மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014மழலை இதயம்

"அப்பா..."

"என்னம்மா"

"நம்ம தாத்தா பெர்த்டே எப்போ?"

"அதெல்லாம் யாருக்குத் தெரியும்..."

"ப்ளீஸ்ப்பா... சொல்லுங்க... தாத்தா பெர்த்டே எப்போ?" அழுத்தமாக கேட்டாள் சுவாதி.

"நிஜமாலுமே எனக்குத் தெரியாதுடா... தாத்தாவுக்கே தெரியாதும்மா"

"பொய் சொல்லாதேப்பா... எம் பெர்த்டே, தம்பி பெர்த்டே, அம்மா பெர்த்டே எல்லாம் கரெக்டா, மறக்காம வச்சிருக்கீங்க... தாத்தா பெர்த்டே மட்டும் தெரியாதுன்னா எப்புடிப்பா..?"

மழலையாக கேட்டாலும் மனதை தைத்தது. இதற்கு மேல் தெரியாது என்றால் இன்னும் என்னவெல்லாம் கேட்பாளோ என்ற பயத்தில் ஏப்ரல் இருபதுதான் தாத்தா பிறந்தநாள் என்று சட்டென்று மனதில் உதித்த நாளைச் சொல்லி அவளை அணைத்துக் கொண்டான் சிவா.

"ஐய்யா... இன்னைக்கு ஏப்ரல் 17, 18... 19... 20... விரல் விட்டு எண்ணி இன்னம் திரி டேய்ஸ்தான் இருக்கு தாத்தா பெர்த்டேக்கு... அப்பா சூப்பரா கொண்டாடலாம் தாத்தா பெர்த்டேய... ம்..."

"ஒ.கே".


ஏப்ரல்-20 காலை.

"அப்பா... நான் காலையிலயே தாத்தாவுக்கு விஷ் பண்ணிட்டேன். நீங்களும் அம்மாவும்தான் பண்ணலை... ஈவினிங் கேக் வாங்கிக்கிட்டு வாங்க..."

மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறாளே... என்று நினைத்தபடி "சரி... இப்ப ஸ்கூலுக்கு கிளம்பு பஸ் வர்ற நேரமாச்சு..." என்று அவளை விரட்டினான் சிவா.

மாலை 6.30 மணி.

சிவா வரும்போது வாசலில் அவன் வரவுக்காக கன்னத்தில் கைவைத்தபடி காத்திருந்தாள் அவனது மகள்.

"ஹை... அப்பா வந்தாச்சு..." அவனைப் பார்த்ததும் கைதட்டி சிரித்தாள்.

அவன் அலுவலக கோப்புகள் அடங்கிய சூட்கேஸை மட்டுமே சுமந்து வருவது கண்டு அவளது முகத்தில் சிரிப்பு அலை குறையத் தொடங்கியது.

"அப்பா..."

"என்னம்மா..." களைப்பாய் கேட்டான்.

"வாங்கலையா..."

"என்னது..?"

"தாத்தா பெர்த்டே கேக்..."

"சாரிடா... அப்பா ஆபிஸ் வேலையில மறந்துட்டேன்..."

"பொய் சொல்றீங்க... வண்டி பெட்டியில இருக்குதானே..."

"இல்லடா... நிஜமாலுமே மறந்துட்டேன்..."

"போங்கப்பா... எங்க பெர்த்டேக்கு மட்டும் மறக்காம பெரிய்ய கேக் வாங்காருவிங்க... நாங்க கேக்காம எல்லாம் வாங்காருவீங்க... தாத்தாவுக்கு மட்டும் எதுவுமே வாங்க மாட்டீங்க... தாத்தா கண்ணாடி மாத்தணும்முன்னு கேட்டப்போ இருக்கதைப் போடுங்க போதும்... அப்புறம் பாக்கலாம்ன்னு சொன்னீங்க. தாத்தா எதாவது கேட்டா அம்மாவும் செய்யிறதில்லை. நாங்க தப்பு செய்தாலும் தாத்தாவைத்தான் திட்டுறாங்க... நமக்கு எதாவதுன்னா தாத்தா துடிச்சுப் போயிடுறாங்க... ஆனா நீங்க அவங்களை ஏப்பா வெறுக்கிறீங்க... " என்று மழலை மாறாத குரலில் பெரிய மனுசிபோல் அவள் பேசிக் கொண்டே போக...

