மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 5 மார்ச், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-7)

முந்தைய பகுதிகளை வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5


*********

“ டேய் மாப்ள... அந்த இடத்தைப் பாரு... சரியா வருமா... நம்ம போர்டு சும்மா அங்க இருந்து பாத்தாலே தெரியணும்... கரெக்டா இடம் பாரு... “ என்று மூன்று பேர் இறங்க, பிரசிடெண்ட் பேச்சை நிறுத்தினார். சுற்றிலும் வேடிக்கை பார்த்த ஊர் மக்களும்,  வெள்ளையும் சொள்ளையுமாக நின்ற பெரிசுகள் ஏதாவது பிரச்சினை வருமோ என்று யோசிக்க ஆரம்பித்தனர்.

“என்ன செல்லையா... ?” வேலாயுதம் வந்திருந்த மூவரில் ஒருவனைப் பார்த்துக் கூப்பிட்டார்.

“என்ன மாமா?” என்றான் கருப்புச் சட்டை போட்டிருந்தவன்.

“ஏம்ப்பா.... போர்டு வைக்கிறீங்களா? நம்மது முடிஞ்சதும் வந்திருக்கலாமே?”

“மாமா... பிரச்சினைக்காகவெல்லாம் வரலை மாமா... தப்பா நினைக்காதீங்க.... நீங்க போர்டு வச்சிட்டீங்க... நாளைக்கு நல்லது கெட்டதுக்கு வர்ற சாதி சனம்... இந்த ஊருக்குள்ள இருக்க நாலு சாதியையும் பற்றி தெரிஞ்சிக்கணுமில்ல... நீங்க மட்டும் வச்சிட்டா... மத்த சாதிக்காரனெல்லாம் ஒண்ணுமில்லாதவானாப் போயிடுவானுல்ல... எங்களால உங்களுக்கு பிரச்சினை வராது மாமா... நாம ஊருக்குள்ள அப்படியா பழகியிருக்கோம்... நீங்க இந்த மாதிரி சாதிப் போர்டு வச்சி, கொடி ஏத்தப் போறோம்ன்னு சொல்லியிருந்தா... நாங்களும் சேர்ந்து நின்னிருப்போம்... எதுவுமே சொல்லாம நீங்க மட்டும் பண்ணினா என்ன மாமா நியாயம்...? ஒவ்வொரு குடியிருப்புக்கும் தனித்தனி கோவில் இருந்தாலும் திருவிழா, பொங்கல்ன்னு எல்லாம் எல்லாருமா கொண்டாடுறோம்.... இப்ப சாதிப் போர்டு வைக்கிறதுலயும் எல்லாரும் ஒண்ணா வைக்கலாமே...?”

“உங்களை யாருப்பா வைக்க வேண்டான்னு சொன்னா...? இடம் பாக்குறது அப்புறம் பாக்க வேண்டியதுதானே...?”

“இப்ப என்ன மாமா ஆச்சு... நாங்க அங்கிட்டுப் பாத்துட்டு அளந்துக்கிட்டு போகப் போறோம்... அதுல உங்களுக்கு என்ன பிரச்சினை...?”

“டேய் என்னடா... இப்பத்தான் பேசிக்கிட்டு... அவுக சாதிக்கு போர்டு வச்சிட்டாங்கதானே... பின்ன நாம வச்சா இவங்களுக்கு என்ன... வாடா...” இன்னொரு சிகப்புச் சட்டை கோபமாகப் பேசினான்.

“என்ன ராசு... பேசிக்கிட்டு இருக்கும் போது தேவையில்லாமப் பேசுறே...?” கோபமாகக் கேட்டான் முத்துக்குமார். இவன்தான் இளைஞர் மன்றத் தலைவர்.

“இங்க பாரு முத்து... நீங்க பாட்டுக்கு விழா நடத்துங்க... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம்.... நாங்க டிஸ்டர்ப் பண்ண வரலை...” என்றான் ராசு என்கிற சிகப்புச் சட்டைக்காரன்.

“நீங்க வந்திருக்கிறதைப் பார்த்தா... பிரச்சினைக்கு வந்த மாதிரித்தான் தெரியுது...” என்றார் வேலாயுதம்.

“ஏய் வேலாயுதம்... எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு... நாம செய்யும் போது அவனுக செஞ்சா என்ன... நீயும் அப்படித்தானே சொன்னே... பின்ன எதுக்கு தேவையில்லாம பேசிக்கிட்டு.... நாம எல்லாரும் ஒண்ணுதானேப்பா... சாதியால பிரிஞ்சி நிக்க வேணுமான்னு கேட்டா, நீங்களெல்லாம் குதிப்பீங்க... இப்ப நாம வச்சாச்சு... இனி அவங்க வைக்கட்டும்... அப்புறம் அடுத்த ரெண்டு சாதிக்காரனும் வைக்கட்டும்... இதெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சதுதானே...” மெதுவாகச் சொன்னார் பஞ்சநாதன்.

“நீ வேறப்பா... எப்பப்பாரு எதாவது பேசிக்கிட்டு.... அவனுங்க செய்யட்டும் வேணாங்கலே... அதுக்கு இதுதான் நேரமா..? பேசிக்கிட்டு இருக்கும் போது பிரச்சினை பண்ற மாதிரி...”

“சரி விடு... அவனுங்க போகட்டும்... அப்புறம் பேசலாம்...” என்றார் பஞ்சநாதன்.

“இல்ல மாமா... நாங்க பிரச்சினை பண்ண வரலை...” என்று செல்லையா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஏய் ராசு... அங்க என்ன பிரச்சினை..?” என்றபடி வண்டியை நிறுத்தினார் வாத்தியார் வாசுதேவன்.

“இல்ல சித்தப்பா... ஒண்ணுமில்ல...” தலையைச் சொறிந்தான் ராசு.

“போங்கடா... போயி வேலையைப் பாருங்க... நல்லாயிருக்க ஊருக்குள்ள தேவையில்லாத வேலை பாத்துக்கிட்டு... சுயமா சிந்திங்கடா... படிக்கிற வயசுல எதைச் செய்யணுமோ அதைச் செய்யிங்க... சில பேருக்கு வயசானாலும் புத்தி வராது... போங்கடா... போர்டு, கொடியின்னு தூக்கிக்கிட்டு திரிஞ்சீங்க... எல்லாப் பயலையும் வெட்டி பொலி போட்டுருவேன்...” என்றபடி வேலாயுதத்தை முறைக்க,  அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

ராசு தன் நண்பர்களுடன் வண்டியை எடுக்க, “ஊரைக் கெடுக்குறதுக்குன்னே இருக்குதுக.. போய்ச் சேராம...” என்றபடி வண்டியை நகர்த்தினார் வாத்தியார்.


பெருமாள் கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு பிரகாரம் சுற்றி வந்து வெளிப் பிரகாரத்தில் ஒரு ஓரமாக அமர, சாரதி கோவிலின் பெருமைகளையும் வரலாற்றையும் சொல்லி முடித்திருந்தான். அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அம்பேத்கார், “படிப்பு முடிச்சதும் எங்களுக்கெல்லாம் வேலை கிடக்காம தெருவுல திரிஞ்சாலும் உனக்கு மட்டும் வேலை இருக்கும் மாப்ள...” என்றான் சிரிக்காமல்.

“எனக்கு என்ன வேலை இருக்கு....?” சாரதி

“என்ன மாப்ள இப்படிச் சொல்லிட்டே... போட்டிருக்கிற சட்டையை கழட்டிட்டு வேஷ்டி, பூணூல், உடம்புல ஒரு துண்டைப் போட்டுக்கிட்டு “மாமி யாரு பேருக்கு அர்ச்சனை’யின்னு பேஷா சம்பாரிக்கலாமேடா...”

“ஏய்.... என்ன கிண்டலா...? இதெல்லாம் சரி வாரதுடா...”

“ஏன் வராது.... இன்னைக்கு நிலமைக்கு செலவில்லாத சம்பாத்யம்டா.... ஒரு அர்ச்சனைக்கு பத்து ரூபாய்... அப்புறம் என்ன...” சீண்டினான் பிரவீண்.

“சரி வாங்கடா... ஜாகீர் உள்ள வரலைன்னு வெளிய நிக்கிறான்... அங்கிட்டுப் போயி உக்காந்து பேசலாம்...”

“அவனைப் புரிஞ்சிக்க முடியலை... காலேஜ் போகும் போது வழியில இருக்க முருகன் கோவில் விபூதியை நம்ம கூட சேர்ந்து நெற்றியில இட்டுக்கிறான்... அப்ப நாம எதாவது சொன்னா அடப் போங்கடா.... உனக்கு முருகன் எனக்கு அல்லான்னு சிரிப்பான். ஆனா இங்க கோவிலுக்குள்ள வர்றதுக்கு யோசிக்கிறான்டா... சாரதி எவ்வளவோ கூப்பிட்டும் வரலைன்னு சொல்லிட்டான்...” என்றான் வருத்தமாய் அம்பேத்கார்.

