மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

மனசு பேசுகிறது : வேரும் விழுதுகளும் நாவலாய்...

வேரும் விழுதுகளும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு வருகிறது. இரண்டு நாட்கள் முன்புவரை அது குறித்தான எந்த விபரமும் தெரியாமல்தான் இருந்தது. தசரதன் அட்டைப்படம் அனுப்பிய பின்புதான் புத்தகம் வெளிவருகிறது என்பது உறுதியானது.

 

கிராமத்து மனிதரான கந்தாசாமியையும், அவரின் விழுதுகளையும் புத்தகமாய்ப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை... ஆனாலும் ஏதோ ஒரு சக்தியின் காரணத்தில் என் எண்ணங்கள் மெல்ல மெல்ல நனவாகின்றன. இதற்கு முன் எழுதிய கலையாத கனவுகளைப் புத்தகமாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்பவும் போல் இன்னமும் இருக்கிறது.  அடுத்த புத்தகமாய் அதைக் கொண்டு வரலாமா என்ற யோசனையும் இருக்கிறது... பார்க்கலாம்.

பிரதிலிபி புதினம் போட்டிக்காக, முன்பு எழுதி யாவரும் போட்டிக்கு அனுப்பிய குறுநாவலொன்றை பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து முடிவை கொஞ்சம் மாற்றிப் பதிவிட்டு வருகிறேன். பரிசுக்கான போட்டிக்குள் போகுதோ இல்லையோ ஒரு சிலரையாவது கவர்ந்திருக்கிறதே என்பதே மகிழ்ச்சிதான்... எடுத்துக் கொண்ட கரு அப்படியானது... பெண்களின் பிரச்சினையைப் பேசக் கூடியது... அந்தளவுக்கு ஆழமாகப் பேசியிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன் என்றாலும் ஓரளவுக்குப் பேசியிருக்கிறது என்பதே உண்மை. பல பெண்கள் இப்படியான ஒரு கருவை எடுத்து எழுதியிருப்பது மகிழ்ச்சி எனக் கருத்திட்டிருப்பதுடன் அதிகமான பெண்கள் வாசிப்பது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. என் கதைகள் கிராமத்துக்குள்தான் சுற்றும்... அந்த மனிதர்களை விடுத்து வெளியே வரும் போது சில நேரங்களில் சொதப்பலாகி விடும் என்பதை அறிவேன்... அப்படிச் சொதப்பல் இல்லாமல் எழுதிய இரு குறுநாவல்கள் கருப்பியும் அணைக்குள் அடங்காத ஆசையும்தான் என்று என்னால் சொல்ல முடியும். முடிந்தால் பிரதிலிபியில் வாசித்து உங்காள் கருத்தைச் சொல்லுங்க.

அணைக்குள் அடங்காத ஆசை

ற்போது வாசிப்பில் காவல் கோட்டம்... பிடிஎப்பாகத்தான் என்பதால் அலுவலகம் போக வரப் பேருந்தில் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில், அமர இருக்கை கிடைக்கும் பட்சத்தில் வாசிக்க முடியும் என்பதால் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்களில் அரைக்கிணறு தாண்டியிருக்கிறேன். சில இடங்கள் விறுவிறுவென வாசிக்க வைக்கும் போது சில நேரங்களில் அறையில் இணைய வசதி இன்னும் வராத நிலையில் வாசிக்கிறேன். 


சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல் இது. வேள்பாரியில் பிரமிப்பாய் பார்க்க வைத்த எழுத்தாளர் வெங்கடேசனை இதில் என்னால் அப்படிப் பார்க்க முடியவில்லை என்றே தோன்றுகிறது. சில இடங்கள் குறிப்பாக கோட்டைச் சுவரை இடிக்கும் முன்னர் காவல் தெய்வங்களை எல்லாம் வெளியேற்றும் காட்சிகள், களவுக்கு செல்லும் காட்சிகள் மற்றும் ஆரம்பத்தில் இருநூறு பக்கங்களை ஆக்கிரமித்த அரசர்கள் என கவர்ந்து நகர்த்தினாலும் இதுவரை வாசித்ததில் பல இடங்கள் வாசிக்கும் போது இங்கும் அங்குமாய் நகர்த்தி ஒரு தொடர்பற்ற நிலையைக் கொடுக்கிறது. ஒருவேளை முழு நாவலையும் வாசித்து முடிக்கும் போது ஈர்த்துக் கொள்ளலாம்... அதனால் வாசித்த பின்பு விரிவாகப் பேசலாம்.


