மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 8 பிப்ரவரி, 2021

மனசின் பக்கம் : கூட்டாஞ்சோறு கொஞ்சம் காரமாய்...

னவரி இருபத்தி ஆறாம் தேதி நாங்கள் தங்கியிருக்கும் தளத்தின் முதலாளி தங்கள் கம்பெனி ஆட்கள் இணைய வசதியை இங்கு மாற்றிக் கொண்டு வருகிறார்கள் எனச் சொல்லி, நாங்கள் பயன்படுத்திய இணைய வசதியை ரத்து செய்து விட்டான்... இங்கு 'ர்' இல்லை என நினைக்க வேண்டாம்... யாரையும் மரியாதைக் குறைவாக பேச நினைப்பதில்லைதான் என்றாலும் இணையத்தை ரத்து செய்து விட்டு போனில் கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு கதையாகச் சொன்ன மலையாளியை, இணையம் இப்ப வராது அடுத்த வாரம்தான் வரும் எனத் தெனாவெட்டாகப் பேசிய அவனின் மனைவியின் குணத்தை வைத்து 'ன்' போதுமானது எனத் தீர்மானிக்கலாம். 

இன்றோடு 13 நாளாகிவிட்டது. இன்னும் இணையம் வரவில்லை... இந்த நாட்டில் இணைய வசதி இல்லாமல் யாரும் இருப்பதில்லை... அப்படியிருக்க நாங்கள் இருக்கிறோம்... அறைக்கு வந்தால் எந்த வேலையும் ஓடவில்லை... சமையல், சாப்பாடு, படுக்கை அவ்வளவே. வீட்டிற்கு ஒழுங்காகப் பேசி பதிமூன்று நாளாகிவிட்டது.  எங்கள் அறையின் நிர்வாகி, ஊருக்குப் போயிருக்கிறார்... அவரிடம் கூப்பிட்டு விபரம் சொல்லும் போதெல்லாம் ஆளில்லாமல் கிடக்கும் கட்டிலுக்கு ஆள் பார்... அவனிடம் சொல்... இவனிடம் சொல் என்ற ஆள் சேர்க்கச் சொல்லும் பாட்டு மட்டும்தான் வருகிறது.  நம் பாடு அவருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. 

அறை மாறிச் சென்று விடலாம் என்றால் அவர் ஊருக்குப் போகும் போது பைசாவுக்குப் பிரயோசனம் இல்லை என்றாலும் உறவுக்காரன் என்ற முறையில் நான் அறையின் நிர்வாகத்தை தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு விட்டேன் என்பதால் மாற முடியாத நிலை... மற்றவர்கள் மாறப் போகிறோம் எனக் காட்டும் பூச்சாண்டிக்கு பதில் சொல்லிக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

இந்த எழவு பிரச்சினையில் அமேசானில் போட்ட இலவச தரவிறக்கம் குறித்து எதிலும் பகிர முடியாமலே மூன்று தினங்கள் வீணாகிப் போய் விட்டது... இப்பவும் இணையம் எப்போது வரும் என்பது தெரியவில்லை... தூக்கம் நன்றாக வருகிறது அவ்வளவே.

மேசானில் இரண்டு புதிய புத்தகங்களைப் போட்டேன்.... மலையாளச் சினிமாக்கள் குறித்து எழுதிய ஒன்றும், கிராமத்து நினைவுகளும்... அதில் மலையாள சினிமாவுக்கு இணையத்தில் இருந்து படங்கள் எடுத்துப் போட்டதால்  காப்பி பண்ணியிருக்கிறாய்... இவை இணையத்தில் கிடைக்கின்றன... உனது பதிவு இல்லை என்றால் எங்கிருந்து எடுத்தாய் எனச் சொல் என நீண்டதாய் ஒரு மின்னஞ்சல் வர, விபரம் சொல்லி படங்கள் மட்டுமே இணையத்தில் எடுத்தது என்பதைச் சொல்லி, படங்களை நீக்கிக் கொடுத்ததும் மீண்டும் தவறுதலாய் உங்கள் மீது வழக்குத் தொடுத்து விட்டோம்... மன்னிக்கவும்ன்னு ஒரு மின்னஞ்சலும், அதன் பின் உங்க புத்தகம் தயாரென மற்றொரு மின்னஞ்சலும் வந்து சேர்ந்தது. 