“டேய்... அவனோட மனசு தெரியும்... ஆனா அவங்களுக்குன்னு ஒரு சில விதிமுறைகள் இருக்கும்... எதுக்கு அதை ஆராய்ந்துக்கிட்டு... ஒருவேளை அவனும் நம்ம கூட உள்ள வந்து நாம பேச்சு வாக்கில ஜாகீர்ன்னு சொல்லி, யாராவது கேட்டாங்கன்னா உடனே முஸ்லீம் பையனை எதுக்கு நம்ம ஐயர் மகன் கோவிலுக்குள்ள கூட்டியாந்திருக்கான்னு பேசுவாங்க... வீணாவுல எதுக்கு பிரச்சினை... வாங்க போகலாம்....”

வெளியில் வந்து எல்லாருமாக அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். “சாரதி நாங்க நைட்டே கிளம்புறோம்டா... “ என்றான் கண்ணன்.

“ஏன்டா... காலையில பிள்ளையார்பட்டி பொயிட்டு அப்புறம் போகலம்டா... நைட் எங்க பழைய வீட்ல போயி தங்கலாம்...” என்றான் சாரதி.

“இல்லடா... நாளை மறுநாள் நடவு இருக்கு... நாளைக்கு நாத்துப் பறிக்க ஆள் வருதுன்னு அப்பா சொன்னாரு... நானும் இருந்தா வேலை ஆட்களோட என்னால முடிஞ்சளவு நாத்துப் பறிச்சி வைக்கலாம்... அப்பா வரும்போதே சொல்லித்தான் விட்டாரு...”

“அட.... விவசாய வேலை எல்லாம் தெரியுமா உங்களுக்கு...?” வேகமாகக் கேட்டாள் சுபஸ்ரீ.

“உனக்குத்தான் சுடுதண்ணி வைக்கவே தெரியாது... விவசாயக் குடும்பத்துல பிறந்தவனுக்கு விவசாயம் தெரியாதா என்ன... மண்டு...” என்றான் சாரதி.

“சாரதி நீ சும்மா இரு... மறுபடிக்கும் அவங்க கோவிச்சிக்கப் போறாங்க... எனக்கு எல்லா வேலையும் தெரியுங்க... “ என்றான் கண்ணன்.

“கண்ணண்ணா... எங்க அம்மு எல்லா வேலையும் நன்னா பார்ப்பா... அவ சமைச்சா அவ்வளவு டேஸ்டா இருக்கும்... எங்கண்ணா அவளை சும்மா வம்புக்கு இழுக்கிறான்...” என்றாள் அபி.

“அதானே... எப்பவும் சாரதிக்கு அவங்களை எதாச்சும் சொல்லணும்... அடியேய் ஆயுசுக்கும் அவங்க கையாலதான் சாப்பிடணும்... தெரிஞ்சிக்க” எனச் சிரித்தான் ஜாகீர்.

“அண்ணா... பேஸ்புக்ல கலக்கலா எழுதுறீங்க... நான் என் பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் எங்கண்ணன் எழுதியதுன்னு சொல்லி காட்டுவேன்...” என்றாள் அபி.

“அட ஏம்மா நீ வேற... நான் ரொம்ப நெருக்கமானவங்க தவிர வேற யாரையும் பிரண்ட்ஸா சேர்க்கிறதில்லை... சும்மாவே அப்பா கத்துறாரு... அதனால அதிகமா பேஸ்புக்ல இருக்கதில்லை... சரிடா சாரதி வாடா வீட்டுக்குப் பொயிட்டு சாப்பிட்டு கிளம்ப சரியா இருக்கும்” என்றான் கண்ணன்.

வீடு நோக்கி நடக்கும் போது “ஏய் அபி... அவரு ஐடி என்னடி...” மெதுவாகக் கேட்டாள் சுபஸ்ரீ.


(அடுத்த சனிக்கிழமை தொடரும்)
-‘பரிவை’ சே..குமார்.

வியாழன், 3 மார்ச், 2016

வாக்காளர் அலப்பறை...1

வன் அறைக்குள் நுழையும் போது மாற்றம் கொண்டு வருவோம் என்று சொல்லும் கட்சியின் தேர்தல் பிரச்சார நிகழ்வின் தொகுப்பை பார்த்துக் கொண்டிருந்த அவர், ஹெட்செட்டைக் கழற்றி வைத்து விட்டு பேச்சை ஆரம்பித்தார். பேச்சின் ஊடே.... "அவங்க நல்ல செயல்திட்டம் வச்சிருக்காங்க தெரியுமா..?" என்று எப்பவும் போல் அந்தக் கட்சிக்காக வரிந்து கட்டிப் பேச ஆரம்பித்தார்.

"யாரு அந்த சாதிக் கட்சியா..?" என்றான் அவன்.

"எதுக்குங்க சாதிக் கட்சி... சாதிக் கட்சியின்னு சொல்றீங்க... எல்லாக் கட்சியுமே அப்படி ஆரம்பிச்சி வளர்ந்தவைதாங்க..."

"எதை வச்சி அப்படிச் சொல்றீங்க... அவங்களுக்குப் பின்னால வந்த விஜயகாந்த் தமிழகம் எங்கும் கட்சியை வளர்த்து வச்சிருக்கும் போது இவங்க சில மாவட்டங்களில் மட்டும்தானே இருக்காங்க... எங்க மாவட்டத்துல எல்லாம் சுத்தமாவே இல்லீங்க.."

"விஜயகாந்தை விடுங்க... அவனெல்லாம் ஒரு தலைவன்... இங்க பாருங்க... இப்படி சாதி சாதியின்னு பேசித்தான் ரெண்டு ஊழல் கட்சியை ஆட்சியில அமர்த்தி அடிமையாக் கிடக்கோம்... தெரிஞ்சிக்கங்க..."

"அது சரி... இப்பச் சொன்னீங்களே அது வாஸ்தவமான பேச்சு... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... சாதிக் கட்சியான உங்க கட்சி...."

"ஏங்க அந்தக் கட்சியோட கொள்கை பிடிக்கும்ங்க... அதுக்காக எங்க கட்சியின்னு சொல்லிட்டீங்க... நமக்கெல்லாம் கட்சி எதுக்குங்க...?"

"சரி... சாரி... சாதிக்கட்சியான அந்தக் கட்சி வேரூன்றி இருக்கிற மாவட்டங்களில் கண்டிப்பா ஜெயிக்கும் இல்லையா... ஆனா எங்க மாவட்டத்துல எங்க சாதிக்காரனுக்கு ஒரு கட்சியிருக்கு... சொந்தக்காரனை நிப்பாட்டுனானுங்க... எங்க சாதிப் பயலுக ஒட்டுப் போட்டிருந்தா ரெண்டாவது இடத்துலயாச்சும் வந்திருப்பான்... மொத்தமா 51 ஓட்டு டெபாசிட் காலி... எவனும் போடலையே... அது தாங்க நாங்க... நாங்கன்னு இல்லை எல்லாச் சாதிக்காரனும் அப்படித்தான்... எங்களுக்கு சாதியை வச்சி அரசியல் பண்ண வேண்டாங்க... நல்லவங்க வந்தாப் போதும்..."

"இவ்வளவு சொல்றீங்க... அப்ப மாற்றம் கொண்டு வாறேன்னு செயல் திட்டம் வச்சிருக்கிற அவருக்கு ஓட்டுப் போடுறதுல என்ன வந்திருது... தமிழகத்தில் ஒரு மாற்றம் வரட்டுமே..."

"என்ன மாற்றங்க வரும்... வாரிசு அரசியலை திட்டிக்கிட்டு வாரிசு அரசியலை வளர்க்குறாரே அந்த மாற்றமா...?"

"உங்களுக்கு அவரைப் பிடிக்கலைங்க... அதான் விடுங்க... உங்களை மாதிரி படிச்ச ஆளுங்க... சாதிக்கட்சி சாதிக்கட்சியின்னு பேசும் போது... வேற என்னத்தைச் சொல்ல... மறுபடிக்கும் அம்மாக்கிட்டயோ ஐயாக்கிட்டயோ கொடுத்துட்டு குத்துதே... குடையுதேன்னு சொல்லிக்கிட்டு இருங்க... வேற என்ன நான் சொல்ல முடியும்..."

"கோபப்படாதீங்க... அப்ப உங்க கட்சியை அரியணையில் ஏற்ற லீவு போட்டுட்டு ஊருக்குப் போறீங்க... அப்படித்தானே...?"

"லீவா... லீவெல்லாம் கொடுக்க மாட்டானுங்க...அது போக நமக்கெல்லாம் ஏதுங்க கட்சி... எது நல்ல கட்சியின்னு தெரியுதோ அதுக்கு ஓட்டுப் போட வேண்டியதுதான்... ஒரு மாற்றம் வரட்டுமே...."

"என்னங்க... எப்ப பார்த்தாலும் அந்த கட்சித் தலைவரோட பேச்சை மட்டுமே கேக்குறீங்க... ஊர்ல இருக்க ஆளுங்களுக்கு எல்லாம் இணையத்துல அந்தக் கட்சி தொலைக்காட்சி எப்படிப் பாக்குறதுன்னு சொல்றீங்க... உங்க பொண்ணுக்கு கூட படிப்பை பற்றிய இணையதளம் குறித்துச் சொல்றதை விட்டுட்டு இதுல போயி அவரோட ஸ்பீச் கேளு... அருமையாப் பேசுறாருன்னு சொல்றீங்க... பேசும் போது திராவிடத்துக்கு மாற்றுன்னு சொல்றீங்க... ஆனா அது உங்க கட்சியின்னு சொன்னா ஏத்துக்க மாட்டீங்க... ஓட்டுப் போடுவீங்களான்னு கேட்டா... அதுக்கும் மழுப்புறீங்க... அப்புறம் எதுக்குங்க அரசியல் பேசுறீங்க..."

