மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 11 மே, 2012என்னைக் கவர்ந்த வழக்கு - ஒரு பார்வை


நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமா என்ற வரம்பை விட்டு வெகுதூரம் வெளியே வந்து நமக்கருக்கில் வாழும் மனிதர்களை திரையில் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கும்... கொடுத்துக் கொண்டிருக்கும் படம்தான் வழக்கு எண்: 18/9.

தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்கள் இருந்தாலும் சேரன், அமீர் போன்ற ஒரு சிலரே தமிழ் சினிமாவை உயரப் பறக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இணைந்திருக்கும் பாலாஜி சக்திவேல்.... ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரங்களை மட்டுமின்றி அவர்களுக்கு அருகே இருக்கும் நகரும்... நகரா பொருட்களை எல்லாம் பேச வைத்திருக்கிறார்.

வழக்கு எண் என்றதும் கதைக்களம் நீதிமன்றமும் வக்கீல்களின் வாதங்களுமாய் நகருமோ என்று நினைத்தால் ஆசிட் வீசப்பட்ட பெண் மருத்துவமனையில் இருப்பதில் தொடங்குகிறது கதை. அதன் பிறகு எந்தப் படத்துக்குப் போனாலும் தொணதொணவென்று பேசுபவர்களாக இருக்கட்டும்... சும்மா விசிலடிப்பவர்களாக இருக்கட்டும்... எல்லாரையும் கதையோடு கதை மாந்தரோடு பயணிக்க வைத்தது மூலம் வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார் இயக்குநர்.

படத்தைப் பற்றி பல நண்பர்கள் விமர்சனங்களை தங்களது வலைப்பூவில் எழுதிவிட்டார்கள்... கதையை மீண்டும் ஒரு முறை எழுதி விமர்சனப் பதிவாக ஆக்க நினைக்கவில்லை. என்னை கவர்ந்தவைகளை இங்கே எழுதலாமென்று நினைக்கிறேன்.

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மீதான ஒருதலைக் காதல், பணக்காரப் பையனின் காமம் நிறைந்த காதல் என இரண்டு கதைகளுடன் இயல்பாய் பயணிக்கிற கதையில் இயல்பாய் சில மனிதர்கள் வந்து போகிறார்கள். அவர்களில்...

சின்னச்சாமி... படத்தில் அதிகம் கவர்ந்த கதாபாத்திரம்... முதலாளியிடம் கணக்கைப் பார்த்து காசைக் கொடு என்று கேட்கும் தெனாவெட்டு... சூட்டிங்கில் கதாநாயகன் வசனம் பேச திணறும் போது தானாக வசனத்தை சொல்லுவது... ஸ்ரீயுடன் நட்பு பாராட்டி அவனை யோவ்...யோவ் என்று அழைப்பதாகட்டும்... கலக்கல் நடிப்பில் பார்ப்பவர்கள் மனதில் கலந்து விடுகிறான்...இந்தக் கூத்துக்காரனுக்கு தெரு நாடக மேடைகள் மட்டுமே உலகமாக இருந்திருக்கும்... பாலாஜி சக்திவேலின் பார்வை பட்டதால் தமிழ் சினிமா இவனை உயரப் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

பசியால் ஒருவன் விழுந்து கெடக்கும் போது டிபன் பாக்ஸூடன் செல்லும் மனிதர்கள்... காலையிலயே அடிச்சிட்டியா... என்ற பேச்சுக்கள் மத்தியில் உடலை விற்று வயிற்றைக் கழுவும் ரோஸி, யாராவது சாப்பாடு கொடுங்க என்று கேட்டு கிடைக்காத நிலையில் கையேந்தி பவனில் வாங்கி அவனை கைகழுவச் செய்து சாப்பிட வைக்கும் போதும், தனது சக தோழியுடன் எங்க போகலாம் என்று பேசியபடி நடந்து செல்லும் போதும், தண்ணியடிக்க காசு கேட்டு நிக்கும் போதும், ஸ்ரீ காசு கொடுத்து இனி தண்ணி அடிக்காதக்கா என்றதும் கண்களில் நீருடன் போகும் போதும் ரோஸி ஸ்ரீக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் ரோஸி அக்காவாக் உயர்ந்து நிற்கிறார்.

அந்த அலட்டலில்லாத போலீஸ்காரர்... எங்கய்யா புடிச்சாங்க... ஸ்ரீயை விசாரிக்கும் போது, 'அந்த முறுக்கு கடை முதலாளி மேல நீ எண்ணய ஊத்தியிருக்கனுமிடா'என்று சொல்வதாகட்டும்... ஆர்த்தியிடம் பேசும் போது 'பரிட்சையாம்மா நீ போ' என்று சொல்வதாகட்டும்... பசங்களை ஜட்டியுடன் உக்கி போட வைத்து மிரட்டுவதாகட்டும்... அமைச்சரிடம் பேசுவதாகட்டும்... ஜெயலட்சுமியிடம் 'அம்மா இனி நீங்க ஸ்ட்ரைட்டா எங்கிட்டே வாங்க' என்பதாகட்டும்... நல்ல மனிதராக இருப்பார் என்று எண்ணினால் நல்ல பாம்பே அவர்தான் என காட்சிகள் விரியும் போது அவரது நடிப்பு நம்மை மிரள வைக்கிறது... முதல் படத்தில் நடித்தது போலவே தெரியவில்லை.

