மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 17 ஜூலை, 2014

நண்பேன்டா : கரு.முருகன்

ண்பேன்டா எழுதி ரொம்ப நாளாச்சி... நான் எழுதிய வரிசையில் இன்னும் சிலர் பாக்கி இருக்கிறார்கள். அதற்குள் இன்று இவனைப் பற்றி எழுதினால் சிறப்பு என்பதால் முருகனைப் பற்றி எழுதுகிறேன். இவனைப் பற்றி நிறையப் பதிவுகளில் பேசி இருக்கிறேன்.


கரு.முருகன்... இன்று பேராசிரியர் கரு.முருகன், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி தமிழ்த் துறையில் பணிபுரிகிறான். நாங்கள் இருவரும் பால்ய கால நண்பர்கள் அல்ல. ஒரே பள்ளியில் படித்திருந்தாலும் எங்களுக்குள் எந்த ஒரு உறவும் இல்லை. கல்லூரிக்குச் சென்றதும் எங்களுக்குள் நட்பு மலர்ந்தது.

அவன் படித்தது தமிழ், எங்கள் கல்லூரியில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களை இரண்டு அல்லது மூன்று வகுப்பு மாணவர்களை ஒன்றாக வைத்து நடத்துவார்கள். அப்படி எங்கள் வகுப்புடன் தமிழ் மாணவர்களையும் இணைக்க எங்கள் நட்பு இறுக்கமானது. இருவருக்குள்ளும் நட்பு என்பது இறுக்கமானதும் எல்லோரும் கேட்ட கேள்வி ரெண்டு பேருக்கும் எப்படிடா ஒத்துப் போகுது அப்படின்னுதான்.... காரணம் அவனுக்கு பேசிக்கிட்டே இருக்கணும்... எனக்கு பேசாமல் இருக்கணும்...

முருகன் கதை, கவிதை நல்லா எழுதுவான். நாம அப்பல்லாம் எதுவும் எழுதுவதில்லை... அவனைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும்... எப்படிடா இதெல்லாம் எழுதுறே என கேட்டால் அப்படித்தான் எனச் சிரிப்பான். நாங்கள் இருவரும் ஒன்றாகச் சென்றாலும் நான் எனது நண்பர்களுடன் கலக்க, அவன் கொஞ்சம் நேரம் கடலை போட்டுட்டு வந்தால்தான் அன்றைய பிரிவேளைகள் அவனுக்கு சந்தோஷ வேளைகளாக அமையும்.

கல்லூரியில் முருகனும் நானும் எங்களின் நண்பர்களான சுபஸ்ரீ, அம்பேத்கார், இளையராஜா, பிரபாகர் ஆகியோருடன் இணைந்து மனசு என்ற கையெழுத்துப் பிரதி நடத்தினோம். அதற்காக நிறைய மெனக்கெடல்கள்... கல்லூரி நூலகம், துறைகள், தேவகோட்டை பொது நூலகம் என எல்லா இடத்திலும் பத்திரிக்கையை கொண்டு சென்றோம். அப்போது கவி'தா', ரோஜா மற்றும் இன்னும் சில பத்திரிக்கைகள் என போட்டி இருந்தாலும் ஆசிரியர்கள் மத்தியில் எங்கள் மனசுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தினமும் கல்லூரி முடிந்ததும்  நாங்கள் சங்கமிக்கும் இடம் எங்கள் கல்வித் தந்தை பேராசிரியர், முனைவர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள் இல்லத்தில்தான்... ஐயாவின் மகன், மகள், அன்பு அண்ணன், தமிழ்க்குமரன், பார்த்தீபன், கனிமொழி, சுபஸ்ரீ, முருகன், நான் என அங்கும் ஒரு கூட்டம் சேரும்.  நாங்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாலும் இவன் மட்டும் ஐயாவுடன் எதாவது விவாதத்தில் இருப்பான். கல்லூரி நாட்களில் எங்களது பெரும்பாலான பொழுதுகள் ஐயா வீட்டில் அம்மாவின் சாப்பாட்டோடு கழிந்தன.

