மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 13 மே, 2021

நாயாட்டும் ஜாதி அரசியலும்

நாயாட்டு...

காவலர்களால் பாதிக்கப்பட்டவர்களைத்தான் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்... அதேபோல் அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்ட காவலர்களை மிஞ்சிமிஞ்சிப் போனால் வேறொரு துறைக்கு மாற்றுவார்கள்... அதையும் பார்த்திருக்கிறோம்... மற்றபடி காவல்துறையில் இருக்கிறார் என்றால் அவர்களின் அடாவடிச் செயல்களை வைத்து மிகப்பெரிய பலம் பொருந்திய மனிதர்களாகத்தான் நாம் நினைத்திருக்கிறோம்.. இதில் சாதி அரசியலுக்குப் பழியாகும் மூன்று காவலர்கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.


தமிழைவிட உள்ளதை உள்ளபடி எடுப்பதில் மலையாளச் சினிமா எப்போதுமே உயரத்தில்தான் இருக்கிறது. அதைப் பேச ஒரு தைரியம் வேண்டும்... அது தமிழ்ச் சினிமாவுக்கு எப்போதும் இருப்பதில்லை... உடனே மலையாளத்தைத் தூக்கி தமிழைத் தாக்குவதாக நினைத்து விட வேண்டாம்... எதார்த்த உண்மை என்பது இதுதான்... நாம் இன்னமும் மாஸ் காட்டுகிறேன் என உப்புச்சப்பில்லாத கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறுக்கமுடியாது... எப்போதாவது நல்ல சினிமா வரும் என்பதை வேண்டுமானால் சொல்லலாம்.

சமீபத்திய புது இயக்குநர்களில் வரவால் தமிழ்ச் சினிமாவுக்குள் சாதி புகுந்து சதிராட்டம் போடுகிறது. தலித் சினிமாக்கள் எனச் சொல்லி அவர்களைப் படிக்காதே... திருப்பி அடிக்கப் பழகிக்கொள் அல்லது அடித்துக் கொல் எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அம்மக்கள் பாதிக்கப்படவில்லையா... கொடுமை அனுபவிக்கவில்லையா என எல்லாரும் கூவிக்கூவிப் பேசுகிறோம்... அனுபவித்தார்கள்தான்... நிறையவே அனுபவித்தார்கள் அது அன்று... இன்றைய நிலையில் நன்கு படித்து மிகப்பெரிய பதவிகளில் எல்லாம் அவர்கள்தான் இருக்கிறார்கள்... இப்படியான சூழலில் வளரும் இளைஞர்கள் கையில் இருக்கும் புத்தகத்தைப் பறித்து விட்டு கத்தியைக் கொடுக்காமல் ஓயமாட்டார்கள் போல நம் புதிய சிந்தனை இயக்குநர்கள்.

அதுவும் குறிப்பாக தலித்தைப் பற்றிப் பேசும் படங்களில் அவர்களின் வீரதீரச் செயல்களை மட்டும் சொல்லும் படங்களை நாம் கொண்டாட வேண்டும். நீ அவர்களைப் பற்றி எடுத்துட்டியா அப்ப நான் இன்னொரு கோணத்தில் என் சாதியை வைத்து எடுக்கிறேன் என யாரேனும் வந்தால் அந்த இயக்குநரை நாம் எல்லாரும் சேர்ந்து சாட்டை எடுத்து அடித்து விரட்ட முயற்சிக்கிறோம்... காலா, கபாலி எனச் சா'தீ'யம் பேசியதால்தான் 'திரௌபதி'கள் வந்தார்கள்... ஆனால் முன்னதை வைத்துக் கொண்டாடிய நாம் திரௌபதியை தீயில் இறக்க வலைத்தளங்களில் வரிந்து கட்டிக் கொண்டு ஆடினோம்... காலாக்களும் வேண்டாம் திரௌபதிகளும் வேண்டாமென யாரும் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டோம் ஏனென்றால் நாமெல்லாம் சாதிக்குள் ஊறியவர்கள்... 

மலையாளச் சினிமாவைப் பொறுத்தவரை இந்த மதமென்றில்லை எல்லாத்தையும் சாடிச் சினிமா எடுக்கிறார்கள்... படத்துக்கான எதிர்ப்பு என்பது எப்போதும் இருப்பதில்லை... காரணம் சினிமா என்பது அங்கே பொழுது போக்கு... இந்தப் படம் முடிந்தால் அடுத்த படம் எனக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்... நம்மைப் பொறுத்தவரை சினிமா என்பது சாதி அரசியல்... அதைக் கடக்க மாட்டோம்... கடக்க நினைப்பவனையும் விட மாட்டோம்.