இந்த இரண்டுக்கும் முன்னர் போட்ட இரண்டுக்கும் மூணு நாள் இலவச தரவிறக்கம் வைத்து உண்ணாமல் திங்காமல் போயே போச்சு... இப்ப மீண்டும் புதியவை இரண்டுக்கும் நாளை (09/02/2021) மற்றும் நாளை மறுநாள் (10/02/2021) ஆகிய இரண்டு தினங்கள் இலவச தரவிறக்க தினங்கள்... முடிந்தவர்கள் தரவிறக்கி, வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொன்னால் மகிழ்வேன்... இல்லை என்றாலும் பரவாயில்லை வருத்தப்படமாட்டேன்.

கிராமத்து நினைவுகள்

சேரநாட்டுத் திரைப்படங்கள்

நேற்று ஒரு நண்பர் 'த கிரேட் இந்தியன் கிச்சன் பார்த்தியா..?' என்றார்... அதென்ன கிரேட் இந்தியன் கிச்சன்... இப்படி ஒரு பிற்போக்குத்தனமான அடுப்படி மெத்தப் படித்த கேரளாவில் வேண்டுமானால் இருக்கலாம்... நான் பத்தாவது படிக்கும் வரை வீட்டுக்கு மின்சாரம் கூட இல்லாத, விறகு அடுப்பில் சமைத்த, பனிரெண்டாவது படிக்கும் போதே கலர் டிவியைப் பார்த்த எங்கள் வீட்டில் எல்லாம் இப்படியான கிச்சன் அப்போதே இல்லை... எந்த நேரமும் வடித்துக் கொட்டிக் கொண்டே அம்மோ, அக்காள்களோ இருக்கவில்லை... இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 

ஐந்தாவது படிக்கும் போது உன் உடைகளை நீதான் துவைக்கணும் என சோப்பைக் கையில் கொடுத்தார்கள்... கண்மாயில் கிடக்கும் படிக்கல்லில் அழுக்குப் போச்சோ இல்லையோ அடித்துத் துவைத்து அலச ஆரம்பித்தேன்... அப்போது முதல் இப்போது வரை சாப்பிட்ட தட்டை நான்தான் கழுவியிருக்கிறேன்... இதுவரை தட்டில் கை கழுவுவதும் இல்லை. வெளியில் போய் விட்டு வந்து தண்ணி மோந்து கொடுங்க என யாரையும் துன்புறுத்த விரும்புவதுமில்லை. இப்போது எப்போதேனும் மகளிடம் தண்ணி கொண்டாடா எனச் சொல்வதுண்டு... இது அடிமைப்படுத்தும் பிற்போக்குத் தனம் அல்ல... வெயிலில் சுற்றி வீடு வந்ததும் முக வியர்வையை துண்டெடுத்துத் துடைக்கும் மகளை அடிமைப்படுத்தவும் இல்லை. 

மனைவி வந்தபின், வெளிநாட்டுக்கு வந்த பின் என்றெல்லாம் எந்த மாற்றமும் இல்லை... எப்பவும் போல்தான் ஊருக்குப் போனால் என் வேலைகள் தொடர்ந்தன... என் பிரியாணி என் பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்... சமையல், துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் என எல்லாவற்றிலும் என் பங்கு எப்போதும் இருக்கும் 

என்னாலானதை நான் என் மனைவிக்குச் செய்து கொடுக்கத்தான் செய்வேன்... விஷால் அதையே அவன் அம்மாவுக்குச் செய்து கொண்டுதான் இருக்கிறான்... அரிவாள் மனையில் காய்கறி, மீன் எல்லாம் நறுக்கத் தெரியும்... அதனால் அந்தக் குப்பை இலக்கியத்தை நானெல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆட விரும்பவில்லை என்றேன்... சிரித்தார். 

