மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 30 டிசம்பர், 2013

2013 - அரசியல் சினிமா விளையாட்டு

2013 ஆம் ஆண்டின் நிறைவு நாளுக்கு வந்துவிட்டோம்.  2014-ல் அடியெடுத்து வைப்பதற்கு இன்னும் ஒரு தினமே இருக்கிறது. 

சினிமா:

திரையுலகைப் பொறுத்தவரை சில சிறப்புக்களும் பல வருத்தங்களையும் கொடுத்த ஆண்டாகவே இது அமைந்தது. கமல் மற்றும் விஜய் தங்களது படங்களை வெளியில் கொண்டு வருவதற்குள் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. சினிமா நூற்றாண்டு விழாவை அரசியல் விழா போல் அம்மா நடத்த மூத்த கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கோச்சடையான் வரும்... வரும்... என சொல்லிக் கொண்டே இருந்தார்கள் ஆனால் படம் வெளிவரவில்லை. 

இளம் நாயகர்களான விஜய் சேதுபதியையும் சிவகார்த்திகேயனையும் முன்னணி நாயகர்கள் வரிசையில் நிறுத்தியது. எதிர்பார்ப்புக்களுடன் வந்த தங்கமீன்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. நகைச்சுவைப் படங்களுக்கான ஆண்டாக இது அமைந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. 


நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு இந்த ஆண்டில் படங்களே இல்லாததால் சந்தானமும் சூரியும் அந்த இடத்தை பிடித்து வைத்திருந்தாலும் சந்தானத்தின் காமெடி பெரும்பாலும் காமநெடியாகவே இருப்பதால் முகம் சுளிக்க வைத்தது. இமானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன. குறிப்பாக ஊதாக் கலரு ரிப்பன் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. 

நடிகர்களைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயனுக்கு இது ஏறுமுகமான ஆண்டாக அமைந்தது. அவரின் டைமிங் காமெடி நன்றாகவே கை கொடுத்தது. ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தார். விஜய் சேதுபதியும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சத்தியராஜ் சிறப்பான வேடங்களை தேர்வு செய்து தன்னை குணச்சித்திர நடிகராக நிலை நிறுத்திக் கொண்டார். இன்னும் நிறையப் பேர் வந்தார்கள்... சிலர் வென்றார்கள்... பலர் சென்றார்கள்.

அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பருக்கு இந்த ஆண்டும் வரவேற்பு இருந்தது. ஆரம்பம் அதிரடி வெற்றி பெற்றதை தொடர்ந்து பொங்கல் வரவான வீரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்க்கு துப்பாக்கி கொடுத்த வெற்றியை தலைவலியோடு வந்த தலைவா கொடுக்கவில்லை. கமலைப் பொறுத்தவரை விஸ்வரூப வெற்றி பெற்றார். சூர்யாவைப் பொறுத்தவரை சிங்கம்-2 சிறப்பான வெற்றி பெற்றது. 


தனுஷூக்கு எதிர் பார்க்கப்பட்ட மரியான் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. நய்யாண்டியும் நமத்துப்போச்சு. ஆனால் இந்தியில் தனுஷின் முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கார்த்தியைப் பொறுத்தவரை இந்த வருடம் மொத்தமாகவே சிறப்பாக அமையவில்லை. விமலுக்கு வெற்றிப் படங்கள் அமைந்தன. ஆர்யாவுக்கு இரண்டாம் உலகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்தவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா. தனது நடிப்பால் திரையுலகைக் கவர்ந்தார். இவரைப் போலவே கேரளத்து வரவான லஷ்மிமேனன் ஒரு நல்ல நடிகை என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டார். நயன்தாராவைப் பொறுத்தவரை இரண்டாவது ரவுண்டிலும் கல்லாக் கட்ட ஆரம்பித்துவிட்டார். காஜலுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஹன்சிகா, அனுஷ்கா, திரிஷா, அமலாபால் என மற்ற முன்னணி நடிகைகளும் தாங்கள் இருப்பதை ஒரு சில படங்கள் மூலம் புதுப்பித்துக் கொண்டார்கள். அஞ்சலிக்கு பிரச்சினைகள் சூழ்ந்த ஆண்டாக அமைந்தது.

