மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 24 பிப்ரவரி, 2016நானே முதலாளி

"என்ன வேலை அதிகமோ?"

"ஆமாங்க... கொன்னு எடுக்குறானுங்க.. எல்லாமே நானேதான் பாக்க வேண்டியிருக்கு"

"உங்க வேலையை மட்டும் பாருங்க... எதுக்கு எல்லாத்தையும் இழுத்துப் போட்டு பார்க்கிறீங்க..?"

"எங்கங்க இழுத்துப் போட்டுப் பார்க்கிறேன்... நாலு டெண்டர் வந்திருக்கு... இதை இதை இப்படிப் பண்ணினால் போதும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்..."

"ம்ஹூம்... அதெல்லாம் நீங்கதான் பாக்கணுமா... என்ன?"

"எனக்கு எல்லாந் தெரியுங்க... சொன்னா கேக்க மாட்டானுங்க... எனக்குத் சொல்லித்தாறியான்னு சொல்லிட்டு சாயந்தரமா வந்து இதை எப்படிச் செய்யலாம்ன்னு கேப்பானுங்க... எப்பவும் இதே வேலையாப் போச்சு..."

"அது சரி... இதெல்லாம் உங்ககிட்ட கேப்பாங்களா...? அப்ப நீங்கதான் எல்லாமே அப்படித்தானே...”

“எதை எதை எப்படிப் பண்ணலாம்ன்னு எனக்குத் தெரியாததா... எத்தனை கம்பெனி பாத்திருப்பேன்...”

“ம்...”

“நேத்துக்கூட முதல்ல கேக்க மறுத்தவன், சாயந்தரம் வந்து நீ சந்தோஷமா இருக்கியான்னு கேட்டான்... ஆமான்னு சொன்னதும் நீ சந்தோஷம்ன்னா நானும் சந்தோஷம்தான்... டெண்டர் இன்னும் தயாராகலையில்லன்னு சொல்லி சிரிச்சிட்டுப் போறான்... ரெடி பண்ண வேண்டிய டெண்டர் டேபிள்ல சிரிச்சிக்கிட்டு கிடக்கு... இனி நாளைக்குப் போயி நாந்தான் எல்லாம் பாக்கணும்”

“பாருங்க... நீங்க செய்யலைன்னதும் அவரும் செய்யலை... மொத்தப் பொறுப்பும் உங்க தலையில... கம்பெனியில இருக்க எல்லா மேனேஜருமே நீங்க சொன்னா செய்யிற மாதிரி இருந்தா எப்படி... அவனவன் வேலையை அவனவன் பாக்க வேண்டாம்... எல்லாத்தையும் ஒராளு மேல  அள்ளிப் போட்டா எப்படி... நியாயமா  இது..? நீங்க ஏன் மூளையைப் போட்டு கசக்கி வேலை பாக்குறீங்க...  கொடுக்கிற சம்பளத்துக்கு வேலை பார்த்தா போதும்... உங்க உடம்புதாங்க உங்களுக்கு முக்கியம்... கம்பெனி செய்யாட்டி பொயிட்டுப் போகுது... யாருக்கு நஷ்டம்... என்ன நாஞ் சொல்றது...”

“நமக்கு அப்படி யாரோ செய்யட்டும்ன்னு பார்த்துக்கிட்டு இருக்கிற மனசில்லைங்க... எல்லாத்தையும் நான் இழுத்துப் போட்டு செஞ்சிருவேன்...”

“அதுக்காக டெண்டர் வேலை எல்லாம் மேனேஜருங்க.. அதுக்குன்னு உள்ள ஆளுங்க தயார் பண்ணனும் நீங்க எப்படி..?”

“எல்லாமே எனக்குத் தெரியுங்க... என்ன காலம் வெள்ளலை... அவன் முதலாளியா இருக்கான்... நான் இப்படி கெடந்து கஷ்டப்படுறேன்....”

“ம்... சரிங்க.... வொர்ரி பண்ணிக்காதீங்க... ரொம்ப கெரங்கிப் போயிட்டீங்க... எதையும் நெனச்சு  கவலைப்படாதீங்க... டெண்டர் விஷயாம ரொம்ப திங்க் பண்ணாதீங்க... நல்லா சாப்பிடுங்க... சுகர் மாத்திரை.. பிரஷர் மாத்திரை எல்லாம் ஒழுங்காச் சாப்பிடுறீங்களா?”

“ம்...”

“விடாம சாப்பிடுங்க... அடிக்கடி டெஸ்ட் பண்ணிக்கங்க... பொறிச்ச அயிட்டங்களை சாப்பிடாம கொறச்சிக்கங்க... எல்லாத்துக்கும் மேல டென்சனைக் குறைங்க... நா அடுத்த வெள்ளிக்கிழமை வர்றேன்.... நாளைக்கு வேலை... இனி இங்கிருந்து முஸாபா போறதுக்குள்ள தாவு தீந்திரும்... சரி... அப்பக் கெளம்பவா...?”

“இருங்க... நானும் பஸ் ஸ்டாப் வரைக்கும் வாறேன்...”

“வேண்டாம்... எதுக்கு லிப்ட்ல எறங்கினா... இதே பில்டிங்குக்கு கீழே பஸ் ஸ்டாப்... வீணாவுல நீங்க எதுக்கு எறங்கி ஏறுறீங்க... நாங்க போயிருவோம்..."

“சரி பின்னே... பாத்து போங்க... பொயிட்டு போன் பண்ணுங்க...”

“சரி...”

