மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 24 ஜூலை, 2020

புத்தக விமர்சனம் : யுகபாரதியின் 'பின்பாட்டு'

Raju Murugan க்கு Gypsy ஏற்படுத்திருக்கும் ...
திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி 'பின்பாட்டு' என்றொரு நூல் எழுதியிருக்கிறார் என்பது மட்டுமே தெரியும்... அது எந்த வகையான நூல் என்பதெல்லாம் தெரியாது... கவிஞர் என்பதால் கவிதைப் புத்தகமாக இருக்கக் கூடும் என்று நினைத்திருந்தேன். இயக்குநர் ராஜூ முருகன் கலந்து கொண்ட அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் வட்டத்தின் ஜூம் மீட்டிங்கில் அவரால் தொடர்ந்து பேச முடியாத சூழலில், அந்த நேரத்தில் நட்பின் அடிப்படையில் பேச ஆரம்பித்த யுகபாரதியிடம் நெருடா பின்பாட்டு எழுதப்பட்ட பின்புலம் பற்றிக் கேட்டபோது, அவர் கண்ணதாசன் பற்றிப் பேசிய போதுதான் இந்தப் புத்தகம் பாடல் உருவான பின்புலத்தைச் சொல்லும் புத்தகம் என்பதை அறிய முடிந்தது.

இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் இதில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தையும் ஏற்கனவே வெளிவந்த நூல்களில் இருந்தே திரட்டித் தந்திருக்கிறேன். பாடலாசிரியனாக நான் எதிர்கொண்ட பிரச்சினைகளின் வழியேயும் அத்தகவல்கள் என்னை வந்தடைந்தன. இதுமாதிரி ஒரு பிரச்சினை எழுந்தபோது எனக்கு முன்னே பாடல் எழுதியவர்கள் அதை எப்படிச் சமாளித்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் ஒவ்வொன்றாகச் சேகரிக்கத் தொடங்கினேன். அப்படி சேகரித்ததில் ஒரு சிலவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். தகவல் பிழைகளோ வாக்கியப் பிழைகளோ இருக்குமானால் அடுத்தடுத்த பதிப்புகளில் சரிசெய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்.

திரட்டிய செய்திகள் எல்லாம் நாம் அறியாததே... எத்தனை விதமான செய்திகள்... எத்தனை கதைகள்... கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலுக்கும் பின் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு... அது உண்மையா... பொய்யானெல்லாம் நமக்குத் தெரியாது... சில பாடல்கள் குறித்து கவிஞர் சொல்லியிருக்கும் பின்புலம் நம்மை வியக்க வைக்கிறது. பல பாடல்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்... ஒவ்வொரு கட்டுரையிலும் தான் எழுதிய பாடலையும் சொல்லத் தவறவில்லை.

ஒரு பாடல் எப்படி உதயமாகிறது என்பதைச் சொல்லும்போது முழுக்க முழுக்க ஒரு கவிஞனின் கற்பனையாக அமைவதில்லை என்றும் முன்னால் எழுதிய பாடலாசிரியர்களின் பாதிப்போ அல்லது  கலித்தொகை, குறுந்தொகை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என பலவற்றில் இருந்தும் சில வரிகள் எடுத்தாளப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

உடுமலை நாராயணகவி, மருதகாசி, முத்துலிங்கம், கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து, வாலி, முத்துக்குமார் என பலரின் பாடல்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். அது உருவான கதைகளையும் சொல்லியிருக்கிறார். எங்கு சுற்றினாலும் கண்ணதாசனுக்குள்தான் அதிகம் நிற்கிறார். கண்ணதாசனை விடுத்துப் பேச எதுவுமில்லை என்பதே உண்மை.

ஒரு பாடல் உருவாக மூன்று நான்கு நாட்கள் ஆகும் என்று சொல்லியிருக்கிறார். இளையராஜா ஒரே நாளில் இரண்டு பாடல்பதிவு செய்தார் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்... அதை பாடல் பதிவு பற்றி மட்டுமே பேசப்படுவது என்று சொல்லி, ஆனால் மெட்டு, பாட்டு என மொத்தமாய் மூன்று நாட்கள் ஆகும் என்று சொன்னார்.

