மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 22 ஜூலை, 2010புறையோடிய சாதி வேர்

சுந்தரம் தாத்தான்னா சிறுசுகளுக்கெல்லாம் ரொம்ப பயம்... அவரு பீடியும் பிடிப்பாரு... பொடியும் போடுவாரு... அவரு கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்துப் பிடிச்சு பொடியை எடுத்து மூக்குல வச்சி 'சர்ர்ர்ர்ர்ன்ன்ன்ன்னு' ஒரு உறிஞ்சு உறிஞ்சிட்டு கைய உதறப்ப பக்கத்துல இருக்க ஆளுங்க தும்ம, அவரு மட்டும் எதுவுமே நடக்காதது போல முகத்தை வச்சுக்கிட்டு மூக்கை தேச்சுக்கிட்டு இருப்பாரு.

பசங்களுக்கு அவருகிட்ட என்ன பயமுன்னா தம் அடிச்சிட்டு கண்ணுக்குள்ள புகை வருது பாருன்னு சொல்லி, ஆன்னு பாக்கும்போது கால்ல சுட்டு விட்டுடுவாரு... இல்லேன்னா பொடியை எடுத்து மூக்குல வச்சு விட்டுடுவாரு. அதனால சின்ன பசங்க அவரை கண்டாலே அய்யோ ரவுடித் தாத்தா வாராருன்னு ஒடிடுங்க...

ஆனா பாருங்க, பசங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டாலும் குணத்துல அவரு கர்ணன். யாருக்காச்சும் ஒண்ணுன்னா அவரால முடிஞ்ச உதவியை செய்வாரு. அவருக்கிட்ட உதவி பெற்றவங்கதான் அதிகம். அதனால பசங்க மத்தியில் மூக்குப் பொடி தாத்தா மோசமான்ன தாத்தான்னு பேரெடுத்தாலும் ஊருக்குள்ள புண்ணியவான்னு பேரெடுத்து வச்சிருக்காரு.

காலையில ஒரு பத்துமணி இருக்கும் வெயிலுக்கு தலையில துண்டப் போட்டுக்கிட்டு மாமரத்தடியில கூடி இருக்கும் அவர் வயதொத்த மனிதர்களுடன் மனம்விட்டு பேச போய்க் கொண்டிருந்தார். தெருமுனை திரும்பும் போது மேலத்தெருவில் இருந்து இரைச்சல் கேட்டது. யாருக்கும் என்னாச்சோ என்னவோ தெரியலையே என்று பதறியபடி மேலத்தெருவுக்குள் நுழைந்தவர், ஏகாம்பரம் யாரையோ மயிரு... மட்டைன்னு சரமாரியாக பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார். அவர் அருகில் போகவும் 'ஐய்யய்யோ... மூக்குப்பொடி தாத்தா..' என்று சிறுசுகள் பயந்து ஓட, கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே போனார். ஏகாம்பரம் ஏக வசனத்தில் பேச, அவருக்கு பதில் சொல்லும் விதமாக சோனையன் பேசிக் கொண்டிருந்தான்.

"ஏய் சோனையா... என்னடா மரியாதை இல்லாம வாய்க்கு வாய் பேசிக்கிட்டு..."

"வாங்க ஐயா... நீங்களே இந்த அநியாயத்தை கேளுங்க...என்னோட வயல்ல ஐயாவோட மாடு தினமும் வந்து மேஞ்சு பயிரை எல்லாம் பாழாக்கிடுது... அதை வந்து சொன்னதுக்குதான் வாயில வராத வார்த்தை எல்லாம் சொல்லி திட்டுறாரு..."

"என்ன ஏகாம்பரம்... அவன் கஷ்டப்பட்டு வெள்ளாமை பண்ணிக்கிட்டு இருக்கான்... வயல்ல மாடு அழிக்கிதுன்னா சரி இனிமே வராதுன்னு சொல்ல வேண்டியதுதானே... அதுக்கு எதுக்கு மசுரு... மட்டைன்னு..."

"வாங்க... நீங்க நாயம் பொழக்க வந்துருக்கீங்களோ...?"

"இப்ப நான் என்ன சொன்னேன்னு இப்படி கோபப்படுறே...?"

