மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 4 டிசம்பர், 2018

சிறுகதை : சன்னலோரம்

முத்துக்கமலம் இணைய இதழில் தீபாவளி புதுப்பித்தல் பகுதியில் வெளியான எனது சிறுகதை. 

நன்றி முத்துக்கமலம் ஆசிரியர் குழு.

முத்துக்கமலத்தில் வாசிக்க 'சன்னலோரம்'

****
Related image
திருச்சி செல்லும் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனக்கு எப்பவுமே இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்து பயணிப்பது மட்டுமே பிடிக்கும். பெரும்பாலும் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் எப்பவுமே என்னோட சாய்ஸ் சன்னலோர இருக்கைதான்... லேசா சன்னலைத் திறந்து வைத்தால் முகத்தில் அடிக்கும் காற்று... கடந்து செல்லும் அசையும் அசையாப் பொருட்கள்... மனிதர்கள்... என ரசிப்போடும்... களிப்போடும் பயணிப்பதில் ஆர்வம் அதிகம்.

சில நேரங்களில் இருவர் அமரும் சீட்டில் சன்னலோரம் அமர்ந்த பின்னர் நம்மருகில் யாருமே அமர மாட்டார்கள். அப்போதெல்லாம் எங்கே நம்மை எழச் சொல்லி விடுவார்களோ என்ற நினைப்போடு பேருந்துக்கு உள்ளே பார்ப்பதைத் தவிர்த்து வெளியில் விழிகளை ஓட்டுவேன்.

எனக்குப் பிடித்தது சன்னலோர இருக்கை அதை யாரோ ஒருவருக்கு விட்டுக் கொடுத்துட்டு உள்ளிருக்கையில் அமர்ந்து கூட்ட நெரிசலில் அழுக்கப்பட்டு... அழுத்தப்பட்டு... பிழிந்து எடுக்கப்பட்டு... பின்னர் கசங்கிய சட்டையோடும் உடலோடும் இறங்குவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை.

இப்படித்தான் ஒருமுறை மதுரைக்குச் செல்லக் காரைக்குடியில் ஏறினேன். பேருந்துக்குள் ஏறியதும் இருக்கைகளைப் பார்த்து முன் சக்கரத்துக்கும் பின் சக்கரத்துக்கும் இடையிலான இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன். 

பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை என்றாலும் பெரும்பாலான சன்னல் இருக்கையை ஆண்களும் பெண்களும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அப்போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி ஏறினாள். சுற்றும் முற்றும் பார்த்தவள் நேராக என் இருக்கை அருகே வந்து 'எக்ஸ்கியூஸ் மீ...' என்றாள். நானோ அப்போதுதான் மொபைலில் முக்கியமாய் எதையோ தேடுவது போல் நோண்டிக் கொண்டிருந்தேன். அவள் மீண்டும் 'எக்ஸ்கியூஸ் மீ சார்... உங்களைத்தான்' என்றாள்.

"என்னையா...? உங்களுக்கு என்ன வேணும்...?" என்று அவளை அண்ணாந்து பார்த்துக் கேட்டேன்.

"நீங்க கொஞ்சம் மாறி உக்காரமுடியுமா...?" என்றாள்.

"மாறி உக்காரணுமா..? ஏன்..? பஸ்ல சீட் இல்லையா?" எழுந்த கோபத்தை அடக்கியபடி கேட்டேன்.

"இப்படி எல்லாச் சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்துக்கிட்டா வர்றவங்க எங்க உக்கார்றதாம்..."

நான் என் மடியைப் பார்த்தேன்... உடனே அவள் என்னைப் பார்த்து முறைத்தாள்.

"மேடம் பஸ்ல இடமில்லைன்னா பரவாயில்லை... அதான் நிறைய சீட் காலியாத்தானே இருக்கு... முன்னாடி மூணு பேர் அமர்ற இருக்கையில எல்லாம் ரெண்டு பேர்தானே இருக்காங்க... அங்க போயி உக்காருங்க... அதென்ன குறிப்பா.. என்னமோ நீங்க சீட் போட்டிருந்து அதுல நான் உக்காந்த மாதிரி எங்கிட்ட வந்து நிக்கிறீங்க.. அப்படி சன்னலோர சீட்டுதான் வேணுமின்னா... கண்டக்டருக்கிட்ட போயி கேளுங்க..." என்று சொல்லிவிட்டு மீண்டும் மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் கண்டக்டர் என் அருகில் வந்து "சார்... கொஞ்சம் மாறி உக்காருங்க " என்றார்.

"எதுக்கு சார்... நான் காசு கொடுத்துத்தானே பயணிக்கிறேன்... எனக்கு எந்த இருக்கை வேணுமோ அதில் பயணிக்க உரிமை இருக்கா இல்லையா... அதுக்காக ஒரு இடத்தைப் பிடிச்சி... அதுல உக்காந்த பின்னால யாரோ ஒருவருக்காக நான் ஏன் இடம் மாறனும்... அப்படி எதுவும் ரூல்ஸ் வச்சிருக்கீங்களா...? மாறி உக்காந்தா டிக்கெட் ரேட்ல டிஸ்கவுண்ட் தருவீங்களா..?" என்றேன்.

"சார்... விதண்டவாதம் பேசாதீங்க... எல்லா சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்தா எப்படி சார்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க சார்..."

"அது சரி... இந்த சீட்ல பயணம் செய்யலாம் அப்படின்னு ஒரு மனநிலைக்கு வந்த பின்னால இப்ப ஏறிக்கிட்டு இடமாறி உக்காரச் சொல்றவங்களுக்கு முன்னுரிமையின்னா நான் எதுக்கு பதினைந்து நிமிடமா உங்க பேருந்துல ஏறி உக்காந்திருக்கணும்... கிளம்பும் போது ஏறி இருக்கலாமே... இதே ஒரு பொம்பளை உக்காந்திருந்து நான் வந்து மாறி உக்காருங்கன்னு சொன்னா விட்டிருப்பாங்களா... நீங்க கூட மாறி உக்காரச் சொல்லுவீங்களா...? ஏன் பஸ்ல இருக்கவங்களே இவ்வளவு இடம் கிடக்கையில நீங்க ஏன் சார் அங்க போயி நிக்கிறீங்கன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க..."

"என்ன சார் படிச்ச நீங்களே இப்படிப் பேசுறீங்க... பாருங்க... நிறைய லேடீஸ் ஏறுறாங்க... ஜென்ஸ் ஒவ்வொரு ஆளா உக்காந்திருந்தா அவங்களை நான் எப்படி உக்கார வைக்கிறது சொல்லுங்க.... முன்னாடி இருக்கிற சீட்டுக்கு மாறுறதால உங்களுக்கு என்ன பிரச்சினை சார்..."

"ஓகே... சார்... நான் விரும்புற சீட்டுல பயணிக்கத்தான் எனக்கு விருப்பமே தவிர, உக்காந்த சீட்ட மத்தவங்களுக்கு கொடுத்துட்டு நீங்க உக்காரச் சொல்ற இடத்துல உக்காந்து பயணிக்க எனக்கு இஷ்டமில்லை சார்... அவங்க உக்காரட்டும்..." என்றபடி எழுத்து பேருந்தைவிட்டு இறங்க, "சார்... சார்... முன்னால சீட்ல உக்காருங்க சார்... அடுத்த பஸ் இருபது நிமிஷம் ஆகும் சார்...' என கண்டக்டர் முதுகுக்குப் பின்னே கத்திக் கொண்டிருந்தார்.

என்னடா இவன் சீட் மாறி உக்காந்தா என்னன்னு நீங்க யோசிக்கலாம்... ஒரு பெரியவர் வந்து தம்பி எனக்கு சன்னல் பக்கம் உக்காந்தாத்தான் வாந்தி வராது என்றாலோ... சன்னல் சீட்டா இருந்தா குழந்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு வருவான் அழமாட்டான் என்றாலோ... மாறிக் கொடுப்பவன்தான் நான்.. ஆனால் சீட் இருக்கும் போது வீம்புக்குன்னே வந்து நிக்கிறவங்களுக்கு நான் எப்பவும் இறங்கிப் போவதில்லை... அது என் குணமும் இல்லை. 

பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது... ஒரு சில இருக்கைகள் தவிர மற்ற இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். எனக்கு அருகே காலியாக இருந்தது. 'யாராச்சும் வந்து உக்காந்துட்டா தேவலாம்... இல்லேன்னா எதாச்சும் லேடீஸ் வந்தா மாறி உக்காருங்கன்னு சொல்லுவானுங்க... அப்புறம் சண்டை போட வேண்டி வரும்' என்று நினைத்தபோது ஒரு பெரியவர் அருகில் வந்து அமர்ந்தார். அவருக்கு 70 வயசு இருக்கும். என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்.

பேருந்து வேகமெடுக்க ஆரம்பிக்க, டிவியில் மருது படம் ஓட ஆரம்பித்தது. 

படம் பார்க்கும் எண்ணமின்றி வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன்.

"என்ன தம்பி... படம் பிடிக்கலையோ... வெளியில பாத்துக்கிட்டு வாறீக...?" என்றார் பெரியவர்.

"பாத்த படம்தான் ஒரு தடவைக்கு மேல பாக்க முடியாது... அதான்"

"இப்ப எல்லாப் படமும் அப்படித்தானே இருக்கு..." என்றவர் டிஏஎஸ் பட்டணம் பொடி பட்டையை இடைவாரில் இருந்து எடுத்தார். "தூக்கம் வராம இருக்க பொடிப் போடுவேன்... உங்களுக்கு எதுவும் தொந்தரவு இல்லையே..." என்றார்.

"பிரச்சினையில்லை..." என்றதும் கொஞ்சம் பொடியை விரலால் கிள்ளி எடுத்து மூக்கில் வைத்துச் சர்ரென்று உறிஞ்சினார். 

அவர் கையை உதறியபோது எனக்குத் தும்மல் வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் நிஜாம்லேடி புகையிலை பாக்கெட் எடுத்து அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து உருட்டி, வாய்க்குள் அதக்கிக் கொண்டார். 

