மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

கிராமத்து நினைவுகள் : பொங்கல் நினைவுகள்

பொங்கல்...

பள்ளிக் காலத்திலும் கல்லூரிக் காலத்திலும் ஏன் திருமணத்துக்கு முன்னும் அதன் பின்னான சில காலங்களும் கொடுத்த இனிப்பின் சுவையை மனதில் சுமந்து உதட்டில் வடுவாய் ஊறும் ஆசையை மெல்லத் தள்ளி பொங்கலா அப்படின்னா என்று கேட்பவர்களிடம் ஒரு வெற்றுச் சிரிப்பை உதிர்த்து மனம் நிறைந்த வேதனையுடனே இன்றைய காலை நகர்ந்தது.

எதற்காக இந்த வாழ்க்கை...? இதில் சாதித்தது என்ன...? கடன் இல்லாமல் இருக்கிறோமா...? கவலை இல்லாமல் இருக்கிறோமா..? என்றெல்லாம் எண்ணிப் பார்த்தால் இதுவரை கடந்து வந்த ஒன்பது ஆண்டுகள் என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறது. 


காலையில் எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைத்த பின் மாலைகளில் சிரிக்கும் அவரை மனைவி செல்போனில் விழுங்கி வாட்ஸ் அப் மூலமாக எனக்கு அனுப்பிய போது அதைப் பார்த்ததும் அங்கிருக்க முடியாத நிலை நினைத்து... இந்த வாழ்க்கையை நினைத்து... கண்ணீர்தான் வந்தது. 

இன்று முழுவதுமே மனதில் நிம்மதி என்பதே இல்லாமல் அலைந்து கொண்டே இருந்தது. இந்த வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு விருமாண்டியில் 'போய் புள்ள குட்டியை படிக்க வையுங்கடா' என கமல் சொல்வதைப் போல் போய் புள்ளைகளோட, குடும்பத்தோட வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோமே... எத்தனை காலம் இங்கிருந்தாலும் கடன் நம்மை விட்டு விலகப் போவதில்லை ஆனால் வாழ்க்கையில் நிறைய இழப்புக்கள் நம்மைப் பார்த்து பரிதாபமாகச் சிரித்துக் கொண்டுதான் இருக்கும் என்றே தோன்றியது.

எங்க ஊரில் மார்கழி மாதத்தில் மாரியம்மனுக்கு காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடும் வழக்கத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். முதல் வருடம் மைக் செட் கட்டியபோது எத்தனை பிரச்சினைகள்... போலீஸ் ஸ்டேசன் வரை சென்று வந்தோம் என்றாலும் அன்று ஆரம்பித்து வைத்து மழையில் குடை பிடித்தபடி நாங்கள் செய்த பொங்கலின் தொடர்ச்சியாய் இன்று வரை அது தொடர்வதில் மகிழ்ச்சி. மார்கழி மாதம் முடிந்து தை முதல்நாள் முதல் பொங்கல் மாரியம்மனுக்கே.

அடுத்ததாக எங்கள் ஊர் கண்மாயில் காவல் தெய்வமாய் நிற்கும் எங்க முனீஸ்வரனுக்கு ஊரில் பாதிப் பேர் பொங்கல் வைப்போம். கோவில் பொங்கல்களில் எல்லாருடைய பொங்கப் பானைகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து சாமிக்குப் படைத்து அதில் நெய், வெல்லக்கட்டி எல்லாம் போட்டு வைத்திருந்து தீபம் பார்த்த பின் அந்த பள்ளையச் சோறை வாங்கிச் சாப்பிட்டால் ஆஹா என்ன சுவை... என்ன சுவை... பள்ளையச் சோற்றுக்கு தனி சுவைதான்... அதுவும் கோவில் பொங்கல்கள் எப்போதும் சுவை அதிகம்.