அது பேச வந்த அரசியல் வேறு... அதையே முழுவதுமாகப் பேசித் தொலைத்திருக்கலாம்... தேவையில்லாமல் அடுப்படிக்குள் சுற்றி வீணடித்திருக்கிறார்கள். கேரளா கடவுளின் தேசம்... அவர்கள் அப்படித்தான்... இன்னும் கருவாட்டுப் பானைக்குள்ளேயே நிற்கிறார்கள்... நிற்கட்டும்... நாம் முன்னோக்கிப் போவோம் என்றேன் அவர் மீண்டும் சிரித்தார்... 

முடிந்தால் சூப்பர் சிங்கர் பாருங்க... எங்க காரைக்குடிக்காரரான நாரதர் முத்துச்சிற்பி கலக்குகிறார் என்றேன்... சரி என்றபடி நகர்ந்தார். நான் கிச்சனுக்கு எதிரியல்ல... கிச்சன் விரும்பிதான்... ஆனால் என்பது தொன்னூறுகளில் எங்கள் ஊரில் கூட இல்லாத இந்த கிரேட் இந்தியன் 'ஐயப்ப' கிச்சனுக்கே எதிரி... பிடித்தவர்கள் போற்றுங்கள்... தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள்... அது அவரவர் விருப்பம்... ஆனால் எல்லாரும் போற்றணும்ன்னு கம்பு சுத்தாதீங்க... கொண்டாடனும்ன்னு கொள்கையோட வராதீங்க.

சிகலா ஜெயில்ல இருந்து வர்றாங்க.... வரட்டுமே... இப்ப அதுக்கு என்ன... ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்... தியாகத் தலைவி, மக்கள் தலைவி என்றெல்லாம் எதற்காகச் சொல்கிறார்கள்... அவர் மக்களுக்கு என்ன செய்தார்...? எதைத் தியாகம் செய்தார்... சாதாரணமாக இருந்து கோடிகளுக்கு அதிபதியாகிய அந்த 'நாகராஜசோழன் எம்.எல்.ஏ'த்தனத்துக்கு வேண்டுமானால் பாராட்டலாம்... அம்புட்டுப் பயலையும் காலடியில் விழ வைத்த அந்த 'அமாவாசை'த்தனத்துக்கு வேண்டுமானால் பாராட்டலாம்... அதை விடுத்து தியாகத் தலைவி என்பதெல்லாம் ரொம்ப அதிகம்... 

இப்படித்தான் நாம் கொடி பிடித்து ஏத்தி விட்டு விட்டு கொடியையும் கோவணத்தையும் துறந்து இன்னமும் அம்மணமாக நிற்கிறோம்... இந்த ஆர்ப்பட்டம், ஆட்டம் பாட்டம் எல்லாம் அவர்கள் இன்னும் கோடிகளைக் குவிக்கவே ஒழிய, நமக்கு ஒரு பைசாவுக்குப் பிரயோசனம் இல்லை என்பதை நாம் எப்போதும் உணரப் போவதில்லை... உணர்ந்திருந்தோமேயானால் நான்காம் கலைஞருக்கும் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டோம்தானே... தமிழன் என்றொரு இனமுண்டு... அம்புட்டுத்தான்.

ங்கு வாக்சின் நானெல்லாம் இன்னும் போடவேயில்லை... ஆனால் பலர் இரண்டாவது ஊசியும் போட்டு விட்டார்கள். வாக்சின் போட்டவர்களுக்கே கொரோனோ வருகிறது என்பதால் பலருக்குப் போடணுமா வேண்டாமா என்ற பயம்.... சிலருக்கோ போட்டாச்சு... வந்திருமோ என்ற பயம்... இன்னும் சில மலையாளிகளுக்கு வெளியில் சொல்ல முடியாத வேறு சில பயங்கள்... இப்படியிருக்க சீனா வேண்டாம்... இந்தியா வந்திருக்கு... அதைப் போடும் போது போட்டுக்கலாம் எனச் சிலர் சொல்ல, இப்ப ஊசி போட்டுக்கலாமா வேண்டாமான்னு மனசுக்குள்ள பட்டிமன்றம்... இன்னும் தீர்ப்புத்தான் வரலை. எப்படியும் போட்டுத்தான் ஆகணும்.