"பின்ன என்னப்பு... உங்களைப் பார்த்து சின்னப் பயலுக பயப்படுறாங்கன்னா எல்லாரும் பயப்படணுமா...?"

"நான் உன்னைய பயப்படுன்னு சொல்லலை... வெள்ளாமை யாரு உட்டா இருந்தா என்ன... இப்ப பொதி கட்டுற பருவம்... இந்த சமயத்துல மாடு அழிச்சா என்னப்பா மிஞ்சும்... அவனும் பிள்ளை குட்டிக்காரன் அதை நம்பித்தானே இருக்கான்... இனிமே மாட்டை அவுக்கும் போது பின்னால ஆள் போகச்சொல்லு... இல்லே தரிசு வயல்ல கொண்டு போய் முளக்குச்சியடிச்சு கட்டிப் போட்டு மேய விடு..."

"யோவ் பெரிய மனுசன்னு பாக்கிறேன்... இல்ல மரியாதை கெட்டுடும்... ஒரு பர நாய்க்கு ஏந்துக்கிட்டு சாதிக்காரனுக்கே புத்தி சொல்றீங்களோ...? உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க போதும்..."

"என்னப்பா... சாதியெல்லாம் இழுத்துக்கிட்டு... இப்ப என்ன சொன்னேன்னு இவ்வளவு கோபப்படுறே...?"

"ஐயா நீங்க விடுங்கய்யா.... எனக்கா நீங்க எதுக்கு கேவலப்பட்ட பேச்சு வாங்குறீங்க... நான் பார்த்துக்கிறேன்... நீங்க போங்க..."

"என்னடா பாக்கப் போறே... உன் சாதிப்பயலுக ஊருக்குள்ள இருக்க முடியாது..."

"என்னப்பா... சாதி சாதியின்னு பேசுறே... ஒண்ணாமண்ணா இருக்கிற ஊருக்குள்ள மாட்டுப் பிரச்சினையை சாதிப் பிரச்சினையாக்கிடுவே போல இருக்கே..."

"யோவ் போய்யா அங்கிட்டு... எனக்கு சொல்ல வந்துட்டாக... எதாவது பேசினா சாதிக்காரன்னு பார்க்க மாட்டேன்... வயசுக்கு மரியாதை கொடுத்தா ஒதுங்கிப் போகாம..."

இதுக்கு மேல் நின்றால் மரியாதை இருக்காது என்பதால் பேசாமல் வெளியேறினார்.

மாமரத்துக்கு போக மனமின்றி மீண்டும் வீட்டிற்கே திரும்பினார்."ன்னப்பா... உடனே திரும்பிட்டிங்க..."

"மனசு சரியில்லைம்மா..."

"என்னப்பா ஆச்சு...உடம்புக்கு முடியலையா?"

"இல்லைம்மா... நம்ம ஏகாம்பரம், சோனையனுக்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருந்தான். தட்டிக்கேட்க போன என்னைய என்னென்னமோ பேசிட்டாம்மா..."

"ஏம்ப்பா அவரைப் பத்திதான் தெரியுமே... உங்களுக்கு எதுக்குப்பா இந்த வேண்டாத வேலை..."

"ஏம்மா... வெள்ளாமை பாதிக்குதுன்னு சொன்னான் மனசு கேக்கலை நாயமாத்தான் பேசினேன்... அதுக்குப் போயி..."

"சரி விடுங்கப்பா... மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க..."

வீட்டிற்குள் நுழையும் போதே...

"என்ன மாமா... ஏகாம்பரத்துக்கிட்ட சண்டைக்குப் போனீங்களாமே..?"

"இ... இல்ல... மாப்ளே... வயல்ல மாடு மேஞ்சுடுச்சின்னு சொல்ல வந்த சோனையனை வாய்க்கு வந்தபடி திட்டினான்... அதை கேட்டதுக்கு என்னென்னமோ பேசிட்டான்."

"அந்த ...... நாய்க்கு நீங்க வக்காலாத்து வாங்கினீங்களா..? உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..."

"........."

"ஏங்க அவரு என்னென்ன பேசியிருக்காரு தெரியுமா... அவரு சொன்னதை கேட்டுக்கிட்டு வந்ததும் வராததுமாக..."

