மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜூலை, 2016கவிதை : பெருமழையின் பேரானந்தம்


பெருமழைக்கு முகாந்திரமாய்
பேரிரைச்சலோடு
ஆரம்பித்தது சிறு மழை...

தென் மேற்காகவோ
வட கிழக்காகவோ
விரைந்து ஓடாமல்
சுழற்றி அடித்தது காற்று...

கண்ணைப் பறிக்கும் மின்னலும்
காதைப் பிளக்கும் இடியும்
இல்லாத போதும்
பயந்து ஒதுங்கியது மின்சாரம்...

பறந்து விழுந்த
தென்னை ஓலை...
கிளைகளைச் சுழற்றி
குதூகலித்த மரங்கள்...

பாய்ந்தோடும் பசுக்கள்...
பாந்தமாய் எருமைகள்...
ஒண்ட இடம் தேடும்
நனைந்த நாய்கள்...

கூடி தேடி விரையும் கோழிகள்...
கூச்சலிடும் குருவிகள்...
சீறிப் பறக்கும் வாகனங்கள்...

சாயங்கால மழை
சட்டுன்னு விடாது
நொந்தபடி மிதிக்கும்
சைக்கிள் மனிதர்கள்...

கொலுசு நனைய...
கெண்டைக்கால் தெரிய...
குடை பிடித்து நடக்கும் குமரிகள்...

நனைந்தபடி கதை பேசி...
அதில் எவளையோ வாசைபாடும்
பால்காரப் பெண்கள்...

ஆனந்தத்தில் பேப்பர்
கிழித்துக் கப்பல்
விடும் குழந்தைகள்...

எல்லாம் ரசித்தபடி
காற்றோடு கொஞ்சிக்
கவிதை எழுதிய
பெருமழையொன்று

இதமான தேநீரின் சுவையோடு
மண்ணின் வாசத்தையும்
மனசுக்குள் இறக்கி
என் சன்னலை மெல்லக்
கடந்து கொண்டிருக்கிறது...

ஒருவேளை அது உங்கள்
ஊர்ப்பக்கம் வரலாம்...
சன்னலோரம் காத்திருங்கள்
ஓரு கோப்பை தேநீரோடு..!
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  மழைக்கவிதை அருமை. ரசித்துப் படித்தேன்.மண்ணின் மணம் வீசும் பெருமழையை போல், தங்கள் சிந்தனையில் உதித்த எழுத்துக் கோர்வைகளில் கவிதை மணம் பரப்பியது. வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா..
   தங்கள் வருகைக்கு நன்றி...
   தொடர்ந்து வாருங்கள்...

   நீக்கு
 2. காத்திருக்கிறேன். கண் முன்னே காட்சிகள். ரஸித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. இன்று முழுவதுமே இங்கே மழை.... மழையை ரசித்தபடியே நானும்.... தேநீர் கோப்பை மட்டும் மிஸ்ஸிங்! :)

  நல்ல கவிதை. பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. படிக்க இதமாய் இருந்தது கவிதை நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 5. அழகு.. அருமை!

  நானும் சன்னலோரம் காத்திருக்கின்றேன்..
  ஓரு கோப்பை காஃபியோடு!.. <<<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. அருமை அருமையான வரிகள் கண்களின் முன்னே காட்சிக்ளாய்.ரசித்தோம் ரசித்தோம்....கேரளத்திலும் மழை..சென்னையிலும் அவ்வப்போது மழை....எனவே ஜன்னலோரம் காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...