மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 23 மே, 2012மறந்தவை... மறைந்தவை...

கிராமத்து பசங்களோட ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பாட்டு இருக்கும். அந்தப் பாட்டுக்களை பாடிக்கொண்டு விளையாடுவது என்பது உற்சாகத்தின் உச்சம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் இப்போ இருக்கிறதா..? இன்றைய நிலையில் கிராமத்துல பிறந்த பிள்ளைகளுக்கே அப்படி ஒரு பாட்டு இருப்பது தெரியாது. காரணம் என்னன்னா இப்ப பிள்ளைங்க படிப்பு, வெளியூரில் வேலை, பொய்த்துப் போன விவசாயம் என கிராமம் மெல்ல மெல்ல நகரத்துக்குள் வந்துவிட்டது. கூட்டாக பிள்ளைகள் விளையாடுவது என்பது அரிதாகிவிட்டது.

தொலைக்காட்சியும் இணையமும் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் கட்டிப் போட்டுவிட்டன. முன்பெல்லாம் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு பக்கத்து வீட்டுப் பெரிசுடன் அளவளாவிக் கொண்டிருக்கும் பெரியவர் கூட கிரிக்கெட்டையும் நாதஸ்வரத்தையும் பார்த்துக் கொண்டு தொலைக்காட்சி முன்பு தவமிருக்கிறார். உறவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அந்நியமாகி வருகின்றன என்பதே உண்மை.

பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் காபியோ கஞ்சியோ குடித்துவிட்டு மாலை ஆரம்பிக்கும் விளையாட்டு இரவு வரை தொடர்வதும்... ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 'அடேய் ராமு...' 'அடேய் சேகரு...' என்று அழைப்போசை கேட்டதும் 'சாப்பிட்டுட்டு வாறேன்' என்று சொல்லிச் சென்று மீண்டும் வந்து விட்ட இடத்தில் இருந்து விளையாடுவதும் வாடிக்கையாக இருந்த வாழ்க்கையோடு இன்றைய சிறார்களின் வாழ்க்கையை ஒப்பிட்டுக்கூட பார்க்க முடியாது.

அப்படி விளையாண்ட நாட்களில் விளையாட்டோடு ஒன்றிய பாடல்கள் பல மறந்து விட்டன... இல்லையில்லை... காலச் சுழற்சியில் மறைந்து விட்டன என்றால் மிகையாகாது. அப்படி மறைந்த பாடல்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்...

கண்டு பிடிச்சு விளையாடும் போது ஒருத்தர் கண்ணை பொத்திக் கொள்ள மற்றவர்கள் ஒடி ஒளிந்து கொள்வார்கள். அப்படி கண்ணப் பொத்தும் போது சும்மா பொத்த மாட்டாங்க... அதுக்கு ஒரு பாட்டு பாடுவாங்க...

'கண்ணாங் கண்ணாம் பூச்சி
கடகட தோழி
எத்தனை முட்டை
மூணு மூட்டை
நொள்ள முட்டையை போட்டுட்டு
நல்ல முட்டையை கொண்டு வா...'

இதுல எத்தனை முட்டையின்னு கேட்டதும் கண்ணு பொத்தப்பட்டிருப்பவர் விளையாடுற ஆட்களின் எண்ணிக்கையை சொல்ல வேண்டும்.

இதே போல் சொட்டாங்காய் விளையாடும் போது ஒண்ணான்... ரெண்டான்... மூணான்... இப்படி போகும் போது இடையில் சில ஆட்டங்களில்....

'அத்திப் பித்தித் தா
தவிடு தள்ளித் தா
திங்க மாட்டேன் போ
சீனி போட்டுத் தா
தின்னு விட்டேன் வா...'

என்ற பாடலும்....

'ஊத்தா ஒழுங்கா
சம்பா சரவணக் கும்பா'

என்ற பாடலும் வரும். இன்னைக்கு பலருக்கு சொட்டாங்காய் எப்படி விளையாடுறதுன்னு தெரியாது. அப்புறம் எப்படி இந்தப் பாட்டு ஞாபகம் இருக்கும்... இல்லையா?

கிச்சுக் கிச்சுத் தம்பளம் விளையாடும் போது மண்ணுக்குள் குச்சியை ஒளித்து வைக்கும் போது...

'கிச்சுக் கிச்சுத் தம்பளம்
கிய்யா கிய்யா தம்பளம்
நட்டு வச்ச் இடத்துல
பட்டுப் போ பட்டுப் போ...'

