மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 13 மார்ச், 2020

எதிர்சேவையில் என்னுரை

எந்த ஒரு அணிந்துரையும் இல்லாமல் வந்திருக்கும் எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் நான் எழுதியிருக்கும் என்னுரை உங்கள் பார்வைக்கு.

(அன்பின் ஐயா. முனைவர் மு.பழனி இராகுலதாசன்)

நீங்களும் கதை எழுதலாமே..?’

இந்த வரிகள் எனது பேராசான் மு.பழனி இராகுலதாசன் அவர்களிடமிருந்து வந்தபோது நானும் முருகனும் எல்லா மாலையும் போல அவருக்கு வலம் இடமாக சைக்கிளை உருட்டியபடி, பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.

அவரின் கேள்விக்குப் பின் 'நானெல்லாம் எழுதுறதா..?' என்ற வார்த்தை எப்பவும் போல் சிரிப்போடு வந்தது. 'அதெல்லாம் எழுதலாம்... நீங்க எழுதிக்கிட்டு வாங்க... பார்ப்போம்' என்றார். அதன் பின்னான நாளில் முதல் கதை... அதுவும் கல்லூரியில் படிக்கும் மாணவன் எழுதிய கதை என்னவாய் இருக்கும்... ஆம்... அதேதான்... காதல் கதை... கொடுத்ததும் வாங்கி வைத்துக் கொண்டார். பின்னொருநாளில் 'நல்லாயிருக்கு... இன்னும் எழுதுங்க...' என்றார் தோள் பிடித்து அணைத்துபடி. நல்லாயிருந்ததா என்பது தெரியாது ஆனாலும் அவர் சொன்ன வார்த்தைதான் என் எழுத்துக்கான விதையை என்னுள் விதைத்தது.

கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கதைகளில் முதல் கதைக்குப் பெயரிட்டு தினபூமி கதை பூமிக்கு அனுப்பச் சொன்னவர் அவரே. அந்தக் கதை வெளியானபின் தொடர்ச்சியாய் கதைகள் அனுப்பி வெளிவர... வெளிவர... எழுத்துப் போதை என்னுள் இறங்கியது... விடுமுறை தினங்களில் கதை எழுதுகிறேன் என உட்கார்ந்து வீட்டில் திட்டு வாங்குவது தொடர்கதையானது.

முதல் கவிதையை எழுதி ஐயாவிடம் கொடுத்ததும் வாசித்து, ஒன்றும் சொல்லாமல் வாங்கி வைத்துக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அதை வெள்ளைத் தாளில் எழுதச் சொல்லி தாமரை இதழுக்கு அனுப்பி வைத்ததுடன் கவிதை வெளியான புத்தகத்துடன் வந்து மகிழ்வாய்ச் சொன்னவரும் அவரே. அந்தக் கவிதைக்காக எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் வாழ்த்தையும் பெற்றேன். போன முறை விடுமுறையில் சென்றபோது நான் எழுதி வைத்திருக்கும் 'வேரும் விழுதுகளும்' என்ற கிராமத்து நாவலை வாசித்தவர் இதை புத்தகமாக்க வேண்டும்... நான் இதைப் பற்றி நிறைய எழுதித்தர வேண்டும் எனவும் சொன்னார். அது புத்தகமாகும் போது ஐயாவின் அணிந்துரையுடன்தான் வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.

என் எழுத்து இடைநில்லாப் பேருந்து போலில்லாமல் கல்லூரிக்காலம், திருமணத்துக்குப் பின், அமீரக வாழ்க்கை என இடை நிறுத்தி... இடை நிறுத்தியே பயணித்தது... இப்பவும் பயணித்துக் கொண்டிருக்கிறது... அமீரக வாழ்க்கையில்தான் வலைப்பூ அறிமுகம்... அதில் எழுத ஆரம்பித்த எழுத்துக்களே வாழ்க்கைக் கதைகளை... குறிப்பாக கிராமத்து மனிதர்களின் வாழ்வைப் பேச ஆரம்பித்தது. பல நண்பர்கள் கதையில் சோகமே முடிவாய் வருவதைக் குறித்து என்னுடன் சண்டையிட்டிருக்கிறார்கள்... அழுகாச்சிக் கதை இதெல்லாம் எவன் வாசிப்பான் என்றும் சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கைக் கதைகள் எப்பவும் வலி நிறைந்தவையே... அது ஒருபோதும் ஜிகினா பூசி மேடையேறுவதில்லை என்பதைப் அறிந்தவன் நான் என்பதால் அவர்களின் பேச்சுக்களை பேச்சாய் மட்டுமே எடுத்துக் கொண்டேன்... என் எழுத்தில் மாற்றம் நிகழ்த்தாமல்.

