மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 15 ஜூலை, 2020

சினிமா விமர்சனம் : சூஃபியும் சுஜாதேயும்

Sufiyum Sujathayum review
சையாலும் காதலாலும் நிறைத்து வைக்கப்பட்ட ஒரு கதை...

மதம் தாண்டிய காதலைச் சொன்ன படங்கள் ஏராளம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் காதலைச் சொல்லிச் செல்லும்... எண்ணு நின்டே மொய்தீன் பார்த்து பல நாட்கள் அதன் பிடிக்குள் சிக்கித் தவித்தது போல் இப்போது சுஜாதா பின்னே... மூன்று முறை பார்த்துவிட்டேன் அலுக்கவில்லை இசையின் மீதான காதலில் சுஜாதா அடவு பிடித்து ஆடும் நடனம்.

சூஃபி இசையின் மீதுதான் அவளுக்குக் காதல்... அந்தக் காதல் மெல்ல மெல்ல அதை இசைப்பவன் மீது திரும்புகிறது... பொட்டிட்ட முகமும் கழுத்திலாடும் சங்கிலியுமாய் இருப்பவள் மெல்ல மெல்ல இரண்டையும் துறக்கும் போது அவளுக்குள் அவன் மீதான காதல் இசையைவிட இறுக்கமாய்...

காதல் இருந்தால் அதை உடைக்கும் சக்தி ஒன்று இருக்கத்தானே செய்யும்... அது பாட்டியின் இறப்பில் குமாரா மூலமாக தன் இருப்பைக் காட்டிச் செல்கிறது. அதன்பின் வழமையான நாடக அரங்கேற்றங்கள் மூலம் அவள் இன்னொருவன் மனைவியாகி துபைக்குச் செல்கிறாள்... பத்தாண்டு வாழ்க்கையில் அவளுக்கு ஒரு மகளும் உண்டு.... ஆனாலும் கணவனுடன் பிணக்கு என்பதாய் காட்டப்படும் வாழ்க்கை ஏற்புடையதாக இல்லைதான் என்றாலும் சுஜாதா சூஃபிக்குள் வாழ்ந்தவள்... வாழ்பவள் என்பதால் ஏற்றுக் கொள்ளலாம்.


அந்த பாங்கு ஒலிதான் படத்துக்கு மிகப்பெரிய பலம்... அதுவும் அந்தக் குரல்... சான்ஸே இல்லை... அந்த நாயகனின் நடிப்பும்தான்... கண்கள் பேசுகின்ற காதலை... ஒற்றை விரலில் நின்று சுழன்றாடும் ஆட்டம் நம்மைக் கட்டிப் போடுகிறது. அதுவும் சுஜாதா அதேபோல் செய்ய எத்தனித்து அவனிடம் கால் உயர்த்திக் காட்டுவதும்... அதற்கு அவன் போகிற போக்கில் கால் உயர்த்திக் காட்டிச் செல்வதும் கவிதை.

காதலித்தவன் சாவுக்கு வருவதுதான் கதை... அதற்குள் குமாரா சொல்வது போல்... அவள் நினைப்பது போல் அவர்களின் காதல் விரிகிறது இசையுடனும் இயற்கையுடனும்...

சூஃபியாக வரும் தேவ் மோகன், காதலைக் கண்ணாலயே பேசி விடுகிறார். சுஜாதாவைப் பார்க்கும் இடங்களில் எல்லாமே அவர் வாய் பேசுவதைவிட கண்கள்தான் அதிகம் பேசுகின்றன... அதேபோல் பாங்கு சொல்லுமிடங்களில் மிளிர்கிறார். தேவ் மோகனுக்கு இது முதல் படம், இதற்கென அவர் முடியும் தாடியும் வளர்த்திருக்கிறார்.

ராஜீவாக வரும் ஜெயசூர்யா, பத்து வருடங்களாக தான் சந்தோசமாக இல்லை என்பதை படத்தின் ஆரம்பம் முதலே நீண்டு வளர்ந்த தாடி மூலமும் தன் பேச்சின் மூலமும் சொல்லாமல் சொல்லி விடுகிறார். அதுவும் தனது பாஸ்போர்ட் காணாமல் போன பின் அவரின் கோபம் இன்னும் தீவிரமாகிறது. இறுதியில் சினிமாக் கணவனாய் 'இச்' கொடுத்து சுபம் போடுகிறார்.


