மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

தொடர்பதிவு : மகிழ்வான தருணங்கள்...

மகிழ்வான தருணங்கள் அப்படின்னு ஒரு தொடர்பதிவை தென்றல் சசிகலா அக்கா அவர்கள் தனது மகிழ்வான தருணங்களை எழுதி அதில் நம்மையும் எழுத அழைத்து மாட்டிவிட்டுவிட்டார்கள்... நானும் ஐந்து பேரை மாட்டிவிடணுமாம்... இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை எழாமல் ஆண், பெண் இருவரும் சமமாக ஆறு பேரை அழைக்கிறேன். பதிவிற்குள் செல்லும் முன்னர் மேளதாளம் முழங்க மாட்டிக்கொண்டவர்களை அழைத்துவிட்டு மெதுவாக பதிவிற்குள் செல்லலாம்....

மனசு முழுவதும் சந்தோஷமாக கீழே கொடுத்துள்ள உறவுகளை இந்தப் பதிவைத் தொடர அழைக்கிறேன்.



அப்பா இப்பத்தான் சந்தோஷமாக இருக்கு.... யான் பெற்ற இன்பம் இவர்களும் பெறுக...!

சரி வாங்க... நம்ம சந்தோஷ தருணங்களைப் பார்ப்போம்...


கணிப்பொறி மையம் வைத்திருந்த போதும் கல்லூரியில் வேலை பார்த்த போதும் பெரும்பாலும் விசுவல் பேசிக், ஜாவா, சி++ என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்ததால் பொழுது போக்குகள் நிறைந்த வலைப்பூவையோ முகநூலையோ பற்றி அறிந்து கொள்ளும் எண்ணம் எழவில்லை. 

தேவகோட்டையிலிருந்து சென்னை வந்து சிலகாலம் வேலை பார்த்து அங்கிருந்து என்னைப் பயணிக்க வைத்த வாழ்க்கைத் தேடல்  அபுதாபியில் கொண்டு வந்து நிறுத்தியபோது மனைவியும் பாப்பாவும் அம்மாவின் வயிற்றில் இருந்த விஷாலும் மட்டுமே மனசெல்லாம் நிரம்பி இருந்தார்கள்... 

இங்கும் இயந்திரத்தனமான வேலை... வேலை முடிந்ததும் களைப்பில் எப்படா அறைக்குச் செல்வோம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்... வேலை... அறை என்ற இயந்திர வாழ்க்கைக்குள் இறுக்கமாய் அமர்வதாய் மனசுக்குள் தோன்ற கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அதிகம் தொடராத எழுத்தை மீண்டும் தொடர ஆரம்பித்தேன்... அதிகமான கதைகள் எழுதினேன். 

அந்தச் சமயத்தில் எனது நண்பன் கணேசன் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்தான். அதைப் பார்த்ததும் எனக்கும் ஒரு ஆசை நாமளும் எழுதினால் என்ன என்ற எண்ணம் மேலிட எப்படி வலைப்பூ ஆரம்பிப்பது எனக் கேட்டு நண்பனுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவனும் எனக்கு உதவ, 2009 ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி கிறுக்கல்கள் என்ற வலைப்பூவை ஆரம்பித்து சின்னச்சின்ன கவிதைகளைப் பதிய ஆரம்பித்தேன்,  எனது முதல் பதிவிற்கு நிலாமதி அவர்கள் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தினார்கள். 

