மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 27 ஜூலை, 2020

'பாரதி' பற்றி கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

(மிக நீளமான பதிவு... பிரித்துப் பிரித்துப் போட்டால் பதிவின் சுவை கெட்டுவிடும் என்பதால் மொத்தப் பதிவும் இங்கே... பொறுமையாக வாசியுங்கள்.)

'பாரதி'

அந்த முண்டாசுக் கவிஞன் மீது யாருக்குத்தான் நேசமிருக்காது. பள்ளிப் படிப்பு வரை பாரதியை பாரதியார் பாடல்கள் என்னும் புத்தகத்தின் மூலமாக மட்டுமே தெரியும்... தமிழ் மீதோ இலக்கியத்தின் மீதோ எந்த நாட்டமும் இருந்ததில்லை. கல்லூரிக்குப் போனபின் ஐயாவின் பிள்ளைகளான பின்தான் பாரதியைப் பற்றி அவரிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்ள  முடிந்தது. தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றம் தேவகோட்டைக் கிளையில் இணைந்தபின் பாரதி விழாக்களில் பலரின் பேச்சுக்களைக் கேட்க முடிந்தது. அதன் பின்னே பாரதி மீதான நேசம் நெருக்கமானது.

சரி விஷயத்துக்கு வருவோம்... 

Kadarkarai Maththavilasa Angatham Book Reviews | கடற்கரய் ...

இரண்டு வாரங்களுக்கு முன் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் காணொளிக் கருத்தரங்கில், திரு. கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் பாரதி குறித்துப் பேசினார். இப்படித்தான் இருந்தான் பாரதி என ஒரு பிம்பத்தை நம்முள் இருத்தி வைத்திருக்கும் வரலாறுகளை எல்லாம் பொடிப்பொடியாக்கி, அவன் இப்படியல்லவா இருந்தான்... இதுதான் அவனின் உருவம்... இதுதான் அவனின் குரல்... இதுதான் அவனின் நடை என பல அறியாத தகவல்களை  மடை திறந்த வெள்ளமென, ஆர்ப்பரிக்கும் கடலென, வருடம், நாள் என எல்லாவற்றுடனும் சேர்த்து அமுதெனப் பருக அள்ளிக் கொடுத்தார்.

இந்த நிகழ்வு முடிந்த பின் இடையறாத வேலைகளால் எழுத இயலவில்லை... மேலும் நீண்ட நேரம் பேசினார்... நிறைவாய் பேசினார்... அதையெல்லாம் எழுத்தில் கொண்டு வருதல் என்பது சிரமமே என்ற எண்ணமுமே எழுதாததற்கு காரணம் என்பதே உண்மை. நேற்று வேலை நேரத்தில் மீண்டும் வீடியோவை ஓடவிட்டு,  அதைக் கேட்டபடி வேலை செய்து அதன் பின் மாலை ஆறு மணிக்கு உட்கார்ந்து எழுத ஆரம்பித்து முடிந்தளவு சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

பாரதி 1904-ல் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்து சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்ததில் ஆரம்பித்து கடலலையென ஆர்ப்பரித்து, சூறாவளியாய் சுழன்று சுனாமியாய் அடித்து ஆடினார் திரு.கடற்கரய். அதை எழுத்தில் கொண்டு வருவது என்பது சுலபமல்ல... நான் இங்கு கொடுத்திருப்பதை விட, கானல் பக்கத்தில் இருக்கும் அவரின் காணொளியைக் கேட்டால் நிறைய விபரங்களை ரசித்துக் கேட்கலாம்.

பாரதி சுதேசமித்திரனில் பார்த்த வேலை என்பது ஆங்கிலத்தில் இருக்கும் செய்திகளைத் தமிழாக்கம் செய்து கொடுப்பதுதான் என்றும் ஆனால் ஒரு பிரபல மேடைப்பேச்சாளர், வெளிநாடுகளில் எல்லாம் போய் தமிழை முழங்குபவரின் பேச்சைக் கேட்க நேர்ந்தபோது பாரதி தேசிய எழுச்சிமிக்க கட்டுரைகளைச் சுதேசமித்திரனில் எழுதி, தமிழக மக்கள் மனதில் சுதந்திர எழுச்சியை வளர்த்தார் என இல்லாத ஒன்றைச் சொன்னார் என்றார்.

1905 மார்ச் மாதம் பாரதி கலந்து கொண்ட நிகழ்வில் 'கருணை' என்ற தலைப்பில் பேசியதை, சுதேசமித்திரன் கட்டுரையாக வெளியிட்டு இருக்கிறது. அந்த உரைதான் சுதேசமித்திரனில் பாரதியின் முதல் எழுத்து என்பதே கடந்த சில காலம் வரையான வரலாறு என்று சொல்லி, ஆனால் ய.மணிகண்டன் என்பவரின் ஆய்வில் கருணை என்ற தலைப்பில் பேசுவதற்கு முன் வேறொரு கூட்டத்தில் பேசிய விபரம் சுதேசமித்திரனில் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பதாகவும் சொன்னார்.

சென்னையில் பாரதி முதன் முதலில் பேசிய மேடைப் பேச்சு பெண்ணுரிமை பற்றியதாகும். ஒரு பெண் வயதுக்கு வருவதற்கு முன்னால் திருமணம் செய்வதை (ருது மதி விவாகம்) ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் விதவைகள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயப்படுத்துதலை உடைக்க வேண்டும் என்றும் பெண்கள் முன்னேற மூன்று வழிகள் ('கல்வி கற்க வேண்டும், கட்டாயம் கல்வி கற்க வேண்டும், கல்வியைத் தவிர அவர்கள் முன்னேற வேறு வழியே இல்லை') என்றும் மிக முக்கியமான மூன்று விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

1905 ஆகஸ்டில் மாநிலக் கல்லூரியில் மாணவர் சங்க பிரதிநிதிகள் அழைப்பின் பேரில் பேசியிருக்கிறார்.  இந்தக் கல்லூரியில் பாரதி மூன்று முறை பேசியதாக இக்கல்லூரியின் நூற்றாண்டு விழா மலரில் சொல்லப்பட்டிருப்பதாகவும் இக்கல்லூரி விழாக்கள் சிலவற்றில் அழைப்பே இல்லாமல் பாரதி கலந்து கொண்டார் என்றும் கடற்கராய் சொன்னார்.

