மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 28 ஜூலை, 2020

மனசு பேசுகிறது : பனைமரம் கொடுத்த பரிசு

யாவரும் தளத்தில் வெளியான 'பனைமரம்' என்னும் சிறுகதை பலரின் வாழ்த்துகளைப் பெற்றுத் தந்திருப்பதில் மகிழ்ச்சியே. 

எனது முதல் சிறுகதை தினபூமி-கதைபூமியில் வெளியான 'கெட்டும் பட்டிக்காடு சேர்' என்பதாகும். இக்கதை இராணுவவீரன் ஒருவனின் சாவையும் அதற்குப் பின்னான நிகழ்வுகளையும் சொன்ன கதை. எழுதி ஐயாவிடம் காட்டியதும் அவருக்குப் பிடித்துப் போக, அருகில் அமர்ந்திருந்த தேனப்பன் ஐயாவிடம் கொடுத்து 'தம்பி எழுதுன கதை வாசிச்சி... சொல்லுங்க' என்றார். அவரும் வாசித்து நான் வைத்திருந்த தலைப்பு பொருத்தமில்லாமல் இருப்பதாகவும் 'பூமாரங்' என்பது சரியாக வரும் என்று சொல்லி, அந்தப் பேப்பரில் எழுதிக் கொடுத்தார். தேனப்பன் ஐயா மிகச் சிறந்த எழுத்தாளர். அக்கதையே பத்திரிக்கைக்கு அனுப்பப்பட்டு அவர்களால் மேலே சொன்ன பெயரில் வெளியானது. அதுவும் எனது முதல் கதை, கதைபூமியின் முதல் பக்கத்தில் போடப்பட்டிருந்து மறக்க முடியாத நிகழ்வு. அக்கதை பலரால் பேசப்பட்டது.

அதன்பின் பெரும்பாலும் கிராமத்து மண்வாசனையுடன் எழுதப்பட்ட கதைகள் எல்லாமே பலரால் பாராட்டைப் பெற்றவையாக இருந்தது என்றே சொல்லலாம். சென்ற வருடம் ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற 'வீராப்பு', காற்றுவெளியில் வெளிவந்த 'நெஞ்சக்கரை', கைத்தடி மின்னிதழில் வெளியான 'இணை', அகலில் எழுதிய 'சாமியாடி' என முழுக்க முழுக்க எங்கள் பேச்சு வழக்கில் எழுதிய கதைகள் எல்லாமே படித்தவர்களைக் கவர்ந்தன.

முழுக்க முழுக்க கிராமத்துப் பேச்சு வழக்கில் எல்லாக் கதைகளையும் எழுதுவதில்லை. எப்போதேனும் அப்படியான கதைகளை எழுதுவதுண்டு... அப்படித்தான் இந்தப் 'பனைமரம்' சிறுகதையும் எழுதப்பட்டது. யாவரும்.காமில் பதியப்பட்டு பலரால் பேசப்பட்டிருப்பதும் முகநூலில் பகிரப்பட்டிருப்பதும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. என் கதைகள் அதற்கான இடத்தை அடைந்து வருவதில் மகிழ்ச்சியும் கூட. இந்தச் சந்தோஷம் கிடைக்கச் செய்த யாவரும் ஜீவகரிகாலன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்வதுடன் பலர் கதையைப் பகிர்ந்து எழுதியிருந்ததில் இரண்டை மட்டும் இங்கு பகிர்கிறேன்.



எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் கதைகள் கிராமத்து வாழ்வைப் பேசுபவை என்றாலும் அதனூடே பழங்காலக் கதைகளுடன் கூடிய வரலாற்றைச் எல்லாம் சொல்லும் கதைகளாய்த்தான் இருக்கும். இவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது கீழே.

“நிலத்தில் பனைகளின் வாழ்வு போதமழிந்து போன காலம் எவ்வளவு விரைந்து, ஒரு அலையைப்போல எழுந்து அடங்கிவிட்டது என்பதை இப்போதும் நிமிசத்தில் மனம் நினைத்துக் கொள்கிறது.

ஊருக்கென்று ஒரு சத்தம் கொடுத்தால் குருவிகளுக்கும் கொக்கு, நாரைகளுக்கும் மீன்கொத்திக்கும் அப்பாற்பட்டு பனைகளின் சடசடப்புதான் அதிகம் மனதில் எழுந்தடங்குகிறது.

பரிவை சே குமார் இக்கதைக்குள் பயன்படுத்திய வழக்கும், வளப்பமடிக்கும் சொல்மொழியும், நான் நன்கு அறிமுகப்பட்ட திணை மாந்தனின் சாடையோடிருக்கிறது.