சுஜாதாவாக அதிதி ராவ்... சேர நன்நாட்டிளம் பெண்டீர் இல்லை இவர்... அந்த மண்ணுக்கு சிறிதும் ஒட்டாத முகம்... தன் நடிப்பால் கேரளப் பெண்ணாக வாழ்ந்து நம்மையும் படம் முழுவதும் அவரின் சைக்கிளின் பின்னே பயணிக்க வைத்திருக்கிறார். அதிதி தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

வாய் பேச முடியாத சுஜாதா, தன் கண்களால், கை விரல்களால் பேசுவதே அழகு... இந்த நாவல் பழச் செடி மரமாகி காய்க்கும் போது நீ பேசுவாய் என சூஃபி சொன்னாலும் சுஜாதா பேசவே இல்லை... பேசாததுதான் காதலை இன்னும் அழுத்தமாக்கியிருக்கிறது.

ஒரு வாய் பேச முடியாத பெண், தன் வேதனையை, வலியை, வெளிப்படுத்த அதிகபட்சம் என்ன செய்வாள் என்பதை பாட்டியின் இறப்பை முதலில் அறிந்து அதை வெளிச் சொல்ல முடியாமல் சப்தமில்லாமல் கதறி, அலாரம் அடித்த கடிகாரத்தை அடித்து, கதவைத் தட்டி, கையிலிருந்த கடிகாரத்தை தூக்கி எறியும் போது அது நடராஜர் சிலையில் பட்டு சிலை கீழே விழுந்து சப்தம் எழுப்புகிறது... அதுவே அவளின் வேதனையின் அதிகபட்சத்தைத் சொல்லுவது போல் இருக்கிறது... இதுவே காதலின் பிரிவிலும்.

இந்தக் காதலை ஒரு கிறிஸ்தவப் பெண்ணை வைத்துச் சொல்லியிருக்கலாமே... அதைச் சொல்ல முடியாது... அப்படிச் சொல்லியிருந்தா இந்தப் படமே வெளியில் வந்திருக்காது என்றார் என் நண்பர் ஒருவர்... நம்மைப் பொறுத்தவரை சினிமா என்பது சினிமாவாய் மட்டுமே... கதைக்காகப் பார்க்கும் படத்தில் மதமென்றும் சாதியென்றும் கறுப்புக்களை சுமக்க வேண்டியதில்லை... ஒரு காதல்... படம் முழுவதும் பயணிக்கும் அழகிய இசை... காட்சிகளை விழுங்கியிருக்கும் காமிரா கொடுத்திருக்கும் ஓவியம் என ரசிக்க ஏராளம்... மதம் தவிர்த்து கதையைப் பார்த்தால் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தப் படத்தைப் பார்க்க முடியும்.


படத்தில் எல்லாமே இசை போல் அழகா என்றால்... பத்தாண்டு வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் இணக்கம் இல்லை என்பது ஏற்புடையதாய் இல்லை... காதல் முறிந்து வாழ்க்கை என்றானபின் மனசுக்குள் காதலைச் சுமந்து கொண்டு வாழப்பழகிக் கொள்ளும் வாழ்க்கைதான் இங்கு சுஜாதாக்களுக்கு இருக்கிறதே ஒழிய காதலனைச் சுமந்து கொண்டு கணவனைத் தள்ளும் வாழ்க்கை பெரும்பாலும் அமைந்து விடுவதில்லை.

சூஃபியுடனான காதலும் அவ்வளவு அழுத்தமாகச் சொல்லப்படவில்லை... மலரும் போதே மரணித்து விடுகிறது... ஒரு அழுத்தமில்லாத காதலுக்காக ஒருத்தி பத்தாண்டுகள் தன் வாழ்க்கையை சூனியமாக வைத்திருப்பாளா என்பதும் கேள்வியாய் எழாமல் இல்லை என்றாலும் அந்தப் பிரேமம் கொடுத்த மகிழ்வு இதையெல்லாம் தள்ளி வைத்து சுஜாதாவின் அடவுக்குப் பின்னே நம்மையும் கதக் ஆட வைக்கிறது.