நாம் இன்று வியந்து பாராட்டும் பாரதியின் பாடலொன்றை மாநிலக் கல்லூரியில் பண்டிதர்கள் சிலர் இலக்கண மரபுப்படி இல்லாத இக்கவிதை சிறப்பான கவிதை இல்லையென கேவலமாகப் பேச, பாரதி மனம் வருந்தி அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டதாகவும் சொன்னார்.

பாரதியின் பிம்பம் பற்றி நமக்குள் ஒரு சித்திரம் இருக்கிறது... அவரைப் பார்க்கும் போது நமக்கு அவர் பெரிய பண்டிதர் போல, ஒரு இராஜகுமாரனைப் போல இருப்பார் என்று நாம் நினைத்திருக்கிறோம்... ஆனால் அவர் மேடைகளில் திக்கித்திக்கித்தான் பேசியிருக்கிறார் என்ற குறிப்பு தனக்கு கிடைத்ததாக அவர் சொல்லும் போது மீசைக் கவிஞனின் குரல் எப்படியிருந்திருக்கும் என நம்மை யோசிக்க வைக்கிறது.

காங்கிரஸ் அந்நியத் துணிகளை அணியக் கூடாது என்று சொல்வதற்கு முன்னால் பாரதி, காங்கிரஸிடம் அந்நியத் துணிகளை பகிஷ்கரியுங்கள் எனச் சொல்லியிருக்கிறார். பாரதி மேடைப்பேச்சாளன் என்பது மட்டுமல்ல.... அவன் தெருப் பேச்சுக்காரன்... அவரும் அவரின் தெலுங்கு நண்பரான சுரேந்திரநாத் என்பவரும் மூர்மார்க்கெட் மூத்தர சந்துகளில் நின்று வீரமுழக்கமிட்ட குறிப்புகள் ஆங்கிலேயர்கள் எழுதிய நூல்களில் இருக்கின்றன என்றும், இந்த ஆள் அபாயமானவன் என பிரிட்டீஷ் அரசாங்கம் எழுதி வைத்திருந்ததாகவும் சொன்னார்.

தேச விடுதலைக்காக பாரதிக்கு முன்னால் சிறை சென்ற சுரேந்திரநாத் பற்றிய தகவல்கள் பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதே உண்மை. பாரதி தமிழில் பேசினால் சுரேந்திரநாத் தெலுங்கில் பேசுவார் என்ற செய்தியைச் சொன்னதுடன் அவர் ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவர் என்றும் நாம் அறியாத தகவல்களைச் சொன்னார்.

சுதேசமித்திரனில் சாதாரணக் கட்டுரைகள் மட்டுமே எழுதிவந்த பாரதிக்கு பெரும் களத்தை ஏற்படுத்திக் கொடுத்தது 'இந்தியா' என்னும் பத்திரிக்கைதான் என்றும், பாலபாரதா என்ற ஆங்கிலப் பத்திரிக்கையில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி வந்த பாரதி, பெண்களுக்கென வெளிவந்த சக்கரவர்த்தினியில் ஆசிரியராய் இருந்து பெண்ணுரிமைக்கான கட்டுரைகள் எழுதி, பெண்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்த முதல் ஆண்மகன் என்பதைப் பெருமையாகச் சொன்னார்.

தன்னைப் பற்றி கவலைப்பட்டு கடிதம் எழுதிய செல்லம்மாவிடம் 'என்னைப் பற்றிக் கவலைப்படாதே... தமிழ்ப்படி... எனக்குத் தமிழில் கடிதம் எழுது'  எனச் சொன்னாராம் பாரதி. அந்தக் காலத்தில் மனைவியைப் படி எனச் சொன்ன பாரதி குடும்பத்தைக் கவனிக்கவில்லை, பெண்டாட்டியைத் தவிக்க விட்டார் என நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பொதுவாழ்க்கைகெனத் தன்னை முன்னிறுத்துவோர் குடும்பப் பாரத்தைச் சுமப்பதில்லை. அக்குடும்பங்களில் எல்லாம் பெண்களே சுமப்பார்கள்... இதை நான் பார்த்திருக்கிறேன்.

வ.ஊ.சி. சுதேசிக் கப்பலைக் கட்ட ஆரம்பித்த போதுதான் பாரதி மிகத் தீவிரமாக சுதேசி இயக்கத்துக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்ததாகவும், அதன்பின்னேதான் வெறும் தெருப்பேச்சுக்காரன் என நினைத்த ஆங்கில அரசு இவன் விவகாரமானவன் என்றும்  இவன் கவனிக்கப்பட வேண்டிய ஆள் என்றும் ஆங்கில அரசு முடிவு செய்ததாம்.

இந்திய தேசிய விடுதலைக்காக போராடிய லியாகத் உசேன், அப்துல் கபூர் போன்றவர்களுக்கு ஆங்கில அரசு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது... இந்த இன்னலைத் தீர்ப்பதற்காக நான் ஆதரவு கொடுக்கிறேன் என்ற தீர்மானத்தை தூத்துக்குடி சுதேசிக் கூட்டத்தில் பாரதி நிறைவேற்றியதாகவும், இந்தக் கூட்டம் மிகப்பெரிய எழுச்சிக் கூட்டமாக அமைந்ததாகவும் சொன்னார். வ.ஊ.சியையும் சுப்பிரமணிய சிவாவையும் அழைத்துப் பேசிய ஆங்கில அரசு, கொடுமையான தண்டனை கொடுத்ததாகவும் அதன் பின் ஒரு சட்டம் இயற்றியதாகவும் சொன்னார்.

நேரு, காந்திகள் எல்லாம் இல்லாத ஒரு காலத்தில் லிபின் சந்திரபால் என்பவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது தமிழ்நாட்டில் விடுதலைப் பெருவிழாவாக, மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டிக் கொண்டாடிய பாரதி, அந்தக் கூட்டத்தில்தான் வந்தேமாதரம் என்ற பாடலைப் பாடிப் பேசியிருக்கிறார். அந்தப் பாடல் கொடுத்த உணர்ச்சி வேகத்தில் ஆங்கில அரசுக்கு அடிவருடியாக இருக்கும் காவலர்களைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடித்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் இருபதனாயிரம் பேர் கலந்து கொண்டதாக ஆங்கில அரசுக் குறிப்பில் இருப்பதாகச் சொன்னதுடன் அதே லிபின் சந்திரபாலை சென்னைக்கு அழைத்து மிகப்பெரிய கூட்டத்தை பாரதியார் நடத்திய வரலாறும் இருப்பதாகவும். மேலும் ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்கு எதிராக ஏற்படுத்திய சட்டத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவே இதை எதிர்க்கவே செய்வோமென இந்த கூட்டத்தில் பாரதி முழக்கமிட்டதாகவும் ஆங்கிலேயக் குறிப்புக்களில் இருக்கிறது என்றும் சொன்னார்.

