மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 3 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது: மழையின் கோரத்தாண்டவம்

ழையின் கோரத் தாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறது நம் சிங்காரச் சென்னை. முகநூலிலும் செய்திகளிலும் தவிக்கும் நம் மக்களைப் பார்க்கும் போது மனசு வலிக்கிறது. கிராமங்களில் எல்லாம் மழை நீர் ஓடிச் சென்று சேமிக்கப்படுவதற்கு ஊரணிகளும் கண்மாய்களும் இருப்பது போல் சென்னையில் இருந்த ஏரிகளும் குளங்களும் எங்கே போனது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஏரிகளில் வீடு கட்டியதால்தான் தண்ணீரில் மிதக்கிறார்கள் என்பதை இனி சொல்லி என்னாகப் போகுது. தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களைப் பார்த்து இப்போது ஓரு சில அறிவு ஜீவிகள் கேட்கும் இந்த கேள்வி சென்னைக்கு மட்டுமானது அல்ல ஒட்டுமொத்த தமிழகமே ஏரிகளையும் குளங்களையும் இழந்துதான் நிற்கிறது. வருத்தத்தில் இருக்கும் உறவுகளின் நெஞ்சங்களில் வேலைப் பாய்ச்சாதீர்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட ஈரநெஞ்சம் கொண்ட தமிழர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக முகநூல், டுவீட்டரில் எல்லாம் நண்பர்கள் எங்கே பிரச்சினை, யாரை அணுக வேண்டும் என்றெல்லாம் இரவு பகல் பாராது பகிர்ந்து வருகிறார்கள். தங்கள் உயிரையும் துச்சமென மதித்து வெள்ளத்திற்குள் நீந்தி பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி வரும் தமிழ் இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். எல்லாரிடமும் மனிதம் இருக்கிறது... மதம், ஜாதி என்ற போர்வைதான் அதை மறைத்து வைத்திருக்கிறது, இப்போது அந்தப் போர்வையை மழை வெள்ளத்தோடு அனுப்பிவிட்டு மனிதத்தை மலரச் செய்திருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். மழையில் மலர்ந்த மனிதம் மரிக்காது இருக்கட்டும்... ஜாதி, மத போர்வை தண்ணீரோடு போகட்டும்.


ஜாக்கி அண்ணா மழை நேரத்தில் உதவியதை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். விடாது கொட்டும் மழையில் வண்டியில் போய் உதவி செய்வது என்பது பெரிய விஷயம்தான். ஸ்டார்ட் ஆகாத டிவிஎஸ் 50ஐ தள்ளிக் கொண்டு வந்த ஒரு பையனும் அவனது அம்மாவும் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காது அந்த மழையில் மவுண்ட்ரோடு எப்படி போகணும் என்று திரும்பத் திரும்ப கேட்டதைச் சொல்லி வருந்தியிருந்தார். மேலும் மழை வெள்ளத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒரு இளம்பெண்ணிடம் உனக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் கேள்... இப்போ பஸ் வராது என்று சொல்லியும் பஸ் வந்திரும் என்று சொல்லி அவரிடம்  உதவி கேட்க மறுத்திருக்கிறார். மழை நேரம்... ஏன் மறுக்க வேண்டும்... என்ன பட்டாலும் நாம திருந்தப் போவதில்லை என்றெல்லாம் கருத்துக்கள் வந்தாலும் அந்த நேரத்தில் அந்தப் பெண் யோசித்தது தவறென்றாலும் இன்றைய சூழல், மழை நேரம் எல்லாம் யோசித்து அந்தப் பெண் மறுத்திருக்கிறாள். ஜாக்கி அண்ணாவும் சரியென அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.

சென்னை முகப்பேரில் இருக்கும் சகோதரன் (சித்தி பையன்) மற்றும் பத்திரிக்கை நடத்தும் சகோதரி ஆகியோருடன் பேசினேன். நலமாக இருப்பதாகச் சொன்னார்கள். அதுவும் சகோதரனுக்கு பத்திரிக்கையில் பணி, அடாது மழையிலும் பணிக்கு வந்திருந்தான். வீட்டிற்கு முன்னே தண்ணீர் நிற்பதாகவும் இப்போது உள்ளுக்குள் வரவாய்ப்பில்லை என்றும் ஏரி உடைந்தால் வீட்டுக்குள் தண்ணீர் புகலாம் என்றும் சொன்னான். நம் உறவுகளிடம் பத்திரமாக இருங்கள் என்று சொன்னாலும் தண்ணீருக்குள் தவிக்கும் லட்சோப லட்சம் மக்களுக்காக மனசு வேண்டிக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில நண்பர்களுக்கு போன் போகவில்லை. சித்தப்பா மகன் தம்பி சரவணனுக்கு லைன் கிடைக்கவில்லை. மனைவியை பேசச் சொல்லி நலமாய் இருப்பதாய் அறிந்தேன்.