அதன் பின்னர் பின்னூட்டங்களும் நண்பர்கள் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட பதிவு போதை தந்த உற்சாகத்தில் கிறுக்கல்களோடு நெடுங்கவிதைகள், சிறுகதைகள், மனசு என நான்கு தளங்களை ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். எனது கிறுக்கல்கள் தளத்தில் பதிந்த கவிதை ஒன்றை நாடோடி இலக்கியன் அவரது பகிர்வில் சிலாகித்திருந்தார். இதுதான் மற்றொரு தளத்தில் எனது பதிவிற்குக் கிடைத்த முதல் அங்கிகாரம்... நம்ம எழுத்தும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு ஒரே சந்தோஷம்தான் போங்க... அம்மா இன்னைக்கு தோசை சூப்பரா இருக்குன்னு சொன்னா உடனே அம்மா சந்தோஷத்துல நம்ம புள்ள இன்னொரு தோசை சாப்பிடமாட்டானான்னு வேகமாக அப்போ முறுகலா ஒரு தோசை வாங்கிக்கன்னு கூடுதலா ஒண்ணு வைப்பாங்களே... அது மாதிரி கிறுக்கித் தள்ளியாச்சு...

அப்புறம் ஒரு தடவை பனித்துளி ஷங்கர் அவர்கள் நாலு வலைய வச்சிக்கிட்டு ஏய்யா நீ மாரடிக்கிறதுமில்லாம எங்களையும் வதையுங்கொலையும் வாங்கிறேன்னு செல்லமா சொன்னாரு... இவருக்கு பொறாமையா இருக்குமோன்னு நானும் விடாம நாலையும் இறுக்கிப் பிடிச்சிக்கிட்டேன்... அப்புறம்தான் தெரிஞ்சது அவரு சொல்றது உண்மைதான்... எல்லாத்தையும் ஒரு தளத்துல பதியலாமேன்னு முடிவு பண்ணி எதில் பதிவதென யோசித்தபோது நண்பர்களுடன் நடத்திய மனசு கையெழுத்துப்பிரதி அனுபவம் எப்போதும் சந்தோஷத்தின் உச்சம் என்பதால் மனசில் தொடர முடிவெடுத்து ஒரு தளத்துக்கு மாறினேன்.

அப்புறம் சீனா ஐயா அவர்களின் ஆசியோடு வலைச்சர ஆசிரியனாய் ஒரு வாரம்... அதீதத்தில் சிறுகதைகள்... கல்லூரியில் படிக்கும் போதே பத்திரிக்கைகளில் எழுதியிருந்தாலும் மீண்டும் பத்திரிக்கைகளில் சிறுகதைகள், கவிதைகள்... வம்சி வெளியிட்ட காகங்கள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் என்ற சிறுகதைத் தொகுப்பில் எனது கருத்தப்பசு சிறுகதை... கதம்பமாலையில் எனது கவிதைகளை சென்ற வார டாப்-10 என தொகுக்கும் ஆசிரியர் தொடர்ந்து இருமுறை மூன்றாவதாக தேர்ந்தெடுத்து பகிர்ந்தது, வலைச்சரத்தில் அதிகமுறை எனது பதிவுகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியது என எனக்கு வலைப்பூ கொடுத்த வசந்தம் அதிகம். 

குறிப்பாக இதன் மூலம் நமது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் உறவுகளைப் பெற்றது... நமது எழுத்தின் நிறை குறைகளை மனசார சொல்லிச் செல்லும் உள்ளங்களைப் பெற்றது... பெரும்பாலான நேரங்களில் மனவலியைக் குறைக்கும் மருந்தாக இருப்பது என வலைப்பூ வாழ்வில் முக்கியமானதாய் ஆகிப் போனது என்பதே உண்மை. 

வலைப்பூவிற்கு வரும் முன்னரே பத்திரிக்கைகளில் கதை, கவிதை எழுதியிருந்தாலும் கல்லூரியில் படிக்கும்போது 'ஒரு கட் அவுட் நிழலுக்குக் கீழே' என்ற எனது கவிதை முதன் முதலில் தாமரையில் வெளியான அந்த தினம் கொடுத்த சந்தோஷம் இன்னும் மறக்க முடியாத சந்தோஷம்....

இன்று எனது எழுத்துக்கள் உங்களால்தான் செம்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை என் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்கிறேன்... 

