மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 16 ஜூலை, 2016சிறுகதை : காத்திருந்த உயிர் (ஜூலை-2016 கொலுசு மின்னிதழ்)

 

 பாலாயிக்கு தொண்டைக்கும் நெஞ்சுக்குமாக இழுத்துக் கொண்டிருந்தது. உறவுகள் எல்லாரும் சுற்றி அமர்ந்திருந்தார்கள். அவள் 'கர்...கர்...' என இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. பாலாயிக்கு வயது இப்போ எண்பதுக்கு மேலிருக்கும். வாழ்க்கையை அனுபவித்த கட்டைதான் அவள். அறுபது வயதில் ஒரு முறை ரொம்பக் கிடந்தபோது இனி பிழைக்க மாட்டாள் என்று நினைத்தவர்களின் முன்னே எழுந்து வந்தவள் அதன் பின் பெரும் கிடையெல்லாம் கிடக்கவில்லை. இப்பவும்  நாலு நாளைக்கு முன்னால திடீரென உடம்பு முடியலைன்னு விழுந்தவதான், ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் பார்க்க, மூணு நாளா முயற்சித்த டாக்டர் இனி காப்பாற்ற முடியாது வீட்டுக்கு தூக்கிட்டுப் போயிடுங்க என்று சொல்லிவிட நேற்று மாலை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

பாலாயிக்கு இதுல மூணு அதுல மூணுன்னு மொத்தம் ஆறு பிள்ளைங்க... எல்லாரும் ரொம்ப வசதியா இருக்காங்க... ரெண்டு வருசத்துக்கு முன்னாடிதான் அவளோட புருஷன் சீனி இறந்தார். அதன்பின் பாலாயி மூத்த மக பெரியநாயகி வீட்டுலதான் இருந்துச்சு. முடியாம வர்றதுக்கு முன்னாடியே என்னோட உயிர் எஞ்சாமியும் நானும் வாழ்ந்த வீட்டுலதான் போகணுமின்னு மககிட்ட சொல்லியிருந்ததால டாக்டர் சொன்னதும் இங்க கொண்டாந்துட்டாங்க. ஆறு சம்பந்திகளும் அங்கு கூடியிருந்தார்கள். மகள்களும் மகன்களும் வந்துவிட கனடாவில் இருக்கும் சின்னவன் சிவா மட்டும் இன்னும் வரவில்லை.

"யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாத மனுசி... அதிர்ந்து கூட பேசாது... பாவம்... பொட்டுன்னு போகாம இப்படி இழுத்துக்கிட்டு கிடக்குது... பாக்கவே பாவமா இருக்கு..." அருகில் இருந்த ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பாலாயியின்னு தம்பி பொண்டாட்டி காந்தி.

"இப்படி இழுத்துக்கிட்டே கிடந்து என்னைக்கு போகப் போகுதோ... இப்பப் போயிரும்... அப்பறம் போயிரும்ன்னு எல்லா வேலையையும் போட்டுட்டு இங்க வந்து கெடக்க வேண்டியதா இருக்கு...' பெரிய சம்பந்தியிடம் மெதுவாக காதைக்கடித்தாள் சின்ன சம்பந்தி விசாலாட்சி.

"எந்த விஷயமா இருந்தாலும் எங்காத்தா ஒரு முடிவு எடுக்க மாட்டாது... பண்ணுவமா வேண்டாமான்னு போட்டு இழுக்கும்... அதான் உயிரு போறதுல கூட இழுத்துக்கிட்டு இருக்கு போல... பாக்கவே பாவமா இருக்கு..." வாசலில் அருகில் அமர்ந்திருந்த ஊரின் பெரிய தலைக்கட்டும் சித்தப்பனுமாகிய முத்தையாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் மூத்தவன் சாமிநாதன்.

"ஆத்தாவுக்கு சுகர் இல்லை... கொலஸ்ட்ரால் இல்லை... ஒரு நா... ஒரு பொழுது உடம்பு முடியலைன்னு தல சாச்சதில்லை... அந்தக் காலத்து மனுசியில்ல... உடம்ப கட்டுக் கோப்பா வச்சிருந்துச்சு... கஞ்சிதான் சாப்பிடும்... அப்பா செத்ததுக்கு அப்புறம் இனிப்பு சுத்தமா சாப்பிடாது... காபியில கூட சீனி போட்டுக்காது... திடீர்ன்னு..." மேலே பேச முடியாமல் கண்ணீரோடு மூக்கையும் சேர்ந்து துடைத்தாள்  பெரியநாயகி.

