நேற்றுக் காலை 'அப்பா உங்ககிட்ட பேசணுமாம் குமார்' என வாட்சப்பில் அனுப்பியிருந்தார் மேகலை. எதிர்பாராத நிகழ்வாய் அமைந்த அம்மாவின் இறப்புக்குப் பின் ஐயாவிடம் எப்படிப் பேசுவது..? என்ன பேசுவது..? என்ற மன தைரியமில்லாத நிலையில் இருந்து வருகிறேன் என்பதே உண்மை.
மேகலாவிடம் அடிக்கடி பேசியிருக்கிறேன் என்றாலும் ஐயாவிடம் பேசவே இல்லை. ஊரில் இருந்திருந்தால் ஐயாவுடன் இருந்திருப்பேன்... நானும் உடைந்திருப்பேன்... பின் கொஞ்சம் தேறி வந்திருப்பேன். இங்கிருக்கும் போது நினைவுகள் எப்பவும் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. அம்மாவின் அன்புப் பிள்ளையாய் அந்த வீட்டில் அதிகமாய் சாப்பிட்டவர்களின் நானும் ஒருவனாய்... இல்லை அதில் நானே முதல்வனாய் இருந்திருக்கிறேன். ஏன்னா அம்மாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.
காலையில் மேகலா பேசி அனுப்பியிருந்த போது மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். ஐயாவுடன் பேசும் மன தைரியம் இல்லாததால் மருத்துவமனை செல்வதைக் காரணம் காட்டி, மாலை பேசுகிறேன் என நான் பேசி அனுப்பியதும், ரெண்டு நாள் முன்னாலதான் அப்பா 'குமாருக்கு காலேசுல படிக்கும் போது உள்நாக்குப் பிரச்சினை இருந்து காரைக்குடியில ஹோமியோபதி டாக்டர்க்கிட்ட காட்டிச் சரி பண்ணினோம். இப்ப உடம்பு எப்படியிருக்கோ என்னமோ... சாப்பாடுக்கெல்லாம் பிரச்சினை இல்லையாமா..? கட்டுப்பாடா சாப்பிடுறாராமா..? கேட்டீங்களா'ன்னு எங்கிட்ட கேட்டாங்க... இப்ப நீங்க உடம்பு முடியலைன்னு சொல்றீங்க... உடம்பைப் பார்த்துக்கங்க. ஊருக்கு வரும்போது இங்க ஒரு தடவை உடம்பை பரிசோதிச்சிக்கலாம்' எனப் பேசி அனுப்பினார் மேகலை.
ஐயா கேட்ட அன்று எனக்கு உடல்நலமில்லாமல் இருந்தேன். அதே நாள் அவர் விசாரித்திருக்கிறார். அன்றைய தினத்திலோ அல்லது அதற்கு அடுத்த நாளோ உள்நாக்குப் பிரச்சினைக்காக ஐயா என்னைக் காரைக்குடிக்கு ஹோமியோபதி டாக்டரிடம் அழைத்துச் சென்றதைப் பற்றி பேசியிருந்தேன். இதெல்லாம் ஒரிரு நாட்களுக்குள் நிகழ்ந்திருப்பதுதான் ஆச்சர்யம். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
பின்னர் மருத்துவமனை சென்று பார்த்துவிட்டு, என்னைப் பார்க்க முஸாபாவில் இருந்து பேருந்தில் வந்த ராஜாவுடன் எப்பவும் சந்திக்கும் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவர் தொ.ப. பற்றிப் பேச, நான் கேட்டுக் கொண்டிருந்தேன். எவ்வளவோ விசயங்கள்... ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்றென நேரம் போனதே தெரியாமல் போய்க் கொண்டிருந்தது. அத்தனை விசயங்களைச் சொன்னார். சரி பூங்காவுல உக்காந்திருக்கோம் பக்கத்துல சதீஷ் வீடு, இங்க வந்துட்டு அவர்கிட்ட சொல்லலைன்னா நல்லது இல்லையே என நினைத்துப் போன் பண்ண, பின்னர் அவருடன் காரில் சில இடங்களுக்கு நிறையப் பேசியபடி பயணித்தோம். எப்பவும் போல சாப்பிட்டுத்தான் போகணும் என வயிறையும் நிறைய வைத்து அனுப்பினார்.
அறைக்குத் திரும்பியதும் ஐயாக்கிட்ட பேசிடலாம் எனப் போனடித்தால் எப்பவும் போல 'நல்லாயிருக்கீங்களா... எப்ப வர்றீங்க..?' என்ற குரல் எதிர்முனையில். எப்போதும் நான் கேட்கும் குரலாக இல்லாமல் உடைந்த, வேதனையான குரலாய் இருந்தது. நான் என்ன சொல்வது எனத் தோன்றாமல், 'வர்றேன்யா' என்றேன். அடுத்த வார்த்தையாக 'உங்களைப் பார்க்கணும் போல இருக்குய்யா' என்றார். என்ன பதில் சொல்வேன். ஒரு தந்தையின் ஏக்கமாய் எனக்கு அது தோன்ற விரைவில் வர்றேன் என்று சொன்னேன்.