பாரத் ரைட்டர்ஸ் தளத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது சிறுகதை 'மாரி' வெளியாகியிருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது அந்தத் தளத்தில் போய் கதையை வாசித்தோ அல்லது வாசிக்காமலோ லைக்கை தட்டிட்டு வந்தாப் போதும்... வரும் லைக்கை வைத்தே அதற்கான பணத்தொகை முடிவு செய்யப்படும்.

முன்பு எழுதிய நாலு கதைகளுக்கு மூவாயிரம் ரூபாய் வர நானுத்திச் சொச்சம் ரூபாயை வரியாகப் பிடித்துக் கொண்டு மீதத்தைச் சொன்னபடி மனைவியின் கணக்கில் வரவு வைத்து விட்டார்கள்... அந்தப் பணத்தை எங்கள் ஊர் மாரி, மார்கழி மாத சாமி கும்பிடலுக்கு வாங்கிக் கொண்டு விட்டாள். எழுதி வந்த பணம் அவளுக்கானது போலும்... அம்மனுக்குக் கொடுத்தது அம்மாவுக்குக் கொடுத்தது போல்தானே... சிறு கதைகள் தலைப்பின் கீழ் நான்காவது கதையாய் இருக்கும்... பார்த்து லைக்கைத் தட்டுங்க...

மாரி

ணையம் இல்லைங்கிறதால பாத்த படங்களைப் பார்த்து அறை நண்பர்களிடம் பல ஆங்கிலப் படங்களைப் பார்த்து, தெலுங்கில் ஹிட்டடித்த ரங்கஸ்தலம் பார்த்து.... இப்படி நிறையப் பார்த்தாச்சு... கொஞ்சமே கொஞ்சமாய் தொள்ளாயிரம் பக்கத்தில் ஒரு முன்னூறு பக்கம் காவல் கோட்டம் வாசிச்சாச்சு...  எதுவும் எழுதும் எண்ணம் வரவேயில்லை... அப்படியிருக்க கரன் கார்க்கி எழுதி, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கும் 'சட்டைக்காரி' நாவல் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்... அவர் எழுதி முடித்ததும் வாசிக்கக் கிடைத்த நாவல் எழுத நினைத்து நாவல் வரும்போது எழுதலாமென வைத்திருந்தேன்... அவர் நீங்க இப்ப எழுதலாமே நித்யா (முகநூல் நட்புக்களுக்கு நான் நித்யாதான்) என்றதும் எழுதியாச்சு... தமிழ்டாக்ஸ் அல்லது புத்தகம் பேசுதுவுக்கு கொடுக்கலாம் என்ற எண்ணம். எப்படியிருந்தாலும் இங்கும் பகிர்வேன்.

முகநூல்ல பேரை மாத்திடலாமான்னு தோணுது... நித்யா குமார்ன்னு இருக்கவும் பெரும்'பாலான'வய்ங்க மோடம்ன்னு ச்சை... மேடம்ன்னு நினைச்சிடுறானுங்க... படுத்தி எடுக்குறானுங்க... 

எனக்கு நட்பு அழைப்பு வந்தால் நம்ம நட்புக்கள் அதில் இருக்காங்களான்னு பார்த்துத்தான் ஏத்துப்பேன்... அப்படி ஏத்துக்கிட்டதில் சமீபத்தில் இரண்டு பாடம் படித்தேன்... ஒருத்தர் என் நட்பு வட்டத்தில் நீண்ட நாளாக இருக்கிறார்... அவர் இருக்கும் வாட்ஸப் குழுமத்திலும் நான் இருக்கிறேன்... சில நாட்கள் முன் மேடம் உங்க போன் நம்பர் கொடுங்க என்றார்... சரி தம்பி உண்மையில் தெரியாமக் கேக்குறாராக்கும்ன்னு விபரம் சொன்னப்போ ஆள் எஸ்கேப்...  அப்புறம் என் பக்கமே காணோம்... லைக் கூட இல்லை.  