"நல்லா வாழ்ந்த மனுசி... அது கண்ணோட எல்லாரும் நல்லாயிருக்கதைப் பார்த்துருச்சு... பேரம்பேத்திகளுக்கு எல்லாம் குழந்தை குட்டின்னு குடும்பம் ஆன சந்தோஷத்தைப் பார்த்துருச்சு... இப்ப யாருக்கு இப்படியெல்லாம் வாய்க்குது.... சந்தோஷமாத்தான் போகுது..." ரோட்டில் நின்று போனில் யாரிடமோ சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார் சின்ன மாப்பிள்ளை விநாயகம் .

இதெல்லாம் பாலாயியின் காதில் விழுந்ததா... இல்லையா... என்று தெரியவில்லை... சாவு என்பது எத்தனை வயதில் வந்தாலும் அதை ஏற்கிற மனம் யாருக்குமே இருப்பதில்லைதானே... இன்னும் கொஞ்ச நாள் இருக்காலாமே என்றும்... பாவம் பெரியவன் ரொம்பக் கஷ்டப்படுறான்... அவன் நல்லாயிருக்கதைப் பார்த்துட்டுப் போனா நல்லது என்றும்... இன்னும் இன்னுமாய் ஏதோ ஒரு ஆசையுடன் இன்னும் கொஞ்ச நாள் வாழும் ஆசைதான் எல்லாருக்குமே இருக்கும். பாலாயி மட்டும் என்ன விதிவிலக்கா..? எல்லாம் அனுபவிச்சாலும் அவளுக்குள்ளும் ஏதேனும் நிறைவேறாத ஆசைகள் இருக்கலாம் அல்லவா...? இழுத்துக் கொண்டிருக்கும் அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வடிய, சின்னவள் அழுகையோடு துடைத்தாள்.

"இப்படி எவ்வளவு நேரம்தான் இழுத்துக்கிட்டு கிடக்கப் போகுதோ தெரியலையே... எங்க ஊர்ல மாணிக்கண்ணன் மூணு நாள் இழுத்துக்கிட்டு கிடந்தாரு... இதுவும் அப்படித்தான் நம்மளை காக்க வைக்கப் போகுதோ என்னவோ..." இரண்டாவது மகனின் மாமனார் திருஞானம் சத்தமாய்ச் சொன்னார்.

இழுத்துக் கொண்டிருக்கும் பாலாயி, வாய்க்குள் ஏதோ முணங்கினாள். "என்னமோ சொல்லுதுடி... என்னன்னு புரியலை..." என சாமிநாதன் மனைவி செல்வியிடம் சொன்னாள் பெரியநாயகி.

"ஆமா அத்தாச்சி வாய் அசையுது... ஆனா என்ன சொல்றாங்கன்னு புரியலை..."

"என்னத்தை சொல்லப் போகுது... எல்லாரும் இங்க இருக்கீங்க... இங்க  இல்லாதது சின்ன மகன்தானே... அவனைத்தான் தேடும்..." என்றார் திருஞானம்.

"அவுரு குடும்பத்தோட வந்துக்கிட்டு இருக்காராம்... நல்லாத்தான் பிள்ளை குட்டிகளை இழுத்துக்கிட்டு ஓடியாராக... அவரு மட்டும் வந்துட்டு காரியத்தை முடிச்சிட்டு போக வேண்டியதுதானே... எல்லாரையும் இழுத்தாரணுமாக்கும்... இது போகப்போகுதோ... இல்ல எந்திரிச்சு உக்காரப் போகுதோ... யாருக்குத் தெரியும்... போறதுன்னா போக வேண்டியதுதானே... இழுத்துக்கிட்டு கிடந்துக்கிட்டு எல்லாரையும் சாகடிக்குது..." சின்னவன் சிவாவின் மாமியார் விசாலாட்சி விச வார்த்தைகளை நீட்டி முழங்கினாள். அவளுக்கு பணக்காரி என்ற திமிர் அதிகம். ஆணவக்காரியின்னு ஊருக்குள்ள அவளுக்குப் பேர்.