மிக அழகாக சங்கீத ரசனையுடன் சொற்பிரயோகம் வீணாகாமல் பாடக்கூடியவர் பாரதி என திரு.வி.க.வும் சத்தியமூர்த்தியும் சாமிநாதசர்மாவும் வாராவும் நாமக்கல் கவிஞரும் சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் பேசுவதில் திக்கிய பாரதி மேடைகளில் பாடல் பாடுவதில் தனிச்சிறப்புடன் விளங்கினார் என்பதையும் இந்தப் பேச்சில் அவர் பதிவு செய்யத் தவறவில்லை.

தூத்துக்குடி சுதேசி இயக்க கூட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி குறித்து சென்னைக் கடற்கரையில் பேசிய பாரதி, சுதேசி இயக்கப் போராட்டக்காரர்களுக்காக நிதி திரட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்னெ வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். பொருள் நிறைந்தோர் பொற்கிழி தாரீர் என்ற சொற்றொடரை எழுதியவன் பாரதி, இதைக் கலைஞர் மேடைகள் தோறும் சொல்லி வந்தார் என்பதையும் இடைச் செருகலாய்ச் சொன்னார்.

மெரினாவில் கூட்டம் போடக்கூடாது என்பது ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குப் பின் வந்தது அல்ல... பாரதி மெரினாவில் கூட்டம் போடக்கூடாதென ஆங்கில அரசாங்கம் தடை விதித்திருந்தது என்றும் ஆனால் அதை நாங்கள் மீறுவோம் என பாரதி மற்ற கூட்டங்களில் பேசியதாகவும் சொன்னார். எத்தனை தீர்க்கமான மனிதன் பாரதி, இவனைத்தான் கோவணத்தைச் சுருட்டிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு ஓடினான் என்று சொல்கிறார்கள். அவன் ஆங்கிலேயரை நேரடியாக எதிர்த்தவன் என்பதை நாம் உணர வேண்டும் என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தூத்துக்குடிக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் இடையிலான வரலாறு இன்று நேற்றல்ல... சுதந்திரப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அம்மக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி இருக்கிறார்கள் என்ற வரலாற்றையும் சொன்னார்.

தூத்துக்குடி கலவரம் குறித்து பாரதி இந்தியா பத்திரிக்கையில் எழுதித் தள்ளி, நிதி திரட்ட முற்பட்டதால், ஆங்கில அரசு இனிப் பாரதியை விட்டு வைக்கக் கூடாதென நினைக்க ஆரம்பித்த நேரத்தில், பாரதியின் நண்பர்கள் வழிகாட்டுதலின் காரணமாக அரசியல் அநாதையாக பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுகிறார். இங்கும் பிரச்சினை வரும்போது அரசியல் அநாதையாக வேறொரு நாட்டையோ பிரதேசத்தையோ நாடுவதை ஆரம்பித்து வைத்தவன் பாரதி என்பதையும் சிரித்தபடியே சொன்னார். கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நாடு விட்டு நாடு போய் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் கண்ணுக்குள் வந்து சென்றிருப்பார்கள்.

1919-ல் விக்டோரியா ஹாலில் பாரதி ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேச்சைக் கேட்க ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என டிக்கெட் அடித்து நண்பர்களிடம் கொடுத்து விற்கச் சொல்லியிருக்கிறார். அந்தக் காலத்தில் ஒரு ரூபாய் என்பது மூன்று நாட்களின் செலவை சரி செய்யக்கூடிய தொகை என்பதையும், அப்போதே தன் பேச்சின் மீதான நம்பிக்கையில் ஒரு ரூபாய் என நிர்ணயித்த மனதைரியத்தையும் பாராட்டிப் பகிர்ந்து கொண்டார்.

1921-ல் சத்தியமூர்த்தி பேச வேண்டிய கூட்டத்தில் பாரதி பாடினால்தான் மற்றவர்கள் பேச வேண்டும் என மக்கள் ஆர்ப்பரிக்க, சத்தியமூர்த்தியை உட்கார வைத்துவிட்டு பாரதி பேசியிருக்கிறார்... அப்படியென்றால் மக்கள் மத்தியில் பாரதிக்கு இருந்த மரியாதை எத்தகையது என்பதை நாம் உணரலாம்.

பாண்டிச்சேரியில் பாரதியைக் கண்காணிக்க ஆங்கில அரசு வேலைக்கு அமர்த்திய போலீஸ்காரர்கள் மொத்தம் 200 பேர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... ஆங்கில அரசுக்கு அவன் எவ்வளவு தூரத்துக்கு பிரச்சனையானவனாக இருந்திருப்பான் என்று நினைத்துப் பாருங்கள். இதையெல்லாம் அவர் சொன்னபோது பாரதி நெஞ்சுக்குள் தீயாய் நின்றான்.

சென்னை சைதாப்பேட்டையில் பாரதி கலந்து கொண்ட கூட்டத்தில் மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் பேசியிருக்கிறார். அப்போது தனக்குப் போடப்பட்ட மாலையைக் கழட்டாமல், தான் செல்ல அமர்த்தப்பட்டிருந்த ஜட்கா வண்டியை வேண்டாமெனச் சொல்லிவிட்டு திருவல்லிக்கேணி வரை நடந்தே சென்றிருக்கிறார்... ஆம் பாரதிக்கு மலர்கள் மீது மட்டற்ற பிரியமாம்.

சாமிநாத சர்மா கலந்து கொண்ட கூட்டத்தில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு இடையே புகுந்து போன பாரதியிடம் சுற்றிப் போகாமல் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இடையே போகலாமா எனக் கேட்க, எனக்கு நேர்வழிதான் பிடிக்கும் என்றாராம்.

