மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

சிறுகதைகளும் புத்தகப் பரிசுகளும்

ப்போது இங்கு ரமதான் நோன்பு என்பதால் இந்த ஒரு மாதம் மதியம் மூணு மணி வரைக்கும்தான் வேலை... அதன் பின் அறைக்கு வந்து சாப்பிட்டு கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துப் பின் ஒரு மணி நேர நடைப்பயிற்சி முடித்து, வந்து குளித்து ஊருக்குப் பேசி, நான் மட்டுமே சமையல் என்பதால் தோசை அல்லது இட்லியுடன் இரவு உணவை முடித்தபின் வாசிக்க, எழுத, படம் பார்க்க என நேரம் கிடைக்கிறது. இப்போது வாசிப்பில் இருக்கும் புத்தகம் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'. காட்டு வழியே பாணர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்... எழுத்தாளர் கே.வி. ஜெயஸ்ரீ தன் வசீகரிக்கும் எழுத்தால் இழுத்துச் செல்கிறார்.

என்னைப் பொறுத்தவரை சிறுகதைகளை தினமும் ஒன்றென எழுதி எல்லாம் குவித்து விடுவதில்லை... எனக்காய் எழுதலாம் எனத் தோன்றினால் மட்டுமே எழுதுவேன்... அதுவும் எனக்குப் பிடித்த மாதிரி கதை நகர்ந்தால் மட்டுமே தொடர்ந்து எழுதுவேன்... இல்லேன்னா பாதியோட கிடப்பில் போட்டுவிடுவேன். எழுத நினைத்து அமர்ந்தால் முழுக்கதையையும் முடித்து விட்டுத்தான் எழுவேன். பாதியில் வைத்து நாளை எழுதலாம் என நினைத்தால் அந்தக் கதை பெரும்பாலும் முற்றுப்பெறாது... இதைப் பலமுறை சொல்லியிருக்கிறேன்... இப்போது கூட பெருமைக்காகச் சொல்லவில்லை... ஏனோ தெரியவில்லை என்னால் தொடர முடிவதில்லை... இது நல்லதா கெட்டதான்னு எல்லாம் தெரியாது.

அதேபோல் சிறுகதையில் கதாபாத்திரத்தின்  கண் இப்படி, மூக்கு இப்படி என அங்கம் அங்கமாய் வர்ணித்து இறுதியில் தனுஷ், அஜித் மாதிரி இருந்தான் என்றோ நயன்தாரா மாதிரி இருந்தாள் என்றோ பக்கம் பக்கமாய் நிரப்புவதை நான் எப்போதும் விரும்புவதில்லை. என் கதாபாத்திரம் பெயராய் உள்ளே நுழையும்... வாசித்து முடிக்கும் போது வாசிப்பவரின் உள்ளத்துக்குள் அந்தப் பிம்பம் அவர் நினைப்பவராய் மனசுக்குள் நிக்கும். அப்படித்தான் இதுவரையான கதைகளின் கதாபாத்திரங்கள்... இந்த வருடம் வந்த முதல் நாவலான வேரும் விழுதுகளிலும் கூட யாருக்கும் வர்ணனை கிடையாது... இதுவரை வாசித்தவர்களின் மனசுக்குள் கண்ணதாசனும், கந்தசாமி அவரவர் பார்வையின் நிற்கும் மனிதர்களாய்த்தான் நிற்கிறார்கள் நிறைவாய். இதை ஒரு நண்பர் கூட சொன்னார்... உங்க கதைகளில் ரொம்பப் பிடித்தது எந்த கதாபாத்திரத்துக்கும் வர்ணனை கிடையாது... அதற்கென ஒரு பத்தி வீணாக்குவதும் கிடையாது... இதையே தொடருங்கள் என்றார் அந்த எழுத்தாள நண்பர். 

நாவலைப் பொறுத்தவரை ஆரம்பித்து விட்டால் பெரும்பாலும் வார இறுதிகளில் ரெண்டு மூணு அத்தியாயம் என எழுதி விரைவாக முடித்து விடுவேன். ஒவ்வொரு அத்தியாயமாக மெல்ல மெல்ல எழுதினால் என்னால் நாவலுடன் பயணிக்க முடியாது என்பதே உண்மை. சென்ற வருடம் மார்ச்சில் ஊரில் இருந்து வந்த உடன் இருந்த மனநிலைக்கு மாற்றாக ஒரு நாவல் ஆரம்பித்தேன்... அதை விரைந்துதான் முடித்தேன்... கிட்டத்தட்ட 550 பக்கங்கள்... அதைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் மனசுக்குள் இருந்தாலும் ஏனோ இன்னும் எடுத்து அமரவில்லை. எப்போது திருத்தப் போகிறேன் என்பதும் தெரியவில்லை. இன்னும் தலைப்பும் வைக்கவில்லை. கீதா அக்கா கூட பாதிவரை வாசித்தார்கள். போன் போனபின் அவரின் தொடர்பு எண்ணும் இல்லாமல் போய்விட்டது. மற்றபடி வாசித்த சில நண்பர்களுக்கு நாவல் ரொம்பவே பிடித்திருந்தது.

