மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 18 டிசம்பர், 2015

மனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்

சென்ற வாரம் முழுவதும் பதினோரு மணி நேரத்திற்கு மேலாக அலுவலகப் பணி. அதுவும் கணிப்பொறியோடு கட்டிப் புரள வேண்டும் என்பதால் கண்கள் எல்லாம் வலி.  இவ்வளவுக்கும் காரணம் எனக்கு மேல் இருக்கும் அந்த எகிப்துக்காரனின் ஈகோவும் வேலை செய்யாமல் உட்கார்ந்து பொழுதை ஓட்டும் செயலும்தான்... அவனைத் தவறாகச் சொல்ல எண்ணமில்லை இருந்தும் இதற்கான காரணி அவனே என்னும் போது கோபம் கொப்பளிப்பதை தவிர்க்க முடியவில்லை. 

இந்த எட்டாண்டு காலத்தில் எத்தனையோ அரசு நிறுவனங்களில் நாங்கள் பணி செய்திருக்கிறோம். எனக்கு மேலே முதலில் ஒரு ஆர்மேனியன் அதன் பின்னர் லெபனானிகள் இருந்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போ கம்பெனியில் பெரும்பாலான பதவிகளில் எகிப்துக்காரர்கள் வந்து அமர்ந்துவிட எல்லாப் பக்கமும் பிரச்சினைதான். எங்க குழுவில் நாங்க நாலு பேர் ஒரு பாகிஸ்தானி, ரெண்டு மலையாளி மற்றும் நான். எனக்கு மேலே இந்த வேலை பார்க்காமல் 'டூ மச் ஓர்க்' என்ற வசன உச்சரிப்போடு அமர்ந்திருக்கும் எகிப்துக்காரன். நம்ம பாகிஸ்தானி சொல்லவே வேண்டாம்... நாம சரியான நேரத்துக்கு கிளம்பின அரைமணி நேரம் இருந்து செய்துட்டுப் போறேன்னு சொல்லுவான். அவனுக்கு நல்ல பேர் வேண்டும் அதுக்காக இரவு 10 மணி வரைகூட அமர்ந்திருப்பான். ஆனா பெரும்பாலும் கொடுக்கும் வேலை எல்லாம் கடினம் என்று சொல்லியே வேலை பார்க்காமல் நேரத்தை ஓட்டுவான். காலையிலும் அரைமணி நேரம் தாமதமாகத்தான் வருவான்.

அப்புறம் நம்ம மலையாளியில் ஒருவன் நல்லவன்... நமக்கிட்ட வீர வசனம் பேசுவான்... ஆனா 'அங்க என்னம்மா சத்தம்?' என்று கேட்டதும் 'சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் மாமா'ன்னு வடிவேலு சொல்வாரே அந்தக் கதைதான். எகிப்துக்காரன் இன்னைக்கு இதை முடிக்கணும் அதுவரைக்கும் இடத்தை விட்டு எந்திரிக்க கூடாதுன்னா பாத்ரூம், சாப்பாடு எல்லாம் மறந்து வேலை பார்ப்பான். மற்றொரு மலையாளியோ கேட்க வேண்டியதற்கு கேள்வி கேட்பான். ஆனா இண்டர்நெட்டை ஷேர் பண்ணுறது, கை பிடித்து விடுறது, கழுத்தை அழுத்தி விடுறதுன்னு மத்த வேலை எல்லாம் செய்து நல்லபேர்(?) வாங்கி வைத்திருப்பான். அதுபோக வேலையையும் விரைந்து முடிப்பான். நாங்க அதை மறுபடியும் சரி செய்யணும். ஆனா இவனைத்தான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