ஆங்கில அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்த எல்லாருமே அரசியல் அடைக்கலமாக பாண்டிச்சேரியைத்தான் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் இந்நிகழ்வில் கடற்கராய் அவர்கள் பகிர்ந்து கொண்டார். அதற்கு என்ன காரணம் என்பதையும் சொன்னார்.

ஆங்கில அரசுக்குப் பயந்து ஓடியவன் என்று சொல்லப்பட்ட பாரதி, பாண்டிச்சேரியில் தலைமறைவாக இருக்கவில்லை, பூசாரி வேலை செய்யவில்லை... ஒரே வாரத்தில் 'இந்தியா' பத்திரிக்கையின் அச்சு இயந்திரங்களை ஆங்கிலேயருக்குத் தெரியாமல் அங்கு கொண்டு சென்று ஒரு மாதத்தில் அங்கிருந்து இந்தியா பத்திரிக்கையை மீண்டும் தொடங்கியிருக்கிறார். பயந்து ஓடியவன் தன் பெயரைப் போட்டுப் பத்திரிக்கை நடத்துவானா...? பாரதி மீதான வன்மமே அவன் தப்பியோடினான் என வரலாற்றைப் பதிய வைக்கும் முயற்சி என்றார்.

செல்லம்மாவைப் பின்தொடரும் உளவாளிகளால் எரிச்சல் அடைபவர் பாரதியிடமே குறைபட, பாரதியோ பிரிட்டீஷ் அரசாங்க அதிகாரியைக் கூப்பிட்டு என் மனைவி பின்னால் சும்மா போகாதே... அவளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடு என்று சொல்ல, அவரும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். ஒரு அதிகாரியிடம்... அதுவும் தன்னையும் தன் குடும்பத்தையும் கண்காணிக்கும் அதிகாரியிடம் வேலை பார்த்துக் கொடுக்கச் சொல்கிறார் என்றால் எத்தனை மனதைரியம் அந்த மனிதனுக்குள் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா...? 

காவலர்கள் தன் பின்னே சுற்றிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்குள் உக்கார்ந்து 'ஓடி விளையாடு பாப்பா' எழுதியவன் பாரதி என்றும் இன்ப ரசமான நிறையப் பாடல்களை அப்போதுதான் அவன் எழுதினான் என்றும் சொன்னார். பாதுகாப்பாய் அமர்ந்து பாப்பா பாட்டெல்லாம் எழுதியிருப்பார் போல.

கடையத்துக்குச் செல்லும் பாரதி காரைக்காலில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கிறார். இருபத்தி நான்கு நாட்கள் உள்ளிருந்து வெளியில் வரும் பாரதி மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளியில் வந்ததாக ஒரு பொய்யான தகவல் தமிழகத்தில் உலவுவதாகவும், அன்னி பெசன்ட் அம்மையார், ரங்கசாமி ஐயங்கார் தலையீட்டின் பேரில் விடுதலைக்காக பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கச் சொல்ல, பாரதியோ மறுத்து விடுகிறார். பின்னான நாட்களில் அதாவது 1918-ல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அரசியல் ரீதியாக யாரையும் கைது செய்ய முடியாது என்ற ஒப்பந்தம் இருக்கிறது என்றும் அதனால் பாரதியின் அரசியல் கைது செல்லாது எனவும் வாதிடப்பட, அவர் விடுதலை செய்யப்படுகிறார். இனி வரும் காலத்தில் எழுதும் போது ஆங்கில அரசாங்கத்திடம் அனுமதி பெற்று பதிப்பிக்கிறேன் என உத்தரவாதக் கடிதம் மட்டுமே கொடுத்திருக்கிறார். உத்திரவாதக் கடிதம் என்பது வேறு... மன்னிப்புக் கடிதம் வேறு... அதைப் புரிந்து கொள்ளுங்கள் வெறுப்பு அரசியல் செய்யும் மனிதர்களே என விளக்கமாகச் சொன்னார்.

பெண் விடுதலைக்காக இஸ்லாமிய சமூகத்தை முன் வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறார் பாரதி. அதில் ஒருவருக்கு நான்கு மனைவிகள் என்பதாய் எழுதி, சுதேசமித்திரனில் அக்கதை வெளியாக, பாரதியின் நண்பர் ஒருவர் ஒரு பெண்ணுக்கு விலக்குக் கொடுக்காமல் இஸ்லாத்தில் அடுத்த பெண்ணைக் கட்டமுடியாது என்று சொல்ல, அதற்காக சுதேசமித்திரனில் மன்னிப்புக் கடிதம் எழுதியிருக்கிறார். அதுதான் அவன் எழுதிய முதலும் கடைசியுமான மன்னிப்புக்கடிதம். இங்கே மன்னிப்புக் கடிதம் அங்கே ஆங்கிலேயரிடம் கொடுத்தது உத்தரவாதக் கடிதம் என விளக்கினார்.

கடையம் சென்ற பாரதிக்கு அவ்வூர் நிம்மதியைக் கொடுக்கவில்லை என்றும், அதன் பின் அவர் காரைக்குடிக்குச் சென்று கூட்டங்களில் பேசியதாகவும் சொன்னார். தடியைத் தூக்கிப் போட்டு பிடித்தபடம் காரைக்குடியில் எடுக்கப்பட்டதுதானே. அதில் அந்தக் கவிஞனிடம் எத்தனை கம்பீரம் இருக்கும் தெரியுமா..?

1919-ல் திருவல்லிக்கேணி கூட்டத்துக்கு காந்தியைத் தலைமையேற்க அழைக்க, அவரோ மறுக்க, பாரதி மட்டுமே சிங்கமென அக்கூட்டத்தில் முழங்கியிருக்கிறான்... எதைப்பற்றியும் கவலைப்படாதவன் பாரதி... தனக்குச் சரியானதெதுவோ அதைச் செய்யத் தவறாதவன் பாரதி.

பாரதி ஒரு பக்கம் எழுத்தாளன்... ஒரு பக்கம் கவிஞன்... ஒரு பக்கம் பத்திரிக்கையாளன்... இன்னொரு பக்கமோ ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசக்கூடிய ஆற்றல்மிக்க பேச்சாளன். பல இடங்களிலும் அவனின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது என்றார்.

