மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 13 ஏப்ரல், 2017சினிமா : கவண்

வண்...

கலவையான விமர்சனத்தைப் பெற்றிருக்கும் படம். மீடியா மக்களில் பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை என்றும் சாதாரண மக்களுக்கு குறிப்பாக தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள், தங்கக் குரலைத் தேடும் போட்டிகள், ஆய்த எழுத்து, நேருக்கு நேர் போன்றவற்றைப் பிடிக்காதவர்களுக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு என்றும் முகநூலில் பார்க்க முடிகிறது. 

Image result for கவண் விமர்சனம்

படம் பிடிச்சிருக்கு... பிடிக்கலை.... ஆனா எல்லாருக்கும் விஜய் சேதுபதி நடிப்பு பிடிச்சிருக்கு. கமல், அஜீத், தனுஷ்ன்னு பிடித்த நடிகர்கள் பலர் இருந்தாலும் இப்போ வி.சே.யின் எதார்த்த நடிப்பு ரொம்பப் பிடிச்சிருக்கு. நல்ல நடிகன்.

ஆமா 'கவண்'னா என்ன..?

கவண்ங்கிறது வேற ஒண்ணுமில்லைங்க... ஊர்ல கவட்டைக் கம்பாப் பார்த்து (வி வடிவில்) வெட்டி அதை அழகா செதுக்கி... வேணுமின்னா உடைந்த பீங்கானால் மேலே சீவி வழுவழுப்பாக்கி, சைக்கிள் டியூப்பை அழகா, ஒரு அடி நீளத்துக்கு வெட்டி, சிறிதாக சணல் போல கத்திரிக்கப்பட்ட சைக்கிள் டியூப்பால் அதை கவனையின் இரண்டு பக்கத்திலும் நறுக்குன்னு கட்டிட்டு தோலால் ஆன சிறு வாரை (கல்வார் என்பது அதன் பெயர்) கவனையில் கட்டப்பட்ட டியூப்பின் முனைகளில் கட்டி இணைத்து கல்லை வைத்து, குறி பார்த்து, இழுத்து அடித்து காக்கை, கொக்கு, அணில், ஓணான், சில நேரங்களில் கோழிகளை அடித்துப் பிடிப்பதற்கு கிராமங்களில் பயன்படுத்துவதுதான்...

எங்க பக்கம் இதற்குப் பேர் கவட்டாப்புல் (கவட்டை+வில் என்பது மருவியிருக்கலாம்) சின்னப் பிள்ளைகளில் இது ஒரு விளையாட்டுப் பொருள்... விடுமுறை நாளில் சிலர் கவட்டாப்புல்லும் கையுமாத்தான் திரிவர். நெல்லவிச்சி காய வைக்கும் போது கோழி, காக்கைகளை விரட்டப் பயன்படும். இது நரிக்குறவர்களிடம் அதிகம் இருக்கும். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நரிக்குறவர்கள் செய்து விற்பார்கள். பள்ளியில் படிக்கும் போது அவர்களிடம் வாங்கியிருக்கிறோம். சைக்கிள் டியூப்பைவிட கார் டியூப்பில் உருண்டையாக கட்பண்ணி கட்டி விற்கும் கவட்டாப்புல்லுக்குத்தான் அதிக கிராக்கி...

தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி, தரவரிசைக்காக செய்யும் மோசமான நாடகங்களுக்கு முன்னோடி விஜய் டிவி என்பதை நாம் அறிவோம். சிம்பு - பிருத்விராஜ் மோதல் நாடகம்... சிம்புவின் அழுகை என அடிக்கடி காட்டிக் காட்டியே டி.ஆர்.பி.யை ஏற்றிக் கொள்ள, அதன் பின்னர் எல்லாத் தொலைக்காட்சிகளும் இந்த நாடக அரங்கேற்றங்களை மிக அழகாகச் செய்து வருகிறார்கள். சிம்பு - பிருதிவி நாடகத்தை சில காலங்களுக்குப் பிறகு பிருத்வி உடைத்தாலும் நாடக அரங்கேற்றம் என்பது இன்னும் தொடரத்தான் செய்கிறது. அதிலும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் கேலிக்கூத்துக்கள் உச்சபட்ச கேவலம். தமிழகத்தின் தங்கக் குரல் என கேரளத்தின் குரல்களைத் தேடிக் கொடுக்கும் நிகழ்ச்சியில் பிள்ளைகளை அழ வைப்பதுடன் பெற்றோரையும் அழ வைக்கும் தொலைக்காட்சிகள் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதை நாம் அறிவோம்.