கல்லூரியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என்றால் முதல் பெயர் இவனது பெயராகத்தான் இருக்கும்... கலந்து கொள்வான்... பரிசை வென்று வருவான்... கல்லூரியில் நண்பர் பரக்கத் அலி ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்து அதில் தேர்வு செய்யப்பட்ட கதைகளை 'பல்லக்கில் ஏறும் பட்டங்கள்' என்ற தலைப்பில் தொகுப்பாகக் கொண்டு வந்தார். அதில் இவனது கதையும் பரிசுக்குறிய கதையாக தேர்வாகி வெளியாகி இருந்தது. என்னையும் முதன் முதலில் கதை எழுத வைத்த பெருமை இவனையும் ஐயாவையுமே சேரும். ஐயா வீட்டில் இருந்து கிளம்பும் போது தினமும் எங்களுடன் ஐயாவும் கிளம்புவார். அவருடன் பேசியபடி நடந்து வருவது என்பது எங்கள் இருவருக்கும் மிகப்பிடித்தமான விஷயம். நிறைய கதைகள், செய்திகள் சொல்லுவார். இரண்டு நாட்கள் நாங்கள் போகவில்லை என்றால் என்ன ரெண்டு பேரையும் வீட்டுப் பக்கம் காணோம்? என்று கல்லூரியில் பார்த்துக் கேட்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

கல்லூரி நாட்களில் தாமரை, செம்மலர், சுபமங்களா போன்ற புத்தகங்களின் ஏஜெண்டாக முருகன் இருந்தான். புத்தகம் ஐயா வீட்டுக்குத்தான் வரும். மாலை கல்லூரி முடிந்ததும் அவற்றை சைக்கிளில் எடுத்துக் கொண்டு கலை இலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் அனைவரின் வீட்டுக்கும் சென்று போட்டு வருவோம். தேவகோட்டையில் கடைக்கோடியில் இருக்கும் அருள்சாமி ஐயா வீடு, எப்போதும் பாசமாக இருக்கும் சவரிமுத்து ஐயா வீடு என எல்லா இடத்திலும் காபியோ பலகாரமோ கிடைக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அவன் பி.எட் பண்ணினான். பின்னர் காலத்தில் போக்கால் சில பல விஷயங்கள் அவன் வாழ்வில் நடந்தேற எல்லாம் துறந்து சிங்கப்பூர் சென்றான். அங்கு சில காலம்...  அப்போதெல்லாம் எப்பவாவது அவனது வீட்டுக்குப் போனால் அம்மா 'தம்பி உனக்கிட்ட பேசணும்ன்னு சொன்னான்ய்யா... சத்த இரு... பேசிட்டுப் போகலாம்...' என்று சொல்வார்கள். அப்போது எங்கள் இருவர் வீட்டிலும் போன் இல்லை... அருகில் இருக்கும் தீயணைப்புத் துறை அலுவலகத்துக்குத்தான் கூப்பிடுவான். கொஞ்ச நேரம் அவனுடன் பேசிவிட்டு வருவேன்.

சிங்கப்பூருக்கு குட்பை சொல்லிவிட்டு வந்தான்... ஊரில் பெண் பார்த்து குன்றக்குடி அடிகளார் தலைமையில் திருமணம்... திருமணத்தன்று மொய் எழுதியது நானும் சில நண்பர்களுமே... நண்பர்கள் பணம் கேட்ட அவனது உறவுகளுக்கு கொடுத்ததை குறித்து வைக்க மறக்க கடைசியில் எண்ணும் போது சில ஆயிரம் குறைந்தது. அதை அவனிடம் சொல்ல சரி எதாயிருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கலாம் என்றான். அப்படி வீட்டுக்குப் போனதும் விபரம் தெரிந்த வீட்டுப் பெருசுகள் அதெப்படி இவ்வளவு பணம் குறையும் என கேள்விகள் கேட்க, இதுல கேள்வி கேட்க என்ன இருக்கு... செலவழிச்சது நாந்தானே... உங்க காசு இல்லையே... என்று சத்தம் போட்டு விட்டு டேய் தூக்கி மேல போடு அப்புறம் பாத்துப்போம் என்றான். அப்புறம் அந்தக் கணக்கை நாங்கள் பார்க்கவேயில்லை.

இருவரும் ஒன்றாக கணிப்பொறி மையம் ஆரம்பித்தது... நாங்கள் படித்த கல்லூரியில் தற்காலிகமாக இருவரும் கணிப்பொறித்துறையில் பணியாற்றியது... என காலங்கள் ஓட, சில பல காரணங்களால் எங்கள் உறவுக்குள் விரிசல் வந்தது. எப்படிப்பட்ட நட்பா இருந்தாலும் எதோ ஒரு காரணம் பிரிவைக் கொண்டு வருங்கிறதை சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாமலையில பாக்கலை... அப்படி ஒரு பிரிவு... ரோட்டில் சந்தித்தால் சின்னச் சிரிப்பு... என்ன நல்லாயிருக்கியா? அம்புட்டுத்தான்... அது கொஞ்சக் காலம் ஓடிச்சி...