அதன் பின் வீட்டுப் பொங்கல்... முன்னெல்லாம் வயலில் இருந்து கதிர், அருகம்புல் எல்லாம் பிடிங்கி வந்து பொங்கல் வைப்போம். இப்போது வயல்களில் கருவை மரங்களின் ஆட்சியாகிவிட்டது. தண்ணீர் ஓடிப் பாய்ந்த வாய்க்கால்கள் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து சில இடங்களில் வயலில் கட்டிய வீடுகளுக்கு பாதை ஆகிவிட்டது. இன்னும் சில காலம்தான் எல்லா வயல்களும் ஒன்றாகிவிடும். ஊடு வரப்புக்கள் எல்லாம் உயிரை இழந்து கொண்டிருக்கின்றன.

வீட்டுப் பொங்கல் என்பது இப்போது எங்களுக்கு இரண்டாய்.... தேவகோட்டையில் அதிகாலையில் மனைவி பொங்கல் வைத்து விட்டுத்தான் ஊருக்குப் போனார். அங்கு முனியய்யா கோவில் பொங்கல் முடித்ததும் மாலைதான் வீட்டுப் பொங்கல் வைத்தார்கள்... இரவு நாச்சியம்மத்தா கோவில் பொங்கலுடன் முதல்நாள் பொங்கல் முடிவுக்கு வந்துவிடும்.

மறுநாள் மாட்டுப் பொங்கல்....

அப்பல்லாம் வீட்டுக்கு நாலஞ்சி மாடு நிக்கும்... ஆடுகள் இருக்கும்... எல்லாமே மாறிப் போச்சு... மாடுகளும் இல்லை... ஆடுகளும் இல்லை... பல வீடுகளில் மனிதர்களும் இல்லை.

காலையில் எழுந்ததும் மாடுகளுக்கு புது மூக்கணாங்கயிறு இட்டு புது பிடி கயிறு போட்டு... குளிப்பாட்டி... அதுவும் கம்மாய் நிறைந்து கிடக்கும் காலத்தில் எல்லாரும் ஒன்றாய் மாடுகளை நீச்சி... வைக்கோல் வைத்து தேய்த்து அழுக்கைத் தண்ணீரில் கரைத்துவிட்டு முனியய்யா கோவில் குங்குமத்தை எடுத்து அழகழகாய் பொட்டிட்டு வீட்டில் கட்டி வைப்பதுண்டு. பலர் மாட்டின் கழுத்தில் துண்டுடன் கரும்பையும் கிழங்கையும் பொங்கத் தாலிச் செடியையும் கட்டி வைப்பார்கள்... சிலரோ வீட்டுச் சுவற்றில் அடித்த காவியின் மீதத்தை மாட்டின் கொம்பிலும் உடம்பிலும் பூசிவிடுவார்கள்.

'ஏப்பா... ஏய்... எப்ப பொங்க வச்சி திரும்பி வர்றது... பத்தரை மணி வரைக்கும் ராகு காலம்ப்பா... வெயில்லயா போயி வச்சிக்கிட்டு நிக்கிறது... எளவரசுக  வாங்கப்பா போயி  பொங்கக் குழி சுத்தம் பண்ணிட்டு வருவோம்' என்றபடி சித்தப்பா மம்பட்டியுடன் வருவார். அவர் பின்னே அரிவாள், மம்பட்டி என ஆளாளுக்கு ஒன்றுடன் பாதையை சரி செய்தபடி கருப்பர் கோவிலை அடைவோம்.

கருப்பர் கோவிலின் முன்னே 'இன்னைக்கு எங்கிட்டுப்பா சூலம்' எனக் கேட்டு நீண்ட அடுப்பு வெட்டிவிட்டு... முள்களை எல்லாம் சுத்தம் செய்து படையல் போட வீடு போல் கட்டங்கள் இட்டு... 'ஏப்பா நீ நாலு பக்கமும் வாசப்படி வெட்டுப்பா... நீ உள்ள வெட்டிக்கிட்டு வாப்பா நிக்காம... ஏம்ப்பா கொஞ்சப் பேரு வைக்கப் பிரி போட்டு போட்டு மாவிலை வேப்பலை கொண்டாந்து தோரணம் கட்டுங்க... ரெண்டு பேரு தோரணத்துக்கு கம்பு ஊனுங்கப்பா... புள்ளக நிக்க கொஞ்சம் நெலல்ல சுத்தம் பண்ணி வைங்கப்பா... இங்க முடிச்சிட்டு கருப்பர் கோவிலச் சுத்தி நெருஞ்சி முள்ளா இருக்கு... கொஞ்சம் சுத்தம் பண்ணுங்கப்பா என்ற குரல்களின் ஓசைக்கேற்ப வேலைகள் நடக்கும்.

எல்லாம் தயார் செய்து வந்த உடன் 'ஏம்பா... பொங்க வைக்க கிளம்புங்கப்பா என்றதும் பொருட்கள் நிறைந்த கூடை, தண்ணீர்க்குடம், முள்ளுக்கட்டு என ஆளுக்கு ஒன்றாய் தூக்கிச் சென்று வரிசையாய் வைத்து எல்லாரும் வைத்ததும் பொங்கல் வைக்க ஆரம்பித்து எல்லாருடைய பானையும் பொங்கியதும் சங்கு ஊதி, மாடுகளைப் பிடித்துக் கொண்டு போய் கருப்பர் கோவில் முன்னே கட்டி, கருப்பர் கோவில் முன்னே இருக்கும் தூபக்காலில் தேங்காய் நாறு, பூவரசம் பட்டை என இட்டு தீவைத்து சாம்பிராணி போட ரெடி பண்ணி, பெரிய கருப்பர் சின்னக் கருப்பருக்கு தண்ணீர் வைத்து கழுவி பொட்டிட்டு... துண்டு கட்டி... பூமாலைகள் போட்டு ஐயாக்கள் பூஜைக்கான வேலையில் இறங்க, அர்ச்சனைக் கூடைகள் வரிசையாய் வந்தமரும்.

புறமடைத்தண்ணி... இப்பல்லாம் இல்லை... புறமடைத் தண்ணியெல்லாம் அப்போ எடுத்தாந்து அதை மந்திரித்து பொங்கலோ பொங்கலெனச் சொல்லி, மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அந்த நீரைத் தெளித்து... தீச்சட்டி எடுத்து... திட்டி சுற்றி அதில் போட்டு... மூன்று சுற்றுகளுக்குப் பின் பொங்கல் வைத்த பொங்கக் குழி தாண்டி உடைத்து எல்லாரும் விழுந்து கும்பிட்டு...  படையல் சோற்றைப் பிசைந்து எல்லாருக்கும் கொடுக்க, அதை மாடுகளுக்கு தின்னக் கொடுத்து.. கேலிக்காரர்களின் முகத்தில் மிளகாயுடன் தேய்த்து மகிழ்ந்து மாடுகளை வீட்டுக்குக் கொண்டு சென்று உலக்கையைப் போட்டு தாண்ட வைத்து கசாலையில் கட்டிவிட்டு மீண்டும் கருப்பர் கோவில் வந்து சாமி கும்பிட்டு எல்லாருமாக கிளம்பிப் போய் வீட்டில் பொங்கலுடன் மதிய விருந்தையும் ஒரு கட்டுக் கட்டிட்டு கரும்புடன் மாரியம்மன் கோவிலுக்கோ அல்லது சிராவயல் மஞ்சுவிரட்டுக்கோ கிளம்பி விடுவார்கள்.

அன்று மாலை மீண்டும் மாரியம்மன் கோவிலில் கொப்பிப் பொங்கல்... பெரும்பாலான வீடுகள் கலந்து கொள்ள, மீண்டும் ஒரு மாட்டுப் பொங்கல் தோரணையுடன்... குழந்தைகளின் ஆட்டம்... பெரியவர்களின் அரசியல் பேச்சுக்கள்... இளைஞர்களின் கேலி கிண்டல்கள்... இளவட்டக் கல் தூக்குதல்... என மகிழ்வாய்... சில வருடமாக விளையாட்டுப் போட்டிகளும் இவற்றுடன் இணைய குதூகலமாய் பொங்கல் தினம் நகரும்.