சல்லிக்கட்டு,  நெடுவாசல், தில்லியில் விவசாயிகள் என எதையும் கண்டுகொள்ளாத பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் சசிகலா சிறையில் என்ன சாப்பிட்டார் என்பதைப் பற்றி விலாவாரியாக செய்திகளை மக்களுக்குக் கொண்டு சென்றன. ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடாவில் மற்ற கட்சிகளைப்  பற்றி நேரிடையாகச் சொல்லும் மீடியாக்கள் கோடிகளில் விளையாடும் கேடிகள் பற்றிப் பேசுவதில்லை. எப்போதும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று மட்டும் குரல் கொடுக்கத் தவறுவதில்லை... நிர்வாணமாக உருண்ட விவசாயிகளை விட்டு விட்டு சினிமா நடிகைகளின் செய்திகளை  தலைப்புச் செய்தியாக்கத் தவறுவதில்லை... இப்படியான ஊடகங்களை தோலூரித்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். வசனம் கபிலனும் சுபாவும்.... கலக்கல்.

Image result for கவண் விமர்சனம்

விளம்பரக் கம்பெனிகளை முன்னிறுத்தி தொலைக்காட்சிகள் செய்யும் உள்ளடி வேலைகளையும் தோற்றவன் அழ வேண்டும் என்பதற்காக அவர்கள் நடந்து கொள்ளும் அநாகரீக செயல்களையும் அரசியல்வாதிகளிடம் முன்கூட்டியே கேள்விகளைக் கொடுத்துவிட்டு அதை மட்டுமே கேட்கும் நிகழ்வுகளையும் காட்டும் முன் பாதி ஜாலியாய் பயணித்தாலும் ஒரு தொலைக்காட்சி அலுவலகத்துக்குள்ளயே சுற்றுவது இழுவையாய்தான் இருக்கு. இரண்டாம் பாதி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களும் மற்றொரு தொலைக்காட்சி நிலைய இயக்குநரான டி.ஆரும் சேர நன்றாக பயணிக்கிறது. டி.ஆர். சில இடங்களில் ஓவர் டோஸ்தான் என்றாலும் பல குரலில் பேசுவது, தன் நிலை குறித்துச் சொல்வது என சில இடங்களில் அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தின் கதை எப்படியிருந்தாலும் படத்தைப் தூக்கி நிறுத்தி, பார்க்கும்படி செய்யும் நடிப்புக்குச் சொந்தக்காரர் விஜய் சேதுபதி. எந்த கதாபாத்திரம் என்றாலும் அப்படியே மாறும் நடிகன்... நாந்தான் சூப்பர் ஸ்டார் என பலர் மார்தட்டிக் கொண்டிருக்க... நடிப்பில் நவரச நாயகர்களின் வாரிசாய் முன் நிற்பது வி.சே.தான். இதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். போஸ் வெங்கட்டை பேட்டி எடுக்கும் இடம் கலக்கல்... முதல்வன் அர்ஜூன் - ரகுவரன் பேட்டி போல் செம... தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

மடோனாவுக்கு வி.சே. உடன் இது இரண்டாவது படம். மலையாளத்தில் அனைவரையும் கவர்ந்த 'பிரேமம்' படத்தில் நம்ம மலர் டீச்சர் சாய் பல்லவி புகழ் பெற்றது போல் மற்ற இரண்டு நாயகிகளான அனுபமாவும் மடோனாவும் புகழ் பெற்றார்கள். மடோனா அழகி... பார்ப்பவரை ஈர்க்கும் அழகு மற்றும் நடிப்பு அவரிடம் உண்டு... இதிலும் சோடை போகவில்லை. வி.சே.வுக்கு கழிவறைக்குள் வைத்து அறிவுரை சொல்லும் இடத்திலும் டாக் ஷோ முடித்து வி.சே. கண்களால் தேடும் இடத்திலும் இறுதிக் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார்.