"பெத்த ஆத்தாளுக்கு வராம உம்மாப்பிள்ளையை பணம் சேக்கச் சொல்றியா...? ஏன் நடுவுலான் துபாய்ல இருந்து ஆத்தா விழுந்துருச்சுன்னு சொன்ன உடனே இங்க ஓடியாரலை... இல்ல சின்ன மாப்பிள்ளை மலேசியாவில் இருந்து வரலையா... நல்லாத்தான்... நாளைக்கு நமக்கும் இருக்கு... யோசிச்சுப் பேசு... நம்ம வீட்ல எதுனாலும் எல்லாரும் வரணும்... பெத்த ஆத்தாவுக்கு ஒண்ணுன்னா எதுக்கு வரணும்... எல்லாருமே இப்படித்தான் இருக்கோம்" படக்கென்று சொன்னாள் காந்தி.  இவள் வீட்டில்தான் நடுமகள் பாக்கியத்தைக் கொடுத்திருக்கு. அண்ணன் குடும்பம், அண்ணன் பொண்டாட்டி என்ற பாசம் இவளுக்கு அதிகம். பாலாயியும் இவளை சம்பந்தியாய் பார்ப்பதில்லை. எப்பவும் இவளையும் மக மாதிரித்தான் நினைப்பா... அதனால்தான் காந்திக்கு அவ்வளவு கோபம் வந்தது. 

அதுபோக பாலாயி மேல ரொம்ப பிரியமானவன் சிவாதான்.... ரொம்ப நல்லவன்... அவன் மாட்டின குடும்பம் அப்படி... அவனை அதைச் செய்யாதே... அங்கே போகாதே... என எல்லாவற்றிற்கும் தடை... அப்படியிருந்தும் யாருக்கும் தெரியாமல் உடன் பிறப்புக்கள் எல்லாருக்கும் நல்லாச் செய்வான்... நான் செஞ்சேன்னு வெளிய சொல்லாதீங்கன்னு வேற சொல்லி வைப்பான். அம்மாவுக்கு செய்யிறதுக்கு மட்டும் யாரும் அவனை தடுக்க முடியலை... உங்க வேலையைப் பாருங்க... எங்கம்மா இல்லைன்னா நான் இன்னைக்கு இங்க பெரிய பதவியில் இருக்க மாட்டேன்... அதைத் தெரிஞ்சிக்கங்க என்று வாயை அடைத்துவிடுவான். இருந்தாலும் மாமனார், மாமியார், மனைவி, மச்சினன்கள் என அவர்கள் போட்டிருக்கும் வலைக்குள் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பவன்தான் அவன். ஊரில் இருந்து வர்றோம்ன்னு அவன் போன் பண்ணினப்போ, இப்ப எதுக்கு அவசரமா எல்லாரையும் இழுத்துக்கிட்டு வாறீங்க... அது என்னைக்கு முடியுமோ தெரியலை... முடிஞ்சதும் சொல்றோம்... அப்ப கிளம்பி வாங்க... என்று மாமனார் சொல்ல, அம்மா மேல் இருந்த பாசம்... சாகக்கிடக்கும் பெத்தவளை கடைசியாய் ஒருமுறை உயிருடன் பார்க்கும் ஆசையைத் தடுக்க  இவர்கள் யார் என்ற கோபம் எல்லாம் கலந்து அவரைக் கட்டி ஏறிவிட்டான். முதன் முதலாய் மாப்பிள்ளையின் கோபத்தைப் பார்த்து மாமனார் மிரண்டுதான் போனார். அந்தக் கடுப்புத்தான் மாமியாரின் பேச்சில் வந்தது.

பாலாயி இழுத்துக் கொண்டு கிடந்தாள்... உயிர் தொண்டைக்கும் நெஞ்சுக்குமாய் ரன்னெடுக்க ஓடும் கிரிக்கெட் வீரனைப் போல ஒடிக்கொண்டிருந்தது. ஏனோ கண்ணீரும் ஓடிக்கொண்டே இருக்க சின்னவள் துடைத்துக் கொண்டே இருந்தாள்... அவள் கன்னத்திலும் கண்ணீர் இறங்கிக் கொண்டிருந்தது. பாலாயியின் வாய் முணுமுணுத்தது. அவளின் வாயருகே காதைக் கொண்டு போய்க் கேட்டாள் பாக்கியம்.

