மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 30 ஜனவரி, 2018

முருகா..! முருகா..!!

Image result for முருகன்

முருகன் மீது ஏனோ ஒரு காதல் அன்றும் இன்றும் எப்போதும்...

முருகனை சீமான் முப்பாட்டன் என்று சொன்ன பின்னால் வந்த காதல் அல்ல இது... சிறு வயது முதலே அவன் மீது தீவிரக் காதல். 

பள்ளியில் படிக்கும் போது முருகன் படங்களைச் சேகரிப்பதும்... ராணி முத்து காலண்டரில் இருக்கும் முருகனை, காலண்டர் முடிந்த பின்னர் எடுத்து பத்திரப்படுத்தி வைப்பதும் கல்லூரி செல்லும் வரை தொடர்ந்தது.

இந்த பத்திரப் படுத்துதல் இப்போதும் தொடர்கிறது. அன்று படங்களை வெட்டி எடுத்துச் சேகரித்தேன். இன்றோ இணையத்தில் அழகிய முருகனைக் கண்டாலோ... முகநூலிலோ... வாட்ஸ் அப்பிலோ பார்த்தாலோ உடனே சேமித்து வைத்து விடுகிறேன். பத்துமலை முருகன் வரை நம்ம சேமிப்பில்.

ஊரில் மாரியம்மன் இருக்கு, முனீஸ்வரர் இருக்கிறார்... கருப்பரோ சின்னக் கருப்பர் பெரிய கருப்பர் என இருவராய்... ஐயனாரும் இருக்கிறார். நாச்சியம்மத்தாவும் குடி கொண்டிருக்கிறார். இன்னும் சிலரும் இருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாரியம்மன் கோவிலுக்குள் விநாயகரும் முருகனும் இடம் பிடித்துக் கொண்டார்கள்.

முருகன் மீது அப்படி என்ன காதல்...?

ஒருவேளை குமார் என்ற பெயர் முருகன் மீது ஒரு ஒட்டுதலை ஏற்படுத்திவிட்டதோ..?

பெரும்பாலும் என் நட்பு வட்டத்தில் அதிகம் முருகன் பெயர் கொண்டவர்களாகவும் அமைவது எப்படி... ஆச்சர்யமே... ஆம் என் ஆருயிர் நண்பனாய் இருந்தவனும்... இப்போது நண்பனாய்த் தொடர்பவனும் முருகனே.

சிறுவயதில் முருகன் மீதான காதலால் ஐயப்பனை வெறுத்தவனும் நான்தான்... பின்னர் ஐயப்பன் மீதும் பற்றுதல் ஏற்பட்டு நான்காண்டுகள் நடைப்பயணம் மேற்கொண்டவனும் நான்தான். 

பழனிக்கு நடைப் பயணம்... ஆஹா.. அது ஒரு அற்புத அனுபவம்.... ஆறாண்டுகள் நடைப்பயணம் மேற்கொண்டு முருகனைத் தரிசித்து வந்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை...

லட்சோப லட்ச மக்களில் நானும் ஒருவனாய் உறவுகளுடன் முருகனைக் காண பழனி மலை நோக்கி நடந்த நாட்கள் எத்தனை ஆனந்தத்தைக் கொடுத்தன என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே ரசித்துச் சொல்ல முடியும்.

தேவகோட்டையில் இருந்து ஏழு நாள் நடை பயணம்... தேவகோட்டையில் இருந்து கிளம்பும் செட்டியார்கள் காவடிக்கு வழி நெடுக வரவேற்பும் , பழனியில் தனி மரியாதையும் இருக்கும். ஆனால் காவடியுடன் நடந்து செல்ல நம்மளால் முடியாது. அவர்கள் பயணத் திட்டப்படித்தான் நடப்பார்கள்...

நாங்க ஐந்தாவது நாள் காலை பழனி அடிவாரத்தில் இருப்போம்... சண்முக நதிப் பயணம் முடித்து மலையேறினால் சாமி கும்பிட்டு அங்கிருந்து இரவு தங்கத் தேர் பார்த்து பின்னர்தான் இறங்குவோம்.

இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்தால் குன்றக்குடியைக் கடக்கும் போது இறங்கி சாமி கும்பிட்டுச் செல்லலாம் என்று தோன்றினாலும் சரி ரெண்டு நாள் கழித்து வந்து கும்பிட்டுக்குவோம் என்று மனதிற்குள் முருகனை வணங்கி வீட்டுக்கு ஆறாவது நாள் அதிகாலை சென்றால் என்னடா பூசத்துக்கு நடந்து பொயிட்டு இப்ப பூசத்துக்கு முன்னாடி திரும்பிட்டீங்கன்னு வீட்டில் கேட்பாங்க.

எங்களுக்கு முன்னோடி எங்க அண்ணன் குரூப், மூணு நாளில் பழனிக்கு போய் நாலாவது நாளில் வீட்டிற்கு வந்த சாதனையாளர்கள். அதை எங்க ஊரில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. மனுசனுங்க மூணு நாளும் நடந்துக்கிட்டே இருந்திருக்கானுங்க...

முருகனைப் பார்த்தாலே மனசுக்குள் அவ்வளவு சந்தோஷம்... அதுவும் அந்த இராஜ அலங்காரத்தில்... ஆஹா... காணக் கண் கோடி வேண்டும்.