தான் எழுத வேண்டிய இடத்தில் வாலியை எழுதச் சொன்னதுடன் தனக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுமோ அதை வாலிக்கு கொடுக்க வேண்டும் என்று கண்ணதாசன் சொன்னதாகவும், வாலியை தன் வாரிசு என்று அறிவித்ததாகவும் எழுதியிருக்கிறார். அன்றைய பாடலாசிரியர்களுக்கு அடுத்து ஒருவன் தனக்குப் போட்டியாக வருகிறான் என்ற எண்ணம் இருப்பதே இல்லை. அவர்களை வளர்த்து விடவே நினைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்.

பல்லாங்குழியின் வட்டம் பாடல், கும்கி, குக்கூ, மாவீரன் கிட்டு படப்பாடல்கள் என தன் பாடல்கள் பலவற்றைப் பற்றி இதில் குறிப்பிட்டிருக்கிறார். தாலாட்டுப் பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள், தொழில் சார்ந்த பாடல்கள் என விரிவான பார்வையாய் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

'உள்ளம் உருகுதையா' என்ற பாடலை யார் எழுதினார்கள் என்பது தெரியாமலே திருச்செந்தூரில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு முஸ்லீம் சிறுவன் 'உள்ளம் உருகுதடா' எனப் பாடியதை நல்லாயிருக்கே எனக் கேட்டு வாங்கி, சினிமாவுக்கு வருமுன் தானே மெட்டமைத்து, தடாவை தய்யா எனப் பாடி பிரபலமாகிறார் டி.எம்.எஸ். அதன் பின் சினிமாவில் புகழ் பெற்று பல வருடங்களுக்குப் பின் தன் பயணத்தை ஒரு ஆவணப் படமாக எடுக்க நினைத்த போது தான் முதலில் பாடிப் பிரபலமான பாடலை யார் எழுதியது என்பது தெரிய வந்த நிகழ்வைச் சொல்லியிருக்கிறார்.

முன்பெல்லாம் இந்திச் சினிமாப் பாடல்களை வைத்துத்தான் தமிழ்ப்படப் பாடல்களுக்கு மெட்டுப் போடப்பட்டது என்றும் அதை மாற்றியவர் ஏ.வி.எம் குமரன்தான் என்பதைச் சொல்லியிருக்கிறார். சுதர்சனம் தானே மெட்டமைக்க யோசித்து, பின் அமைத்த மெட்டுகள் குமரனுக்குப் பிடிக்கவில்லை... பின்னர் வயலின் கலைஞரான செங்கல்வராயன் வாசித்துக் காட்டிய மெட்டுப் பிடித்துப் போக, அதையே பாடலாக்கியிருக்கிறார்கள். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் கூட செங்கல்வராயன் அமைத்த மெட்டுதான் என்றும் அவரை இசையமைப்பாளராக ஆக்க முடியாமல் போன காரணத்தை குமரன் அவர்களே தான் எழுதிய புத்தகத்தில் எழுதியிருப்பதாய்ச் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்கு பாடல் வரிகள் அருவிபோல் வந்து விழும் என்றாலும் அவரே பாடல் எழுத வரியை யோசித்துக் கொண்டிருந்ததையும் உடுமலை நாராயணகவி அவருக்கு 'கலங்காதிரு மனமே' என்ற வரியை எடுத்துக் கொடுத்ததையும், தெய்வம் தந்த வீடு பாடல் எப்படி உருவானது என்பதையும் இன்னும் பல பாடல்கள் உருவான கதைகளையும் பற்றி மிகவும் சுவராஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாடலை இவர் பாடினால் நல்லாயிருக்கும் என்ற நிலையில் வேறொருவர் பாடியது, ஒருவர் எழுதிய பாடலை மற்றொரு கவிஞர் பேரில் நாம் நினைத்துக் கொண்டிருப்பது, ஒருவர் எழுதிய சரணத்துக்கு மற்றொருவர் பல்லவி எழுதியது,  மன வருத்தத்தில் இருவேறு திசையில் பயணித்தாலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காத, நட்பை பேணிய நிகழ்வுகள், கண்ணதாசனைப் போல் இவரென மலையாள கவிஞர் வயலாரைச் சொல்லியது, கண்ணதாசன் கவியரங்கை தான் தொடங்கி வைப்பது நியாயமா என்ற வாலி, பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராசா, திருவிளையாடல் படத்தில் ஒரு பாடலை பாட மறுத்த டி.எம்.எஸ், அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் பற்றி, எம்.எல்.வசந்தகுமாரி பாடவேண்டிய பாடலை எம்,எஸ்.ராஜேஸ்வரி பாடியது யாரால் என இப்படி நிறைய செய்திகள் புத்தகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.