நிகழ்கணத்திலிருந்து பழசில் தோய்ந்துபோகும் வார்ப்புள்ள கதை. நுணுக்கமான சில நம்பகங்கள், பழசுகளின் சொவை இரண்டும், நட்சத்திரம் விழுந்தால் பூவை நினைக்கச் சொல்வதிலும், கருப்பட்டி ஏலக்காய் தட்டிப்போட்டு பனம்பழம் அவித்துத் தின்பதிலும் எட்டிப்பார்க்கின்றன”

வாழ்த்துகள். நித்யா குமார்

அடுத்தது எங்கள் குழுமத்தின் மூலம் அறிமுகமாகி, நெருக்கமான அண்ணனாகிப் போன பாலாஜி பாஸ்கரன் குழுமக் கூட்டங்களில் சிரிக்கச் சிரிக்க மதுரை மண்வாசனையுடன் பேசக்கூடியவர். அமீரகத்தில் பட்டிமன்றங்களில் கலக்கி வருபவர். இவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது.

ஒரு கதை சொல்றேன்னு சொல்லிட்டு எங்கள் மண்ணின் வாழ்வியலை அப்படியே இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார்... மணக்க மணக்க மண்ணின் மொழி... பனையை சினிமாவில் மட்டும் பார்த்திருப்பவர்களுக்கு இவர் இதில் பனையைப் பற்றி பதிவு செய்திருக்கும் தகவல்கள் எல்லாம் வியப்பை ஏற்படுத்தலாம்... ஏன் கூந்தப்பனையை கிராம வாசம் உள்ளவர்களுக்குமே மீண்டும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லுவேன்... அந்த மொழி நடையை வாசிக்கும் போது, அப்புறம் தம்பி குமாரு சொல்லுப்பா கேப்போம், என கூட உக்காந்து பேசுவது போலவே உள்ளது...
உறவுமுறைகள்
பொருட்களின் பெயர்கள்
பனை வகைகள்
கால்நடைகள்
பனையின் பயன்கள்
பழனி பாதயாத்திரை
மாட்டுக்கொட்டம் கட்டுதல்
பனை ஓலை தென்னங்கீத்து
ஊர்ச்சாமி
கண்மாய்
காடு
இளமை
காலமாற்றம்
ஆதங்கம்
என எல்லாவற்றையும் கலந்து கட்டி எங்கள் மண்ணின் இலக்கியம் தந்திருக்கிறார்... தம்பி குமார்... மிகவும் ரசித்துப் படித்தேன்... வாழ்த்துகள்.

இன்னும் பலர் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்கும் நன்றி. உங்களால்தான் என் எழுத்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சமீபமாய் நான் எழுதிய காணொளி கலந்துரையாடல்கள் குறித்த பகிர்வுக்கு சம்பந்தப்பட்டவர்களே வாழ்த்துச் சொல்லி கருத்து இடுவதும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. எழுத்து தனக்கான இடத்தை அதுவே பிடித்துக் கொள்ளும். அதை நாம் தூக்கி கொண்டு போய் வைக்க வேண்டும் என்பதில்லை என்பதுதான் எப்பவும் எனது எண்ணமாக இருக்கும். இப்போது என் கதைகள் பேசு பொருளாக மாறியிருப்பது அதற்கான அறிகுறி என்றுதான் நினைக்கிறேன். எனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'எதிர்சேவை'யில் இருக்கும் எல்லாக் கதைகளுமே இங்கு எழுதப்பட்டு பலரால் பேசப்பட்ட கதைகள்தான்... இப்போது புத்தகத்தை வாசித்துக் கருத்துப் பகிர்ந்தவர்களில் யாருமே அதில் இருக்கும் கதைகளைக் குறை சொல்லவில்லை என்பதும் கூட எனக்கான வெற்றியாகத்தான் நினைக்கிறேன்.

கதையை வாசித்து யாவரும் தளத்தில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட தனபாலன் அண்ணா, துளசிதரன் அண்ணா, கீதா அக்கா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

டிஸ்கி : மீண்டும் என்னால் மற்றவர்களின் தளத்தில் கருத்து இடமுடியவில்லை. நேற்று கரந்தை ஜெயக்குமார் ஐயா, தனபாலன் அண்ணா உள்ளிட்ட பலரின் பக்கத்தில் கருத்துப் போட்டும் அது அங்கு பதிவாகவில்லை என்பதால் அது சரியாகும் வரை வாசிப்பாளனாக மட்டுமே உங்கள் தளங்கள் வருவேன். நன்றி.

-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துகள் குமார்!!

மேலும் மேலும் நிறைய எழுத வேண்டும் நீங்கள்.

துளசிதரன்

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதைகள் யதார்த்தமாக மனதோடு ஒன்றி விடுகின்றன... ஆனால் கதைகள் என்று சொல்ல மனம் வருவதில்லை... ஏன்னென்றால் அவை வாசிக்கும் போது நிகழ்வுகள் கண்ணில் தெரிவதால்... வாழ்த்துகள் குமார்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றி துளசி அண்ணா , கீதா அக்கா.

-----------

ரொம்ப நன்றி தனபாலன் அண்ணா.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே

KILLERGEE Devakottai சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே...
தொடரட்டும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நான் ரசிக்கும் நடைகளில் ஒன்று உங்களுடையது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான உங்கள் எழுத்து தொடரட்டும். வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்.