'ச்ச்ச்ச்ச்ச்சி..வ்வ்வ்வ்வா...' இழுவையுனுடே சிவா... சிவா... என்று பாலாயி முணங்குவதைக் கேட்டு "அக்கா... ஆத்தா சின்னவன் பேரச் சொல்லிக்கிட்டு இருக்கு..." கண்ணீரோடு பெரியநாயகியிடம் சொன்னாள்.

"அதுக்கு சின்னவன் மேல பாசம் அதிகம்" என்றாள் பெரியநாயகி. சின்னவன் பேரையே சொல்லுது என்ற பேச்சு வீட்டுக்குள் இருந்து வெளியில் அமர்ந்திருந்த மனிதர்களிடம் வந்து நின்றது.

"அவன் நினைப்புலதாம்பா இன்னும் உசிரை இழுத்துக்கிட்டு கிடக்கு... அவன் எப்ப வர்றது...? பாவம் சிரமப்படுதுப்பா... ஏப்பா சாமிநாதா... நாந்தான் சிவா வந்திருக்கேன்னு சொல்லி நீ பாலை ஊத்துப்பா... உசிரு நிக்கட்டும்..." முத்தையா சத்தமாகச் சொன்னார்.

"எப்படி சித்தப்பா... பொய் சொல்லி அனுப்பச் சொல்றீங்களா... சாகப் போற மனுசி அவனைத் தேடுது... அவன் வந்து கொடுத்தா அதோட உயிர் சமாதானமாப் போகும்... எங்களை எப்படியெல்லாம் வளர்த்துச்சு... எங்களுக்காக எப்படிக் கஷ்டப்பட்டுச்சு... இன்னைக்கு நாங்கள்லாம் ரொம்ப வசதியா இருக்கோம்... இந்த வீடு இருக்க இடத்துல இருந்த கூரை வீட்டுலதானே எங்க ஆறு பேரையும் வளர்த்து... கஷ்டத்துலயும் படிக்க வச்சி... எங்களை ஆளாக்கிப் பார்த்துச்சு... உங்களுக்குத் தெரியாததா... அதுக்கு பொய் சொல்றது பிடிக்காது... பொய் சொல்லி பால் ஊத்தச் சொல்றீங்க... தம்பி வரட்டும் சித்தப்பா... இழுத்துக்கிட்டு கிடந்தாலும் அதோட மூச்சுக்காத்து இன்னும் கொஞ்ச நேரம் எங்க கூட இருக்கட்டுமே..."  தழுதழுத்தான் சாமிநாதன்.

"அதுக்கில்லைப்பா... அவன் எங்க வர்றான்னு தெரியலை... அதான்..."

"வந்துடுவான்... கொஞ்ச நேரம் பார்க்கலாம்..."

"பெரியநாயகி... தம்பி ஏதாச்சும் சொல்லும்... சின்னது எப்ப வருதோ தெரியலை... ஆத்தாவை உசிரோட பாக்கணுமின்னு அதுக்கு கொடுப்பினை இருந்தா சீக்கிரம் வந்திரும்... அத்தாச்சி இழுத்துக்கிட்டு கிடக்கதைப் பார்த்தா பாவமா இருக்கு... இதையெல்லாம் பார்க்கணுமின்னு நம்ம தலையில எழுதியிருக்கு... பேசாம முத்தையாண்ண சொல்ற மாதிரி பாலை எடுத்துக்கிட்டு வந்து பெரிய தம்பி மகனை நாந்தான் சிவா வந்திருக்கேன்னு சொல்லி ஊத்தச் சொல்லுத்தா..." என்றாள் காந்தி.

"அயித்த... என்ன சொல்றே...?"

"ஆமாத்தா... தம்பி எப்ப வர்றது... இப்படி இழுத்துக்கிட்டு கிடக்கு பாரு..." என்றதும் பால் எடுத்து வந்து சாமிநாதன் மகன் சந்தோஷிடம் கொடுத்து ஊற்றச் சொன்னார்கள். 'சிவா வந்திருக்கேன்' அப்படின்னு சத்தமாச் சொல்லிக்கிட்டு அவனும் ஊற்ற, சத்தம் கேட்டு வெளியில் இருந்தவர்கள் வீட்டுக்குள் வந்தார்கள். சாமிநாதன் வேண்டாம் எனச் சொல்ல, மற்றவர்கள் அவனைத் தடுத்துவிட்டார்கள்.