"ஆமா... நான் என்ன பேசினாலும் நீங்க சாதிக்குள்ள கொண்டாந்து நிப்பாட்டுறீங்க..."

"இங்க பாருங்க... எனக்கு உங்களுக்கெல்லாம் பிடிக்காத விஜயகாந்தைப் பிடிக்கும்... அவரைப் பற்றி விமர்சனம் அதிகம் இருக்கலாம்... ஆனாலும் எனக்கு பிடிக்கும்ன்னு நான் சொல்லும் போது நீங்க ஏன் மழுப்புறீங்க... தைரியமாச் சொல்லுங்க மாற்றத்துக்கான கட்சி எங்க கட்சியின்னு..."

"...."

"என்ன மௌனமாயிட்டீங்க..."

"இல்லீங்க... உங்ககிட்ட பேச முடியாதுங்க... எதாச்சும் சொன்னா சாதிக் கட்சியின்னு சொல்வீங்க..."

"என்னங்க நீங்க நான் சொன்னாலும் சொல்லாட்டியும் அது சாதிக் கட்சிதானே...?"

"......"

"என்ன மறுபடியும் மௌனம்... மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே..."

"அப்படியில்லைங்க... இந்தா எங்க கட்சியின்னு சொல்றீங்க பாருங்க..."

"சரி விடுங்க... அந்த சாதிக்கட்சிக்கு... அதாவது மாற்றம் கொண்டு வரப்போற, திராவிடத்துக்கு மாற்றான அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட நினைக்கிற சாதாரண தமிழன்தான் நீங்கன்னு நான் நம்புறேன்.... நீங்களும் மாற்றம் வரணுமின்னு ஓட்டுப் போட நினைக்கிறீங்க... ஆனாலும் கம்பெனி லீவு கொடுக்காது... அப்படித்தானே...?"

"....."

"என்னங்க இதுக்கும் பேச்சைக் காணோம்.... சரி விடுங்க... எங்க கட்சிங்க இதுன்னு உங்களாலே சொல்ல முடியலை... ம்... ஆமா போன தேர்தல்ல ஓட்டுப் போட்டீங்களா?"

"இல்லைங்க..."

"அதுக்கு முந்தின தேர்தல்...?"

"இல்லைங்க..."

"நான் ஒண்ணு சொல்லட்டுமா...?"

"என்ன..."

"உங்களுக்கு பிடிச்ச கட்சியோட டிவி பாருங்க.... மீட்டிங் பாருங்க...பேட்டி பாருங்க... பத்திரிக்கை செய்தி வாசிங்க... அது உங்க உரிமை... சுதந்திரம்... ஆனா அதெல்லாம் உங்க காதுல மாட்டியிருக்கிற இயர் போனைத் தாண்டி வெளியில வராம பாத்துக்கங்க... மாற்றம் வேணுமின்னு சொல்ற நீங்க முதல்ல ஓட்டுப் போடணும்.... பின்னே இதுதான் என் கட்சியின்னு சொல்ற மனப்பாங்கு வேணும்... இந்த மாற்றம் உங்களுக்குள்ள முதல்ல வரணும்... எதுவுமே இல்லாம சும்மா சீமான் மாதிரி கத்திக் கத்தி என்னையும் டென்சனாக்காதீங்க.... சரியா...?"

"..........."

"இப்ப இருக்கீங்க பாருங்க... இதையே தேர்தல் முடியிற வரைக்கும் கடைபிடிங்க... மாற்றம் முதல்ல நம்ம ரூமுக்குள்ள வரட்டும்... சரிங்களா..? சும்மா அப்படி இப்படின்னு எல்லாம் பேசாதீங்க... செயல்ல காட்டாத கட்சியும்... இதுதான் என் கட்சி... இவர்தான் என் தலைவன்னு சொல்லாத ஆளுகளும் பேசாம இருக்கதே நல்லது...  சரிங்களா...? "

அவர் ஹெட்செட்டை மாட்ட, "இப்பவே மாட்டிட்டீங்க... சரி விடுங்க... நாம இங்க இருந்து பேசி என்னாகப் போகுது... வாங்க காபி சாப்பிட்டுட்டு அப்படியே ஒரு சாமான் வாங்கணும்... வாங்கிட்டு வருவோம்... கிளம்புங்க" என்றான்.

"வேண்டாங்க... நீங்க போங்க... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு..." என்றபடி அவர் கணிப்பொறியில் அந்தக் (சாதிக்) கட்சி தலைவரின் வீரதிரப் பேச்சை மீண்டும் கேட்க ஆரம்பித்தார்... மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில். 

'இனி இந்தாளு நமக்கிட்ட அரசியல் பேச வரமாட்டான்... எப்பப்பாரு... மாற்றம் வருது... மக்களுக்கு மலர்ச்சி வருதுன்னு... அம்புட்டுப் பயலும் நாந்தேன் முதலமைச்சருன்னு ஆசையோட அலையிறானுங்க... இவரு மாற்றம் வருது... நாற்றம் வருதுன்னு... இனி மனுசன் ரூமுக்குள்ள கத்த மாட்டான்... இப்பத்தான் நிம்மதியா இருக்கு... நாளைக்கு மேப்பெட்டுக்காரனுங்கு ஒரு ஆப்படிக்கணும்... சாதிக்கு சம்மட்டி அடிச்சாச்சு... இனி இனத்தை இடத்தைவிட்டு நகரவிடமாப் பண்ணனும்...' என்று மனசுக்குள் நினைத்தபடி லிப்டுக்காக காத்திருந்தான் அவன்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 1 மார்ச், 2016

கனவுப் பிரியனின் 'கூழாங்கற்கள்'



னவுப் பிரியன்...

இணையத்தின் மூலம் எனக்குள் வந்தவர்... முகநூலில் தொடர்பு கொண்டு, பின்னர் போனில் பேசி... தொடர்ந்த அன்பில் அபுதாபி ஐ.எஸ்.சியில் நடந்த பாரதி நட்புக்காக பட்டிமன்ற நிகழ்வில் எங்கள் நட்பின் சந்திப்பு நிகழ்ந்தது. அன்று நான், கில்லர்ஜி அண்ணா மற்றும் கனவுப் பிரியன் அண்ணா மூவரும் முதல் சந்திப்பில் நீண்ட நாள் உறவு போல் அளவளாவிப் பிரிந்தோம். அதன் பின்னும் போனிலேயே தொடர்பு... நேற்று அவரின் புத்தகம் கொண்டு வந்து கொடுத்தபோது இரண்டாம் முறை சந்திப்பு...

சரி புத்தகத்துக்கு வருவோம்...

நானும் என்னோட முதல் சிறுகதைத் தொகுப்பை ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்னு முதல் முறை போனில் சொல்லியிருந்தார். அவர் புத்தகப் பணி முடித்து ரத்னவேல் ஐயாவின் முகநூல் செய்திகளில் பலருக்கு அனுப்பிய விவரங்களை தினமும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒருநாள் புத்தகம் வந்ததும் கொண்டு வந்து தருகிறேன் என்று போன் செய்தார். பின்னர் அவருக்கு வந்த நான்கு புத்தகத்தில் எனக்காக ஒன்றும் எடுத்து வைத்திருந்து நேற்று நண்பரின் காரில் வந்து என் இருப்பிடத்திலேயே கொடுத்துச் சென்றார். 

கூழாங்கற்கள்... விதவிதமான வடிவங்களில் தண்ணீர் உரசும் கரையோரம் கிடக்கும்... பார்க்க அழகாய் எல்லாரையும் கவரும்... அப்படித்தான் இதில் இருக்கும் இருபத்தியோரு கதைகளும் வெவ்வேறு கதைக்களத்தில் வாசிப்பவரைக் கவர்க்கிறது. சிறுகதைகள் வாசிக்கும் போது அதன் போக்கில் நாம் பயணிக்க வேண்டும்... அப்படிப்பட்ட கதைகள்தான் நமக்குள் அதன் சந்தோஷம், வேதனை, வலி என எல்லாவற்றையும் இறக்கிச் செல்லும். அப்படியான கதைகள் இதில் அதிகம் இருக்கின்றன.

நம் மனங்களைக் கொள்ளை கொள்ளும் கரிசல்காட்டு எழுத்தாளர் திரு. கி.இராஜநாராயணன் அவர்களின் வாழ்த்தும்.... எழுத்தாளர்கள் திரு. இரா. நாறும்பூநாதன், திரு. சுதாகர் கஸ்தூரி, திரு. கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பார்வையில் அணிந்துரையும்... திரு.ஆர்.ஷாஜகான் அவர்களின் வாழ்த்துரையும் தாங்கி... கவிஞர். வதிலை பிரபா அவர்களின் ஓவியா பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கும் கூழாங்கற்கள், கனவுப் பிரியன் அண்ணாச்சியின் முதல் புத்தகம் என்பதைவிட முத்தான புத்தகம் என்று சொல்லலாம்.

