மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 1 ஏப்ரல், 2017மனசின் பக்கம் : தொடரலாமா..? சந்தாதாரர் ஆகலாமா..?

ரு சில காரணங்களால் கதைகளை இங்கு பகிர்வதில்லை என்ற முடிவில் இன்னும் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் ஏதாவது தளங்களிலோ மின்னிதழ்களிலோ எனது கதைகள் வெளிவந்தால் அதை இங்கு பகிர்கிறேன் என்பதை எல்லாரும் அறிவீர்கள். மற்ற பகிர்வுகளுக்கு இருக்கும் வரவேற்பு கதைகளுக்கு அதிகமிருப்பதில்லை அதிலும் குறிப்பாக தொடர்கதைகள் என்றால் வாசிக்காமல் விலகிச் செல்பவர்களே அதிகம். அப்படியிருக்க நான் இனிப் பதிவதில்லை என கதைகளை நிறுத்திய போது மனசு தளத்தில் வந்து கொண்டிருந்த எனது நான்காவது தொடர்கதையும் 17 பகுதிகளுடன் நிலைக்குத்தி நின்று விட்டது. அந்தத் தொடரை நிறுத்தி சரியாக ஏழு மாதம் ஆகிவிட்டது. அதன் பின் அந்தத் தொடரை எழுதி முடிக்காமல் அப்படியே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தொடர்கதையை அவ்வப்போது எழுதித்தான் வெளியிடுவது வழக்கம். அதனால் அந்தக் கதை அப்படியே கிடக்கிறது... அதை எழுதி முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் மீண்டும் இங்கு பதியலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... எழுதி முடிக்கணுமே அதுக்காக வேணும் இங்கு பகிரவேண்டும்.

'நெருஞ்சியும் குறிஞ்சியும்' என்னும் தொடர் இரண்டு களங்களில் பயணித்தது என்பதை அறிவீர்கள்.


ஒரு களம் 'குறிஞ்சியாய்'... கல்லூரி, காதல் எனப் பயணிக்கிறது...  இதில் முக்கியமாய் சுபஸ்ரீ, பார்த்தசாரதி, கண்ணன்... நாயகி சுபஸ்ரீயை அவளின் மாமா மகன் பார்த்தாவுக்கு கட்டி வைப்பது என்பது வீட்டில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு. அதனால் அவர்கள்  இருவருக்குள்ளும் கேலி, கிண்டல் சில நேரங்களில் எலியும் பூனையுமாய் சண்டை... பார்த்தா வீட்டிற்கு வரும் கல்லூரி நண்பன் கண்ணன் மீது சுபஸ்ரீக்கு காதல் வர, நண்பனுக்கு மனைவியாகப் போறவளின் மனசுக்குள் நானா...? என்ற கவலையோடு ஆரம்பத்தில் விலகி, மெல்ல மெல்ல காதலுக்குள் விழுகிறான் கண்ணன்.  தங்கள் காதலை எப்படி வீட்டில் சொல்லி சம்மதம் பெறுவது...? குறிப்பாக பார்த்தாவிடம் இதை எப்படிச் சொல்வது...? என்பது குறித்த குழப்பத்தின் பின் பார்த்தாவின் தங்கை அபியின் மூலமாக விஷயத்தை வெளிக் கொண்டு வர கண்ணன் முயல, பார்த்தாவிடம் சொல்லி சம்மதம் பெற சுபஸ்ரீ முயற்சிக்கிறாள். இவர்களின் முயற்சி வென்றதா என்பதற்கு முன்னர் கதை நின்றது.

மற்றொரு களம் 'நெருஞ்சியாய்'... வேலாயுதம் என்னும் கிராமத்து விவசாயியின் வாழ்க்கைக்குள் பயணிக்கிறது. தீவிர சாதீய வெறியர் அவர்... சாதி.... சாதி... எனப் பேசக்கூடியவர். அவரின் மூத்த மகன் காதல் திருமணம் என்பதால் அவனை ஒதுக்கி வைத்திருக்கிறார். அவனுடன் குடும்பத்தில் யாரும் பேசக்கூடாது என்பது அவரின் கட்டளை. அதை யாரும் மீறக்கூடாது என்பதிலும் அவர் தீவிரவாதியாக இருக்கிறார். சின்னவனுக்கு அண்ணனை வீட்டில் சேர்க்க வேண்டும் என்று ஆவல்... அக்காவும், அத்தானும் கூட மூத்தவனுக்கு ஆதரவாய் பேச... பக்கத்து வீட்டு பஞ்சநாதனுக்கும் இந்த சாதி மாறிய காதல்... அதனால் வீட்டை விட்டே ஒதுக்கி வைத்தல் என்பதில் துளியும் விருப்பமில்லை. பலமுறை சொல்லியும் பாத்துட்டார். ஆனாலும் வேலாயுதம் செத்தாலும் அவன் இங்க வரக்கூடாது என்ற கருத்தில் இருந்து மாறவில்லை. சின்னவன் அண்ணன் விவரங்குறித்து பேச ஊருக்கு வந்திருக்கிறான். அப்பாவிடம்  அதற்கான பேச்சை ஆரம்பித்தான்... ஆனால் முடிவு...? அதுதான் கிடைக்கலையே... அதுக்கு முன்னாலதான் கதை நின்று போச்சே...

ஆக மொத்தம்  இந்த இரண்டு களத்துக்கும் முடிவு கிடைக்க... கதையை எழுதி முடிக்க இங்கு மீண்டும் தொடர வேண்டும்... எனவே அடுத்த வாரம் முதல் தொடரலாம் என்று நினைக்கிறேன்... ஊருக்குப் போகுமுன்னர் முடிய வாய்ப்பில்லை... இருப்பினும் தொடர்ந்து சனிக்கிழமைகளில் பதிந்து முடிக்கலாம்ன்னு நினைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க...? தொடர்வோமா வேண்டாமா..?