எல்லாம் இழந்து தவிக்கும் மக்க்ளின் நிலையைப் பற்றி யோசிக்காமல் தொலைக்காட்சிகள் மக்களின் முதல்வர் ஆணைப்படி என்றும் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்லிக்கொண்டு பேசுவதைப் பார்க்கும் போது செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. உதவிக்கரம் நீட்ட நம் மக்கள் எல்லாம் மழையிலும் வெள்ளத்திலும் கிடக்கும் போது சொகுசாய் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அரசியல் நடத்தும் மந்திரிகளை என்னவென்று சொல்வது..?  மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய மேயரும், மந்திரியும் பேசாமல் ஓடுவதை தொலைக்காட்சிகள் காட்டும் போது கேவலமாய் இருக்கிறது. அதைவிடக் கேவலம் அரசு அதிகாரிகள் எல்லாம் பேசுவதற்கு முன்னர் அம்மாவின் ஆணைப்படி என்று அரம்பிப்பது.... அப்படி பேச ஆரம்பிக்கும் போது ஏன்டா நாய்களா... அங்க அவனவன் சாப்பாட்டுக்கு வழி இன்றி தண்ணியில சிக்கித் தவிக்கும் போது என்னடா உங்களுக்கு அம்மா புகழ் பாட வேண்டியிருக்குன்னு தூக்கிப் போட்டு மிதிக்கணும்ன்னு தோணுது...

அம்மாவோட ஆட்சியில மலட்டாறுல கூட தண்ணி பெருக்கெடுத்து ஓடுதுன்னு இன்னோவா வாங்கின இளிச்சவாயன் சொல்றான். அரசாங்கம் சரியில்லைன்னு எதிர்க்கட்சி பேட்டி கொடுக்கிறான்... இவனுக அரசியல் பண்ண இதுவா நேரம்..? ரெண்டு நாளாத் தவிக்கிறானுங்க... அரசாங்கம் ஒண்ணுமே செய்யலைன்னு புலம்பிக்கிட்டு நிக்காம நம்ம மக்கள் உதவிக்கரம் நீட்டிக் கொண்டே இருப்பது பாராட்டுக்குரியது. இன்றுதான் அம்மாவும் பிரதமரும் ஹெலிகாப்டரில் அமர்ந்து பார்க்கிறார்களாம். என்ன பார்த்து என்ன செய்வது..? பாதிக்கப்பட்ட.... பாதித்த மக்களுக்கு ஒரு அரசு துரித கதியில் நடவடிக்கை எடுத்து பாதுகாக்க வேண்டாமா?

நாம் இன்னும் சினிமாக்காரனுக பின்னாடித்தான் திரியிறோம்... மீடியாக்கள் அவனுக காலைக் கழுவுவதிலேயே குறியாய் இருக்கின்றன. ரஜினியும் விஜய்யும் திருமண மண்டபங்களைத் திறந்துவிட்டதை பெரிதாக பேசுகிறார்கள். ஆனால் எத்தனை பேர் என் வீட்டில் ரெண்டு குடும்பம் தங்கலாம்... மூனு குடும்பம் தங்கலாம்... எங்கள் பேக்டரியில் தங்கிக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லி உதவிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். வெளியில் தெரியாமல் உதவி செய்யும் நண்பர்கள், உறவுகள் மத்தியில் சினிமா ஜிகினாவின் செயல்கள்தான் முன்னுக்கு நிற்கின்றன. மழை விட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியதும் அம்மாவின் ஆணைப்படி மழை விட்டுவிட்டது என்றும் ரஜினியும் விஜய்யும் மண்டபங்களைக் திறந்து விட்டதால் மக்கள் பாதுகாப்பாய் இருந்தார்கள் என்றும் மீடியாக்கள் செய்தி வெளியிட்டாலும் ஆச்சர்யமில்லை.


