மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014பம்பரம்


ம்பர சீசன் தொடங்கியதில் இருந்து ஆளாளுக்கு மதி கடையில் இருந்து பம்பரம் வாங்கி வந்து சாட்டையில் சுற்றி கோவில் தரையில் கிர்ரெண்று சுற்றினார்கள். மேலும் சிலரோ அதை லாவகமாக கையில் எடுத்து அடுத்தவரின் கையில் விட்டுச் சந்தோஷப்பட்டனர். ஒரு சிலர் பம்பரம் வாங்கிக் கொடுக்க முடியாது என அம்மாக்கள் பிடித்த அடத்தின் காரணமாக நல்ல வைரம் பாய்ந்த கருவைக் கட்டையை வெட்டி அழகாக செதுக்கி ஆணி அடித்து பம்பரம் ஆக்கியிருந்தார்கள். மேலத்தெரு முத்துசாமியின் நாலு வயசு சந்தோஷூக்கு இப்போ கடையில் தலைமீது ஆணி வைத்து அதில் சாட்டை கட்டி புதிதாக வந்திருக்கும் பம்பரத்தை வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவனும் கிர்ரெண்ற சப்தத்துடன் சுத்தப பழகிவிட்டான். அவனோட அக்கா பத்து வயசு பாமா லாவகமாச் சுத்தி அவனைக் குஷிப்படுத்தினாள். அதுவும் சாட்டையில் தொங்கியபடி சுற்றுவது அழகாகத்தான் இருக்கு.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்ற முத்து மனசுக்குள் அப்பத்தாவைக் கருவிக் கொண்டான். எல்லாரும் பம்பரம் வாங்கி சுத்துறானுங்க.... இந்தக் கெழவி பம்பரம்தான் வாங்கித் தர விடலை. கட்டையில செஞ்சு தாறேன்னு சொன்ன சோலைப் பயலயுமில்ல திட்டிப்புடுச்சு... வெளங்காத கெழவி.... கட்டையில போக... 

"ஏய் முத்து தள்ளி நில்லுடா... பம்பரம் குத்தும் போது சும்மா ரெங்கிக்கிட்டு வரும்... மண்டைகிண்டையில சொட்டுன்னு வந்து அடிச்சிப்புடும்...." கத்தினான் சேகர்.

"ஆமா இங்கிட்டுத்தான் வருது... சும்மா சுத்துடா.. மொட்டக்கட்ட அடிக்கப்போறே... அதுக்கு உதாரு விடுறே..." பம்பரம் இல்லாத கடுப்பில் திரும்பி எகிறினான் முத்து.

"எனக்கென்னப்பா நா சொல்லிட்டேன்... அப்புறம் உன் இஷ்டம்..." என்றபடி பம்பரத்தை சாட்டையால் சுற்றி ஆணியின் நுனியை நாக்கால் எச்சில்படுத்தி நாக்கைத் துருத்தி காலைத் தூக்கி வட்டத்துக்குள் இருந்த பம்பரத்தின் மீது குத்தினான்.

"டேய் சோல... எனக்கொரு பம்பரஞ் செஞ்சுதாடா..." மும்மரமாக பம்பரம் சுற்றுவதில் இருந்த சோலையிடம் கெஞ்சலாகக் கேட்டான்.

"அட போடாங்... உங்க அப்பத்தா சோத்தை திங்கிறியா பீயைத் திங்கிறியான்னு கேக்குது... வேண்டாம்ப்பா... உனக்கு நாஞ் செஞ்சுதரமாட்டேன்..."

"...." பதில் சொல்லாமால் வட்டத்துக்குள் குத்தி 'ர்ர்ர்'ரென்ற சத்தத்துடன் வெளியே சீறி சுற்றிய முருகனின் சிவப்புக் கலர் பம்பரத்தையே பார்க்க, அவன் பார்ப்பதைப் பார்த்த முருகன் சாட்டையை பம்பரத்தைச் சுற்றி முடிச்சுப் போல் போட்டு ஒரு கையால் டக்கென்று மேலே தூக்கிவிட்டு லாவகமாக கையில் வாங்கி சுத்தவிட்டான்.

"டேய் அதை எங்கையில விடுறா..." வெட்கத்தை விட்டுக் கேட்டான்.