என்னைப் பொறுத்தவரை பார்க்கும் வேலையில் முடிந்தளவு சரியாக, குறைகள் இல்லாது செய்ய வேண்டும். என்ன வேலை பார்க்கிறே என்றெல்லாம் கேள்விகள் நம்மை நோக்கி வரக்கூடாது. யாராவது தப்பாச் சொல்லிட்டா கோபம் அதிகமாக வரும். அவனுக்கிட்ட திருப்பிக் கேட்டாத்தான் அந்தக் கோபம் அடங்கும். அதனால் என்னோட வேலை... எனக்கான நேரம்... இதில் எப்பவும் சரியாக இருப்பேன். எந்த வேலை என்றாலும் அதை தனியாக பார்க்க வேண்டும் என்றால் என்னைத்தான் அனுப்புவானுங்க... 

கொஞ்ச நாள் முன்னால இதே பணிக்காக பக்கத்தில் இருக்கும் அரசு அலுவலகத்துக்கு (TRANSCO) சென்ற போது என்னோட வேலை தவிர்த்து மற்றொரு வேலையையும் சேர்த்து செய்யச் சொன்ன போது உங்காளுங்க என்ன பண்றாங்க... என்னால முடியாதுன்னு சொன்னதும் அங்கிருந்த மேலதிகாரியான அரபிப் பெண் எனக்கு வேலை தெரியவில்லை என்றும் அனுசரித்துச் செல்ல மாட்டேங்கிறான்... கோபப்படுறான் என்றும் நீளமான மின்னஞ்சல் எங்க கம்பெனி மற்றும் நாங்கள் இப்போ பணி செய்யும் ADWEA அலுவலகத்தின் எங்கள் துறை சம்பந்தமான மேலதிகாரிக்கும் அனுப்பிட்டாங்க. எங்காளு எங்கிட்ட காட்டி இதுக்கு சரியான பதிலை நம்ம இஞ்சினியர் அனுப்பிட்டான்னு சொன்னான். நான் ஒன்றும்  சொல்லலை... ஆனா ADWEA மேலதிகாரியான பெண்ணுக்கு நான் ADWEA, ADDC, AADC, ADM என எல்லா இடத்திலும் கடந்த நான்கு வருடமாக மாறி மாறி பணி செய்வது தெரியுமென்பதால் 'குமார் சரியாக வேலை செய்யவில்லை என்று நீ சொல்வதை ஏற்க முடியாது. அவருக்குத் தேவையானதை கொடுத்திருந்தால் சொன்ன தேதிக்கு முன்னதாக முடித்துக் கொடுத்திருப்பார். அவரைப் பற்றி எனக்குத் தெரியும்' என மின்னஞ்சல் அனுப்பி எங்க கம்பெனிக்கும் CC போட்டுவிட்டார். அதையும் பார்த்தேன்... இந்தப் பெயர்தான் நம்மை வாழவைக்கிறது.

சரி பேசின விசயத்துக்கு வருவோம் ADWEAவில் ஒவ்வொரு வேலை ஆரம்பிக்கும் போதும் எகிப்துக்காரனிடம் இது சரிதானா...? இதில் இன்ன பிரச்சினை இருக்கு..? இப்படிச் செய்தால் சரிவருமா...? என்றெல்லாம் கேட்டு அவனுக்கு மேலிருப்பனிடம் ஒருமுறை சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளச் சொல்வேன். அது அவருக்கு ஈகோ பிரச்சினை... இப்படித்தான் போனவாரம் எங்களைப் படுத்திய கூடுதல் சுமை வந்து சேர்ந்தது. கிட்டத்தட்ட 80% வேலை முடித்து விட்டோம். முதல் நாளே அவனிடம் இன்னைக்கு நாம பண்ணியிருக்கிறது சரிதானான்னு பாரு... மேல இருக்கவனிடம் கேட்டுச் சொல்லு என்றேன். உடனே 'நான் சொல்றேன்... நீ செய்யி' என்றான்... இங்கே அவனின் நான் என்ற அகங்காரம் முன் நிற்க, நாங்கள் அவன் சொன்னபடி செய்தாச்சு. ஒருநாள் அவனுக்கு மேல இருக்கவன் வந்து பார்த்துட்டு அவனைப் பிடித்து திட்டி தீர்த்துட்டான். அவன் போகும் வரை ஒன்றும் பேசாதிருந்துவிட்டு போனதும் திரும்ப செய்யுங்கள் என்றான். எனக்கு எப்பவுமே நேராகத்தான் பேசப் பிடிக்கும் முன்னாடி விட்டு பின்னாடி பேசுறது அறவே பிடிக்காது. என்னடா நினைச்சிக்கிட்டு இருக்கே... அன்னைக்கே சொன்னேனுல்லன்னு அவனைப் பிடித்து கட்டி ஏறிட்டேன். 

