மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 28 டிசம்பர், 2015குறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்?

முன்கதை


தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் மதுரையில் அவரது வாரிசுகள் வரை விசாரித்து இவளா... இவனா... அவனா... என மாற்றி மாற்றி சந்தேகித்து கொலையாளி டாக்டர் சிவராமந்தான் என முடிவுக்கு வந்து அவரை வரவைத்துக் கேட்க, உண்மையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இனி...

சிவராமன் தன் மனைவிக்கும் நண்பனுக்குமான உறவு குறித்து சொல்லிவிட்டு அழுததைப் பார்த்து மூவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர். அவர்கள் முகத்தைப் பார்த்தவர் தலைகுனிந்தபடியே மீண்டும் தொடர்ந்தார்.
“இவங்க பழக்கம் எனக்கு எப்படித் தெரிந்ததுன்னு நீங்க யோசிக்கலாம். லதாதான் எங்கிட்ட இதைச் சொன்னா... நான் நம்பலை... ஏன்னா எனக்கு என்னோட மனைவி மேல அம்புட்டு நம்பிக்கை அதனால அந்தப் பொண்ணை அடிக்கப் பொயிட்டேன்... உடனே அவ நான் சொல்றது பொய்யின்னா நாகராஜ் அண்ணங்கிட்ட கேளுங்கன்னு சொன்னா... அவனுக்கிட்ட கேட்டா பதில் சொல்லாம மழுப்பினான்... காரணம் தணிகாசலம் கொடுக்கிற சரக்கும் காசும் அவனை அவனுக்கு விசுவாசமா இருக்கச் சொன்னுச்சு... உண்மையைதெரிஞ்சிக்க அவனை நானும் பணத்தால அடிச்சேன்... எல்லாம் சொல்லிட்டான்... எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை.... பட் எனக்கு ரெண்டு பேரும் வேணும்... அதனால எதுவும் தெரிஞ்சது மாதிரி காட்டிக்காம இவனுக்கிட்ட என்னோட நட்பை தொடர்ந்தேன். என் மனைவிக்கிட்டயும் எதுவும் கேட்கலை. ஆனா லதாவும் வடிவேலும் மாறி மாறி தகவல் சொல்ல ஒரு கட்டத்துல என் மனைவிக்கிட்ட மனம் விட்டுப் பேசினேன்... கெஞ்சிப் பார்த்தேன்... அழுது பார்த்தேன்... ஆனா அவ திருந்தலை....”

“திருந்தலைங்கிறதுக்காக கொலை வரைக்கும் போவீங்களா?” என்றார் சுகுமாரன்.

“கொஞ்சம் பேச விடுங்க சார்” என்றபடி சிவராமன் தொடர, மூவரும் அமைதியாய் கேட்க ஆரம்பித்தனர்.

“சம்பவம் நடந்த அன்னைக்கு இரவு நான் ஒரு முக்கியமான ஆபரேசனுக்காக ஆஸ்பிடல்ல இருந்தேன்... இவன் எனக்குப் போன் பண்ணி இங்க வாறீயான்னு கேட்டான்...  இல்லை முடியாதுடான்னு சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல என் மனைவி போன் பண்ணி பிரண்ட் வீட்டுக்குப் போறேன் காலையிலதான் வருவேன்... நீங்க வந்து செக்யூரிட்டிக்கிட்ட சாவி வாங்கி வீட்டைத் திறந்து படுத்துக்கங்கன்னு சொன்னா... அவ பேச்சை நம்பினேன்... ஆனா அவ வந்தது இங்க... ஏன் சார் என்னைய நம்பிக்கை துரோகின்னு சொன்னீங்கதானே... இப்பச் சொல்லுங்க சார் நான் நம்பிக்கைத் துரோகியா இல்லை அவங்களா..?”  என்று சுகுமாரனைப் பார்த்துக் கேட்க, அவர் வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க, வருண்தான் “சாரி அங்கிள்” என்றான்.