நீங்கள் மனசுக்குள் வைத்திருக்கும் பாரதி எலும்பும் தோலுமாக இருந்தான்... திக்கித் திக்கி பேசினான்... அழகான செந்தமிழ் நடையில் பாடிய பாரதி, பண்டிதர்கள் நிறைந்த மேடையில் சரியான பாடலை பாடவில்லை என விரட்டப்பட்டான்... இத்தனை இன்னலைகளைப் பெற்ற பாரதி ஒரு போதும் தன் வறுமையை, ஏழ்மையைப் பற்றிப் பாடவில்லை... தன் நிலமையை ஊருக்குச் சொல்ல நினைக்கவில்லை. இதையெல்லாம் மறைத்து 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்றுதான் அவன் பாடினான் என தன் உரையை முடித்துக் கொண்டார்.

இந்தத் தலைப்பில் நிறையப் பேசலாம்... இதைச் சுருக்கி உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் என்றும் சொன்னார். இவ்வளவு விரிவாகப் பேசியதே சுருக்கம் என்றால் இன்னும் எவ்வளவு தகவல் இருக்கும் நாம் அறியாதவை...

அவர் முடித்த பின் கேட்டவர்களுக்கெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அத்தனை ஆச்சர்யம்... அற்புதமான உரை...  

பாரதி உணர்ச்சிமிக்க பேச்சாளனாக இல்லாதிருந்திருக்கலாம்... அவனைப் பற்றி மிக அற்புதமாக உரையாற்றினீர்கள் என ஆசிப் அண்ணன் உணர்ச்சிப் பெருக்கோடு சொன்னார். அவரின் உணர்ச்சிப் பெருக்கு என்பது அங்கு கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் நிலையையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

பாரதி விஜயம் நூலில் இருந்து ஆசிப் அண்ணன் கேட்ட கேள்வி, குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிக்கையில் இயங்கிக் கொண்டிருந்த நீங்கள் பாரதி விஜயம் நூலுக்காக இரண்டு வருடங்கள் செலவு செய்திருக்கிறீர்கள்... அது குறித்துச் சொல்லுங்களேன் என்பதாய் இருந்தது.

நான் ஆய்வாளனில்லை... தமிழில் சாதனை செய்தவர்கள் அனைவருமே பத்திரிக்கையாளர்கள்... வெகுஜனப் பத்திரிக்கைகள் கொடுத்தவர்கள்தான் புதுமைப்பித்தன், அழகிரிசாமி, பாரதி, வா.ரா, தி.ஜா, சாமிநாத சர்மா, திரு.வி.க. என்றும், தமிழில் பல்வேறு சாதனைகளைச் செய்தவர்கள் வெகுஜனப் பத்திரிக்கையில் இருந்து வந்தவர்கள்தான் என்றும் சொன்னார். நான் கேட்ட கேள்வியை தாங்கள் சரியாக உள்வாங்கவில்லை என நினைக்கிறேன் என ஆசிப் அண்ணன் சொன்னபோது கேள்வி புரிந்தது இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன் எனத் தொடர்ந்தார்.

நான் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரைக்கு எப்படி மெனக்கெடுவேனோ அதைப்போல்தான் பாரதி பற்றிய கட்டுரைக்கும் செய்வேன்... என் வேலையை நான் நேசிப்பேன்... எனக்கு என் வேலைதான் முக்கியம் என்றார். வேலையை நேசித்தால்தான் செய்யும் வேலையில் நேர்த்தியிருக்கும்.

பாரதியைப் பற்றித் தேட ஆரம்பித்தது ஆய்வாளனாக அல்ல... பள்ளிப் பாடத்திட்டத்தில் பாரதி யானை அடித்துக் கொல்லப்பட்டான் என்று படித்தவன் ஆனால் பின்னாளில் அவன் யானை அடித்துக் கொல்லப்படவில்லை என்பதை அறிந்து கொண்டேன். நம் பாடப்புத்தகமே நமக்கு பொய்யைத்தான் சொல்லித் தந்திருக்கிறது என்றார்.

தன் நண்பர்களுடன் கடற்கரையில் சுத்தும் போது இரவு பனிரெண்டு மணிக்கு பாரதியார் பாடல்களைப் பாடித்திரிந்தவன் நான் என்றும் இந்தாளு எப்பவுமே முண்டாசு கட்டிக்கிட்டு கோட்டுப் போட்டுக்கிட்டுத்தான் திரிவானா என்று யோசித்ததன் விளையே அவன் குறித்த தேடல் என்றும் சொன்னவர், அதன்பின்தான் 1921-ல் அவன் இறந்ததில் இருந்து தொடங்கி அவனது நூற்றாண்டான 1981 வரை அவனைப் பற்றிய தீவிரத் தேடலில் இறங்கினேன் என்றார். எனது பத்தாண்டு காலத் தேடலில் என்னிடம் பாரதி குறித்து அறியாத செய்திகள் ஆயிரம் பக்கம் இருந்தது என்றார். கேட்கும் போதே மலைப்பாக இருந்தது.

அவரது உறவினர்கள் நண்பர்கள் எழுதிய கட்டுரைகளில் நிறைய உண்மைகள் இருந்தன என்று சொன்னவர், மிடுக்காய் நடந்த பாரதிக்கு ஆணிக்கால் என ஒருவரும், கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு இருக்கும் பாரதி, தன் ஒல்லியான உடம்பில் துருத்திக் கொண்டிருக்கும் நெஞ்செலும்பை மறைப்பதற்காக வேஷ்டியைச் சுற்றிக் கொள்வார் என ஒருவரும், காலையில் குளிக்கமாட்டார் பணிரெண்டு மணிக்கு மேல் அண்டாவில் தண்ணீர் நிறைத்து அதற்குள் இறங்கி மோந்து ஊத்திக் குளிப்பார்... அப்படிக் குளிக்கும் போது அவரின் பின் முதுகு நனையாது என ஒருவரும், பாடும் போது வாய் திக்காது... பேசும் போது திக்கும் ஒருவரும், வாழைப்பழத்தில் சர்க்கரை வைத்து தின்பது அவனுக்குப் ரொம்பப் பிடிக்கும்  என ஒருவரும் எழுதியிருக்கிறார்கள் என்றார்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நினைத்தே பாரதி விஜயம் புத்தகத்தை எழுதினேன். புத்தகம் வெளிவந்ததும் எவன்டா இவன்னு பண்டிதர் கூட்டம் எனக்கெதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள். இதனால் ஒரு வருடம் நிம்மதியை இழந்தேன். அதன்பின்தான் அவர்களை சட்டப்படி எதிர்ப்பதென முடிவு செய்து வழக்குப் பதிவு செய்த போது இந்த நாசகார கும்பல் ஓடிவிட்டது. என்னுடன் அன்றும் இன்றும் எப்போதும் பாரதி நிற்கிறான் என்றார்.