"டேய் இங்க பாருங்கடா... தொத்தப்பயலுக்கு பம்பரம் கையில சுத்தணுமாம்... நீ விடாதேடா..." என்று சொன்ன இளங்கோவிடம் "சும்மா இருடா" என்ற முருகன் அவனது கையில் விட்டான். கிர்ரெண்று கையில் சுற்றும் போது உச்சந்தலை வரை சில்லிப்பாய் இருந்தது. அடக்க முடியாத சிரிப்பு அவனுக்கு வந்தது.

"டேய் முத்து... அடேய் இங்க வாறியா... வரவா...?" அப்பத்தாவின் குரல் கேட்டதும் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

வீட்டுக்குப் போனதும் வாசலில் நின்ற அப்பத்தா, "அவனுக பம்பரம் குத்துற இடத்துல நிக்காதேன்னு எத்தனை தடவ உனக்குச் சொல்லியிருக்கேன்... ஒரு நேரம் போல ஒரு நேரமிருக்காது. அது பாட்டுக்கு படாத இடத்துல பட்டுட்டா என்ன பண்றது.?" கத்தினாள்.

"சும்மா போப்பத்தா... பம்பரந்தான் வாங்கித் தரமாட்டீங்க... பாக்கக்கூடக் கூடாதா?"

"எனக்கென்னப்பா உங்கப்பன் வரும்போது உங்காத்தாக்கிட்ட சொல்லி வாங்கிட்டு வரச்சொல்லுங்க...."

"நா அப்பாக்கிட்ட சொல்லி வாங்கியாரச் சொல்லுறேன்...." என்றபடி உள்ளே சென்றான்.

றுநாள்...

"முத்து நா உனக்கு என்னோட செவப்புப் பம்பரத்தைத் தரவாடா?" முருகன் அவனிடம் கேட்டான்.

"போடா... நீ சும்மா சொல்லி என்னைய வெறுப்பேத்துவே..."

"இல்லடா நெஜம்மாத்தான்... நான் புதுசா பம்பரம் வாங்கப்போறேன்... இதைத் தாறேன்..." என்றான்.

"எப்போ?"

"மத்தியானம் வரும்போது புதுசு வாங்கிட்டு வந்திருவேன்... சாயந்தரம் உனக்குத் தாறேன்..."

"உண்மையாவா?"

"எங்க அம்மா மேல ஆணையா"

"சரி குடு பாக்குறேன்..."

"இந்தா..."

வாங்கி எல்லாப் பக்கமும் பார்த்தவன் இடமில்லாமல் ஆக்கர் போட்டிருப்பதைப் பார்த்ததும் "என்னடா இம்புட்டு ஆக்கர் இருக்கு..." முகத்தைச் சுருக்கினான்.

"ஆமா வெளாடும் போது தோத்தா ஆக்கர்தானே போடுவாங்க... பிரியாத்தானே தாரேன்னு சொன்னே... புதுசா வாங்கிக் கொடுப்பாக..."

"இல்லடா சும்மா கேட்டேன்... நல்லாத்தான் இருக்கு..."

"வேணாம்ன்னா விடு... வேற யாருக்காச்சும் கொடுக்கிறேன்...."

"இல்லடா... எனக்கே கொடுடா... இனிமே இதுல ஆக்கர் விழுகாம பாத்துக்கிறேன்..."

"உனக்கு ரொம்ப திமிருடா... வெளாட்டுன்னு வந்தா ஆக்கர் வாங்கம இருக்க முடியாது... உன்னய முதல்ல சேக்குறானுங்களான்னு பாரு...."

மாலை பம்பரம் சுற்றத் தயாரானபோது...

"டேய் நானும் வாரேன்டா.." என்றபடி வந்து நின்றான் முத்து.

"டேய் இங்க பாருங்கடா தொத்தப்பய ஆட்டைக்கு வாராணாமுடா... உங்கிட்ட ஏதுடா பம்பரம்... உங்கப்பத்தா வாங்கிக் கொடுத்துச்சா..." ஏளனமாக கேட்டான் சேகர்

"இல்ல முருகன் கொடுத்தான்... எங்கப்பா இந்த வாரம் வரும்போது புது பம்பரம் வாங்கிட்டு வாறேன்னு சொல்லியிருக்காக..."

'ப்ப்பூ....' என எல்லாருமாக சிரித்தார்கள்.

"எதுக்குடா சிரிக்கிறீங்க...?"

"புதுசா வாங்கி என்ன பண்ணப்போறே... உனக்கு பம்பரமே குத்தத் தெரியாது... முதல்ல இதுல பழகு அப்புறம் பாப்போம்..." தான் என்னவோ பம்பரம் சுற்றுவதில் சாம்பியன் என்பது போல சோலை பேசினான்.