“எதுக்குப்பா சாரி... நீ தப்புப் பண்ணலையே...” என்று சிரித்தவர் மீண்டும் பேச ஆரம்பித்தார். “ராத்திரி 10 மணிக்கு மேல இருக்கும் நாகராஜ் போன் பண்ணி சார் உங்க ஓய்ப் இங்க வந்திருக்காங்க... நீங்க வந்தா கையும் களவுமாப் பிடிக்கலாம்ன்னு சொன்னான்... அவனே நான் கேட்டைத் திறந்துதான் வச்சிருக்கேன்... மெயின் கதவு சாவி சன்னல்கிட்டதான் இருக்கும்... வந்ததும் எனக்கு மிஸ்டு கால் கொடுங்க... நான் ஐயாவோட அறைக்கதவைத் தட்டினா சந்தேகம் வராது அப்படின்னு சொன்னான். ஆனா எனக்கு அவங்க முன்னாடிப் போயி நிக்க மனசு வரலை... இவ்வளவு சொல்லியும் திருந்தாதவளை அங்கபோய் பார்த்து சத்தம் போட்டா அவனுக்கு முன்னால என்னைய நீ ஒண்ணத்துக்கும் ஆகாத ஆம்பளை அதனாலதான் நான் இப்படிப் பண்றேன்னு சொல்லிட்டான்னா... ரொம்ப யோசிச்சேன்... ஒண்ணும் தோணலை... என்னைப் பொறுத்தவரை என்னோட தொழிலை ரொம்ப மதிக்கிறவன்... அதனால ஆபரேசனை முடிச்சிட்டு எந்த முடிவாயிருந்தாலும் எடுக்கலாம்ன்னு ஆபரேசன் தியேட்டருக்குள்ள பொயிட்டேன். முடிச்சிட்டு வெளிய வந்தப்போ சூடா டீ கொடுத்தாங்க... அந்தச் சூழல்ல அது தேவையா இருந்துச்சு... எங்கயும் போகம அங்கே உக்காந்து இருந்துட்டு காலையில போகலாம்ன்னு முடிவு பண்ணினேன்...” பேச்சை நிறுத்தி தண்ணீர் பாட்டிலைப் பார்த்தவர் கொஞ்சம் படபடப்பாய் இருப்பது போல் தெரிந்தது.

“இருங்க அங்கிள் நான் தண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்...” என்று வருண் எழுந்திரிக்க, “என்ன வருண் உங்கப்பாவை கொன்னவரை அன்பா உபசரிக்கிறீங்க... உங்க இடத்துல நான் இருந்தா இந்நேரம் தூக்கிப் போட்டு...” பொன்னம்பலம் பேச்சை நிறுத்தி அவனைப் பார்க்க வருண் சிரித்தபடி, “இல்ல சார்... எனக்கு அங்கிளை நல்லாத் தெரியும்... எங்களுக்கு எல்லாமும் அவர்தான்... பட் சந்தர்ப்பச் சூழ்நிலை இப்படி நடந்திருக்கு... அப்பா பண்ணுனது பெரிய துரோகமில்லையா... அப்ப எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு... எனக்கு அங்கிள் மேல கோபமே வரலை சார்...” என்றபடி சென்றவன், சிறிது நேரத்தில் உள்ளே வந்து அவரிடம் தண்ணீரைக் கொடுத்தான். வாங்கிக் குடித்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

“அந்த நேரத்துல என் மனைவிக்கிட்ட இருந்து போன்... என்னடா இப்ப போன் வருதுன்னு பதட்டத்தோட எடுத்தேன்... எதிர்முனையில அவ அழுதுக்கிட்டே இங்க வரச்சொன்னா...அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிப் போய் கேட்டேன்... நாந்தான் அவரைக் கொன்னுட்டேன்னு அழுதுக்கிட்டே சொன்னா... எனக்கு உலகமே சுத்துற மாதிரி இருந்துச்சு... எப்படியோ நிதானித்து கார்ல போறது நல்லது இல்லையின்னு முடிவு பண்ணி ஆஸ்பத்ரிக்கு பக்கத்துல இருக்க ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ பிடிச்சு பக்கத்துத் தெரு முக்குல இறங்கி பதட்டத்தோட இங்க நடந்து வந்தேன். நாகராஜ் சொன்ன மாதிரி வெளிக்கேட்டை திறந்து வச்சிருந்தான். எனக்கு நாகரஜை கூப்பிட எண்ணமில்லை... இந்தக் கொலை என்னோட மனைவி பண்ணினதுன்னு அவனுக்கு தெரியக்கூடாதுன்னு நினைச்சேன். அதனால என் மனைவிக்குத்தான் மிஸ்டு கால் கொடுத்தேன். வேகமாக கதவைத் திறந்தவ என்னைப் பார்த்ததும் அழுதுக்கிட்டே எம்மேல சாஞ்சா... அவளைத் தேற்றி, உள்ளே போய் பெட்ரூம்ல பார்த்தா அங்க என் நண்பன் கத்திக் குத்து வாங்கி பிணமாக் கிடக்கான். அப்புறம் அவகிட்ட விசாரிச்சா... இவ என்னென்னமோ சொன்னா... எனக்கு அதெல்லாம் காரணம் இல்லைன்னு தோணுச்சு... அந்தச் சூழல்ல அதுக்கு மேல துருவித் துருவி கேட்க எண்ணமில்லை...  சரி விடுன்னு சொல்லிட்டு கையோட கொண்டு வந்திருந்த கிளவுசை மாட்டி எந்த ஒரு ஆதாரமும்  கிடைக்காத அளவுக்கு அவகிட்ட கேட்டுக்கேட்டு அவ கைபட்ட எல்லா இடத்தையும் சுத்தமாக்கிட்டு அவசரமா வெளியேறி அடுத்த தெருப்பக்கமாப் போயி அந்த நேரத்துல எங்கயோ சவாரி பொயிட்டு வந்த ஆட்டோவைப் பிடிச்சி வீட்டுக்குப் பொயிட்டேன்.”