கடைசியாக... என்ன வலைக்குள் நுழைந்தால் வலையில் சிக்கிய மீனாக வெளியில் வரமுடியாமல்... வர நினைக்காமல் அதிலேயே மனம் லயிப்பது ஒருவித போதை என்றாலும் இந்தப் போதை தரும் சுகம் சந்தோஷமானது என்பதால் மனம் மகிழ்வுடன் மற்ற நண்பர்களின் எழுத்துக்களை வாசித்துக் கொண்டே இருக்கிறது....

சரி... இத்தோடு  நிறுத்திக்கலாம்.... சசிகலா அக்கா அவர்களின் அழைப்பை ஏற்று எழுதியாச்சு.... எனது அழைப்பை ஏற்று எல்லாரும் எழுதிருங்க... 

திண்டுக்கல் தனபாலன் சாருக்கு... உங்களை யாராவது அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏன்னா வலைப்பூக்களில் சுறாவளி சுற்றுப்பயணம் செய்பவர் நீங்கள்... அப்படி யாருமே உங்களை அழைக்கவில்லை என்றால் நீங்களும் எழுதுங்கள்....
-'பரிவை' சே.குமார்

20 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கணேசன் அவர்களுக்கும், நிலாமதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்...

வேறு ஒரு சூறாவளி பயணத்தில் உள்ளேன்... மகிழ்ச்சியான தருணத்தில் தொடர்கிறேன்... நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிமையான நினைவுகள்.....

தொடரட்டும் உங்கள் பதிவுகள்....

சென்னை பித்தன் சொன்னது…

மகிழ்வான தருணங்கள் பற்றிப்படிக்க மகிழ்வாக இருக்கிறது!

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

தம்பியின் சந்தோசமான தருணங்களைக் கண்டு நானும் மகிழ்ச்சியடைந்தேன்..வாழ்த்துகள். தம்பியின் சந்தோசம் என்றும் நிறைந்திருக்க வேண்டுகிறேன்..

அதெல்லாம் சரி அக்காமேல எதாச்சும் கோபம்னா இப்படித்தான் சிக்கவைக்கிறதா..?? சும்மா ஏதோ 4 வரி கிறுக்கிகிட்டு இருக்கிற என்னையும் இதில் கூப்பிட்டு வம்பிழுத்து...??!!

சரி இதற்கு ஏதேனும் கால அவகாசம் உண்டா..? எங்க எழுதனும்..அவரவர் தளத்திலா..?/

//வலைப்பூக்களில் சுறாவளி சுற்றுப்பயணம் செய்பவர் திண்டுக்கள் தனபாலன் சார்../ உண்மைதான் தம்பி எந்தத்தளத்தில் பார்த்தாலும் நம்ம சகோ அங்க இருக்காரு..:)

கோமதி அரசு சொன்னது…

அம்மா இன்னைக்கு தோசை சூப்பரா இருக்குன்னு சொன்னா உடனே அம்மா சந்தோஷத்துல நம்ம புள்ள இன்னொரு தோசை சாப்பிடமாட்டானான்னு வேகமாக அப்போ முறுகலா ஒரு தோசை வாங்கிக்கன்னு கூடுதலா ஒண்ணு வைப்பாங்களே... அது மாதிரி கிறுக்கித் தள்ளியாச்சு...//

அருமையான எடுத்துக்காட்டு.
மகிழ்வான தருணங்கள் அருமை. படம் வெகு அருமை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன் சார்...
சூறாவளி சுற்றுப் பயணம் முடிந்து திண்டுக்கல்லில் மையம் கொள்ளும் போது எழுதுங்கள்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க வெங்கட் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சென்னை பித்தன் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க காயத்ரி அக்கா...
அதுதான் வலைச்சரப் பணி முடிஞ்சாச்சுல்ல...
முகனூலில் சுற்றாமல் பதிவை விரைவா எழுதுங்க...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கோமதி அக்கா....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…

விசுவல் பேசிக், ஜாவா, சி++ இம்புட்டு தெரியுமா

எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாதே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யோவ் ஐந்து பேர்தானே சேர்க்க சொன்னாங்க இதென்ன ஆறுபேர் ? ரூம் போட்டு ஜோசிப்பீங்களோ அவ்வ்வ்வ்....