அப்புறம் எங்களுக்குள் மீண்டும் சச்சரவுகள் நீங்கிய உறவு மலர்ந்தது... அவனும் எம்.ஏ., எம்.பில் பண்ணி முனைவர் பட்டம் பெற்று இன்று கல்லூரி தமிழ்த்துறையில் பேராசிரியராக இருக்கிறான். இரண்டு மூன்று புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறான். அன்பான குடும்பம் அவனுக்குக் கிடைத்த வரம்.... இன்று வீடு, கார் என செட்டிலாகிவிட்டான்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகால நட்பு... கல்லூரி முதலாமாண்டில் தொடங்கி இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது... இடையில் சில பிணக்குகள்... எல்லாம் மறைந்து இப்போ சந்தோஷ நட்பாய்... என்ன ஒண்ணு எங்காவது போக வேண்டும் என்றால் சொன்ன நேரத்துக்கு வரும் கலையை அவன் இன்னும் கற்கவில்லை... எட்டு மணி என்றால் இந்தாக் கிளம்பிட்டேன் என ஒன்பது மணிதான்...

சரி... என்ன விஷேசம்ன்னு சொல்லவேயில்லையில்ல... இன்று மாலை தேவகோட்டை ரோட்டரி சங்கத்தின் 2014-2015ஆம் ஆண்டுக்கான தலைவராக பொறுப்பேற்க உள்ளான். இன்று நடக்கும் விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிலையை அடைய அவனது பேச்சுத் திறமையும்... உழைப்பும்தான் காரணம்... இந்த ஒராண்டு கால தலைவர் பணியில் அவனது முயற்சிகளும்... செயல்களும் வெற்றி பெற வாழ்த்துவோம்.

வாழ்த்துக்கள் நண்பா...

-நண்பேன்டா இன்னும் வரும்.
-'பரிவை' சே.குமார்.

14 எண்ணங்கள்:

கவிதை வானம் சொன்னது…

அவனுக்கு பேசிக்கிட்டே இருக்கணும்... எனக்கு பேசாமல் இருக்கணும்...
உளவியல்படி
இதுதான் நட்புக்கு சரியான பரிசல்
இரண்டு பேரும் பேசினால்..விரிசல்

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மதம் இல்லை... தாமதம் தானே...! இனிய நண்பர் கரு.முருகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

துரை செல்வராஜூ சொன்னது…

//இந்த நிலையை அடைய பேச்சுத் திறமையும் உழைப்பும்தான் காரணம்.//

முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மை தானே!..

நல்வாழ்த்துக்கள்!..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நண்பரை பற்றிய அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! திரு கரு முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Menaga Sathia சொன்னது…

சிறப்பான பகிர்வு,நண்பருக்கு வாழ்த்துக்கள்!!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய நண்பர் கரு.முருகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 3

unmaiyanavan சொன்னது…

திரு. கரு. முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நண்பரே, நான் தேவகோட்டை கல்லூரியில் கணினி அறிவியல் தான் படித்தேன்.
தங்களுடைய மின்னஞ்சல் கிடைத்தால், மேலும் விவரங்களை அறிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய மின்னஞ்சல் - sambantha@gmail.com

Unknown சொன்னது…

சந்தோஷப் பெருக்கில் வந்த பகிர்வு,நன்று!வாழ்த்துக்கள் முனைவருக்கு!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

உங்களுக்கேற்ற நண்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நட்பின் வலிமை பல ஆண்டுகள் கழித்து நினைத்தாலும் இனிப்பதில்தான் இருக்கிறது. நட்பைப் போற்றியமைக்கு நன்றி .கரு.முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

மகிழ்நிறை சொன்னது…

தங்களது தளம் வலைச்சரத்தில் இன்று அறிமுகமாகி உள்ளது.//http://blogintamil.blogspot.in/2014/07/around-the-world.html// நன்றி

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். நட்பு அறிமுகம் சிறப்பாக உள்ளது. தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
www.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in

Unknown சொன்னது…

மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
Happy Friendship Day 2014 Images