அதன்பின் என்னிடம் பேசாமல் இருந்தவன் மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும்போது மலையாளியிடம் சொல்லி குமாரிடம் எனக்காக அதிக நேரம் எடுத்து முடிச்சிக் கொடுக்கச் சொல்லு நான் சொன்னா திட்டுவான்னு சொல்லியிருக்கான். ஏன்னா எங்களுக்கு கூடுதல் பணிக்கான எந்த சலுகையும் அலுவலகத்தில் கொடுப்பதில்லை. எனவே என்னிடம் சொல்லவந்தால் ஏதாவது பேசிவிடுவேன் என்ற பயம் அவனுக்கு. ஆனால் மலையாளியோ நான் போயிச் சொன்னா நீ என்ன மேனேஜரான்னு என்னைத் திட்டுவான்னு சொல்லி நீயே மெதுவாச் சொல்லு என்று சொல்ல, தயங்கித் தயங்கி ஆரம்பித்தான். சரி தொலைஞ்சிட்டுப் போறான்னு போன சனிக்கிழமை மதியம் ரெண்டு மணி வரைக்கும் வந்து பார்த்துத் தாறேன்னு சொல்ல, மற்றவர்கள் வாறேன்னு சொன்னாங்க. 

அதன்படி வேலைக்குச் சென்றோம். அன்று அரசு அலுவலகங்கள் விடுமுறை.... தண்ணீர், டீ என எதுவும் இருக்காது... கிச்சனை பூட்டிவிடுவார்கள். அப்படியும் 8 மணிமுதல் 3 மணி வரை பார்த்து மூணு மணிக்கு கிளம்ப (நான் சீட்டை விட்டு எழுந்தால்தான் மற்றவர்கள் எழுவார்கள்) உடனே இன்று ஆறு மணி வரை பார்க்கணும் என்றான். (அவன் வந்ததோ 1 மணிக்கு). நான் சொன்னது 2 மணி வரை... இப்ப மணி மூணு... காலையிலும் சாப்பிடலை... இப்பவும் இன்னும் சாப்பிடலை... இனி முடியாது என்று வந்துவிட, பக்கத்து வீட்டுகாரன் பொதுச்சுவத்துக்கு அடிச்சிக்கிட்ட மாதிரி உக்கார்ந்து முணங்கிக் கொண்டிருந்தான். இந்த வார ஞாயிறன்று என்னிடம் எதுவும் பேசவில்லை. இவ்வளவுக்கும் நானும் அவனும் அருகருகேதான் அமர்ந்திருப்போம். போடா இவனேன்னு நான் பாட்டுக்கு வேலை பார்த்தேன். இருக்கவே இருக்கு நம்ம ராசாவோட பாடல்கள்... காதுகளில் ஆனந்தராகமாய் இறங்கி மனசில் சங்கமிச்சி வாய் வழியாக மெதுவாக வழிந்து கொண்டிருக்க என்னோட வேலை அதுபாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கும். தினமும் எவ்வளவு முடிஞ்சிருக்குன்னு எல்லாரிடமும் கேட்பான்... என்னிடம் எதுவும் கேட்பதில்லை.