'நீ புக்கு போடலைன்னு இப்ப எவன் அழுதான்?' என்று ஆரம்பிக்கும் இவரின் என்னுரை என்னை ரொம்பப் பாதித்தது. அவரின் வாழ்க்கை... அப்பா, அம்மா மறைவு... சிறுவயதில் குடும்பப் பொறுப்பு... அப்பாவின் பிறந்தநாள் என்ன என்பதை அறிய முயற்சித்து அவரின் டைரிகளை வாசிக்க நேர்ந்தது குறித்தும் அதன் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் குறித்தும் உள்ளது உள்ளபடி காட்சிகளாய் விரியும் போது நம் அப்பாவின் பிறந்தநாள் எப்போது என்பது நமக்குத் தெரியுமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்து 'தெரியாது' என்ற பதிலும் முளைத்த போது வெட்கமாக இருந்தது. கல்லூரி காலத்தில் நான் கதை எழுத ஆரம்பித்த போது 'பெரிசா கதை எழுதிக் கிழிக்கப் போறாரு...?' என வீட்டிலேயே சொன்னார்கள். ஆனால் இன்று உன் எழுத்து நடை நல்லாயிருக்கு நிறைய எழுது அப்படின்னு முகம் தெரியாத நட்புக்கள் சொல்லும் போது நாமும் ஏதோ எழுதிக் கிழித்திருக்கிறோம் போல என்று தோன்றுகிறது. அப்படித்தான் இவரும் ஜெயித்திருக்கிறார் என்பதால்தான் தொடர்பே இல்லாமல் தொடர்பில் வந்து அதுவும் அபுதாபியில் இருவரும் சந்தித்துக் கொள்ளவும் முடிகிறது போலும்.

இதுவரை நூல் விமர்சனம் எழுதிய அனைவரும் 'அவரு அணில் கும்பளே மாதிரி' என்ற கதையைப் புகழ்ந்திருந்தார்கள். இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே இரு நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக ரசிகர்களை எல்லாம் அந்த ஜுரம் பிடித்துக் கொள்ளும். இங்கு இவர்கள் வேலைக்கு வந்த இடத்தில் விளையாடும் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, நானும் நிறைய பார்த்திருக்கிறேன்... வெள்ளி, சனி மற்றும் விடுமுறை நாட்களில் நிறையப் பேர் கிரிக்கெட் விளையாடுவதை... அதை வைத்து எழுதிய கதையில் நகைச்சுவைப் பந்தை வீசி வாசிப்பவர்களை சிரிக்க வைத்து மகிழ்ந்திருக்கிறார். போட்ட பந்தெல்லாம் சிக்ஸருக்குப் போனாலும் கடைசியில சொன்னானுங்க பாருங்க 'அவரு அப்படியே அணில் கும்ளே மாதிரி...'  அதுதான் கதையை வாசித்து முடிக்கும் போது நமக்குள் சிரிப்பை தேக்கி வைத்துச் செல்கிறது.

(எழுத்தாளரின் கையெழுத்துடன்)
திக்குவாய் மகளின் வைத்தியச் செலவுக்காகவே நல்ல சம்பளத்தை எதிர்பார்த்து வெளிநாடு... வெளிநாடு என்பதைவிட ஒரு தீவுக்குச் சென்று பணி செய்யும் நாயகனைப் பிடிக்காத பொண்டாட்டி பிரிவில் அவன் அன்பை உணர்ந்து பேச ஆரம்பிக்க, குழந்தைக்காக கடற்கரையில் கிடைக்கும் கூழாங்கல்லை சேகரித்து ஊருக்கு கிளம்புகிறான், ஏர்போர்ட்டில் மடக்கப்பட்டு அவனது கூழாங்கல் பாக்கெட் சோதனை இடப்பட்டு அதன் பின் அவன் வாழ்வில் மாற்றம் வருவதைச் சொல்லும் கதைதான் 'கூழாங்கற்கள்'. 

ஒரு பொண்ணு நம்மக்கிட்ட சிரிச்சி பேசிட்டா போதும் சுற்றியுள்ளவர்கள் காதல் கத்திரிக்காய் என்றெல்லாம் சொல்லி ஏத்திவிட, அவளிடம் நாம் நடந்து கொள்ளும் முறையால் அந்த நட்பை இழக்க நேரிடும்... இது பலருக்கு நடக்கும் நிகழ்வு... 'நீயா இப்படி... உன்னை நான் எப்படி நினைத்திருந்தேன் தெரியுமா?' அப்படின்னு அவங்க விலகிப் போகும் போது நம்மை நாமே கொலை செய்து கொள்ளலாம் போல் தோணும். இந்தக் கதையில் அவள் விளக்கமாய் பேசி தனது ராஜினாமாவை எழுதுவது போல் முடித்திருந்தாலும் அவனுக்கு காலமெல்லாம் அது மனதை அரித்துக் கொண்டேதான் இருக்கும் என நம்மை எண்ண வைக்கிறது. 'ஜுவானா என்றொரு பிலிப்பைனி பெண்'.

இப்படித்தான் மனிதரைப் பார்த்து எடை போடாதீர்கள் என்பதை குண்டு பாகிஸ்தானியும்... மனிதர்களை விட விலங்குகள் மீது பாசம் கொண்டவள் என்பதை 'வடிவு', வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் இருந்தாலும் சுயமாய் சம்பாதித்து அதன் மூலம் மற்ற முதிய நண்பர்களையும் புதிய முயற்சிக்கு இழுக்கும் 'பனங்கொட்டை சாமியார்', வெளிநாட்டில் இருக்கும் நண்பன் மனைவியை சந்தேகித்து அனுப்பும் மெயிலும் அதன் பின் அவனுக்கு உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் கிடக்கும் போது அருகிருந்து பார்க்கும் அவன் மனைவியிடம் பேசியே அந்த மெயிலில் அவன் சொன்ன அத்தனை காரணங்களுக்கும் பதிலைப் பெற்று ஒன்றுமே பேசாமல் கண்ணீரிலேயே நன்றி சொல்ல வைக்கும் 'ரபீக் @ ஜிமெயில்.காம்' அரபிப் பெண்கள் பற்றி, அவர்களின் வாழ்க்கை பற்றி தவறான கண்ணோட்டத்தை உடைக்கும்  'ஜைனப் அல் பாக்கர்'. என எல்லாமே வித்தியாசமாய்... இதேபோதான் இங்கு சொல்லாத மற்ற கதைகளும் பயணிக்கின்றன. எல்லாம் சொல்லிச் சென்றால் எல்லையில்லா மகிழ்வில் நாலைந்து பதிவுகளாகப் பயணிக்க வேண்டியிருக்கும்.

கதைகள் எல்லாம் வெளிநாட்டுக் களத்தில் பயணித்தாலும் ஆசிரியர் மனசுக்குள் தன்னோட ஊர்ப் பாசம் இருப்பதால்தான் இடையிடையே ஊரும் உறவுகளும் நண்பர்களும் வந்து போகிறார்கள். கதைகளில் அவர் தொழில் சார்ந்த குறிப்புக்கள் எல்லாம் வருகின்றன. நாம் அறிந்திராத பல மிஷின்கள், அது சார்ந்த விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறார்.  கதைகளை வாசிக்கும் போது எல்லாமே அவரின் தொழில் நிமித்தமான பயணங்களில் கிடைத்த அனுபவங்களே என்றும் தோன்றுகிறது. ஏனெனில் அனுபவங்கள்தானே அழகான சிறுகதைகளாக விரிகின்றன. 

ஒவ்வொரு கதையை வாசிக்கும் போது அழகான எழுத்து நடை நம்மை அசரடிக்கிறது.  இருந்தாலும் தற்போது அவரின் முகநூல் பக்கத்தில் வாசிக்க கிடைத்த 'தட்டுக் கடை' உள்ளிட்ட சில புதிய கதைகளில் எழுத்து நடை இன்னும் மெருகேறி இருப்பதாய் உணர்கிறேன்... புத்தகத்தில் இருக்கும் கதைகளில் சில இடங்களில் எழுத்து நடை சற்றே விலகிப் போயிருப்பதாய் தோன்றியது. இருப்பினும் எழுத எழுதத்தான் கையெழுத்து  நல்லாயிருக்கும் என்பது போல் தொடந்து பயணிக்கும் போது மிகச் சிறப்பாக எழுதுவார் என்பதில் ஐயமில்லை.

ரொம்பப் புகழாதீங்க... உண்மையான கருத்தைச் சொல்லுங்க என்று நீங்க சொல்றது கேட்கிறது. உண்மையிலேயே கூழாங்கற்கள் வித்தியாசமான வாசிப்பு அனுபவம்...சனிக்கிழமை காலை எடுத்த புத்தகத்தை வேலைகளுக்கு இடையே நிறுத்தி நிறுத்தி... சரி அப்புறம் வாசிக்கலாம் என்று ஒதுக்கி வைத்தாலும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது... அதுதான் ஒரு எழுத்துக்கான வெற்றி. உப்புக்காற்று கதையில் ஒரு பக்கத்தில் பாதி இல்லை... ஆனால் உப்புக்காற்று ரொம்ப நல்லாயிருந்துச்சு... இது அவரின் எழுத்து பற்றிய குறையில்லைங்க... புத்தகத்தில் அரைப்பக்கம் குறைவாய் இருந்ததைச் சொல்லி வைத்தேன்.

