மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 9 நவம்பர், 2019

மனசின் பக்கம் : எழுதிய கதைகள்

வெகுஜனப் பத்திரிக்கைகளில் கதைகள் வரவில்லை என்றாலும் இணைய இதழ்கள், மின்னிதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. தேன்சிட்டு, காற்றுவெளி போன்ற மின்னிதழ்களில் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாத காற்றுவெளியிலும் 'மனத்தேடல்' என்னும் சிறுகதை வெளியாகியிருக்கிறது. ஆமா இது எதுக்கு சுய புராணம்...?

சுயபுராணம் இல்லை... இப்படியான வாய்ப்புக்களே தொடரும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எப்போதேனும் வாசிக்கவும் எழுதவும் வைக்கின்றன. அப்படித்தான் சமீபத்தில் சோளகர் தொட்டி வாசித்து முடித்த கையோடு கலைஞரின் தென்பாண்டிச் சிங்கம் வாசித்து அதன் தொடர்ச்சியாய் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் வாசித்து இப்போது கைகளில் ஈரோடு கதிர் அண்ணன் எழுதிய பெயரிடப்படாத புத்தகமும் செல்போன் பிடிஎப்பில் வெக்கையுமாய் நகர்கிறது.

இதற்கிடையே நம்ம ஜோதிஜி அண்ணன் எழுதி அமேசான் கிண்டிலில் இருக்கும் 5 முதலாளிகளின் கதையை என்னால் எடுக்க முடியாத காரணத்தால் நண்பரை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். வாசித்து எழுதுவேன். அதற்கு முன்னால நீங்க எல்லாரும் அதை வாசியுங்கள்... மிகச் சிறப்பான ஒரு கட்டுரைத் தொகுப்பு என திண்டுக்கல் தனபாலன் அண்ணா சொல்லியிருந்தார். அந்தக் கட்டுரைக்கு வந்த கருத்துக்களையும் வாசித்தேன். எல்லாருமே அருமை என வியந்திருக்கிறார்கள். கண்டிப்பாக வாசியுங்கள்.

சரி... இப்ப சமீபத்தில் எழுதிய தலைப்பிடாத இரண்டு சிறுகதைகளில் இருந்து சில பாராக்கள்.

1

"என்னப்பு ஆளிருந்தாரா..?" அடுப்பில் இருந்த பாலுக்கு எடைக்கட்டியபடி கேட்டான் சுப்பு.

"ம்... இருந்தாரு..."

"உங்க நல்ல நேரம்... இல்லேன்னா கருக்கல்லயே கெளப்பிக் கொண்டு போயிருப்பானுவ... சாமியாடின்னா அப்படி ஒரு சாமியாடி... முடியும் முடியாதுன்னு மொகத்துக்கு நேர சொல்லிருவாரு... முடியும்ன்னு சொன்னா அத முடிச்சிக் கொடுத்துருவாரு... உங்ககிட்ட முடியும்ன்னுதானே சொன்னாரு... ஆமா அய்யாவுக்கு டீயா, காப்பியா...?"

"ஆமாமா... டீக்காப்பி  வேணாம்... எனக்குச் சர்ப்பத்துக் கொடுங்க... அவனுக்கு என்ன வேணுமோ அதக் கொடுங்க...பசியாருற மாரிக்கி எதுவுமிருந்தாக் கொடுங்க..."

"என்ன சுப்பு... பெரியகருப்ப்ப்ப்பத்தேவர் பொயிட்டாரா...?" என இழுத்துக் கேட்டபடி வந்தான் அவன். முகத்தில் பெரிய விபூதிப்பட்டை... கழுத்தில் பாசி மாலைகளும் உத்திராட்ச மாலையும்.. கையில் கருப்பு, மஞ்சள், சிவப்புக் கயிறுகள்... காவி வேஷ்டி... சட்டையில்லாத கரிய உடம்பு.

"இப்பத்தான் வண்டி ஊருக்குள்ள போயிருக்கு... இன்னக்கி எங்கயோ... நம்ம கருப்பன் அவருக்கு அள்ளிக் கொடுக்கிறான்...ம்ம்ம்... உனக்குந்தான் கொடுத்துச்சு... நீதானே கெடுத்து வச்சிருக்கே சுந்தரம்... காலயிலயே சரக்கடிச்சிட்டு வர்றியே... அப்புறம் கருப்பன் எப்படி உங்கிட்ட வருவான்..."