இதை எல்லாம் அனுபவிக்காமல் ஆறு மணிக்கு எந்திரிச்சி... நம்ம டயத்தில் குளித்து... அவசரமாக அலுவலகம் சென்று... வேலை... வேலை என சாப்பாடு மறந்து... மாலை திரும்பி... என்ன சமையல் செய்வதென யோசித்து... சமைத்து... ஊருக்குப் பேசி... சாப்பிட்டு... கணிப்பொறியில் ஏதோ ஒன்றைப் பார்த்து.... படுத்து... மீண்டும் ஆறு மணி... குளியல்.... என நகரும் வாழ்க்கை வெறுப்பையே தருகிறது.


பொங்கல் நினைவுகளுடன் பொங்கும் மனதை தேற்றியபடி படுக்கையை விரிக்கிறேன்... அடுத்த வருடமேனும் குடும்பத்துடன் குதூகலப் பொங்கல் வைக்க வேண்டும் என்ற ஆவலுடன்....

ஆசைகள் எப்போது நிராசைகள் ஆவதில்லை... எப்போதேனும் ஆகலாம்... அந்த எப்போதேனும் நம்மிடம் வராமல் இருக்கட்டும். 
-'பரிவை' சே.குமார்.   

7 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நாங்கள் எல்லாம் இங்கேயே இருந்து அனுபவித்துக் கொண்டிருப்பதால் இந்த இழப்பின் வலி நீங்கள் செல்லும்போதுதான் புரிகிறது, உணர முடிகிறது. ஒரு விஷயம் இல்லாமல் போகும்போது, தள்ளி தூரம் நிற்கும்போதுதான் அதன் அருமை மனதில் இன்னும் அதிகமாகத் தேங்குகிறது.

துரை செல்வராஜூ சொன்னது…

ஆசைகள் எப்போதும் நிராசைகளாவதில்லை..

அன்பின் நல்வாழ்த்துகள்..

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

மனிதனாகப் பிறந்து விட்டாலே கவலையும் கூடவே பிறந்து விடுகிறது. எல்லோருக்கும் பிரச்சினைதான்; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. விட்டுத் தள்ளுங்கள்; ஆக வேண்டியதைப் பாருங்கள். இனிய பொங்கல் வாழ்த்துகள்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

உங்களின் இந்த பதிவு, எனது பள்ளி மாணவ பருவத்தில், எங்கள் அம்மாச்சி ஊரில் ஆடு , மாடுகளோடு கொண்டாடிய அந்நளைய மாட்டுப் பொங்கலை நினைவு படுத்தியது. மகிழ்வான நினைவுகளை அடிக்கடி நினத்துக் கொள்வதும் உடம்புக்கும், மனதுக்கும் நல்லது தானே?

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) சொன்னது…

தனிமையும் பிரிவும் அதன் வேதனையும் நன்கு உணர்ந்தவள் நான்.உங்கள் ஏக்கம் நன்கு புரிகிறது.கண்டிப்பாக அடுத்த பொங்கல் உறவுடன் இனிய வீட்டில் கொண்டாட வேண்டும் என்று ஆசிர்வதிக்கும்
கார்த்திக் அம்மா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பொங்கல் வாழ்த்துகள் நண்பரே
தம +1

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் வேதனைகள் புரிகிறது குமார். பொங்கல் சமயம் உங்களுக்க் விடுமுறை கிடைக்காதோ...கிடைத்தால் ஊரில் எல்லோருடனும் கொண்டாடலாமே என்றுதான்..நல்ல நினைவுகள். அதுவும் விவசாய குடும்பத்து பின்னணி உடைவர் நீங்கள்...அடுத்த வருடம் தங்களுக்கு ஊரில் எல்லோருடனும் கொண்டாட இறைவனின் அருள் கிட்டிடட்டும்!