மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 14 ஜூலை, 2016

மனசின் பக்கம் : கனவே... காற்றே... கற்பனையே...

னவு மெய்ப்பட வேண்டும் என்ற சிறுகதை குறித்து குடந்தையூர் சரவணன் அண்ணன் அவர்கள் என்னிடம் பேசும் போது ஏதாவது உண்மைக்கதையா என்று கேட்டார். உண்மைக் கதை எல்லாம் இல்லை அண்ணா... ஜாலியாக எழுத ஆரம்பித்து எப்பவும் போல் என் பாணியில் பயணித்துவிட்டது என்று சொன்னேன்.  கதை ஆரம்பிக்கும் போது ஒரு உதவி இயக்குநர் கதை சொல்வதாகவும் அதற்கு அந்த நடிகர் இதுதான் கமல் பண்ணுவாரே... இதுதான் ரஜினி பண்ணுவாரே... என்று சொல்ல, கடைசியில் கடுப்பான உதவி 'யோவ்... அப்ப என்னதான்யா பண்ணுவே'ன்னு கோபமாக் கேட்டுட்டு எழுந்து போற மாதிரி எழுத நினைத்து வேற மாதிரி போயிருச்சு. அதில் பாசிலின் அசிஸ்டெண்ட் பற்றி வருவது மட்டும் உண்மை. அவர் என் அண்ணனின் நண்பர். அவரால் ஜெயிக்க முடியாமலேயே போய்விட்டது. சில நாட்களுக்கு முன்னர் நிஷா அக்காவிடம் முகநூல் அரட்டையில் இருந்தபோது ஊரில் இருந்து வந்ததில் இருந்து மரணம் தொடர்பான பதிவுகளாக எழுதியிருக்கேன். கொஞ்சம் ஜாலியா எழுதணும் அக்கா என்று சொன்னேன். அப்படி எழுதிய சிறுகதைதான் அது. 

எனக்கும் சரவணன் அண்ணனுக்குமான பேச்சு தொடர, உங்க கதையை மிகவும் ரசித்து வாசித்தேன் இருந்தாலும் கடைசியில் ஒருவர் கதையைச் சொல்லி முடிப்பதாக வைத்திருப்பதை அவர் ஆரம்பத்தில் பேச ஆரம்பித்து முடிவில் சரவணன் ஜெயிச்சா அதில் எனக்கும் பங்கிருக்கும்ன்னு முடிச்சிருக்கலாம் என்று சொன்னதோடு விட்டுவிடாமல் ஆரம்பத்தில் வரும் பத்தி எப்படி இருக்க வேண்டும் என்று எழுதியும் அனுப்பியிருந்தார். அதுதான் சரவணன் அண்ணன்.  நான் அவரிடம் மாற்றி விடலாம் அண்ணா... புத்தகம் ஆக்கும் போது மாற்றிவிடுவோம் என்று சொல்லிச் சிரித்தேன். கதை பல உதவி இயக்குநர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது உண்மை. சரவணனின் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற ஆசை எனக்கு நிறையவே இருக்கிறது... நான் எழுதிய சரவணன் மட்டுமில்லாமல் சரவணன் அண்ணனும் இயக்குநர் ஆகவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவரின் முயற்சி விரைவில் கைகூடட்டும். அப்புறம் கதை எழுதி பதியும் வரை அவரோட பேர்தான் நாயகன் பேர் என்று யோசிக்கவில்லை. எழுதி பகிர்ந்து அவரிடம் பேசும்போதுதான் எதார்த்தமாக வைத்த பெயர் உங்க பேரோட மேட்ச் ஆயிருச்சு அண்ணா என்றேன்... சிரித்தபடி அதனால என்ன நானும் சரவணன் போலத்தான் என்றார்.. ஜெயிப்பீர்கள் அண்ணா... விரைவில் ஜெயிப்பீர்கள்.