ணையம் இல்லை என்னும் போது வேறு எங்கும் சுற்ற நினைக்காத நிலையில் சமையல், சாப்பாடு போக மீதி நேரத்தில் என்ன செய்யலாம் படங்கள் பார்ப்பதைத் தவிர...சில ஆங்கிலப் படங்கள், பல தமிழ்ப் படங்கள் என நண்பர்களிடம் வாங்கி வந்து பார்த்துத் தீர்க்கிறேன். நேற்று ஆர்.கே. செல்வமணியின் அடிமைச் சங்கிலி பார்த்தேன்... காட்டுக்குள் இருக்கும் கொள்ளைக்காரனுக்கு வேறு வேலையே இல்லையா... எதற்காக அந்த ஊரை மட்டுமே குறி வைக்கிறான்... போலீஸ்காரனின் சரகத்துக்குள் அந்த ஊர் மட்டும்தான் இருக்கா... பக்கதில் எல்லாம் ஊர்கள் இல்லையா... தன் மனைவியைக் கொன்ற வில்லனின் ஆட்கள் ஏழெட்டுப் பேரை காவல் நிலையத்தில் வைத்துச் சுட்டுக் கொள்ளும் இன்ஸ்பெக்டர் சிறைக்குள் இருக்கும் போது அவரைக் கொலை செய்ய அவ்வளவு பெரிய வில்லன் முயற்சிக்காமல் காட்டுக்குள் ஏன் வந்து தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறான் என்றெல்லாம் லாஜிக்கை நோக்காமல் படத்தை நோக்கினால் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் பார்க்கலாம்... புதிய படமில்லை... 97-ல் வந்த படம் என்பதால் பாருங்கள் என்று சொல்ல விரும்பவில்லை.

லுவலகத்தில் கிட்டத்தட்ட பத்துமணி நேரப் பணியில் பெரும்பாலான நேரத்தை இளையராஜாவும் கூடவே தேவாவும் ஆக்கிரமிப்பார்கள். சில நேரங்களில் நாட்டுப்புறப் பாடல் கலைஞர்கள் எடுத்துக் கொள்வார்கள். கூடவே சில வள்ளி திருமணத் தர்க்கங்களும் சிலரின் புத்தகம் குறித்தான பேச்சுக்களும் அவ்வப்போது தலை தூக்கி முன்னே வரும். இளையராஜா விரும்பிகளுக்கு வேறு யாருடைய இசையும் அவ்வளவு சீக்கிரத்தில் பிடித்து விடாது என்றாலும் நான் தேவாவின் இசையிலான பாடல்களை விரும்பிக் கேட்பேன். அப்படித்தான் ஆபாவாணன் - மனோஜ்கியான் கூட்டணிப் பாடல்களை சில நாட்கள் முன்னர் கேட்டேன்... ஆஹா என்ன அருமையான பாடல்கள்... எவ்வளவு அழகான இசை... மனுசன் இசையை ரசிச்சி அமைச்சிருக்கார்... தினமும் கேட்கும் பாடல்களாக அவை மாறியிருக்கின்றன. ராஜா கோலோச்சிய காலத்தில் சந்திரபோஸ், சங்கர்-கணேஷ், தேவா , மனோஜ், இன்னும் சிலரும் தங்கள் இடங்களைச் சிறப்பாகத்தான் தக்க வைத்திருந்திருக்கிறார்கள். மனோஜ் கியானை ஆபாவாணன் பயன்படுத்திய அளவுக்கு வேறு யாரும் பயன் படுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை. அவரைத் தமிழ்ச்சினிமா இன்னும் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தோன்றியது அவரின் பாடல்கள் கொடுத்த அனுபவம்.

