மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 ஜனவரி, 2023

மனசு பேசுகிறது : சில நேரங்களில் சில மனிதர்கள்

ராஜாராம் எழுதச் சொன்னதை எழுதாமல் விட்டால் நல்லாயிருக்காது... பெரிய்ய்ய்ய பொங்கலுக்குப் போட்டது மாதிரி பாவமன்னிப்புக்கு ஒரு மீம்ஸ் போட்டுருவார். எனவே நடந்தது நடந்தபடி இங்கே...

இதுவும் நேற்றைய பொங்கல் நிகழ்வில் நடந்த பொங்கலோ பொங்கல்தான்.

இங்க ஒரு வேலையா வந்தோம்... கிளம்பி இருங்க உங்களை வந்து கூட்டிக்கிட்டு முஸபா போய்க் கிளம்பி வரணும் என்று சொல்லிச் சிறிது நேரத்தில் - மதியம் 1 மணி - வந்து சேர்ந்தார்கள் ராஜாராமும் பால்கரசும்.
காரில் போகும்போது வரும்போது ஒருவரை அழைத்து வரும்படி நம் தோழர் சொல்லியிருக்கிறார், அவரிடம் வரத் தாமதமாகும் நீங்க போறதுன்னா போங்கன்னு சொல்லியபோது அவர் நான் காத்திருக்கிறேன் என்று சொன்னதாகவும் அதன் பின்னும் வாட்ஸப்பில் விடாமல் போன் அடித்துக் கொண்டே இருப்பதாகவும் சொன்னார்கள். காலை முதல் சாப்பிடாமல் அலைந்து திரிந்த அயற்சி இருவர் முகத்திலும் தெரிந்தது. நாங்கள் காரில் போகும் போதும் தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது.
நாங்கள் எப்பவும் போல் இசைராஜாவின் பாடலோடு கதை பேசியபடி முஸபா நோக்கிப் பயணித்தோம்.
ராஜாவை அவரது இருப்பிடத்தில் விட்டுவிட்டு நானும் பால்கரசும் அவரது அறைக்குப் போய் கிளம்பி, மீண்டும் காரில் ஏறியதும் அவர் அனுப்பிய கூகிள் வழிகாட்டியை எடுத்துப் பார்த்தார் பால்கரசு, அதுவோஅவர் இருக்கும் இடமாய் பனியாஸ் பக்கமாய் காட்டி,ம் பயண நேரம் இருபது நிமிட என்பதையும் தெரிவித்தது.
இப்பவே மணியாச்சு இனிமே அங்கெல்லாம் போய் அலைய முடியாது எனவே போகவேண்டாம் என்ற முடிவோடு காரை ராஜா இருப்பிடம் நோக்கி ஓட்ட ஆரம்பித்தவர் எதுக்கும் ராஜாக்கிட்ட கேட்டுப்போம் என போன் செய்ததும் பாலா தோழர் சொல்லியிருக்காரே எனச் சொன்னதால் மீண்டும் கூகிளார் காட்டிய பாதையில் பயணிக்க, ஒரு சிக்னலைக் கடந்த நிலையில் கூகிளார் தன் வழித்தடத்தை வேறு பக்கமாய் மாற்றிக் காட்ட, அடுத்த பார்க்கிங்கில் காரை நிறுத்திப் பார்த்து இது நாம் ராஜாவை ஏற்றிக்கிட்டு போற வழிதானே ஏன் மாற்றி மாற்றிக் காட்டுது என்றபடி முதலில் ராஜாவை கூட்டிக்கலாம் என்றபடி காரை மீண்டும் ராஜா இருப்பிடம் நோக்கிச் செலுத்தினார்.
அதற்குள் ஏழெட்டு அழைப்புக்கள்... எல்லாமே வாட்ஸப் அழைப்புத்தான்.