"அவன் எனக்குள்ள வரவேண்டான்னுதான் நான் சரக்கடிக்கிறேன்... வளவளன்னு பேசாம சுருக்குன்னு ஒரு டீப்போடு..." என்றபடி கடைக்குள் இருந்த சொக்கலால் பீடிக் கட்டில் இருந்து ஒன்னை உறுவிப் பற்ற வைத்துக் கொண்டு சாமியய்யாவுக்கு எதிரே கிடந்த மரப்பெஞ்சில் அமர்ந்தான் சுந்தரம்.

"பெரியவரே... நீங்க சாமியாடி வீட்டுக்கு வழி கேட்டப்போ நாங்க சொன்ன ரெண்டாவது சாமியாடிதான் இவரு.... குடிச்சே சாமியை விரட்டுறாரு... ஆனா அது போவாம இவரையே சுத்துது... உங்க பெரச்சினயச் சொல்லுங்க... இவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..."

"அதெல்லாம் வேணாம்ப்பா... பெரியவரு எல்லாம் சொல்லிட்டாரு... சாமி வேசத்துல காலயிலயே தண்ணி அடிச்சிட்டு நிக்கிறாரு... அவருக்கிட்ட போயி மொறயிடச் சொல்லுறே... சர்ப்பத்துப் போடுறியா இல்ல தின்ன ரொட்டிக்கி காசக் கொடுத்துட்டுப் போவா..." கோபமானார் சாமியய்யா.

"என்னப்பு கோபப்படுறிய... இவரும் நல்லாச் சொல்லுவாருன்னு சொன்னே... பணங்காசலயெல்லாம் எல்லாத்தயும் தீக்க முடியாதுப்பு... செரி விடுங்க... இந்தா சூப்பராச் சர்ப்பத்துப் போட்டுத் தாறேன்... சில்லுன்னு குடிச்சிட்டு அந்தச் சில்லிப்போட ஊரு போயிச் சேருங்க..."

ரவி டீ வாங்கிக் குடித்தான்... சுந்தரமும் கையில் டீயுடன் எதிரே உக்கார்ந்திருந்த சாமியய்யாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜில்லுன்னு சர்ப்பத்தை சாமியய்யா கையில் கொடுத்தான் சுப்பு.

"க்க்.... கெக்... ஹக்கக்... அய்யாவுக்கு எம்மேல ஏன்டா இம்புட்டுக் கோபம்... அவரு சாப்புடுற சோத்துல மண்ணா அள்ளிப்போட்டேன்.... க்கே...க்கேக்க்க்கே... கக்கக்க்க்கா...." சிரித்தான்.

சாமியய்யா பேசாமல் அமர்ந்திருந்தார்...

டீயை 'வுருட்...' என ஒரு வாய் உறிஞ்சிவிட்டு நாற்காலியில் வைத்துவிட்டு அவரையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தான். பார்வை மிகத் தீர்க்கமாய் இருந்தது.

கண்கள் மேலும் சிவப்பேற, கன்னம் துடிக்க ஆரம்பித்தது.

2

"இல்ல தம்பி... நீங்க எங்க... நாங்க எங்க... ஒங்க அப்பாருல்லாம் ஊருக்குள்ள பெரிய தலக்கட்டு... அவுகளப் பாத்தா துண்டெடுத்துக் கக்கத்துல வச்சிக்கிட்டு கும்புடுறோஞ்சாமி போடுறவனங்க நாங்க... நாம்போயி ஒங்கப்பாவுக்கு சரிசமமா..."

"வேலண்ணே... இன்னமும் நீங்க முப்பது வருசத்துக்கு முன்னாடி இருக்கீங்க... இப்ப யாரு கும்புடுறேஞ்சாமி போடுறா... கவர்மெண்ட் ஆபீசில இருக்க உங்க ஆளுக முன்னாடி மத்த சாதிக்காரனுகதான் கும்பிட்டுக்கிட்டு நிக்கிறானுக... சொல்லப் போனா அரசாங்க வேல, வசதி வாய்ப்புன்னு நீங்க மேல இருக்கீகண்ணே... அடிதடி வழக்கு வம்புன்னு நாங்கள்லாம் கீழ போயிக்கிட்டு இருக்கோம்..."