சிவாவின் மனதுக்குள் அவளது வார்த்தைகள் சுருக்கென்று தைத்தது. 'இவளை நாம் வளர்ப்பது போல்தானே அவர் நம்மை மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்திருப்பார். நமக்காக எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். கால ஓட்டத்தில் நாம் இவளது குழந்தைக்கு தாத்தாவாகும் போது நாம செய்வதன் கூலிதானே கிடைக்கும். சிறியவளாக இருந்தாலும் எப்படி பேசுகிறாள். தவறு செய்துவிட்டோமே... அவளின் ஆசையை நிறைவேற்றுவது சாதாரண விஷயம்தானே... அவருக்கும் என்னை விட்டால் யார் துணை... இத்தனை நாளாக ஏன் இப்படி இருந்தேன். சை... படித்தும் முட்டாளாய் இருந்திருக்கிறேன். அவளுக்கு இருக்கும் இதயம்கூட எனக்கில்லாமல் போச்சே...' என்று மனதிற்குள் தனது செயலை நினைத்து வருந்தியவன், மகளின் அருகே அமர்ந்து அவளை கைகளை பிடித்துக் கொண்டு "சாரிடா... அப்பா ஆபிஸ் வேலையில மறந்துட்டேன். வா நாம கடைக்குப் போய் கேக் வாங்கி வரலாம்" என்றான்.

(2010-ல் எனது சிறுகதைகள் வலைப்பக்கத்தில் பகிர்ந்தது)
-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

 1. நல்ல சிறுகதை.
  பாராட்டுக்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. கால ஓட்டத்தில் நாம் இவளது குழந்தைக்கு தாத்தாவாகும் போது நாம செய்வதன் கூலிதானே கிடைக்கும்.

  முற்பகல் செய்வதே
  பிற்பகல் விளையும் ...!

  பதிலளிநீக்கு
 3. பெற்றோக்கும்,பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கும் நல்ல பாடம்.

  பதிலளிநீக்கு
 4. சிந்திக்க வைத்த/வைக்கும் சிறு கதை.கதை சிறிதானாலும் காரம்..................ம்...ம்.....நன்று!

  பதிலளிநீக்கு
 5. கதை அல்ல... ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உண்மை... சில குழந்தைகள் பேசுவதில்லை... பிற்காலத்தில் செயலில் காட்டுகிறார்கள் - அதுவும் விரைவாக...!

  பதிலளிநீக்கு
 6. கண்கள் குளமானது .கதை சுருக்கமாக இருப்பினும் சொல்ல வந்த விசயத்தை மிகவும் அழுத்த திருத்தமாக மனதில் படியும் வண்ணம் ஓர் உண்மைச் சம்பவத்தை நேரில் கண்டது போல்
  உணரப் பெற்றேன் .அருமை ! சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் சகோதரா .

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  சிறுகதையை படித்த போது. மனதை நெகிழ வைத்த விட்டது.. அருமை வாழ்த்துக்கள்

  கவிதையாக என்பக்கம்-அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்...வாருங்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. அருமையாக மனதை நெகிழ வைத்த ஓர் ஒரு நிமிடக் கதை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. குழந்தையா இருக்கிற வரை சரியாகத்தான் இருக்கிறோம் ,வளர்ந்த பின்தான் மரமாகி போய் விடுகிறோமா ?
  த ம 5

  பதிலளிநீக்கு
 10. சில, பல நேரங்களில் குழந்தைகள் நமக்கு பாடம் சொல்லித் தருகிறார்கள். நல்ல கருத்து.

  பதிலளிநீக்கு
 11. குழந்தைகள் நம்மைவிட உணர்வுப்பூர்வமாய் சிந்திக்கிறார்கள்...கதையல்ல ஒவ்வொருவரும் நினைக்க வேண்டிய நிஜம்.

  பதிலளிநீக்கு
 12. நல்ல சிறுகதை. பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...