ஒரு கட்டத்தில் என்னடா இது வாட்ஸப்ல கூப்பிடுறதுக்குப் போனே பண்ணலாமே என்றபடி பால்கரசு அந்த நம்பருக்குப் போன் அடித்ததும், 'நான் எவ்வளவு நேரமா காத்திருப்பது..? எப்ப வருவீங்க...?' எனச் சற்றுக் கோபமாய்தான் அவரிடம் இருந்து கேள்வி வந்தது என்றாலும் இவரோ பத்து நிமிடத்தில் வந்துருவேங்க எனப் பவ்யமாய் பதிலளித்தார்.
முன்னப்பின்ன தெரியாத ஒருவர் தன் நண்பர் சொல்லிவிட்டார் என்பதால் தனது அலைச்சலின் ஊடே வந்து கூட்டிச் செல்கிறேன் எனச் சொல்லியிருக்கும் போது எப்படிப் பேசுவது என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. ஏதோ வாடகைக்கார் ஓட்டுநரிடம் பேசுவது போலான பாணியில் பேசினார்.
போனை வைத்து விட்டு எப்படிப் பேசுறாங்க பாத்தீங்களா.. என்றவரிடம் என்னால வரமுடியாதுங்க... நான் விழாவுக்கே போகலைன்னு சொல்லிட்டு வேலையைப் பாருங்க என்றேன் ஆனால் பால்கரசோ பரவாயில்லை பாவம் காத்திருக்காங்க அழைத்துச் செல்வோம் என்றார்.
ராஜாவை ஏற்றிக் கொண்டு கூகிளாரின் வழி காட்டுதலின்படி அவரைத் தேடிப் போனபோது அது வேறு ஒரு பக்கமாய் அழைத்துச் சென்று மீண்டும் பிரதான சாலைக்கே கொண்டு போய் விட, திசை மாறி நின்ற சூழலில் அவரை அழைத்துக் கேட்க 'அங்க எதுக்குங்க போனீங்க... இந்தப் பக்கம் உள்ளார குரான் பள்ளிக்குப் பக்கமா வாங்க... நான் பள்ளிப் பக்கம் வந்துடுறேன்னு சொல்லி, மறுபடியும் அவரது இருப்பிட வழிகாட்டியை அனுப்பித் தந்தார். அவர் பேசியபோது நீண்ட நேரக் காத்திருப்பின் அலுப்பும் கடுப்பும் ஒரு சேரத் தெரிந்தது.
அவர் சொன்ன விபரப்படியும், கூகிளாரின் வழி காட்டலின் படியும் பயணித்தபடி அவர் சொன்ன இடத்தின் அருகில் இருந்த பள்ளிக்கு அருகில் காரை நிறுத்திப் போன் பண்ணியதும் 'அங்கயா நிக்கிறீங்க... அது எனக்குத் தூரம்... நீங்க அப்படியே உள்ள வாங்க... நான் குரான் பள்ளின்னுதானே சொன்னேன்... அது உள்ள இருக்கு..' என்றார். சரியென அவர் சொன்ன இடத்துக்கு போய் பார்க்கிங்கில் நின்று எங்கே எனத் தேடி, போன் செய்தபோது 'இந்தா வருகிறேன்' என்றவர் பார்க்கிங்கிற்கு கூட நடந்து வராமல் உள்பக்கமாக சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தார், சரி வந்துட்டோம் போய் ஏற்றிக் கொள்ளலாம் என அவரை நோக்கி காரைச் செலுத்தி, ஏற்றிக் கொண்டு கலீஃபா பூங்காவிற்குப் பயணித்தோம். காரில் ஏறும் முன் நீங்க இன்னார் அனுப்பியவர்தானே எனப் பாதுகாப்பாகக் கேட்டுக் கொண்டுதான் ஏறினார் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.