இந்த நூல் குறித்து நாற்பது பக்க அறிக்கை ஒன்றை எழுதினேன். இந்தப் புத்தகம் எழுத என்னென்ன செய்தேன்... எங்கெல்லாம் போனேன் என எழுதியிருந்தேன்... என்னை எதிர்ப்பவர்கள் செய்த திருட்டெல்லாம் என்ன என்பதாய் எழுதினேன்... இதுவரை எந்தப் பேராசிரியனும் இந்தக் கையேட்டுக்குப் பதில் சொல்லவேயில்லை. இவனுக பாரதியைப் படித்தால்தானே... மேடையில் பேச இவனுகளுக்குத் தெரிஞ்ச பாட்டு 'காணி நிலம் வேண்டும்', 'ஓடி விளையாடு' அம்புட்டுத்தான்.... பாரதிக்குச் சமாதி கட்டியவர்களில் முக்கியமானவர்கள் இந்தப் பேராசிரியர்கள் என்று ஒரே போடாகப் போட்டார்... ஒரு வருட மன அழுத்தம் கொடுத்த வலி அதில் நிறைந்திருந்தது.

பாரதி வறுமைக்கு வாக்கப்பட்டவன் என்று சொல்வார்கள்... அவன் வறுமைக்கு வாக்கப்படவேயில்லை... சுதேசமித்திரனில் அவனுக்கு நாப்பது ரூபாய் சம்பளம்... இந்தியா பத்திரிக்கையில் நூறு ரூபாய் சம்பளம்... தான் வாங்கும் சம்பளம் நாப்பது ரூபாய் என்றால் முப்பத்தி ஒன்பது ரூபாயைத் தானம் செய்து விடுவான் என்றும் சுதேசமித்திரனில் வாங்கிய முதல் மாத சம்பளத்தை ரிக்ஷாக்காரர் மகளுக்குத் திருமணம் என்றதும் கவரோடு கொடுத்து விட்டதாகவும், ஒரு மாத மளிகைக் கடை பாக்கியை கணவன் கொண்டு வரும் சம்பளம் பணத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கலாமென நினைத்திருந்த செல்லம்மா முன் வெறுங்கையுடன் போக, எங்கே சம்பளக் கவர் என அவர் கேட்டதற்கு ரிக்ஷாக்காரன் மகளுக்குத் திருமணமாம்... அவளும் நம் மகள்தானே என்று சொன்னவன் பாரதி என்றார்.

பாண்டிச்சேரியில் புயல் அடித்தபோது சேரிக்குப் போய் அங்கிருக்கும் மக்களுக்கு சமைத்துக் கொடுக்கிறான். மேலும் இறந்து கிடந்த காக்கை, குருவிகளை குழந்தைகளோடு போய் கூடையில் அள்ளிக் கொண்டு வந்து புதைத்திருக்கிறான் என்று சொன்னவர், இன்று நாம் கொரோனாவில் இறந்தவர்களைக் குழியில் காலால் தள்ளுகிறோம் என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்தார். 

நான் வாசித்துத் தெரிந்து கொண்ட குறிப்புக்களை எல்லாருக்கும் தெரிய வேண்டுமெனத்தான் புத்தகம் கொண்டு வந்தேன். வழக்குக்குப் போன பின் என்னை எதிர்த்தவர்களின் மேடையில் எல்லாம் நான் பேசியிருக்கிறேன்... அதன்பின் அவர்கள் எல்லாம் சமாதானத்துக்கு வந்தார்கள். நேர்மையின் பால் உங்களுக்கு காதல் இருந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்றான் பாரதி. அதுதான் எனக்கும் நடந்தது... நடந்து கொண்டிருக்கிறது என்றார் பெருமையாக.

பாரதியை யானை மிதித்துக் கொன்றது எனப் படிக்கிறோம்... அதற்கு முன் குளத்தில் குளிக்கப் போகும் போது தாமரையில் சிக்கி சாக இருந்தவன் அவன்... சிறு வயதில் தன் தாய் மாமனால் துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டு காதின் அருகில் உரசிச் சென்றதால் பிழைத்தவன் அவன்... இப்படி ஒருமுறை அல்ல நாலு முறை அவன் சாவின் அருகில் சென்று திரும்பியிருக்கிறான் என்ற விபரத்தையும் பகிர்ந்து கொண்டார்.

பாரதியார் மற்றும் பாரதிதாசன் என்னும் இரு ஆளுமைகளில் பாரதியார் சென்று சேர்ந்த இடத்தின் அளவுக்குப் பாரதிதாசன் ஆகவில்லையே ஏன் என்ற ஹேமாவின் கேள்விக்கு, பாரதியை கொண்டு சேர்த்தவனே பாரதிதாசன்தான்... பாரதிதாசனைப் போல் ஒரு சீடன் உலகில் யாருக்குமே இல்லை. பாட்டுக்கு ஒரு புலவன் எனப் பாடியவன் பாரதிதாசன். 'எழுக நீயென் புலவன்' என சுதேசமித்திரனில் எழுதிய பாரதியே பாரதிதாசன் கவிஞன் என்ற நிலையை ஏற்படுத்திக் கொடுத்தவன். அதுவரை ஆன்மீகப் பாடல்கள் பாடிக் கொன்டிருந்தவர் பாரதிதாசன்... பாரதியே அவருக்கு முகவரி கொடுத்தவர் என்றார்.

பாரதிதாசனுக்கும் அண்ணாவுக்குமான பிரச்சினையைச் சொல்லி, அண்ணா பாரதிதாசனை எதிரியாக எப்போதும் நினைத்ததில்லை என்றார். கண்ணதாசன் தன்னை விட்டுப் போனபோதும் அண்ணா அவரை எதிர்யாகப் பார்க்கவில்லை என்று அறிந்திருக்கிறோம் அல்லவா..? அண்ணாவின் குணம் அது... இது இன்றைய அரசியல்வாதிகளுக்கு சுத்தமாக இருக்கவில்லை என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். 