"நீ சும்மா இருடி... அவரு நம்ம சாதி... அவருக்கு சப்போர்ட்டா பேசினா நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா வருவாரு... அந்த சாதிக்காரப் பயலுகளுக்கு சப்போர்ட் பண்ணி நமக்கு என்னத்துக்கு ஆகப்போகுது..."

"மாப்ளே... நீங்களும் சாதி சாதின்னு பேசுறீங்க... உங்க சாதி உங்களுக்கு என்னங்க பண்ணுச்சு சொல்லுங்க... சாதிக்காரன்னு சொல்லி ஒருத்தனை எம்.எல்.ஏவா ஆக்கி சட்டசபைக்கு அனுப்புனீங்களே... அவனை அதுக்கு அப்புறம் பாத்தீங்களா... ரிசர்வ் தொகுதின்னு சொல்லி இப்ப சொன்னீங்களே ...... நாய் அதுல இருந்து ஒருத்தனை பிரசிடெண்ட ஆக்கினோம்... அவன் நம்ம மேல உள்ள மரியாதையில ஊருக்கு ரோடு, தண்ணி வசதி எல்லாம் செய்து தரலை... ஏன் முடிவெட்டுறவன் அடுத்த சாதிக்காரன் தான் அவன் கிட்ட சாதிபாத்து போகாம இருங்கலே... சடை புடிச்சிடும் சடை... உங்க சாதிக்காரன் வந்து வெட்டிவிடுவானா...? இல்ல வெள்ளையும் சொள்ளையுமா வண்டியில போறியளே... அதுக்கு யார் காரணம் நம்ம சாதிக்காரனா இல்லையே... அதுவும் வேற சாதிக்காரன் தானே... இவ்வளவு ஏன் நீங்க வட்டிக்கு கொடுத்து வாங்கி நிலம் நீச்சியின்னு வசதியோட இருக்கீங்களே... அதுக்கு காரணம் உங்க சாதிக்காரனா இல்லயே... இப்ப சொன்னீங்களே... அந்த சாதிக்காரன் தான் உங்ககிட்ட வட்டிக்கு வாங்கி உங்களை வாழவைக்கிறான்... எல்லாத்துக்கும் மேல நம்ம ஊருல யார் செத்தாலும் ஏதோ சோனையன் மாதிரி ஆளுங்க இருக்கறதால குழி வெட்டுறதுல இருந்து குழிக்குள்ள எறக்குறதுவரை பார்க்கிறாங்க... இப்ப சின்னபசங்கள்ளாம் வெளியில போயாச்சி... இன்னும் சில காலத்துல குழிக்குள்ள இறக்குறதுக்கே காசு கொடுத்து ஆளைப்புடிக்க அலையணும்... அதை மனசுல வச்சுக்கங்க... சும்மா சாதி சாதியின்னு பேசாதீங்க... சாதி ஒண்ணும் சாப்பாடு போடாது... நாம வாழ எதாவது ஒரு சாதிக்காரன் எதாவது ஒரு வகையில நமக்கு உதவியா இருப்பான். அதை புரிஞ்சுக்குங்க."

"சும்மா... பிரசங்கம் பண்ணாதீங்க... எனக்கு என் சாதிதான் முக்கியம்..."

"உங்களை திருத்த முடியாது... நீங்களா திருந்துற நாள் சீக்கிரம் வரும்" என்றபடி வெளியேறினார்.

மாமரத்தடியில் போய் அமர்ந்தவர் அங்கே சாதிப்பாகுபாடு இன்றி சந்தோசமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து 'அறியாப் பருவத்தில் கூட்டாஞ்சோறு... அறிஞ்ச உடனே தனிக்குடித்தனம்... ம்...' என்று நினைத்தவர் லேசாக சிரித்துக் கொண்டார்

-'பரிவை' சே.குமார்.

27 கருத்துகள்:

 1. கதை நல்லா வந்துருக்குங்க.

  இனிய பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. இந்த மானிட சமுதாயத்தில் புரையோடிபோன் ஒரு விடயம் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். உலகில் இரண்டே இரண்டு ஜாதி ஆண் ஜாதி ஒன்று, மற்றையது பெண் . இதை என்று தான் உலகம் உணருமோ?. தொழில்பாகுபாடால் தான் ஜாதி வந்தது.