காரில் ஏறிய சில நிமிடத்திலேயே என்னை இந்த இடத்தில் கொண்டு போய் விட முடியுமா..? ஆறு மணிக்குள்ள அங்க வரச்சொல்லியிருக்காங்க... தவறாமல் கலந்துக்கச் சொல்லியிருக்காங்க... என்றார். அப்போதுதான் பொங்கல் விழாவுக்குப் வருவது அவர் நோக்கமல்ல, அவரது எண்ணமெல்லாம் வேறொரு இடம் செல்ல வேண்டும் என்பதும் போகும் வழியில் சும்மா இந்த விழாவைப் பார்த்துச் செல்லலாம் எனத்தான் எங்களை அலையவிட்டது எனவும் புரிந்து கொண்டோம். தாமதமான புரிதலால் எதுவும் நிகழ்ந்து விடப்போவதில்லை என்பதால் பால்கரசு பேசிக்கொண்டே காரை ஓட்ட, நானும் ராஜாவும் எதுவும் சொல்ல முடியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்.
அவரின் கேள்விக்குப் பால்கரசு வரமுடியாத காரணத்தை தெளிவாகச் சொல்லியும் நீ கொண்டு போய் விடலைன்னா நான் எப்படிப் போவது என்பதாய்தான் அவரின் பேச்சு இருந்தது. இதே அனுபவத்தை முன்பொரு முறை நாங்கள் மூவரும் அனுபவித்திருக்கிறோம், நான் கொண்டு போய் விடுகிறேன் என வேகமாய் காரை எடுத்துச் சென்று 'பலியாடு' ஆகத் தெரிந்த பால்கரசு இதில் முடியாதெனக் கறாராகச் சொல்லிவிட்டார்.
அப்படியிருந்தும் விழா இடத்துக்குப் போனபின் நாங்கள் அவரை விட்டுத் தூர நின்றாலும் எங்களிடம் வந்து அங்க நிக்காம... ஏன் இங்கே நிக்கிறீங்க... எனக் கேள்விகள் கேட்டவர், ஒரு கட்டத்தில் என்னை வெளியில் கொண்டு போய் விடுறீங்களா..? எனப் பால்கரசிடம் கேட்டபோது, 'வெளியிலன்னா எங்கங்க... இப்படியே போனா வெளிய போயிடலாம்... அங்க இருந்து டாக்ஸி பிடிச்சி நீங்க போகணும்ன்னு சொன்ன இடத்துக்குப் போங்க' எனச் சொன்னதும் 'நீங்க என்னைய அந்த இடத்துல கொண்டாந்து விட்டுட்டு வாங்களேன்' என்றார்.
கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டாமல் 'எனக்கு நீங்க சொல்ற இடம் எங்கே இருக்குன்னு தெரியாதுங்க... வேற யாராச்சும் போன போயிக்கங்க' எனச் சொன்ன பால்கரசு எங்களை விட்டுத் தள்ளி நின்ற ராஜாவுக்குப் போன் பண்ணியபடி நகர முயல, அவரோ கூகிளார் உதவியுடன் இடத்தைப் பிடித்து 'இதுதான்... இங்கதான் போகணும் எனக்காட்டி கொண்டாந்து விட்டுருங்க' என்றார். இந்த முறை பால்கரசு சற்று கோபமாகவே 'எனக்கு வேலை இருக்குங்க, இங்க வந்ததே நண்பரின் அழைப்புக்காகத்தான்... என்னால அங்கயெல்லாம் வந்து அலைய முடியாதுங்க' எனச் சொல்லிவிட அவர் எதுவும் பேசவில்லை. நாங்கள் ராஜாவை நோக்கி நகர்ந்து விட்டோம்.