***
சிரித்த முகம்... சிறகடிக்கும் சிந்தனைகள்... கண்ணாடிக்குள்ளே கவி பாடும் கண்கள்... சின்ன உருவம்... இதுதான் கவிஞர் பழனி பாரதி, உள்ளத்தை அள்ளித்தாவுக்கு முன்னால் சினிமாவில் பாடல் எழுதியிருந்தாலும் 'ஐ லவ் யூ... லவ் யூ... லவ் யூ... சொன்னாளே' என நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் அவர். இப்போது பிரபல பாடலாசிரியர் என்ற போதிலும் முகநூல் நட்புக்களின் பதிவுகளுக்கு வந்து விருப்பம் தெரிவிப்பதும் சில நேரங்களில் கருத்து இடுவதும் அவரின் நட்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. வாலிபக் கவிஞன் வாலியின் அன்பில் நனைந்தவர்... மிகச் சிறந்த பேச்சாளர்... எழுத்தாளர்... கவிஞர்... பத்திரிக்கையாளர் என பன்முகம் கொண்ட சிந்தனையாளர். அவருக்கு இன்று பிறந்தநாள்... இந்த நாளில் இன்னும் சிறப்பான பாடல்களை எழுத வேண்டும் என வாழ்த்தி அவரின் பாடல்களில் பிடித்த பாடலகள் எத்தனையோ இருந்தாலும் 'காற்றே... காற்றே நீ...' என்று ஜெயச்சந்திரனும் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் நம்பிக்கை தளராத, அழகான குரலுக்குச் சொந்தக்காரரான வைக்கம் விஜயலெட்சுமியும் காற்றில் இசைக்கும் கீதமே என்னை மிகவும் கவர்ந்த பாடல். கவிஞரின் பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை கேட்போமே.


***
நிஷா அக்கா தனது தொழிலில் கவனம் செலுத்திக் கொண்டே எழுதியும் வருகிறார். அவர் பதிவெழுதுவதைவிட பதிவர்களை ஊக்குவிக்கும் விதமாக பதிவு குறித்த அலசலை... அது தொடர்பான தனது அனுபவங்களை பெரிய கருத்தாக இடுவார். மிகச் சிறந்த சிந்தனைவாதி... இவரின் பேட்டி இனிய நந்தவனம் இதழில் வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் மிகச் சிறப்பான பதில்கள்... விரைவில் தனது தளத்தில் பகிர்ந்து கொள்வார் என்று நினைக்கிறேன். அழகான... அறிவான... ஆழமான பதில்களைச் சொன்ன அக்காவுக்கு வாழ்த்துகள். அப்புறம் இன்னொன்னு அந்த பேட்டியில் என்னைப் பற்றியும் சொல்லியிருக்காங்க... அப்படி என்னத்தை நாம செய்துட்டோம்ன்னு நினைக்கத் தோணுது. எப்படி இருந்தாலும் என்னையும் சில நட்புக்களையும் நினைவு கூர்ந்த அக்காவுக்கு நன்றி.


***
பாக்யாவில் தொடர்கதை எழுதும் சரவணன் அண்ணன், குங்குமத்தில் வாழ்க்கைத் தொடர் எழுதும் ஈரோடு கதிர் அண்ணா, குங்குமம் தோழியில் கட்டுரை எழுதும் சகோதரி கிருத்திகா தரண், கல்வி சம்பந்தமான கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவரும் நண்பர் மதுரை சரவணன் என இன்னும் இன்னுமாய் நிறைய நட்புக்கள் வெகுஜன பத்திரிக்கைகளில் வலம்வர ஆரம்பித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. அதே சமயம் வலைத்தளத்தில் மிகச் சிறப்பாக எழுதும் நட்புக்கள் அனைவரும் வெகுஜன ஊடகங்களிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை... விரைவில் நிறைவேறட்டும்.
***
தேனக்கா என்றாலே அந்தச் சிரிப்புத்தான்... மிகச் சிறந்த எழுத்தாளினி... எல்லாப் பத்திரிக்கைகளிலும் அவரின் படைப்புக்கள்... நிறைய புத்தகங்கள்... அதனூடே வலைத்தளத்தில் எழுத்து... அவரின் வலைத்தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனது பேட்டி கூட வந்திருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம். அக்காவுக்கு இன்று பிறந்தநாள்... காலையில் வாழ்த்தியாச்சு என்றாலும் மீண்டும் அவருக்கு உங்கள் சார்பாக வாழ்த்துக்கள். அவரின் தளத்தில் நிறைய சிறுகதை போட்டிகள் குறித்தான செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார் சும்மா அந்தப் பக்கம் பொயிட்டு விரைவாக கதைகளை அனுப்பி வெற்றியை உங்கள் வசமாக்குங்கள்.