அந்தக் கதையில் குடும்பத்தில் மூத்தவனை மொத்தக் குடும்பமுமே ஒதுக்கி வைத்திருக்கிறது. அப்பா,அம்மா, தம்பிகள் என எல்லாருமே ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பமாய்... இவன் மட்டும் அவர்களுக்கு அருகிலேயே தனியாய்... எல்லாருக்கும் மூத்தவள் மதுரையில்... மற்றொருத்தியோ பக்கத்து ஊரில்.. அத்தை மகனுக்கும் மாமன் மகளுக்கும் இடையில் மெல்ல மெல்ல மலர்கிறது காதல்... இந்தக் காதல் கதையுடன் குடும்ப நிகழ்வுகள், ஊர்த் திருவிழா, அவர்களுக்குள்ளான பிரச்சினைகள், பெண் பார்க்கும் படலம் என கதை நகர்கிறது. இவர்களின் காதல் என்னானது..? குடும்பங்கள் இணைந்ததா...? என்பதுதான் நாவலின் சாராம்சம்.

இந்த நாவலில் அழகர்கோவிலில் இருக்கும் நூபுரகங்கை பற்றிய விபரங்கள், வேலு நாச்சியார், சில கோவில்களின் ஸ்தல வரலாறு, அழகர்மலையானுக்கு ராமநாதன் என்ற பெயரில் எங்கள் ஊருக்கு அருகில் கோவில் இருக்கிறது. அங்கு எங்க ஊர் உள்ளிட்ட அழகரைக் குல தெய்வமாக வழிபடும் நான்கு ஊர்ப் பங்காளிகள் இணைந்து கொண்டாடும் கம்பசேவை விழா பற்றிய குறிப்புகள், அந்த விழா நிகழ்வு, சில புத்தகங்கள் பற்றிய செய்திகள் என நிறைய விஷயங்களை நாவலுக்குள் இணைத்திருக்கிறேன். இந்த நாவலுக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை... நண்பர்கள் நல்ல தலைப்புச் சொன்னால் அதையே வைக்கலாம்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால்... சமீபத்தில் மதியத்துக்கு மேல் ஓய்வு கிடைத்ததால் இரண்டு சிறுகதை எழுதினேன்... அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதாவது பார்வதி டீச்சருக்குப் பின் கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு எழுதினேன் என்று கூட சொல்லலாம். அப்பத்தான் கணேஷ்பாலா அண்ணன் மின்கைத்தடியுடன் இணைந்து ஒரு நகைச்சுவைப் போட்டி அறிவித்தார். அதாவது அவர் கொடுக்கும் படத்துக்கு நகைச்சுவையாய் கதை எழுத வேண்டும்... இதுவரை எழுதிய கதைகளில் 'போலாமா ஊர்கோலம்' என்ற கதை மட்டுமே நகைச்சுவையாய் எழுதிப் பார்த்தது. அதில் கூட கொஞ்சம் உண்மை நிகழ்வு கலந்திருக்கும்... இந்த முறை முயற்சிக்கலாமே என எழுதிப் பார்த்தேன்... நானே எதிர்பார்க்கவில்லை... இரண்டாம் பரிசு கிடைத்தது. கணேஷ்பாலா அண்ணன் கூட குமார் இதில் கலந்துக்குவான்னு நினைக்கலை... முதல் முயற்சியிலேயே வெற்றிக்கனியைப் பறிச்சிட்டான் எனச் சொல்லியிருந்தார்.