அதன் பின் அவரை அழைத்து வரச் சொன்ன நண்பரை போய் பார்த்து 'என்னை யாராவது ஒருவரிடம் சொல்லிக் கொண்டு போய் விடச் சொல்லுங்கள்' என நச்சரித்திருப்பார் போலும் நண்பரோ பொன்மாலைப் பொழுதை வீணடித்து விடுவார்களோ - வீணடித்து விட்டார்கள் என்பது வேறு கதை - எனற கோபத்தோடு அங்கும் இங்குமாய் அலைந்து கொண்டிருந்த நிலையில் இந்த நச்சரிப்புத் தாங்காமல் யாரும் கொண்டு போய் விடமாட்டாங்க... நீங்க எப்படியோ போங்கன்னு கொஞ்சம் கோபமாகவே சொல்லியிருப்பார் போல, அதன்பின் எங்களைக் கடந்து போனவர் நாங்கள் நின்ற பக்கம் திரும்பவே இல்லை. அவர் செல்ல நினைத்த இடத்துக்கு எப்படிச் சென்றார் என்பது தெரியவில்லை.
நிகழ்வு முடிந்து வரும் போது 'என்னிடம் என்னை வீட்டில் கொண்டு போய் விடு எனச் சொல்லியிருந்தால் அப்பவே கொண்டு போய் விட்டிருப்பேன். அவர் வந்ததே அந்த இடத்துக்குச் செல்லத்தான் எனும்போது எதற்காக இங்கு வரவேண்டும். நம்மை ஏன் நச்சரிக்க வேண்டும்...' எனச் சொன்ன பால்கரசு, 'இருந்தாலும் பாவந்தான்... கருணை உள்ளத்தோடு இருந்திருந்தால் நாம் ரட்சிக்கப்பட்டிருப்போம்" என்றார்.
நானும் ராஜாவும் அவர் எங்களிடம் பேசவும் இல்லை கேட்கவும் இல்லை அதனால் எங்களுக்குப் பாவமன்னிப்பு தேவையில்லை என்று சொல்ல, 'என்னைக் கூட்டியாந்தாய்... என்னை வீட்டில் கொண்டு போய் விடுன்னு சொன்னா விட்டிருப்பேன்... அதென்ன வேலைக்காரன் மாதிரி என்னை அங்க கொண்டு போய்விடு இங்க கொண்டு போய்விடுன்னு சொல்றது...' எனப் புலம்பியபடியே வந்தார் பால்கரசு.
'யோசிங்க பால்கரசு... ஒருவேளை குழுமத்துல சேர்த்து துபையில நடக்கும் விழாக்களுக்குச் செல்லும் போது கூட்டிக் கொண்டு போகும் சூழல் ஏற்பட்டால் அங்கும் கருணை அடிப்படையில் அவர் செல்ல இருக்கும் இடத்துக்கு கூட்டிப் போகச் சொன்னால்...' எனச் சொல்லி கொஞ்ச நேரம் வம்பிழுக்கலாம் என்றால் நேற்றுதான் நாங்கள் மலையாளி கடையில் சாப்பிட்டு, மற்றொரு மலையாளி கடையில் டீ - அதுவும் புதினா போட்ட கிரீன் டீ - சாப்பிட்டு வம்பிழுக்காமல் சிரித்தபடி வெளியே வந்திருக்கோம் என்பதால் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டேன்.
சில நேரங்களில் சில மனிதர்கள்...
எங்கள் மூவருக்கும் பலியாட்டுக்குப் பின் பாவமன்னிப்பு அனுபவம்...
இனிமே பால்கரசு நம்மளக் கூட்ட வருவதுனாலும் யோசிப்பாருன்னுதான் தோணுது.... 🙂
என்ன இருந்தாலும் எங்கள் பயணம் எப்போதும் போல் மகிழ்வாய் அமைந்தது. என்னை எல்லா இடத்துக்கும் இழுத்துச் செல்லும் இவர்கள் இருவரும் இல்லை என்றால் விடுமுறை தினங்களை அறைக்குள்ளேயே முடித்துக் கொள்வேன் என்பதே உண்மை.
-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்த அன்பு நண்பர்களுக்கு பாராட்டுகள்...

ஸ்ரீராம். சொன்னது…

சமாளிக்கக் கடினமான மனிதர்கள்.  எப்படியோ சமாளித்து விட்டீர்கள்.