மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 27 ஆகஸ்ட், 2011

அர்த்தமுள்ள வாழ்க்கை

பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருக்கும் அந்த ஆட்டோ நிறுத்தத்தில் பத்து ஆட்டோக்கள் இருக்கின்றன. வரிசையாக சவாரி எடுப்பது என்ற எழுதப்படாத சட்டம் சில வருடங்களாக அவர்களுக்குள் கடைபிடிக்கப்படுகிறது. முதலாமவரில் ஆரம்பித்து பத்தாவது நபர் முடித்ததும் மறுபடியும் முதலாமவர் சவாரி எடுப்பார். இதுவும் நல்ல சட்டம்தான், ஒருவரே சவாரி எடுக்காமல் எல்லாருக்கும் ஒன்று போல் வாய்ப்பு கொடுத்து வந்தனர். ஆனால் இதிலும் ஏமாற்று வேலை நடக்கத்தான் செய்தது. தனக்கு வேண்டியவர்கள் என்றால் செல்பேசியில் பேசி, வீட்டு வரைக்கும் போய் வருவதாக சொல்லி சவாரி எடுப்பவர்களும் உண்டு. இருந்தாலும் எல்லாருக்கும் அது போன்ற எண்ணம் வருவதில்லை.

"என்ன மாரியப்பண்ணே... காலையில என்ன சோகம்?" என்றபடி அவரின் ஆட்டோவில் வந்து அமர்ந்தான் சுந்தர்.

"ஒண்ணுமில்லேப்பா..."

"அட முகந்தான் காட்டிக் கொடுக்குதே... என்ன பிரச்சினை உனக்கு"

"பெரியவ வந்திருக்கா சுந்தர்..."

"அதுக்கென்ன சந்தோஷமா விஷயம்தானே... இதுக்குப் போயி அலுத்துக்கிறே... மகளுக்கு கறி வாங்கி சமைக்கச் சொல்லவேண்டியதுதானே... அத்தாச்சிக்கிட்ட சொல்லிட்டு வந்தியா... இல்லேன்னா இந்தா காசு வாங்கிக்கிட்டு போயி கொடுத்துட்டு வா..."

"கறி சாப்பிடுற மூடுல அவ இல்லை சுந்தர்..." சொல்லும் போதே கண் கலங்கியது.

"என்னாச்சிண்ணே... எதாவது பிரச்சினையா..?"

"இதுவரைக்கும் காசு பணம் கேட்டு பிரச்சினை பண்ணினாங்க... கடனை உடனை வாங்கி சரி பண்ணிட்டேன்... ஆனா இப்ப..." கண்ணீர் வழிந்தது.

"கண்ணத்தொடை ஆம்பளை அழுகக்கூடாது... என்ன பிரச்சினை எனக்கிட்ட சொல்லலாமுன்னா சொல்லு..."

"அது...."

"மாரிமுத்தண்ணே.... சவாரி வந்திருக்கு நீதான் போகணும்..." என்று கத்தினான ராஜா.

"இல்ல ராஜா... எனக்கு மனசு சரியில்ல... அடுத்த ஆளை போகச் சொல்லு... நா அப்புறம் போறேன்..."

"என்னண்ணே பேசுறே... பத்துப் பேரு முடிஞ்சு உனக்கு மறுபடியும் எப்ப வாய்ப்பு வருமுன்னு தெரியாது... வீட்டுக் கவலைய விட்டுட்டு சவாரிய பாரு... " என்றான் சுந்தர்.

"இல்ல சுந்தர் மனசு சரியில்ல.... வீட்டுல இருக்க புடிக்காமத்தான் இங்க வந்தேன்.. எனக்கு அடுத்து சேகர்தானே அவனே போகட்டும்..."

"நீ என்ன பேசுறே... சேகர் நீ இரு... இந்த சவாரிய மாரிமுத்தண்ணனுக்காக நான் எடுத்துக்கிட்டுப் போறேன். அண்ணே நீ ஏ.. வண்டியில போயி உக்காரு... இறங்கு..." என்றவன் அவரது வண்டியில் சவாரிய ஏற்றிக் கொண்டு கிளம்பினான். வரும்போது ஒரு சவாரியை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்து அவரிடம் நூறு ரூபாயை கொடுத்தான்.