நாம் பாரதி வாழ்ந்த இடத்தையெல்லாம் நாட்டுடமை ஆக்கி விட்டோம். பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை வாங்கிய செட்டியார் ஓருவர் வேறு யாருக்கும் விற்காமல் அரசாங்கத்துக்கு மட்டுமே விற்பேனெனச் சொல்லி பத்தாண்டுகள் வைத்திருந்து அரசிடம் கொடுத்திருக்கிறார். பாரதி பாடல்களை அரசிடம்தான் கொடுப்பேன் என ஏ.எவி.எம். செட்டியார் சொன்ன கதையைச் சில நாட்கள் முன் பின்பாட்டு புத்தகத்தில் வாசித்தறிந்தேன்.

பாரதி படத்தை எடுக்கவே பாரதிதாசன் இங்கு வருகிறார். பாரதி சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்குப் போறார்... பாரதிதாசனோ அங்கிருந்து இங்கு வருகிறார்... என்ன ஒற்றுமை பாருங்க இருவருக்குள்ளும்... பாரதிதாசனை நம்முடைய திராவிட இயக்கங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்பதுதான் உண்மை என்றும் அவருக்கென தமிழகத்தில் ஒரு நினைவிடமோ கருவூலமோ இல்லை என்றும் வருத்தத்துடன் சொன்னார். இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். பிடித்த ஆளுமைகள் எல்லாம் திராவிட இயக்கங்கள் மாமணிகளைக் கொடுத்து அருகில் அமர்த்திக் கொள்வதைப் பார்க்கத்தானே செய்கிறோம்.

பாரதிதாசன் மீது நேசங்கொண்ட திருலோக சீதாராமும் ஆ.வெ.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியாரும் திருச்சியில் இருக்கிறார்கள். பாரதியார் இறந்தபின் திருச்சியில் இருக்கும் செல்லம்மாவை அடிக்கடி போய் பார்க்கிறார்கள். இது பாரதிதாசனுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை... பின்னர் தெரியவரும்போது அவரும் வருகிறேன் என்று செல்ல, எப்பவும் போனதும் செல்லம்மா காலில்  விழுந்து இருவரும் ஆசி வாங்குவார்களாம்... ஆனால் அன்று பாரதிதாசன் இருப்பதால் விழுவோமா வேண்டாமா என்று அவர்கள் யோசிக்க, அவர்களுக்கு முன்னே பாரதிதாசன் செல்லம்மாவின் காலில் விழுந்து வணங்கிவிட்டாராம்.

அங்கிருந்து திரும்பும் போது என்னய்யா நீ பொசுக்குன்னு அந்தம்மா கால்ல விழுந்துட்டே என்று அவர்கள் கேட்டபோது, அய்யர முழுசாப் பாத்த ஒரே ஆளு இந்தப் பொம்பளதாய்யா... அது கால்ல விழாம வேற யார் கால்ல விழப்போறேன் என்றாராம்... அந்தளவுக்கு பாரதியை நேசித்தவன் பாரதிதாசன் என்றவர், பார்ப்பனனுக்குத் தாசனாக இருந்தாய் நீ என பாரதிதாசனைப் பேசியவர்கள்தான் நாம் என்பதையும் சொன்னார்.

இயற்கையை பற்றிப் பாடியவர்களில் முன்னோடி பாரதிதாசன் மட்டுமே.... பாண்டியன் பரிசைப் படியுங்கள்... முன்பெல்லாம் பரிசாக குடும்பவிளக்கையும் பாண்டியன் பரிசையும் கொடுத்தார்கள்... இப்ப ஆளுமா டோலுமா பாட்டைப் போடுகிறோம். பாரதியைக் கொண்டு சேர்க்க தாசனைப் போல் தனி நபர்கள் இருந்தார்கள்... ஆனால் தாசனுக்கோ திராவிடக் கழகமே இருந்தாலும் கொண்டு சேர்க்கவில்லை... அது காலத்தின் பிழை... மிகப்பெரிய அரசியல் பிழை என்றார் வருத்தத்துடன்.

பெண்கல்விக்கு அந்தக்காலத்தில் வழியுறுத்தியவன் பாரதி, அந்தப் பாரதிக்கு அகத்தூண்டலாய் இருந்தது என்ன என்ற ஜெஸிலாவின் கேள்விக்கு, அவருக்கு அகத்தூண்டலாய் இருந்தது நிவேதிதாதேவி என்றும் நாகசாமி என்னும் பத்து வயது மாணவன் வெள்ளையரை எதுத்துப் பேசும் நீ வெள்ளை மாதுக்குத்தானே சமர்ப்பணம் பண்ணியிருக்கே என்று கேட்க, அவனைக் கூட்டி வந்து கோவிலில் அமர வைத்து இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார் என்றும் இதை நாற்பது வயதில் நாகசாமி சுதேசமித்திரனில் எழுதியிருக்கிறார் என்றும் சொன்னார். 

நிவேதிதாதேவிதான் என்னை ஆட்கொண்டவர் என்று பாரதி சொன்னாலும் நான் வாசித்தவரை பாரதிக்கு ஔவை மீதுதான் அதிகப் பற்று இருந்திருக்கிறது. கம்பனைப் பற்றியோ இளங்கோவனைப் பற்றியோ வள்ளுவரைப் பற்றியோ அதிகம் எழுதவில்லை... பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றிய அவனின் பார்வைக்கு ஔவை மீதான பற்றே காரணம்... அதன் காரணமாகவே ஆத்திசூடி எழுதியிருக்கிறான். ஔவை எழுதியது ஆத்திச்சூடி... பாரதி எழுதியது ஆத்திசூடி என்றவர் ஔவை அளவுக்கு அவனைக் கட்டிப் போட்ட பெண்பாற் கவிஞர் வேறு யாருமில்லை. 

