மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 16 டிசம்பர், 2013

மனசின் பக்கம் : ரஜினி போலீஸ் - பழனி நண்பர்கள்

ம்மில் பலர் இப்போது இருக்கும் நிலையில் இருந்து இதற்கு முன் இருந்த நிலையைத் திரும்பிப் பார்க்கதை எதோ பெரிய குற்றம் போல் பார்ப்பார்கள். சின்ன வயதில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருந்தாலும் இப்போது தங்க ஸ்பூனில் சாப்பிடும் நிலையில் இருப்பதால் அப்பவே பித்தளை ஸ்பூனில் சாப்பிட்டதாக அள்ளிவிடுவார்கள். பெரும்பாலும் நடிகைகள் நான் டாக்டராகியிருப்பேன், எஞ்சினியராகியிருப்பேன் என்று உதார்விடுவார்கள். ஆனால் எவன் ஒருவன் தான் முன்பிருந்த நிலையை எப்போதும் நினைத்துப் பார்க்கிறானோ அவனே மிகவும் உயரத்தை அடைவான் என்பதுதான் உண்மை. 

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் என்.டி.டிவியின் மிகச்சிறந்த இந்தியர் விருதினைப் பெற்ற திரு.ரஜினிகாந்த் அவர்கள் பேசும் போது ஒரு சாதாரண கண்டக்டர் இன்றைக்கு இந்த நிலையை அடைந்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய அதிசயம். வாழ்க்கையில் இது போன்ற அதிசயங்கள் நடக்கலாம் என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம்' என்றார். உண்மையிலேயே ஒரு மேடையில் இப்படிச் சொல்ல தன்னை நன்கு உணர்ந்தவரால் மட்டுமே முடியும். இதை ரஜினி சொன்னார் என்பதற்காக நான் இங்கு பகிரவில்லை. யார் சொன்னாலும் பகிர்ந்திருப்பேன். ஏனென்றால் நான் ரஜினி ரசிகன் இல்லை. வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை என்றும் மறக்காமல் இருந்தாலே உயர்ந்த நிலையை அடைவோம்.

----------------------

னது மனைவி சொன்ன ஒரு செய்தி, நேற்று பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் ஐஸ்கிரீம் கேட்டிருக்கிறார்கள். அவர்களைக் கூட்டிக்கொண்டு கடைக்குப் போயிருக்கிறார். தேவகோட்டையில் பிரச்சினைகள், பசங்களின் அடாவடி, சில பிரச்சினைகள் என எல்லாவற்றிற்கும் மேலாக போக்குவரத்தை ஒழுங்கு பண்ணும் விதமாக நிறைய போக்குவரத்துப் போலீசாரைப் போட்டிருக்கிறார்களாம். அதுவும் தியாகிகள் சாலையில் இருபுறம் வண்டிகளை நிறுத்திவிட போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அதனால் அங்கு ஒருபக்கம் வண்டி நிறுத்துமாறு செய்திருக்கிறார்கள். இவரும் அங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறார். அப்போது ஒரு போலீஸ்காரர் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இவரும் கடைக்குள் போய் அமர்ந்து ஐஸ்கிரீம் வாங்கும் போது அந்த போலீஸ்காரர் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். என்னடா இவன் தெரிஞ்சவன் மாதிரியும் இல்லை.. இந்தப் பார்வை பார்க்கிறானே... கருமம் பிடிச்சவன் என்று நினைத்தபடி ஐஸ்கீரிமை வாங்கிக் கொண்டு வந்து வண்டியை எடுக்கும் வரை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். 

மாலை ஒரு வேலையாக கடைக்குச் செல்ல இப்ப அந்தப் போலீஸ் இந்தக் கடைப்பக்கம் நின்றிருக்கிறார். மீண்டும் வண்டியை நிறுத்தி எல்லாம் வாங்கி வண்டியை எடுக்க வரும்வரை அதே பார்வை... இவனுக்கு என்னடா வேணும் என்று யோசிக்கும் போதே... 'மேடம் உங்ககிட்ட லைசென்ஸ் இருக்கா?' என்று கேட்டிருக்கிறார். உடனே லைசென்ஸைக் கொடுக்க, இது இப்போதான் வாங்கியிருப்பீங்க போலன்னு கேட்டிருக்கிறார். இது பழசுதான் சார்... நல்லா தேதியை பாருங்க என்றதும் வண்டியை கயித்துக்கு உள்ளே வைக்கனும் இப்படி வச்சிட்டுப் போகக்கூடாது என அடுத்த அஸ்திரத்தைப் உபயோகித்து இருக்கிறார். இப்ப என்னோட வண்டி எப்படி நிக்குது சார்... இந்த வரிசையில எதாவது ஒரு வண்டி கயித்துக்கு உள்ளே நின்னா நான் எவ்வளவு அபராதம் கட்டணுமோ கட்டிட்டுப் போறேன் என்று சொல்லவும், இப்பன்னு இல்லை காலையிலயும் நீங்க இப்படித்தான் வச்சிட்டுப் போனீங்கன்னு சொல்லியிருக்கிறார். 