தெலுங்கு நடிகர்கள் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்... அதை வரவேற்ப்போம்... அல்லு அர்ஜூன் மக்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறார். அவர் பிரபலம் என்றதும் மீடியாக்கள் அவரைப் பேட்டி எடுக்க பின்னால் நாய் போல் அலைந்திருக்கின்றன... ஆனால் அவர் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்காது தன்னாலான உதவிகளை செய்ய விரைந்திருக்கிறார். மீடியாக்களே உதவும் மனிதர்களை உங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக தொந்தரவு செய்யாதீர்கள்.  உங்களுக்கு தேவை டி.ஆர்.பி. ரேட்டிங்கும் தேர்தலுக்கான போட்டா போட்டியும்... ஆனால் எங்களுக்கோ மனித நேயமும்... மனிதமும்தான் இப்போதைய தேவை. அதை எங்கள் மக்கள் எல்லாரும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து உங்கள் போலிப் பிரச்சாரங்களை நிறுத்துங்கள். அம்மாவின் ஆணைப்படி... அதிக சேதமில்லை.... மழை நீர் வீதிகளில் ஓடவில்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிலையங்களை எல்லாம் மழை வாயடைத்து வைத்திருக்கிறது... அதற்கு ஒரு சபாஷ் போடலாம்.

சென்னை உறவுகளே... மழை விட்டு விட்டது என்றாலும் பாதுகாப்பாய் இருங்கள்... அரசையும் அரசாங்கத்தையும் எதிர்பார்த்து இருப்பது என்பதும் நம்மைப் பொறுத்தவரை திருமணத்திற்கு வரச்சொல்லி வளைகாப்புக்கு வந்த கதைதான். இவர்கள் எல்லாம் அரசியல் செய்ய மட்டுமே பிறந்தவர்கள்... அரவணைக்க அல்ல என்பதை வெட்ட வெளிச்சமாக்கிய மழைக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். இந்த மழை வெள்ளத்திலும் சாக்கடைக் கால்வாய்களில் அடைத்திருக்கும் பாலிதீன் கவர்களை எடுத்து சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழையர்கள், மழையிலும் தங்கள் கடமையைச் செய்த காவலர்கள், வெள்ளத்தினூடே பேருந்தை இயக்கிய டிரைவர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்களே... அவர்களின் சேவையைப் பாராட்டுவோம்.


குடந்தையூர் சரவணன் அண்ணாவிடம் அவ்வப்போது முகநூல் அரட்டையில் தொடர்பு கொண்டு பேசினேன். பொன்வாசுதேவன் அண்ணா, கார்த்திக், நாடோடி இலக்கியன், ஜாக்கி அண்ணா, மணிஜி அண்ணா, கே.ஆர்.பி. செந்தில் அண்ணா, ஆவி என உறவுகளின் முகப்புத்தக கருத்துக்களால் அவர்கள் எல்லாம் நலமுடன் இருப்பது குறித்து சந்தோஷம். கணேஷ்பாலா அண்ணா, ஸ்ரீராம் அண்ணா, சென்னை பித்தன் ஐயா மற்றும் நம் சென்னை வலைப்பூ நண்பர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக சில நண்பர்கள் முகநூலில் சொல்லியிருந்தார்கள். மகிழ்ச்சி... உறவுகளே பத்திரமாக இருங்கள்.

கரண்ட் பிரச்சினை வந்தபோது கூட சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன்தான் பார்த்தார்கள். அதெல்லாம் இப்போது  ஒரு சிலர் பதிவாக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அரசும் அரசியல்வாதிகளும் பேசிய பேச்சுக்களால் பாதிக்கப்பட்ட நம் மக்களை வேதனைக்கு ஆட்படுத்துவது என்ன நியாயம்? அதேபோல் இப்போது கடலூரில் அதிக பாதிப்புக்கள் இருக்கும் போது சென்னையை மட்டுமே மையப்படுத்தி வேலைகள் செய்வது சரியா...? கடலூரையும் பாருங்கள்... அதுவும் தமிழகத்தில்தானே இருக்கு... பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் நம் மக்களே... இங்கு அரசியல் வேண்டாம்... எல்லாரையும் காப்பாற்றுங்கள்... எல்லோருக்கும் உதவுங்கள்...


இந்த அரசும் அரசியல்வாதிகளும் நம்மை காசை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் சவங்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். காசு கொடுத்தால் போதும் என்பதாலேயே இவ்வளவு மழையிலும் நம்மைப் பற்றி சிந்திக்கவேயில்லை. இனி வரும் காலங்களில் பணத்துக்கு மசியாமல் நமது ஓட்டுக்களை நல்லவர்களுக்கு போடுவோம்.

