மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

மனசு பேசுகிறது : குறும்படங்கள் - மிச்சக்காசு

ப்பொழுது தமிழில் நல்ல நல்ல குறும்படங்கள் வர ஆரம்பித்திருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. சிலர் குறும்படத்தில் ஜெயித்துவிட்டு அதையே திரைப்படமாக்கும் போது சொதப்பலாக திரைக்கதை அமைப்பால் வந்தது தெரியாமலேயே போய் விடுகின்றனர். அந்த வகையில் குறும்படமாகச் ஜெயித்து வெள்ளித்திரையிலும் வெற்றிவாகை சூடியது இயக்குநர் அருண் குமாரின் பண்ணையாரும் பத்மினியும்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு மலையாள குறும்படம் பார்க்க நேர்ந்தது. துபாயில் இருக்கும் கணவன் மனைவிக்குள்ளான கதை அது. கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று இருக்கிறார்கள். கணவனுக்கு மனைவியின் வருமான மிகப்பெரிய சொத்தாகத் தெரிகிறது. இருவரும் வேலைக்குப் போவதும் வருவதுமாக இருப்பதால் அவர்களுக்குள்ளான அந்நியோன்யம் ரொம்ப இடைவெளியில் பயணிக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கை ஓட்டத்தில் அந்தப் பெண் கர்பமாகிறாள். த்ற்போதைய சூழலில் குழந்தை வேண்டாம் என கணவன் கலைக்கச் சொல்கிறான். ஆனால் அவள் முடியாது என்று சொல்கிறாள். கர்ப்பமானதால் நீண்ட விடுமுறை கொடுக்க முடியாது என்று கம்பெனி முரண்டு பிடிப்பதால் அவளுக்கு வேலையும் போகிறது. அதன்பின் கணவன் மனைவிக்குள் விரிசல் வந்ததா இல்லை கணவன் திருந்தினானா என்பதாய் கதை பயணிக்கும்.

இதேபோல சில குறும்படங்கள் பார்த்ததும் பச்சக் என மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொண்ட ஒருபடம் ஜட்டி, புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கடலை, சுண்டல் விற்கும் ஒருவர் ஒரு ஓட்டைச் ம் ஜட்டியை வைத்துக் கொண்டு அதை மாற்றி புதிதாக ஒன்று வாங்க வேண்டும் என பணம் சேர்ப்பார். இதற்கு இடையில் தெருவில் ஒட்டியிருக்கு ஜட்டி விளம்பரம் பார்த்து கனவெல்லாம் காண்பார். கடைசியில் அவர் ஜட்டி வாங்கினாரா இல்லையா என்பதை மிகவும் எதார்த்தமாய் நகைச்சுவையாய் அந்தக் குறும்படத்தின் இயக்குநர் சொல்லியிருப்பார்.

கேபிள் சங்கர் அண்ணா அவர்களின் குறும்படம் என்று நினைக்கிறேன் பிரியாணி. ஒரு பிரியாணி பொட்டலத்தை வைத்துக் கொண்டு நண்பர்கள் இருவர் அதை வீணாக்காமல் யாரிடமாவது கொடுப்பதற்காக அலைவது போல் காட்டியிருப்பார்கள். ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன நண்பன் நீயாச்சு உன் பிரியாணி ஆச்சுன்னு சொல்லிட்டு போய்விடுவார். இவர் அலைந்து கடைசியில் பிரியாணி கேட்டு வாங்கிக் கொடுக்க முடியாத அண்ணன் தங்கையைச் சந்தித்து கொடுப்பார். உடனே அண்ணன்காரன் கையில் இருக்கும் சேர்த்து வைத்த காசைக் கொடுப்பான். தங்கையோ தனது அன்பின் வெளிப்பாடாக ஓடிச் சென்று ஒரு பூவைப் பறித்து வந்து கொடுப்பாள். யதார்த்தமாய் கதையை நகர்த்தியிருப்பார்கள்.

இப்படி நிறைய குறும்படங்களை கொஞ்ச நாட்களாக ரசிக்க முடிந்தது. அந்த வகையில் தற்போது என்னைக் கவர்ந்த குறும்படம் இலங்கையில் இருந்து சகோதரர் மதிசுதா அவர்கள் இயக்கியிருக்கும் 'மிச்சக்காசு'. தற்போது எந்தக் கடையிலும் மிச்சக்காசைக் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக சாக்லெட்டுக்களைத்தான் கொடுக்கிறார்கள். சிலர் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். பல கடுப்பாக சில கேள்விகளைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். இதையே திரைக்கதையாக ரசிக்கும் விதமாகப் பண்ணியிருக்கிறார் இயக்குநர் மதிசுதா.