திராவிட இயக்கத்தின் அமீரகப் பாசறையில் முக்கியமான பிலால், செல்லம்மாள் காலில் பாரதிதாசன் விழுந்தது உண்மையா அல்லது போற போக்கில் கட்டிவிட்ட கதையா என்று சிரித்துக் கொண்டே கேட்டார்... இதற்கு விளக்கமாய் திருலோக சீதாராம், ஆ.வெ.ரா.கிருஷ்ணசாமி ரெட்டியார் இருவரும் நேரில் கண்ட சாட்சிகள் என்பதைச் சொன்னதுடன் திருலோக சீதாராம் மடியில்தான் செல்லம்மா உயிர் துறந்தார் என்பதையும் சொன்னார். ஆனாலும் பிலாலுக்கு செல்லம்மா காலில் பாரதிதாசன் விழுந்தது ஏற்புடையதாக இல்லை... எனக்கு இதற்கான சான்றுகள் வேண்டுமென்பதாய்க் கேட்டார்... தேடி எடுத்துப் பாருங்கள் என்றதும் இப்பத்தான் சான்று இருக்கு என்று சொன்னீர்கள்... இப்பத் தேடிப்பாருங்க என்கிறீர்கள் என்றதும் என்னிடம் இருக்குங்க என்றார். அப்போது குறுக்கிட்ட நெருடா என்னிடம் இருக்கு அனுப்பித் தருகிறேன் என்று சொன்னாலும் காலில் விழுந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே பிலாலின் முடிவாக இருந்தது... அது அவரின் சிரிப்பில் தெரிந்தது. மேலும் பாரதிதாசன் ஏன் விழுந்தார் என்பது எனக்குத் தெரியாது இது ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்ட கட்டுரை என்று சொன்னாலும் இதன் பின்னே ஒரு அரசியல் இருக்கு என்பதில் பிலால் பிடியாக நின்றார். கால்ல விழுந்தது குற்றமாய்யா..? 

பாரதிக்காக வக்காலத்து வாங்க இக்கூட்டத்துக்கு வரவில்லை என்று கடற்கரய் சொன்னதுதான் இக்கூட்டத்தின் ஹைலைட்.

சசிக்குமார் அவர்கள் ஏ.வி.எம். கையில் எப்படி பாரதி பாடல்கள் போனது என்று கேட்டார். அப்போது கடற்கரய் அவர்களின் செல்போன் சார்ஜ் தீர்ந்துபோக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தொடர்ந்து பேசியவர் அதன் பின் இணைய முடியவில்லை. அதனால் அவரால் விபரமாகச் சொல்ல இயலவில்லை... இதற்கான விளக்கம் கவிஞர் யுகபாரதி எழுதியிருக்கும் பின்பாட்டு புத்தகத்தில் இருக்கிறது.

இன்னும் பல விஷயங்களைப் பேசினார்... நிறைவாக... நாம் அறியாததை அறிந்து கொள்ளும் விதமாக.

விரிவாய் எழுதுதல் என்பது கடினமே... முடிந்தளவு எழுதியிருக்கிறேன்...

மிகச் சிறப்பான, செரிவான பேச்சு... 

இந்தளவுக்கு விபரங்களை வேறு எங்கும் நாம் கேட்கவும் இல்லை... படிக்கவும் இல்லை.

வாழ்த்துகள்.

நல்லதொரு நிகழ்வு. ஏற்பாடு செய்த எங்கள் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் குழுமத்துக்கு நன்றி.
 
இதை எழுதச் சொல்லி என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்த சகோதரர் இராஜாராமுக்கும் சகோதரி ஜெஸிலா பானுவுக்கும் நன்றி.

பொறுமையாக இதை வாசித்த தங்களுக்கும் நன்றி.

காணொளி பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

குமார், மிக சிறப்பான பகிர்வு. அற்புதம் என்ற வார்த்தையை மீறி எதுவும் சொல்ல முடியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ பாரதியின் புகைப்படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்திருக்கிறேன். பெருமிதம் கொள்கிறேன். நானும் பாரதி பற்றி ஒரு கட்டுரை எழுத குறிப்புகள் வைத்திருக்கிறேன். பாரதி பூனூல் அணிவித்த தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த கனகலிங்கம் அவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் அதனை எழுத இருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு தகவலும் வியப்பு அளிக்கின்றன... பிரமிக்கவும் வைக்கின்றன...

கண்டனங்கள் பல வந்தாலும் தளராத மனதிற்கு காரணம் :- // வேலையை நேசித்தால்தான் செய்யும் வேலையில் நேர்த்தியிருக்கும். // உண்மையான வரிகள்...

அ.மு. நெருடா சொன்னது…

பாரதிக்கு பாரதிதாசனைப் போல சீடன் இருந்திருக்க முடியாது அதேபோல பாரதிக்கு ஒரு மகன் இருந்திருந்தால் அது திருலோகசீதாராமாகவே இருக்கமுடியும்.

நிகழ்வை அப்படியே நல்லதொரு ஆவணமாக எழுத்தில் கொண்டுவந்து நிறுத்துவிட்டீர்கள். அருமை. வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் முரளிதரன் அண்ணா...

ஆமாம்... அருமையானதொரு கலந்துரையாடல்... காணொளி பாருங்கள்... இன்னும் விரிவாக இருக்கும்... உங்கள் பதிவு படிக்க ஆசை... பகிருங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் தனபாலன் அண்ணா...

நானும் வேலை என்றால் அந்த நேரத்தில் வேலையை மட்டுமே நேசிப்பேன்... எதையும் ரசித்துச் செய்ய வேண்டும் என நினைப்பேன்... அவர் சொன்ன வரிகள் உண்மையானவை.

Yarlpavanan சொன்னது…

சிறப்பான ஆவணப்படுத்தல்
பாராட்டுகள்

ஸ்ரீராம். சொன்னது…

மிக மிக சுவாரஸ்யமான பதிவு.  காணொளி லிங்க் எடுத்து வைத்துக்கொள்கிறேன்.  பின்னர் கேட்கவேண்டும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அதிகமான, நுணுக்கமான செய்திகள். வியக்கவைத்த பதிவு.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மிகவும் அருமையான, பல அறியாத சுவாரசியமான தகவல்கள் குமார்.

துளசிதரன்

குமார் மிகவும் ரசித்து வாசித்தேன். அட்டகாசமான தொகுப்பு.கடற்கரய் அவர்கள் இதனை ஆவணமாக்க எத்தனை இன்னல்கள் சந்தித்திருக்கிறார். ரொம்ப அழகா தொகுத்திருக்கீங்க குமார். நல்ல பதிவு.

காணொளி லிங்க் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கேட்கிறேன்.

கீதா

புல்லாங்குழல் சொன்னது…

கடற்கரய் அவர்களின அபார உழைப்புக்கு நன்றி! இத்தனை தகவல்களை பதிவு செய்து அசத்தி இருக்கும் குமார் உங்களுக்கு ஓர் சிறப்பு நன்றி!