மணிவண்ணன், மஞ்சுளா, குள்ளமணி என சினிமா நட்சத்திரங்கள் பலரைக் காவு கொண்ட ஆண்டாக இது அமைந்தது.


அரசியல் :

அரசியலில் மோடி அலை வீச வைத்த ஆண்டாக இது அமைந்தது. ஆளும் காங்கிரஸ்க்கு மரண அடியைக் கொடுத்தது. ஊழலுக்கு எதிராக துடைப்பத்துடன் வந்த ஆம் ஆத்மியை அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தது. தமிழகத்தில் எதிர்ப்பால் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமரை செல்ல விடாமல் செய்தது. தமிழனுக்காகவோ இசைப்பிரியாக்களுக்காகவோ வாய் பேசாத மத்திய அரசை தேவயானிகளுக்காக தேவைக்கு மேல் வீரம் காட்ட வைத்தது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம் எதிர் அணியினரை அவமானப் படுத்துதல் என அம்மாவின் அதிரடி அரசியல் அரங்கேறிக் கொண்டுதான் இருந்தது. எம் இனம் மடிந்தால் என்ன என் ரத்தத்துக்கு சீட்டு வேண்டும் என காங்கிரஸ் காலில் விழுந்த முன்னாள் முதல்வரை ஞானம் பெற்றது போல் இலங்கைப் பிரச்சினை குறித்தும் இசைப்பிரியா குறித்தும் பேச வைத்தது. 


தேமுதிகவைப் பொறுத்தவரை அதன் முதுகெலும்பாக இருந்த பண்ருட்டியார் பக்குவாய் வெளியேறினார். குடும்பம் சூழ்ந்த கட்சியாக இருந்தாலும் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜகவும் திமுகவும் கூட்டணிக்காக அதிகம் எதிர்பார்க்கும் கட்சியாக தேமுதிகவை திகழ வைத்தது. பாமக தனித்துப் போட்டி என சொல்லிக் கொண்டு பாஜக பக்கம் சாய வைத்தது. 

சாதி அரசியலில் காதல் (தற்)கொலைகளும் அடிதடிகளும் அதிகம் அரங்கேறியது.  மின்சாரம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை இருட்டில் வைத்தது. இடைத்தேர்தல்களில் மக்களுக்கு பணத்தை வாரி இறைக்க வைத்தது. ஆளுங்கட்சிக்கு அமோக வெற்றியை பெற்றுத் தந்தது, முக்கியமாக தேர்தலை முன்னிருத்தி எல்லா அரசியல்வாதிகளையும் இலங்கை பிரச்சினையை கையில் எடுக்க வைத்தது. 

விளையாட்டு:

சச்சின் என்னும் சகாப்தத்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கபடியில் உலகக்கோப்பை வென்றது. விஸ்வநாதன் ஆனந்த உலக சாம்பியன் பட்டத்தை கோட்டைவிட்டது. இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் மரண அடி வாங்கியது என விளையாட்டிலும் 2013 ஏற்றத் தாழ்வுகளைக் கொடுத்தது.



என் வாழ்வில் 2013 நாளைய பகிர்வாக வருகிறது. ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எப்படியாச்சும் பதிவைத் தேத்தணுமே....

-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

நல்ல பகிர்வு.அரசியல்,சினிமா,விளையாட்டு.........//////ஹி!ஹி!!ஹீ!!!நாளைக்கு வேற இருக்கா?ஹ!ஹ!!ஹா!!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல அலசல்...! தொடர வாழ்த்துக்கள்....

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல அலசல்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அலசல்......

தொடரட்டும்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பல்சுவை பதிவு, வரும் ஆண்டு இன்னும் நலமாக இருக்க வேண்டும்.

கவிதை வானம் சொன்னது…

நல்ல தொகுப்பு அண்ணேன்...புத்தாண்டு வாழ்த்துக்கள்