***
ன்னைக்கு அலுவலகத்தில் ஆணி பிடுங்கும் வேலை அதிகமில்லை. மொத்தமே இரண்டு மணி நேரம்தான் வேலை. அதுவும் எனக்கும் மட்டுமே. மலையாளிகள் தூங்கினார்கள். மற்ற நேரத்தில் இந்தப் பகிர்வும் இரண்டு கதைகளும் எழுதினேன். பென்டிரைவில் எடுத்து வந்து ஏதோ ஞாபகத்தில் ஒரு சிறுகதையும் இந்த மனசின் பக்கமும் இருந்த பைலை அழித்து விட்டேன். மற்றொரு சிறுகதை இருந்த பைல் மட்டுமே மிச்சம்.  அப்ப இது.. மீண்டும் உட்கார்ந்து டைப்பினேன்... நம்ம நேரம் எப்படி வேலை செய்யுது பாருங்க... 

மனசின் பக்கம் மீண்டும் மலரும்.
-'பரிவை' சே.குமார்.

18 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

கதம்பமாய்த் தகவல்கள். ரசித்தேன்.

Avargal Unmaigal சொன்னது…

நிஷா அக்கா ப்ளாக் எழுத தொடங்கிய பின் தான் எனக்கு தெரியும்... வெள்ளை மனது கொண்டவர்... என்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் இங்கு எல்லோரும் அக்கா என்று அன்போடு அழைப்பதால் நானும் அக்கா என்று அழைப்பதுதானே தர்மம்...ஹீஹீ வரேன் இதை படித்தவுடன் நிஷா அக்கா ஒரு பெரிய பதிவை எழுதுவார்கள் என நம்பி அவர் வருவதற்குள் இடத்தை காலி பண்ணிவிடுகிறேன்

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அனைத்தையும் ரசித்தேன். பிறந்தநாள் காணும் பழநி பாரதி, தேனம்மை லெக்ஷ்மணன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!
த ம 3

KILLERGEE Devakottai சொன்னது…

கதம்பம் மணத்தது நண்பரே எமது வாழ்த்துகளும்....

r.v.saravanan சொன்னது…

தங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் கதம்பம்.... வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் உங்கள் கதையைப் பற்றிச் சொல்லு வரும் போதே அட இது நம்ம குடந்தை சரவணனைப் போல கதாநாயகன் அதே பெயரில் அதே போன்று என்று தோன்றியது...நீங்களும் அதை இறுதியில் சொல்லிவிட்டீர்கள். சரவணன் வெல்வார்...அந்த நாள் அதிக தூரத்தில் இல்லை.

பிறந்தநாள் கண்ட தேனம்மை சகோவுக்கும் பழனிபாரதி அவர்களுக்கும் தாம்தமான வாழ்த்துகள். ஜே சி டேனியல் அருமையான இயக்குநர் ஆனால் அதிகம் பேர் அறியாதவர். இவரைப் பற்றி எங்கள் தளத்தில் பதிவும் எழுதியிருக்கிறோம் அது போன்று வைக்கம் விஜ்யலக்ஷ்மி பற்றியும் எழுதியிருக்கிறோம். இந்தப் பாடலையும் ரசித்திருக்கிறோம் மீண்டும் இதோ உங்கள் பகிர்வின் மூலம் மிக மிக ரசித்தோம். அருமையான பாடல். நல்ல இசை.

சகோ நிஷா அவர்களுக்கு வாழ்த்துகள்!