அதன்பிறகுதான் அவரின் ஆட்டம் ஆரம்பமானது... 

பேருந்து ஏதாவது ஸ்டாப்பிங்கில் நிற்கும் போதெல்லாம் என் மீது படுத்து வெளியே எச்சிலை துப்ப ஆரம்பித்தார். வாய்க்குள் எச்சிலோட கொதகொதவென பேச ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது பெரிய மனுசன் என்பதால் பேசாமல் அமர்ந்திருந்தேன். 

திருமயம் தாண்டியது மெல்ல தோள் சாய்ந்தார்... தட்டி விட்டுப் பார்த்தும் மறுபடியும் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தார்.... மெல்லிய குறட்டையோடு.... 

நான் எப்போதும் என்மீது சாய்ந்து தூங்க யாரையும் அனுமதிப்பதில்லை. அது எனக்குப் பிடிப்பதுமில்லை... கோபம் தலைக்கேறினாலும் பெரிய மனிதர் என்பதாலேயே அவரை தட்டித் தட்டி விடிவதோடு நிறுத்திக் கொண்டேன். 

புதுக்கோட்டை போவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது. 'தம்பி உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேனோ...?' என்று சிரித்தபடி அங்கு இறங்கினார். 

இப்போது பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஆயா வந்து அமர்ந்தது... கையில வேற வெத்தலைப் பெட்டி வச்சிருக்கதைப் பார்த்ததும் ‘ஆஹா புதுக்கோட்டை வரை புகையிலை பார்ட்டி... இனி வெற்றிலை பார்ட்டி இன்னைக்கு யார் முகத்துல முழிச்சமோ தெரியலை’ என்று நினைத்த எனக்குள் பக்கத்து வீட்டு புஷ்பா வந்து சிரித்தாள்... சேச்சே... புஷ்பாவைப் பார்த்துட்டுப் போனா அன்னைக்கு சக்ஸஸ்தான் என நினைத்துக் கொண்டேன்... காரணம் அவ நம்ம ஆளாச்சே.

சரி சன்னலோரமா ஒண்டிக்க வேண்டியதுதான் என சன்னலோடு ஐக்கியமாக...

பேருந்தின் வேகத்தில் காற்றுத் தாலாட்ட... 

தூக்கம் மெல்லக் கண்களை அணைக்க ஆரம்பிப்பதை உணர்ந்தேன்... 

என் தலை மெல்ல அருகிலிருந்த ஆயாவின் தோள் சாய்ந்தது.

- 'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

கோமதி அரசு சொன்னது…

எனக்கும் ஜன்னலோரம்தான் பிடிக்கும்.
குழந்தைகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது.
அப்புறம் அவர்கள் எல்லாம் திருமணம் ஆகி போன பின் ஜன்னலோரம் கிடைத்தது.
ஆனால் என்ன செய்வது சில நேரம் இப்படி மாறி உடகார வேண்டிய சூழ்நிலை வரும்தான்.
கதை நிறைவில்


ஆயா பேரனை சாய அனுமதிப்பார். (ஆயாவுக்கு எல்லா குழந்தைகளும் ஒன்று தானே!)

ஸ்ரீராம். சொன்னது…

ஹா... ஹா... ஹா... ரசித்தேன் குமார்.

துரை செல்வராஜூ சொன்னது…

பேருந்தின் ஜன்னலோரம்..
காற்றோட்டமான கதை!..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

கடைசில ஹா அஹ ஹா...நல்லாருந்துச்சு...எனக்கும் ஜன்னலோரம் தான் பிடிக்கும். கூடியவரை முயற்சி செய்வேன். ஆனால் சில நேரம் இப்படித்தான் யாருக்காகவாவது மாறிக் கொடுக்க நேரிடும். நானும் இப்படித்தான் ஒரு சீட்டில் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்தப்ப கண்டக்டர் வந்து இப்படி ஆளுக்கு ஒரு சீட்டை பிடிச்சா மத்தவங்க என்ன செய்வாங்க ஆம்பிளைங்க இருக்காங்க பாருங்க ..நின்னுக்கிட்டு...நான் சொன்னேன் எனக்குப் பிரச்சனை இல்லை அவங்கள உட்காரச் சொல்லுங்கன்னு....ஆனால் கண்டக்டர் அதுக்கு சம்மதிக்காமல் என்னை எழச் சொல்லி ....ஜன்னல் சீட் போய் விட்டது..

ரயிலிலும் ஜன்னல் சீட் வேண்டும் என்றே கேட்டு புக் செய்வேன்...இரவுப் பயணம் என்றாலும்....எனக்கு இரவு ஊர்களை வேடிக்கப் பார்ப்பது ரொம்பப் பிடிக்கும்.....

நல்லாருக்கு கதை வாழ்த்துகள் குமார்

கீதா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல திருப்பம். இரண்டு சீட் - பல சமயத்தில் சக பயணியால் இப்படி அவதிப்பட்டு இருக்கிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

ஜன்னலோரம் கிடைச்சாலும் தனியாப் போனால் தான் மாத்திக்கும்படி நேரிடும். தனியாப் போகக் கூடாது.