மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 6 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-3)

‘சரவணன் வரலாம்ல... அவனுக்கு நெல்லை அரிசியாக்கி அங்க கொண்டு போய் கொடுக்கணுமாக்கும்’ என்று செல்வி கேட்டதும் “இல்லத்தா…. ரெண்டு பேரும் வாத்தியார் வேலை… இப்ப மழை பேஞ்சதால ஸ்கூலெல்லாம் அதிகமா லீவு விட்டுட்டாங்க…. இனி லீவு இல்லையாம்… நாம பாத்துக்கலாம்… எதுக்கு அவனை தொந்தரவு பண்ணிக்கிட்டு…” மகனை விட்டுக் கொடுக்காமல் பேசினார் வேலாயுதம்.

“அதானே…. சின்னவனை உங்களுக்கு எதுவும் சொல்லக்கூடாது… இவன் எப்பவும் வேலைக் களவாணிப் பயதானே…. மூத்தவனை மாதிரி இவன் என்னைக்கி வயல்ல இறங்கி வேலை பார்த்திருக்கிறான்…” சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

“ஆமா... மூத்தவன் மாதிரி இவன் இல்லைதான்... அதான் இன்னைக்கி நம்ம சொல்றதைக் கேட்டுக்கிட்டு இருக்கான்... இந்த வீட்டுக்குள்ள அவனைப் பற்றி பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன். அப்படியிருந்தும் அவன் பேச்சுத்தான் எல்லாப் பக்கமும் ஓடுது... அந்த ஓடுகாலி நாயைப் பத்தி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு... அப்ப உங்க மனசுக்குள்ள எல்லாம் அந்த சாதி கெட்ட மூதேவிதான் இருக்கான் இல்லையா...?” கோபமாக மகளைப் பார்த்துக் கேட்டார்.

“அப்படியில்லப்பா... அவன் வேலை பாப்பான்னு....” மெல்ல இழுத்தாள் செல்வி.

“அதான் பார்த்தானே... நல்ல வேலையா... எவளோ ஒருத்தியை இழுத்துக்கிட்டு ஓடி... கேவலப்பட்ட பய... சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... அதை தூக்கி வீசிட்டுப் போன தறுதலை நாயி... அவன் பேச்சு இனி எனக்கு முன்னாடி பேசக்கூடாது... ஆமா... அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன்...”

“சரி... விடுங்க.... அவ ஏதோ வாய் தவறி சொல்லிட்டா... பேத்திக்குட்டி வேற திருதிருன்னு முழிக்கிறா பாருங்க... நீ சாப்புடிடி ஆத்தா... உங்க ஐயாவுக்கு இப்படித்தான் பொசுக்கு பொசுக்குன்னு கோவம் வரும்...” என்று சவுந்தரம் சொன்னதும் யாரும் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டனர்.

வேலாயுதம் எழுந்து போன பின்னர், “ஆமா... இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கத்துறாரு... எனக்கு வேற வேலைவெட்டி இல்லாமத்தான் இங்க வந்தேனா... உங்க வீட்டு கருதறுப்புக்கு வந்து எனக்கென்ன ஆகப்போகுது... ஒரு மூடை அரிசி கொடுப்பியலா... தம்பி டவுனுல கஷ்டப்படுறான்னு சொல்லி அவனுக்கு அவிச்சி ஏத்துவிய... இப்ப என்னவோ மூத்தவன் பேரைச் சொன்னதுக்கு இம்புட்டுக் குதி குதிக்கிறாரு... அவன் வேல பாக்குறதைத்தான் இந்த ஊரே சொல்லுமே... ஆத்தா அப்பன் செரமப்படுறாங்களேன்னு வந்தா... எனக்கு இது தேவைதான்...” செல்வி கோபமாய் சவுந்தரத்திடம் சொன்னாள்.

“விடுத்தா... அவருக்கு அவன் செஞ்சதை ஏத்துக்க முடியலை... அவனைப் பற்றி யாரு பேசினாலும் படக்குன்னு முகத்துல அடிச்ச மாதிரி திட்டிடுறாரு...”