  பதிலளிநீக்கு
 3. சாதி சாதின்னுதான் இன்னும் சிலபேர் அலைஞ்சிக்கிட்டிருக்காங்க.. என்னைக்குதான் இந்த சாதிப்பேய் ஒழியுமோ?..

  கதையில் ஒரு நல்ல பயணம். ரொம்ப நல்லாருக்கு குமார்.

  பதிலளிநீக்கு
 4. வாங்க துளிசி கோபால்...
  பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வாங்க வானம்பாடிகள் ஐயா...
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வாங்க நிலா,
  கருத்துக்கு நன்றி....
  உண்மைதான் தொழில் பாகுபாடுதான் சாதியாக மாறியது...

  பதிலளிநீக்கு
 7. வாங்க மேனகாக்கா...
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அசத்துங்க தல. இது மாதிரி நிறைய எழுதி...!

  பதிலளிநீக்கு
 9. நான் நேசித்த கதை இது.. நிஜம் சுடுகிறது.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஸ்டார்ஜன்...
  உங்கள் கூற்று உண்மையே... சாதிப்பேயை அவ்வளவு சீக்கிரத்தில் ஒழிக்க முடியாது... நம்ம அரசியல்வாதிகள் சாதியை வைத்துத்தானே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க அப்துல் காதர்...

  கருத்துக்கு நன்றி. முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. அருமையான கதை.. சாதி, மதம் வச்சு பிரசின எல்லா லெவல்-லயும் நடக்குது..

  "அறியாப் பருவத்தில கூட்டாஞ்சோறு.. அறிஞ்ச உடனே தனிக்குடித்தனம்...."
  இந்த வரி ஆயிரம் விளக்கங்கள் சொல்லுதுங்க.. நல்ல கதை..!

  பதிலளிநீக்கு
 13. மாமரத்தடியில் போய் அமர்ந்தவர் அங்கே சாதிப்பாகுபாடு இன்றி சந்தோசமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பார்த்து 'அறியாப் பருவத்தில் கூட்டாஞ்சோறு... அறிஞ்ச உடனே தனிக்குடித்தனம்... ம்...' என்று நினைத்தவர் லேசாக சிரித்துக் கொண்டார்

  ...... கதையில் கருத்தும் அம்சமாக சொல்லி இருக்கீங்க... நல்லா இருக்குதுங்க. பாராட்டுக்கள்!
  ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி தனி ஜாதி பிரிவுகள் - வெறி. மாநிலத்தின் எல்லையை தாண்டினாலே அர்த்தம் இல்லாமல் ஆகி விடுகிறது. ஆனாலும், அதை வைத்து எத்தனை அழகாய் அரசியல் பண்றாங்க.

  பதிலளிநீக்கு
 14. வாங்க ஆனந்தி...
  உங்க கருத்துக்கு மிக்க நன்றி..!
  அறியாப் பருவத்தில் நமக்குள் சாதியோ மதமோ தடையில்லை... ஆனால் வளர்ந்ததும்....?

  பதிலளிநீக்கு
 15. வாங்க சித்ரா...

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  உங்கள் கருத்து உண்மைதானே... உள்ளூர் பஞ்சாயத்துல இருந்து எம்.பி. தேர்தல் வரை எல்லாமே சாதியில் தானே வேர்விட்டு வளர்கின்றன.

  பதிலளிநீக்கு
 16. //அறியாப் பருவத்தில் கூட்டாஞ்சோறு... அறிஞ்ச உடனே தனிக்குடித்தனம்... ம்...'//

  அருமையான கதை ... சாதி ஒழிய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 17. நல்லாருக்கு குமார்.

  கதை அருமை
  r.v.saravanan
  kudanthaiyur.blogspot.com

  பதிலளிநீக்கு
 18. வாங்க பத்மாக்கா...
  கருத்துக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 19. வாங்க கார்த்திக்
  ஆம் நண்பரே சாதி ஒழிய வேண்டும் என்பதே என் எண்ணமும்...
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க வானதி...
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க சரவணன்...
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. பிரபல பதிவாக்கிய தமிழிஷ்க்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. உங்களை திருத்த முடியாது... நீங்களா திருந்துற நாள் சீக்கிரம் வரும்"//

  இந்த சாதி எப்போது ஒழியுமோ

  பதிலளிநீக்கு

நட்பின் வருகைக்கு நன்றி..!

பகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...