மலையாளச் சினிமாவில் இருக்கும் மத, சாதி அரசியல்களை நாம்தான் அக்குவேர் ஆணி வேராய் ஆராய்வோம்... சாமிகளுக்கு கழிவுத்தண்ணியைக் கொடுத்தாடா என ஒரு இந்தியன் கிச்சனைக் கொண்டாடிய நாம்தான் பிரியாணியைப் பற்றிப் பேசவே யோசித்தோம்... சாமியார்களைக் கிழிச்சித் தொங்கவிட்டுட்டான்டா எனப் பெருமை பேசிய நாம் குறிப்பிட்ட படங்களைப் பற்றி வாய் திறப்பதில்லை... மலையாள சினிமாக்களை மலையாளிகள் கொண்டாடியதைவிட சாதி, மதம் பார்த்து நாம்தான் கொண்டாடித் தீர்க்கிறோம்... அது நாயாட்டு வரை நீளத்தான் செய்கிறது.

நாயாட்டு எப்படிப்பட்ட படம்...? 

அது பேசும் கதை என்ன...? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் பலர் கொண்டாட, சிலர் எப்பவும் போல் வசைபாட, நான் மிகவும் விரும்பும் மிகச் சிறந்த எழுத்து ஆளுமை ஒருவர் அது குறித்து எழுதிய பதிவில் தலித்தைக் குற்றம் சொல்லும் படம்... இது சங்கி மங்கி எடுத்த படம்... யாரோ ஒரு மேல்சாதிக்காரன் தன் அரிப்பைச் சொறிந்து கொள்ள தலித்தை வைத்துப் படமெடுத்திருக்கிறான் என்றெல்லாம் எழுதி வைத்திருந்தார். அப்படிப் பார்க்கப் போனால் இங்கே தலித் சினிமா எனச் சொல்லிக் கொண்டு சாதிவெறியை ஊட்டிக் கொண்டிருக்கும் படங்களைப் பற்றி அவர் ஏன் பேசுவதில்லை... அவரைப் பொறுத்தவரை தமிழில் வரும் தலித் சினிமாக்கள் காவியம்... மலையாளத்தில் அப்படி ஒரு அரசியலைப் பேசினால் அது தரங்கெட்ட சினிமா... அரிப்பைச் சொறிய எடுத்த படம். அப்படியானால் இந்தியன் கிச்சனும், ட்ரான்ஸும் அப்படியான ஒரு படம்தானே அதை ஏன் இவர் கொண்டாடினார்..? 

இம்மனநிலை எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இதுதான் தலித் அரசியல். இந்த மனநிலைதான் மாற வேண்டும்... சா'தீ'ய அடிப்படையிலான, உன் சாதியே பெரிது... அவனை நீ அடக்கு அல்லது அடித்துக் கொல் எனச் சொல்லிக் கொடுக்கும் சினிமாக்கள் எதுவாகினும் அதை எதிர்க்க வேண்டும்... அதை மக்கள் பார்க்கக் கூடாது... கொண்டாடக் கூடாது. நம்மைப் பொறுத்தவரை ஒரு போதும் அப்படிச் செய்ய மாட்டோம்... அதில் நடித்த நடிகனுக்குப் பாலாபிஷேகம் செய்து தீமிதிப்போம்... அவன் கோடிகளை வாங்கிக் கொண்டு அடுத்த படத்தில் அடுத்த சாதிக்காரனாய் வசனம் பேசப்போய் விடுவான். திமிறி அடி... படிக்காதே... என் பின்னே வாளெடுத்து நில் எனச் சொல்லிக் கொடுக்கும் படங்களை வாயாரப் புகழ்ந்து தள்ளுவதில் தமிழனைவிட கேடுகெட்ட பிறவி வேறெங்கும் இல்லை எனலாம்.

