மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 8 மார்ச், 2020

மனசு பேசுகிறது : எதிர்சேவை செய்ய தேவகோட்டை டூ சென்னை

ன் எதிர்பார்ப்பை எல்லாம் விட மிகச் சிறப்பாக முதல் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார் சகோதரர் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன். இவரின் ராஜி நாவல் விரைவில் வெளிவர இருக்கிறது.  

தசரதன் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வரச் சொல்லியிருந்தார். சில குடும்ப வேலைகளால் அவரின் அழைப்பின்படி செல்ல இயலவில்லை. எப்படியும் அவரைப் பார்த்து வரவேண்டுமென ஒரு நாள் குடும்பத்துடன் பயணப்பட்டோம். பாப்பா விடுதியில் என்பதால் எங்களுடன் எங்கும் பயணப்படவில்லை அழகர் கோவில் சென்றது உள்பட. இந்த முறைதான் பாப்பா இல்லாமல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பார்க்கவே விடமாட்டேங்கிறானுங்க.. லீவு போட்டா 500 பைன் கட்டுன்னு சொல்றானுங்க... பின்ன எப்படி கூட்டிச் செல்வது... அதான் அவரை விடுத்து நாங்கள் மட்டும் பயணப்பட்டோம்.

புத்தகக் கண்காட்சிக்கு நான் போகவில்லை என்றாலும் நெருடா, நந்தகுமார் என பலர் சென்றிருந்தார்கள். புத்தகத்தை வாங்கி, போட்டோக்களும் அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்த போதே ஒரு வித சந்தோஷம் மனசுக்குள்... முதல் புத்தகமல்லவா..?

தசரதன் புத்தகம் அனுப்பி, கொரியர்க்காரர்கள் சரியான முறையில் தொடர்பு கொள்ளாது திருப்பி அனுப்பிவிட்டார்கள். மீண்டும் அனுப்பினார்... நான் கேட்ட இரண்டே இரண்டு புத்தகங்கள். 

ஒரு புத்தகத்தை வீட்டில் வைத்துவிட்டு... மற்றொரு புத்தகத்தோடு எனது பேராசானைப் பார்க்கப் போனேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி... புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தவர் 'என்ன குமார் எனக்குத்தானே சமர்ப்பணம் போட்டிருக்கணும் ஏன் போடலை..?' என்றார் சிரிப்போடு. 

நான் போட்டிருந்தது அவருக்குத்தான்... இந்தப் புத்தகம் மட்டுமல்ல.. அடுத்துப் புத்தகம் வந்தாலும் அவருக்கு சமர்ப்பணம் எப்பவும் இருக்கும். என் எழுத்தின் மீது மனசார நம்பிக்கை வைத்திருப்பவர்களில் இவரே முதல்வர்.

அங்கிருந்த நண்பர்களிடம் குமார் நல்ல எழுத்தாளர், வாழ்க்கைப் பிரச்சினைகள் அவரை இதுவரை எழ விடாமல் வைத்திருக்கிறது என என்னைப் பற்றியே பேசினார். அப்பாவைப் பற்றியும் அப்பாவின் பண்பையும் பற்றிப் பேசினார். 

புத்தகம், போட்டோ என கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொடுத்தார். கதையின் தலைப்புக்களே படிக்கத் தூண்டுது என்றார். நான் தலைப்பு வைப்பதில்தான் கஷ்டப்படுவேன் என்பதை அவரிடம் சொல்லவில்லை. வாசித்துச் சொல்கிறேன் என்றார். அடுத்த முறை போகும் போது வாசிச்சிட்டேன் என கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டார். அது சொன்னது அவரின் ஆயிரம் விமர்சனங்களை...

'வேரும் விழுதுகளும்' நாவல் மிகவும் பிடித்ததாய்ச் சொன்னார். அதற்கு அணிந்துரை நான்தான் எழுதுவேன் என மீண்டும் சொன்னார். வண்ணதாசனை வாசிக்கச் சொன்னார். அவருடன் போன் பண்ணிப் பேசச் சொல்லி போன் நம்பர் கொடுத்தார். எல்லாவற்றுக்கும் தலையாட்டினேன்... இதுவரை எதையும் செய்யவில்லை.

என் எழுத்துப் புத்தகமானதில் என்னைவிட அதிகம் மகிழ்ந்தவர் என் ஐயாதான் என்பது அவரின் முகத்தில் பேச்சில் அணைப்பில் தெரிந்தது.

(கலக்கல் ட்ரீம்ஸ் அலுவலகத்தில் சகோதரர். தசரதனுடன் - பின் அட்டை போட்டோவுல இருக்க மாதிரி இல்லைன்னு நினைச்சிருப்பாரோ..?)
சென்னையில் அக்கா வீட்டில் தங்கியதால் சந்திக்க நினைத்த பலரைப் பார்க்க முடியவில்லை. காயத்ரி அக்கா நானே வருகிறேன் என்றார்... பின்னர் போனில் தொடர்பு கொண்டபோது தொடர்பு எல்லைக்கு வெளியே என்றுதான் சொன்னது... பின் என்ன செய்ய... இந்த முறையேனும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் அடுத்த முறையாவது என மாறியது.

சென்னை சென்ற அன்று மாலையே பெரிய மாப்பிள்ளையுடன் நானும் மனைவியும் கலக்கல் ட்ரீம்ஸ் நோக்கிப் பயணித்தோம். விஷாலும் சின்ன மாப்பிள்ளையும் ஊர் சுற்றக் கிளம்பி விட்டார்கள். போக்குவரத்து நெரிசலில் நீந்திப் போய்ச் சேர்ந்தோம். புத்தகத் திருவிழா முடிந்து அள்ளி வந்த புத்தங்கங்கள் பெட்டி பெட்டியாய்க் கிடக்க, மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் தசரதன். 