குடும்பம்... குழந்தைகள் தூர தேசத்தில் இருக்க... அமீரகத்தில் ஒரு கட்டில் வாழ்க்கையில் சேணம் பூட்டிய குதிரையாய் அலுவலகம், அறை என்று தொடரும் நாட்களில்... வலியை, சோகத்தை, வெறுமையைப் போக்கும் தோழனாய் அமைந்தது இந்த எழுத்து...  வலைப்பூவில் எனது கதைக்கான நண்பர் வட்டம் விரிந்து பரந்ததில் அமீரகத்தில் வந்த பின் எழுதியவைதான் முக்கியக் காரணம்... முகமறியா நட்புக்களை உறவாக் கொடுத்ததும் இந்த எழுத்துத்தான்.

எழுத்து ஒரு வரம்... அது எல்லாருக்கும் கை கூடுவதில்லை என்றும் சொல்பவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வரும். நானெல்லாம் கல்லூரிக்குப் போய், ஒரு உந்துதலின் பேரில்தான் எழுத ஆரம்பித்தேன். எழுத எழுதக் கதைகளுக்கான களமும் எழுத்தின் வீச்சும் மாறிக் கொண்டேதான் இருக்கிறது... கல்லூரிக் காலத்தில் எழுதிய கதைகளுக்கும் இப்போது எழுதும் கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என் எழுத்து நடையில். எல்லாராலும் எழுத முடியும்... யாருக்கும் எழுத வராதென்றெல்லாம் சொல்ல முடியாது... எழுத எழுத எழுத்து நடை, களம், காட்சிப் படுத்துதல் என எல்லாமே உங்களிடம் ஒட்டிக் கொள்ளும். அதன்பின் அதை யாராலும் பிரிக்க முடியாது... குறிப்பாக நீங்கள் யாருக்காகவும் உங்கள் எழுத்தை மாற்றாத பட்சத்தில் என்பதே நான் நண்பர்களிடம் சொல்வதும் எனக்குள் சொல்லிக் கொள்வதும்... ஒரு போதும் அடுத்தவருக்காக எழுத்தை மாற்றியதில்லை... என் எழுத்து எப்பவும் இப்படித்தான்.

என் கதைகள் நிறையப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அப்படி பரிசு பெற்ற கதைகள்தான் பெரும்பாலும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.  எல்லாக் கதைகளுமே வாழ்வின் எதார்த்தம் பேசுபவையாகத்தான் இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை எதுவுமே அவ்வளவு எளிதாக அமைந்து விடாது... தடைகளைத் தாண்டிப் பயணிப்பது என்பது பல நேரங்களில் முடியாமலேயே போய்விடும் என்பதால் முயற்சி மேற்கொள்வதில் கூட யோசனையே முன் நிற்கும்... பொருளாதாரமும் முக்கியக் காரணியாக இருப்பதால் முயற்சிக்காமலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை இன்று வரை. சில மாதங்களுக்கு முன் உன் கதைகளைப் புத்தகமாக்குவோம் என அமீரக வாசிப்பாளர் குழும ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான அண்ணன் ஆசீப் மீரான் அவர்கள் எடுத்த முயற்சி சில காரணிகளால் தள்ளிப் போய்விட்டது என்றாலும் முதல் விதை அவர் போட்டதுதான்... அவருக்கு என் முதல் நன்றி.

எந்த ஒரு முயற்சியும் எனக்கு வெற்றியைக் கொடுப்பதில்லை என்ற வெறுப்பின் உச்சத்தில் இருந்தபோது நாம் பயணிப்போமென உற்சாக மூட்டி, அதற்கான முயற்சியில் இறங்கிய தம்பி நெருடாவிற்கும் இந்தப் புத்தகம் வெளிவரப் பேசி, கதைகளை அனுப்பச் சொல்லி எல்லாமுமாய் முன் நின்ற தம்பி கவிஞர் பிரபு கங்காதரன்-க்கும் நன்றி என்று சொல்லித் தள்ளி வைப்பதைவிட இந்த உறவு இறுதி வரை தொடர வேண்டும் என நான் வணங்கும் தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன்.