கர்ணன் வந்தபோது இணையத்தில் கொண்டாடித் தீர்த்த உடன்பிறப்புகள், மாரி செல்வராஜை எவரெஸ்ட்டில் ஏற்றி வைத்து மகிழ்ந்தார்கள்... கொடியன்குளம் சம்பவத்தை வைத்து தாறுமாறாய் ஒரு படம் எனக் குதித்தார்கள். வருடத்தில் வைத்த மாற்றம் இரண்டொருநாளில் தெரிய வர, அப்படியே மாற்றிப் பேசி, அதே மாரியைத் தூக்கி கடலில் வீசினார்கள். அந்தப் படம் பேசிய அரசியல் அந்த மக்களின் தீராத வேதனை... வலி என்றாலும் தொன்னூறுகளில் நடந்த ஒரு நிகழ்வின் சுவட்டை அதிகம் அறியாத, தங்கள் அடிமைத்தனத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிற இன்றைய தலைமுறையின் கையில் இருக்கும் புத்தகத்தைப் பிடிங்கி எறியும் ஒரு அப்பட்டமான சாதியைத் திணிக்க நினைக்கும் படம்தான் அது. தனுஷை எனக்கு ரொம்பப் பிடிக்கும்... அவரின் மொக்கைப் படத்தைக்கூட பலதடவை பார்ப்பவன் என்றாலும் கர்ணனை இதுவரை பார்க்கவில்லை. தேவர்மகனில் கடைசிவரை சாதியம் பேசிவிட்டு, அதற்காக வெட்டுக்குத்து எனக் கிடந்துவிட்டு இறுதியில் பிள்ளைகளைப் படிக்க வைங்கடா என ஒருவரி வசனமாவது வைத்தார்கள். தனுஷ் கூட இதற்கு முன் வந்த படத்தில் சிவசாமியாய் படிப்புத்தான் முக்கியம் எனச் சொன்னார்... ஆனால் இதில் அப்படி எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.

தலித் மட்டுமே இன்று வரை பாதிக்கப்படுகிறான் என்பதெல்லாம் பக்கா அரசியல்... ஒவ்வொரு சாதியிலும் இந்த ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. ஏழை பணக்காரன் இருக்கிறான்... இருப்பவன் இல்லாதவனை அடிக்கிறான்... பாதிப்புக்கள் தொடரத்தான் செய்கிறது... மேல்தட்டு கீழ்த்தட்டை எப்போதும் தட்டியே வைக்க நினைக்கிறது. தலித்துகள் என்று சொல்வது கூட தவறுதான் என்றாலும் அவர்களால் பாதிக்கப்பட்ட, பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் சாதிகள் இங்கே ஏராளம்... அதையெல்லாம் நாம் யாரும் பேசமாட்டோம்... பேசக்கூடாது... இன்ன சாதிப்பெண்ணை லவ் பண்ணித் தூக்கு நானிருக்கிறேன் உன்னைக் காக்க என சாதிக்கட்சித் தலைவர்களே சொல்கிறார்கள். இது இன்னமும் எங்கள் மாவட்டத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்ணைத் தூக்கி காவல் நிலையம் போனதும் அவர்கள் ஒரு குழுவாக வந்து விடுவார்கள். அந்தப் பெண் பெற்றோரை எதிரியாக்கும்... அவர்கள் வாழ பண்ட பாத்திரம், பணமெல்லாம் அந்த அரசியல்வாதியினால் கொடுக்கப்படும்... இது எவ்வளவு நாளைக்கு..? சில மாதத்துக்கான செலவுக்கு மட்டுமே... அதன் பின் சிலர் மட்டுமே காதலுடன் வாழ்கிறார்கள்.. பலர் வாழ்வை இழந்து வக்கத்துப் போய் வழி தெரியாமல் தவிக்கிறார்கள். சில குடும்பங்களே மகளின் நிலையைப் பார்த்து வருந்தி ஏற்றுக் கொள்ளும்... பல குடும்பங்கள் சாகட்டும் என விட்டு விடும்... அவனுக்கும் சாதி வெறி இருக்குமுல்ல... நானே எங்கள் உறவிலும் அருகிலும் பலரைப் பார்த்திருக்கிறேன்... இந்த அரசியல் தென்மாவட்டங்களில் இல்லை என்று சொல்லமுடியுமா..?