போன விடுமுறையில் விஷாலுக்கு மொட்டை போட பழனிக்குச் சென்றோம். மாமாவின் நண்பர் ஒருவரின் உதவியால் கூட்டத்தில் மாட்டாமல் முருகனை... அந்த இராஜ அலங்காரத்தில் அருகில் நின்று பார்த்து மகிழ்ந்தோம்... ஆஹா... என்ன ஒரு அற்புத தரிசனம் அது.

எப்பவும் முருகன் மீது தீராத காதல் எனக்கு.

அது ஏனோ தெரியலை... ஒரு வேளை  சீமான் சொல்லும் ரத்த சம்பந்தமாக இருக்கலாமோ என்னவோ... ஆனாலும் முப்பாட்டன்... இப்பாட்டன் எல்லாம் எனக்கு அவனில்லை... அவன் எனக்குள் எப்போதும் இருக்கும் ஒருவன்... 

அதிகாலை எழும்போது 'அப்பா முருகா' எனத்தான் எழுவேன்... நாள் முழுவதும் தும்பினாலும்... உட்கார்ந்தாலும்... எழுந்தாலும்... எல்லாவற்றுக்கும் முருகாதான்... 

நாளை தைப்பூசம்.... இன்று முருகனின் நினைவு அதிகமாய்...

மதியம் அலுவலகத்தில் பறவை முனியம்மா என் காதுக்குள் 'காவடியாம் காவடி' பாடிக் கொண்டிருந்தார்.

ஒரு வாரமாக எதுவும் எழுத மனமில்லை... இரண்டு நாள் முன்னர் அறம் மற்றும் அருவி குறித்து எழுத ஆரம்பித்து பாதி எழுதிய போது ஒரு சிறு பிரச்சினையால் சேமிக்காமல் எழுதியது ஸ்வாகா ஆக, நேற்று மீண்டும் அதே பதிவை எழுதிய போது பாதியில் அயற்சியாகி என்னத்த எழுதினோம் என்று படுத்துவிட்டேன்.

இன்று முருகனைப் பற்றி எழுத வேண்டும் என்ற நினைப்புடன் சமைத்து விட்டு வந்து உட்கார்ந்தால் பதிவு தயாராகிவிட்டது.


'அப்பா முருகா... என்னை மட்டும்... இல்லப்பா 
எல்லாரையும் காப்பாத்துப்பா...'

-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எங்களுக்கும் முருகன் மனதிற்குப் பிடித்த தெய்வம். பழனிக்கு நடந்து சென்றது நல்ல அனுபவமாக இருந்திருக்குமே குமார். முருகன் உங்களுக்குத் துணை நின்று உங்கள் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து மகிழ்வளிக்கட்டும்.

கீதா: அக்கருத்துடன்.... என் மகனுக்கும் இஷ்டதெய்வம்...நாங்க தினமும் கந்தசஷ்டிகவசம், ஷன்முகக்கவசம் கேட்பதுண்டு. பழனியும் எப்போதோ சென்றதுண்டு. மகனுக்கு இரண்டாவது மொட்டை திருச்செந்தூரில்தான் போட்டோம். எல்லோருக்கும் நல்லது நடக்கட்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

​எனக்கும் சிறுவயது முதலே எல்லாவற்றுக்கும் முருகன்தான். இஷ்டதெய்வம். நண்பன்!

துரை செல்வராஜூ சொன்னது…

முருகா சரணம்!...

Anuprem சொன்னது…

முருகா சரணம்...

கந்தா சரணம்.....

வடிவேலா சரணம்.....


எனக்கும் அழகிய இறை படங்களை பத்திர படுத்துதல் மிகவும் பிடிக்கும்..இப்பொழுதெல்லாம் pinterest ல் சேமிக்கிறேன்....எளிமையாகவும்...இனிமையாகவும் இருக்கு...



முருகன் அனைவருக்கும் நல் அருள் புரியட்டும்....

G.M Balasubramaniam சொன்னது…

http://gmbat1649.blogspot.com/2011/03/blog-post_14.html முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் நான் எழுதிய பதிவு பாருங்களேன்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

திருநாள் வாழ்த்துகள்

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

முருகன் எல்லோரையும் காப்பாற்றுவான்.

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

தங்களுடைய பக்தி எண்ணங்களோடு எழுதிய பதிவு நன்றாக இருந்தது. முருகா என்ற அந்த ஒரு சொல்லுக்குதான் எத்தனை சக்தி நம்முள் உருவாகிறது. என் நாவும் எப்போதும் முருகா ஞானபண்டிதா என உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
தங்களுடைய பழனி அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருந்தது.
தற்சமயம் தங்கள் உடல் நிலை பரவாயில்லையா?
முருகன் எப்போதும் அனைவருக்கும் துணையாயிருப்பான்.

நானும் என் பதிவாக முருகனைப் பற்றி எழுதியுள்ளேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்து கருத்திடுங்கள். நன்றி!

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

கோமதி அரசு சொன்னது…

அருமையான பதிவு.
என் தங்க்கை, தம்பி எல்லாம் மதுரையிலிருந்து நடைபயணம் பழனிக்கு மேற்கொண்டு இருக்கிறார்கள்.
மன உறுதியும், வைராக்கியமும்
மலைக்க வைக்கும்.

எல்லோரையும் நல்லபடியாக வைக்கட்டும் முருகன்.

iramuthusamy@gmail.com சொன்னது…

முருகனை நம்பினோர் கைவிடப்படார்..