நான் எதாவது எழுதி, அதற்கான பரிசுத் தொகையோ புத்தகமோ வீட்டிற்க்கு அனுப்பப்படும் போது உடனே அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் பண்ணி விடுவதுடன்... இவ்வளவு எழுதி வைத்து ஏன் இன்னும் புத்தகம் ஆக்காமல் இருக்கீங்க எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் என் அன்பு மனைவி நித்யாவுக்கும், எங்க அப்பா கதை எழுதியிருக்காங்க என கதை வெளியான புத்தகத்தை கையில் பிடித்தபடி பள்ளிச் சிறுமியாய் வீதியிலிருக்கும் நட்புக்களுக்கு காட்ட ஓடிய என் செல்ல மகள் ஸ்ருதி-க்கும், நானும் கதை எழுதுறேன் என ஏதாவது கிறுக்கி, ஆங்கிலத்தில் கதை எழுதி பள்ளியில் இரண்டாம் பரிசு பெற்ற என் செல்ல மகன் விஷால்-க்கும் நன்றி என்பதைவிட அன்பு முத்தங்கள் ஆயிரம் ஆயிரமாய்...

இத் தொகுப்புக்காக என்றில்லாமல் இந்த ஆண்டு புத்தகம் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நான் எனது வலையில் எழுதியதில் 50 கதைகளை பிடிஎப் ஆக்கி நண்பர்கள் சிலரிடம் கொடுத்த போது, அதை என் மீதான அன்பின் பேரில் முழுவதும் வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் தங்களின் முகநூல் பக்கங்களிலும் எழுதிய கவிஞர் பூபகீதன், இராஜாராம்,எழுத்தாளர் நௌஷத்கான், பாலாஜி பாஸ்கரன், சுடர்விழி ஆகியோருக்கும் நன்றி.  

எனது எழுத்தை வலைப்பூவில் பத்தாண்டுகளாக வாசித்துத் தங்களது கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லிவரும் வலை நட்புக்கள் அனைவருக்கும், என் எழுத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அகல்,  முத்துக்கமலம்,  காற்றுவெளி,  தேன்சிட்டு, மின்கைத்தடி மற்றும் என் கதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும், அடிக்கடி கதையைக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கும் ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் அண்ணாவுக்கும், அமீரக எழுத்தாளர் குழும நட்புக்கள் அனைவருக்கும் மற்றும் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி.

எனது முதல் புத்தகத்தைக் கொண்டுவரும் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தாருக்கு நன்றி.

எங்களுக்கு வாழும் முறையைக் கற்றுக் கொடுத்த... இப்பவும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்  இராம. சேதுராமன் - சே.சிவகாமி, கு.லட்சுமணன் - லெ.இராஜகுமாரி ஆகியோரின் ஆசிகளோடும் நான் வணங்கும் தெய்வங்களின் ஆசியோடும் முதல் புத்தகத்தை நண்பர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் முயற்சியில் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்வும் சந்தோஷமும்... 

என் வாழ்க்கையில் என்னால் எதுவும் நிகழ்ந்து விடவில்லை... இப்போதும் எப்போதும்  என் நண்பர்களால்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது... அவர்களே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

என் கதைகளை வாசியுங்கள்... கிராமத்து மனிதர்களின் வாழ்வைச் சுவாசித்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைக்கும்... உங்கள் வாழ்த்துக்களும் மனம் நிறைந்த கருத்துக்களுமே என்னை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் என்பதால் உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கியிருக்கிறேன்.

எனது இந்த முதல் புத்தகத்தை எனது பேராசன். முனைவர். மு.பழனி இராகுலதாசன் அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

சிறப்பாக உள்ளது யாரும் செய்யாத செயலை உங்கள் ஆசானுக்கு சமர்ப்பித்தது கண்டு நான் மகிழ்ந்தேன்
நன்றி
அன்புடன்
ரூபன்

ஜோதிஜி சொன்னது…

இவர் முகம் பெயர் உங்கள் வாழ்நாளின் கடைசி வரைக்கும் உங்கள் மனதில் இருக்கும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு முன்னுரை. பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ. ஊருக்குச் செல்லும்போது உங்கள் நூலை கண்டிப்பாக வாங்க வேண்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார்.  கே வா போ வுக்கு அடுத்த கதை....?!!!!

Yarlpavanan சொன்னது…

அருமையான முயற்சி
பாராட்டுகள்

ராமலக்ஷ்மி சொன்னது…

ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து நன்றி சொல்லியிருக்கும் விதம் சிறப்பு.

நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

ஏகாந்தன் ! சொன்னது…

முதல் சிறுகதைத் தொகுதி வெளியிட்டமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எழுத்துப் பயணம் சீராக நீளட்டும்.