“அப்ப நீங்க கொலை செய்யலை... கொலையாளி உங்க மனைவி... அவங்க கொன்னதற்கான காரணம் சொல்லலை... என்னங்க இது கேக்குறவன் கேனையன்னா கேப்பையில நெய் வடியிதுன்னு சொல்லுவாங்களாம்... எங்களைப் பார்த்தா கேனையன் மாதிரியாவா இருக்கு” பொன்னம்பலம் கோபமாய்க் கேட்டார்.

“நான் சொல்றது உண்மை சார்… அவ வீட்டுக்கு போனதும் புலம்பிக்கிட்டே இருந்தா… ரெண்டு பேருமே தூங்கலை... காலையில லோக்கல் டிவியில செய்தி வந்திருச்சு… அவ ரொம்ப படபடப்பா இருந்தா… அப்பத்தான் கையைப் பார்த்தது போல என்னோட மோதிரமும் அங்க மிஸ் ஆயிடுச்சுன்னு சொன்னா… எனக்கு ரொம்ப ஷாக்காயிடுச்சு… போலீஸ் வரலைன்னாக்கூட போய் தேடிப் பாக்கலாம்… இப்ப எப்படின்னு யோசிக்கும் போது நாகராஜ் போன் பண்ணினான்… அவனுக்கிட்ட என் மனைவி அங்கிருந்து இரவே வந்துட்டா… நான் வீட்டுக்கு வரும்போது வீட்ல இருந்தா… போலீஸ்கிட்ட இது விவரம் எதுவும் சொல்லாதே… உன்னை கவனிக்கிறேன்னு சொல்லிட்டு இங்க வந்தேன்… உங்களைப் பார்த்தேன்… உங்ககிட்ட கேட்டு உள்ள போயி பாடியைப் பாக்குறமாதிரி மோதிரத்தை தேடினேன் கிடைக்கலை… என் மனைவிக்கிட்ட எடுத்து அது எதுக்கு நமக்குன்னு தூக்கிப் போட்டுட்டதாச் சொல்லிட்டேன்…. அவளும் நம்பிட்டா… கொலை நடந்த மூணாவது நாள் அவ கொஞ்சம் நார்மலானா… வேற எங்கயாச்சும் போயிடலாம்ன்னு சொன்னா… சரியின்னு சொன்னவன் கொலைக்கான காரணத்தை மெதுவாக் கேட்டேன். அவ என்னோட நெஞ்சில சாஞ்சு அழுதுக்கிட்டேன் சொன்னா… நான் ரொம்ப உடைஞ்சிட்டேன்… அவனோட பிஸினஸூக்காக இவளை யூஸ் பண்ணியிருக்கான்… கண்டவன் கூடவும்… நானும் வருணோட அம்மாவும் சும்மாதான் சொன்னோம்… அப்பல்லாம் அவன் இப்படி இல்லை… அவனுக்கு இப்பத்தான் பிஸினஸ் வெறி… அதுக்காக என்னோட மனைவியை பயன்படுத்தி இருக்கான… இவளை பணத்தாலயும் நகையாலையும் மயக்கிப் போட்டு வச்சிருந்திருக்கான்… இந்தத்தடவை இவ எதிர்க்க, எல்லாத்தையும் வெளியில சொல்லிடுவேன்னு சொல்லி மிரட்டியிருக்கான்… ஆதாரமெல்லாம் இருக்கும்ன்னும் சொல்லியிருக்கான்… இன்னும் என்னென்னவோ சொல்லியிருக்கான் என்னால அதையெல்லாம் இப்பச் சொல்ல முடியாது ப்ளீஸ்… அதுக்கப்புறம் இவ சமாதானம் ஆன மாதிரி பேசி சிரிச்சு… அவன் தூங்குறதுக்கு முன்னாடி சாப்பிடுற அந்த தூக்க மருந்தை அளவுக்கு அதிகமாக் கொடுத்திருக்கா… குடி போதையில அவனும் குடிச்சிட்டு படுக்க, இவ பொறுமையா உக்காந்திருந்து குத்திட்டா… தைரியமா வெளியில போயிடலாம்ன்னு நினைச்சவ கொலை… ரத்தம்… தனிமை… இரவுன்னு பயந்து என்னைக் கூப்பிட்டுருக்கா…”