நிஷா சொன்னது…

அக்கா தானே?அதுக்கென்ன அகத்தில் அன்பும் அறமும் இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாய் வந்து சேரும். அக்கா என்றால் இன்னொரு அன்னை என சொல்வார்கள்.எல்லோருக்கும் அன்னையாயிருக்க முடியுமெனில் அதில் மகிழ்ச்சி தான்பா!வயதென்ன செய்யுமாம், இங்கே 50, 60 வயதுக்காரர்களும் என் பணிகள் சேவைகள், நிமித்தம் என்னை அக்கா எனத்தான் நேரில் அழைப்பார்கள்.பெரிய மனுசி மாதிரி நான் அவர்களை பெயர் சொல்லி அழைப்பேனாக்கும்,ஷோ உங்களுக்கும் பர்மிஷன் கிராண்டட்!

நிஷா சொன்னது…

அப்பாடா!

பதிவு எப்போதோ படித்து விட்டேன்,தொடர்ந்த ஆர்டர்கள், பிரபாவுக்கு கால் வலி, ஆப்ரேசன் முடிவென இருப்பதால் வீட்டிலும் ஹோட்டலிலும் அனைத்தினையும் தனியே செய்ய வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு பதிவுக்கும் கருத்து எழுதுவோம் என் பின் தள்ளி போட்டே காலம் ஓடிப்போகின்றது. இதில் நான் எங்கே என் பக்கம் பதிவு எழுதுவது குமார்!

இனிய நந்தவனம் இதழில் சுவிஸ் சிறப்பிதழுக்கு தான் முதலில் நேர்காணல் கேட்டார்கள்.பின்னர் அது தாமதம் ஆனதால் பிரபாவுக்காக ஐம்பதாவது பிறந்த நாள் சிறப்பிதழ் மலரில் என் நேர்காணலை வெளியிட்டு விட்டார்கள்.

அதையும் இன்னும் என் பக்கம் பகிரவில்லை குமார். இனித்தான் ஒவ்வொன்றாக பதிர வேண்டும்,

நடந்ததை சொல்ல எனக்குள் எந்த தயக்கமும் என்றும் இருப்பதில்லை. அவ்வகையில் என்னை வலைப்பூவுக்குள் கொண்டு சேர்த்த வகையில் உங்களுக்கு நான் என்றுமே நன்றியுடையவளாயிருப்பேன்,எழுத்துலகின் இன்னொரு பரிமாணத்தினை எனக்கு வலைப்பூ மூலம் அறியச்செய்தீர்கள், இங்கே வந்தபின் பல புதிய நட்பூக்கள் கிடைத்திருக்கின்றார்கள்.அதில் எனக்கு மகிழ்ச்சி தான் குமார்.

சரவணன் அண்ணா அவர்களுக்கு என் சார்பிலும் வாழ்த்துகள். பாக்யாவில் அவர் கதை தொடராய் வருவது அறிந்து மகிழ்ச்சியும் பாராட்டுகளும், அவர் இன்னும் அதிகமாய் எழுதி புகழ் பெறு எழுத்தாளராய் மிளிரட்டும்.

தேனக்காவுக்கும் தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

மீண்டும் தொடர்வோம் குமார்!

நிஷா சொன்னது…

நன்றிங்க!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணாஅ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம்
இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திரு மதுரைத்தமிழன் அவர்களுக்கு நிஷா அக்கா பதில் சொல்லியாச்சு...
அதனால நான் ஜகா வாங்கிக்கிறேன்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் செந்தில் சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
இந்தக் கதை எழுதும் போது சரவணன் என எதற்காகப் பெயரிட்டேன் எனத் தெரியாது... பதிந்த பிறகு சரவண அண்ணன் சாட்டில் வந்தபோதுதான் உணர்ந்தேன்... எதாற்தமாய் நடந்தது இது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அக்கா...
இப்படிக் கருத்துப் பார்த்து ரொம்ப நாளாச்சு...
உங்கள் அன்பிற்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.