அதன் பின் ஐயா தனது 'சான்றோர்... பாலர்' குறித்து மகிழ்வாகப் பேச ஆரம்பித்தார். 'புத்தகத்தை நீங்கள் பார்த்தீர்களா..? நல்லா வந்திருக்கா..?' என்றார். 'அட்டைப் படம் பார்த்தேன். வெளியீட்டு நிகழ்வுகளைப் பார்த்தேன். புத்தகம் இன்னும் இங்கு வரலை' என்றதும், 'எனக்கும் இன்னும் வரலை' என்றவர் அதிலிருக்கும் கட்டுரைகளைப் பற்றிச் சொல்லி, அவற்றின் முக்கியம் பற்றிப் பேசி... இதைப் புத்தகமாக்கிய உங்களுக்கு நன்றி என்றார். 'எனக்கு நீங்க நன்றி சொல்றீங்களா..? நல்லாயிருக்கு போங்க எனச் சொன்னதும் சிரித்தார். 'இதை நாங்க முன்னாடியே செஞ்சிருக்கணும்... நீங்கதான் செய்ய விடலை' என்றேன். அதற்கும் சிரித்தார்.
அடுத்ததாய் 'சான்றோர்... பாலர்'ல நீங்க எழுதியிருக்கீங்களா...?' என்றார். நான்தான் அதில் முன்னுரை எழுத வேண்டும் என்ற அவரின் பிடிவாதத்தை மேகலாவிடம் மறுத்தும், பேராசிரியர் ஐயா. ம.கார்மேகம் அவர்களிடம் சிறப்பான முன்னுரை வாங்கியிருந்தும், குமாரையும் எழுதச் சொல்லுங்க என்ற பிடிவாதத்தால் நானும் அதில் எழுதியிருந்தேன். 'எழுதியிருக்கிறேன்' என்றதும் 'புத்தகம் இன்னும் கைக்கு வரலை, வந்ததும் படிக்கணும்' என்றார். புத்தகம் பற்றி நிறையப் பேசினார். 'நீங்கள்லாம் எங்க புள்ளங்க நல்லாயிருக்கணும்' என்றார்.
பின்னர் நாங்கள் இருவரும் சுப.அண்ணாமலை அய்யாவுடன் ஒரு திருமண நிகழ்வில் எடுத்த போட்டோவை சமீபத்தில் புத்தகங்களின் தேடலின் போது எடுத்தாராம். அதை உங்ககிட்ட கொடுக்கணும் என்றார். பேச்சு தொடர்ந்த போது 'அம்மாவுக்கு உங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்' என்றார் உடைந்த குரலில். நான் என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதியாய் இருந்துவிட்டு, 'ஆமாய்யா...' என்றவன், 'வேலை இல்லாமல் ஊருக்கு வந்திருந்த போது ரொம்ப வருத்தப்பட்டது அம்மாதான்... சாமிக்கு காசெல்லாம் முடிஞ்சி வச்சாங்க' என்றேன். அப்போது நானும் உடைந்தேன். ஐயாவும் 'ஆமா... உங்களை ரொம்ப பிடிக்கும்' என்று சொல்லி, 'சரி... ஊருக்கு வந்துட்டுப் போங்க... உடம்பைப் பார்த்துக்கங்க' என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.
'சான்றோர்... பாலர்' கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் 31 கட்டுரைகளையும் தட்டச்சு செய்து, பல முறை படித்தவன் என்ற முறையில் அது அருமையான கட்டுரைகளின் மிகச் சிறப்பான தொகுப்பு என்பதை நானறிவேன். அது எல்லாரையும் சென்று சேர வேண்டும் என்பதுதான் என் ஆசை.
ஐயா நினைத்திருந்தால் நிறைய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். ஏனோ அவர் நாங்கள் படிக்கும் போது கொண்டு வந்த அளவுக்குக் கூட அதன் பின் புத்தகங்கள் கொண்டு வரவில்லை. அறிவுப் பெட்டகம் ஐயா... அவருடன் பேசினால் நிறைய விபரங்களை நமக்குச் சொல்வார். கல்லூரியில் படிக்கும் போது அவருடன் மாலை நேரங்களில் நானும் முருகனும் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேசியபடி பயணிக்கும் போது எங்களுக்கு அவர் சொல்லியவை அதிகம்.
ஐயாவால் இன்னும் தேடி எடுக்க முடியும் என்றால் 'சிறுகதைகள்', 'கட்டுரைகள்' என இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வரமுடியும். கட்டுரைத் தொகுப்புடன் அவரின் சிறுகதைகளின் தொகுப்புக் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது, தசரதனிடமும் அதற்காகப் பேசியிருந்தேன். ஐயாவால் தேடி எடுப்பது சிரமமாக இருந்தாலும் எடுப்போம் என்றார்... அதற்குள் அம்மாவின் பிரிவு எல்லாத்தையும் மாற்றிவிட்டது.
மேகலாவின் முயற்சியில் எப்படியும் இன்னும் சில தொகுப்புக்களைக் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
-------------------------------------------------------------
சான்றோர்... பாலர்
பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்
கட்டுரைத் தொகுப்பு
கேலக்ஸி பதிப்பகம்
விலை. ரூ. 260.
புத்தகம் வாங்க வாட்சப் எண் : +91 9994434432
-------------------------------------------------------------
-பரிவை சே.குமார்.
0 எண்ணங்கள்:
கருத்துரையிடுக