மொத்தம் இருபது கட்டுரைகள்... ஒவ்வொன்றிலும் நாம் அறியாத, அறிந்த பல்வேறு தகவல்கள்... உண்மையிலேயே மிகச் சிறப்பான புத்தகம் இது. நாம் பாடல்களை கேட்டுக் கடந்து போகிறோம்... பிடித்திருந்தால் தொடர்ந்து கேட்கிறோம்... அதன் பின்னணி என்ன என்பதை நாம் எப்போது அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை... இதில் வாசிக்கும் போது பல பாடல்கள் குறித்த செய்திகளை ரொம்பச் சுவராஸ்யமாய் தெரிந்து கொள்ள முடிகிறது.

எல்லாக் கட்டுரைக்குள்ளும் அரசியலும் வந்து வந்து போகிறது. பாடல்களுடன் அரசியலையும் நிறையப் பேசியிருக்கிறார்.

சென்ற வருடத்தில் என் நண்பருக்கு பாட்டெழுதும் வாய்ப்பு வந்தது. போனபோது சொல்லப்பட்ட காட்சிக்குத் தக்க அவன் எழுதிக் கொடுத்ததும் நீங்க எங்க ரசனைப்படி எழுதுங்க... இப்படி அழகிய தமிழைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொல்ல, தன் பெயரையே தமிழுடன் இணைத்துக் கொண்டவன் அவன் என்பதால் என்னால் அப்படி எழுதமுடியாது எனச் சொல்லி வந்துவிட்டான். கவிஞர் யுகபாரதி கூட தன் பாடல்கள் பாடகர்களால் கொலை செய்யப்பட்டபோது இனி எழுதவே வேண்டாமென நினைத்ததாகவும் இப்போதெல்லாம் அப்படி நினைப்பதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

வாசித்தால் ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பெறலாம்.

பின்பாட்டு
யுகபாரதி
நேர்நிறை பதிப்பகம்
முதல் பதிப்பு : 2019
விலை. ரூ. 250
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

மஜீத் சொன்னது…

சிறப்பான விமர்சனம் குமார்
பாராட்டுகளும் வாழ்த்துகளும்

ஸ்ரீராம். சொன்னது…

மிகவும் சுவாரஸ்யமான புத்தகமாய் இருக்கும் என்று தெரிகிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நூல் பற்றிய நல்லதோர் அறிமுகம். பாராட்டுகள் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இதில் சில தகவல்களை அறிந்துள்ளேன்...

நல்லதொரு விமர்சனம்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் போல இருக்கிறதே புத்தகம்!

துளசிதரன்

கீதா

சினிமா பாட்டெழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டம்தான் அவர்கள் எதிர்பார்க்கிறபடி நாம் எழுதி ரொம்ப காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி வரும் ஒரு சிலர் மட்டுமே அப்படி எழுதச் சொல்லுவதில்லை என்பதும் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் நண்பரின் அனுபவம் போல.

கீதா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
நன்றி