பாதிப்புக்களைப் பேசினால் அது யாரால் யாருக்கு அதிகமென எல்லாவற்றையும் பேச வேண்டும்... ஆனால் நாம் அதையெல்லாம் எப்போதும் பேசுவதில்லை... ஒரு பக்கம் மட்டுமே கொடி பிடிக்கிறோம்... மறுபக்கத்தைப் பற்றி எப்போதும் சிந்திப்பதில்லை... இவன் மட்டுமே பாதிக்கப்படுகிறான்... மற்றவனெல்லாம் இவனைச் சிதைக்கிறான் என்பது மட்டுமே நம் எண்ணம்... அதே பார்வையைத்தான் திரையிலும் கொண்டு வருகிறோம்... கொண்டாட வைக்கிறோம்... இதனால் ஏற்படும் தீங்கு என்ன என்பதை நாம் உணராமல் இல்லை... அத்தீங்கு நடக்க வேண்டும் என்பதுதான் நம் ஆசையும் கூட.

நாயாட்டுவில் ஒரு தலித் இளைஞன் காவல் நிலையத்தில் நடந்து கொள்ளும் முறை தமிழகத்தில் இல்லை என்று சொல்ல யாராலும் முடியாது... இதுதான் எதார்த்தம்... இந்த எதார்த்தம் எல்லாச் சாதிக்காரனிடமும் இருக்கத்தான் செய்கிறது... அரசியல்வாதி கொடுக்கும் சலுகையால் இவர்களிடம் கொஞ்சம் கூடுதலாய் அவ்வளவே. அவனால் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்று காவலரில் பெண் காவலர் அவன் சார்ந்த அதே சமூகம்தான்... மற்றொருவரின் வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது அவரும் அதேயாகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இவர்களின் சண்டைக்குப் பின் ஒரு விபத்து... அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளில் வாக்குக்காக அரசியல்வாதிகள் செய்யும் செயல்கள்... அது துரத்தும் அந்த மூன்று காவலர்கள்... அவர்களின் ஓட்டம்... துயரமான முடிவு என படம் பயணிக்கிறது... இன்றைய வாக்கு அரசியலை கண் முன்னே காட்டுகிறது... பாவப்பட்ட மக்கள் மட்டுமில்லை அரசு இயந்திரத்தின் முக்கியமான காவல்துறையில் இருப்பவர்களும் இந்த அரசியலுக்கு விதிவிலக்கல்ல என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

மலையாளச் சினிமாக்களில் தமிழனை பாண்டி என ஒரு கதாபாத்திரமாக வைத்துக் கேலி செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்... இதில் கூட காவல்துறை அதிகாரியாக வரும் பெண், தமிழனையும் பிடிச்சி விசாரிக்கிறோம் என்பார் என்றாலும் அந்தத் தமிழன் மூவருக்கும் அடைக்கலம் கொடுப்பவனாய் காட்டியிருப்பது சற்றே மகிழ்வான செயல்தான்.

முடிவு என்னவாகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்பதாய்  முடித்திருக்கும் படத்தில் ஒரே சாதியினராய் பாதிக்கப்பட்டவரையும் பாதிப்பை ஏற்படுத்துபவர்களையும் காட்டி இருப்பது பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவாக இருக்கலாம் என்றாலும் இது போன்ற படங்களை தமிழ்ச்சினிமாவில் எடுக்கவும் மாட்டோம்... அப்படியே எடுத்தாலும் வெளிவர விடவும் மாட்டோம்... ஒருவேளை இதையெல்லாம் மீறி திரைக்கு வந்தால் கொடி பிடிப்போம்... திரையரங்கை உடைப்போம்... அரசியல்வாதிகள் முன்னிற்க போராட்டம் செய்வோம்... நமக்கு சாதி முக்கியமோ இல்லையோ தமிழக அரசியல்வாதிகளுக்கு அது ரொம்ப  முக்கியம் என்பதை எல்லாரும் உணர்ந்தே இருக்கிறோம் இல்லையா..? எங்களுக்கு கல்லூரி வேண்டும் என அவர்களின் பிரதிநிதியாக வருபவர் கேட்பதாய் ஒரு வசனம் வரும்... உண்மையில் நல்ல வசனமிது... அடித்துக் கொல்லடா என அந்த மனிதர் சொல்லவே இல்லை... தலித் அரசியல் செய்கிறார் அவ்வளவே.