"எதுக்குடா இவனுக்கிட்ட கொடுத்தே... ஆக்கர் வாங்கிறதுக்காவது வச்சிருக்கலாமுல்ல..." மெதுவாக கீறிவிட்டான் இளங்கோ

"அட பொயிட்டுப் போகுதுடா.... பாவம் சுத்திட்டுப் போறான்..."

"சரிடா... உனக்கு மூணு சான்ஸ் தாரேன்... இந்த வட்டத்துக்குள்ள இருக்க என்னோட பம்பரத்து மேல ஒரு தடவையாச்சும் ஆணி பதியிற மாதிரி குத்திடு... அப்புறம் உன்னைய ஆட்டையில சேத்துக்கிறோம்..." முத்துக்கு போட்டி வைத்தான் சேகர்.

"சரிடா... வையி...." தயாரானான் முத்து

"டேய் எதுக்குடா தேவையில்லாம... அவனையும் ஆட்டையில சேத்து அவனோட பம்பரத்தை உடைப்போம்..." என்றான் சோலை.

"இவன் முதல்ல வட்டத்துக்குள்ள சுத்துறானான்னு பாப்போம்... சும்மா இருங்கடா..."

சாட்டையை சுற்றும் போது நிற்காமல் சுத்திக் கொண்டே வர எல்லாரும் சிரித்தார்கள்.

ஒரு வழியாக சுற்றி ஓங்கிக் குத்த முதல் குத்து வட்டத்துக்குள் விழுந்தாலும் மொட்டைக் கட்டையாக மண்ணில் சுற்றிச் செல்ல "மொதக்குத்து மொட்டக்குத்து..." என்று எல்லாரும் ஒன்றாகக் கத்தினார்கள்.

இந்த முறை எப்படியும் ஆக்கர் போட்டே ஆகணும் என்ற முனைப்புடன் குத்த இந்த முறை பம்பரம் சாட்டை நுனியில் தொங்கியது.

"அடேய் இனி இவன் ஜெம்மத்துக்கும் நம்ம கூட ஆட முடியாது.... முருகன் வச்சிருக்கும் போது எப்புடி ரெங்குன பம்பரம் தொத்த கைக்குப் போனதும் தொத்தலாகிப் போச்சுடா..." சிரித்தான் இளங்கோ.

"என்னடா தொத்த... நோத்தாவா எனக்குப் பேரு வச்சா... மூத்தரக்குண்டி..." என்று பதிலுக்கு சிலுப்பினான்.

"டேய் மூத்தரக்குண்டியின்னு சொன்னே மூக்கைப் பேத்துருவேன்..." இளங்கோ எகிறினான்.

"இருடா... இன்னும் ஒரு குத்து... அவன் குத்தலைன்னா நாம அவனைக் குத்துவோம்..." என்று இளங்கோவை சமாதானப்படுத்தினான் சேகர்.

'மாரி... இந்தக் குத்துல பம்பரம் வெளியாகணும்..' என்று மனசுக்குள் சாமி கும்பிடும்போது "அடேய் அவனுக்கிட்ட எவன்டா பம்பரத்தைக் கொடுத்தது... எங்களுக்கு வாங்கித் தரத்தெரியாமயா இருக்கோம்... நீங்கதான் சொல்பேச்சுக் கேக்கலைன்னா அவனையும் ஏண்டா கெடுக்கிறீங்க... யாருமேலயாவது பட்டு சண்டைக்கு வந்துட்டா... இப்பக் கொடுத்துட்டு வாரியா வரவாடா" என்று அவனது அப்பத்தா கத்தியபடி வர...

"தொத்த தோக்கப்போறான்... ரெடியா இருங்க.... அவனை வெளுக்கிறதுக்கு..." என்று சேகர் சொல்ல, "ஏய்... ஏய்..." என எல்லாரும் கோரஸாகக் கத்த....

பம்பரத்தை நாக்கால் எச்சில் பண்ணி கண்ணை மூடி கையை ஓங்கும் போது அப்பத்தாவும்  சுற்றி நின்று சிரிப்பவர்களும் ஒரு முறை வர கண்ணைத் திறந்து ஓங்கிக் குத்தினான்.

சரியான குத்து... துள்ளியமாய் வீசிய வீச்சு.... சேகரின் பம்பரத்தில் பச்சக் என்று குத்த.... அந்த வேகமான குத்து கொடுத்த தாக்கத்தில் சேகரின் பம்பரம் ரெண்டாக உடைந்து சிதற...