எது எப்படியாகினும் சில கருத்துக்களைச் சொல்வதில் தவறில்லை என்பதால் குறைகள் என்று பார்த்தால் சில செய்திகள் பல கதைகளில் வருகிறது. நிறைய இடங்களில் எழுத்துப் பிழை சரி செய்யப்படவில்லை. எழுத்தும் ஒரே எழுத்துருவில் இல்லாமல் சிறிது பெரிதாக இருக்கிறது. அபார எழுத்து நடையில் வெளிநாட்டு வாழ்க்கையை கொண்டு வந்திருக்கும் முயற்சியில் இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்குமோ என்று தோன்றியது. இதெல்லாம் பெரிய குறைகள் இல்லை... முதல் முயற்சி... எப்படிக் குழந்தை பிறந்திருந்தாலும் அதை நாம் கொஞ்சி மகிழத்தான் செய்வோம். அப்படித்தான் இதுவும்... முதல் முயற்சியிலேயே எல்லாராலும் சதம் அடிக்க முடியாது. கனவுப் பிரியன் அண்ணா 95க்கு மேல் எடுத்திருக்கிறார். இதுவே ஆகச் சிறந்த வெற்றி.... இனி வரும் படைப்புக்களில் எழுத்தாளரின் மிகச் சிறப்பான எழுத்தை நாம் வாசிக்கும் வாய்ப்பைப் பெறலாம் என்ற நம்பிக்கையுடன்....

கூழாங்கற்கள்
கனவுப் பிரியன்
ஓவியா பதிப்பகம்
விலை : ரூ.200
தொடர்புக்கு : usooff@gmail.com

புத்தக வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை (மார்ச் - 5) அன்று  நடைபெறுகிறது.


வாழ்த்துக்கள் அண்ணா... இந்த விதை விருட்சமாகட்டும்...

-'பரிவை' சே.குமார்.


சனி, 27 பிப்ரவரி, 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-6)

முந்தைய பகுதிகளை வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5

*********
சுபஸ்ரீ ஓடிவந்த வேகத்தில் அபியின் தோள் பிடித்து கண்ணனைப் பார்த்ததும் “என்னங்க நீங்க... அவன்தான் கிண்டல் பண்றான்னா... அதுக்காக கோவிச்சிக்கிட்டு...”

“அலோ... அவரு எப்பவுந்தான் கிண்டல் பண்ணுவார்... அவர் பண்றச்சே எல்லாம் பொறுத்துண்டுதான் இருக்கோம்... அதுக்காக முன்னப்பின்ன தெரியாதவாவை வச்சிண்டு கிண்டல் செய்யலாமோ...?”

“இல்ல... எங்ககிட்ட நீங்க ஜாலியா பேசிக்கிட்டு இருந்தீங்க...? திடீர்ன்னு கோபம் வந்துச்சா அதான் கேட்டேன்...”

“வீட்டுக்கு வந்த மனுசாக்கிட்ட எங்க பாட்டி மாதிரி பேசச் சொல்றீங்களா? அவருக்கு எனக்குந்தான் மேரேஜ்ன்னு வீட்ல பேசி வச்சிருக்கா...? அதுக்காக எப்பவும் கேலி பண்ணிட்டு இருந்தா... இப்ப இருக்கிற மாதிரித்தானே மேரேஜ்க்கு அப்புறமும் இருக்கச் சொல்லும்... அப்ப எங்களுக்குள்ள வீணாவுல பிரச்சினை வராதா...? ஏன் டைவர்ஸ் வரைக்கும் கூட போகலாம்தானே...”

“எதுக்குங்க டைவர்ஸ் அது இதுன்னு... சாரதி ரொம்ப நல்லவன்... யாரையும் கஷ்டப்படுத்த விரும்பமாட்டான்... அத்தை பொண்ணுன்னு ஜாலியா பேசிட்டான் விடுங்க...”
அவள் ஒன்றும் சொல்லாமல் நடக்க, அபி கண்ணனைப் பார்த்து “கண்ணண்ணா... பாட்டி என்ன சொன்னாங்க..?” என்றாள்.

“ஏய் அதெல்லாம் ஒண்ணும் சொல்லலை... “ மழுப்பினான் கண்ணன்.

“இல்லை நீங்க மறைக்கிறீங்க... ஏய் அம்மு பாட்டி என்ன சொன்னா..?” சுபஸ்ரீயைப் பார்த்துக் கேட்டாள் அபி.

“என்னத்தை சொல்லப் போறா... ஆச்சாரம், அனுஷ்டானம்ன்னு அந்தக் காலத்து பல்லவி பாடினா... உடனே உங்கண்ணன் பிரண்ட்... அதான் உங்க கண்ணண்ணனுக்கு கோபம், அப்புறம் அத்தை சமாதானப்படுத்தி இவாளை உள்ளற கூட்டிண்டு வந்தா...”

“அது சரி... எப்பவும் பாட்டிக்கு இதே வேலையாப் போச்சு... சாதி அது இதுன்னு பேசிண்டு... படிக்கிற இடத்துல சாதி பாக்க முடியுமா...?”

“முடியாதுதான்... பெரியவா.... அதுலயே ஊறுனவா... காலையில் எழுந்து குளிச்சிண்டு சூரிய நமஸ்காரம் பண்ணிட்டான்னா பின்னே... ஆத்துக்குள்ள வர்ற ஒவ்வொண்ணையும் கவனிக்க ஆரம்பிச்சிருவா... அவா எல்லாம் அப்படியே வளந்தவாதானேடி... இதுல வருத்தப்பட என்ன இருக்கு...”

“அதுக்காக..?”

“அபி ஒண்ணும் பிரச்சினை இல்லை... பெரிய மனுஷி... என்ன சாதி... என்ன மதம்ன்னு கேட்கிறது தப்பில்லைதானே... அதுதான் பாட்டியும் பண்ணினாங்க... விடு...”

“இந்தப் பெரியவங்கதாண்ணே பிரச்சினையே...”

“எல்லா இடத்திலும் அப்படித்தான்... சாதி, சாதியின்னு சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க... ஏன் இவரு வீட்ல கூட சாதியில ஊறின பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க... நாளைக்கு நாம அங்க போனா.... இவாள்ளம் எதுக்கு இங்க கூட்டிண்டு வாறேன்னு கத்துவாங்க... எல்லாத்தையும் விலக்கிட்டு நமக்குப் பிடிச்ச பாதையில பயணிக்கணும்... அதுதான் என்னோட பாதை... என்னோட பயணம்... இங்க இவங்களுக்காக ஆச்சாரமா இருக்க நான், கல்லூரி பிரண்ட்ஸ் எல்லோருடைய வீட்டிலும் சாப்பிட்டிருக்கேன்... அது நமக்கான வாழ்க்கை... நண்பர்கள் சூழ் உலகம்... அதுல நீ எஸ்.சியா, நான் எப்.சி என்றெல்லாம் பார்க்க முடியாது... பார்க்கவும் கூடாது. அப்படிப் பார்த்தா அதுக்கு பேர் நட்பே இல்லை... முதல் தடவை என்னோட பிரண்ட் மீனா வீட்டுக்குப் போனப்போ அவங்க அப்பா, ‘தாயி நீயெல்லாம் இங்க வரக்கூடாது’ என்றார். எதுக்கு வரக்கூடாது... என்னோட பிரண்ட் வீடு... அவளோட அப்பா அம்மா எனக்கும் அப்பா அம்மாதான்.... அப்புறம் எதுக்கு வரக்கூடாதுங்கிறீங்க... சாதியால உயர்ந்தவள்ன்னா... அடப்போங்கப்பா... உங்க ரத்தம், என் ரத்தம் எல்லாம் ஒண்ணுதான்... நாளைக்கே நான் அடிப்பட்டுக் கிடந்து ரத்தம் ஏத்தினாலும் அதுல இது எப்.சி. இது பி.சி, இது எஸ்.டி எஸ்.சியின்னோ... இல்ல இது முதலியார், இது யாதவர், இது செட்டியார் அப்படின்னோ எழுதியிருக்கப் போறதும் இல்லை... இது எந்த உடம்புல ஓடுன ரத்தம்ன்னும் யாரும் ஆராயப் போறதுமில்லை... இந்தக் குரூப் ரத்தம் இருக்கான்னுதான் பார்ப்பாங்க... அந்த நேரத்துல அந்த ரத்தம் தேவை அவ்வளவுதான்... குப்பனோட ரத்தம் குருக்களுக்குப் பொருந்தலாம்... குருக்களோட ரத்தம் ஆல்பர்ட்டுக்குப் பொருந்தலாம்... ஆல்பர்டோட ரத்தம் முகமதுக்கும் பொருந்தலாம்... அப்ப நமக்கு சாதியும் மதமும் பெரிசாத் தெரிவதில்லை... உயிர்தான் பெரிசாத் தெரியும்... சாகக்கிடக்கிறவன் இந்துன்னு சொல்லி முஸ்லீமோ, கிறிஸ்டியன்னு சொல்லி இந்தோ ரத்தம் கொடுக்க மறுப்பதில்லை... நான் கொடுக்கிறேன்னு சாதி மதம் கடந்து நிறையப் பேர் முன்னால வருவாங்க... இது எல்லாத்திலும் இருந்தா நல்லாயிருக்கும்... அப்படின்னு பேசினதும் என்ன அழகாப் பேசுறேம்மா... ஆனா ஊரு உலகம் என்ன பேசும் தெரியுமா? என்றார் ஆற்றாமையுடன். யார் பேசினா என்னன்னு நான் அவங்க வீட்டில் சாப்பிட்டேன். எனக்கு ஒண்ணும் ஆகலையே... அதான் சொல்றேன் பெரியவங்க அவங்க பாதையில பயணிச்சு நிறுத்தத்தை நெருங்கிக்கிட்டு இருக்காங்க.. அவங்க சாதி, மதத்தை சுமந்தது சுமந்ததுதான் போகும்போது நம்மக்கிட்ட இறக்கி வச்சாலும் அதை நாம தூக்கி சுமக்காம இறக்கி வச்ச இடத்திலேயே விட்டுட்டு போய்க்கிட்டே இருக்கணும்...” சுபஸ்ரீ நீளமாய் பேசி முடித்தாள்.