யாரை மிரட்ட வேண்டும் என்றாலும் நான் பாத்ரூம் பக்கம் போகட்டும் என்று காத்திருப்பான். நான் அங்கிட்டு போனதும் இவரோட மிரட்டலை ஆரம்பிப்பார். வந்ததும் சொல்வானுங்க... நமக்கு கோபம் தலைக்கேறும்... இப்பல்லாம் குமார் நீ எதுக்குடா கோபப்படுறேன்னு அடக்கி வச்சாலும் அப்ப அப்ப வெடிச்சிடும். தினமும் காலை 8 முதல் இரவு 7, 7.30, 8 என வேலை பார்க்க, வேலையில் வேகம் இல்லை அப்படின்னு சொன்னான். இது யாரால வந்த பிரச்சினையின்னு உனக்குத் தெரியும்ல்ல... என்ன வேகமில்லை.... நான் பாக்குறதை நீ பாத்துருவியா... சும்மா உக்காந்துக்கிட்டு எங்கிட்ட பேச வராதே... இனி எதாவது பேசினே நான் நம்ம இஞ்சினியர்கிட்ட நேர பேச வேண்டியிருக்கும் என்று நான் சொன்னதும் அவன் அதற்குப் பிறகு பேசவே இல்லை. 

நேற்று மற்றவர்களிடம் நீங்க வேலையை சரியான நேரத்தில் முடிச்சிக் கொடுக்காததால் உங்க சம்பள உயர்வு (வருடா வருடம் பொருளாதார இறக்கநிலையை காரணம் காட்டி சம்பளத்தை உயர்த்துவதில்லை) குறித்த பேப்பர்ல உங்களைப் பற்றி நல்லா எழுதமுடியாதுன்னு எனக்கு மேல உள்ளவன் சொல்லிட்டான்னு மிரட்டியிருக்கான். வேலையும் பார்க்க மாட்டான்... தெரியலைன்னா கேக்கவும் மாட்டான்... பேச்சு மட்டும் இவனுகளுக்கு கடவுள் கொடுத்த வரம். ஒரு வாரமாக அவனிடம் பேசவில்லை... முகத்தை முகத்தைப் பார்ப்பான்... பாட்டுப் பாடுவான்... நேற்று பணி முடிந்து எழும்போது என்ன சீக்கிரம் எழுந்துட்டான் எனப் பார்த்தான்... இனி 8 முதல் 5.30 வரைதான்... அதுக்கு மேல உக்கார மாட்டேன் என்று சொல்லியபடி வெளியேறினேன். கோபத்தைக் குறைக்க நினைத்தாலும் சில விஷயங்கள் நம்மை கோபப்படவே வைக்கிறது.