ஒரு விடுமுறை தினத்தில் ஓவியம் ஒன்றை வரைந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனை அவனது அம்மா கடைக்குப் போய் சாமான் வாங்கி வரச் சொல்கிறார். அவனும் என்னம்மா என்ற கடுப்புடன் சைக்கிளில் பயணிக்கிறான். கடையில் அவன் வாங்கிய சாமான் போக மிச்சமுள்ள சில்லறைக்குப் பதிலாக மிட்டாய் கொடுக்கிறார் கடைக்காரர். பின்னர் அடுத்தடுத்த முறை அவன் வரும்போது கடைக்காரர் மிட்டாய் சில்லறையைக் கொடுக்கிறார். இதற்கு இடையில் வீட்டின் வாசலில் நிற்கும் ஆட்டோவில் விளையாடுகிறான் சிறுவன். ஆட்டோவில் பயணிப்பவராக நாயைக் காட்டியிருப்பதுடன் அம்மா கடைக்குச் செல்லச் சொன்னதும் இருங்கோ வாறேன் என்று நாயிடம் சொல்லிச் செல்கிறான். அன்று முழுவதும் கடைக்கும் வீட்டுக்குமாக அலையும் அவன் மாலையில் தான் வாங்கும் பொருளுக்கு கடைக்காரர் இவ்வளவு விலை என்று சொன்னதும் தன் பையில் இருக்கும் மிட்டாய்களை எண்ணி எண்ணி எடுத்து பொருளுக்கான பணமாக வைத்துவிட்டு கிளம்புகிறான். கடைக்காரர் அவனைப் பார்த்து நாக்கைத் துருத்துகிறார்.

சிறுவனாக நடித்திருக்கும் சங்கர் அசால்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறான். கடைக்காரராக வரும் மதிசுதா கடைசியில்தான் முகம் காட்டுகிறார் என்றாலும் அந்தக் கையில் இருக்கும் கயிறு அவரை பல போட்டோக்களில் பார்த்திருப்பதால் நமக்கு ஆரம்பத்திலேயே அவர்தான் எனக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.  கடைசியில் கடையில் ஒரு பெண் அமர்ந்திருப்பர். அவர்தான் உண்மையான கடை ஓனராக இருப்பார் போலும். அம்மாவுக்கு என தனியாக கதாபாத்திரம் இல்லாமல் குரலை மட்டுமே வைத்திருப்பது சிறப்பு. கடைக்காரர் மிட்டாய் கொடுக்குமிடத்தில் ஒருமுறையாவது சில்லரை இல்லை இந்தா மிட்டாய் வச்சுக்கோ என சொல்வதாக வசனம் இருந்திருக்கலாம். இருந்தாலும் நமக்கு அனுபவம் இருப்பதால் அதை புரிந்து கொள்ளமுடிகிறது. சிறுவன் கடைக்குச் செல்லும் காட்சி ஒருமுறை எடுத்து பலமுறை காட்டப்பட்டுள்ளது. அவன் வந்து திரும்பும் அந்த இடம் மீண்டும் மீண்டும் வருகிறது. கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் மிகச் சிறப்பான குறும்படமாக வந்திருக்கிறது. கதையும் காட்சிப்படுத்திய விதமும் அருமை. பின்னணி இசை மிகவும் அருமை. சாம்சங் எஸ்4-ல் எடுத்திருக்கிறார்கள். மதிசுதாவின் முந்தைய குறும்படங்கள் எந்தளவுக்கு மக்களைச் சென்றடைந்ததோ தெரியாது ஆனால் மிச்சக்காசு எல்லாருக்கும் பிடிக்கும். சிறந்த திரைக்கதைக்கான விருதும் பெற்றிருப்பதாக நேற்று முகநூலில் பகிர்ந்திருந்தார். ஒரு இயக்குநர் உருவாகிக் கொண்டிருக்கிறார்... வாழ்த்துக்கள் மதிசுதா.

-மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.. 

10 எண்ணங்கள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
அண்ணா.

குறும்படம் மிக அருமையாக உள்ளது..அந்த சிறுவன் இறுதியில் சாம்பிராணி வேண்டும் போது மிச்சக்காசு எங்கே என்று கேட்ட போது. சிறுவன் கொடுத்தது...அந்த கடைக்காரன் கொடுத்த பொருட்களை..சிந்திக்க வைக்கிறது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மேலும் சிறக்க இயக்குநர் மதிசுதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

ம.தி.சுதா சொன்னது…

மிக்க நன்றிகள் அண்ணா. அதுவும் உங்கள் மனசுக்குள் இருந்து வந்த மனம் திறந்த விமர்சனம்.
தாங்கள் குறிப்பிட்ட குறை உண்மையானது தான் அண்ணா..
அதே போல அந்தப் பையன் எனது சொந்த அக்கா பையன் அந்தக் குரலும் அக்காவுடையதே...

Unknown சொன்னது…

உங்கள் தளம் மூலம் ம.தி.சுதா வுக்கு என் வாழ்த்துக்களும்.இன்னமும் குறும் படம் பார்க்கவில்லை.பார்த்து விட்டு சொல்கிறேன்.

Unknown சொன்னது…

பார்த்தேன்.தேறியிருக்கிறார்!அந்த நாக்குத் துருத்தல் மட்டும் இல்லேன்னா..............ஹ!ஹ!!ஹா!!!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இயக்குநர் மதிசுதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
த.ம.3

ezhil சொன்னது…

எனக்கும் இந்த சாக்லேட்கள் கொடுக்கும்போதெல்லாம் தோன்றும் விஷயம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மிகச் சிறப்பான ஒரு குறும்படம். ரசித்துப் பார்த்தேன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

மதி சுதா அவர்களுக்குப் பாராட்டுகள்.

தனிமரம் சொன்னது…

உங்கள் தளம் மூலம் ம.தி.சுதா வுக்கு என் வாழ்த்துக்கள்