“அடேயப்பா... இப்படி நீ பேசினா அப்புறம் உனக்கு பரிசு கிடைக்காம வேற யாருக்குடி கிடைக்கும்... பாவம் எங்கண்ணன்... அவன் உன்னைக் கேலி பண்ணினா நீ அவனை பேசியே கொன்னுருவேன்னு நினைக்கிறேன்.... நீ சொன்னது எல்லாம் உண்மைதான்டி அம்மு... உன்னை மாதிரித்தான் நானும் சாதி மத வட்டத்துக்குள்ள உக்காரப் பிடிக்காதவள்...”

‘என்னமாப் பேசுறா...? எப்ப்ப்....பா... பேசினாள்ன்னா மெய் மறந்து கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலவே’ என்று நினைத்தபடி, ‘உண்மைதாங்க... அருமையாப் பேசினீங்க... இந்தா இங்க வந்திருக்கானே அம்பேத்கார்... அவங்க ஊர் திருவிழாவுக்குத்தான் முதல்ல போனோம்... சாரதி வரலை... மத்தவங்கதான் போனோம்.... எல்லாருக்கும் கலர் கொடுத்தாங்க... நான் சாப்பாடு இல்லையான்னு கேட்டதும்... தம்பி நீங்கள்லாம் நம்ம வீட்டுல.... அப்படின்னு இழுத்தாங்க... அட போங்கங்க அங்கிட்டு சாப்பாட்டைப் போடுங்கன்னு பந்தியில போயி உக்காந்தா... சாப்பாடு போடுறவன்ல இருந்து எங்களைச் சுத்தி நின்ன அவனோட சொந்தங்கள் எல்லாம் எங்களை புதுசாப் பாக்குற மாதிரி பார்த்தாங்க... அதுல ஒரு பொம்பளை...” பேச்சை நிறுத்தி சுபஸ்ரீயைப் பார்த்தான். அவள் ஒன்றும் பேசாமல் நடக்க, “சாரிங்க... எப்பவும் போல பொம்பளைன்னு சொல்லிட்டேன்... நீங்களெல்லாம் டீசெண்டா பேசுற ஆளுங்க... எங்க ஸ்லாங்க் அப்ப அப்ப இப்படித்தான்... ஒரு லேடி... பாருவே... அவனுங்கதான் சாப்பிடுறேன்னு சொன்னா இவங்க போடலாமா அப்படின்னு எங்க காதுபடவே சொன்னுச்சு... நாங்க வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பினோம். நான் வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி எங்கப்பாவுக்கு செய்தி போயாச்சு.... சாமி குத்தம் ஆயிடும்... நீ எப்படி அங்க சாப்பிடுவே.... முதல்ல குளிச்சிட்டு உள்ள வான்னு ஒரே கத்தல்... நானும் உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி எதிர் பாட்டுப் பாடிப் பார்த்தேன்... முடியலை... தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை அடிக்காதீங்க... என எங்கம்மா சொல்லும் வரை நீடித்தது. அப்புறம் அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப பேச்சு வார்த்தை இல்லை... ஆனாலும் நான் பிரண்ட்ஸ் வீடுகளுக்குப் போறதோ... சாப்பிடுறதோ குறையலை.... எதுக்காக நான் மாறணும்... சாதி சாதியின்னு திரியிற இந்த சமூகம் மாறட்டும்... இந்தச் சமூகத்தை மாற்றுவதில் என்னோட பங்கு சிறதளவேணும் இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன்... பார்க்கலாம்”

“ம்... ரெண்டு புரட்சியாளருக்கு இடையில் நான் மாட்டிக்கிட்டேன்...” என்று அபி சிரிக்க, சுபஸ்ரீ எதுவும் பேசாமல் நடக்க, சாரதி ‘கண்ணா வேகமாக வாங்கடா... அப்புறம் பேசிக்கலாம்’ என்று கத்த, நடையின் வேகம் கூடியது.

பெருமாள் கோவில் கோபுரம் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது.


சுதந்திரத்துக்குப் போராடி, தன்னுயிரை பீரங்கிக் குண்டுக்கு இரையாக்கிய வீரனின் படம்... சீறும் சிங்கம்... சாதிக்கட்சிக்கான கொடி... அந்தச் சாதியைச் சேர்ந்த சினிமா நடிகரின் படம் என எல்லாம் வரையப்பட்டு முக்கியஸ்தர்களின் பெயரையும் சுமந்து புதிய மாலை போடப்பட்ட அந்த சாதிச் சங்கப் பலகை ஜொலித்தது. அருகே கொடி மரத்தில் கட்டப்பட்ட கொடி காற்றில் பறந்தது.

“எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குய்யா... நம்ம சாதிப் பசங்க இவ்வளவு ஆர்வமா சாதியை கொண்டாடுறதே பெருமைதானே... இன்னைக்கு அம்புட்டுப் பயலுக வண்டியிலயும் சாதியும் அரிவாளும் தலைவரோட படமுமா இருக்கு...  அன்னைக்கு கல்யாணப் பத்திரிக்கையில பேர் போட்டா போதும்ன்னு சொன்னோம்... இன்னைக்கு இருக்கிற இளைய தலைமுறை சாதியோட போடுது... சாதி உயிர்ப்பா இருக்கணும்ய்யா... இங்க இந்த போர்டு வைக்க ரொம்ப தீவிரமா முயற்சி செய்தது நம்ம வேலாயுதம்தான்... அவரு நம்ம சாதிச் சங்கத்துக்கு இந்த ஊரு தலைவரா இருக்கது பெருமையான விஷயம்... இனி நம்ம சாதித் தலைவரோட ஒவ்வொரு பிறந்தநாளையும் நீங்க மிகச் சிறப்பாக் கொண்டாடணும்...” என்று பிரசிடெண்ட் பேசிக் கொண்டிருக்க, அப்போது வேகமாக வண்டியில் வந்த மற்றொரு சாதிப் பசங்க மூணு பேர் “ டேய் மாப்ள... அந்த இடத்தைப் பாரு... சரியா வருமா... நம்ம போர்டு சும்மா அங்க இருந்து பாத்தாலே தெரியணும்... கரெக்டா இடம் பாரு... “ என்று சொல்லியபடி இறங்க, அவர்களின் பைக்கில் இன்னுமொரு சுதந்திரப் போராட்ட வீரர் சாதித் தலைவராய் சிரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கீழே ரத்தச் சிவப்பில் ‘.................’வன்டா என எழுதப்பட்டிருந்தது.
-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அனார்கலி (மலையாளம்)

னார்கலி...

ஒரு காதலை... அதுவும் வருடக் கணக்கில் காத்திருக்கும் காதலை... மதம் கடந்த காதலை... எந்த ஒரு வன்முறையும் இல்லாமல், மதத்தை அதிகம் தூக்கிச் சுமக்காமல்... வலிகளை மட்டுமே சுமந்து... கேமரா சிறை பிடித்த இலட்சத்தீவின் அழகோடு ரசிக்க வைக்கும் படம்.

அழகானதொரு காதலை இவ்வளவு நேர்த்தியாக, குறிப்பாக வெட்டுக் குத்து என எதுவும் இல்லாமல்... வில்லனை சாதி, மதம் குறித்தெல்லாம் பேச வைக்காமல் எடுக்க மலையாளிகளால் மட்டும் எப்படி முடிகிறது..?நம்மவர்களால் இப்படி ஒரு கதையை  ஏன் எடுக்க முடிவதில்லை என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை... மேலும் இதை தமிழில் எடுக்கிறேன் என கொல்லாமல் விட்டாலே போதும் எனத்தான் தோன்றுகிறது. இங்கு சாதி, மதம் வாழணும்... மதுரையைக் களமாகக் கொண்ட படங்கள் எல்லாமே வன்முறையைக் களமாக்கியவைதான்... ஏன் மதுரையில் வேறு நல்ல கதைகளே இல்லையா...? தமிழகத்தின் மற்ற இடங்களில் எல்லாம் வன்முறைகள் இல்லையா..? 'வந்தேன் வெட்டியேபுடுவேன்..' என்று மதுரைத் தமிழ் பேசினால்தானா...? வாஞ்சையாக 'நல்லாருக்கியா?'ன்னு பேசினால் படம் ஓடாதா...? இங்கே காதல் என்றாலும் மோதல் என்றாலும் சாதியும் மதமும் இருக்க வேண்டும். அங்கோ சாதியும் மதமும் இருந்தாலும் காதல் அவற்றைக் கடந்து ரத்தம் சிந்தாமல் வாழ வேண்டும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் அனார்கலி.