பிக்பாஸ் சீசன் - 4 பற்றி எழுதியதைப் போல் சூப்பர் சிங்கர் பற்றி வாரம் ஒரு கட்டுரை எழுதலாமா என்று தோன்றுகிறது. இந்த முறை நாரதர் முத்துச்சிற்பிக்காக பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியதால் ஆரம்ப நாளில் ஒன்பது மணி நேர நிகழ்ச்சியைப் பார்த்தேன்... எல்லாருமே அருமையாகப் பாடுபவர்களாக உள்ளே வந்திருக்கிறார். விஜய் டிவி தனக்குப் பிரியமானவர்களுக்கு இப்பவே சிவப்புக் கம்பளம் விரித்தாலும், நீதிபதிப் பாடகர்கள் எல்லாத்துக்கும் ஆசம்... ஊசம் போட்டாலும் கானா சுதாகர், முத்துச்சிற்பி, ஜாக்குலின் போன்றோர் தங்களை நிலை நிறுத்த எந்தப் பின்புலமும் இல்லாமல் தங்கள் சுயத்தாலேயே இம்மேடையில் நிற்கிறார்கள். அவர்களுக்காகவேனும் பார்க்கலாம் என்ற எண்ணம்... அப்படிப் பார்க்கும் போது எழுதலாம் எனத் தோன்றினால் மீண்டும் தமிழ்டாக்ஸில் ஒரு ஆறு மாசத்துக்கு வாரம் ஒரு கட்டுரை கொடுக்கலாம்.

மின்நிலா பொங்கல் மலரை வாசித்து விட்டேன்... அது குறித்து எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது என்றாலும் கொஞ்சம் பொறுமையாய் விரிவாய் எழுதலாம் என்று நினைக்கிறேன். சிறுகதைகளை மட்டுமே முதலில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது... ஊறுகாய் பதிவுகளும் நாவுறச் செய்தன. 

நெல்லைத் தமிழன் அவர்கள் எழுதிய விமர்சனப் பார்வையில் 'அக்கா மகள்' குறித்து அவர் சொன்னதை ஏற்றுக் கொள்கிறேன்.  வாசிக்கும் எல்லாருக்கும் அவன் ஏன் அதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தான் என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும். இதுதான் மாப்பிள்ளை இதுதான் பொண்ணு என முடிவு செய்து (எங்களில் அக்கா மகளைக் கட்டும் வழக்கம் இல்லை) வைத்திருக்கும் போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போது உடனே முடிக்க வேண்டும் என்ற நிலை வரும்போதுதான் எதிர்ப்பு கிளம்பும். சில நேரம் வலுவாகும்... பல நேரங்களில் வலுவிழக்கும். 

என் தோழி ஒருவரைத் தாய் மாமனுக்குக் கட்டத்தான் வைத்திருந்தார்கள். தோழிக்கும் விருப்பமில்லை... மாமனுக்கும் விருப்பமில்லை... அதைச் சொல்லாமல் திருமணப் பேச்சு வந்த போதுதான் இருவரும் வெளியில் சொன்னார்கள். இப்போது பாட்டியின் பிடிவாதத்தால் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். இதை வைத்து எழுதப்பட்ட கதையில் நாயகன் வலுவாக நிற்பதாகச் சொல்லியிருப்பேன்... இருந்தாலும் திடீரெனச் சொல்வது கதையின் போக்கில் நிச்சயமற்ற தன்மையையே கொடுக்கும்... அதைத்தான் அவரும் சொல்லியிருந்தார். அவரின் விமர்சனம் சிறப்பு. வாழ்த்துகள்.

போன பதிவில்தான் முகநூல் தொந்தரவு குறித்துப் புலம்பியிருந்தேன்... சமீபமாய் நிறைய நட்பு அழைப்புகள் வருகிறது... எப்படி என்று தெரியவில்லை... ஒவ்வொருவரின் பக்கத்திலும் உள்ளே போய் பார்த்து, தங்களைப் பூட்டி வைத்துக் கொண்டு நட்பு அழைப்புக் கொடுப்பவர்களை நீக்கி, மற்றவர்களின் நட்புப் பட்டியல் பார்த்து எனது நட்பு வட்டத்தில் சிலராவது இருந்தால் மட்டுமே அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதை ஆரம்பம் முதலே கடை பிடிக்கிறேன். இப்ப அதிலும் சிக்கல்... பத்துப் பதினைந்து பேர் நம் நட்பாக இருப்பதால் சரி அழைப்பை ஏற்போமென முடிவு செய்து ஓகே பண்ணிய உடன் உள்பெட்டியில் வந்து அக்கா.. நொக்கான்னு சொல்லி, கவிதையும் படங்களும் அனுப்ப ஆரம்பிச்சிடுறாங்க... நம்ம தகவல்களைப் பார்ப்பதில்லை போலும்... அபுதாபியில் இருக்கிறேன் என்பதையும் அறிவதில்லை போலும்... எங்க பொருட்களை வாங்குங்கள்... என்னோட கடையில் பொருள் வாங்குகன்னும் இரண்டு நாட்களுக்கு முன் ஒருத்தர் பத்துப் பதினைந்து போட்டோக்களுடன் உள்பெட்டியில் இறங்கி அடித்தார்... விபரம் சொல்லி சரி எங்கய்யா கடை வச்சிருக்கேன்னு கேட்டா... ஊர்லன்னு சொல்றார்... என்னத்தைச் சொல்ல... நித்யா குமார்ன்னு இருக்கும் போது யோசிக்க மாட்டானுங்களா... சரி நம்ம பதிவுகளில் சிலதையாவது வாசிச்சிட்டு அழைப்பு விடமாட்டானுங்களா... விரைவில் குமாராகவே மாறிடுறது உள்பெட்டிக்கு நல்லதுன்னு தோணுது... தொந்தரவு தாங்க முடியலை... எதற்காக இவர்கள் இப்படி அலைகிறார்கள் என்றும் தெரியவில்லை.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நேரத்தை பலவகையில் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் குமார்... பாராட்டுகள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சூப்பர் சிங்கர் குறித்த கட்டுரை - வாழ்த்துகள்.

புதிய நூல் வெளியீடு - மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

வேரும் விழுதுகளும்...  வாழ்த்துகள்.  


காவல் கோட்டம் முன்னரே வாசித்துவிட்டேன்.  அது ஒரு குறிப்புப் புத்தகம் போல எனக்குத் தோன்றியது.


நானும் பிறமொழிப்படங்கள் சில அவ்வப்போது பார்பபதுண்டு.


பாடல்கள் கேட்பது சுவையான பொழுதுபோக்கு, மனஇறுக்கம் தளரும்.


சூப்பர்சிங்கர் - பார்ப்பதே இல்லை.


மின்நிலா மலர் முழுவதும் படித்து கருத்து சொல்லுங்கள்.  


முகநூலில் எனக்கும்  பற்பல நட்பழைப்புகள் திடீரென வந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன!  ப்ரொபைல் பூட்டப்பட்டவையே அதிகம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

வணக்கம் சகோ. வேரும் விழுதுகளும் - ஆகா! வாழ்த்துகள் சகோ. நன்கு வேர்விட்டுப் பல விழுதுகளும் வரட்டும்.
வேலைப்பளுவிலும் எப்படி இவ்வளவு எழுதுகிறீர்கள் என்று வியப்பாக இருக்கிறது! வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பிரதிலிபி கதையைப் படிக்க முயற்சிக்கிறேன்..
முகநூலில் உள்பெட்டி பார்ப்பதில்லை என்றாலும், சிலர் அனுப்பிக் கொண்டே இருப்பார்கள்..நான் திறந்து பார்ப்பதே இல்லை சகோ. மேலும் அலைபேசியில் மெசெஞ்சர் பயன்படுத்துவதில்லை, அதனால் கணினியில் வரும்போது மட்டும் இத்தனை இருக்கிறது என்று காட்டும்.. கண்டுகொள்வதே இல்லை சகோ.