“ஆமா சாதியைக் கட்டிக்கிட்டு அழச் சொல்லு... அதுதான் நாளைக்கு அவருக்கு சோறு போடும்... போன வருசம் முடியாமக் கிடந்தாரே... அப்ப இவருக்கு பாத்த பூமிநாதன் டாக்டரும், அங்க இருந்த நர்ஸ்களும் இவரு சாதியாமா..? அவ்வளவு ஏன் ரத்தம் ஏத்துனாங்களே... அது என்ன இவரு சாதியில இருந்து பிடிச்சாந்த ரத்தமா...? சும்மா சாதி... சாதியின்னு... எங்க ஊரு சந்திரன் மக ஒருத்தனோட ஓடிப்போனா... நம்மளைப் பார்த்தா துண்டெடுக்கிற சாதிப்பயதான்... நல்ல வேலையில இருக்கான்... ஆரம்பத்துல முறுக்குனாங்க... இந்த மகளையும் மாப்பிள்ளையையும் சேத்துக்கிட்டாக... அன்னைக்கி பேத்திய தூக்கிக்கிட்டு எதித்தாப்ல வருது... யாருத்தான்னு கேக்குறேன்... என்ன இப்படிக் கேக்குறே... நம்ம சுசீலா மக... அங்க போயிருந்தேன்... ரெண்டு நாளைக்கு இங்க வச்சிருக்கலாம்ன்னு கூட்டுக்கிட்டு வந்தேன்னு சொல்லிட்டுப் போகுது.... எம்புட்டு நாளைக்குத்தான் இவரு சாதியக் கட்டிக்கிட்டு அழப்போறாரு... எம்புள்ளைகளுக்கு நாளக்கி நல்லது கெட்டதுக்கு ரெண்டு மாமனும்தான் வேணும்... ஆமா சொல்லிப்புட்டேன்...”

“நீ வேற ஏண்டி... சும்மா இருடி... அவரு காதுல கேக்கப்போகுது... தேவையில்லாத பிரச்சினை... விட்டுட்டு வேலையைப் பாரு...”

“ஆமா... இப்படி அவருக்கு பயந்து பயந்து ஜால்ரா போட்டே காலத்தை ஓட்டிட்டே... இனியா நீ மாறப்போறே...”

“சவுந்தரம்... ஆத்தாளும் மகளும் என்ன ரகசியம் பேசுறீங்க...? அந்த வெத்தலையை எடுத்துக்கிட்டு வா...” வாசத்திண்ணையில் இருந்து கத்தினார் வேலாயுதம்.

“போ உங்கப்பனுக்கிட்ட வெத்தலப் பெட்டிய எடுத்துக் கொண்டேக் குடு... நா வாறேன்...” என்று சவுந்தரம் சொன்னதும் செல்வி முணங்கிக் கொண்டே எடுத்துக் கொண்டு போனாள்.

***
சுபத்ரா கொடுத்த குலோப் ஜாமூனை ருசித்தபடி, “ஏம்மா... எங்கே நம்ம அபி..?” என்றான் கண்ணன்.

“டியூசன் போயிருக்கா... இப்ப வந்திருவா... அவ எங்க போறேன்னு சொன்னா... கண்ண அண்ணனெல்லாம் வர்றாங்க... போகலம்மா... ப்ளீஸ்மான்னு கெஞ்சினா... நாந்தான் அவங்க இங்கதான் இருப்பாங்க... போயிட்டு வந்து அவாகிட்ட பேசிண்டிருக்கலாம்ன்னு சொன்னேன்...” என்றாள்.

சாரதியைக் காட்டி “அபி... இவனை மாதிரி இல்லம்மா... ரொம்ப ஜாலியான பொண்ணு... அண்ணா... அண்ணான்னு உசிரை விடும்...” என்றான் கண்ணன்.

“ம்... வீட்ல சாரதிக்கிட்ட பேசிண்டு இருந்தாள்ன்னா அதுல பெரும்பாலும்  கண்ண அண்ணன்... கண்ண அண்ணன்தான்...” என்றாள் சுபத்ரா.