"என்ன சுந்தர் போன சவாரிக்கு நாப்பதுதானே பேசினே..."

"ஆமா... வரும்போது அறுவது ரூபான்னு பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு சவாரி கொண்டு வந்தேன் அதான்."

"அதை நீ வச்சுக்க..."

"நல்ல கதையா இருக்கே... அதுவும் உன் சவாரிதான்... பேசாம வை... ம்... இப்ப சொல்லு என்ன பிரச்சினை."

"கவிதாவுக்கு பிள்ளை இல்லைங்கிறது உனக்குத் தெரியுமில்ல..."

"ஆமா... அதுக்கென்ன இப்ப..."

"அதுதான் பிரச்சினையே... இப்ப பிள்ளை இல்லாததை காரணம் காட்டி சபீதாவை கட்டித் தரச்சொல்றாங்க... இல்லன்னா வெளியில பாத்துக்கிறோமுன்னு சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க..."

"என்னண்ணே... அநியாயமா இருக்கு. ரெண்டு பேரும் டிரீட்மெண்ட் எடுக்கிறாங்கன்னு நீங்கதானே சொன்னீங்க."

"ஆமா... இன்னம் எடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க... அதுக்குள்ள இப்படி புத்தி மாறி பேசுறாங்க..."

"உங்க மாப்பிள்ளையா இத சொன்னது..."

"ஆமா அவருதான் கவிதாவை கொண்டாந்து விட்டுட்டு சபீதாவை ரெண்டாந்தாரமா கட்டிக்கொடுத்தா அக்காவும் தங்கச்சியும் எங்கூட வாழலாம்.... இல்லாட்டி உங்க மக வாழாவெட்டியா இங்கயே இருக்கட்டும்... நான் வேற பொண்ணை கட்டிக்கப் போறேங்கிறார்... நான் என்ன செய்யட்டும். பெரியவளை கட்டிக்கிட்டு சின்னவ அழுவுறா.... எனக்கு ஒண்ணும் புரியலை... ராப்பகலா ஆட்டோ ஓட்டி புள்ளைய கட்டிக்கொடுத்தும் நிம்மதியில்லையே சுந்தர்..." உடைந்து அழுதார்.

"விடுண்ணே... அழுகாத... நாங்கள்ளாம் இல்ல.... இருங்க பார்ப்போம்... " அவருக்கு ஆறுதல் கூற, அவரின் அழுகையால் மற்றவர்களும் அருகில் வந்தனர்.

"சுந்தர் என்னாச்சு..." என்றான் ராஜா.

"பேமிலி பிரச்சினை..." என்றதும் "எதா இருந்தாலும் நாங்க இருக்கமுண்ணே... விட்டுத்தள்ளு சின்னப்புள்ள மாதிரி அழுவுறே..."

"இல்ல ராஜா.... கவிதா வீட்டுக்காரன் சபீதாவை கட்டித்தரச் சொல்றானாம்."

"கொய்யால... அவருக்கு ரெண்டாவது பொண்டாட்டி...அதுவும் பொண்டாட்டியோட தங்கச்சி வேணுமாமோ.... விடுண்ணே... கோத்தா அவனை வகுந்து போட்டுடுவோம்" கோபமாய் வார்த்தைகளை வீசினான் சேகர்.

"ஏய் சேகர் இருடா... இது மத்த விசயம் மாதிரி இல்லை பொண்ணுபுள்ள விசயம்... மெதுவாத்தான் டீல் பண்ணனும்... எடுத்தோம் கவித்தோமுன்னு பேசக்கூடாது. அண்ணே... நீ கவலையவிடு உம்மாப்பிள்ளை உங்கிட்ட மன்னிப்பு கேட்பான்..."

"சுந்தர் அவங்கிட்ட எதுவும்..."

"ஒண்ணும் நடக்காதுண்ணே.... நீ கவலைப்படாதே... ராஜா சாப்பாட்டு நேரத்துல ஒரு எட்டு மாப்பிள்ளை வீட்டு வரைக்கும் பொயிட்டு வருவோம்..."

"நானும் வாரேண்டா..." என்றான் சேகர்.

"நீ வேணான்டா... கோபத்துல கைய கிய்ய நீட்டிட்டியன்னா நம்ம பொண்ணு வாழ்க்கை பிரச்சினையாயிடும்... இப்ப நாங்க ரெண்டு பேரும் போயி பேசிப் பார்க்கிறோம். சரியா வரலைன்னா அப்புறம் உன் மெத்தடுதான் சரியா வரும்... அப்ப நீயி, அழகர், சாமினாதன் எல்லாம் போகலாம்... நீ அண்ணன் கூட இரு."

"சரி... பேசுங்க சரியா வரலைன்னா உடனே போன் பண்ணு... கோத்தா அப்பவே ஆளைத் தூக்குவோம்."

"சரிடா... டென்சனை கொற"


"வாங்க.. நீங்க மாமா இருக்க ஸ்டாண்ட்ல இருக்கவங்கதானே..."

"ஆமா..."

"உள்ள வாங்க..."

"வேலைக்குப் போகலையா..."

"இப்பத்தான் வந்தேன்... இனி நாலு மணிக்குப் போகணும்... என்ன விசயம்?"

"அது வந்து நேர விசயத்துக்கு வாரேன்... சபீதாவை கட்டிக்கிறேன்னு கேட்டியலாமே..."

"ஓ... அதுவா... அவரு வராம உங்களை அனுப்பி வச்சாரா... ஆமா.. இதுல என்ன தப்பு குழந்தையில்லை கொழுந்தியாளை கட்டி வைக்கச் சொன்னேன்.... அதுக்கென்ன..."

"வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை நீங்க... கொழுந்தியா உங்க மக மாதிரி..."

"மக மாதிரியா... எனக்கு ஒரு மக வேணுமின்னுதான் அவளை கட்டித் தரச் சொன்னேன். முடியாதுன்னா நான் வேற பொண்ணு பாத்துக்கிறேன்... கவிதா அங்கயே இருக்கட்டும்..."

"என்னங்க பேசுறீங்க... அந்தக் குடும்பத்தை பாக்கவேண்டிய நீங்களே இப்படி பேசலாமா..?"

"என்ன தம்பி அவன் கேக்கிறது தப்பில்லையே... நீங்க வக்காலத்து வாங்கிக்கிட்டு வாறீங்க..."

"நீங்க அம்மாதானே உங்க மகளை கட்டிக்கொடுத்த எடத்துல இப்படி பேசினா ஒத்துக்குவீங்களா?"

"அது..."

"பதில் வராது... ஏன்னா அது உங்க புள்ளை வாழ்க்கை...அதானே... ரெண்டு பேரும் டிரீட்மெண்ட் எடுக்கிறாங்க... அதுக்குள்ள திடீர்ன்னு ஏன் இப்படி ஒரு முடிவு..."

"எனக்கு எந்தக் குறையும் இல்லைங்க..."

"டாக்டர் சொன்னாரா உங்க பொண்டாட்டிக்குத்தான் குறைன்னு... இல்ல உங்க மூலமா வேற யாருக்காவது குழந்தை பொறந்திருக்கா..." கோபமானான் ராஜா.

"அலோ... என்ன பேசுறீங்க... நீங்க யாருங்க எங்க குடும்ப பிரச்சினையில பேச மாமனா... மச்சானா..."

"ராஜா... அவசரப்படாதே... நாங்க மாமன் மச்சான் இல்லைங்க... அவருகூட ஒண்ணா மண்ணா பழகினவங்க... அந்த தகப்பன் மனசொடிஞ்சு அழுகிறதைப் பார்க்க எங்களால முடியலை... ஏன்னா எங்களுக்கும் அக்கா தங்கச்சிங்க இருக்காங்க... அவங்க மாதிரித்தான் அவரு பொண்ணுங்களையும் பார்க்கிறோம். அந்த எண்ணத்துலதான் உங்ககிட்ட பேச வந்தோம். நீங்க மனிதரா நடந்துப்பிங்கன்னு நம்புறோம்."

"என்னங்க மலடிய கட்டி வச்சதுக்கு பரிகாரமா ரெண்டாவது பொண்ணை கேக்கிறேன்... கட்டி வச்சிட்டா அக்காவும் தங்கச்சியும் எங்கூட சந்தோஷமா இருக்கலாமே... இது புரியாமா..."

"என்ன சொன்னே..." ராஜா எதோ சொல்லவர செல்போன் கூப்பிட்டது.

"அலோ..."

"....."

"ம்... சொல்லு... இல்ல மாப்ளே... பேசிக்கிட்டு இருக்கோம்.. சரி வரலைன்னா உன் மெத்தடுத்தான் தூக்கிருவோம்... நம்ம ஆளுகளை ரெடிபண்ணி வை.... கூப்பிடுறேன்..."

"யாருடா சேகரா... அவசரப்படாதீங்கடா... காரியம் கெட்டுட்டும்... ஆமா என்ன சொன்னீங்க... மலடிய கட்டி வச்சிட்டமா... நீங்க மலடன் இல்லைன்னு அடிச்சுச் சொல்ல முடியுமா? அப்புறம் ஏன் உங்களுக்கும் டிரீட்மெண்ட் எடுக்கணும். மலடியோட தங்கச்சிய கட்டி அதுவும் மலடியா இருந்தா அடுத்த பொண்ணு பாப்பீங்களோ...?"

"அது... அது...."

"வார்த்தைய விடாதீங்க... அள்ள முடியாது... எங்களுக்கு நல்லவிதமா பேசவும் தெரியும்... நாரத்தனமா நடக்கவும் தெரியும்... இவ்வளவு தூரம் எறங்கி பேசுறோமுன்னா ஒரு பொண்ணோட வாழ்க்கைக்காகத்தான்... அதை புரிஞ்சுக்கங்க... இப்பவே உங்களை தூக்க முடியும்... போன்ல பேசினத கேட்டிங்களா.... ஒரு ஆட்டோக்காரனுக்கு பிரச்சினையின்னா சிட்டியில இருக்க எல்லா ஆட்டோக்காரனும் வருவான் தெரியுமில்ல... உங்களை தூக்கிக்கிட்டுப் போயி அடிச்சு... மெரட்டி எங்க பொண்ண வாழவைக்க விரும்பலை... இன்னும் உங்களுக்கு வயசிருக்கு... டாக்டர் சொன்னபடி ரெணடு பேரும் டிரீட்மெண்ட் எடுங்க... அதுக்கப்புறமும் குழந்தைக்கான அறிகுறியில்லைன்னா எங்க பொண்ண நாங்களே வந்து கூட்டிக்கிறோம். நீங்க நல்லா வேற பொண்ண கட்டிக்கங்க... நாங்களும் நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டி வச்சிக்கிறோம். அந்தப் பொண்ணுக்கு குழந்தை இல்லாத குறையத்தவிர உங்கிட்ட ஒரு மனைவியா, தாயா நடந்துக்கலைன்னு சொல்லு இப்பவே அது சார்பா நான் எழுதிக் கொடுத்துட்டுப் போறேன்... நீ யாரை வேணுமின்னாலும் கட்டிக்க..."

"என்ன சுந்தர் இவங்கிட்ட இப்படி எறங்கிப் பேசிக்கிட்டு..."

இரு ராஜா... கவிதா உங்கிட்ட நல்ல மனைவியாத்தான் நடந்திருக்கும் ஏன்னா அது மாரிமுத்தண்ணன் பொண்ணு... தன்னோட ஆட்டோ ஓடாட்டியும் எவனாவது கஷ்டமுன்னு சொல்லிட்டா அவரு முறையிலயும் அவனை ஓட்டச் சொல்றவரு அவரு... அவரு பொண்ணும் உனக்கு நல்ல மனைவியாத்தான் இருந்திருப்பா... இல்ல அவ என்னை மதிக்கலை... எங்க அம்மாவை மதிக்கலை... நாங்க இதுவர மனசறிஞ்சு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழலைன்னு சொல்லு... நீ கேக்கிறதுக்கு நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்..."

