடிக்கும்... அவனின் காதல் கூட அப்படித்தான் மலர்கிறது... இறுதியில் தான் படித்த கல்லூரியில் மனைவியை அப்படி வரச்சொல்ல, உங்கப்பனுக்குப் பைத்தியமோடா என மகனிடம் சொல்லிவிட்டு, அவன் விருப்பப்படி முடியை அவிழ்த்து விடுகிறாள். தர்ஷனாவின் சுருள்முடி அழகென்றால் கல்யாணியின் குட்டை முடியும் அழகுதான்.

கல்லூரியில் இருக்கும் இரகசிய சந்து - Secret Alley -என்னும் இடத்தை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு ஒருநாள் மட்டுமே திறந்து விடுவார்கள். அப்படியான ஒரு நாளில் நண்பர்கள் எழுதுவதை வேடிக்கை பார்க்கும் அருண், படத்தின் இறுதிக் காட்சியில் தன் கல்லூரிக்குப் போய் பழைய நினைவுகளில் மூழ்கிப் பின் அந்த அறைச் சாவியை வாங்கி உள்ளே போய் என்னை நானாக மாற்றியதற்கு நன்றி என எழுதிச் செல்கிறான்.
நாம் பார்த்த பெரும்பாலான காதல் படங்களில் வில்லன்கள் காதலை வாழ விடமாட்டார்கள். இங்கே வில்லன் எனத் தனியாக யாருமில்லை என்றாலும் அவர்களே வில்லானாகி, காலத்தின் பாதையில் பக்குவப்பட்டு நல்ல நண்பர்களாகவும் மாறிப் போகிறார்கள். இப்படியாக முறிந்த காதல்கள், சொல்லாத காதல்கள் எல்லாம் நட்பாய் தொடர்வது எத்தனை மகிழ்வான விஷயம்.
ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சில இடங்களில் மோகன்லாலைப் பார்ப்பது போல் இருந்தாலும் பிரணவ் கல்லூரி இளைஞன் முதல் குடும்பஸ்தனாய் மாறுவது வரை சிறப்பாகச் செய்திருக்கிறார். தர்ஷனாவுக்கே அதிகக் காட்சிகள் இருந்தாலும் கல்யாணி வரும் கொஞ்ச நேரத்தில் மனைவியாய் மனம் கவர்வதால்தான் படத்தின் விளம்பரங்களில் அவருக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள் போலும். ப்ரோ டாடியிலும் கல்யாணி நன்றாக நடித்திருப்பார். கல்யாணியும் தர்ஷனாவும் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகள்தான்... விரைவில் தமிழிலும் அப்படியே ஆகக் கூடும் என்றே தோன்றுகிறது.
படத்தின் கதை மற்றும் இயக்கம் வினீத் ஸ்ரீனிவாசன் - அவ்வப்போது படங்களில் நடித்தாலும் மிகச் சிறந்த படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களில் இவரும் ஒருவர் என்பதை நாம் அறிவோம், இந்தப் படத்திலும் ஜெயித்து தான் வெற்றி இயக்குநர்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். வாழ்த்துகள்.
மேரிலாண்ட் சினிமாஸ் மற்றும் பிக் பாங் என்டர்டெயிண்மெண்ட்ஸ்க்காக இப்படத்தை விஷாக் சுப்பிரமணியம் தயாரித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் விஸ்வஜித் சென்னையை அத்தனை அழகாகக் காட்டியிருக்கிறார். அடியாட்களும் ரவுடிகளும் ஓடும் வடசென்னை போன்றதொரு இடத்தை அழகாக, அமைதியாகக் காட்டிருயிருப்பது சிறப்பு. அதேபோல் ரஞ்சன் ஆபிரகாமின் எடிட்டிங்கும் அருமை.
படத்துக்கு இசை ஹேஸம் அப்துல் வகாப், பின்னணி இசை வருடலாய்... பாடல்கள் அனைத்தும் அருமை, அதிலும் ஒனக்க முந்திரியை விட தர்ஷனா செம. தமிழ் மற்றும் இந்தியில் தலா ஒரு பாடல் இருக்கிறது. தமிழர்களைக் கலாய்க்கும் மலையாளப் படங்களைப் பார்த்த நமக்கு மலையாளிகளைக் கலாய்க்கும் சுய எள்ளல் இதில் உண்டு. அதிலும் மலையாளிக்கு ஆங்கிலம் வராது என்பதையும் அதை ஒரு சண்டையின் முடிவில் நகைச்சுவையாய் காட்டியிருப்பதும் சிறப்பு.
படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. திரையிடப்பட்ட திரையரங்குகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.
இன்னுமொரு முறை பார்க்கத் தூண்டும் படமாய் வந்திருக்கும் ஹிருதயம் உங்கள் இதயத்தையும் கவரும்.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Anuprem சொன்னது…

தங்களின் வரிகளே படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது ...

கதையும் வாசித்தேன் திக் திக் நிமிடங்கள் ...

ஸ்ரீராம். சொன்னது…

மகான் கூட இரண்டேமுக்கால் மணிநேரப்படம்தான்!  அந்த நேர அளவுதான் பயமுறுத்துகிறது.  அதாவது தமிழ்.  இது மணியாளம் என்றால் கால்வாசிதான் புரியும்.  ஒரு பொழுதுபோகாத லீவு நாளில் பார்க்கவேண்டும்!

ஸ்ரீராம். சொன்னது…

ஆ...   திரையரங்கில் மட்டும்தான் ரிலீசா?  ஓ டீ டீ யில் இல்லையா?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்று பார்க்கலாம் என்றுள்ளோம்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் நாங்கள் கதைக்கு அங்கு கமென்ட் கொடுத்தாச்சு.

நன்றாக இருக்கிறது.

ஹ்ருதயம் படம் பற்றி உங்கள் விமர்சனம் நல்லாருக்கு.

கீதா

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படம் விமர்சனம் சிறப்பு. பிள்ளைகள் வரும் போது பார்க்க வேண்டும். ஆம் வினீத் ஸ்‌ரீனிவாசன் நன்றாக எடுக்கிறார்.

உங்கள் கதையும் யதார்த்தத்தைச் சொன்ன விதம் நன்றாக இருக்கிறது

வாழ்த்துகள்.

துளசிதரன்