சரி அரசியல் எதற்கு நமக்கு... நமக்கு இப்போதைய தேவை நம்மளது பாதுகாப்பு, உறவுகளே பாதுகாப்பாய் இருங்கள்... பத்திரமாய் இருங்கள்...

-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்து இடங்களிலும் நிலைமை சீரடைய ஆண்டவனை வேண்டுகிறேன்...

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

உருக்கமான பதிவு. சென்னையில் உள்ள யாரிடமும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

ஊமைக்கனவுகள் சொன்னது…

நம் உறவுகளின் பாதிப்பு பெரிது.
உதவும் கரங்களில் என்னுடையது முதலாவதாக இருக்க வேண்டும்.
இருக்கும்.

தொடர்கிறேன்.
த ம +
நன்றி

வெங்கட் நாகராஜ் சொன்னது…

களப்பணி செய்ய வேண்டிய நேரமிது. தமிழகத்தின் பல பகுதிகளில் சூழ்ந்திருக்கும் மழை வெள்ளம் வடிந்து அனைவரும் உடல் நலத்தோடு இருக்க வேண்டும்.... தமிழகத்திலிருந்து வெளியே இருந்தாலும் ஊடகங்கள் மூலம் பார்க்கும்போதே மனது பதறுகிறது.

எனது பிரார்த்தனைகளும்...

துரை செல்வராஜூ சொன்னது…

மனம் கலங்குகின்றது..
பேரிடரிலிருந்து மக்கள் விரைவில் மீண்டெழுந்து - நலம் பெறவேண்டும்..

சாரதா சமையல் சொன்னது…

சென்னை நகர மக்களுக்காக கடவுளை பிரார்த்தனை செய்வோம்.

KILLERGEE Devakottai சொன்னது…

இதிலும் அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுவது வருந்ததக்கது..
தமிழ் மணம் 6

கோமதி அரசு சொன்னது…

//மழை வெள்ளத்திலும் சாக்கடைக் கால்வாய்களில் அடைத்திருக்கும் பாலிதீன் கவர்களை எடுத்து சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், மழையிலும் தங்கள் கடமையைச் செய்த காவலர்கள், வெள்ளத்தினூடே பேருந்தை இயக்கிய டிரைவர்கள் என அனைவரும் பாராட்டுக்குரியவர்களே... அவர்களின் சேவையைப் பாராட்டுவோம்//.

நீங்கள் சொல்வது போல் இவர்கள் வணக்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் சேவையை பாராட்ட வேண்டும்.
தன்னலம் கருதாமல் உதவிகரம் நீட்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

துன்பத்தில் இருந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு வர இறைவனை பிராத்திப்போம் த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சென்னையை விட கடலூர் இன்னும் அடிவாங்கியுள்ளது. எல்லோருக்குமே பாமரனுக்குக் கூட தெரியும் ஒவ்வொரு புயலிலும் மழையுலும் கடலூர் அடிவாங்குகின்றது என்று அப்படி இருக்கும் போது நமது ஆட்சியாளர்கள் ஏனோ அதை ஆலோசித்து, இயற்கைச் சீற்றத்திலிருந்து பாதுகாக்க, சாதாரண நாட்களில் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை கடலூரைக் குறித்து.

உதவிக்கரம் நீட்ட நம் மக்கள் எல்லாம் மழையிலும் வெள்ளத்திலும் கிடக்கும் போது சொகுசாய் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அரசியல் நடத்தும் மந்திரிகளை என்னவென்று சொல்வது..? // இதைக் குறித்துதான் எங்கள் பதிவு மாண்புமிகுதலைவர்களுக்கு ஒரு கடிதம் பதிவில் நையாண்டியிருந்தோம்...

சேவை சேய்த பாமர எளிய மக்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
உண்மைதான் ஐயா...
நானும் நிறைய முயற்சித்து சிலரை மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
சந்தோஷம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
எனக்கும் அப்படித்தான்... ரொம்ப கஷ்டமாக இருந்தது...
கவலையோடு முகநூலில் செய்திகளை பரிமாறிக் கொண்டிருந்தேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
அதற்குத்தானே ஆசைப்படுகிறார்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...
நாம் தன்னலம் கருதாது உதவிய, உதவிக் கொண்டிருக்கிற எல்லாரையும் வாழ்த்துவோம் வணங்குவோம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
நானும் வாசித்தேன்.. அருமை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.