மேஜரின் மகளைக் காதலிக்கும் ராணுவவீரன், நீச்சல் குளத்தின் உடைமாற்றும் இடத்தில் வைத்து முத்தம் கொடுக்க முனைய, அந்த நேரத்தில் அங்கு வரும் மேஜர், பதினைந்து வயதுப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றான் என இராணுவ விசாரணைக் கமிஷனுக்கு கொண்டு போகிறார். விசாரணையின் போது அவனைக் காதலிப்பதாக சாட்சி சொல்கிறாள் அந்தப் பெண். அதன்பின் அவளிடம் பேசும் அதிகாரி, பதினைந்து வயதில் வருவது காதல் அல்ல.. இன்னும் ஐந்து வருடங்கள் கழிந்தால் இவனை நீ மறப்பாய் என்று சொல்ல, இதே காதலுடன் ஐந்து வருடங்கள் கழித்து உங்களைச் சந்திக்கிறேன் அங்கிள் என உறுதியுடன் சொல்கிறாள். ராணுவ வீரனுக்கும் அவனுக்கு உதவினான் என அவனின் நண்பனுக்கும் பதவி இறக்கம் செய்யபடுகிறது. வேறு வேறு இடங்களுக்கு பயணிக்கிறார்கள்.

(பிரியல் கோர்)
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவளைத்தேடி வருகிறான்... அவனைப் பார்த்ததும் அவளுக்கு சந்தோஷம். இருவரின் சந்தோஷத்துக்கும் 'நீங்க இருவரும் சேர நான் சம்மதிக்கமாட்டேன்' என மீண்டும் செக் வைக்கிறார் மேஜர் அப்பா. 'உங்க அனுமதி இல்லாம அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்... நீங்க எங்களுக்கு ஓகே சொல்லாம செத்தாக்கூட அவரோடு நினைப்புலதான் வாழ்வேன்... அவரோட சேரமாட்டேன்...' என்று அப்பாவுக்கு பதிலடி கொடுத்துவிட்டு 'எனக்காக... நம் காதலுக்காக காத்திரு...' என அவனை அனுப்பி வைக்கிறாள். அதன் பின் அடிக்கடி சிடியில் பேசி அனுப்புகிறாள். அதுவே இவர்களின் காதலை வளர்க்கிறது... இன்னும் இறுக்கமான காதலாகிறது. அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக அவள் பேசுவதைக் கேட்டு அவளை மிரட்டி, அதை உடைக்க வைத்து  'அவள் இனி உன்னை நினைக்கமாட்டாள், மறந்துவிடு' என்று தானே பேசி, மகளை அனுப்பச் சொல்கிறார். பின்னர் வீட்டை காலி செய்து வேறு ஊருக்கு கிளம்ப, அவருடன் வர மறுத்து டீச்சர் வேலை கிடைத்திருப்பதாகச் சொல்லி அஜ்மீருக்குப் பயணிக்கிறாள். அதன் பின்னர் அவனுடன் அவள் தொடர்பில் இல்லாமல் போகிறாள்.  அவளின் காதலுக்கு தம்பி ஆதரவாக இருக்கிறான்.

அவளைத் தேடி அலுத்துப் போய், நீச்சலில் கின்னஸ் சாதனை புரிந்து பத்திரிக்கைகளில் எல்லாம் போட்டோவுடன் செய்தி வர வைக்கிறான். அப்படியாவது அவள் தன்னைத் தொடர்பு கொள்வாள் என்று நினைக்கிறான். அதுவும் தோல்வியே... அதன் பின்னர்தான் அவன் தன் நண்பனையும் மற்றொருவனையும் தேடி லட்சத்தீவுக்கு நீச்சல் பயிற்சியாளராக வருகிறான். அங்கு அவர்கள் இருவரையும் சந்தித்தானா? இறுதியில் காதல் வெற்றி பெற்றதா இல்லையா...? என்பதை லட்சத்தீவின் அழகோடு அருமையான படமாகத் தந்திருகிறார்கள்.

லட்சத்தீவில் அவனுக்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கிளப் செகரெட்டரி தோமாவின் தங்கைக்கும் இது போல் ஒரு காதல், ஒவ்வொரு முறை அவள் காதலனைத் தேடி கொச்சிக்கு கிளம்பும் போது அண்ணனால் தடுக்கப்படுகிறாள். அவளின் காதலும் கைகூடியதா இல்லையா...? டாக்டராக வரும் மியாவிடம் எப்போதும் சீண்டி விளையாடும் ப்ரித்விராஜ் மீது அவர் காதல் கொண்டாரா? நண்பனை அவனால் சந்திக்க முடிந்ததா..? அவன் தேடி வந்த மற்றொரு நபர் யார்..? அந்த நபரால் இவனது காதலுக்கு உதவி கிட்டியதா..? இப்படி நிறைய கேள்விகளை லட்சத்தீவில் இருக்கும் கவரெட்டி என்ற அழகிய ஊரில் வைத்து மிக அழகாக நகர்த்தியிருக்கிறார்கள்.

(மியா ஜார்ஜ்)
ப்ரித்விராஜூக்கு இப்போ சுக்ர திசை போலும், சென்ற வருடத்தில் ஆரம்பித்து இப்போ வந்திருக்கும் 'பாவாட' வரை வந்த எல்லாப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இடையில் 'டபுள் பேரல்' மட்டுமே கொஞ்சம் சறுக்கியது ஆனாலும் ப்ளாப் ஆகவில்லை. தனக்கான கதைகளை மிக அழகாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ராணுவ வீரனாய் காதலியின் பின்னாலே திரியும் போது செம ஹுயூட்... காதலியை தேடி அலையும் போது காதலின் வலியை சுமந்து திரிந்தாலும்... லட்சத்தீவில் லேசான தாடியுடன் நாம் எப்பவும் பார்க்கும் ப்ரித்விராஜை பார்க்க முடிகிறது. மியாவிடம் குறும்பு செய்யும் கலகலப்பான மனிதராய்... நீச்சல் பயிற்சி அளிக்கும் மனிதராய்... பன்முகம் காட்டுகிறார். 40வயசுல காதலியை தேடுறே... என நண்பன் கிண்டல் அடிக்க, இருக்காளா... இல்லையான்னு தெரிஞ்சா ஷட்டரை மூடிடலாம்ல்ல... அதுக்காகத்தான் அவளைத் தேடுறேன் என்று சொல்லும் போது காதலின் வலி அவர் முகத்தில்... மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

பிரியல் கோர் ... குஜராத் இறக்குமதி, சிரிப்பால் கொள்ளை கொள்ளும் அழகி, இந்தியில் ஒன்று, தெலுங்கில் ஒன்றென இரண்டு படங்கள் முடித்த இந்த தொலைக்காட்சித் தொடர் நடிகைக்கு மலையாளத்தில் இது முதல் படம். தன் காதலைச் சுமந்து அப்பாவை எதிர்த்து நிற்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். என்ன டிரஸ்ஸிங்க் சென்ஸ்.... அவரது உடைகள் எல்லாமே அழகு.. நிச்சயம் ரொம்பப் பேரின் தூக்கத்தைக் கெடுத்திருப்பார்.

நண்பனாக வரும் பிஜூ மேனன், ராணுவ வீரராக வரும் போது கலகலக்க வைக்கிறார்... லட்சத்தீவில் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி, லேசான தாடியுடன் லைட் ஹவுஸில் பணியில் இருக்கும் போது தேடி வரும் நண்பனைக் கண்டு ஒளிந்து திரிவது, அவனின் கதையைக் கேட்டதும் அவனுக்கு உதவ நினைப்பது, இறுதிக் காட்சியில் சோகமும் சந்தோஷமுமாய் கலந்து கட்டி  நண்பனின் நிலை கண்டு கதறுவது என  ப்ரித்விராஜை தூக்கிச் சாப்பிடும் அலட்டலில்லாத நடிப்பு.

(சம்ஸ்க்ருதி)
இரண்டாவது கதாநாயகியாக, லட்சத்தீவு மிலிட்டரி மெடிக்கல் சூப்பரிண்டென்ட்டாக வரும் மியா... எல்லாருக்கும் உதவி செய்யும் பாஸிட்டிவ் மனிதராக வருகிறார். ப்ரித்விராஜ் அவரை கலாய்ப்பதும்... அவர் ப்ரித்விராஜை கலாய்ப்பதும் செம... கடைசிக் காட்சியில் ராணுவ அதிகாரியிடம் சண்டையிட்டு ப்ரித்விராஜைக் காப்பாற்ற முயற்சிக்கும் இடத்தில் கலக்கியிருக்கிறார். பிரியல் கோர் இடத்தில் இவர் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணத் தோன்றும் அழகி.