வாய்க்குள் கொஞ்சமும் வெளியில் மிச்சமுமாய் ஊற்ற, பாலாயியின் கண்கள் அவசர கதியில் ஒரு சுற்று சுற்று மூடிக் கொள்ள, இழுவை அடங்காமல் இருக்க... 'நாந்தான் சிவா வந்திருக்கேன்...' என மீண்டு வாயில் பாலை வைக்க, பல்லைக் கடித்துக் கொண்டாள் பாலாயி... வாசலில் 'அம்மா... உன் சிவா வந்திருக்கேம்மா...' என்ற அலறலோடு இறங்கினான் சிவா. பாலாயியின் கண்கள் மீண்டும் விழித்து எதையோ தேட, கண்ணீர் நின்றிருந்தது.

கொலுசு மின்னிதழில் தளத்தில் வாசித்து உங்கள் மதிப்பெண்களையும் வழங்க கீழே இருக்கும் படத்தைக் கிளிக்குங்கள். கொலுசு தளத்திற்குள் போகும்... அங்கு சிறுகதை என்ற இணைப்பைச் சொடுக்கி வாசியுங்கள்.

*****
ஜூலை-15ம் தேதி அகல் மின்னிதழில் வெளியான எனது "எங்கூரைப் போல வருமா?" என்ற கட்டுரையை வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க... அந்தக் கட்டுரை அடுத்த பகிர்வாக மனசு தளத்தில்...
-‘பரிவை’ சே.குமார்.

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வணக்கம்...
   தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...

   நீக்கு
 2. கதை நேர்த்தியாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் வொர்க் பண்ணினால் பின்னிடும்..
  நெகிழ்வு தோழர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்...
   உண்மைதான் சார்...
   எனக்கு உள்ள ஒரு கெட்ட பழக்கமே... தோணும் போது மனசுல வர்றதை எழுதிடுவேன்... கொஞ்சம் அங்க மாத்தணும்.. இங்க திருத்தணும்ன்னு நினைப்பேன்... ஆனால் செய்வதில்லை... அப்படித்தான் இந்தக் கதையும் எழுதியபடியே அனுப்பியிருந்தேன்...

   சில கதைகளை பிளாக்கில் நேரடியாக டைப் செய்யும் சோம்பேறித்தனமும் உண்டு. கனவு மெய்ப்பட வேண்டும் என்ற கதையும் நேசம் மறந்ததா நெஞ்சம் கதையும் அப்படி எழுதியதுதான்... அதிலும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும்...
   தங்கள் கருத்துக்கு நன்றி சார்.

   நீக்கு
 3. மனதைத் தொட்ட கதை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்...
   தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா...

   நீக்கு
 4. கதை மனதை தொட்டது நண்பரே அருமை
  இணைப்பு திறக்க முடியவில்லையே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்...
   இணைப்பு நேற்று திறக்க முடிந்தது அண்ணா...
   இப்போது இல்லை... வேறொரு இணைப்பை இணைத்திருக்கிறேன்...
   இப்போது திறக்கும் அண்ணா.
   தங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. சிறுகதை அருமையாக இருந்தது.
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் செந்தில் சார்...
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 6. மனதை நெகிழ்த்திய கதை குமார். சரி அங்கு எப்படி ஓட்டளிக்க வேண்டும்? சென்று பார்த்தோம் எப்படி என்று தெரியவில்லை. தாம்தமாகிவிட்டதோ? இடையில் தளம் வர இயலாத காரணத்தால்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துளசி சார்...
   இன்னும் வாக்களிப்பு இருக்கிறது.
   மேல் இருக்கும் படம் அவர்கள் தளத்தில் சிறுகதை என்ற இணைப்பைச் சொடுக்கும் போது வரும் அதில் 12345 இவற்றில் கிளிக்கினால் போதும்... வாக்கு சேர்ந்துவிடும்...

   சரி விடுங்க... மற்றுமொரு கதை செலக்ட் ஆனால் வாக்களிக்கலாம்...

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...