மகிழ்வான தருணத்தில் வருகிறேன், ஏற்கனவே நக்கீரன் அண்ணன் அழைத்த அழைப்புக்கு பதில் போடலைன்னு கடுப்புல இருக்கார் ஹா ஹா ஹா ஹா...

ரம்ஜான் முடிந்து இதோ ஈத் பெருநாளும் வந்தாச்சு, நான் ஹோட்டல் ஃபீல்டு தெரியும்தானே ? ரொம்ப பிசியாகிருவோம், நன்றி முயற்சிக்குறேன் மக்கா.

ஸ்ரீராம். சொன்னது…


உங்களைப்பற்றி அறிய முடிந்தது. பத்திரிகைகளில் கல்லூரிக் காலத்திலேயே உங்கள் எழுத்து வந்திருக்கிறது என்பது மகிழ்வைத் தருகிறது. 'தாமரை' யை நினைவு படுத்தினீர்கள். கோமதி மேடம் சுட்டிக் காட்டியிருப்பது போலவே தோசை ரெபரன்ஸ் நன்றாக இருந்தது. நண்பரின் தளத்தில் சிலாகிக்கப்பட்ட கவிதையை இங்கு இதனுடன் பகிர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. காகங்கள் கொத்தும் தலைக்குரியவன் புத்தகம் ஒன்றை அப்பாதுரை எனக்குப் பரிசளித்துள்ளார். அதில் கருத்தபசு இன்றே படிக்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சக்கரக்கட்டி...

வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

எல்லாம் தெரியும்தான் ஆனா இப்போ எல்லாத்திலும் ஜீரோதான்.... இப்போ குப்பை கொட்டுவது வேற ஒரு சாப்ட்வேரோடு... வேண்டாம் என்று ஒதுங்கி வந்த கணினியோடும்தான்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மனோ அண்ணா...

நீங்க எவ்வளவு பிஸி என்பது தெரியும். வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லா வேலைகளுமே பரபரப்பானவைதான்... ஹோட்டல் என்பது கூடுதல் பரபரப்புத்தான்....

நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க ஸ்ரீராம்....
முதல் வருகைன்னு நினைக்கிறேன்....

எல்லாம் பதிய ஆசைதான்... நண்பர்களின் பெயரை அவர்களது இணைய முகவரியோடு இணைப்பாய்க் கொடுக்கவும் எண்ணினேன்... சோம்பல் ஜெயித்துவிட்டது. மற்றுமொரு பகிர்வில் கண்டிப்பாகப் பார்க்கலாம்...

கருத்தப்பசு படியுங்கள்... எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

செய்தாலி சொன்னது…

அருமையான நினைவுகள் சகோ

செய்தாலி சொன்னது…

என்னையும் எழுத அழைத்தமைக்கு மிக்க நன்றி

r.v.saravanan சொன்னது…

இனிமை நினைவுகள் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது குமார் இனியும் அவை தொடர உளமார வாழ்த்துகிறேன்

சசிகலா சொன்னது…

தளத்திற்கு பெயர் வைத்தது முதல் இரண்டு மூன்று வலைகளை வைத்து அசத்தியிருக்கிங்க நான் உங்களை புதியவர் என்றே நினைத்திருந்தேன்.. ஹஹ

சில நாட்களாக வலைப்பக்கம் வரஇயலவில்லை அதனால் தங்கள் பகிர்வை இப்போதே படிக்கிறேன் சகோ மன்னிக்கவும் தாமத வருகைக்கு.

உங்க எழுத்து நடை படிக்க சுவார்யஸ்யமாக இருக்கிறது. தொடருங்கள் மகிழ்வுடனே.

அழைப்பினை ஏற்று பதிவிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி தம்பி.

மாதேவி சொன்னது…

இனிமையான நினைவுகளை பகிர்ந்துள்ளீர்கள். படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.