"நீங்க சொல்ற மாரிக்கி இருக்கலாந்தம்பி... உச்சாணிக் கொம்புல நாங்க இருக்கலாம்... அன்னக்கி அடக்கி வச்சானுக இவனுகளுக்கு என்ன மரியாத கொடுக்குறதுன்னு எங்க வாரிசுகள அட்டணக்காலு போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்கலாம்... ஆனா நாங்க அப்படி வளரல தம்பி... மட்டுமருவாத இல்லாம நடந்துக்கத் தெரியாது... வேலான்னு உங்காளுக கூப்பிட்டா என்னய்யான்னு ஓடித்தான் பழக்கமே ஒழிய சொல்லுங்கன்னு ஒசரத்துல நின்னு பழகல... எங்க அப்பனாத்தா அப்படி வளக்கல... இது வரக்கிம் நாமல்லாம் தாயாப்புள்ளயாப் பழகுறோம்... அப்படியே இருந்துட்டுப் போறோம் தம்பி... சாதிப்பிரச்சன.. வெட்டுக்குத்தெல்லாம் எங்களுக்கு வெகுதூரந்தம்பி... அது நம்மூருக்குள்ள இன்னமும் வரல தம்பி... அது வர நாங்காரணமா இருக்க விரும்பல தம்பி... உங்க மனசுல இருக்க எண்ணத்த அழிச்சிருங்க தம்பி..."

"அண்ணே... எனக்குப் பிடிச்சத நாஞ்செய்யப் போறேன்.... அதத் தடுக்க ஊரு... உறவு... சாதிக்கு என்ன அதிகாரமிருக்கு... என்னோட ஆசைக்கு அணைபோட யாருக்கும் அதிகாரமில்ல..." திண்ணையில் இருந்து இறங்கி அவர் அமர்ந்திருந்த வெவலா மரக் கட்டையில் அவருக்கு அருகே அமர்ந்தான்.

"ஆரு அதிகாரங் கொடுத்தாங்கிறதில்ல தம்பி... நீங்க இந்தக் காரியத்தச் செஞ்சி.... அதுல நானும் உடம்பட்டிருக்கேன்னு தெரிஞ்சா ஊரே பத்தி எரியும்... இங்கிட்டும் அங்கிட்டுமா பல உயிரு போகும்... இத்தன வருசத்துல நம்மூருல  நடக்காதது ஒங்களாலயும் என்னாலும் நடந்துடக்கூடாது தம்பி.... இருக்க வரக்கிம் பெரச்சன இல்லாம வாந்துட்டுப் போயிடணுந்தம்பி...."

"அண்ணே... எங்க வீட்டுல நானுல்ல பேசி சம்மதம் வாங்குறேன்... உங்க பக்கம் நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க போதும்... மத்ததெல்லாம் நாம்பாத்துக்கிறேன்."

"தம்பி...."

"என்னண்ணே யோசன... உங்க பொண்ண நான் விரும்புறேன்... அவளும் என்னய விரும்புறா... நாங்க கல்யாணம் பண்ணிக்க உங்க சம்மதம் வேணும்... இதுல யோசிக்க என்ன இருக்கு..."

"தம்பி... நீங்க விரும்பலாம்... ஆடு மாடு மேக்காமப் படிக்க அனுப்புன எம்புள்ளயும் ஒங்க மேல ஆசப்பட்டிருக்கலாம்... ஆனா இத எப்படி ஏத்துக்கிறது சொல்லுங்க... எங்க வாழ்க்கக்கி என்ன தேவயோ அதவிட்டுட்டு வேற எதயும் எதிர்பார்க்கக் கூடாது... எதுக்கும் ஆசப்படக்கூடாது... இங்க வெசயந் தெரிஞ்சா ஒம்மவள வெட்டிபோடுன்னு எங்காளுக வருவானுங்க... அதே ஒங்கப்பாருக்கிட்ட நீங்க சொல்லி அங்கிட்டு வெசயந் தெரிய வந்தா அவுகளும் எம்மவளத்தான் வெட்ட வருவாக... எப்புடிப் பாத்தாலும் எழப்பு எங்களுக்குத்தான் தம்பி... நல்லாயிருப்பிய இத மறந்துட்டு ஒங்க வாழ்க்கயப் பாருங்க... நல்ல பொண்ணா ஒங்கள்ல பாத்துக் கட்டிக்கங்க... என்பொண்ண வாழ விடுங்க..."

முருகன் சிரித்தான்.

***
இரண்டு கதைக்கும் இன்னும் பெயரெல்லாம் முடிவு பண்ணலை. கதை எப்படியிருக்குன்னு சொல்லுங்க.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இரு பத்திகளும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் விமர்சனமும் விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...

Yarlpavanan சொன்னது…

சிறப்பான பதிவு
பாராட்டுகள்

ஸ்ரீராம். சொன்னது…

சாம்பிள் வரிகள் இரண்டிலுமே இருவேறுபட்ட தளங்கள் தெரிகின்றன.  வாழ்த்துகள் குமார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

எதிர்பார்ப்பினை உண்டாக்கும் இரு வேறுபட்ட சூழல்கள். சிறப்பு.