குத்திய வேகத்தில் வாடிவாசல் காளை போல முத்துவின் பம்பரம் எகிறி அவர்களை நோக்கி வந்த பாட்டியின் நெற்றியை சொட்டென்று தாக்க...

"அய்யோ... யாரையோ பம்பரத்தால அடிக்கப் போறான்னு பாத்த கடைசியா எம்மண்டைய உடைச்சிட்டானே... வா உங்காத்தாக்கிட்ட சொல்லி உனக்குப் பூஜை போடச் சொல்றேன்... பம்பரமா வேணும் பம்பரம்... உங்கப்பனுக்கிட்ட சொல்லி மசுர வாங்கிட்டு வரச்சொல்லுறேன்..." என்று கத்தியபடி நெற்றியைத் தடவ...

அப்பா பம்பரம் வாங்கித் தருவாரா மாட்டாரா என்பது இப்போது முக்கியமில்லை... கேலி பேசியவர்களின் முகத்தில் கரி பூசிய சந்தோஷத்தில் "யாருக்கிட்ட இனி எங்கிட்ட மோதுனா... பம்பரத்தை சில்லாத்தான் பொறக்கணும்..." என கத்திவிட்டு அப்பத்தாவைத் தாக்கி எகிறிய பம்பரத்தை எடுத்துக் கொண்டு "பாத்து வரக்கூடாதா அப்பத்தா.... நல்லவேளை படாத இடத்துல பட்டிருந்தா சங்குதான்..." என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு "ம்.. வேற யாருடா வைக்கிறா... வச்சிப் பாருங்கடா...." என்று சவால் விட்டான் தொத்தலான முத்து.

-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

 1. எனக்குத் தெரிய இதுபோல் பம்பரம் ரெண்டாவது அரிதுங்க குமாரு. நாங்கல்லாம் "அரிவாள் வெட்டு" வச்சு ஆடுவோம். ஒரு வட்டத்திலிருந்து அடுத்த வட்டம் போகும்போது எவன் பம்பரம் மாட்டி இருந்ததோ அதை வெட்டி காலி பண்ணிடுவோம்! :) அப்படி ஆடும்போது அரிவாள் வெட்டுக்குனு ஒரு ச்ப்ஸ்டிடூட் பம்பரம் (ஒரு வீணாப் போன சொறி பம்பரத்தை கொண்டுவந்து கொடுப்பார்கள்) தான் பொதுவா வெட்டப்படும். :)

  பதிலளிநீக்கு
 2. முத்து ஜெயிப்பான் என்று தெரிந்தாலும், ஜெயிக்க வேண்டுமே என்ற கவலை எனக்கும் வந்தது. சிறு வயதில் பம்பரத்தில் நானும் தொத்தைதான்! வீட்டில் சுற்ற மட்டும் லாயக்கு.

  பதிலளிநீக்கு
 3. பம்பரம்
  இளமைக் கால நினைவலைகளில் மூழ்க அடித்தமைக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 4. பகிர்வு மூலம் இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...

  அன்றைக்கு பம்பரம் விளையாட்டு எத்தனை எத்தனை சந்தோசங்கள் + (வீராப்புகளுடன்) கையில் காசு சேர்ந்தால் முதலில் வாங்குது விதவிதமான பம்பரங்களை... ம்...

  இன்றைக்கு இந்த விளையாட்டே இல்லை எனலாம்...

  பதிலளிநீக்கு
 5. பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்ற பொழுதுகளின் ஊடாக -
  பம்பரத்தைச் சுழற்றி விட்டதற்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 6. மிக்க நன்று
  தங்கள் தளத்தை http://tamilsites.doomby.com/ என்ற Directory இல் இணைத்துத் தமிழுக்கு உதவுங்கள்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல பகிர்வு.முத்து ஜெயிப்பான்(ர்)என்ற எதிர்பார்ப்பு இருந்தது.அப்பத்தா எச்சரிக்கை,அப்பத்தாவுக்கே வினையாகி.............

  பதிலளிநீக்கு
 8. எனக்குத் தெரிந்தவரையில் மண்ணின் மனம் சம்பந்தப்பட்ட வாழ்க்கையை அதிக அளவு பதிவுகளாக வெளிட்டவர் நீங்களாகத்தான் இருக்கும் குமார்.

  பதிலளிநீக்கு
 9. நானே அங்கே நின்று பம்பரம் சுற்றுவதைப் பார்ப்பது போல உணர்வு.....

  பாராட்டுகள் குமார்.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...