"அது... அதெல்லாம் இல்ல..." முணங்கினான் மாப்பிள்ளை.

"சரி நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடு... வா ராஜா போகலாம்"

இருவரும் கிளம்ப-

"என்ன சுந்தர்... அவங்கிட்ட செண்டிமெண்டா பேசிக்கிட்டு... நாலு விட்டுருந்தா பேசாம நம்ம வழிக்கு வாறான்..."

"இங்கதான் தப்பு பண்றே... அடிச்சுப் பணிய வைச்சா அவங்க வாழ்க்கை எவ்வளவு நாளைக்கு நல்லாயிருக்கும் சொல்லு... நமக்கு பயந்து வாழ ஒத்துக்கிட்டாலும் அந்தப்புள்ளையை தினமும் கஷ்டப்படுத்துவான். இப்பப்பாரு... நான் பேசும்போது கவனிச்சேன்... ஆரம்பத்துல வேகமா பேசினவனுக்கு கடைசியில பேச்சே வரலை... அது போக முகமும் மாறியாச்சு... கண்டிப்பா கவிதாவோட வாழ்ந்த நாட்களை நினைச்சுப் பார்ப்பான். அந்த சந்தோஷ நாட்கள் அவன் கண்முன்னே வரும். கண்டிப்பா திருந்தி வருவான்."

"எனக்கு நம்பிக்கையில்லை..."

"எனக்கு நம்பிக்கை இருக்கு... வா..."

"மாப்பிள்ளை என்ன சொன்னாரு சுந்தர்..." கையைபிடித்துக் கொண்டு மாரியப்பன் கேட்க,

"அவரு உங்களை பார்க்க வருவாருண்ணே... கவலைப்படாதீங்க..." என்றான் ஆறுதலாக...

"அண்ணே... அது..." என்ற ராஜாவை திரும்பிப் பார்த்து "என்ன ராசா... நான் சொன்னது சரிதானே... சவாரி வருது பாரு... ஒன்னோட முறைதான்னு நினைக்கிறேன்" என்றான்.

தூரத்தில் மாரியப்பண்ணன் மாப்பிள்ளை பைக்கில் வந்து கொண்டிருந்தான்.

-'பரிவை' சே.குமார்.

படம் உதவிய கூகிளுக்கு நன்றி

22 எண்ணங்கள்:

Narayanan Narasingam சொன்னது…

Very nice story.

கதம்ப உணர்வுகள் சொன்னது…

அருமையான கதை பகிர்வு குமார்..

இப்பவும் சிலர் வீட்டில் நடப்பது தான் இது....

ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும் மத்தியத்தர குடும்பம் என்றாலும் குழந்தை இல்லன்னா உடனே அந்த வீட்டிலேயே இருக்கும் மனைவியின் தங்கையை கட்டித்தர சொல்லி கேட்பதும் முடியாது என்றால் வெளியே வேறே பெண்ணை கட்டிக்கொள்வதும்....

மனம் வேதனையானது வரிகளை படிக்கும்போதே...

குறை யாருக்கு தான் இல்லை? எதில் தான் குறை இல்லை....

ஆட்டோ ஓட்டுபவர்கள் என்றாலும் மனிதநேயம் உள்ளவர்கள் தான் என்பதை கதை அருமையாக புரியவைத்திருக்கிறது....

புரிதல் இருந்தால் போதும் அங்கே பிரச்சனைகள் எழ வாய்ப்பிருப்பதில்லை கண்டிப்பாக....

பிள்ளை இல்லை என்பது ஒரு குறையே இல்லை....

எங்கள் வீட்டில் குடி இருந்த ஒரு குடித்தனக்காரர் பஸ் கண்டக்டர் கல்யாணம் ஆகி குழந்தை இல்லையென்று மனைவியின் தங்கையையே திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கும் குழந்தை பிறக்கவில்லை.. பிறகு தான் தெரிந்தது குறை மனைவியிடம் இல்லை அவரிடம் தான் என்று...இரண்டு பெண்களின் வாழ்க்கையும் வீணானது தான் மிச்சம்...