புதிதாக அறைக்கு வந்திருந்த நண்பனை அபுதாபி போலாமென கூட்டி வந்திருந்தான். லிப்டுக்கு நிற்கும் போது அவன் மெதுவாக "ஏங்க... உங்க சொந்தக்காரர்தான் பெரிய வேலையில் இருக்காருல்ல... பின்னே ஏன் நீங்க டிகிரி முடிச்சிட்டு ஆபீஸ் பாயா டீக்கிளாஸ் கழுவுறீங்க... இவருக்கிட்ட சொல்லி இவங்க ஆபீசிலேயே நல்ல வேலைக்கு ஏறலாமே..." என்றான்.

"அட நீங்க வேற...  இந்தாளு பாக்குறது டாக்குமெண்ட் கண்ட்ரோலர் வேலை... பேசுறது மட்டும் பெரிசா... இன்னும் உக்காந்திங்கன்னா உங்ககிட்டா ஊர்ல இருக்கும் போது கலெக்டருக்கு சந்தேகம் வந்தா வண்டியை எடுத்துக்கிட்டு என்னைத் தேடித்தான் வருவாருன்னு சொல்வாரு... எல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கு பழகிடுச்சு... வாய் இருக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படி இருக்கக்கூடாது... இது சும்மா இருந்தா நிம்மதியா வேலையைப் பாத்துட்டு சந்தோஷமா இருக்கலாம்... இதுவே எல்லாத்தையும் தூக்கிச் சுமக்குது" எனச் சிரிக்க, அவர் அதுக்குப் பின் முஸாபா வரைக்கும் பேசவே இல்லை. அடுத்த முறை வரமாட்டார்ன்னு நினைக்கிறேன்.

********
றவுகளே பிரதிலிபி 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது சிறுகதையும் இருக்கு. அதற்கு கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அங்கு சென்று 'விமர்சனம் எழுத' என்ற பட்டனைச் சொடுக்கி, பிரதிலிபியில் உறுப்பினராக இல்லை என்றால் முகநூல் நுழைவு முகவரியைக் கொடுத்து உள் சென்று கருத்து இடவில்லை என்றாலும் கதையைப் படித்து மதிப்பெண் கொடுங்கள். மறக்காதீர்கள்... உங்கள் நட்புக்களுக்கும் சொல்லுங்கள்... என் கதை மட்டுமல்ல மற்ற நல்ல ஆக்கங்களுக்கும் உங்கள் மேலான மதிப்பெண்ணை அளியுங்கள். நன்றி.

நீங்கள் அளிக்க இருக்கும் மதிப்பெண்ணுக்கு இப்பவே நன்றி...!

-'பரிவை' சே.குமார்

16 கருத்துகள்:

 1. நல்ல கதை! இப்படித்தான் பலர் தகதக என தகரடப்பாவாய் இருப்பார்கள்.தங்களை விட்டால் ஆளில்லை எனும் படி பேச்சிருக்கும் , அதை நம்பினால் நாம் அழிந்தோம்.

  நான் அப்படி செய்வேன்,இப்படி செய்வேன், உனக்கில்லாததா என உதார் விடும் ஆசாமிகளிடம் போய் நிஜமாய் உதவி கேட்டுப்பாருங்கள் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடுவார்கள்.

  கதைப்போட்டிக்கு மதிப்பெண் போட்டாச்சு குமார்.கருத்து தான் இடவில்லை,

  பதிலளிநீக்கு
 2. மதிப்பெண் இட்டு பெரிய விமர்சனமும் பதிந்தேன். வந்ததா என்று தெரியவில்லை சகோ. உணர்ச்சிபூர்வமான கதை. வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 3. இது மாதிரி வாய்ப்பந்தல் போடும் ஆட்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவர்கள் செயலில் அவ்வளவு ஒன்றும் இருக்காது! கவுண்டமணி போல ஆகி விடுவார்கள் அங்கு செல்கையில்!

  நேசம் சுமந்த வானம்பாடிக்குக் கருத்து வழங்கி இருந்தேன். உடன் கிரேஸ்,துளசி / கீதா போன்ற நண்பர்களின் கருத்துரைகளையும் கண்டேன்!


  பதிலளிநீக்கு
 4. ரொம்ப பேரை பார்த்திருக்கேங்க இது மாதிரி... அருமை குமார் ...

  பதிலளிநீக்கு
 5. இந்த மாதிரி வாய்சவடால் வீரர்கள் எல்லா இடங்களிலும் உண்டு நண்பரே சுட்டிக்கு போய் மதிப்பெண் இடுகிறேன்
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 6. முகநூல் வழியாக சென்றேன்
  அதில் கருத்துரையை ஏற்க மறுக்கின்றதே நண்பரே..

  வணக்கம் நண்பரே கதை மனதை வதைத்தது உண்மையே நானும்கூட ராகவன் ஐயா போன்ற குணமுள்ளவனே பழைய பொருட்களை அவ்வளவு சுலபமாக தூக்கிப் போட்டு விட மாட்டேன் என்னிடம் இப்படி நிறைய பொருட்கள் உண்டு - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 7. நல்ல கதை சவுண்ட் பார்ட்டி!!! வாய்ச்சொல்லில் வீரரடி என்று சொல்லல்லமோ!! வாழ்த்துகள் குமார்.

  பதிலளிநீக்கு
 8. சுருக்கமான ஆனால் அருமையானதொரு சிறுகதை சார்..

  பதிலளிநீக்கு
 9. பிரதிலிபி மதிப்பெண் எப்படி இடுவது...?

  பதிலளிநீக்கு
 10. அருமையான சிறுகதை குமார்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்
  சிறுகதை அருமை அண்ணா. படித்துமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. அன்பு பரிவை குமார், உங்கள் சிறுகதை எங்கள் கதை போல இருக்கிறது. எப்படி ஓட்டுப்
  போடுவது என்று தான் தெரியவில்லை
  அருமையாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...