அடுத்து நண்பர்களின் நண்பராய் தெரிந்ததால் சமீபத்தில்தான் அவரின் நட்பை ஏற்றேன்... சனி இரவு இந்த ஊரில் எட்டு மணி... ஊருக்குப் பேச நண்பரின் அறைக்குப் போயிருந்தேன்... பேசிக் கொண்டிருக்கும் போது ஹாய் மேடம்ன்னு உள்ளே வந்தார்... சரி தம்பி இப்பத்தான் வண்டியில ஏறுறாரு... விட்டுப் பிடிப்போம் என பதில் சொல்லாமல் விட, அவர் எழுதிய கவிதைகளா... அல்லது வேறு யாரும் எழுதுனதான்னு தெரியலை... பத்திரிக்கையில் வந்ததை போட்டோ எடுத்து வைத்திருப்பார் போல... சரச்சரன்னு தள்ளி விட்டுட்டு, இங்கிலிபீஸ்ல இதை எல்லாம் நீங்க விரும்புறீங்களா மேடம்ன்னு கேட்டார். 

அவருக்குப் பதில் சொல்லாமல் ஊருக்குப் பேசிட்டு அறைக்கு வந்து பக்கத்து அறை நண்பர் கொடுத்த பிரியாணியைச் சாப்பிட்டு விட்டு படுத்துட்டேன்.  ஆபீஸ் போனப்போதான் தம்பி ஞாபகம் வந்துச்சு... நானும் அவரு பேசுன இங்கிலிபீஸ்லயே நான் மேடம் இல்லை ராசா... என் பெயர் குமார்... முகநூல்ல நட்பு அழைப்பை அனுப்புமுன் என்னைப் பற்றி பார்த்திருக்கலாம்... இப்பவும் கெட்டுப் போயிடலை... போயிப் பார்த்துட்டு அப்புறமா ஆய் ஊய் எல்லாம் விடு... கவிதையெல்லாம் அனுப்பு முன்னால அனுப்பப் போறது கவிதாவா... கண்ணதாசனான்னு பாத்துட்டு அனுப்பு... மேடம்தான் வேணுமின்னா இங்கிட்டு வராதேன்னு சொன்னேன்... சாரின்னு சொல்லிட்டு ஆள் எஸ்கேப்... நல்லாத்தான் தெரியிறானுங்க... ஆனாலும் மனசுக்குள்ள அல்பப் புத்தியோட அலைவானுங்க போல... இந்த ரெண்டு பேரின் நட்பிலும் எனது நண்பர்களே அதிகம்... நித்யாகுமார்ங்கிற பேரை மாத்தக்கூடாதுன்னு பார்த்தேன்... மாத்த வச்சிருவானுங்க போல.

வாழ்க்கை புரட்டிப் புரட்டிப் போட்டு அடித்துக் கொண்டுதான் இருக்கிறது... எப்படி அடித்தாலும் எழுவேன் என்ற நம்பிக்கையுடனே பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கைதான்  வாழ்க்கை.... பார்க்கலாம் நாளைய விடியல் நலம் பயக்கிறதா என்பதை... நாளைய விடியலில்.

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நம்பிக்கைதான் வாழ்க்கை. உங்களின் எழுத்து உங்களுக்கு என்றும் துணை நிற்கும். தொடர்ந்து பயணியுங்கள். நாங்களும் உடன் பயணிக்கிறோம். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நலமே விளையட்டும் குமார்.

நித்யா குமார் - பெயர் மாற்றம் குறித்த நிகழ்வுகள் - ஹாஹா... இப்படித்தான் சிலர் திரிகிறார்கள். இதே வேலையாக இருக்கிறார்களே!

மாரி கதை படித்தேன் - நல்ல கதை. போட்டாச்சு! லைக் போட்டாச்சு!

தொடர்ந்து எழுதுங்கள்.