***
கிராமத்தில் வீடு ஆரம்பித்தபோது கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடிக்கலாம் என்றே ஆரம்பித்தோம். இப்போ அது என்னவோ தெரியலை... ரொம்ப வேகமாக போய்க் கொண்டிருக்கிறது... கையில் இருப்பு இல்லாத சூழலில் அதற்காக கடனை அங்கிட்டும் இங்கிட்டும் புரட்ட வேண்டிய நிலமை அதிகமாக இருந்தாலும் வேகமாகப் போவது நமக்கு நல்லது என்ற கிராமத்தினரின் வாக்கு பொய்க்காமல் நல்லதே நடக்கட்டும் என்ற நினைவோடு ஓடிக் கொண்டிருக்கிறோம். கடன் முன்னே நின்றாலும் நம்ம ஊரில் நமக்குன்னு ஒரு வீடு என்ற சந்தோஷத்திற்காகவே நாங்களும் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறோம்... நாங்கள் என்பதை விட என் மனைவிதான் ஓடுகிறார் என்று சொல்லலாம். என்னைவிட என் மனைவிதான் ரொம்ப அலைகிறார் நான் பார்க்க வேண்டிய எல்லா வேலையும் அவர் ஒருவரே உதவிகள் மறுக்கப்பட உறவுகளுக்கு மத்தியில் குழந்தைகளோடு போராடி, பணத்துக்காக அலைந்து... தினமும் ஊருக்கு போய் வீட்டு வேலை பணிகளைப் பார்த்து... பொருட்கள் வாங்கிக் கொடுத்து... இப்படியாக பரபரப்பான சூழலில் தினமும் பயணிக்கிறார். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். 
***
ட்டி படம் பார்க்கலாம் என்று ஆரம்பித்தபோது படம் ஜாலியாய் பயணிக்க, சரி இடைவேளை வரை பார்த்துவிட்டு படுக்கலாம், மீதத்தை நாளை பார்ப்போம் என்று நினைத்துப் பார்த்தால் இடைவேளை வரும்போது படம் வேகமெடுத்தது. அப்புறம் என்ன முழுப்படமும் பார்த்துத்தான் படுத்தேன். அதர்வா முரளி படத்துக்குப் படம் தன்னை மெருகேற்றிக் கொள்கிறார். இதில் ஒரு விளையாட்டு வீரனுக்காக உடல்கட்டுடன் கதாபாத்திரத்தின் உச்சம் தொட்டிருக்கிறார். ஸ்ரீதிவ்யா நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி... நல்லவே பண்ணியிருக்கு... கள்ள நோட்டுக் கும்பல், காயம் பட்டால் ரத்தம் நிற்காமல் வெளியேறும் வியாதி என படம் பயணித்து முடிவில் நம்மை பதற வைத்து நிறைவாய் முடிகிறது. அப்பாவாக ஜெயபிரகாஷூம் பயிற்சியாளராக நரேனும் வாழ்ந்திருக்கிறார்கள். பாடல்கள் அலுவலக நேரத்தில் கேட்டு ரசித்தவை என்பதால் மீண்டும் ரசிக்க வைத்தன. இயக்குநர் ரவி அரசு ஜெயித்திருக்கிறார். படம் மாரத்தானில் ஆரம்பித்து ஈட்டியாக பயணித்திருக்கிறது.
***
அலுவலகப் பணி, வீடு கட்டுவதற்கான பணப் போராட்டம் என மனம் ஒரு நிலையில் இல்லாததால்தான் மனசு பக்கம் அதிகம் எழுத வரவில்லை. இதனாலேயே 'கொலையாளி யார்?' கதையின் முடிவு எழுதப்படாமலே கிடக்கு, பலரின் பக்கங்கள் வாசிக்காமலே கிடக்கு. விரைவில் மீண்டு வருவேன் நட்புக்களே... அதுவரைக்கும் என்னடா இவன் பெரியாளாயிட்டானோ கருத்து இட வருவதில்லை என்று நினைக்காமல் எப்போதும் போல் உங்கள் அன்பைத் தொடருங்கள்... விரைவில் வருகிறேன்.

நன்றி.

மனசின் பக்கம் அடுத்த வெள்ளியன்று.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இங்கு உள்ள பிரட்சினைகளை நாம் நாடு விட்டு போவதுவரை தொடரும் நண்பரே அது முடியாது
வீடு விரைவில் முடித்து குடியேற எமது வாழ்த்துகள்
தமிழ் மணம் 1

நிஷா சொன்னது…

வீட்டுப்பிரச்சனை சீக்கிரம் தீரணும்னு நானும் வேண்டுகின்றேன் குமார். வேலைப்பிரச்சனை எங்கே சென்றாலும் இதே நிலை தான். நீங்களாவது வேலையை கைவசம் வைத்துள்ளீர்கள் வேலை இல்லாதோரை நினைத்து பாருங்கள். எல்லா இடமும் மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களை மட்டம் தட்டுவதும் அதிக வேலைகளை சுமத்துவதும் நடக்கத்தான் செய்கின்றது.