இங்கே ஒரு மதத்தைப் பற்றி பேச, அதே மதத்தைத் சேர்ந்த நடிகர்தான் மாற்று மதக்காரராய் வரவேண்டியிருக்கிறது. அப்பாவாய் வரும் சித்திக், இமானிடம் பேசுமிடத்தில் என் மகளை மதம் மாற்றப் பார்க்கிறீர்கள் என்பார். படத்துக்கான வசனம் என்றாலும் அதைச் சொல்ல அதே மதக்காரர்தான் வேண்டியிருக்கிறது. இல்லையேல் இங்கு கம்பு பலமாகச் சுற்றப்படும் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.


தன் காதலனின் பொருள் ஒன்று தன்னிடம் இருப்பதால், அதை அவனிடம் சேர்ப்பிக்க அவள் செய்யும் செயல் ஏற்புடையதா... இதெல்லாம் செய்ய இயலுமா... என யோசிக்காமல் படத்தைப் பார்க்கும் போது அவள் அந்தப் பொருளை ஒப்படைக்க வந்திருக்கிறாள் என நினைத்து இமாம் போய் படுத்துக் கொள்வதைப் போல் நாமும் பார்த்து அவளின் காதல் எத்தகையது என்பதை உணரலாம்.

படம் முழுவதும் நிரம்பி வழிவது எம்.ஜெயச்சந்திரனின் இசை... ரூஹூ... ரூஹூ... என நம்மை ராசாவின் இசையாய் ஈர்த்துக் கொள்கிறது. அனு மூத்தேதாத்தின் ஒளிப்பதிவு படத்தை மற்றொரு உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. தீபு ஜோசப்பின் எடிட்டிங் மற்றுமொரு பலம்... இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என மூன்றும் போட்டி போட்டு படத்தை மெருகேற்றியிருக்கிறது... 

விஜய் பாபுவின் பிரைடே பிலிம் ஹவுஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் கதையை நாராணிபுழா ஷானவாஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.

மற்றவர்கள் சொல்லும் போது பாங்குப் பாடல் கேட்டதும் என்னை மறப்பேன் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன்... எனக்கு நாகூர் ஹனிபாவின் 'இறைவனிடம் கையேந்துங்கள்' இப்போதும் ஈர்ப்பைக் கொடுக்கும். இந்தப் படத்தில் ஒவ்வொரு முறை பாங்கு கொடுக்கும் போது அந்தப் பாடல் ஈர்க்கத்தான் செய்தது. 

இசையை ரசிக்கும் எல்லாரும் சுஜாதாவை ரசிக்கலாம்... சுஜாதா ராட்சஸி அல்ல பேரழகி.


சூஃபி இசை நமக்குப் பரிட்சயமில்லாததுதான் என்றாலும் சூஃபிக்களை பார்த்ததில்லை என்றாலும் சுஜாதாக்களை நிறையப் பார்த்திருக்கிறேன்... அந்த சுஜாதாக்கள் எல்லாம் புகுந்த இடத்தில் புருஷனுடன் மகிழ்வாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எப்போதேனும் எதிர்ப்படும் போது முகம் காட்டும் சந்தோஷத்தில் தெரியும்... வாழு... வாழப்பழகு என்பதுதான் நிஜ சுஜாதாக்களின் நிலை... நிழல் சுஜாதாவைப் போல் ஒரு சிலர் எங்கேனும் இருக்கலாம்.

படத்தைப் பார்க்கலாம் என்பது மட்டுமில்லை... ஒரு அழகிய காதலையும் இசையையும் ரசிக்கலாம்... நம்பிக்கையுடன் பாருங்கள்... நல்லாவே இருக்கு.

-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியாக சொன்னீர்கள் குமார்... சினிமாவை சினிமாகவே பார்க்க வேண்டும்... ஒன்றி விட்டால் தொல்லை தான்...

விமர்சனம் - பார்க்கணும் போல இருக்கே...!