அப்படின்னு பாடிக்கிட்டே குச்சியை மண்ணுக்குள் ஒளித்து வைப்பார்கள்.
மழைக் காலத்தில் பள்ளிக்குச் செல்லும் போதோ அல்லது திரும்பி வரும்போதோ ரோட்டோரத்தில் அழகாக ஊர்ந்து செல்லும் நத்தையைக் கண்டதும் வரும் பாடல் இது.

'ஊறி ஊறியாரே...
உடப்பம்பட்டியாரே...
புள்ள குட்டி நல்லாயிருக்கா...
பொதுக்கை செட்டியாரே...'


இதுல ஊறி சில நேரத்துல ஊதின்னு கூட வரும். உடப்பம்பட்டி எப்பவுமே ஒடப்பம்பட்டிதான்... அப்புறம் இந்த பொதுக்கை செட்டியாரே... பல ரூபத்துல வரும். அதெல்லாம் இப்ப எதுக்கு... எல்லாருமா சேர்ந்து கோரஸா பாட ஆரம்பிச்சிட்டா பள்ளிகூடத்துக்கு ரெண்டு கிலோ மீட்டர் நடக்கிற அலுப்பே இருக்காது.


கை விரல்களை ஒன்றன் மேல் ஒன்றாக வளைத்து அடுக்கி வச்சிக்கிட்டு சின்ன குழந்தைக்கு விளையாட்டுக் காட்டும் போது வரும் பாடல் என்ன தெரியுமா? அந்தப் பாடல் இதோ...

'குப்பையை குப்பையை
நோண்டினேன்...
கோணக் கையாப் போச்சு...
நாகருக்கு நேர்ந்தேன்
நல்ல கையா ஆயிருச்சு...'

நல்ல கையா ஆயிருச்சுன்னு சொல்லும் போது எல்லா விரலையும் விரிச்சுக் காட்ட அழுகிற குழந்தை அழுகையை விட்டுட்டு சிரிக்க ஆரம்பிக்கும்.

தட்டான் பிடிக்கும் போது ரெண்டு பேருக்கு சண்டையின்னு வையிங்க, ஒருத்தன் தட்டானை பிடிக்கப் போகும் போது இன்னொருத்தன் சத்தம் போட்டு கெடுத்துடுவான். அதுவும் எப்படி இந்த பாட்டைப் பாடி கத்தினால் தட்டான் பறந்து போயிடுமில்ல...

'தட்டான் தட்டான் டோய்...
தவளைத் தட்டான் டோய்...
உன்ன ஒருத்தன் புடிக்க வாறான்...
ஓடிப்போ டோய்...'

அப்படின்னு கத்தியே அதை விரட்டிருவான். அப்புறம் என்ன மண்ணுக்குள்ள மல்லுக்கட்டுதான். ஆனா அந்த சண்டையிலயும் ஒரு சுகம் இருக்கும். அடிச்சு... முகமெல்லாம் கிள்ளி சண்டை போட்டாலும் அடுத்த நாள் ரெண்டு பேரும் பின்பக்கம் கிழிஞ்ச காக்கி டவுசரை ஒரு கையில புடிச்சிக்கிட்டு தோள் மேல கை போட்டுக்கிட்டு தீவிரமா பேசிக்கிட்டு பள்ளிக்கூடம் போயிடுவாங்க.

இப்ப மேல பார்த்த பாட்டையெல்லாம் 'டியர் பாய்ஸ்... ஐ ஆம் சிங் எ சாங்... நத்தை சாங்... சொட்டங்காய் சாங்...' அப்படியெல்லாம் யாரும் ஆரம்பிக்க மாட்டாங்க... அவனவனுக்கு என்ன மாதிரி பாடத் தோணுதோ அப்படி பாடுவாங்க. இன்னும் கொலகொலயாம் முந்திரிக்கா..., அத்தளி பித்தளி அப்படின்னு நிறைய பாடல்களை சொல்லிக்கிட்டே போகலாம்.இப்படி விளையாட்டோட ஒன்றிய பாடல்கள் எல்லாம் மறைந்து விட்டன என்றால்கூட  கால மாற்றம் என்று நினைக்கலாம். ஆனால்  இந்த விளையாட்டுக்களும் அரிதாகிவிட்டன என்று நினைக்கும் போது வேதனைப்பட மட்டுமே முடிகிறது. 

 இப்ப கிராமங்கள்ல கபடி விளையாடக்கூட ஆளில்லைங்க...  எங்கள் பகுதியில் கிராமத்து திருவிழாக்களின் போது மாட்டு வண்டிப் பந்தயம், கபடி போட்டி, இளவட்டக் கல் தூக்குதல், உறி அடித்தல் போன்ற விளையாட்டுக்களை இன்னும்  நடத்துறதுக்கு ஆளிங்க இருக்காங்கன்னு நினைக்கும் போது மனசுக்குள்ளே சாரல் மழை போல சந்தோசம் வந்து போறதை மறுக்க முடியலைங்க.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவி : கூகிள்.
-

18 கருத்துகள்:

 1. உண்மை

  கவிதையும் பதிவும் அழகு

  என்னை முதன் முதலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய
  உங்களை இன்று அங்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்து
  வாருங்கள் உறவே

  பதிலளிநீக்கு
 2. சூப்பர்ர்ர் மலரும் நினைவுகள்!!

  பதிலளிநீக்கு
 3. எல்லா விளையாட்டும் விளையாடியிருக்கோம்,ஆனால் இந்த மாதிரி பாடல்கள் எங்க ஊர் பக்கம் இல்லை,நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 4. மலரும் நினைவுகள் அற்புதம்! இதில் பாதி பாடல்கள் எனக்கும் நினைவிருக்கிற‌து!

  பதிலளிநீக்கு
 5. அருமையான நினைவலைகள்!!

  ‘கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்’ மட்டும் அறிந்த பாடல். மற்றவற்றை ரசித்தேன்.
  நல்ல பதிவு குமார்.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா!!.. அருமையான பாடல்கள். இதையெல்லாம் இப்பத்திய கார்ட்டூன் யுகத்துல குழந்தைகள் மறந்தே போயிட்டாங்க..

  பதிலளிநீக்கு
 7. நல்ல பகிர்வு சார் ! நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் !

  பதிலளிநீக்கு
 8. நான் சிறுவனாய்ச் சிற்றூரில் சுற்றித்திரிந்த காலத்துக்கே போய் விட்டேன். நன்று.

  பதிலளிநீக்கு
 9. வாங்க செய்தாலி அண்ணா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  வலைச்சரத்தில் மீண்டும் ஒரு அறிமுகம் உங்கள் மூலமாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க மேனகாக்கா...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  நம்ம பக்கம் வந்து ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. வாங்க ஆசியாக்கா...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  எங்க பக்கம் பாட்டுப் பாடித்தான் விளையாடுவோம். அது ஒரு காலம்... கனாக்காலமாகிவிட்டது...
  மீண்டும் அந்த வாழ்க்கைக்கு போனால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் இல்லையாக்க்கா.

  பதிலளிநீக்கு
 12. வாங்க் மனோ அம்மா...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  நிறைய பாடல்களை மறந்து விட்டோம் என்பதே உண்மை.


  வாங்க ராமலெக்ஷ்மி அக்கா...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 13. வாங்க சாரல் அக்கா...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க தனபாலன் சார்....
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க சென்னை பித்தன் ஐயா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிதான் என்னை எழுத வைக்கிறது. உங்கள் வாழ்த்துக்கள் எனது எழுத்துக்கு உரமாகவும் என்னை எழுதத் தூண்டும் உந்து சக்தியாகவும் இருக்கிறது என்பதை மகிழ்வுடன் சொல்லிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் மட்டும்தான் என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிருக்கிறேன்.மற்றதெல்லாம் புதுசாயிருக்கு குமார்.இப்பிடி விளையாடக் குடுத்து வச்சிருக்கவேணும் !

  பதிலளிநீக்கு
 16. //////அளவளாவிக் கொண்டிருக்கும் பெரியவர் கூட கிரிக்கெட்டையும் நாதஸ்வரத்தையும் பார்த்துக் கொண்டு தொலைக்காட்சி முன்பு தவமிருக்கிறார்.//////

  உண்மையில் கிராமப்புறங்களில் இவை பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது...

  ஆனால் தங்கள் பதிவுகளின் மண் வாசனை குறையவே இல்லை..

  பதிலளிநீக்கு
 17. வாங்க ஹேமா அக்கா...
  இந்த விளையாட்டுக்களெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது வேதனையான விஷயம்,
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க வானதி...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க ம.தி.சுதா...
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...