நீண்ட நேர உரையாடல்... 

அதன் பின் எழுத்தாளர் சில்வியா பிளாத் அவர்களும் இணைந்து கொண்டார்கள்... காபி, சிறு சிற்றுண்டி சாப்பிட்டபடியே நீண்ட உரையாடல்... அதன் பின் சில எதிர்சேவை புத்தகத்துடன் விடை பெற்றோம். 

அப்போதுதான் முதல்முறையாக தசரதனைப் பார்க்கிறேன்... கதைகள் அனுப்பி, அவர் 12 கதைகளைத் தேர்வு செய்து எனக்கு அனுப்பி, பிழை திருத்தம் செய்து, அட்டைப்படம் முடிவு செய்து, புத்தகமாகி எல்லாம் முடியும் வரை போனில் மட்டுமே தொடர்பில் இருந்தோம்.

உண்மையில் மிகச் சிறப்பான மனிதர் அவர்... அன்போடு பேசிய பழகிய விதம் மிகவும் கவர்ந்தது. 

அகல் மின்னிதழ் நண்பர் சத்யா சந்திக்க வருகிறேன் என்றார். ஏனோ வரவில்லை... ஒருவேளை அவருக்கு ஏதேனும் வேலை இருந்திருக்கலாம். வாகனம் கையிலின்றி சென்னையில் ஒருவரைத் தேடிச் செல்லுதல் என்பது கடினமே.

(குடந்தை ஆர்.வி.சரவணன் அண்ணன் வீட்டில் - ஊருக்கு வந்தா ஒரு கருப்பா மாறிடுறோம்தான்)
முகப்பேரில் இருக்கும் சகோதரர் குடும்பத்தைச் சந்திக்க சென்ற போது அம்பத்தூரில் இருந்த குடந்தை சரவணன் அண்ணனைச் சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புத்தகம் கொடுத்துப் பெற்று கிளம்பினோம். அதைச் சாப்பிடுங்க, இதைச் சாப்பிடுங்க என குடும்பமே வற்புறுத்தியது என்றாலும் மதியம் சகோதரர் வீட்டில் புல் கட்டுக் கட்டியதால் காபியுடன் எஸ்ஸாயிட்டோம் நானும் அக்கா பையனும்.

இரண்டாம் நாள் இரவு சரவணா ஸ்டோர்... இல்லை இல்லை மிகப்பிரமாண்டமான லெஜண்ட் சரவணா ஸ்டோரில் சுற்றினோம். விஷால் விழுந்து விழுந்து போட்டோ எடுத்தான் எல்லாச் சோபாக்களிலும் அமர்ந்து.

மொத்தம் மூன்றே நாள்தான் சென்னை... ஊருக்கு வருமுன் மகனுக்கு பீச்சுக்குப் போக வேண்டும்... மனைவிக்கு ஜெயலலிதா, கலைஞரைப் பார்க்க வேண்டும் என்ற தலையாய வேலைகள் இருந்ததால் மூன்றாம் நாள் முழுவதும் அவர்களுக்காகவே நகர்ந்தது.

எப்படியோ எதிர்சேவையை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்த கலக்கல் ட்ரீம்ஸ்க்குப் போய் வந்தது மகிழ்ச்சிதான். நம்மையும் எழுத்தாளன் வட்டத்துக்குள் கொண்டு வந்தவங்களைப் பார்க்காமல் இருப்பது தவறுதானே... அதான் இன்னல்களுக்கு இடையேயும் பயணப்பட்டோம்.

(மேலே இரண்டு படங்களில் இருக்கும் குமார் இப்ப இப்படித்தான்.. உடம்பை குறைச்சாச்சு)
ஊருக்கு வந்த பின்புதான் உடல்நலச் சிக்கல்கள்... அதன் பின்னான நாட்கள் தேவகோட்டை - மதுரை என மருத்துவமனைப் பயணமாய் அமைந்ததால் எங்கும் செல்லவில்லை. மொத்தத்தில் இந்தப் பயணம் எதிர்சேவையை நோக்கிய சென்னைப் பயணம், மாமா-அத்தையின் சாந்தி என இரண்டு சந்தோஷங்களையும் பல சங்கட்டங்களையுமே கொடுத்தது. அடுத்த முறையேனும் மகிழ்வான பயணமாக அமையட்டும்.

நன்றி.

அப்படியே புத்தகம் வாங்க விரும்பினால்...

கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்,
எண்-3, நேரு தெரு,
மணிமேடு தண்டலம்,
பெரிய பணிச்சேரி,
சென்னை – 600122.
கைபேசி: 9840967484.  
மின்னஞ்சல் முகவரி – kalakkaldreams@gmail.com.
இணையதள முகவரி - www.kalakkaldreams.com.
புத்தகத்தின் விலை – ரூபாய் 100/- தபால் செலவு தனி
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் நலமாக அமையும்... எந்த மருத்துவமாயினும் நம்பிக்கை மிகவும் முக்கியம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கண்டிப்பாக... இப்போது நலமே அண்ணா...
ரொம்ப நன்றிண்ணா.

Avargal Unmaigal சொன்னது…

உங்களின் முதல் பிள்ளைக்கு(புத்தகத்திற்கு) வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றிண்ணா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நலமே விளையட்டும் பரிவை சே. குமார்.

இன்னும் பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றிண்ணா...
எப்பவும் போல் குமார்ன்னே சொல்லுங்க... பரிவை சேர்ப்பது தள்ளி நிற்பது போல் இருக்கு... அது எழுத்துக்காக வைத்துக் கொண்டது... நான் எப்பவும் குமார்தான்...