அடுத்ததாய் எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா மற்றும் கணேஷ்பாலா அண்ணன் தலைமையில் மிகப்பெரிய எழுத்தாளர்கள் சங்கமிக்கும் சங்கப்பலகை முகநூல் குழுமத்தில் நானும் இணைந்து கொண்டேன்... எழுத்தாளனாய் இல்லாமல் வாசகனாய் ஜாம்பவான்களின் கதைகளை வாசிக்கலாமே என்ற எண்ணத்தில்தான் அதற்குள் போனேன்... அங்கு திருக்குறள், பொன்மொழி, ஔவையின் ஆத்திசூடி எனக் கொடுத்து கதை எழுதச் சொல்கிறார்கள்... 1000 சிறுகதைகள், 500 நாவல்கள் என எழுதித் தள்ளியவர்கள் எல்லாம் அங்கு இருக்கிறார்கள்.  கண்மணி, வாரமலர், குடும்பநாவல் என பல இடங்களில் அடித்து ஆடும் பெண்கள் பலரும் சொன்ன அடுத்த நிமிடத்திலேயே கதைகளை அள்ளி வீசுகிறார்கள்.

மேலே சொன்னதுதான்... நமக்கு அப்படியெல்லாம் உடனே எழுதித் தள்ளும் அளவுக்கெல்லாம் அறிவு இல்லை... பொறுமை வேணும்... பின் எப்படி ஆரம்பிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்... இதை முடிவு செய்து அமர்ந்தால் மட்டுமே என்னால் கதையின் பின்னே பயணிக்க முடியும். 'சிந்திக்காத செயலும் கெடும்' என்றொரு தலைப்புக் கொடுத்தார்கள்... இதை முயற்சிக்கலாம் என எழுதி, அங்கு பதிவிட்டேன்... நானே எதிர்பார்க்காத வரவேற்பு... புத்தகம் பரிசென்றார்கள். அவர்கள் சொல்வதைப் போல் எல்லாத் தலைப்புக்கும் அடுத்தடுத்து எழுத என்னால் முடியாது. இந்த மாதம் நேரம் கிடைப்பதால் மட்டுமே எழுத முடிந்தது... முடியும். அடுத்த மாதமெல்லாம் ஆபீஸ்ல வச்சிச் செஞ்சிதான் அனுப்புவானுங்க... மூணு பேர் பார்த்த புராஜெக்ட்ல ஒருத்தன் வெளியாயிட்டான்... இப்ப ரெண்டு பேர் மூணு பேர் வேலையைப் பார்க்கணும்... முன்னரே மூணு பேர் ஆறு பேர் வேலையைப் பார்த்தோம் என்பது வேறு கதை.

அடுத்ததாய் கணேஷ்பாலா அண்ணன் எழுதி பாதியோடு வைத்திருந்த ஒரு நகைச்சுவை த்ரில்லர் கதையின் மீதியை எழுதி அனுப்புபவர்களில் அவரின் மனம் கவரும் கதையை எழுதும் இருவருக்குப் புத்தகப்பரிசு என சங்கப்பலகையில் அறிவித்தார். ஒரு நகைச்சுவைக் கதைப் போட்டியில் இரண்டாவது பரிசு, சங்கப்பலகையில் புத்தகப் பரிசு என வாங்கியது கொடுத்த தைரியத்தில் இதையும் எழுதிப்பார்க்கலாம் என முடிவு செய்தேன். வரிக்கு வரி நகைச்சுவையையும் த்ரில்லையும் அள்ளிக் கொட்டியிருந்தார் கணேஷ்பாலா அண்ணன். நமக்கு அப்படியெல்லாம் வருமா...? அதுவும் அவரோட எழுத்தோட தொடர்ந்து போவது மிகவும் சிரமம் என்ற யோசனை இருந்தாலும் ஒரு இரவில் அமர்ந்து தட்டிட்டேன். வெற்றி பெற்ற இருவரில் ஒருவனாய் வருவேன் என அப்போது நினைக்கவில்லை. ஒரு மாதத்துக்குள் மூன்று கதைகள் எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை அதிகம்.... மூன்றுக்கும் புத்தகப் பரிசு என்பது மிகப்பெரிய மகிழ்வு.

எதிர்சேவை எனக்கு எப்பவுமே மகிழ்வைக் கொடுக்கும் சிறுகதைத் தொகுப்பு... அதை வாசித்த சகோதரும் கவிஞருமான சிவமணி, இந்த வருடம் அழகர்கோவிலில் எதிர்சேவை நிகழ்ந்த அன்று என்னுடன் அது குறித்துப் பேசினார். அவருக்குப் பிடித்த கதைகளில் மனத்தேடலை ரொம்பவே சிலாகித்தார். மனத்தேடல் எல்லாருடைய மனசுக்குள்ளும் இருக்கும் ஒரு முற்றுப் பெறாத காதலின் கதைதான். பல வருடங்களுக்குப் பின்னான சந்திப்பின் முடிவு என்ன சொல்கிறது என்பதுதான் கதையே... அது அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அது குறித்து அவர் விமர்சனப் பதிவும் எழுதியிருந்தார்.  அதை அடுத்த பதிவாக இங்கு பகிர்கிறேன்... அதைத் தொடர்ந்து சங்கப்பலகைக் கதையும் பகிர்கிறேன்.

இன்று கரன் கார்க்கி அவர்கள் எழுதிய குறுநாவல் வடிவிலான சிறுகதை (நெடுங்கதை என்றும் சொல்லலாம்) ஒன்றை வாசித்தேன்... நாவலில் நம் முந்தைய தலைமுறையின் வரலாறுச் சொல்லும் மனிதர் சற்று வித்தியாசமான கதையை எழுதியிருந்தார். உடனே பேச வேண்டும் எனத் தோன்ற, அழைத்தேன். நம்பரைச் சேமித்து வைத்திருக்கிறார் போல... தம்பி என்றுதான் எடுத்தார். கதை பற்றிப் பேசினோம்... அப்போது நீ எழுதும் சிறுகதைகள் வாழ்வியலுடன் சமூகம் சார்ந்து இருக்கின்றன... நான் நாவல் பக்கமே இருப்பதால் சற்றே வித்தியாசமாய் பேன்டஸிக் கதையாய் எழுதிப் பார்த்த சிறுகதை இது என்றார். பெரிய எழுத்தாளர் என் சிறுகதைகளை வாசித்து அது வாழ்வியலுடன் சமூகம் சார்ந்து இருப்பதாய்ச் சொல்வது என்பது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பேருதானே... சந்தோசம் என்பதைவிட இதைத் தக்க வைக்க வேண்டும் எனத்தான் எனக்கு அப்போது தோன்றியது.

இந்த எழுத்து என்னை அதற்கான இடத்துக்கு நகர்த்திச் சென்று கொண்டுதான் இருக்கிறது. அதற்குத் தகுந்தவனாய் நான்தான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்... எல்லாரும் நிறைய எழுதுகிறார்களே என நினைத்து நானும் அந்தச் சுழலுக்குள் நின்று ஏனோதானோ என எழுதி, குப்பையாய் கதைகளைக் கொடுக்காமல் கொஞ்சமாய் எழுதினாலும் நிறைவாய்க் கொடுக்க வேண்டும். இன்னும் இன்னுமாய் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளை இப்போது போல் என்னால் முடிந்தவரை எழுத வேண்டும் என்பது மட்டுமே என் ஆசை... இறைவனின் சித்தம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

 -'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Srinath சொன்னது…

ஏன்?.. எங்களை போன்ற நகரத்து மக்கள் பற்றிய கதைகள் எழுதுங்கள். சரியா?.. அன்புடன் ஸ்ரீநாத். (ஒரு சாமான்ய சிறிய எழுத்தாளன்.)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஸ்ரீநாத்...
தங்கள் கருத்துக்கு நன்றி...
நான்தான் சொல்லிட்டேனே... நமக்கு வர்றதைத்தானே எழுத முடியும்... நானும் அந்தச் சாமான்ய சிறிய எழுத்தாளன்தான்...
முயற்சிக்கலாம் தப்பில்லை... இருந்தாலும் என்னோட இயல்போட ஒன்றியது கிராமம்தான்... நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும், பாராட்டுகளும் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடிவில் சொன்ன சிந்தனையே சிறப்பு... மனதிற்கு திருப்தி...

வாழ்த்துகள் குமார்...

Srinath சொன்னது…

அதுவும் சரிதான். அன்புடன் ஸ்ரீநாத்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

மிக அருமையான தெளிவான எண்ண ஓட்டம்.
எனக்கெல்லாம் பத்திரிகைக்குக் கதை எழுதத் தெரியவில்லை.
சிறு கட்டுக்குள் அமைக்கவும் முடியவில்லை.

நல்ல எழுத்துக்களைப் படிக்கும் ஆர்வமே
நிறைந்திருக்கிறது.
உங்கள் கருத்துகள் மனதுக்கு இதம்.
உங்கள் எழுத்து நிறைய புத்தகங்களாக
வெளிவரவேண்டும். எனக்கும் தெரியப் படுத்துங்கள். நேரம்
உதவட்டும். வாழ்க வளமுடன்.