உடனே காலையில நான் எங்க போறேன்னுதானே பார்த்தீங்க... அப்பவே சொல்ல வேண்டியதுதானே... இப்ப சொல்றீங்க... உங்களுக்கு என்ன சார் வேணும்... என்கிட்ட லைசென்ஸ் இருக்கு... வண்டிக்கு ஆர்.சி.புக் இருக்கு... உங்களை என்னய எங்க போறேன் வாறேன்னு பாக்கச் சொல்லியிருக்காங்களா என்ன என்று சூடாக கேட்கவும்  நீங்க போங்க மேடம் என்று சொல்லி கிளம்பிவிட்டாராம். எதிர்த்த பூக்கடைக்காரர் எங்களுக்குத் தெரிந்தவர், அவரிடம்தான் தொடர்ந்து பூ வாங்கிக் கொண்டிருக்கிறோம். அவர் என் மனைவி பேசப்பேச சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.  போலீஸ்காரர் போனதும் 'நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டேம்மா... இப்படித்தான் கேட்கனும்' என்றாராம். நேற்று போனில் பேசும் போது என்னிடம் சொல்லிச் சிரித்தார். நான் சொன்னது இதுதான் 'நாங்களும் மதுரைதான்னு சொல்லாம சொல்லிட்டு வந்திருக்கிறார்.' ஆனால் எதற்கும் பயப்படாத என்னவளின் அந்தக் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

-------------------

நேற்று பழனியில் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதைப் பற்றி ஒரு பகிர்வு போட்டிருந்தேன். அதற்கு நண்பர் யோகன் பாரிஸ் அவர்கள் எழுதியிருந்த பின்னூட்டம் இது, 

"எங்கள் உறவுகள் இலங்கையிலிருந்து வந்திருந்தார்கள். மொத்தம் 20 கோவில்சென்றோம். பிள்ளையார் பட்டி தவிர எங்குமே காசுபறிப்பில் குறியாக இருந்தார்கள். பிள்ளையார் பட்டி அர்ச்சகர் எங்களுடன் வந்த வயது முதிர்ந்தோரை உள்ளே வந்து தரிசனம் செய்யும் படி கேட்டபோதும், ஏனைய கோவில்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் தவிர்த்து விட்டோம். அத்தனை கோவிலிலும் எங்களை "மலேசியாப் பார்ட்டி" வருது என அடையாளப்படுத்திக் காசு கறப்பதிலேகண்ணாக இருந்தார்கள். எங்கள் குழுவில் 5 முதியோர் 5 குழந்தைகள் அதுபற்றிய எந்த அனுதாபமும் இல்லை, காசு,காசு,காசு.

திருச்செந்தூரில் கோவில் கடையில் அர்சனைத் தட்டு நானே வாங்கினேன். ஒவ்வொரு தட்டுக்கும் பற்றுச் சீட்டு பெற வேண்டுமென்ற போது அவற்றையும் பெற்று , இத்துடன் ஏதாவது நாம் கொடுக்க வேண்டுமா? எனக் கேட்டபோது , கட்டாயமில்லை. விரும்பினால் உங்கள் விருப்பம் போல் பூசகருக்குக் கொடுக்கலாம், என்றார்கள். அர்சனை செய்யத் தட்டுகளைக் கொடுத்ததுமே 5 தட்டுக்கும் 500 என்றார்கள். நான் மறுத்த போது 250 என்றார்கள். கட்டாயம் உங்களுக்கு கொடுக்கத் தேவையில்லை எனக் கூறினார்களே என்ற போது, காசு இல்லாவிட்டால் அர்ச்சனை இல்லை. என்றார்கள். பின் நாம் திரும்பி வரும் போது ஒரு அர்ச்சகர் என்ன? என விசாரித்து தான் செய்து தருவதாக தருவதைத் தாருங்கள் என்றார்.தட்டுகளைக் கொண்டு சென்று விட்டு அடுப்படியில் தான் தேங்காயை உடைத்தாரோ தெரியாது. காசு கேட்டார். இப்போ நாங்களும் மிக வெறுத்து விட்டோம். 50 ரூபா கொடுத்தோம். அது போதாது எனச் சத்தமிட்டார்.நாம் வந்து விட்டோம்.