“ஓகே மிஸ்டர் சிவராமன்… உங்க மனைவி பண்ணின கொலைக்கு நீங்க உடந்தை… ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போடணும்… உங்க மனைவி இப்ப ஹாஸ்பிடல்லயில்ல… என்ன செய்யிறது…?” என்றார் சுகுமாரன்.

சிவராமன் சிரித்தபடி, “நான்தான் கொலை பண்ணினேன்னு சொல்லிடுறேன்னு புலம்புனவளை பாத்ரூம்ல தள்ளிவிட்டு தலையில அடிபட வச்சவனே நாந்தான் சார்… அவ இப்ப மரணத்தோட வாசல்ல… என்னோட கணக்குப்படி நாளைக்காலையில விடியும் போது அவ உயிரோட இருக்கமாட்டா…”

“அடப்பாவி… நீ என்னய்யா மனுசன்...” பொன்னம்பலம் சொல்ல, “என்ன அங்கிள் இப்படிப் பண்ணீட்டிங்க…?” என்றான் வருண்.

“மன்னிச்சிடு வருண்… சார்… என்னைய கைது பண்றீங்களா..? நாங்க பண்ணுன தப்புக்கான முடிவை நானே எடுத்துட்டுத்தானே வந்திருக்கேன்…” என்று சிரித்தார் சிவராமன்.

“வாட்?” சுகுமாரன் கேள்விக்குறியோடு பார்த்தார்.

“எஸ் இன்ஸ்பெக்டர்… தப்புப் பண்ணுனவன் தண்டனை அனுபவிக்கணும்…. ஐ ஆம் எ டாக்டர்… சொசைட்டியில பெரிய மனுசன்… ஆனா பொண்டாட்டியோட தவறான நடத்தையால, நண்பனோட நம்பிக்கை துரோகத்தால இன்னைக்கு இந்த நிலமையில வந்து நிக்கிறேன்… என் மனைவி இறந்துருவா… அதுக்கப்புறம் எனக்கு ஜெயில், கோர்ட், தீர்ப்புன்னு அலைய மனசில்லை… அவளுக்கு அப்புறம் நான் யாருக்காக வாழணும் சொல்லுங்க… அதனால எனக்கு நானே தீர்ப்பு எழுதிக்கிட்டேன்…”

“என்ன சொல்றீங்க அங்கிள்?” வருண் பதட்டமாய்க் கேட்டான்.

“எஸ் வருண்… நான் டாக்டர்…. எதைச் சாப்பிட்டா நம்மளை மெதுவாக் கொல்லும்ன்னு தெரியும்… அந்த மாதிரி ஒரு மருந்தை வரும்போது குடிச்சிட்டுத்தான் வந்தேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கத்துக்குப் போயிருவேன்… என்னைக் காப்பாத்தணும்ன்னு நினைக்காதீங்க… அது வேண்டாம்… இனி அது உங்களால முடியாது... சோ எனக்காக ஒண்ணே ஒண்ணு செய்யிங்க… நான் மயங்குறதுக்குள்ள என்னோட ஹாஸ்பிடல் கூட்டிக்கிட்டுப் போங்க... ப்ளீஸ் வருண்… என்னை என் மனைவிக்கிட்ட கூட்டிக்கிட்டுப் போ… அவ பக்கத்துலதான் என்னோட உயிர் போகணும்… அவன்னா எனக்கு உயிர் தெரியுமா…? எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சி நீதான் கொள்ளி வைக்கணும்… ஏன்னா நீ என்னோட மகன் மாதிரி… ஜ லவ் யூ சோ மச் மைடியர் சன்… நாங்கதான் உங்கப்பாவை கொன்னோம்ன்னு தர்ஷிகாவுக்கு தெரிய வேண்டாம் ப்ளீஸ்… அந்தக் குழந்தைக்கு கடவுள் துணை இருக்கட்டும்...” என்ற சிவராமனின் கைகளை கண்ணீரோடு பற்றிக் கொண்டான் வருண்.

சுகுமாரன் ஒன்றும் பேசாமல் பொன்னம்பலத்தைப் பார்க்க, அவரோ சிவராமனுக்காக வருத்தப்பட்டபடி 'முதல்ல அந்த மோதிரத்தை கொண்டு போயி ஏதாவது கோயில் உண்டியல்ல போடணும்' என்று நினைத்துக் கொண்டார்.
-சுபம்’

(தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லி எனது எழுத்தை ஊக்குவித்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றி.... முடிவு குறித்து தங்கள் கருத்தில் நிறை குறை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள்... முதல் க்ரைம் தொடர்... உங்கள் கருத்துக்கள் என்னை திருத்திக் கொள்ள உதவும்.... நன்றி)

-‘பரிவை’ சே.குமார்.

15 கருத்துகள்:

 1. வணக்கம்
  நன்றாக உள்ளது கதை. அனைத்தையும் மின்நூலாக தொகுத்தால் நல்லது த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன்...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
   மின்னூலாக்க முயற்சிக்கிறேன்...
   புத்தகம் ஆக்கும் எண்ணமும் இருக்கிறது.

   நீக்கு
 2. நடுவில் சில பகுதிகளைப் படிக்க முடியாத சூழல். இன்று வந்து கதையின் முடிவினைத் தெரிந்து கொண்டேன்.

  சிறப்பான கதை. தொடர்ந்து எழுதுங்கள்...

  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. அருமையான முடிவு குமார்! நிஜமாகவே எதிர்பார்க்காத திருப்பங்களோடு கதையை கொண்டு போய் இது முதல் கிரைம் கதை என உணர முடியாதவாறு லாவக்மாய் திடுக் திடுக் திருப்பங்கள் வைத்து கதைய கொண்டு சென்று முடித்தும் விட்டீர்கள்.


  எதிர்பாராத முடிவு தான். கிரைம் கதைக்கும் அவசியமானதும் தான். இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் குமார்.பாராட்டுக்கள் குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அக்கா...
   முடிவு குறித்து தங்கள் கருத்துக்கு நன்றி...
   இன்னுமா? க்ரைம் கதையா...?
   ஆஹா.... முயற்சிப்போம் அக்கா...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 4. அருமை நண்பரே எதிர்பாராத முடிவை வித்தியாசமாக கொடுத்து இருக்கின்றீர்கள் வாழ்த்துகள் தொடருங்கள் இந்த மா3யான க்ரைம்
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா....
   தொடரவா...? அதுசரி... இன்னும் முழிக்கணுமா...

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

   நீக்கு
 5. ம்ம் டாக்டர் கொலை செய்யலைனு தெரிஞ்சு போச்சு போன பதிவுல...அப்போ அவரது மனைவிதான்னு நினைச்சோம் ஆனா அவங்களை மரணத்துக்குத் தள்ளிட்டு தன்னையும் தற்கொலை செஞ்சுக்கறத எதிர்பார்க்கவில்லை...ம்ம் பாவம் டாக்டர்......தன்மானம் ஸ்டேட்டஸ் ...சுபம்!

  வாழ்த்துகள் குமார்! உங்கள் முதல் முயற்சிக்கு! - சஸ்பென்ஸ் கதைக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசி சார்...

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

   நீக்கு
 6. பல கோணங்களில் திருப்பங்களுடன் சென்று,
  எதிர்பாரா முடிவுடன் முடிவடைந்தது
  தொடர்கதை!
  விறுவிறுப்புடன் கொண்டு சென்றமைக்காக
  வாழ்த்துகள் சே. கு. சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நிஜாம்...

   சே.கு.... ம்... கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூப்பிட்ட பெயர்.
   மீண்டும் நினைவுகளை மீட்டெடுக்க வைத்தது.

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

   நீக்கு
 7. கடைசி அத்தியாயங்கள் சிலவற்றை மட்டுமே படித்தேன். நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டும். நல்ல கதை.
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க செந்தில் சார்...
   படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க...
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 8. ஆ கண்டுபிடிச்சிட்டேன்..

  முடிவு கரெக்ட் தான் சகோ,இருந்தாலும் மனசு கனக்கிறது...

  இதுபோல் அடிக்கடி தொடர்கதை எழுதவும்,உங்க எழுத்துநடையில் இப்போ நிறைய முன்னேற்றம்..நிச்சயம் பெரிய எழுத்தாளரா வந்து உங்களால் சாதிக்க முடியும் சகோ,மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...