அருமையான கதை பகிர்வு அன்புவாழ்த்துகள் குமார்...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அர்த்தமுள்ள இடுகை..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

மிகவும் அருமையான கருத்தை கதை முலமாக கொடுத்திருக்கீங்க குமார்.வாழ்த்துக்கள்..

சக்தி கல்வி மையம் சொன்னது…

யதார்த்தமான கதை..
பகிர்வுக்கு நன்றி சகோ..

செங்கோவி சொன்னது…

மலடன் என்ற சொல்லையே யாரும் சொல்வதில்லையே..பெண்களை மட்டும் தானே மலடி என்கிறார்கள்..நல்ல கருத்து குமார்.

Riyas சொன்னது…

நல்ல கதை

தமிழ்மனம் 4

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்க்கையை பிரிதிபலிக்கும் யதார்த்மான கதை...

சொல்லிய விதமும் அசத்துகிறது..

வாழ்த்துக்கள்...

சத்ரியன் சொன்னது…

நடப்புச் சம்பவங்களைக் கொண்டு , சமூகப் பற்றுடன் கதை.

வாழ்த்துக்கள் குமார்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அருமையான கதை, எளிய கதைக்கரு என்றாலும், கதை சொல்லும் பாங்கு உங்ககிட்ட ரொம்ப நல்லா இருக்கு...!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமையான கதை குமார்.

அப்பாதுரை சொன்னது…

அருமையான எழுத்து, நடை. மிகவும் ரசித்தேன்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு. சொன்ன விதம் அருமையா இருக்கு. சில சமயம் கோபம்
கூடாதுதான் .

ரிஷபன் சொன்னது…

கதையை அழகாக நகர்த்தி போயிருக்கிறீர்கள்.. சம்பவங்களினூடே யதார்த்தமாய் வருகிற நிகழ்வுகளும் ஆட்டோ ஓட்டுனர்களின் மனசும் நன்றாகவே பதிவாகி இருக்கின்றன..

r.v.saravanan சொன்னது…

குமார் எழுத்து நடையில் யதார்த்த கதை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Nice Story

ராமலக்ஷ்மி சொன்னது…

அர்த்தமுள்ள கதை. அருமையாக இருக்கிறது குமார்.

எல் கே சொன்னது…

யதார்தமாக இருந்தது

எல் கே சொன்னது…

karthik.lv@gmail.com

send me mail kumar

பா.ராஜாராம் சொன்னது…

மகனே ரொம்பப் பிடிச்சிருந்தது கதை. சரளமான நடை. தெளிவான முடிவு. நீங்க ஏன் பத்திக்கைகளுக்கு கதையை அனுப்பிப் பார்த்து விட்டு பிறகு தளத்தில் பதியக் கூடாது?.. எனக்கு மெயில் பண்ணுங்களேன். rajaram.b.krishnan@gmail.com

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நாரயணன் (முதல் வருகை)

வாங்க சகோதரி மஞ்சு...

வாங்க முனைவரே...

வாங்க ரமா அக்கா...

வாங்க கருன்...

வாங்க செங்கோவி...

வாங்க ரியாஸ்...

வாங்க சௌந்தர்...

வாங்க சத்ரியன்...

வாங்க ராமசாமிங்கண்ணா...

வாங்க சிநேகிதன்...

வாங்க லஷ்மி அம்மா...

வாங்க ரிஷபன்...

வாங்க சரவணன்...

வாங்க தங்கமணி அக்கா...

வாங்க ராமலெஷ்மி அக்கா..

வாங்க எல்.கே. (மின்னஞ்சல் கிடைத்ததா?)

வாங்க சித்தப்பா...
(ரொம்ப சந்தோஷம்... என் பக்கம் நீங்கள்... உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. கண்டிப்பாக உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். விரைவில்...)

உங்கள் அனைவரின் பின்னூட்டக் கருத்துக்கு நன்றிகள் பல.
எனது பதிவுகளை மேம்படுத்த உதவும் உங்கள் பின்னூட்டங்கள் தொய்வில்லாமல் தொடரட்டும்.

Aathira mullai சொன்னது…

மிகவும் அருமையான கருத்து. கதையாக வடிவம். அழகு. அருமை.