நானும் என் வலைப்பூவில் எதையும் எழுதவில்லை குமார். சென்னை வெள்ளம் , என் உடல் நிலை என பல காரணங்கள் மனதில் சோர்வை தருவதால் புதிதாய் எதையும் பதிவு செய்ய வேண்டும் என தோன்றவும் இல்லை. உடல் நிலை முடியாத நிலையிலும் ஆர்டர்களை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் கிடைக்கும் நேரத்தை தூங்கியே கழிக்கின்றேன்.எல்லாம் சரியாகணும். நம்பிக்கை தானே வாழ்க்கை.
காலம் நமக்கென எதை விட்டு இருக்கின்றது என்பதை வாழ்ந்து தான் பார்க்க வேண்டும் குமார்.

ஸ்ரீராம். சொன்னது…

வேலைகளின் கஷ்டம் புரிகிறது. அதில் நல்ல பெயரெடுத்திருப்பதற்குப் பாராட்டுகள்.
தம +1

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

புது வீடு
வாழ்த்துக்கள் நண்பரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பொதுவாக அனைவரும் அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றித்தான் விவாதித்துள்ளீர்கள். முடிந்தவரை நேர்மறை சிந்தனைகளை எப்போதும் மனதில் கொள்ளுங்கள். அவ்வாறன சிந்தனைகள், நம்மை அனாவசியமானவை நெருங்காமல் வைத்துக்கொள்ளும். அடுத்தடுத்து இலக்கு வைத்து வாழ்வில் முன்னுக்கு வர சிந்திக்க அதிக வாய்ப்பு கிடைக்கும். நாம் நம் வழியில் நேர்மையோடு நடப்போம். நல்லதே நடக்கும். வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ சொன்னது…

அன்பின் குமார்..

தங்கள் மனம் அறியாததா!..பாலைவன வெளியின் மேலே ஓடும் மேகங்களைப் போல இதுவும் கடந்து போகும்..

நல்லபடியாக வீட்டினைக் கட்டி முடிப்பதற்கு இறைவனை வேண்டுகின்றேன்..

விரைவில் கிரகப்பிரவேசம்!..

நல்வாழ்த்துகள்!..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் தங்களின் வேலைப் பளு கஷ்டம் எல்லாம் புரிந்துகொள்ள முடிகின்றது. நல்லபெயர் எடுத்திருப்பதற்குப் பாராட்டுகள். தங்களின் கனவு வீடு வெகுசீக்கிரம் நிறைவேற வேண்டுகின்றோம். வாழ்த்துகள் குமார்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பணியில் சிரமங்கள்
பனிபோல் விலகட்டும்!

புது இல்லம்
விரைவில் மலரட்டும்!!

Yarlpavanan சொன்னது…

பணிச் சுமையிலும்
அருமையான பகிர்வைப் பகிரும்
தங்களைப் பாராட்டுகிறேன்!

http://www.ypvnpubs.com/

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வெளிநாட்டில் சுகமாக வாழ்ந்து நிறைய சம்பாதிக்கிறான் என்று பலரும் சொல்லுவார்கள். ஆனால் நிஜம் புரியாது. வேற்று நாட்டில் வேற்று மனிதர்களோடு போராடி ஜெயித்து காட்டுவது குடும்பத்தினருக்குத்தான். உங்களின் ஆதங்கமும் கோபமும் புரிகின்றது. விரைவில் வீடு கட்டி முடிக்க வாழ்த்துக்கள். என்னுடைய கணிணியும் மதர் போர்டு பிரச்சனையால் வேலை செய்ய வில்லை! மழை வெள்ளம் வேறு. நானும் இந்த இருபது நாட்களாலாக வேறு வலைப்பூக்கள் பக்கம் செல்லவில்லை! எழுதவும் தோணவில்லை! மீள்வோம்! வாழ்வோம்! நன்றி நண்பா!