முஸ்லீம் இளைஞனாக.. தன் கிராமத்தின் பாதிப்புக்கு காரணமான அமைச்சரின் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடும் இளைஞனாக விக்ராந்த்தும், அவரின் காதலியாக... அவரோடு இணைந்து போராடியதால் கற்பை இழக்கும் பெண்ணாக தர்ஷணா ராஜேந்திரனும், வி.சேயின் நண்பர்களாக ஜெகன் மற்றும் சாந்தினியும், போலீஸ் ஆபீசராக நாசரும், தான் வேலை செய்யும் ஜென் ஒன் தொலைக்காட்சிக்கு விசுவாசியாக கிருஷ்ணாவும், மூத்த செய்தி ஆசிரியராக பாண்டியராஜனும்,  ஜென் ஒன் பொது மேலாளராக பிரியா ராஜ்குமார் அவரவர் வேலையை அழகாகச் செய்திருக்கிறார்கள்.

வில்லனாக வரும் ஆகாஷ் தீப்... எடுபடவில்லை... வசனம் பேசும் போதெல்லாம் எந்த உணர்ச்சியையும் காட்டாது... ஒரு நிறைவனா வில்லனாய் இல்லாமல் கிருஷ்ணாவும்  பிரியாவும் அடித்து ஆட, இவர் நம்மைச் சோதிக்கிறார்... அதுவும் வி.சே.க்கு முன்னால் அவரின் டயலாக் ஏற்ற இறக்கத்தில்... நக்கலில்... நையாண்டியில்... வில்லன் காணாமல் போகிறார். நம்ம ரகுவரன் மாதிரி ஆட்களின் இழப்பு பேரிழப்புத்தான்... அவராக இருந்திருந்தால் அடித்து ஆடியிருப்பார்... செல்லம்... செல்லம்ன்னு பிரகாஷ்ராஜ் கூட செல்லமாய்ப் பின்னிப் பெடலெடுத்திருப்பார். இவர் அடித்து ஆடவில்லை... கட்டை வைப்பதில் கூட திணறல்.

Image result for கவண் மடோனா

இசை ஹிப் ஹாப் தமிழா... ஒரு பாரதி பாடலை கொன்று எடுத்திருக்கிறார்... நமக்கு வருத்தமா இருக்கு... பலர் செமன்னு சொல்லியிருக்காங்க... பாரதி கேட்டால் பாவம்ய்யா... அவரை விட்டுருங்க... இசை சுமார் ரகமே. ஒரு காட்சியில் வந்தாலும் பவர் பவர்தான்யா... டிரம்ஸ் வாசித்து நம்மை ஓ போட வைத்துவிடுகிறார்.

தொலைக்காட்சிகளின் அயோக்கியத்தனத்தை கொஞ்சம் ஓவர்டோஸாகக் கொடுத்திருந்தாலும் பார்த்து ரசிக்கலாம்.

விஜய் சேதுபதி ராக்ஸ்.
-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

 1. விமர்சனம் அருமை! கவண் பற்றிய விரிவாக்கம் அதையும்விட அருமை! என் கணவர் அவர்கள் கிராமத்தில் கோழி அடிக்க களிமண் உருண்டைகள் செய்து பயன்படுத்துவோம் என்று சொன்னார்கள்!

  பதிலளிநீக்கு
 2. இன்னும் நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை!!!

  பதிலளிநீக்கு
 3. பார்க்க நினைத்த படம்...

  விரைவில்...

  பதிலளிநீக்கு
 4. அருமையான விமர்சனம்
  அவசியம் பார்ப்பேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும்
  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. கவண் வீசிக் கல்லெறிவேனே உங்களைக் காவலில் காணவிடேனே என்னும் பழைய பாட்டு நினைவுக்கு வருகிறது பட விமர்சனம் பற்றி ஒன்றும்சொல்வதற்கில்லை நான் தான் திரைப்படங்களை இப்போது பார்ப்பது இல்லையே

  பதிலளிநீக்கு
 7. கேவி ஆனந்த் ஹரி மற்றும் ஷங்கர் இந்த மூன்று இயக்குநர்களும் எனக்குப் பிடித்தவர்கள். கவண் குறைகளைத் தாண்டி எனக்கு நிறைவு தந்த படம். இந்த சமயத்தில் இது போன்ற கதைகள் தேவை

  பதிலளிநீக்கு
 8. ...கவண் கதை நல்ல கதை போல் இருக்கு லிஸ்டில் இருக்கு... பார்க்கணும்....விமர்சனமும், கவண் விளக்கமும் சூப்பர்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...