என்ன மயிரு சாதி... எல்லாரும் மனிதர்களே... அடிச்சிக்கிட்டு என்ன செய்யப்போறோம்... நாம சாக அவன் வாழ்வான் என்று நினைத்துச் சாதியை, சாதியப் படங்களை, சாதி அரசியலைத் தள்ளி வைத்து எல்லாரும் ஒன்றானால் மாற்றம் வரும்... ஆனால் அந்த மாற்றம் எப்போதும் வரக்கூடாது என்பதற்காகத்தான் அரசியல்வாதி சாதிப் பிரச்சினையைத் தூண்டிவிட்டு, படிக்காதே திமிறி அடி என தன்னைச் சார்ந்திருக்கும் இயக்குநர்களால் சொல்ல வைக்கிறான்... சினிமா இங்கே மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் கருவி... அதன் வழி சொல்லும் போது அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும். கொடியன்குளத்தை நாமே மறந்திருந்தாலும் புண்ணை நோண்டும் குரங்காய் படங்களில் மீண்டும் மீண்டும் காட்டி மக்களை சாதி வெறிக்குள் தள்ளுவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் இயக்குநர்களின் வரவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல... சாதி மதம் கடந்து வாழ நினைக்கும் மனிதர்களுக்கும் கேடு... இப்படியான சாதிப்படங்கள் எடுப்பவர்களை ஓடஓட விரட்ட வேண்டும்.

நமக்கெல்லாம் படிக்கும் காலத்தில் இருந்து இந்தச் சாதி அரசியல் தெரியாது... நான் சாப்பிட்டுப் படுத்து உறங்கியதெல்லாம் பாதிக்கப்பட்டவன் நீ... திமிறி அடி எனத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாய் காட்டிக் கொண்டு அவர்களை வைத்துப் பிழைத்து தங்கள் அரிப்பைச் சொறிந்து கொள்ளும் அரசியல், சினிமா வியாதிகள் சொல்லும் அதே 'தலித்' நண்பனின் வீட்டில்தான். இதுவரை எங்களுக்குள் சாதி புகுந்து சிரிக்கவில்லை... சில மனவருத்தங்களால் பேசுவது குறைந்தாலும் இன்றும் ரோட்டில் பார்த்தும் 'அப்பா' என அன்னை ஓடிவந்து கட்டிப் பிடிக்கத்தான் செய்கிறார்... எந்த சாதி அழுக்கும் எங்களுக்குள் ஒட்டிக்கொள்ளவில்லை... ஒட்டவும் செய்யாது. இதை இங்கு நான் சொல்லக் காரணம் இந்த பதிவு ஏதோ தலித்துக்கு எதிராய் மாற்றுச் சாதிக்காரனின் எழுத்தாய் உங்களால் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காககத்தான்... நான் சா'தீ'யத்துக்குத்தான் எதிரானவன்... என்னைச் சூழ்ந்திருக்கும் நட்புகள் இன்ன சாதியெனப் பார்த்து இதுவரை பழகியதும் இல்லை... இனிமேலும் சாதியைச் சுமக்கப்போவதும் இல்லை.

நாயாட்டைக் கொண்டாட வேண்டியதில்லை... இன்றைய நிலையை சமரசம் இல்லாமல் சொல்லியிருப்பதற்காகவேனும் பார்க்கலாம்... தப்பில்லை... தலித்தியம் பேசுகிறது என்பதை மறந்து இது எல்லாச் சாதி அரசியலுக்கும் பொருந்தும் என்பதாய் நினைத்துப் பார்க்கலாம். நல்லதொரு படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும்.

-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பலரும் படத்தை நன்றாகவே புகழ்ந்து இருந்தார்கள்... அவற்றையும் தாண்டி - அதாவது படத்தை தவிர்த்து, இது நல்லதொரு விமர்சனம்... பார்க்க வேண்டும்...

ஸ்ரீராம். சொன்னது…

இன்றுதான் என் மகன் இந்தப் படம் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.  மற்றும் நிழல் எனும் படம் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆமாம் இப்படம் மிக்வும் புழழ்ந்து பேசப்படுகிறது. பார்க்க நினைத்துள படம். உங்கள் விமர்சனம் அருமை குமார்.

துளசிதரன்

குமார் விமர்சனம் வழக்கம் போல அருமை.

கீதா

koilpillai சொன்னது…

தங்களின் ஆதங்கம் போலவே, திரைப்படங்களில் வன்முறையை எதிர்ப்பவன் நான். சமீபத்தில் நான் பார்த்த மலையாள படம் இந்தியன் கிகிச்சன் , படம் அருமை எனக்கு பிடித்திருந்தது. தங்களின் விமர்சனம் நாயாட்டு படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகின்றது.