ப்ரித்விராஜின் லட்சத்தீவு நண்பர்களாக வரும் ஆத்திகோயா (சுரேஷ் கிருஷ்ணா),ராஜீவ் (அருண்), நாயகியின் அப்பா (கபீர் பேடி), தம்பி (சுதேவ் நாயர்) என எல்லாரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கோமாவின் தங்கையாக வரும் சம்ஸ்க்ருதி  எல்லாரையும் கவர்வார் என்பதில் சந்தேகமில்லை. ஆ ஒருத்தி பாடலில் 'காக்கு நின்டோ நீ... காத்திருப்போம் யாம்...' என்ற வரிகளைப் பாடும்போது அண்ணனைப் பார்த்து யாரும் பார்க்காத வண்ணம் கண்ணீரைத் துடைக்கும் போது அவளின் காதலும் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

திரைக்கதை ஆசிரியராய் நீண்ட காலம் பயணித்து இயக்குநராக களம் இறங்கை இருக்கும் சாச்சி,  நல்லதொரு காதல் கதையை, மிக நேர்த்தியான கதைக்களத்தில் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். வித்யாசாகர் அருமையான இசை விருந்து படைத்திருக்கிறார். பாடல்கள் அருமை... சுஜித் வாசுதேவ் தனது ஒளிப்பதிவில் லட்சத்தீவின் அழகை கண் முன்னே நிறுத்துகிறார்.


மொத்தத்தில் 'அனார்கலி' திகட்டத் திகட்ட காதலையும் அதன் வலியையும் ஒரு சேர கொடுத்தபடம்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 24 பிப்ரவரி, 2016

நானே முதலாளி

"என்ன வேலை அதிகமோ?"

"ஆமாங்க... கொன்னு எடுக்குறானுங்க.. எல்லாமே நானேதான் பாக்க வேண்டியிருக்கு"

"உங்க வேலையை மட்டும் பாருங்க... எதுக்கு எல்லாத்தையும் இழுத்துப் போட்டு பார்க்கிறீங்க..?"

"எங்கங்க இழுத்துப் போட்டுப் பார்க்கிறேன்... நாலு டெண்டர் வந்திருக்கு... இதை இதை இப்படிப் பண்ணினால் போதும்ன்னு சொன்னா எவன் கேக்குறான்..."

"ம்ஹூம்... அதெல்லாம் நீங்கதான் பாக்கணுமா... என்ன?"

"எனக்கு எல்லாந் தெரியுங்க... சொன்னா கேக்க மாட்டானுங்க... எனக்குத் சொல்லித்தாறியான்னு சொல்லிட்டு சாயந்தரமா வந்து இதை எப்படிச் செய்யலாம்ன்னு கேப்பானுங்க... எப்பவும் இதே வேலையாப் போச்சு..."

"அது சரி... இதெல்லாம் உங்ககிட்ட கேப்பாங்களா...? அப்ப நீங்கதான் எல்லாமே அப்படித்தானே...”

“எதை எதை எப்படிப் பண்ணலாம்ன்னு எனக்குத் தெரியாததா... எத்தனை கம்பெனி பாத்திருப்பேன்...”

“ம்...”

“நேத்துக்கூட முதல்ல கேக்க மறுத்தவன், சாயந்தரம் வந்து நீ சந்தோஷமா இருக்கியான்னு கேட்டான்... ஆமான்னு சொன்னதும் நீ சந்தோஷம்ன்னா நானும் சந்தோஷம்தான்... டெண்டர் இன்னும் தயாராகலையில்லன்னு சொல்லி சிரிச்சிட்டுப் போறான்... ரெடி பண்ண வேண்டிய டெண்டர் டேபிள்ல சிரிச்சிக்கிட்டு கிடக்கு... இனி நாளைக்குப் போயி நாந்தான் எல்லாம் பாக்கணும்”

“பாருங்க... நீங்க செய்யலைன்னதும் அவரும் செய்யலை... மொத்தப் பொறுப்பும் உங்க தலையில... கம்பெனியில இருக்க எல்லா மேனேஜருமே நீங்க சொன்னா செய்யிற மாதிரி இருந்தா எப்படி... அவனவன் வேலையை அவனவன் பாக்க வேண்டாம்... எல்லாத்தையும் ஒராளு மேல  அள்ளிப் போட்டா எப்படி... நியாயமா  இது..? நீங்க ஏன் மூளையைப் போட்டு கசக்கி வேலை பாக்குறீங்க...  கொடுக்கிற சம்பளத்துக்கு வேலை பார்த்தா போதும்... உங்க உடம்புதாங்க உங்களுக்கு முக்கியம்... கம்பெனி செய்யாட்டி பொயிட்டுப் போகுது... யாருக்கு நஷ்டம்... என்ன நாஞ் சொல்றது...”

“நமக்கு அப்படி யாரோ செய்யட்டும்ன்னு பார்த்துக்கிட்டு இருக்கிற மனசில்லைங்க... எல்லாத்தையும் நான் இழுத்துப் போட்டு செஞ்சிருவேன்...”

“அதுக்காக டெண்டர் வேலை எல்லாம் மேனேஜருங்க.. அதுக்குன்னு உள்ள ஆளுங்க தயார் பண்ணனும் நீங்க எப்படி..?”

“எல்லாமே எனக்குத் தெரியுங்க... என்ன காலம் வெள்ளலை... அவன் முதலாளியா இருக்கான்... நான் இப்படி கெடந்து கஷ்டப்படுறேன்....”

“ம்... சரிங்க.... வொர்ரி பண்ணிக்காதீங்க... ரொம்ப கெரங்கிப் போயிட்டீங்க... எதையும் நெனச்சு  கவலைப்படாதீங்க... டெண்டர் விஷயாம ரொம்ப திங்க் பண்ணாதீங்க... நல்லா சாப்பிடுங்க... சுகர் மாத்திரை.. பிரஷர் மாத்திரை எல்லாம் ஒழுங்காச் சாப்பிடுறீங்களா?”

“ம்...”

“விடாம சாப்பிடுங்க... அடிக்கடி டெஸ்ட் பண்ணிக்கங்க... பொறிச்ச அயிட்டங்களை சாப்பிடாம கொறச்சிக்கங்க... எல்லாத்துக்கும் மேல டென்சனைக் குறைங்க... நா அடுத்த வெள்ளிக்கிழமை வர்றேன்.... நாளைக்கு வேலை... இனி இங்கிருந்து முஸாபா போறதுக்குள்ள தாவு தீந்திரும்... சரி... அப்பக் கெளம்பவா...?”

“இருங்க... நானும் பஸ் ஸ்டாப் வரைக்கும் வாறேன்...”

“வேண்டாம்... எதுக்கு லிப்ட்ல எறங்கினா... இதே பில்டிங்குக்கு கீழே பஸ் ஸ்டாப்... வீணாவுல நீங்க எதுக்கு எறங்கி ஏறுறீங்க... நாங்க போயிருவோம்..."

“சரி பின்னே... பாத்து போங்க... பொயிட்டு போன் பண்ணுங்க...”

“சரி...”

புதிதாக அறைக்கு வந்திருந்த நண்பனை அபுதாபி போலாமென கூட்டி வந்திருந்தான். லிப்டுக்கு நிற்கும் போது அவன் மெதுவாக "ஏங்க... உங்க சொந்தக்காரர்தான் பெரிய வேலையில் இருக்காருல்ல... பின்னே ஏன் நீங்க டிகிரி முடிச்சிட்டு ஆபீஸ் பாயா டீக்கிளாஸ் கழுவுறீங்க... இவருக்கிட்ட சொல்லி இவங்க ஆபீசிலேயே நல்ல வேலைக்கு ஏறலாமே..." என்றான்.

"அட நீங்க வேற...  இந்தாளு பாக்குறது டாக்குமெண்ட் கண்ட்ரோலர் வேலை... பேசுறது மட்டும் பெரிசா... இன்னும் உக்காந்திங்கன்னா உங்ககிட்டா ஊர்ல இருக்கும் போது கலெக்டருக்கு சந்தேகம் வந்தா வண்டியை எடுத்துக்கிட்டு என்னைத் தேடித்தான் வருவாருன்னு சொல்வாரு... எல்லாம் கேட்டுக் கேட்டு எனக்கு பழகிடுச்சு... வாய் இருக்க வேண்டியதுதான்... அதுக்காக இப்படி இருக்கக்கூடாது... இது சும்மா இருந்தா நிம்மதியா வேலையைப் பாத்துட்டு சந்தோஷமா இருக்கலாம்... இதுவே எல்லாத்தையும் தூக்கிச் சுமக்குது" எனச் சிரிக்க, அவர் அதுக்குப் பின் முஸாபா வரைக்கும் பேசவே இல்லை. அடுத்த முறை வரமாட்டார்ன்னு நினைக்கிறேன்.

********
றவுகளே பிரதிலிபி 'கொண்டாடப்படாத காதல்கள்' போட்டியில் எனது சிறுகதையும் இருக்கு. அதற்கு கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அங்கு சென்று 'விமர்சனம் எழுத' என்ற பட்டனைச் சொடுக்கி, பிரதிலிபியில் உறுப்பினராக இல்லை என்றால் முகநூல் நுழைவு முகவரியைக் கொடுத்து உள் சென்று கருத்து இடவில்லை என்றாலும் கதையைப் படித்து மதிப்பெண் கொடுங்கள். மறக்காதீர்கள்... உங்கள் நட்புக்களுக்கும் சொல்லுங்கள்... என் கதை மட்டுமல்ல மற்ற நல்ல ஆக்கங்களுக்கும் உங்கள் மேலான மதிப்பெண்ணை அளியுங்கள். நன்றி.

நீங்கள் அளிக்க இருக்கும் மதிப்பெண்ணுக்கு இப்பவே நன்றி...!

-'பரிவை' சே.குமார்