சிற்றிதழ் உலகம் என்னும் சிற்றிதழை நடத்தும் பெரம்பலூர் ஐயா. திரு. கிருஷ் ராமதாஸ் அவர்கள் (வலைத்தளம் : சிற்றிதழ் உலகம்) . சிற்றிதழை அச்சுப்பிரதியாக மாற்றி இரண்டாவது இதழ் முதல் வெளியிடுகிறார். இந்த அச்சுப் பிரதி வியாபார நோக்கிலானது அல்ல... சிற்றிதழ்கள் பல தொடங்கி, தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் வேர் விட்டு கிளை பரப்ப வேண்டிய நிலையில் முளையிலேயே கருகிவிடுகின்றன. சிற்றிதழ்கள் அருகி வரும் நிலையில் தான் ஆரம்பித்த சிற்றிதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அச்சுப் பிரதியாக மாற்றியிருக்கிறார். சந்தாதார்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பத்திரிக்கையின் அச்சுப் பிரதி தயாரிக்கப்பட்டு சந்தாதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மிகச் சிறந்த முயற்சியாளர்... சிற்றிதழ்களை ஊக்குவிப்பதுடன் புதியவர்களின் எழுத்துக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஐயா ராமதாஸ் அவர்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்க விரும்பினால் குறைந்தபட்சம் ஆறு இதழுக்கு ரூ.120 அவரது வங்கிக் கணக்கில் இட்டு விவரம் அனுப்பினால் இதழ் உங்கள் வீடு தேடி வரும். விருப்பமுள்ளாவர்கள் இணைந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்கள் வேண்டுமெனில் அவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சந்தா தொகை அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்...


நாளை சிறப்புப் பதிவாக மற்றொரு பதிவு வர இருப்பதால் இது அவசரமாக எழுதப்பட்ட பகிர்வு. தொடர்கதை பதியலாமா... வேண்டாமா என்பதைச் சொல்வதுடன் விரும்பினால் சிற்றிதழ் உலகத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. வாசகர்
  சிலர் கருத்திடுவார்
  சிலர் கருத்திட மாட்டார்
  ஆயினும்
  தொடர்கதைகளைத் தொடருங்கள்
  பின்னர்
  மின்நூலாக்கலாம்
  அச்சுநூலாக்கலாம்

  பதிலளிநீக்கு
 2. எழுதுங்கள் நண்பரே! தொடரையும் படிப்பவர்கள் இல்லாமல் போகமாட்டார்கள். சுவாரசியமாக இருந்தால் நிச்சயம் வெற்றிபெறும் - தாமதமாகவேனும்.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 3. தொடர்கதை தொடரட்டும்.

  சிற்றிதழ்கள் உலகம் - தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இன்று கருத்துரைப் பெட்டி திறந்திருப்பது அதிர்ஷ்டம் தான்..

  தங்களது தளத்தினைத் தொடர்பவர்களுக்காக -
  நீங்கள் உங்களது ஆக்கங்களைத் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம்..

  பதிலளிநீக்கு
 5. தொடர்கதையைத் தொடருங்கள் குமார்! என்னடா இன்னும் முடிவு வரவில்லையே அதற்குள் நிறுத்த வேண்டியதாகிவிட்டதே தங்களுக்கு என்று நினைத்திருந்தோம்...தொடருங்கள்...

  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. என் அனுபவம் தொடர்கதைகளைப் படிப்பதில் இருக்கும் சிக்கல்கள் கதையின் தொடர்ச்சி ஒரு வாரம் கழிந்தும் நினைவில் இருக்க வேண்டும் நான் எழுதி வந்த தொடர்கதையை விடாமல் படித்தவர்கள் மிகக் குறைவு ஒரு சிலர் ஒரு சில பாகத்துக்குமட்டும் வருகை தருவர் கதையின் முழு வீச்சும் அறியப்படாமல் போகலாம் அப்படியும் எழுத வேண்டும் என்றால் எழுதி அதையே வாசகர்களுக்கு வேர்ட் ஃபைலில் அனுப்பலாம் முழுவதுமாகபடிக்க விரும்புபவருக்கு மட்டும் இது ஒரு அபிப்பிராயமே அவரவர் எழுத்து பற்றி அவரவரே முடிவு எடுக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 7. நான் கூட நினைத்தேன்,நாம் தாம் தொடரை மிஸ் பண்ணிட்டோம் போல...ஏன் பாதியிலயே நிறுத்திட்டீங்க...தொடருங்கள் சகோ !!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம். நான் ஸ்ரீநாத். எழுத்தாளன். ஜெமினி சினிமா ஸ்ரீநாத் என்று அழைப்பர். வயது 68. தற்சமயம் பாக்யராஜ் சாரின் பாக்யா பத்திக்கையில் இருக்கிறேன்.நம் வலைப்பூ நண்பர்களுக்கு உதவி செய்ய கடமைபட்டிருக்கிறேன். அன்புடன் ஸ்ரீநாத்.srrinath@ yahoo.com.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்...

  கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

  தொடர்கதையை விரைவில் தொடர்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வலைப்பூக்களில் தொடர்கதை படிக்கும் பொறுமை எனக்கு இருந்ததில்லை. இரண்டு மூன்று வாரங்கள் என்றால் சரி! பத்திரிகையிலேயே தொடர்கதை படிக்கும் பழக்கம் எனக்குக் குறைந்து விட்டது!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...