“ஆமா... இன்னைக்கு சாயந்தரம் நான் இங்க வந்தச்சே எனக்கிட்டயும் இந்த கண்ண அண்ணன் புராணம்தான் பாடிண்டு இருந்தா... அதுல இன்னைக்கு நீயுந்தானே எங்க கண்ண அண்ணனைப் பார்க்கப்போறே... அவரு சூப்பர் குணம்ன்னு சொன்னா.... அதான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி பாத்துண்டிருந்தேனே கண்ண அண்ணாவோட குணத்தை...” கண்ண அண்ணாவை அழுத்தமாகச் சொன்னபடி அவர்களுக்கு எதிரே வந்து அமர்ந்தாள் அவள்.

 
“வாயாடி சும்மா இருடி...” என்றாள் சுபத்ரா.

“என்னைய அடக்கி வைங்க அத்தை... உங்க அத்தையை அடக்காதீங்க... அது பாட்டுக்கு திண்ணையில உக்காந்திண்டு ஜாதி, சம்பிரதாயம்ன்னு கத்திண்டு இருக்கு...” என்றாள் அவள்.

“ஏண்டா... இது நம்ம சாரதியோட தங்கச்சி இல்லை... அப்ப சொந்தக்காரியா இருக்குமோ..? இல்ல பக்கத்து வீடா....? முன்னப்பின்ன தெரியாத நமக்கிட்ட இந்தப் போடு போடுது... ஐயராத்துப் பொண்ணுக்கு பயமிருக்காதுதான்.... ஆனா நம்மளை விட்டு... இல்லையில்ல உன்னைய தாக்குதாக்குன்னு தாக்குது... இந்தக் குட்டிய முன்னப் பின்ன பார்த்திருக்கியா...?’ மெதுவாக கண்ணனின் காதைக் கடித்தான் ஜாகீர்.

“சும்மா இருடா... அத்தை அத்தையின்னு வேற பேசுது... சொந்தமா இருக்கப் போகுது...  குட்டி கிட்டின்னு பேசி அவங்க காதுல விழப்போகுது...” கண்ணனும் மெதுவாகச் சொன்னான்.

“என்னப்பா... உங்களுக்குள்ள பேசிண்டு இருக்கீங்க..?” எனக் கேட்டாள் சுபத்ரா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... நம்ம சாரதி வீட்ல எல்லாரும் ரொம்ப அன்பா... ரொம்ப நாள் பழகின மாதிரி பேசுறாங்கன்னு சொன்னான்... நான் பாட்டியைத் தவிரன்னு சொன்னேன்...” என்றபடி கண்ணன் எதிரே இருந்த அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

தங்க விக்ரகம் போல் அமர்ந்திருந்தாள் அவள்.


கண்ணன் அவளைப் பார்க்கவும் “அவ எங்க அத்தை பொண்ணு சுபஸ்ரீடா...” என மெல்ல அவனின் காதைக் கடித்தான் சாரதி.

(பகுதி -4 சனிக்கிழமை தொடரும்) 

படம் இணையத்தில் சுட்டது.
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

நடை அழகு.. தொடரட்டும்..

Unknown சொன்னது…

ம்...தொடருங்கள்.

Kasthuri Rengan சொன்னது…

தங்க விக்ரகம்?
இப்போ அப்படி யாரும் இருக்காங்களா?
அருமை தொடர்க
தம +

KILLERGEE Devakottai சொன்னது…

நம்ம சிலம்பனி ஏரியா பூமிநாதன் டாக்டரா ?
தொடர்கிறேன் நண்பரே....
தமிழ் மணம் 5

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகாக நகர்கின்றது...கிராமமும், நகரமும்(?)...தொடர்கின்றோம்..

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அழகான நடையோடு செல்கிறது. முந்தைய பதிவுகளை படிக்கவில்லை. அதையும் படித்துவிட்டு வருகிறேன்.
த ம 7

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மது சார்...
இருக்கு சார்... நீங்க நல்லா பார்க்கலை போல...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
இது அந்த பூமிநாதன் இல்லை... வேற...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நிஷா சொன்னது…

ஆஹா சுபஸ்ரீ...” வந்தாச்சா?
கதை அமர்க்களம் குமார்,அருமையாக செல்கின்றது,
எத்தனை காலமானாலும் இந்த ஜாதியும் மதமும் நம்மை விட்டு போகவே போகாது போல!நிகழ் காலமும், கடந்த காலமுமாய் செல்லும் கதை அருமை, அடுத்து என்ன?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.