நாயகன் ஸ்ரீ... கனா காணும் காலங்களில் நடித்தவர், நடைபாதைக் கடையில் வேலை செய்து கொண்டு நடை பாதையில் படுத்து உறங்கும் எத்தனையோ இளைஞர்களின் பிரதிபலிப்பாக இதில் வாழ்ந்திருக்கிறார். ஜோதியை ஒரு தலையாக காதலிப்பது, அவளை தன் தாயாக பார்ப்பது, அவளுக்காக செய்யாத குற்றத்துக்காக தண்டனையை ஏற்றுக் கொளவது என பஞ்ச் டயலாக் பேசும் நடிகர்கள் மத்தியில் வசனங்களை மட்டுமே நம்பாமல் நடிப்பையும் கலந்து நாம் பார்த்த மனிதர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.... இல்லை...இல்லை... வேலு என்ற இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார்.

ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா, சராசரி வேலைக்காரப் பெண்ணாக நடித்திருக்கிறார். போகும் போதும் வரும் போதும் ஸ்ரீ தன்னை பார்ப்பதை வெறுப்பதும், பக்கத்து வீட்டு சிறுவனை கொஞ்சும் போது அம்மா திட்டினாலும் அவனுடன் கண்களால் பேசுவதாகட்டும்... நிறைவாக செய்திருக்கிறார். படத்தில் மூன்று நான்கு வசனங்கள் மட்டுமே பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்... அவரது உடம்பும் கண்களுமே வசனம் பேசுகிறது.

ஆர்த்தியாக வரும் மனிஷா யாதவ், பணக்கார வர்க்கத்தின் வாரிசாக வாழ்ந்திருந்தாலும் பெண்மைக்கே உரிய பதட்டம், தவிப்பு... பருவ வயதில் வரும் ஆசைகள் என எல்லாம் கலந்து ஆர்த்தி கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்.

பள்ளிக்கூடம் நடத்தும் பண்பு கெட்ட அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்து, இன்றைய இளைய சமுதாயம் எந்த வழியில் செல்லக்கூடாது என்று எல்லாப் பக்கத்திலிருந்தும் அறிவுரைகள் வந்தாலும் அதையும் தாண்டி இண்டர்நெட், செல்பேசி என சிக்கி கெட்டுப் போய்க்கிடக்கும் கோடானு கோடி மாணவர்களின் பிம்பமாக சொன்னதை சரிவர செய்திருக்கும் மிதுன் முரளியும் சோடை போகவில்லை.

காதல் டூயட் என்று கடற்கரைக்கோ அல்லது கனடாவுக்கோ செல்லாமல் கதையோடு உறவாடி வரும் இரண்டு பாடல்களும் இனிமை. அதிலும் 'வானத்தை எட்டிப் பிடிப்பேன்...' நம் மனதுக்குள் சோகமாய் இறங்கி சுகமாய் உட்கார்ந்து கொள்கிறது.

மேலும் ஜோதியின் அம்மா, கையேந்தி பவன் முதலாளி, முகம் காட்டாமல வரும் அமைச்சர், ஸ்ரீயின் அப்பா, அம்மாவாக நடித்திருப்பவர்கள், வட நாட்டு முதலாளி, ஆர்த்தியின் தோழியாக வந்து தமிழை கொஞ்சம் கொன்று பேசும் மாணவி என படத்தில் வரும் எல்லாருமே அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் இறைந்து கிடக்கும் பாட்டில்களும் இறுதிக் காட்சிக்கான சாட்சிகளாகத் தெரிகின்றன. சில இடங்கள் நம்மோடு ஒட்டவில்லை என்றாலும் காதல் கொடுத்த இயக்குநர் வழக்கையும் வாழ்க்கையோடு வார்த்துக் கொடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.


படத்தை தயாரித்த UTV & திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மற்றும் படக்குழுவினர் அனைவருமே பாராட்டுக்குறியவர்கள்.

திரு. பாலாஜி சக்திவேல் அவர்களே... இந்த வெற்றி உங்களை மேலும் நல்ல படைப்புக்களை வார்த்தெடுக்க வைக்கும் வெற்றியாக இருக்கட்டும்.

-'பரிவை' சே.குமார்.

படங்கள் உதவி : கூகிள்

10 கருத்துகள்:

 1. மிக சிறப்பான விமர்சனம், குமார்.

  பதிவுகளில் நான் படித்த வரை இப்படத்தைப்பற்றி எல்லோரும் நல்ல விதமாகவே கூறியிருக்கீரார்கள்.

  பதிலளிநீக்கு
 2. படத்தை பார்க்கவேண்டும் என ஆவலைத் தூண்டுகிறது...நன்றி..

  பதிலளிநீக்கு
 3. ஒரு அலசு அலசி விட்டீர்கள்.நல்ல விமர்சனம்

  பதிலளிநீக்கு
 4. நடு நிலையான உங்க விமர்சனம் படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 5. உணமையான;சத்தியமான ஒரு விமர்சனம்..அல்ல,.......யதார்த்தம் உரைத்தீர்கள்!இரண்டு தடவை பார்த்தும் இன்னுமின்னும் பார்த்து கிரகித்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது உங்கள் எழுத்துக்குப் பிறகு!!!

  பதிலளிநீக்கு
 6. விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது..!!!

  பதிலளிநீக்கு
 7. வாங்க ரமா அக்கா...
  உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ராமலஷ்மி அக்கா...
  உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க காயத்ரி அக்கா...
  உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க கோவை நேரம் அவர்களே...
  உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க சகோ.ராஜி...
  உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


  வாங்க யோகா...
  உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க மனோ அண்ணா...
  உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...