Angel சொன்னது…

///கதைக்காக பார்க்கும்  படத்தில் மதமென்றும் சாதியென்றும் கருத்துக்களை சுமக்க வேண்டியதில்லை ///
அதே அதே எனது கருத்தும் ..உண்மைதான் கப்பேலாவில் பின்னூட்டத்தில் பார்த்தேன் மிக பெரிய கம்பு சுற்றியிருந்தனர் பின்னூட்டவியாதிகள் :)
நானா விஷ்ணுவை விஷ்ணுவாக பார்த்தேன் அனால் பின்னூட்டமிட்டோர் மதம் சார்ந்து  புலம்பியிருந்தனர் . நீங்கள் கூட டிரான்ஸ் படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை :) எவ்வளவு  ரசித்தேன் தெரியுமா அதில் பகத் பாசிலின் நடிப்பை .மக்கள் எல்லாவற்றையும் சீரியஸா எடுக்கிறாங்க :( ஜஸ்ட் என்ஜாய் தி மூவி .
sufiyum சுஜாதாவும் பார்க்கணும்  .ஒரு பாடல் காணொளி பார்த்தேன் பார்க்கும்போதே தோன்றியது ..கடவுளே காதல் வாழட்டும் மதத்தால் எக்காலமும் காதல்   பிரியக்கூடாதது அத்த்னை அழகு அக்காதல் .

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் தனபாலன் அண்ணா...
முகநூலில் கம்பு சுற்றல் நடந்தது... அதான் அந்த வரிகள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரி...

படம் நல்லாயிருக்கும்...

முகநூலில் இது அந்தப் பிரிவின் கதை என அவர்களே கம்பு சுற்றினார்கள்... கேவலமாகவும் எழுதினார்கள்.

டிரான்ஸ் எழுத நினைத்து ஏனோ தள்ளிப் போய்விட்டது... ரெண்டு காரணம்தான் வீட்டிலிருந்து வேலை என்பது பளு கூடுதலாய்... அதுவும் பேச்சிலர் அறையில் அமர்ந்து. ஒற்றைக் கட்டிலில் சிஸ்டம் வைத்து, வேலை பார்ப்பதெல்லாம் சாபம்... இது ஐந்தாவது மாதமாய் நகர்கிறது... முதுகுவலி வந்தாச்சு...

இன்னொரு காரணம் வேலைக்குப் பின் எழுத முடியாமை... இந்தப்படம் கூட பார்த்து ஒரு வாரத்துக்கும் மேலான பின்னே எழுதினேன்... இப்ப ஒரு நாவல் எழுதும் முயற்சியில் அதற்கான வேலைகளும் கூடுதலாய்...

எழுதுவேன்...

கருத்துக்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

படிக்கும்போது படத்தின் கதை இன்பமாக இருக்கிறது, மனதுக்குள் நிழைகிறது...   ஆனால் சமீபத்தில் படம் பார்க்கும் மூடே வரமாட்டேன் என்கிறது!  அதிதி ராவ் வேறு படத்தில் நடித்திருக்கிறாரோ?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஸ்ரீராம் அண்ணா...
படம் நல்லாயிருக்கும்.
ஆமாம் அதிதி தமிழ் அறிமுகம் 2007, சிருங்காரம் என்னும் படத்தில் தமிழ் அறிமுகம். முதல் படம் மலையாளத்தில்.
காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ போன்ற படங்களில் நடித்திருந்தார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

ஆழமான மதிப்புரை. வாய்ப்பிருப்பின் படத்தைப் பார்ப்பேன்.

Chandrakumar சொன்னது…

சமீபத்தில் நான் மிக ரசித்துப் பார்த்த படம் இது. உங்கள் விமர்சனம் மிக அருமை. நீங்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ள குறைகள் முழுதும் சரியானவை;இருந்தும், இதையெல்லாம் மீறி லயிக்க வைப்பது இசையும், தேர்ந்த நடிகர்களின் ஆற்றலுமே. குறிப்பாக அதிதி ராவ். இஸ்லாமியருக்கு எதிராக ஒரு வசை சொல்லும் நாயர் பாத்திரத்திற்கு சித்திக் இஸ்லாமியர் என்பதால் தேர்ந்தேடுக்கப்பட்டார் என்ற உங்கள் கணிப்பில் எனக்கு உடன்பாடில்லை. மலையாள சினிமா அதையெல்லாம் கடந்தது, தொடக்க காலத்திலிருந்தே.வேஷத்திற்கும், நடிகனுக்கும் இடையேயான இடைவெளி அறிந்த உலகம் அது.