இனிமேல் தமிழ்நாட்டில்கோவில் என்றாலே பயப்படுமளவுக்கு ஆக்கிவிட்டார்கள். தமிழகத்துக்கு கோவிகளுக்குப் போனால் கோவணத்துடன் போவதே மேல்.அந்த அளவு எத்தர்களின் கூடாரமாகிவிட்டது. அற்புதமான தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை பார்த்து அனுபவிக்க விடுவாரில்லை.தமிழகம் எங்கும் எங்கள் பேச்சின் மூலம் நாம் வெளிநாட்டவர் என்பதை உணர்ந்து காசுபறிப்பதிலும் ஏமாற்றுவதிலும் கண்ணாகவே இருந்தது.எனக்கு மிக ஏமாற்றத்தைத் தந்தது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் நாயமாக நடந்தார்கள். அரசு கோவில்களில் ஒழுங்கீனங்களை அனுமதிக்கக் கூடாது." 

இதைப் படிக்கும் போது நமது தமிழக கோயில்களில் தலைதூக்கியிருக்கும் ரவுடியிச அட்டகாசம் நம்மை தலைகுனிய வைக்கிறது.

-------------------

இது நண்பர்களுக்காக...

கோதரர்கள் ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி நடத்துகிறார்கள். இவர்களுக்கு திரு.தனபாலன் சாரும் உதவியாக செயல்படுகிறார். அது குறித்த விபரம் அறிய இங்கே கிளிக்கி ரூபனின் தளத்தில் சென்று பார்த்து விபரம் அறிந்து விரைந்து எழுதுங்கள்... வெற்றி வாகை சூடி பரிசை அள்ளுங்கள்.

anigif


புதாபியில் வரும் வெள்ளிக்கிழமை மாலை பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தும் திண்டுக்கல் ஐ.லியோனியின் சுழலும் சொல்லரங்கம் நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, அலைனில் இருக்கும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்.

Displaying Thiru.Leoni & Team event_20.12.2013.jpg

மீண்டும் அடுத்த பகிர்வில் சந்திப்போம்...
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

ரஜினியின் எளிமை தெரிந்ததுதானே. நல்ல மனிதர்.

உங்கள் மனைவி நல்ல பதில் தந்தார்.

நம் ஊர்க் கோவில்களில் பண்ணும் காசு பிடுங்கும் கலாச்சாரத்தை அரசாங்கம் கவனித்து கட்டுப்படுத்த வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கடந்து வந்த பாதையை என்றும் மறக்காமலும், என்றும் பணிவுடன் இருந்தால் உயர்வு தான்...

தங்களின் தளத்தில் போட்டியின் அறிவிப்பை சொன்னதற்கு மிகவும் நன்றி... நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்...

Unknown சொன்னது…

நல்ல பகிர்வு!

மனோ சாமிநாதன் சொன்னது…

நானும் ரஜனி வெளிப்படையாகச் சொன்ன செய்தியைப்படித்தேன். என்றைக்குமே வந்த பாதையை மறக்காதவர்கள் உயராமல் போனதாக சரித்திரம் இல்லை.

யாராவது தெரியதவர்கள் தைரியமாக நடந்து கொண்டாலே நமக்கு பாராட்டத்தோன்றும். அதுவே நமக்கு நெருங்கிய உறவு என்னும்போது எத்தனை பெருமிதமாக இருக்கும்? அத்தனை பெருமிதமும் உங்கள் எழுத்தில் தெரிகிறது! உங்கள் இல்லத்த்ரசியின் தைரியத்திற்கு என் வாழ்த்துக்க்ள்!!

Unknown சொன்னது…

மிகவும் மட்டமாக நமது ஊரை நினைத்து இருப்பார்கள் சில கேடு கெட்ட ஜென்மங்களால்

Yazhini சொன்னது…

நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கருத்துகள்.....

கோவில்களில் அட்டகாசம் - இது இந்தியா முழுவதுமே பரவிக் கிடக்கின்ற ஒரு விஷயம். எங்கும் இப்படி பகல் கொள்ளைகள் உண்டு குமார். இவற்றை தீர்க்க அரசு முன்வருதே இல்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை.